பெருந்தேவி கவிதைகள்


 • நகரம்: சில மாதங்களுக்குப் பின்

வீட்டைவிட்டு வர
அனுமதிக்கப்படாத
எழுபது வயது முதிய பெண்மணி
நகரத்தின் மையப்பகுதியில்
ஒரு பூங்காவுக்கு வருகிறாள்
உடைந்த மரப்பெஞ்சில் அமர்கிறாள்
காலை நேரம்
சூரியனைத் தின்ன நினைக்கிறாள்
அங்கே வசிப்பவர்கள்
பூங்காவில் வேக வேகமாக
ஆறடி விட்டு
நடைப் பயிற்சி செய்கிறார்கள்
ஒருவரை ஒருவர் பார்க்காமல்
முதியவள் மேலே பார்க்கிறாள்
அவளுக்குத் தெரிந்த
சில காகங்கள் தலைக்கு மேல்
கொஞ்ச காலமாக
தன் மருமகள்
தன் பாதி வயிற்றுக்கு மட்டுமே
உணவு தந்ததாகக் குறை கூறுகிறாள்
மருமகள் அலுவலகம் போகாததைச்
சொல்கிறாள்
தன் மகன் ஒரு மடையன் என
முணுமுணுக்கிறாள்
அவள் பேசப் பேச
காகங்கள் சட்டெனத்
தரையிறங்குகின்றன
அவள் கைகளைப் பார்க்கின்றன
அவற்றில் ஒன்றுமில்லை
அவள் புலம்பிக்கொண்டிருக்கிறாள்
அவை அவசரப்படுகின்றன
ஒரு காகம்
அவள் கன்னத்தில் ஏறிக் கொத்துகிறது
இன்னொன்று அத்தோடு
சேர்ந்துகொள்கிறது
விரட்டப் பார்க்கும் அவள் கைகளை
இரண்டு காகங்கள் கொத்துகின்றன
அங்கே நடந்துகொண்டிருப்பவர்கள்
ஆறடி விட்டு நடக்கிறார்கள்
கவனமாக
காகங்கள் ஆறடி விட்டுத்
தங்கள் உணவுமேசையை
தயார் செய்கின்றன.


 • யாராவது சொல்லுங்களேன்

இந்த அறைக்குள்ளேயே
நடந்துகொண்டிருக்கிறேன்
சில நாட்களாக
கதவு சுவராகிவிட்டது
அறைக்கு வெளியே வீடிருக்கிறதா
வெளியே நகரம் இருக்கிறதா
நகரத்தில் கோயில்கள் கடற்கரைகள்
இருக்கின்றனவா
கடல் இன்னும் அலை வீசுகிறதா
தெரியவில்லை
இந்தச் சில நாட்களுக்குள்
சாதாரணமாக சில ஆயிரம் பேர்
இறந்திருக்க வேண்டும்
விபத்து கொலை புற்று நோய் மாரடைப்பு
எல்லாரும் என்ன ஆனார்கள்
பிணங்கள் என்னாயின
அறைக்குள் என் நடையின்
வேகம் கூடியிருக்கிறது
இப்போது பல மைல்கள்
ஒரு அடியிலிருந்து
இன்னொன்றுக்குப்
பறக்கிறேன்
ஒரு பூச்சி போல்
கீழே விழுகிறேன்
செத்துப் பார்க்கிறேன்
என் பிணத்துக்கு என்ன ஆகுமென
இப்போது தெரிந்தாக வேண்டும். 

 


இடுகாட்டில் அனாதையாகப் புதைக்கப்பட்ட பிணங்கள்
கும்பலாக எழுந்தோடி வருகின்றன
அவை அறிந்த ஊர்களை நோக்கி.

உடல்களின் வெப்பத்தை
ஒற்றறியும் ட்ரோன்களை
அசுவாரசியமாகப் பார்க்கின்றன யானைகள்.
கூட்டம் நகரத்தின் பிரதான சாலையைக் கடக்கிறது.

உப்பியிருக்கும் நிலா
தன் கழுத்தில் ஒரு பாடையை மாட்டிக்கொண்டு
இடமும் வலமும் பார்க்கிறது.

ஒரு குகைக்குள்ளிலிருந்து இரு மனிதர்கள்
வெளியே வருகிறார்கள்
உடலெங்கும் கட்டை முடி
இன்றைக்கான தீயைத் தேடவேண்டும்.

“எந்தக் கற்பனையும் அதீதமில்லை”
இதுவரை நோய் அறியாத
ரோஜாத் தோட்டம் தலையை ஆட்டிப் பாடுகிறது
ஒரு வண்ணத்துப் பூச்சி கடமையே கண்ணாக
தேனை உறிஞ்சித் தள்ளுகிறது
ஒரு காலத்தில் மனிதருக்குத் தெய்வங்கள் எப்படியோ
ரோஜாக்களுக்கு வண்ணத்துப் பூச்சிகள் அப்படி


 • 2020இன் நகரம்

 தட்டிகள் வைக்கப்பட்டிருக்கும் நகரத்தில்
நிமிடத்துக்கு நிமிடம் ஏறுகிறது புள்ளிவிவரம்
ஒவ்வொரு தட்டியிலும்
நோயாளிகளும் இறந்தவர்களும்
வரிசை கலைந்து நிற்கிறார்கள்
நகரம் ஒரு தட்டி மறைவில்
ஒளிந்துகொண்டு பார்க்கிறது
இதற்குமுன் துணிச்சலுக்குப் பேர்போனது
ஆடித் திருவிழாக் காலைகளில்
கூழ்ப் பானைகளுக்குமுன்
சாமியோடு சாமியாக ஆட்டம் போட்டது
நடு மதியங்களில் சாலை ஓரங்களில்
டெலிவரிப் பையன்களோடு
அளவளாவியபடி ஒன்றுக்கிருந்தது
மாலைகளில் திரையரங்கு இருள்மூலைகளில்
ஜோடிகளோடு ஜோடியாய்ச்
சேட்டை செய்தது
இப்போது பீதியில் அதற்கு
உடல் நடுங்குகிறது
ஆளற்ற வீதிகளில்
வாய்பொத்தி நடக்கிறது
சுடுகாடு சுடுகாடாய்த்
தேடிச் சரிபார்க்கிறது
தட்டிகளின் கணக்கை
பல சமயம் புரிபடாமல்
மலங்க மலங்க விழிக்கிறது
அதற்கு அத்தனை
வயதாகிவிடவில்லை
எந்த நகரத்துக்கும்
சீக்கிரம் வயதாவதில்லை
ஆனால் அதற்குத் தெரியும்,
அழிவுக்கும் வயோதிகத்துக்கும்
சம்பந்தம் இருந்ததில்லை
என்றைக்குமே..


 • என் மனம் கர்ஸராகிக் காலமாகிவிட்டது

சில காலமாய் தூங்குவதற்குமுன்
கடைசியாக
மின்திரையை அணைக்கிறேன்
எழுவதற்கு முன்பே
மின்திரையை ஒளிரவிடுகிறேன்
நாளில் இடையிடையே
ஒரு பழைய ஜன்னலருகே நிற்கிறேன்
அதே பழைய காட்சி
ஒரு குட்டிச்சுவர் படர்ந்த சில இலைகள்
சோகை பிடித்தவை
என் கணினி அவ்வப்போது ஒலியெழுப்புகிறது
யாரோ எனக்குச் செய்தி அனுப்புகிறார்கள்
சுவாரசியமற்றவை
என் மனம் கர்ஸராகி காலமாகிவிட்டது
கூகிளில் அலையவிடுகிறேன்
கொரோனா இந்தியா இரண்டாம் அலை
கொரோனா சென்னை தடுப்பூசி பிபிஇ
படிக்கும்போது திரையில்
பரிச்சயமான சில முகங்கள் தெரிகின்றன
தெரியும்போதே மறைகின்றன
எதற்கோ இந்த அறிகுறி
இப்போது என் முகம் தெரிகிறது
திரையை அணைக்கிறேன்
அது நகர்வதாயில்லை
திரைக்குள்ளிருந்து என்னைப் பார்க்கிறேன்
வெடிப்பு உதடுகள்
கரு வளையங்களுக்குள் செத்த மீன்கள்
தேங்கிப்போன நதி
இது நானில்லை
ஒரு செவ்வகச் சட்டகத்துக்குள்
எனக்காக நான் காத்திருப்பதைவிட
அபத்தம் எதுவுமில்லை


 •  “என்னால் கட்டுரையைச் சொன்ன தேதிக்குள் தர முடியாது

ஏனெனில்
என் அப்பா மருத்துவமனை ஐசியுவில் இருக்கிறார்
என் அம்மாவுக்கு பாசிடிவ், அவள்
பக்கத்து அறையில் படுத்திருக்கிறாள்
என் பூனைக்குட்டி இறந்துவிட்டது, பூனைக்கு வைரஸ் தொற்றுமா
என்னிடம் கணினி இல்லை, எப்படி எழுதுவது
எங்கள் வீட்டில் சண்டை, அப்பா அம்மாவின் மூக்கை உடைத்துவிட்டார்
எங்கள் தெருவில் இன்று ஐந்து பிணங்கள் வந்திறங்கின
நான் குவீன்ஸில் வசிக்கிறேன், எல்லா நேரமும் ஆம்புலன்ஸ் சைரன்
எனக்கு என்ன எழுதுவதென்று தெரியவில்லை, ஒரு பத்தியில் கட்டுரை தந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?
எனக்குப் பயமாக இருக்கிறது
என் கனவில் அனுமார் வந்தார் அவர் நம் எல்லாரையும் காப்பாற்றுவார்
என் கனவில் ஜீசஸ் வந்தார் அவர் சோகமாக இருந்தார்
கட்டுரை எப்படி இருந்தாலும் A தருவீர்களென எதிர்பார்க்கிறேன்
நீங்கள் கவனமாக இருங்கள்
உங்கள் வகுப்பை மிஸ் செய்யவில்லை
என் பெற்றோர் வீட்டுப் பக்கத்தில் இருக்கும் கல்லூரியில் சேரச் சொல்கிறார்கள்
எங்கள் நாட்டுக்காரர்கள் விமானம் அனுப்பவில்லை அம்போவென விட்டுவிட்டார்கள்
தோழி வீட்டில் இருக்கிறேன் சாப்பாடு போடுகிறார்கள்
சூப்பர் மார்க்கெட்டில் ஒரு சீரியல் பாக்கட்தான் இருந்தது
சூப்பர் மார்க்கெட்டை மூடிவிடுவார்களா
வெயில் காய்கிறது என் நாய்க்குட்டி வெளியே விளையாடுகிறது
நான் ஏன் கட்டுரை எழுதவேண்டும்.


 • கொரோனாவுக்குப் பின்

எனக்கு யாரோடும் விரோதமிருக்காது
யார் பாராமுகமும் வருத்தம் தராது
என் இதயம் சுத்திகரிப்பு இயந்திரத்துக்குள்
தள்ளப்பட்டுவிட்டது
கடைசி எதிர்பார்ப்புகள்
புதைக்கப்பட்ட இடத்தில்
யதேச்சையாகக்கூட
பூஞ்சை முளைக்கவில்லை
நானும் தயாராகவே இருக்கிறேன்
பெயரற்ற வழவழத்த கூழாங்கல்லாக
ஓசையற்ற பாதையற்ற மலையடிவாரத்தில்
ஒளிந்து கிடப்பேன்.


 • காட்சிகள்

ஒரு அறைக்குள் ஒருவர் தன் நெஞ்சைத்
தடவிக்கொண்டபடி இருமுகிறார்
எங்கோ வெளியே இருவர்
சத்தம் வராது விம்முகிறார்கள்.

அரவமற்ற பூங்காவில்
முழங்காலைக் கட்டிக்கொண்டு
அமர்ந்திருக்கிறான் ஒருவன்
தெரு முழுக்க ஊர் முழுக்க
வேலை போய்விட்டவர்கள்.

சாரிசாரியாக நடக்கும் மக்களைப் பார்த்து
எறும்புகள் வியக்கின்றன
அடுத்த அறிவிப்பு ஒன்று வரும்போது
சாரிசாரியாக எதிர்த்திசையில் நடப்பார்கள்.

ஒரு மருத்துவர் தன் கோட்டைக் கழற்றிவிட்டு
கைகளைக் கழுவுகிறார்
மீண்டும் கழுவுகிறார்
தன் விரல்களையே பார்க்கிறார்
மீண்டும் கழுவுகிறார்

ஒரு நகரத்தில் செல்ஃபோன் டவர்கள் பற்றியெரிகின்றன
இன்னொரு நகரத்தில் ஒரு பால்கனியில்
தெரியாத புறாவுக்கு ஒருவன் உணவிடுகிறான்
ஒருவர் உயிர் பிழைத்திருக்கும் செய்தியைக்
கொண்டு வந்தது அது.

ஒரு மூடிய அங்காடியின் முன்பு
சில முதியவர்கள் நிற்கிறார்கள்
ஒரு வேகமான காற்று
காலியான அடுக்குகளுக்குள்
சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு
அவர்களைத் தாண்டி விரைகிறது.

ஒரு பெரிய குழிக்கு அருகில்
கூட்டமாய்க் காத்திருக்கின்றன பிணங்கள்
அவசரமாக உள்ளே தள்ளுகிறார்கள்
வாகனத்தில் ஏறுகிறார்கள்
விடப்பட்ட ஒரு பிணம் முணுமுணுக்கிறது
வாகனத்திலிருந்து ஒருவன் திரும்பிப் பார்க்கிறான்
அவன் கண்களுக்குள் நுழைகிறது.


 

 • ஏதோ ஒரு வானம் இப்போதும் வெளிர்நீலமாக இருக்கிறது

அதனடியில் இரு சுறுசுறுப்பான பெண்கள்
கூடைகளைத் தூக்கிக்கொண்டு
உரசிப் பேசியபடி நடக்கிறார்கள்
ஒரு கடைக்குள் நுழைகிறார்கள்
அன்றைய தினத்தின் வாசனையைப் பரப்பும்
ரொட்டித் துண்டுகளை வாங்குகிறார்கள்
பால்புட்டிகளை வாங்குகிறார்கள்
காய்கறிகளை வாங்குகிறார்கள்
உரசிப் பேசியபடி
திரும்ப வருகிறார்கள்
அந்த வானத்திலிருந்து சூரியன்
கண்கொட்டாமல் இருவரையும் பார்க்கிறது
அங்கிருந்து நகரத் தோன்றாமல்
நினைத்துக்கொள்கிறது
வேறு வானங்களைக் கடக்கும்போது
இன்று எப்படியாவது
கண்களை மூடிக்கொண்டுவிட வேண்டும்.


-பெருந்தேவி

4 COMMENTS

 1. கனதியான கவிதைப்பொட்டலம். மரணம், நோய்மை, வாதை, வறுமை, விரக்தி என்று அடுக்கடுக்காய் புறத்தோல்களை உரிக்க உரிக்க மையத்திலிருப்பதாய் நம்பப்படும் வாழ்வெனும் சூனியத்தை நோக்கி நம்மை நகர்த்திச் செல்கின்றன கவிதைகள் ஒவ்வொன்றும்.

 2. தனிமைக் காலத்தின் வலியை, ஏக்கத்தை சுமந்து நிற்கும் கவிதைகள்!

  உண்மையான
  உணர்வின்
  பகிர்வுகள்..

  நன்றி

  பெருந்தேவி மேடம்

 3. தற்கால உலக பிணி நிகழ்வு, மனித மனங்களில் எவ்வாறு வேலை செய்கிறது படிம மனங்களில் பல்வேறு அடுக்குகளை களைத்து போடுகிறது ,அற்புதம் வாழ்த்துகள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.