கனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்

புகழ்பெற்ற ஆங்கில எழுத்தாளரான ஆலிவர் கோல்ட் ஸ்மித்தைப் பற்றி எழுதும்போது ஸாமுவேல் ஜான்சன்இவர் தேவதூதனைப் போல எழுதுகிறார்என்கிறார். சமீபத்தில் மறைந்த பிரசித்தி பெற்ற பின்நவீனத்துவப் புனைகதை சொல்லியான மிலோராட் பாவிச்சைப் பற்றி அமெரிக்க விமர்சகர் ராபர்ட் கூவர்இவர் நாம் கனவு காண்பதைப் போலவே சிந்திக்கிறார்என எழுதுகிறார்.

மிலோரட் பாவிச்சை நாம்கனவுகளை எழுதிச் சென்ற தேவதூதன்என்று வர்ணித்தால் மிகப் பொருத்தமாக இருக்கும். இருபதாம் நூற்றாண்டின் துவக்கத்தில் ப்ராய்ட் கனவுலகின் விஞ்ஞானத்தைக் கட்டமைக்கிறார். யூங் கனவுகளின் ரசவாத மண்டலங்களின் தரிசனத்தைத் தருகிறார். இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டின் முதல் நாவல் என வர்ணிக்கப்படும் Dictionary of Khazars நாவலில் பாவிச் கனவுகளின் கவிதையியலைப் புனைந்துள்ளார். மிகக் கவித்துவமான கதைசொல்லல் பாணியை உடைய பாவிச் சிறந்தவொரு இசைக் கோர்வையைப் போலவே தனது கதைகளும் இயங்க வேண்டுமென விரும்பினார். பெல்கிரேடில் 1929 ஆம் ஆண்டு பிறந்த பாவிச்சின் தந்தை ஒரு கட்டடக் கலை வல்லுநராகவும் சிற்பியாகவும் விளங்கினார். அவரது தாய் தத்துவம் பயின்றவர். பாவிச்சின் மூதாதையர்கள் கவிஞர்களாகவும் எழுத்தாளர்களாகவும் விளங்கியிருக்கின்றனர். ஆகவே தான் அவர்நான் எனது சுய தேர்வின் வாயிலாகவே இலக்கியத்தில் நுழைந்தேன், எனது தனிப்பட்ட முயற்சிகளால் இத்துறையில் நீடிக்கிறேன். காலம் வருகையில் எனது விருப்பத்தின்படியே இத்துறையிலிருந்து ஓய்வுபெறுவேன்என்கிறார். இலக்கிய வரலாறு போதிக்கும் பேராசிரியராகவும் நிறையப் பல்கலைக்கழகங்களில் வருகைதரும் பேராசிரியராகவும் பணியாற்றிருக்கிறார் பாவிச். ஹோமரின் நீட்சியாகவே தன்னைப் பாவிக்கும் பாவிச் செர்பிய வாய்மொழிக் கதை மரபுகள், நாட்டார் பாடல்கள் மற்றும் புராணக் கதைகளால் ஈர்க்கப்பட்டுத் தன்னை ஒரு எழுத்தாளர் என்பதை விடகதைசொல்லிஎன்று அழைப்பதில் நிறைவு கொண்டார்

      தீவிரமான பரிசோதனை நாவல்களைப் புனைந்துள்ள பாவிச்சின் ஒவ்வொரு படைப்பும் வாசகனை மையப் புள்ளியாகக் கொண்டு இயங்குகிறது. வாசகன் தான் விரும்பியவாறு நுழைந்து விரும்பியவாறு வெளியேறும் பிரம்மாண்டமான வீடுகளாகக்  கட்டமைக்கப்பட்டவை பாவிச்சின் புனைகதைகள். புராணக்கதைகள், ரசவாதம், மாந்திரிகம், சாத்தானின் பிம்பங்கள், தொன்மக்குறியீடுகள், விசித்திர மனிதர்கள் ஆகியவற்றால் நிரம்பியது பாவிச்சின் இரகசியஅற்புதக் கதையுலகம். மறுவுலகின் பிரவேசத்தால் இவ்வுலகின் இறுகிய தன்மையை இலவம் பஞ்சாகப் பறக்கவிடும் வல்லமை பெற்றது பாவிச்சின் கற்பனா சக்தி.

பாவிச்சின் ஒவ்வொரு நாவலும் கனவுலகமும் நனவுலகமும் இணைந்து பின்னணிப் பிணையும் புள்ளிகளில் சுழலும். ஊடகங்களின் உலகில் வாசிப்பிற்குப் புதிய பரிமாணங்களைத் தந்த புனைகதைகளைத் தனது பிரத்தியேக இணையத் தளத்திலேயே முதன் முறையாகப் படைத்தவர் பாவிச். அகராதி வடிவில் அமைந்த பாவிச்சின் Dictionary of Khazars க்குப் பிறகு அவர் வெளியிட்ட Landscape Painted With Tea நாவல் குறுக்கெழுத்துப் புதிரை போல் வடிவமைக்கப்பட்டது. நேர்க்கோட்டில் படிக்கையில் ஒரு கதையும் செங்குத்தாகப் படிக்கையில் இன்னொரு கதையும் கிடைக்கும். பெண் வாசகர்களால் படிக்கப்படும் போது ஒரு முடிவும் ஆண் வாசர்களுக்கென இன்னொரு முடிவும் அமையப் பெற்றது இந்நாவல்.

      இரண்டு முகப்புப் பக்கங்களையுடைய அடுத்த நாவலான The Inner Side of the Wind லியாண்டர் மற்றும் ஹெரோ ஆகியோரின் புராணக் கதையில் கட்டமைக்கப்பெற்றது. இந் நாவலின் முடிவு இதன் நடுப்பகுதியில் அமைந்திருக்கிறது. பாவிச் 1994 இல் வெளியிட்ட Last Love In Constantinople நாவல் குறி சொல்லும் சீட்டுக் கட்டான டேரட் கார்டுகளின் உதவியோடு வாசகனே கட்டமைக்கும் ஓர் அற்புதப் பரிசோதனைப் படைப்பு. இந்நாவல் கதையின் நாயகர்களுக்கான குறிசொல்லல் அன்று. வாசகன் தனக்குத் தானே குறிசொல்லிக் கொள்வதற்காக வடிவமைக்கப்பட்டதென பாவிச் கருதுகிறார்.

நாவலின் இருபத்தி இரண்டு அத்தியாயங்களும் டேரட் சீட்டுகள் போல இயங்கிக் குறிசொல்லும். கால்வினோ டேரட் சீட்டுகளில் கதைகளைக் கண்டறிந்தார். பாவிச் கதைகளைக் குறிசொல்லும் டேரட் சீட்டுகளாக மாற்றுகிறார். ரோமானியக் கவியான Ovid இன் Aenead  காவியம் பண்டைய ரோமில் குறிசொல்வதற்கான புத்தகமாகவும் பயன்பட்டிருக்கிறது.

பாவிச் பிரதியைப் பல சாளரங்களுடைய அரங்கமாகப் பாவிக்கிறார். பல பரிமாணங்கள் கொண்ட பிரதியில் வாசகனும் தன் சுய தேர்வின் பலபரிமாணங்களைக் கண்டடைகிறான். போர்ஹேயின் “The Garden of Forking Paths” கதையின்  சூட்சமத்தின் நீட்சியாகவே இருக்கிறது பாவிச்சின் கதை சொல்லல் முறை.

முப்பதுக்கும் மேற்பட்ட மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்டவை பாவிச்சின் படைப்புகள். தானே வடிவமைத்த புனைகதைகளெனும் பிரம்மாண்ட வீட்டில் வாசகர்களோடு வசிப்பதையே பாவிச்  விரும்பினார். வாசகர்கள் மீது அன்பு கொண்டிருந்த பாவிச் தனது எண்பதாவது வயதில் கடந்த நவம்பர் மாதம் 30 ஆம் தேதி மாரடைப்பின் காரணமாக பூதவுடலை நீத்தார்.

கீழ்க்காணும் பாவிச்சின் நேர்காணல் இணையதளத்தில் Dalkey Archives இல் தேர்ந்தெடுக்கப்பட்டு மொழியாக்கம் செய்யப்பட்டது.


மிலோராட் பாவிச் நேர்காணல்

கேள்வியாளர்:  நேற்று முழுவதும் உங்களை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தேன். ஒரு குழந்தையைப் போல நடந்து கொள்கிறீர்கள். செர்பியாவின் தற்கால எழுத்தாளர்களிலேயே மிக முக்கியமானவர் என்ற தோற்றம் எனக்குத் தென்படவில்லை.

மிலோராட் பாவிச்: உண்மை என்னவெனில் இவ்வாறுதான் நானும் உணர்கிறேன். உலகைப் பார்க்கும்பொழுது ஒவ்வொரு முறையும் அதை முதன் முறையாகக் காண்பது போல் இருக்க விழைகிறேன். வாழ்வு தொடரவும் எழுத்தில் பயணிக்கவும் இதுவரை நான் எழுதிய அத்தனை புத்தகங்களையும் மறக்க முயற்சிக்கிறேன்

கேள்வியாளர்: இதுவரை நீங்கள் எழுதிய புத்தகங்கள் இனி தொடர்ந்து எழுதத் தடையாக இருக்கின்றனவா?

மிலோராட் பாவிச்: நீங்கள் ஏற்கனவே எழுதியவற்றை உங்களால் மறக்க இயலாது போனால் இனிமேல் புதியவற்றைப் படைக்க இயலாது. ஏனெனில் ஒவ்வொரு புதிய புத்தகத்திலும் நீங்கள் தொடக்கத்தை நோக்கிப் பயணிக்கிறீர்கள்.

கேள்வியாளர்: தொடக்கமும் முடிவும் ஒரு நாவலாசிரியருக்கு உச்சபட்சச் சிக்கலை ஏற்படுத்துகின்றன எனக் கருதுகிறேன்

மிலோராட் பாவிச்: என் நாவல்களில் பெரும் பிரயத்தனங்களோடு தொடக்கம் மற்றும் முடிவு ஆகிய இரு புள்ளிகளையும் அழித்து இல்லாதவாறு ஆக்குகிறேன். காற்றின் உட்புறம் எனும் கதை இரண்டு ஆரம்பங்களைக் கொண்டுள்ளது. நீங்கள் எந்தப் பகுதியிலிருந்து வேண்டுமானாலும் படிக்கத் துவங்கலாம். கஸார்களின் அகராதி நாவலில் எந்தக் கதையையும் முதலாவதாகத் தேர்வுசெய்து வாசிக்க ஆரம்பிக்கலாம், ஆனால் எழுதுகையில் ஒவ்வொரு கதையையும் உள்ளே செருகும் போது அதற்கு முன்னரும் பின்னரும் செருகும் கதைகளை கவனித்துச் செருக வேண்டும். இதுவரை நான் எழுதியவற்றின் வாயிலாகப் பழைய வாசிப்பு முறையை தகர்த்திருக்கிறேன். அதாவது செவ்வியல் வாசிப்பின் தொடக்கத்தையும் முடிவையும் தவிர்க்கும் வாசிப்பை ஏற்படுத்தியிருக்கிறேன்

கேள்வியாளர்: ஒன்றுக்கும் மேற்பட்ட தொடக்கமும் முடிவும் உருவாகையில் நாம் செவ்வியல் கருதுகோள் சார்ந்த வழமையான தொடக்கத்தையும் முடிவையும் ஒடுக்குகின்றோமோ என எண்ணத் தோன்றுகிறது

மிலோராட் பாவிச்: நாம் அவற்றை ஒடுக்கவில்லை. ஆயினும் அவற்றைத் தளர்த்தி விடுவிக்கிறோம். மேலும் அவற்றோடு நம்மையும் சேர்த்து விடுவித்துக் கொள்கிறோம்.

கேள்வியாளர்: ஒவ்வொரு தொடக்கத்திற்கும் ஒரேயொரு முடிவுதான் உண்டு என நம்புகிறீர்களா?

மிலோராட் பாவிச்: நான் நம்பவில்லை.

கேள்வியாளர்: இருப்பினும் நாம் எது பிறப்பில் தொடங்குகிறதோ, அது இறப்பில் முடிவதாக வழக்கமாகச் சொல்கிறோம்.

மிலோராட் பாவிச்: நிச்சயமாக. ஆனால் என் அன்றாட வாழ்வில் இந்த ஒரு வழிப்பாதையை மட்டும் உடைய தெருவை என்னால் புறக்கணிக்க முடியவில்லை. ஆதலால் என் நாவல்களில் என்னால் இயன்றவரை இத்தகைய ஒரு வழி மட்டுமே சார்ந்தவற்றைப் புறக்கணிக்கிறேன்.

கேள்வியாளர்: வாழ்வின் யதார்த்தங்களுக்கு எதிரான ஆயுதமாக அதீதக் கற்பனையைக் கொள்ள முடியுமா?

மிலோராட் பாவிச்: யதார்த்த உலகிற்கும் கற்பனை உலகிற்கும் இடையே தீர்க்கமான எல்லைகள் என எவையும் இல்லை. ஒரு சுதந்திரசுயம் கொண்ட மனிதன் இவ்விரண்டு உலகங்களுக்கிடையே போடப்பட்ட எல்லைகளை அழித்துவிடுகிறான். ஒரு எழுத்தாளனுக்குரிய இன்றியமையாத தகைமையாக நான் உணர்வது என்னவெனில் எழுத்தாளன் யதார்த்தமும் அதிகற்பனையும் ஒன்றையொன்று பிரதிபலிக்கின்ற ஒரு புள்ளியை அடைய வேண்டும். பிறகு விஷயங்கள் தாமாகவே இயங்கத் தொடங்கும்.

கேள்வியாளர்: உங்களைப் பொறுத்தவரை மிகச் சிறந்ததை அடைவதற்கான உண்மை எதுவென எண்ணுகிறீர்கள்?

மிலோராட் பாவிச்:  உங்களுடைய பயம் உச்சக்கட்டத்தை நோக்கி நகர்கையில் நீங்கள் மிகச்சிறந்ததை அடைய முடியுமென நம்புகிறேன். நான் பயம்கொள்கின்ற ஒன்றின் அருகாமையை அடையும்போது நாம் மிகச் சிறந்ததின் நெருக்கத்தில் இருக்கிறோம். பயம் எல்லையைக் கடக்கச் செய்கிறது. இங்குதான் ஒருவர் உண்மையை அடைய இயலும். இத்தகைய சவால் மிகவும் பயனுடையதாக இருக்கும்.

கேள்வியாளர்: ஆகவே நீங்கள் பயம் நம்மை படைப்பிற்கு இட்டுச் செல்கிறது என்கிறீர்கள்.

மிலோராட் பாவிச்: நிச்சயமாக. பயம் மட்டுமே, பயம்தான் நம்மை முன்னோக்கி நகர்த்துகிறது. பயம் நம்மைச் சரியாக வழிநடத்துகிறது. இலக்கியப் படைப்பாக்கத்தில் பயம் இயங்குகிறது.

கேள்வியாளர்: உங்களை மிகவும் அச்சுறுத்துகிற பயம் என்று ஏதேனும் உண்டா?

மிலோராட் பாவிச்: எல்லாவிதமான பயங்களும் என் மேல் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. பயத்தின் ஆதிக்கத்தை ஒரு சிலுவையைப்போல வாழ்வு முழுவதும் சுமந்து வருகிறேன். பயம் மட்டுமே ஒரு எழுத்தாளனின் விசுவாசத்துக்குரிய நண்பனாக விளங்கமுடியும். ஒரு குழந்தையாக இருக்கும் போது எந்த அளவு பயத்தை உணர்ந்தேனோ, அதே அளவு பயம் இன்றும் என்னிடம் உண்டு. என்னுடைய பயத்திற்கு மட்டும் முதுமை என்பதே இல்லை . குழந்தையாயிருக்கையில் தனிமையைக் கண்டு மிகப்பயந்தேன். நடுநிசியில் ஆளற்ற வீடு என்னை அச்சுறுத்தியது. நான் வளர்ந்த வீட்டின் பின்புறம் என்னைப் பயமுறுத்தியது. நேற்றுகூட உங்களுக்கு அவ்வீட்டைக் காட்டினேன். விளக்குகள் அணைக்கப்பட்ட பின் அவ்வீடு எப்போதும் பயத்தை விளைவிக்கும்.

கேள்வியாளர்: நிஜமாகவே உங்களுடைய பயம் அனைத்தும் வீட்டின் உட்புறத்திலும் அல்லது வீட்டைச் சுற்றிலுமே குவிமையப்படுத்தப்படுகின்றது எனத் தோன்றுகிறது.

மிலோராட் பாவிச்: ஆகையால் தான் ஒரு வீட்டைக் கட்டுவது போல எனது நாவல்களை நான் உருவாக்குகிறேன் என எண்ணத் தோன்றுகிறது. ஆளற்ற காலியான வீட்டைப் பற்றிய பயம்அதைக் கடக்க முயற்சித்து வருகிறேன். என்னிடம் நிரந்தரமாகவே தங்கிவிட்டது. ‘காற்றின் உட்புறம்என்கிற கதைக்கு இரண்டு வாயில்களும் ஒர் உள்முற்றமும் இருக்கிறது. ‘கஸார்களின் அகராதிமிகப் பிரம்மாண்டமான வீடு. அதன் பலவகையான வாயில்களாகவும் வெளியேறும் பாதைகளாலும் வாசகர்களை அதிர்ச்சியடைய வைக்கிறது. எங்கெங்குங்கும் கதவுகள் காணப்படுகின்றன. வீட்டிற்கு நீங்கள் நுழைவதும் அல்லது வீட்டைவிட்டு வெளியேறுவதும் உங்களுடைய ஆசையின் தேர்வின் படியே நடந்தேறும்.

கேள்வியாளர்:  உங்கள் தந்தை என்ன தொழில் செய்தார்?

மிலோராட் பாவிச்: நான் சொல்வது விசித்திரமாகத் தென்படலாம். ஆனால் அவர் வீடுகளைக் கட்டினார். நிஜ வீடுகளைக் கட்டும் தொழில் புரிந்தார். அதை நான் விரும்பவில்லை. அவர் ஒரு ஓவியராகவோ சிற்பியாகவோ விளங்கியிருந்தாரெனில் நான் அதை விரும்பியிருப்பேன். ஓய்வு நேரத்தைச் செதுக்குவதிலும் படம் வரையவும் செலவிட்டார்.

கேள்வியாளர்: உங்கள் தாயாரைப் பற்றிச் சொல்லுங்கள். அவர் என்ன செய்தார்?

மிலோராட் பாவிச்: அவர் தத்துவ சாஸ்திரம் போதித்தார். என் தாயார் மிக இசை நயத்துடன் பேசுவார். எங்களுடைய மூதாதையர்களைப் பற்றி நிறைய கதைகளை எனக்கு அவர் கூறியிருக்கிறார்.

கேள்வியாளர்: உங்கள் தந்தை தாய்க்கும் உங்களுக்கும் ஒற்றுமைகள் இருக்கின்றனவா? அவர்களிடமிருந்து நீங்கள் பெற்றது. என்ன?

மிலோராட் பாவிச்: ஒன்றுமில்லை. நிஜமாகவே சில வேளைகளில் கண்ணாடியில் நான் என்னை உற்றுப் பார்க்கையில் அங்கே எனக்குப் பதிலாக என் தந்தையின் உருவம் காணப்படுவதாக எனக்குத் தோன்றும்.

கேள்வியாளர்: ஆகவே நீங்கள் உருவத்தில் மட்டுமே உங்கள் தந்தையைப் போலக் காணப்படுகிறீர்கள்.

மிலோராட் பாவிச்: அதைத்தான் உங்களுக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறேன். அவரிடமிருந்து பிதுரார்ஜிதமாக எதையும் நான் பெறவில்லை. எங்களுக்கிடையே உருவ ஒற்றுமை மட்டுமே உண்டு.

கேள்வியாளர்: உங்கள்மேல் பாதிப்பு ஏற்படுத்தியவர்கள் என எவரேனும் உண்டா?

மிலோராட் பாவிச்: என்னுடைய மூதாதையர்கள்தாம்

கேள்வியாளர்: என்ன சொல்கிறீர்கள்?

மிலோராட் பாவிச்: நான் என் தந்தையின் குடும்பத்தைப் பற்றிச்சொல்கிறேன். கடந்த இருநூறு ஆண்டுகளாக குடும்ப உறுப்பினர்களில் நிறையப் பேர் எழுத்தாளர்களாக விளங்கி இருக்கின்றனர். பதினெட்டாம் நூற்றாண்டில் முதல் பாவிச் தன்னுடைய கவிதைத் தொகுப்பை வெளியிட்டார். புடாவில் ஒரு துறவியாக வசித்து வந்தார். அவர் இலத்தீன் மொழியிலும் புலமை வாய்ந்தவராதலின் அம்மொழியிலும் தன் தாய் மொழியிலும் புத்தகங்கள் வெளியிட்டார். பிறகு வந்த தலைமுறைகள் ஒவ்வொன்றிலும் ஒரு பாவிச் எழுத்தாளராகத் திகழ்கிறார்.

கேள்வியாளர்: எழுத்தாளராவதற்கு முன் என்ன தொழில் செய்யலாமென எண்ணி இருந்தீர்கள்?

மிலோராட் பாவிச்: நான் எப்போதுமே எழுத்தாளராக விளங்க வேண்டுமென எண்ணினேன். இயற்கையாக எனக்கு வாய்த்த சூழலும் எப்போதும் எழுத்தாளர்கள் சூழ வளர்ந்ததாலும் இத்திசைக்குப் பயணிக்கத தலைப்பட்டேன்.

கேள்வியாளர்: நீங்கள் சிறந்தவரெனப் பாராட்டிய முதல் எழுத்தாளரை நினைவிருக்கிறதா? உங்களுக்குள்ளே நீங்கள் நான் இவரைப் போலவே திகழப் போகிறேன் என்று சொன்னதுண்டா?

மிலோராட் பாவிச்: இருக்கிறார். அவர் எனது மாமாவான நிக்கோலா பாவிச்தான். அவர் ஒரு கவிஞர். ஆனால் என்னைப் பாதித்த முதல்வரிசை எழுத்தாளர்களைப் பற்றி நான் வாசிப்பின் மூலம் அறியவில்லை. பிறர் பேசும்போது கவனிப்பதன் வாயிலாக நான் கற்றுக் கொண்டேன். இரண்டு விஷயங்களை நான் நம்பி இருந்தேன். ஒன்று செர்பியாவின் வாய்வழியாகப் புனையப்பட்ட பாராம்பரிய இலக்கியம் ( நாட்டுப்புறப் பாடல்கள் மற்றும் பழமொழிகள் ) இரண்டாவது தேவாலய சொற்பொழிவுகள் மற்றும் பைசான்டைன் கலாச்சார மரபு (Byzantine Culture) ஆகவே வாய்வழியாக கூறப்பட்டு காலங்காலமகப் புழங்கி வந்த நாட்டார் மரபே இவ்விரண்டிலும் முக்கியம்

கேள்வியாளர்: உங்கள் மொழிநடைக்கு எத்தகைய முக்கியத்துவம் வாய்ந்ததாய் இருக்கிறது செர்பிய வாய்மொழிக் கதை மரபு?

மிலோராட் பாவிச்:  முதலில் ஒரு எழுத்தாளர் தேர்ந்தெடுக்கும் சொல் ஒலிநயம் பொருந்தியதாய் இருக்க வேண்டுமென நம்புகிறேன். ஒலியின் இசையில் வாக்கியம் தானாகவே பொருந்தி சிறப்பாக அமையும். இலக்கியத்தை நான் அணுகும் முறையில் வாசகனைவிட கேட்பவனை முன் வைத்து இயங்குகிறேன். ஆக ஒரு புதிய சிக்கல் உருவாகிறது. உங்கள் கதையைக் கேட்பவரைத் தூங்கவிடக்கூடாது.

கேள்வியாளர்: உங்களைத் தூங்கச் செய்யும் எழுத்தாளர்கள் என எவரேனும் இருக்கிறார்களா?

மிலோராட் பாவிச்: நிறையபேர் இருக்கிறார்கள். அப்படிப்பட்டவர்களின் புத்தகங்களை வாசிப்பதை தவிர்க்கிறேன். ஹோமருக்குத் தூங்குவதற்குச் சகலவிதமான உரிமைகளும் உண்டு. ஆனால் கதை கேட்பவர்களைத் தூங்கச் செய்ய அவருக்கு எவ்வித உரிமையும் இல்லை என்கிறேன்.

கேள்வியாளர்: ஒரு சிறந்த எழுத்தாளர் பிறக்கிறாரா அல்லது உருவாக்கப்படுகிறாரா? உங்கள் கருத்து.

மிலோராட் பாவிச்: ஒரு எழுத்தாளனாக நான் இருநூறு ஆண்டுகளுக்கு முன்பே பிறந்துவிட்டேன். ஐரோப்பாவின் மிகப்பெரிய நூலகங்களில் எனது மூதாதையரின் படைப்புகள் காணக் கிடைப்பது உங்களுக்குத் தெரியும். ஒவ்வொரு முறையும் நான் ஏதாவது எழுதும்போது எனக்கு உறுதுணையாக எனது மூதாதையர்கள் விளங்குகின்றனர். பழையமொழியில் அவர்களுக்காகச் சில கவிதைகளை இயற்றியுள்ளேன். என்னைப் புரிந்து கொள்வதற்காக அவர்களுக்கு அவற்றைப் படைத்துள்ளேன்.

கேள்வியாளர்: உங்களுடைய படைப்புகளைப் பற்றி அவர்களுடைய கருத்து எவ்வாறு இருக்குமென எண்ணுகிறீர்கள்?

மிலோராட் பாவிச்: அவர்கள் மிகக் குழப்பமடைவார்கள் என எண்ணுகிறேன்.

கேள்வியாளர்: பொதுவாக ஒரு எழுத்தாளரின் பணி என்னவென்று கருதுகிறீர்கள்? அவனோ அல்லது அவளோ உலகைச் சூழ்ந்திருக்கும் பெருங்குழப்பத்திற்கு மருந்தாக ஒரு ஒழுங்கைக் கொண்டு வருபவர்கள் என்கிறீர்களா?

மிலோராட் பாவிச்: கலைப் படைப்பு எனக்கருதப்படும் ஒன்று உங்களைச் சூழ்ந்த குழப்பத்திற்கு ஓர் ஒழுங்கை கொண்டு வருகிறதா என்று என்னால் திட்டமிட்டுச் சொல்ல இயலவில்லை. கடவுளால் படைக்கப்பட்டதாக நான் கருதும் ஒன்றிற்கு ஒழுங்கமைப்பை வழங்க ஒருபோதும் நான் விரும்பியதில்லை. உண்மையில் இப்பெருங்குழப்பத்தை (Chaos) எனது புத்தகங்களின் வாயிலாகச் சித்தரிக்கிறேன். வேறு ஒன்றுமில்லை. இதுவே எனக்குப் போதும்.

கேள்வியாளர்: உலகின் பெருங்குழப்பத்தைச் சித்தரிக்கும்போது கடவுளை மேற்பரப்புக்குக் கொண்டுவர உங்களால் இயல்கிறதா?

மிலோராட் பாவிச்: இக்குழப்பத்தை மறைக்காமல் இருப்பது கடவுளை அணுகுவதற்கு ஒரு வழியாக விளங்குகிறது.

கேள்வியாளர்: கனவு காண்பதன் வாயிலாகக் கடவுளை நாம் அடைய இயலும் என எண்ணுகிறீர்களா? 

மிலோராட் பாவிச்: கனவுகளும் கூடப் பெருங்குழப்பங்களேயாகும். நீங்கள் சரியாகத் தான் சிந்திக்கிறீர்கள். மேலும்கடவுள் ஒவ்வொரு கனவின் அடியாழத்திலும் வசிக்கிறார்என்று நான் ஒரு புத்தகத்தில் எழுதியுள்ளேன். இப்போது நான் நினைப்பது என்னவெனில் நம்முடைய கனவின் அடியாழத்தை நாம் அடையும்போது அங்கே நமது மரணத்தை அடையாளம் காண்கிறோம். விழித்து எழுகையில் நாம் அத்தரிசனத்தை மறந்து விடுகிறோம்.

கேள்வியாளர்: கடவுளை உங்களால் விவரிக்க இயலுமா?

மிலோராட் பாவிச்: கஸார்களின் அகராதி வெளியிடப்பட்ட பிறகு இஸ்ரேலைச் சேர்ந்த ஒரு பல்கலைக்கழகப் பேராசிரியர் என்னிடம் இதே கேள்வியைக் கேட்டார். உங்கள் புத்தகத்தில் ஒரு கிறித்துவ சாத்தான், ஒரு யூத சாத்தான் மற்றும் ஒரு இஸ்லாம் மதம் விவரிக்கும் சாத்தான் பற்றியே பேசுகிறீர்கள். உங்கள் புத்தகத்தில் கடவுள் எங்கே இருக்கிறார்?” “புத்தகம் தான் கடவுள்என நான் அவருக்குப் பதிலுரைத்தேன். என்னுடைய புத்தகத்தைக் குறிப்பிடவில்லை. புத்தகத்தின் வடிவத்தைப் பொதுவாகக் குறிப்பிட்டேன். (ஆங்கிலத்தில் The Book with a Capital B) எனக்கு நிஜமாக இதுபற்றி வேறெதுவும் சொல்லத் தெரியவில்லை.

கேள்வியாளர்: கடவுள் எங்கே இருக்கிறார்?

மிலோராட் பாவிச்: அவர் நம்முள்ளே இருக்கிறாரென நம்புகிறேன். ஒவ்வொரு நாளும் கடவுள் நமக்கு ஏதாவதொன்றைக் கற்றுக் கொடுக்கிறார்.

கேள்வியாளார்: சாத்தான் தானே குறுக்கிட்டுக் கடவுளை பல்வேறு மதங்களாக உருமாற்றுகின்றானா?

மிலோராட் பாவிச்: ஆமாம். ஆகையால்தான் எனது புத்தகத்தில் மூன்று சாத்தான்கள் இருக்கிறார்கள்.

கேள்வியாளர்: கனவுகளற்றவொரு வாழ்வை உங்களால் கற்பனை செய்ய முடிகிறதா?

மிலோராட் பாவிச்: நீங்கள் வாழ்வின் அழிவைப் பற்றி பேசுகிறீர்களென நினைக்கிறேன். என்னைப் பொறுத்தவரை கனவு காண்பது என்பது வாழ்வது என்றாகிறது.

கேள்வியாளர்: நமது இருத்தலின் காரணம் என்ன?

மிலோராட் பாவிச்: இக் கேள்விக்கான பதில் என்னுடையகாற்றின் உட்புறம்எனும் நாவலினுள் மறைந்திருக்கிறது. காலம் என்பது சாத்தானின் படைப்பு. நித்தியத்துவமோ கடவுளின் படைப்பு. காலமும் நித்தியத்துவமும் இணையும் புள்ளியே வாழ்க்கை. நிகழ்காலம் எனப்படுகிற புள்ளியில் நித்தியத்துவத்தின் ஆசிர்வாதம் காலத்திற்கு இல்லாமல் போகிறது. இப்பிரபஞ்சத்தில் பல்வேறு தளங்களில் காலம் நித்தியத்துவத்துடன் இணையாமல் பிரிகிறது. வாழ்க்கை அங்கே இருப்பதில்லை. நிகழ்காலத்தின் கணங்களிலேதான் வாழ்வு காணப்படுகிறது.

கேள்வியாளர்: போர்ஹே ஒருவேளை இங்கே இருந்தால் அவரிடம் எதைப் பற்றித் தெரிந்துகொள்ள ஆசைப்படுவீர்கள்? அவரிடம் என்ன கேள்வி கேட்க விரும்புவீர்கள்?

மிலோராட் பாவிச்: ஒன்றுமில்லை. அவர் பேசுவதை கவனித்துக் கொண்டிருக்கவே விரும்புவேன்.

கேள்வியாளர்: நீங்கள் வாசகர்களுக்கான கதைசொல்லியா அல்லது கதை கேட்பவர்களுக்கானவரா?

மிலோராட் பாவிச்: நான் எப்போதும் கதைகேட்பவர்களுக்கான கதைசொல்லிதான். வாய்மொழி மரபில் வளரும் இலக்கியத்தையே மிகச் சிறந்ததென்பேன். பால்கனைச் சேர்ந்த கதைசொல்லிகளும் பைசான்டைன் தேவாலய போதகர்களும்தங்கச் சொற்கள் உடையவரெனவர்ணிக்கப்படும் க்ரைஸோஸ்டோமோஸ் போன்றவர்கள் தாம் என் ஆசான்கள். பிரான்ஸில் இதனை நன்கறிந்து வைத்திருக்கிறார்கள். ஒரு பத்திரிக்கையாளர் என்னைப்புதிய க்ரைஸோஸ்டோமோஸ்என்றே வர்ணித்தார். செம்மையான வாக்கியத்தின் ஒலியைக் கேட்பதென்பது சிறந்த அழகுடைய அறைகள் மற்றும் அரங்கத்தினுள் நடப்பது போலாகும்.

கேள்வியாளர்: உங்களைக் கவர்ந்த இனிய ஒலியைப் பற்றிக் கூறுங்கள்?

மிலோராட் பாவிச்: மொசார்ட் மற்றும் பாக்கின் இசைக் கோர்வையை இசைக்கும் வயலின் ஒலி, மொசார்ட்டின் இசைக் கோர்வைக்கு நிகரான இசைநயம் பொருந்திருக்கும் சிறந்த இலக்கியங்களின் சப்த அமைப்பு.

கேள்வியாளர்: நெடுங்காலம் இசை பயின்றீர்களா?

மிலோராட் பாவிச்: தனி வயலின் இசைக் கலைஞனாகவும் என்னால் விளங்கியிருக்கமுடியும். மார்க்க்ஸ் ப்ரூச் வயலினுக்காக ப்ரத்யேகமாக இசையமைத்த இசைக்கோர்வை எனக்கு மனப்பாடம்.

கேள்வியாளர்: சிறந்த கிரேக்க எழுத்தாளரான ஸ்த்ராதிஸ் ஸ்ர்காஸ் என்னிடம் ஒருமுறைஎன் கதைக்கான முடிவை மட்டும் கண்டுபிடித்துவிட்டால் போதும் பிறகு எல்லாம் தாமாக அமைந்துவிடும்என்று கூறினார்.

மிலோராட் பாவிச்: எனக்கு அவ்வாறான கண்ணோட்டம் இல்லை. வாசகன் சுதந்திரமாக என் கதையில் எந்த இடத்திலும் நுழையலாம். மேலும் வெளியேற விரும்பினால் எந்த இடத்திலும் வெளியேறலாம்.

கேள்வியாளர்: நான் தொடர்ந்து கேள்விகளைக் கேட்டுக் கொண்டிருப்பது உங்களை உறுத்துகிறதா?

மிலோராட் பாவிச்:  அப்படி இல்லை. மாறாக வாழ்க்கை நிறைய கேள்விகளால் நிரம்பியதாலே தான் மிக சுவாரசியமாக இருக்கிறது.

கேள்வியாளர்: எல்லா கேள்விகளுக்கும் பதில்கள் இருக்கின்றனவா?

மிலோராட் பாவிச்: இவ்வுலகில் கேள்விகளைவிட நிறைய பதில்கள்தாம் இருக்கின்றன.

கேள்வியாளர்: தொலைக்காட்சி மற்றும் திரைப்படம் ஆகிய ஊடகங்களின் வளர்ச்சி வாசிப்பையும் புத்தகங்களையும் பின்னுக்கு தள்ளுகிறதா?

மிலோராட் பாவிச்: எனது கண்ணோட்டத்தில் புத்தக வாசிப்பு ஒரு சரிவை நோக்கி நகர்கிறது. புத்தகங்களுக்கு நெருக்கடியான காலகட்டம் இது. ஆனால் நாவலை அப்படிச் சொல்லமாட்டேன். சிக்கல் புத்தகத்தை வாசிக்கும் முறையில் தான் இருக்கிறது. ஆதலால்தான் நான் கூடியவரை வாசகனை என் கதைகளில்  முடுக்கி முன்னேற விடுகிறேன். கலைகளுக்கான ஏழு பெண் தெய்வங்கள் இருக்கிறார்களென நான் நிஜமாகவே நம்புகிறேன். அவர்களனைவரும் ஒன்று கூடி சிறந்த கலையைப் படைக்கிறார்கள். ஒரு பெண் தெய்வம் சோதனையான காலகட்டத்தில் இயங்கும்போது தம் சோதரிமார்களிடம் உதவி கேட்கிறது. இவர்களுடைய உறவும் பிணைப்பும் இன்றியமையாததாகும்.

கேள்வியாளர்: வாழ்வையே இழிவுபடுத்தும் செயல் ஒன்றை பற்றிச் சொல்லுங்கள்

மிலோராட் பாவிச்: உங்களுக்குக் கிடைத்ததையும் நீங்கள் கண்டடைந்ததையும் அழித்தலே வாழ்வை அவமானப்படுத்தும் இழிசெயல் என்பேன்.

கேள்வியாளர்: உலகில் இப்போது நடக்கும் அக்கிரமங்களுக்கான எதிர்வினை தான் நீங்கள் கூறிய பதில்.

மிலோராட் பாவிச்: போரின் அழிவிலும் உருவாக்குதலே நான் செய்யக்கூடிய வினை எனக் கருதுகிறேன். ‘காற்றின் உட்புறம்நாவலின் கதாநாயகன் தன்னைச் சுற்றியுள்ளவர்கள் உலகையே அழித்துக் கொண்டிருக்கும் போது அயராது உலகை மீளுருவாக்கம் செய்ய முயற்சிக்கிறான்.

கேள்வியாளர்: கடந்த காலம் போர்களாலேயே நிரம்பியிருக்கிறது. எதிர்காலமும் அவ்வாறுதான் இருக்குமென அஞ்சுகிறேன். உங்களுடைய கருத்து என்ன?

மிலோராட் பாவிச்: பல புத்தகங்களில் நாம் வாசித்திருக்கிற புராணக்கதை ஒன்று உண்டு. இக்கதையின்படி மனிதன் எனப்படுபவன் தலை முதல் இடுப்பு வரை மனிதனாகவும், அதற்கு கீழே மிருக வடிவிலும் விளங்குகிறான்.

கேள்வியாளர்: உங்களுக்கு நம்பிக்கை ஏதேனும் தென்படுகிறதா?

மிலோராட் பாவிச்: நான் சொல்வதுதான் சரியான பதிலா எனத் தெரியவில்லை. ஆனால் வரலாற்றிலேயே தற்காலத்தில் தான் மிக அதிக அளவில் புத்தகங்கள் வாசிக்கப்படுகின்றன. உலகெங்கும் எனக்கு ஐந்து மில்லியன் வாசகர்கள் இருக்கிறார்களென என் பதிப்பாளர் கூறுகிறார். நிறைய எழுத்தாளர்களுக்கு என்னைவிட அதிகம் வாசகர்கள் உண்டு. இவ்வாசகர்களின் எண்ணிக்கை உலகமெங்கும் உள்ள இராணுவங்களின் போர் வீரர்களின் எண்ணிக்கையைவிட அதிகமானது. இது ஒரு பெரிய விஷயம். உலகெங்குமுள்ள எல்லா வாசகர்களும் அன்பின் வாயிலாக காட்டுமிராண்டித்தனத்தை வெல்லலாம் என்பதற்குச் சாட்சியாகத் திகழ்கிறார்கள்.


தமிழில் : கணேஷ்ராம்

 

நன்றி: கல் குதிரை

3 COMMENTS

  1. மிக அருமையான மொழிபெயர்ப்பு! பாவிச் என்னும் தனித்துவமான எழுத்தாளரை அறிமுகப் படுத்தியதற்கு நன்றி!

  2. மிலோராட் பாவிச்சின் நேர்காணலைப் படித்தேன்.மிகவும் பயனுள்ள,சிந்தனைகளைக் கிளறும் நேர்காணல்.பயம்,கனவுகள்,வாய்மொழி மரபு,இசைநிறை சொல்லாடல் என அவர் குறிப்பிடும் ஒவ்வொன்றும் ஒரு படைப்பாளனின் படைப்பூக்கத்துக்கு உத்வேகம் அளிப்பவைதாம்.இவற்றை நாம் ஒரே சமயத்தில் உணர்ந்து கொள்ள முடிந்தால்,குறைந்தபட்சம் ஒவ்வொன்றாகக் கண்டடைய முடிந்தால்…?ஓர் இயலாமை உணர்வு நம்மைக் கவ்விக் கொள்வதாக உணர்கிறேன்.கணேஷ்ராம் அவர்களின் மேன்மையான மொழிபெயர்ப்பு மனதை நிறைத்துச் செழுமைப் படுத்துவதாயிருக்கிறது.வாழ்த்துகள்.நன்றி.அன்புடன், கமலாலயன்

  3. நேர்த்தியான மொழிப்பெயர்ப்பு
    பயனுள்ள நேர்காணல்
    வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.