சாருலதா

“சார் பாம்பு! பாம்பு! “ என்று லைட்பாய் ஆறுமுகம் கத்தினான்.

அப்போது தான் அந்த வாகை மரத்தடியில் உட்கார்ந்து படப்பிடிப்பு இடைவேளையில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த உதவி இயக்குநர் மாணிக் ரே துள்ளிக்குதித்து எழுந்தான். அவனுக்குப் பின்னால் இரண்டடி தூரத்தில் ஒரு குட்டிப்பாம்பு சாவதானமாகப் போய்க் கொண்டிருந்தது. அதைப் பார்த்தவுடன் மாணிக் ரேக்கு பயத்தில் உடல் புல்லரித்தது. அடிவயிற்றிலிருந்து உமட்டிக் கொண்டு வந்தது. ஆறுமுகம் அங்குமிங்கும் கல்லைத் தேடினான். ஆனால் பாம்பு அந்தக் கலவரத்தை நின்று தலையை புல்லுக்கு மேல் சற்றே தூக்கிப் பார்த்து விட்டு மறுபடியும் மெல்ல ஊர்ந்தது. ஊசியான முகமும், மொத்தையான வழுவழுப்பான உடலும், சாம்பலும், பச்சையும் கலந்த நிறத்தில் ஈரப்பசை கொண்ட தோல் பளபளக்க, நிமிர்ந்து பார்த்தது. பாம்பின் கண்களை நேருக்குநேர் பார்த்த மாணிக் ரே கையிலிருந்த சிகரெட்டை கீழே தவற விட்டான். உடலில் ஒரு நடுக்கம் தோன்றி மறைந்தது. அவனைக் குறிவைத்தே அது வந்ததாக அவன் நினைத்தான்.

“என்ன சார்! அப்படியே நின்னுட்டீங்க! கல்லு கம்பு ஏதாச்சும் தேடுங்க சார்! “ என்றான் ஆறுமுகம்.

மாணிக் ரே கீழே குனிந்து தேடினான். அப்போது அங்கே வந்த யூனிட்டில் புதிதாகச் சேர்ந்திருந்த உதவி இயக்குநர் விக்ரம்ராஜா, “அண்ணே! அது கொறண்டிப்பூச்சிண்ணே! அதும்பேசாட்டிப் போவுது.. விஷங்கிடையாது..”  என்றான்.

மாணிக் ரேக்கு அவனுடைய தலையீடு பிடிக்கவில்லை. இப்படி இடம் கொடுத்தால் சீனியர் என்ற மரியாதை இல்லாமல் போய் விடும். இருபது வருடங்களாக சினிமாவுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் அவனிடம் பேசும்போது ஒரு பணிவு வேண்டாமா?

அவனைக் கோபத்துடன் பார்த்து, ‘அந்த மயிரு எங்களுக்கும் தெரியும்! பாம்புன்னா பாம்பு தான்! பார்த்தா அடிச்சிரணும்.. அவ்வளவு தான்… பெரிசா விளக்கம் சொல்ல வந்துட்டான்..! “என்று கடுப்புடன் சொன்னான் மாணிக் ரே.

இதைக் கேட்ட விக்ரம்ராஜாவுக்கு முகம் தொங்கி விட்டது. வாய்க்குள் ஏதோ முணுமுணுத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு வேகமாக நகர்ந்தான். ஒரு கணம் மாணிக் ரேக்கு அவ்வளவு கடுமையாகப் பேசியிருக்க வேண்டாமோ என்று தோன்றியது. பல சமயங்களில் இயக்குநரிடம் ஏச்சு வாங்கி மனம் புண்படும்போது அவனிடம் தான் சிகரெட் கேட்டு வாங்கிக் குடிப்பான். மிகுந்த மரியாதையான பையன் தான். ஆனால் பாம்பு விஷயத்தில் அவன் பேசிய அலட்சியமான தொனி அவனுக்குப் பிடிக்கவில்லை.

சிறுவயதிலிருந்தே மாணிக் ரேக்கு பாம்புகளைப் பிடிக்காது. விநோதமான ஒரு பயம் உடலில் கால் முதல் தலைவரையுள்ள நரம்புகளில் காட்டாறு மாதிரி ஓடும். ஒரு அசூயை அடிவயிற்றில் தோன்றி உமட்டிக் கொண்டு வரும்.. அவன் தவழ்ந்து கொண்டிருந்த காலத்தில் அம்மா கத்தரிக்காயை நறுக்கும்போது வெளியே வந்த  புழுக்கள் ஒன்றின் மீது ஒன்று ஏறிக்கொண்டு  நெளிந்து நெளிந்து போவதைப் பார்த்து குடித்த பாலையெல்லாம் வாந்தி எடுத்தான். அதிலிருந்து அப்படி ஒரு உணர்வு தோன்றிக் கொண்டேயிருந்தது.

தொலைக்காட்சியிலும் பாம்புகளைப் பார்க்க மாட்டான். சினிமா படப்பிடிப்பிலும் பாம்பை வைத்து படமெடுக்கிறார்கள் என்றால் அந்தத் திசையிலேயே தலை வைக்கமாட்டான். அப்புறம் இன்னொரு காட்சி அவனுடைய மனதில் அவ்வப்போது தோன்றி அவனைப் பயமுறுத்தும். ஏன் தோன்றுகிறது? எதற்கு தோன்றுகிறது? என்ற காரணகாரியமே இல்லாமல் அந்தக் காட்சி கண்முன்னால் இப்போது நடப்பதைப் போலத் தெரியும். அந்தக் காட்சி தெரியும்போதும் அவனுக்கு உமட்டல் வரும். புல்ல்லரிக்கும். வாயில் ஒரு புளிப்பு ஊறும்.

அப்போது அவன் மூன்றாவது வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். ஒரே பத்தி வீடு. அம்மா, அவன், தங்கை, மூன்று பேரும் அருகருகே படுத்திருந்தார்கள். மிட்டாய்க் கடையில் சரக்கு மாஸ்டராக இருந்த அப்பா எப்போதும் நள்ளிரவில் தான் வருவார். படுத்தால் காலையில் தான் முழிப்பான் மாணிக்கம். தூங்கும்போது அம்மாவின் வயிற்றைத் தடவிக்கொண்டே தூங்கி விடுவான். அம்மாவைப் போல அழகி இந்த உலகத்திலேயே யாரும் கிடையாது என்று நினைத்தான். அவள் அவனுக்கு மட்டும் தான் சொந்தமானவள் என்ற எண்ணம் தோன்றிக் கொண்டேயிருந்தது. திடீர் திடீரென்று அம்மாவைப் பார்க்கும் போதெல்லாம் அவளுடைய கையில், காலில், வயிற்றில், கன்னத்தில், முத்தமிடுவான்.

அப்போதெல்லாம் அம்மா சிரித்துக்கொண்டே,“ஏல, இது என்னல பழக்கம்? “ என்று சொல்லி செல்லமாய் தள்ளி விடுவாள்.

ஒரு தடவை அம்மாவை உற்றுப்பார்த்துக் கொண்டேயிருந்தவன் அவளுடைய உதட்டில் முத்தமிட்டான். ஒரு கணம் திகைத்த அம்மா அவனை சுளீரென அடித்து விட்டாள்.

“வெறுவாக்கெட்ட மூதி! என்ன வேலை பாக்கே? “

மாணிக்கம் அதிர்ச்சியடைந்தான். அதிர்ச்சியில் அடித்த அடியின் வலி கூட தெரியவில்லை. ஆனால் சில விநாடிகளில் அழுகை பொங்கி வர அப்படியே தரையில் உருண்டு புரண்டான். மற்ற நேரங்களில் சமாதானப்படுத்தும் அம்மா அன்று பேசாமல் அவளுடைய வேலைகளைப் பார்த்தாள். அம்மாவின் உதாசீனத்தைப் பார்த்த மாணிக்கம் தான் ஏதோ செய்யக்கூடாத தவறைச் செய்த மாதிரி ஏங்கி ஏங்கி அழுதான். ராத்திரி சாப்பிடவில்லை. அம்மா சாப்பிடக்கூப்பிட்டாள். சமாதானமாய்,

“அப்படியெல்லாம் செய்யக்கூடாது.. அது தப்பு..இன்ன..”  என்றாள்.
அவன் அழுதுகொண்டே, “இனிமே செய்யமாட்டேம்மா“  என்றான்.

அன்று இரவு ஏதோ சத்தம் கேட்டு திடீரென முழிப்பு தட்டியது.  மாணிக்கத்தின் காதுக்கருகில் சீத் சீத்தென்ற சத்தம் கேட்டது. தூக்கமயக்கத்தில் கண்களைத் திறக்கமுடியாமல் திறந்து ஒட்டிக்கொண்ட இமைகளைப் பிரித்தான். அவனுக்கு அருகில் இரண்டு பிரம்மாண்டமான புழுக்கள் ஒன்றின் மீது ஒன்றாக ஏறி நெளிந்து கொண்டிருந்தன. அந்தப் புழுக்கள் அந்த இடத்தை விட்டு நகராமலேயே நெளிந்து கொண்டிருந்தன. புழுக்களிடமிருந்து வேகமான மூச்சுக்காற்றும், முனகலும் கேட்டுக் கொண்டேயிருந்தது. அவன் நேற்று கணபதி வீட்டில் தொலைக்காட்சியில் வரிசையாக சேனல்களை மாற்றிப் பார்த்தபோது டிஸ்கவரி சேனலில் பாம்பு முட்டைகளிலிருந்து கூட்டம் கூட்டமாய் பாம்புகள் வெளிவந்து ஒன்றின் மீது ஒன்று ஏறி நெளிந்து கொண்டிருப்பதைப் பார்த்தவுடன்,

“எலேய் அந்தச் சேனலை மாத்துடா.. எனக்கு வாந்தி வருது.. “ என்று கத்தினான்.

கணபதிக்கு கணக்குப்பாடத்தில் அவனை விட மாணிக்கம் நான்கு மார்க் கூட எடுத்து விட்டானென்ற விளம் இருந்தது. அவன் மாற்றவில்லை. இரண்டு பாம்புகள் பிணைந்து கொண்டு சீத் சீத்தென்று சீறியபடி எழுந்து நிற்கிற காட்சி வரும்போது அவனுக்கு ஏனோ வீட்டில் பார்த்த காட்சி ஞாபகத்துக்கு வந்தது. அவ்வளவு தான் குபுக்கென்று நடுவீட்டில் சாப்பிட்ட புரோட்டாச்சால்னாவை வாந்தி எடுத்து விட்டான். அம்மா தான் வந்து திட்டிக் கொண்டே கழுவி விட்டாள்.

இப்போது அவன் தொலைக்காட்சியில் பார்த்தமாதிரியே ஒரு பாம்பு மேலே எழுந்து எழுந்து கீழே விழுந்து கொண்டிருந்தது. ஒவ்வொரு முறையும் முனகலும் மூச்சுக்காற்றும் வேகமாக வந்தது.  மேலே படுத்திருந்த அப்பா அம்மாவை நசுக்கிக் கொண்டிருந்தார். அம்மா மூச்சு விடத் திணறிக்கொண்டிருந்தாள். அதனால் தான் ஹூம் ஹூம் என்று முனகிக் கொண்டிருந்தாள் என்று நினைத்தான் மாணிக்கம்.

“அம்மா.. அம்மா..“ என்று குரல் கொடுத்தான்.

அம்மாவிடமிருந்து அடித்தொண்டையில் கடுமையான குரலில், “திரும்பிப் படுக்கப்போறியா.. இல்லே அடி வேணுமா?“, என்ற வார்த்தைகள் கேட்டன.

அது அம்மாவின் குரலில்லை. ஒரு மிருகத்தின் உறுமலைப் போல இருந்தது. அவன் பயந்துபோய் திரும்பிப்படுத்தான். அதன் பிறகு எந்தச் சத்தமும் கேட்கவில்லை. கூர்ந்து கேட்பதற்குள் அவன் உறக்கத்தின் தொட்டிலில் ஆடினான். ஆனால் அவனுடைய கனவில் அவன் மீது யாரோ விழுந்து நசுக்குவதைப் போல உணர்ந்தான். வாயைத் திறக்கமுடியவில்லை. கத்த முடியவில்லை. படுக்கையிலேயே மூத்திரம் பெய்து விட்டான். அன்றிலிருந்து தொடங்கியது படுக்கை மூத்திரம். இப்போதும் மாணிக் ரேவுக்கு பயங்கரமான கனவுகள் வந்தால் மூத்திரம் பெய்து விடுவான். யாருக்கும் தெரியாது என்று நினைத்துக் கொண்டிருக்கிறான்.

“யெப்பா, மாணிக்கம்! மத்தியானத்துக்கு மேலே கிரேன் ஷாட் எடுக்கணுமே.. ஜிம்மி ஜிப்பர் வந்துகிட்டிருக்கா? போனைப் போட்டியா? எல்லா இழவையும் டைரக்டரே தான் கேக்கணும் “ என்று இயக்குநர் அரவிந்த் கத்தினார்.

மாணிக் ரே உடனே லுலு புரொடெக்‌ஷன் மானேஜருக்குப் போனைப் போட்டான். மலையோரம் என்ற அந்தத் திரைப்படத்தின் ஷூட்டிங் திருவனந்தபுரம் மதுராவில் உள்ள பொன்மலையில் ஒரு வாரமாய் நடந்து கொண்டிருந்தது. நாலைந்து படங்களுக்கு மூன்றாவது உதவி இயக்குநராக பணிபுரிந்த அரவிந்துக்கு வசமாக ஒரு தயாரிப்பாளர் சிக்கிக் கொண்டார். தயாரிப்பாளருக்கும் இது முதல்படம். அவரைப் பார்க்கும்போதே ஜொள்ளுபார்ட்டி என்று தெரிந்தது. மொத்தப் படக்குழுவில் மாணிக் ரேயைத் தவிர மற்ற எல்லோரும் கதாநாயகன், கதாநாயகி உட்பட எல்லோரும் புதியவர்கள். சினிமாவைத் தியேட்டரில் மட்டுமே பார்த்தவர்களும் இருந்தார்கள்.

மாணிக் ரே தியேட்டரில் முதன்முதல் பார்த்த சினிமா, பழைய படமான நாடோடி மன்னன். அப்பா எம்ஜிஆர் வெறியர். கையில் இரட்டை இலையை பச்சைகுத்தி வைத்திருக்கிற தீவிரத்தொண்டர். ஊரில் அவர் எம்ஜிஆர் படங்கள் எங்கு போட்டாலும் எத்தனை தடவை என்றாலும் பார்த்து விடுவார். எம்ஜிஆர் படங்களைப் பார்த்தால் தான் இந்தக்காலப் பையன்கள் ஒழுக்கமாக வளருவார்கள் என்று யாருடன் பேசிக்கொண்டிருந்தாலும் சொல்லாமல் இருக்கமாட்டார். மாணிக் ரே படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் கண்ணிமைக்கும் நேரத்தில் காட்சிகளும் நடிகர்களும் மாறிக் கொண்டேயிருப்பதைப் பார்த்து ஆச்சரியப்பட்டான். அவர்கள் எல்லோரும் திரைக்குப் பின்னால் இருக்கிறார்கள் என்று நினைத்தான். இடைவேளையில் திரைக்குப் பின்னால் போய் பார்க்க வேண்டும் என்று நினைத்துக்கொண்டான். அன்று தொடங்கியது அந்தக் கலையின் மீதான கிறுக்கு. போகிற இடங்களிலெல்லாம் சினிமா பார்த்தான். சினிமா மீதான் மோகம் அவனைச் சென்னைக்கு வரச்சொல்லி கண்சிமிட்டியது. இன்னும் அவனுடைய லட்சியச் சினிமாவைப் பார்க்கும் பாக்கியம் தமிழ் ரசிகர்களுக்குக் கிடைக்கவில்லை. ஆனால் இத்தனை வருடங்களில் சினிமாவின் அத்தனை விஷயங்களையும் கரதலப் பாடங்களையும் கரைத்து குடித்து விட்டான். அதனால் புதிதாகப் படம் எடுக்கிற எல்லோரும் மாணிக் ரேயை அசோசியேட் டைரக்டராகச் சேர்த்துக் கொள்வார்கள். எல்லாவற்றையும் தன் தலையில் போட்டுக்கொண்டு செய்வான் மாணிக் ரே.

ஆரம்பித்தது நாடோடி மன்னன் என்றாலும் அவனுக்கு பதேர்பாஞ்சாலி தான் உன்னத அநுபவத்தைக் கொடுத்ததாகச் சொல்வான். சத்யஜித் ரேயின் மீது கிறுக்காக இருந்த மாணிக்கம் அவருடைய அத்தனை படங்களையும் மனப்பாடமாய் வைத்திருந்தான். குறிப்பாக 1964–ஆம் ஆண்டில் வெளியான சாருலதா-வில் வரும் மதாபி முகர்ஜியைப் பூஜித்தான். மேன்சனில் அவனுடைய அறையில் மதாபியின் மிக அழகான கருப்பு வெள்ளைப் புகைப்படத்தைப் பெரிதாக்கி சுவரில் ஒட்டி வைத்திருந்தான் எல்லோரிடமும் அவள் தான் அவனுடைய காதலி என்று சொல்வான். அப்போது கண்களில் காதலும் காமமும் கலந்த மின்னல் ஒன்று வெட்டிச் செல்லும். பக்கத்து அறைகளில் உள்ள நண்பர்கள்

“ஏண்ணே, கிழவியைப் போய் காதலிக்கிறீங்க.. அவ எழுபத்தியஞ்சி வயசுக்கிழவி.. நல்லா சிக்கு சிறுத்தா சின்னக்குட்டியைப் பார்த்துப் பிடிப்பீங்களா?“, என்று கேலி செய்வார்கள்.

அதற்கு மாணிக் ரே, “சாருலதாவைப் பார்த்தாதாண்டா உங்களுக்கு அவளோட காவிய அழகு தெரியும்.. கவிதைடா கவிதை.. எப்படி இருப்பா.. தெரியுமா? மாடத்துச்சன்னல் வழியே அவள் வெளியே பார்க்கிற காட்சியில் சாரு எப்படியிருப்பாள் தெரியுமா? சோகந்ததும்பும் அந்த அழகைப் பார்த்துக்கிட்டிருந்தாலே போதும்..”, என்று பதில் சொல்லுவான்.

இத்தனைக்கும் அந்த நண்பர்கள் அன்றாடம் குடிப்பார்கள். மாணிக் ரே குடிக்கமாட்டான். அதில் கண்டிப்பாக இருந்தான். குடிப்பழக்கம் மட்டும் சினிமாவில் ஆரம்பிக்கக்கூடாது. எவ்வளவோ பேர் எத்தனையோ தடவை வற்புறுத்தியும் அவன் இணங்கவில்லை. அதில் பலபேருக்கு வருத்தம்கூட. ஆனால், அவன் ஒழுக்கமாக இருக்கவேண்டும் என்று எம்ஜிஆர் படங்களை மட்டுமே பார்க்க அனுமதித்த அவனுடைய அப்பா, குடியினால் தான் குடல் வெந்து புற்றுநோய் வந்து இறந்து போனார். எப்போதாவது சிகரெட் மட்டும்  ஒன்றோ இரண்டோ உண்டு. அரவிந்த் மாதிரி அரைகுறைகளிடம் மாட்டிக் கொண்டு டென்சனாகும் போது  பழகிக்கொண்டது. அப்படிக் குடிக்கும்போது சத்யஜித் ரே குடிப்பதை நினைத்துக் கொள்வான். அதே போல பெண்கள் தாராளமாய் புழங்குகிற இடம் சினிமா என்றாலும் மாணிக் ரேயின் கண்களிலோ செயல்களிலோ எந்த கள்ளத்தனமும் இருக்காது. அவனுடைய கனவெல்லாம் அவனுடைய மானசீகக்குரு சத்யஜித் ரேயைப்போல ஒரு சினிமா, சாருலதாவைப் போல ஒரு மனைவி. அதற்காகவே வாழ்க்கையை ஒரு தவம் மாதிரி வாழ்ந்து வந்தான்.

இன்னும் ஜிம்மி ஜிப்பர் வரவில்லை. லுலுவில் போனையும் எடுக்கவில்லை. இந்தச் சின்னப்பயல் என்ன சொல்லப்போகிறானோ? என்ற தவிப்புடன் மலைரோட்டையே பார்த்துக் கொண்டிருந்தான். மலையின் மீது மேகங்கள் நெளிந்து நெளிந்து மலைப்பாம்புகளைப் போல இறங்கி ஊர்ந்து கொண்டிருந்தன. மாணிக் ரே முகத்தைத் திருப்பிக்கொண்டான். லேசான குளிர்காற்று சட்டைக்குள் புகுந்து புல்லரிக்கவைத்தது. கைகளை நெஞ்சுக்கு குறுக்கே கட்டிக் கொண்டு ஆழ்ந்து மூச்சிழுத்தான். மழைவிழுந்த மண்ணின் வாசமும் பச்சையின் மணமும் சேர்ந்து அவனைக் கிறக்கியது.. அவனுக்குப் படம் கிடைக்கும்போது இந்த மலையில் ஒரு ஷெட்யூலாவது எடுக்க வேண்டும். இதுவரை யாரும் காட்டாத பொன்மலையைக் காட்டவேண்டும். அவனுடைய மனதில் அவனுடைய படம் ஒவ்வொரு பிரேமாக ஓடியது. எல்லா பிரேமிலும் சாருலதா ஏக்கமும் காதலும் பொங்கும் உதடுகள் லேசாக விரிய புன்னகைத்தபடி இருந்தாள்.

 

தூரத்தில் இயக்குநர் அரவிந்த் அவனை நோக்கி வந்து கொண்டிருப்பதைப் பார்த்தான். போச்சு. இன்று என்னென்ன ஏச்சு வாங்க வேண்டுமோ? மாணிக் ரே இப்போதே பரிதாபமான முகத்தை அணிந்து கொண்டான். ஆனால் அவன் நல்லநேரம் திடீரென சோவென மழை கொட்டியது. காற்றில்லை. மேகங்கள் கருக்கவில்லை. இடியோ மின்னலோ கிடையாது. அப்படியே பாத்ரூம் ஷவரில் தண்ணீர் கொட்டுவதைப் போலக் கொட்டியது. மழை இறங்கியதும் இயக்குநர் அரவிந்த் திரும்பி ஓடினான். மாணிக் ரேயும் சாவகாசமாக நடந்து அருகிலிருந்த பன்னீர்மரத்தின் கீழ் ஒதுங்கினான். பன்னீர்ப்பூக்கள் உதிர்ந்து கொண்டிருந்தன. அந்த மணம் அவனுக்குள் என்னென்னெவோ செய்தது.

அம்மாவுக்குப் பன்னீர்ப்பூக்கள் ரொம்பப்பிடிக்கும். அவன் தெருவில் இருந்த பன்னீர் மரத்தின் பூக்களை பொறுக்கிக்கொண்டு வருவான். அம்மா அதைப் பார்த்ததும், “எஞ்செல்லம்.. ராஜா..” என்று கொஞ்சி கன்னத்தில் முத்தமிடுவாள். அந்த முத்தத்தின் கிளர்ச்சிக்காகவே அவன் அன்றாடம் பன்னீர்மரத்தடிக்குப் போவான்.

இப்போது அந்தப் பூக்களின் வாசனை முத்தத்தின் கிளர்ச்சியையும் சேர்த்துக் கொண்டு வந்தது. இப்படி மழை பொழியும் நேரத்தில் அவன் கைகளுக்குள் உடலோடு உடலாக சாருலதா கண்களை மூடி மயங்கிக் கிடக்கிறாள். அவளுடைய பிளந்த உதடுகளை நோக்கி அவனுடைய உதடுகள் நெருங்குகின்றன.

“கட்“ என்ற குரல் கேட்டது.

மாணிக் ரே நாவால் உதடுகளைத் தடவிக்கொண்டான். அவன் உடலில் சூடு பரவிக் கொண்டிருந்தது. முப்பத்தியெட்டு வயதாகி விட்டது. இதுவரை பெண்வாசனையைப் பற்றி யோசித்ததில்லை. பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை ஸ்கலிதமெல்லாம் தானாகவே கைலியில் வெளியேறி விடும். அவன் அதைப் பற்றி கவலைப்பட மாட்டான். அவன் நினைத்தபடியே எல்லாம் நடக்கும் என்று நம்பிக்கை வைத்திருந்தான்.

“என்ன சார் இங்கே மழையிலே நின்னுட்டீங்க..” பின்னாலிருந்து ஒரு பெண்ணின் குரல் கேட்டது.

அவன் திடுக்கிட்டு தன் பிடியிலிருந்த சாருலதாவை விலக்கினான். திரும்பிப் பார்த்தான். கதாநாயகியின் அம்மா மழைநீரில் நனைந்து உடலோடு ஒட்டிய சேலையோடு நின்று கொண்டிருந்தாள். அவளுடைய கண்களில் போட்டிருந்த காஜல் கரைந்து கருப்பாய் கன்னங்களில் வழிந்து பார்க்க அகோரமாய் இருந்தது. அவனால் அந்த முகத்தைப் பார்க்கமுடியவில்லை.

குனிந்தபடியே, “திடீர்னு மழை பிடிச்சிருச்சில்ல.. அதான் பக்கத்திலே ஒதுங்கிட்டேன்..” என்று சொன்னான்.

அவனுடைய கண்களில் அவளுடைய பொங்கித் ததும்பும் மார்புப்பிளவும் அதன் நடுவில் மூச்சுத் திணறிக் கொண்டிருந்த மெல்லிய சங்கிலியும் தான் முதலில் தெரிந்தது. சேலை காற்றில் ஒதுங்கியதைக் கவனிக்காமலோ அல்லது கவனிக்காத மாதிரியோ இருந்த அவளுடைய வயிற்றை முழுமையாகப் பார்த்தான். அவனால் சட்டென கண்களை விலக்கமுடியவில்லை. மழைநீரில் வழிந்து மார்பிலிருந்து சொட்டிக்கொண்டிருக்க அப்படியே வழிந்து தொப்புள்க்குழிக்குள் நுழைந்து வெளியேறியது. அவனுடைய இடுப்பில் பரவிய சூடு ஏதோ செய்தது. இவ்வளவு காலம் எவ்வளவோ பெண்ணுடல்களைப் பார்த்திருந்தாலும் எந்தக் கிளர்ச்சியும் அடைந்ததில்லை. அது ஏதோ அலுவலக வேலை மாதிரி தான் தோன்றும். யாரையும் அல்லது எதையும் குறிப்பாகப் பார்க்க மாட்டான். ஆனால் வெளியே இப்படி ஒரு சூழ்நிலையில் அவன் மனம் நிலைகொள்ளாமல் தவித்தது. அவன் சாருலதாவை நினைக்க முயற்சி செய்தான். ஆனால் கண்ணில் எதிரில் நின்ற அந்தப் பெண்ணின் திறந்த மார்பும், வயிறுமே தெரிந்தது.

“என்ன சார் அப்படிப் பார்க்கறீங்க? “ என்று புன்னகையுடன் புதிதாக வெட்கப்பட்ட மாதிரி சேலையை சரி செய்தாள். கண்ணாடிச்சேலை வழியே எல்லாம் தெரியத்தான் செய்தது. அவன் அவள் முகத்தைப் பார்க்கத் தடுமாறினான். எவ்வளவோ முயற்சி செய்தும் கண்கள் முகத்துக்குக் கீழேயே அலை பாய்ந்தது,

“ஒண்ணுமில்ல.. சும்மா தான்.. ஜிம்மி ஜிப்பர் வரணும்.. அதான் பார்த்துக்கிட்டிருக்கேன்.. நீங்க எங்க இங்கே? “

”உங்களைப் பாக்கத்தான் வந்தேன் சார்.. அடுத்த படம் நீங்க பண்ணப்போறதா விக்ரம் தம்பி சொல்லுச்சி.. நம்ம பாப்பாவை அதிலே ஹீரோயினாப் போடுங்க சார்..”

அதைக் கேட்டதும் மாணிக் ரேவுக்கு ஒரு இயக்குநரின் முகம் வந்து விட்டது. தலைமுடியைக் கோதிக்கொண்டே,

“பேசிக்கிட்டிருக்கோம்.. முடிவானதும் சொல்றேன்..”

“சார், நாங்க சினிமாவுக்கு புதுசு சார்.. உங்கள மாதிரி பெரிய ஆட்களோட சப்போர்ட்டில தான் பாப்பாவுக்கு பேர் கிடைக்கணும்… மறந்துராதீங்க.. சார்..”

“சரி.. பார்க்கிறேன்..”

மழை டக்கென்று நின்றது. அவள் கைகளினால் முகத்திலிருந்து கால்வரை குனிந்து தண்ணீரை வழித்து விட்டாள். அவன் பார்த்துக் கொண்டேயிருந்தான். நிமிர்ந்து அவனைப் பார்த்துச் சிரித்தவள்,

“சார் மறந்துராதீங்க.. ராத்திரி ரூமுக்கு வரேன்.. இன்னும் சில விஷயங்களைக் கேக்கணும்.. ” என்று சொல்லிக்கொண்டே அவனுக்கு மிக அருகில் மார்பினால் உரசினாற் போல் நடந்து போனாள்.

கொஞ்ச தூரம் போனதும் நின்று திரும்பி, “ரூம் நம்பர் இருநூத்திஎட்டு தானே! “ என்று சொல்லி அவனுடைய பதிலை எதிர்பாராமல் போனாள்.

அவனை சூடும் குளிரும் ஒரு சேரத்தாக்கியது. முதல்முறையாக கரமைதுனம் செய்யவேண்டும் என்ற ஆசை வந்தது.

ஜிம்மி ஜிப்பர் வரவில்லை. லைட் போய் விட்டது. ஷூட்டிங் முடிந்து விட்டது. இயக்குநர் அரவிந்த் அன்று பெய்த மழை உட்பட எல்லாம் அவனால் தான் நடந்தது என்று திட்டினான்.

மாணிக் ரேக்கு சோர்வாக இருந்தது. எதற்கு இவ்வளவு கஷ்டப்பட வேண்டும்? படிப்பில் அவன் கெட்டிக்காரன் தான். ஏதாவது ஒரு பரீட்சை எழுது கிடைத்த வேலையைப் பார்த்துக் கொண்டு அம்மா பார்த்த பொண்ணைக் கலியாணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்று நிம்மதியாக வாழ்ந்திருக்கலாமோ? நான் யார்? இவர்கள் எல்லாம் யார்? இவர்களுக்கும் எனக்கும் என்ன உறவு? எதற்காக இந்தப் பொன்மலைக்கு வந்து சின்னப்பையன்களிடம் பேச்சும் ஏச்சும் வாங்க வேண்டும். இருபது வருடங்கள்! எந்தக் கோட்டிக்காரனாவது இருபது வருடத்தைத் தொலைப்பானா? இருபது வருடங்களுக்கப்புறமும் நாளைக்கு என்ன நடக்கும் என்று தெரியாது. சினிமா ஒரு விற்பனை மையம். அதில் விற்கிற மாதிரி சரக்கை உற்பத்தி செய்யவேண்டும். இல்லையென்றால் உற்பத்தி செய்த சரக்கை விற்கும் திறமை வேண்டும். கலை! லட்சியம்! சத்யஜித் ரே! சாருலதா! மயிரு! காறித்துப்பினான் மாணிக் ரே.

மதுராவில் இருந்த அனந்தம் ஹோட்டலில் தான் அறைகள் போடப்பட்டிருந்தன. அந்த ஹோட்டல் முதலாளி ஸ்ரீதரன் கூட சினிமா எடுத்து நொடித்துப் போனவர். ஆனால் சினிமாக்காரர்களைப் பார்த்தவுடன் அவருடைய கண்ணில் இரை மீதும் பாயும் ஒரு ஓநாயின் வெறி தெரிந்தது. தினசரி படப்பிடிப்பு முடிந்ததும் அன்று நடந்தது என்ன என்று கேட்டுத் தெரிந்து கொள்வார். அவனிடம் கூட,

“நல்ல கத உண்டெங்கில் பறையு சாரே! நமுக்கு ஒரு சினிம பண்ணாம்..அல்லே” என்று சொல்லிக் கண்ணடித்தார்.

அவனும், “நோக்காம்..” என்று சொல்லி விட்டு நகர்ந்திருக்கிறான்.

இன்று யாரையும் பார்க்கவோ பேசவோ பிடிக்கவில்லை. நேராக அறைக்குப் போய் டி.வியைப் போட்டு விட்டு படுத்து விட்டான். யாரோ கதவைத் தட்டினார்கள். அவன் அசைய வில்லை. எப்படித் தூங்கினான் என்று தெரியாது. எழுந்தபோது வெளியே அரவமில்லை. கதவைத் திறந்தான். வெளியே ஒரு கிண்ணத்தில் கஞ்சியும் பப்படமும் மூடி வைக்கப்பட்டிருந்தது. நல்ல பசி! அவன் அதை எடுத்துக் கொண்டு அறைக்குள் சென்று சாப்பிட்டான். பாத்திரங்களை வெளியில் வைத்து விட்டு உள்ளே வந்தான். படுக்கையில் படுத்ததும் ஹீரோயினுடைய அம்மாவின் நினைவு வந்தது. அவளுடைய நனைந்த உடல் கண்முன்னால் ஜூம் லென்ஸ் போட்டமாதிரி தெரிந்தது. அவன் கண்களை மூடி தூங்க முயற்சித்தான். அரைகுறையான தூக்கத்தில் கண்களை மூடி மூடித்திறந்தான்.

அவனது அறைக்குள் கூட்டம் கூட்டமாய் பாம்புகள் வந்தன. அவன் படுத்திருந்த கட்டிலை நோக்கியே எல்லாம் ஊர்ந்தன. நெளிந்து நெளிந்து எல்லாவண்ணங்களிலும் இருந்த அந்தப் பாம்புகள் தங்களுடைய நாக்கை நீட்டி நீட்டி காற்றை முகர்ந்து பார்த்தன. அவன் கட்டிலின் மீது ஏறி நின்றான். வழுவழுப்பான ஈரவுடலைத் தேய்த்து கட்டிலைச் சுற்றிச் சுற்றி வந்தன. அவனுக்கு உடல் புல்லரித்தது. இத்தனை பாம்புகளை அவன் ஒரு நாளும் பார்த்ததில்லை. ஒவ்வொன்றும் ஒவ்வொன்றின் மீது ஏறி முன்னேறின. அவன் பயத்தில் கத்த நினைத்தான். வாயிலிருந்து வார்த்தைகள் வரவில்லை. எல்லாப் பாம்புகளும் கணத்தில் உருமாறி பெரிய கருநாகமாக மாறியது. ஆளுயரத்துக்கு எழுந்து நின்ற அந்தக் கருநாகத்தின் கண்களைப் பார்த்தான். வசியம் செய்யப்பட்டவனைப் போல அப்படியே கட்டிலில் படுத்தான். இப்போது கருநாகம் தன்னுடைய படத்தை விரித்தது. அவனுக்கு அதன் அழகு பயங்கரமானதாகவும் வசீகரமானதாவும் இருந்தது. அந்தப்படத்தில் உதடுகளால் அழுந்த முத்தமிடும் ஆவேசம் வந்தது. அவன் இருகைகளையும் நீட்டினான். பிளவுண்ட நாவுகளை நீட்டியபடியே அந்தக் கருநாகம் கட்டிலின் மீது ஏறி அவனைத் தீண்டியது. தீண்டியபோது இறந்து விடுவோமோ என்ற பயம் வந்தது. கைகால்களை உதற நினைத்தான். கண்களைத் திறக்க நினைத்தான். ஆனால் முடியவில்லை. அவனால் தப்பிக்கமுடியாதபடி அவனுடலைச் சுற்றிக் கொண்டு அவனுடைய உதடுகளைக் கவ்வியது. அவனுடைய உதடுகளில் அதுவரை அவன் வாழ்நாளில் கண்டிராத அருஞ்சுவை ஊறியது. அவனுடல் முழுவதும் இடைவெளியில்லாமல் கடித்தது. அதன் பற்கள் சதையில் அழுந்தும் போதெல்லாம் மூடியிருந்த அவன் கண்ணில் வண்ணங்கள் பூத்து மலர்ந்தன. உடலின் ஒவ்வொரு ரோமக்கால்களிலும் இன்பம் அருவியெனக் கொட்டியது. உடலில் நாவுகள் தீண்டிய இடங்களிலெல்லாம் டப் டப்பென காற்றுக்குமிழிகளைப் போல இதுவரை அடைத்துக் கிடந்த துக்கம் வெடித்து வெளியேறியது. ஈரமான அந்த உடலின் மண்வாசனை பன்னீர்ப்பூவின் வாசனையாக மாறியது. வாசனை ஆறாகப்பெருகி ஓடியது. அவன் அந்த ஆற்றில் குளித்தான். முங்காச்சி போட்டுக்கொண்டேயிருந்தான். அவன் ஒவ்வொரு முறை முங்கி எழும்போதும் அவனுடைய அவமானங்கள் ஒவ்வொன்றாய் கரைந்தது.. தூய்மையான அந்த நீரை இரண்டு கைகளாலும் அள்ளியள்ளிக் குடித்தான். கடைசியாய் முங்கி எழும்போது அவனுடைய அம்மாவின் முகம் கண்முன்னால் எழுந்து வந்தது.

அவன் “அம்மா..“ என்று முனகினான். அது ஒரு குழந்தையின் குரலாக ஒலித்தது. அந்த ஒலியில் பொங்கிய அன்பைக் கண்டு அந்தக் கருநாகம் மார்போடு அணைத்துக் கொண்டது.

“எஞ்செல்லம்! ராஜா! என் பட்டுக்குட்டி! “ என்றது.

அவன் அந்த இசையின் தாலாட்டில் ஏறியிறங்கிக் கொண்டிருந்தான். காலம் முடிவில்லாததாக நீண்டு கொண்டே போனது. கருநாகத்தின் அணைப்பிலிருந்து விடுபடவே கூடாது என்று நினைத்தான் மாணிக் ரே. உடல் குளிர்ந்திருந்தது. அமைதி! ஆனந்தமான அமைதி! எந்த சிந்தனையுமில்லாத அமைதி! எண்ணங்களின் கூச்சல் இல்லாத அமைதி! துர்க்குணங்களின் சாயல் கூடத் தெரியாத அமைதி! எல்லாவற்றையும் தாண்டிய ஒரு பேரமைதி அவனுக்குள் நிகழ்ந்து கொண்டிருந்தது. முகம் ஒளிர அவன் சிரித்தான்.

கண்களைத் திறந்தபோது யாருமில்லை. உடலிலும் மனதிலும் உற்சாகம் பொங்கிக்கொண்டிருப்பதை உணர்ந்தான். அறைக்கதவு திறந்து லேசாக ஓரஞ்சரித்திருந்தது. கதவை மூடாமல் தான் தூங்கியிருக்கிறோமா? என்று நினைத்தான்.

அன்றையப் படப்பிடிப்பு எந்தப் பிரச்னையுமில்லாமல் நடந்து முடிந்தது. அத்துடன் ஷெட்யூல் முடிகிறது. அன்று இரவு சென்னைக்கு ரயிலேற வேண்டும். தம்பானூர் செல்ல கார்களும், வேனும் ரெடியாக இருந்தன. மாணிக் ரே வேனில் ஏறினான். அவனுக்கு முன்னால் இருந்த இன்னோவா காரில் இயக்குநரும் கதாநாயகியும் ஏறினார்கள். புறப்படும் சமயம் கதாநாயகியின் அம்மா ஹோட்டலிலிருந்து வெளியே வந்தாள். யாரையோ தேடிய மாதிரி இருந்தது. வேனில் ஜன்னலோரம் உட்கார்ந்திருந்த மாணிக் ரேயைப் பார்த்ததும் சிரித்துக் கொண்டே வந்தாள். அப்போதும் மிதக்கும் அவளுடைய மார்பின் பிளவு தான் முதலில் அவன் கண்ணுக்குத் தெரிந்தது.

“சார் மறந்துராதீங்க..” என்று கைகூப்பினாள். அவனும் அவளுடைய கைகூப்பலை கூச்சத்துடன் ஏற்றுக்கொண்டு தலையாட்டினான்.

இரண்டு அடி நடந்தவள் திரும்பி வந்து, “சார் எம்பேரு என்னன்னு கேக்கலியே! “  என்று புன்னகைத்தாள்.

அவன் அவளைப் பார்த்துச் சிரிக்க முயற்சித்தபடி, “சொல்லுங்க..” என்றான்.

“சாருலதா..” என்று சொல்லிக்கொண்டே திரும்பி பின்புறத்தை ஒரு குலுக்கு குலுக்கிக் கொண்டே காரில் ஏறினாள்.


உதயசங்கர்

Previous articleகனவுகளை எழுதிய தேவதூதன்-மிலோரட் பாவிச்
Next articleயூதா – சிறுகதை
Avatar
ஒரு தமிழக எழுத்தாளர் ஆவார். இவர் சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு, சிறார் இலக்கியம், கட்டுரை போன்றவற்றை எழுதி வருகிறார்.இரயில்வேயில் பணி செய்தவர். இவர் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தில் மாநில துணைப் பொதுச் செயலாளராக செயலாற்றி வருகிறார். தமிழ்நாடு சிறார் எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத்தலைவராகவும் பொறுப்பேற்றிருக்கிறார்.

1 COMMENT

  1. சிறப்பான நடை, வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.