யூதா – சிறுகதை

ந்தப் பறவை யூதாவை அவன் வீட்டிலிருந்து கொத்திக் கொண்டு வந்து இந்தப் பீக்காட்டிலே போட்டது. யூதா இப்படித்தான் நம்பினான். ஆயா சொல்லும் கதைகளில் செட்டையடித்து பறக்கும் பறவை. அது பாலாற்றின் கரையோரம் இருக்கும் கையகல தர்க்காசி*. எல்லாரையும் போலவே, அவன்  ஆயாவும் பிடித்து வைத்திருந்த அந்த நிலத்திலே ஊர்ப்பட்ட சாக்கடையெல்லாம் வந்து பாயும். கசடு தண்ணியினால் கறுத்து கிடந்த அந்த ஆற்றுப் புறம்போக்கிலே நிலம் வைத்திருப்போர் கீரைகளையும், காய்கறிகளையும் விளைவிப்பார்கள். வெள்ளம் வந்து வண்டல் சேர்க்கும் காலங்களில் கேழ்வரகும், சோளமும் அறுப்பதுண்டு.

கொறுக்கம் புதர்களால் வேலிகட்டியிருந்த கொல்லையில் ஆயா கீரை அறுத்துக் கட்டிக் கொண்டிருந்தாள். நிலத்தின் வெளியே விரிந்திருக்கும் பாலாற்றில், ஊரார் கழித்துப் போன மலக்குவியல்கள் நாற்றம் கிளப்பிக் கொண்டிருந்தன. ஆயாவுடன் நிலத்துக்கு வரும் ஒவ்வோர் மாலையும் வெளிக்கிருக்கும் பலரையும், யூதா பார்ப்பதுண்டு. நிலத்துக்குப் போகும் வழியெல்லாம் மண்டியிருக்கும் மலங்களை ஆயா சபித்தபடியே கடப்பாள். அவர்கள் நிலத்தை அடைவதற்குள் பன்றிக் கூட்டங்கள் பல வழிமறிக்கும். ஆயா பிடுங்கச் சொன்ன முளைக்கீரைகளை அளவாய்க் கட்டி வைத்துவிட்டு, கால்வாயில் உலாத்திக் கொண்டிருந்தான் யூதா.  ஊருக்குள்ளிருந்து, கோயிலில் மணி அடிக்கும் ஓசை கேட்டது, உயிரின் உணர்வு முனைகளை அந்த ஓசை கடப்பது போல் உடம்பை உசுப்பிக் கொண்டான் அவன். கோயில் பிள்ளை நார்த்தான், சதை திரண்டிருக்கும் வலக்கையால் மணியடித்துக் கொண்டிருப்பான். விழுந்து விட்டிருந்த இடக்கையின் பலமெல்லாம் அவன் மணியடிக்கும் கையிலே பீறிடும். ராத்திரிக்குக் கோயில் உண்டு. யூதா வீட்டுக்குக் கிளம்பும் அவசரத்துடன் மேற்கில் ஏறிட்டுப் பார்த்த போது சூரியன் இடையன் கல்லின்மேல் நின்றிருந்தான். செதுக்கிய கல்தூண் போல் நின்றிருந்த அந்தச் செங்குத்துக்கல், பூமியிலிருந்து முளைத்து வானத்தை தாங்கிக் கொண்டிருப்பது போலிருந்தது. ஆயா இன்னும் கீரை அறுத்துக்கொண்டே இருந்தாள். வானத்தில் மேகங்கள் குழந்தை பிய்த்துப் போட்ட பஞ்சுக் குப்பைகள் போல அலைந்தன. ஓரிடத்திலே திரண்டிருந்த மேகங்களின் இடைவெளியில் சூரியனின் கம்பிகள் பீறிட்டு கீழிறங்கிக் கொண்டிருந்தன யாரும் நினையாத நாளில் இயேசு வரும் போது, வானம் இப்படித்தான் திறந்து கொள்ள, மோட்சத்திலிருந்து வெளிச்சம் அடிக்கும் என்று நினைத்தான் யூதா. இன்று கூடுதலாய் சில நினைவுகளும் வந்தன அவனுக்கு.

ஆயா இரவுகளில் சொல்லும் கதையொன்று மனதில் தோன்றி ஆட்கொண்டு விட்டது அவனை. இரவுகளில் ஆயா திறந்துவிடும் பெரும்உலகின் நிழல் மெல்லிய துணிபோல அவனை எப்போதும் போர்த்தியே திரிந்தது. அந்த ஒளிக்கற்றைகள். இடையன் பாறையின் மேலிருந்து குதித்ததும் பீறிட்ட பால்தான் என்றிருந்தது. ஆயா மனதில் கதை சொல்ல துவங்கி விட்டாள்.

”பெத்தவங்க இல்லாத எடையன், தந்தங்கச்சிய அப்பிடி பாத்துக்கினானாம். அவள்னா, அளகோ அளகு அம்புட்டு அளகு! இந்த ஒலகத்துல இருக்குற தேவாதிதேவரெல்லாம் அவளப் பாத்து சொக்கிப் போயிகீறாங்களாம். அண்ணங்காரத் தெனத்திக்கும் ஆடுங்கள ஓட்டிக்கினு காட்டுக்குப் போயிடுவான். தங்கச்சிக்காரி மத்தியானமானா பக்கத்து காட்டுக்கு அண்ணனுக்கு சாப்பாடு எடுத்துனு போவா. ஒரு நா எடையனுக்கும், இன்னொரு எடையனுக்கும் போட்டி வந்துருச்சாம். அவஞ்சொன்ன எல்லாத்தியும் செஞ்சி ஜெயிச்சினேகீறானாம். எடையன். ‘செரி நீ ஆட்டுப்பால வானத்துக்கு  பீச்சுவியாண்ணானாம். எடையனும் செரின்னுட்டு ஆட்டுப்பால் பீச்சி தண்ணிப் பையில ரொப்பிக் கட்டி அத்தே ஒரு குண்டு கீழ வெச்சிட்டானாம். பெறகு மலைக்கு ஏறி அங்கிருந்து குண்டு மேல குதிச்சானாம். பாலு வானத்துக்குப் பீச்சியடித்ததாம். 

அதே நேரம்பாத்து தங்கச்சிக்காரி வர்றா. அவளப் பாத்துட்டு அண்ணங்காரங்கிட்ட  அவஞ்சொன்னானாம். ‘செரி எல்லாத்திலியும் நீ ஜெயிச்சிட்ட இதோ அளகா வந்துனுக்கீற உந்தங்கச்சிய நீ போயி பெண்டாளு. நா தோத்துட்டதா ஒத்துக்கிறேன்’  இதக்கேட்டதும் அண்ணங்காரனுக்கு திடிர்னு ஒரு சபலம். எல்லா போட்டியிலயும் ஜெயிச்சிட்டு இதுல தோத்துடறதா? தங்கச்சி கிட்ட வந்ததும் அவள எதிர்கொண்டு போயி கட்டி அணைச்சானாம். அந்த அணைப்புல அண்ணனோட வாசனையை அறியாத  அவ, சாபங்குடுத்துட்டாளாம். அப்போத்திலேர்ந்து எடையனும் அவனோட ஆடுங்களும் கல்லா நிக்கிறாங்க அந்த மலையில. யூதாவின் வாழ்க்கை கதையாய் இருந்தது. தினந்தோறும் கதைகளின் உலகில் சஞ்சாரம் செய்யும் ஒருவனாய் இருந்தான் அவன். எதிர்ப்படுகிற எல்லாரும் கதை மாந்தர்களாகவும், நடப்பவையெல்லாம் கதை நிகழ்ச்சிகளாகவும் இருந்தது அவனுக்கு. உலகம் ஒரு மாபெரும் கதையாக நிகழ்ந்துக் கொண்டிருந்தது அவன்முன். ஆயா கீரையறுத்து முடித்து விட்டாள். செம்பச்சை நிறத்தில் செழித்திருந்தது அரைக்கீரைப்பாத்தி. ஆங்காங்கு சில கதிர்கள் பூத்திருந்தன. பாதி பாத்தியை விட்டு வைத்திருக்கிறாள் ஆயா. அது நாளைக்கு ஆகும். அவர்கள் வீட்டுக்குக் கிளம்பினார்கள். கீரையறுக்கும் அரிவாளை கொறுக்குப் புதரில் மறைத்து விட்டு வந்தான் யூதா. ஆயா கீரை மூட்டையை தலையில் சுமந்தாள். அடுப்புக்கென  பொறுக்கிய கொருக்கந் தட்டுகளை அவன் தூக்கிக் கொண்டான். கொல்லியிலுருந்து வெளியே வந்ததும் முள்மண்டையை இழுத்து வேலியை அடைத்தான் யூதா. 

”முள்ளே நல்லா இளுத்துப்போடு. கீர பாத்திங்கள்ள போயி பேண்டுரப் போறானுங்க. எஞ்செருப்பத் துன்னவனுங்க.” ஆற்று மேடேறியதும் சுடுகாட்டில் நுழைந்து நடந்தார்கள்.  ஆயாவின் முதிர்ந்த தேகம் கூட்டிய வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை அவனால். ஆயாவைப் பற்றி  நினைக்கும் போதெல்லாம், எப்போதும் வேலை செய்து கொண்டேயிருக்கும், ஒரு இயந்திரம்  தான் அவன் நினைவுக்கு வரும். அவள் அப்படித்தான். காலையில் பறவைகளுக்கும் முன் எழுவாள். முந்தினநாள் இரவு பிடுங்கிவந்து அலசி வைத்திருக்கும் கீரைக் கட்டுகளை எடுத்துக் கொண்டு கடைத்தெருவுக்கு ஓடுவாள். தெருத் தெருவாய் கூவி விற்றபின், நடுப்பொழுதுக்குத் திரும்பி சமையலும் வீட்டு வேலைகளும் நடக்கும். மீண்டும் மாலையில் கொல்லிக்கு ஓடுவாள் கீரையறுக்க.

வீட்டை நெருங்க கோயில் தொடங்கிவிட்டது. இரவு கோயில் முடிந்துவர நேரமாகி விட்டது. சாப்பிட்டதும் ஆயா படுத்துக் கொண்டாள். யூதா பைபிளை எடுத்துக் கொண்டு உட்கார்ந்தான். புட்டி விளக்கு இருட்டில் ஆடிக்கொண்டிருந்தது. பெரிய வீட்டினுள் அடைந்திருந்த இருள் அவர்களைச் சுற்றிலும் இடைவெளியை விட்டு வைத்திருந்தது. விளக்கைச் சுற்றிலும் பழுத்திருந்த இருட்டு போகப் போக மொருமொருவென உதிர்ந்து கூரை, மூலைகள், சுவர்களில் அடர்ந்தது. விளக்கு அவர்களுக்கு வைத்திருந்த ஒளிக் கண்ணியில் சிக்கியிருந்தனர் இருவரும். யூதா படித்தான். பைபிளின் மெல்லிய தாள்கள் வெளிச்சத்தில் பொலிந்தன. இரவுகளில் அவர்களைச் சுற்றிலும் வியாபித்திருந்த இருட்டை நுண்மையாய் உதிர்த்துப் போட்டது போன்ற எழுத்துக்களில்  தினமும் அவர்கள் பயணம் செய்து வெகுதூரம் வந்துவிட்டிருந்தனர். 

ஆயா, ‘படி எப்பா’ என்பாள். அவன் நேற்றிரவு நிறுத்திய இடத்திலிருந்து தொடர்வான். அவள் உறங்கும் வரை மெல்லிய சத்தத்துடன் வாசிப்பு இருக்கும் அவளின் அடங்கிய குறட்டையொலி கேட்டதும், யூதாவின் குரல் அடைத்துக் கொண்டு மனம் திறந்து கொள்ளும். அவனை உறக்கம் கொள்ளும் வரை மௌனப்படிப்பு தொடரும். 

‘மோசே மீதியான் தேசத்து ஆசாரியனாயிருந்த தன் மாமனாகிய எத்திரோவின் ஆடுகளை மேய்த்து வந்தான். அவன் ஆடுகளை வனாந்திரத்தின் பின்புறத்திலே ஒட்டி, தேவபர்வதமாகிய ஒரேப் மட்டும் வந்தான்…’

யூதாவுக்கு மனம் அடைத்துக் கொண்டது. ஆயா தூங்கிருந்தாள். அந்த வீடு இப்போது அவனுக்கு வனாந்தரமாயிருந்தது. சுற்றிலும் வெறிக்கப் பார்த்தானவன். இங்கு நம்மை விட்டது யாராய் இருக்கும் என்ற துக்கம் எழுந்தது. தன் மாமனாகிய லாபானிடத்திலே போய் அவனின் மகள்களான ராகேலுக்கென்றும், லேயாளுக்கென்றும் ஏழேழு வருசங்கள் வேலை செய்த யாக்கோபு அவன் நினைவில் கலந்தான். மாமன் வீடுகளில் வேலை செய்த யாக்கோபினுடையதும், மோசேவினுடையதுமான துக்கம் அவனில் வழிந்தது. ஊரிலே இருக்கும் தம்பிகளின் முகங்கள் நினைவில் வரமறுகின்றன. மிகுந்த பிரயாசைகளுக்குப் பின்பும் அவனால் அது கூடுவதில்லை. 

அவனை வீட்டிலிருந்து, பெயர் நினைவில்லாத ஒரு நாளின் மாலையில் கூட்டிக் கொண்டுவந்து, ஆயா வீட்டில் விட்டுப்போய் விட்ட அப்பாவின் முகம் மட்டுமே அலைவுறுகிறது இலேசாய். அவனை விட்டு போகையில் அப்பா அழுதார். அப்பாவின் அழுகை விநோதமாயிருந்தது.

”பத்திரமாக பாத்துக்குங்க. ஒங்கள நம்பித் தான் உட்டுட்டு போறேன்.”

”என்ன மாமா, கொளந்த மாதிரி அளறீங்க? அவன் இனிமே எங்கப் புள்ள.”

மாமன்மார்கள் சொன்னார்கள். அப்போது ஆயாவும் அங்கிருந்தாள். அப்பா தெருவின் இருட்டில் போய் மறைந்துவிட்டார். அம்மா தான் அடிக்கடி சொல்லிக் கொண்டிருந்தாள். ”இந்தக் குப்பக்காட்டுல இருந்தா நீயும் பீடி சுத்தத்தான் வேணும். உன்னே எங்கம்மா வூட்டுக்கு அனுப்புவேன். எந்தம்பிங்களும், அண்ணேமாரும் பாத்துப்பாங்க. நீ நல்லா படிச்சி பெரியாளா வரலாம்.”

நல்ல அடுப்புக் கரித்துண்டாகப் பார்த்து சாம்பல் தட்டி எடுத்து  வாயில் போட்டு நொய் போல மென்றாள் அம்மா. பல் தீட்டிக் கொண்டே எச்சிலை புளிச் புளிச்சென துப்பினாள். செம்மண் வாசலில் கருத்த ஓவியங்களாய் விழுந்தன அவை. தடித்த அவள் உதடுகள்  கருப்பாய் வர்ணம் அடித்ததுபோல் காலைச் சூரியனில் மினுக்கின. ஒவ்வோர் தீற்றலுக்கும் இடையில் அம்மா பேசிக் கொண்டேயிருந்தாள். அவள் சொன்ன வேலையே செய்யாமல் யூதா அவளை முறைத்த ஒரு சமயம்,

”மூஞ்சியில ஆசிடு ஊத்திபுடுவேன். அப்படி மொறச்சியானா” என்றாள்.

பல நாட்களுக்குப் பின், யூதா அவன் சின்ன மாமனுடன் வெளியூருக்குப் போயிருந்தபோது, அமிலம் ஊற்றப்பட்ட ஒரு மனிதனின் முகத்தை பார்த்தான். ‘ஆசிட் ஊற்றியதால் பார்வை இழந்துவிட்டேன். உதவி செய்யுங்கள்’ என்று கழுத்தில் எழுதி தொங்கவிட்டபடி சதைக் குவியலாகிவிட்டிருந்த  தன் முகத்தைக் காட்டி பிச்சை கேட்டுக் கொண்டு, அவர்களை நோக்கி வந்தான் அவன். அம்மா அவனின் முகத்திலிருந்து எழுந்து வந்தாள். யூதா மாமன் பின்னால் ஒளிந்து கொண்டான். இப்போது அம்மாவை நினைத்தாலே கருத்த உதடுகளுடன் ஒரு முகமும், ஆசிட் ஊற்றி சிதைந்த முகமும் மாறிமாறி வந்து அலைக்கழிக்கின்றன. ஆயா சொல்லும் கதைகளில் வரும் பறவை அம்மாவாய்த் தானிருக்கும். அவளுக்கு இறக்கை முளைத்தவுடன், செட்டைகளை அடித்துக்கொண்டு என்னை கொத்தி வந்து இங்கே எறிந்துவிட்டாள். அம்மாவேதான் அந்தக் கூளி, யூதாவின் உள்ளே கசப்பு  வழிந்தது.  

இரவுகளில் ஆயாவுக்கென பைபிளை படிக்கத் தொடங்கியிருந்த முந்தைய நாளொன்றில், பைபிலிருந்து நீண்ட முடியொன்றை கண்டெடுத்தான் யூதா. அழகிய பெண்ணொருத்தியின் கூந்தலிலிருந்து உதிர்ந்தது எனும் படிககான அத்தனை அம்சங்களையும் கொண்டிருந்த அக்கேச இழை, மௌனமாய் தாள்களுக்கிடையே சுருண்டிருந்தது. பைபிளில் முடி இருந்தால் உலகம் அழியும் என்று பலரும் சொல்லித்திரிந்த காலமாய் அது இருந்தபடியால் யூதா நடுங்கினான். ஒரு பெரும் அழிவின் சுழலில் தான் வந்து சிக்கிக் கொண்டதாய் அவன் நினைத்தான். அந்த முடியை விரல்களால் பற்றியிருந்தபோது அவன் உலகமும் அதனோடு சேர்ந்து நடுங்கியது. உடனடியாய் இங்கிருந்து தன் தகப்பன் ஊருக்கு ஓடிவிட வேண்டும் என்று அவனுக்குத் தோன்றியது. வேறொரு நாள் அவன் தன் பிறந்த நாள் குறித்த குறிப்புகளை பைபிளின் பக்கமொன்றிலே படித்தான்.

”நீ பொறந்த தேதி, நேரம், நாளு எல்லாத்தியும் எங்கண்ணன் மறக்காம ஒடனே பைபிள்ள எளுதி வெச்சிட்டார்றா கண்ணே. அந்த பைபிளு நம்ம ஆயா ஊர்ல கீதுடா” 

என்னை பைபிளோடு பிணைத்து வைத்திருப்பது பெரும்சதி. அதன் பக்கங்களிலிருந்து விடுவித்துக் கொண்டால் தான் மாமன் வீட்டிலிருந்து எனக்கு விடுதலை வரும். அம்மாவின் ஆசைகள் போலவெல்லாம் இங்கே ஒன்றுமில்லை மாமன்மார்கள் மனைவி பிள்ளைகளுடன் அவரவர் பாட்டுக்கு இருக்கிறார்கள் எனக்கும், அவளுக்குமாக ஆயா தனியே சமைக்கிறாள். நான் படித்து பெரியாள் ஆவதற்கான வாய்ப்புகள் எங்கே மண்டிக் கிடக்கின்றன. யூதாவுக்கு குழப்பமான நினைவுகளின் இறுதியில் கண்களை வருத்தியது உறக்கம். 

விளக்கணைத்துவிட்டு படுத்துக் கொண்டான். கூரை பொத்தல்களில் வானம் அவனை பார்த்துக் கொண்டிருந்தது. அவன் கவிழ்ந்து படுத்துக்கொண்டான். ஆற்றுக்கு மறுபுறமிருக்கும் ஊரின் வழியே, ரயில் கடக்கும் சப்தம். இரவு கூக்குரலுடன் ஆட்களைப் பிடித்து விழுங்க ஓடிக்கொண்டிருக்கிறது. பல வீடுகளையும், தெருக்களையும், கடைவீதிகளையும் தாண்டி அடர்ந்த இருட்டின் வழியே, நம்மை பிடித்து விழுங்க வந்து கொண்டுள்ளது. அடிவயிற்றில் சிலீரென பயம் நிறைந்து வெட்டி அழுத்தியது. ஒன்றுக்கிருப்பது போல் இடுப்பின் கீழே ஈரத்தை உணர்ந்தான் யூதா. ஆயாவின் அதட்டலும், உசுப்பலும் அவனை எழுப்பிய போது, நடு இரவாகிருந்தது. மூத்திரவாடை படுக்கையிலிருந்து வீசியது. கால்சட்டை நனைத்து விட்டிருந்தது.

”என்னடா பையா நீ களத வயசாயிட்டு, படுக்கைலயே மூத்திரம் பேயற”

இருவரும் எழுந்துபோய் தெரு நடுவில் ஒன்றுக்கிருந்தார்கள். நிலா, நீர்த்த கஞ்சித் தண்ணியாய் வெளிச்சத்தை தெளித்திருந்தது. யூதா சுற்றிலும் பார்க்க பயந்து கொண்டு கண்களை இறுக்கி மூடிக்கொண்டான். சீக்கிரம் பெய்யும் படி அடிவயிற்றை அழுத்தி முனகினான். அப்புனு தென்னிந்தோப்பில் கப்பியிருக்கும் இருட்டிலே இவனுக்கென கழுதை குறத்திகள் வயிற்றில் பைகளுடன் பதுங்கிக்கொள்ள வேண்டும் என்றிருந்தது. ஆயாவின் வாயிலிருந்து வெளிப்பட்ட நாள் முதல், அந்தக் கழுதைக் குறத்திகள் இவனுக்காக அலைந்து கொண்டிருந்தன.  வெளுத்துக் குளிர்ந்திருந்த வெளிச்சம் எழுப்பிய போது விழித்தான் யூதா. 

”ஏண்டா தண்ணி கட்ட போலியா இன்னுமா தூங்குற சொல்லியபடி வாசல் பெருக்கிக் கொண்டிருந்தாள் ஒரு மாமி. ஆயா கீரை எடுத்துக் கொண்டு போய்விட்டிருந்தாள். இன்று ஞாயிற்றுக் கிழமையல்லவா என்று நினைப்பு உறைத்தது அவனுக்கு. ஆற்றில் இறங்கி நடந்தபோது, குளிர்ந்த காற்றுடன் அழுகிய நாற்றம் வீசியது. ஆறெங்கும் கொட்டப்பட்டிருந்த குப்பை மலைகளில் பன்றிகள் கூட்டமாய் இரை தேடிக்கொண்டிருந்தன. கொல்லிக்கு போகும்வழியை வெளிக்கிருப்பவர்கள் அடைத்துக் கொண்டிருந்தனர். அப்போது தான் உட்கார்ந்திருந்த குவியல்களில் ஆவியடித்தது. பன்றிகளையோ, குப்பைகளையோ, பின்புறங்களையோ, பீக்குவியல்களையோ பார்க்காமலிருக்கும்படிக்கு கண்களை மூடிக்கொண்டால், கால் நிறைய மிதித்துக் கொள்ளும்படி நேரும் என்று பயந்தான் யூதா. வேலி மண்டையை விலக்கி கொல்லியுள் நுழைந்து கொண்டதும் கொறுக்குப் புதரில் தேடி மண்வெட்டியை எடுத்துக்கொண்டான். கால்வாய் வழியாக நடந்து கொல்லிகளைக் கடந்தான் அவன். சாக்கடை பாய்ந்து மண்டிய அழுக்குமண், பொருக்கு பொருக்காய் வெடித்து கால்களுக்கு மெத்தென்றிருந்தது. இன்று அவர்களின் தண்ணி. முதல் முறை பாய்ச்சிக் கொண்டு பக்கத்து கொல்லிக்கு விட்டுவிட வேண்டும். எல்லாப் பாத்திகளுக்கும் பாய்வதற்குள் ஒன்பது மணிக்கு ஆகிவிடும். நாற்று விட்டு இருக்கிறதற்கும், இள நாற்றுகளுக்கும் மட்டும் இரண்டு முறை பாய்ச்ச வேண்டும் என்றிருக்கிறாள் ஆயா.  ஊரிலிருந்து ஓடிவரும் சாக்கடை, ஆற்றில் இறங்கிக் கலக்கும் இடத்தில் மடைகட்டி விட்டிருந்தார்கள் அழுகிய நாற்றமுடன் சள சளவென ஆற்றில் பாய்ந்துக் கொண்டிருந்தது சாக்கடை. மடை திருப்பினான் யூதா கால்வாயில் முண்டிக் கொண்டு ஓடியது நீர். முதல் தண்ணீர் கால்களில் படும்போது அருவருப்பாய் இருந்தது. கொல்லிக்கு வந்ததும் முதல் பாத்தியிலிருந்து பாய்ச்சத் தொடங்கினான் யூதா.

மலத்துண்டுகளும், பிளாஸ்டிக் பைகளும், அழுகிய பழத்தொலிகளும், கந்தல்களும் கால்வாயின் செடிகளில் சிக்கி, நீரோட்டம் தடைப்பட்டால் அவைகளை கைகளால் அள்ளிக் கரைமீது போட்டான் அவன். கீரைப் பாத்திகளில் நீர் பரவி நிறைவது குறுகுறுவென சப்தமெழுப்பியது மண் துளைகளில் நீர் சுழித்து இறங்கியதும் வண்டுகளும், பிள்ளைப்பூச்சிகளும், சிலந்திகளுமாக வெளிக் கிளம்பி பாத்திகளில் அலைந்தன. கொறுக்குப் புதர்களிலிருந்து அடிக்கடி அவனை பயமுறுத்தும்படியாய் தவிட்டுக் குருவிகள் பறந்துச் சென்றன. வெயில் ஏற ஏற வண்டுகளையும் பூச்சிகளையும் பிடிக்க காகங்கள் கூட்டமாய் அங்கு வந்து சேர்ந்தன. சில காகங்கள் தலையடித்துப் பறந்தன. மொருக் மொருக் என வண்டுகளை கொத்தி அவைகளை தின்பது அருவருப்பாய் இருந்தது. 

மடைமாற்றினான் யூதா. தண்டுக் கீரை செடிகளும் சக்கரவர்த்திக் கீரைச்செடிகளும், அரைக்கீரை கும்பலுமாக மண்டியிருக்கும் இந்தப்பக்கம் வருவதற்கே பயந்தான் அவன். பாம்புகள் இந்தப் பக்கமிருப்பதாய் ஆயா சொல்லியிருந்தாள். ஆளரவமற்ற காலை, பயத்தை விதைத்ததும், உரக்க பாட்டொன்றை பாடிக்கொண்டே விதைவிட்ட பாத்திக்கு நீரைத் திருப்பி விட்டு கோவைப்பழம் தேடி கொறுக்குகளை நோட்டம் விட்டுக் கொண்டிருந்தான். நினைப்பு வந்தவனாய் பாத்தியை பார்த்தபோது அது அறுத்துக்கொண்டிருந்தது. சாக்கடையின் வரத்து, காலை ஏற அதிகரித்திருந்ததால் உடைப்பெடுத்த பாத்திவழியாய் பக்கத்துப் பாத்திகளுக்கெல்லாம் நீர் பாய்ந்தது. விடை கலந்த மண் அடித்துச் சென்று விட்டால் பிரயோஜனமில்லை. ஆயா வந்து பார்த்தால் ஏகத்துக்கு கத்துவாள். நடுங்கினான் யூதா. 

என்ன செய்வதென்று தெரியாமல் கால்வாயில் வேகமாய் ஓடியதில் நடுக்கால்வாயிலும் சில இடங்களில் அறுத்துக்கொண்டது. கையளவு மண் அணைப்புகளையே கரையாகக் கொண்டிருந்த பாத்திகளை நீர் துவசம் செய்தது. தூரப் பாத்தியொன்றுக்கு மடைதிருப்ப மண்வெட்டிப் போட்டான் யூதா. கொழு கொழுவென மணலுடன் கலந்த வண்டல் மண் அடங்காமல் சலித்துக் கொண்டு ஓடியது. கொல்லியின் ஒரு பாகமே சாக்கடையால் மூழ்கிவிடும் போலிருந்தது. நீர் பாய்ந்து வடிந்திருந்த ஒரு பாத்தியிலிருந்து ஆழமாய்  கொத்து போட்டு மண்ணெடுத்து வந்து அணைபோட்டான் யூதா. ஆத்திரமாய் மண்வெட்டியை வீசியதில் அவன் முகம் நிறைய சாக்கடை வாரியடித்தது. நாற்றம் அவன் குடலை புரட்டியது ‘இயேசுவே’ என்றான் யூதா. இயேசு தன்னிடமிருந்து மண்வெட்டியை பிடுங்கிக் கொண்டு, இந்தச் சாக்கடையை மடை திருப்பி விட்டார் என்று நினைத்தாலும் குருவிகளின் கீசல்கள் தவிர காலடியோசை ஏதுமில்லை. கதறல் பீறிட்டது. கொல்லியின் பாதி பாத்திகளிலும் சாக்கடை நிரம்பியிருந்தது இப்போது. அங்கலாய்த்தபடி ஓடிய அவன் கால்தடுக்கி கால்வாயில் விழுந்து எழுந்தான். அழுகை இன்னும் உக்கிரமாய் பீறிட வழியும் சாக்கடையை உதறியபடி ஒரு உறுதியான வரப்பில் போய் நின்றுக் கொண்டான் யூதா. திடம் கொண்டவனாய் கொஞ்சநேரம் கழித்து மண்வெட்டியை எடுத்தவன் காய்ந்த பகுதியிலிருந்து மண் வெட்டி வந்து மடைத்திருப்பிவிட்டான்.

வீட்டுக்கு வரும்போது யூதாவுக்கு உடம்பெல்லாம் அழுகி வீசியது. மலம் மிதக்கும் சாக்கடையின் நினைவு துருத்தி வயிறு எதையோ உந்தித் தள்ளியது. நாக்கு வறண்டிருந்தது அவனுக்கு. 

‘’ஏண்டா பையா, அந்தத் திம்டோ பாத்திங்களுக்கு ஒளுங்கா தண்ணீ பாச்சத் தெரியில? கீரவுட்ட பாத்திங்களெல்லாம் அடிச்சினு போயிட்டுக்கீதே புள்ளத்தெறமைய பேலவுட்டு பாத்தா அது கோரப்பில்ல புடிச்சினு முக்கினு இருந்துச்சாம்! துன்னுட்டு துன்னுட்டு ஸ்கூலுக்கு போயிட்டு வந்து படுத்துக்க, எல்லாம் வந்துடும் போடாவுன் ஜாதியிலயெஞ் செருப்பு’’ ஆயா மோசமாய்ப் பேசினாள். தொடர்ந்த நாட்களில் யூதாவுக்கு தகப்பன் வீட்டுக்கு ஓடிப் போய்விட வேண்டும் என்ற எண்ணம் தீவிரமாய் உண்டானது. ராத்திரியில் இருள் சாக்கடையாய் பாய்ந்து அவனை மூச்சுத்திணற அழுத்தியது. மாலை ஏறியதும் எங்கிருந்தெல்லாமோ சாக்கடை ஆறுகள் ஓடிவந்து இரவாய் மாறி  அவன்மீது பாய்ந்தன. 

ஆயா தான் சூனியக்கிழவியாக மாறி தன்னை இங்கே கட்டிப் போட்டு  வைத்திருக்கிறாள் என்று நினைத்தான் அவன். இரவு பைபிள் வாசித்துக் கொண்டிருந்தபோது ஆயா செத்துவிட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது நீட்டிப்படுத்திருக்கும் அவள் தலைமாட்டில் உட்கார்ந்து வசனங்களை படிக்கப் படிக்க, பிளந்திருக்கும் அவள் வாயின் வழியே உயிர் வெளியேறிவிட வேண்டும் என்று மனதுக்குள் வேண்டினான் யூதா.

‘இதோ,  நான் மயிருள்ள ஒரு தோலைக் களத்திலே போடுகிறேன்; பனி தோலின் மேல் மாத்திரம் பெய்து, பூமியெல்லாம் காய்ந்திருந்தால், அப்போது தேவரீர் சொன்னபடி இஸ்ரவேலை என் கையினால் இரட்சிப்பீர் என்று அதினாலே அறிவேன் என்றான். அப்படியே ஆயிற்று. அவன் மறுநாள் காலமே எழுந்திருந்து தோலைக் கசக்கி அதிலிருந்த பனி நீரை ஒரு கிண்ணம் நிறையப் பிழிந்தான். அப்பொழுது கிதியோன் தேவனை நோக்கி நான் இன்னும் ஒரு விசை மாத்திரம் பேசுகிறேன்.. உமது கோபம் என்மேல் மூளாதிருப்பதாக தோலினாலே நான் இன்னும் ஒரே விசை சோதனை பண்ணட்டும். தோல் மாத்திரம் காய்ந்திருக்கவும் பூமியெங்கும் பனி பெய்திருக்கவும் கட்டளையிடும் என்றான் அப்படியே தேவன் அன்று ராத்திரி செய்தார். தோல் மாத்திரம் காய்ந்திருந்தது பூமியெங்கும் பனி பெய்திருந்தது ஆயாவிடமிருந்து மெல்லிய குறட்டையொலி கேட்டது. யூதா பைபிளை மூடிவைத்து விட்டு ஜெபம் செய்தான். ”ஆண்டவரே, நான் நாளைக்கே என் அப்பா வீட்டுக்குப் போய்விட வேண்டும். அதற்குத் தடையாய்  இருக்கும் இந்த ஆயாவை நீர் எடுத்துக் கொள்ளும். காலையில் இவள் செத்துப் போயிருந்தால் நான் ரொம்ப சந்தோசப்படுவேன்”. 

உறக்கம் வருவதற்கு முன் அழுகை நிறைந்த அப்பாவின் முகம் நினைவுக்கு வருகிறது. அவனை இங்கே விட்டுப்போன பிற்பாடு அவர் வருவதேயில்லை. இன்னும் அவர் அழுது கொண்டேயிருப்பார். இங்கிருந்து நாம் போய் தான் அவர் அழுகையை நிறுத்த வேண்டும். தன்னால் தான் அப்பா அழுது கொண்டிருக்கிறார் என்று தோன்றியதும் குற்றம் செய்துவிட்டது போல நடுக்கம் பீடித்தது. கிதியோனுக்கு கேட்டபடியெல்லாம் செய்த கடவுள் தனக்கும் செய்து விடுவார் என்று விசுவாசித்தான் அவன் அப்போது. இப்போது செய்த ஜெபம் கேட்கப்படும். காலையில் நிச்சயம் ஆயா செத்துப் போயிருப்பாள் என்று மகிழ்ச்சியுடன் நினைவில் கொண்டான். தூக்கம் போய்விட்டிருந்தது யூதாவுக்கு. எழுந்து உட்காரலாம் என்று நினைத்தபோது, கூரை வழியே நிலவின் கதிர்கள் ஆயாவின் மீது விழுந்து அவளை மேலே தூக்கிக் கொண்டிருப்பதைப் பார்த்தான். அவளை பரிதாபமுடன் பார்த்தான் யூதா. பாவம் அவள் என்றிருந்தது.

ஆயா செத்துப் போக வேண்டாம். சாயங்காலம் கோயிலில் தேவபூசனம் அய்யர் பிரசங்கத்திலே சொன்ன மாதிரி, எலியாவைப் போல குதிரைகள் பூட்டிய அக்கினி ரதத்தில் வானத்துக்கு எடுத்து கொள்ளப்பட்டால் கூட நன்றாய் இருக்கும்.  இப்போது நிலவின் கற்றைகள் ஆயாவின்  உடல்மீது மேலும் அதிகமாய் விழுந்து கொண்டிருந்தன. வெளியே பெரும் காற்று எழுந்தது. வீட்டைச் சுற்றியிருந்த தென்னைகள் சலசலக்க ஆடின. குதிரைகள் பூட்டிய ரதத்தை ஆயாவுக்கென கடவுள் அனுப்புகிறார். கண்களை இறுக்கமாய் மூடியபடி திரும்பிப் படுத்துக் கொண்டான் யூதா. அவனுக்கு நினைவு வந்தபோது நன்றாய் விடிந்திருந்தது. மாமாவின் பிள்ளைகள் வெளிவாசலில் ஆடிக்கொண்டிருந்தார்கள். ராத்திரியின் நினைவு வந்தவனாக சடாரென புரண்டு திரும்பினான் யூதா. படுக்கையில் ஆயா இல்லை. அவன் சந்தோசத்தோடு எழுந்துப் போய் எச்சிலைத் துப்பிவிட்டு துணிக்கல்லின் மேல் நின்றான். அதிகாலையில் ஆயா எடுத்துப் போயிருந்த கீரைக் கட்டுகளிலிருந்து இலைகள் உதிர்ந்திருந்தன அங்கே. 

”யூதா தண்ணிகட்ட போகச் சொன்னாங்கடா பாட்டி” வீட்டுக்குள்ளிருந்து யாரோ சத்தம் போட்டார்கள் இன்று தண்ணிக் கட்டு நாளா என்று அதிர்ச்சியுடன் நினைத்தான் அவன். மலக்குப்பைகளுடன் சுழிப்பெடுத்து, அவனை நோக்கி பாய்ந்து வைத்துக் கொண்டிருந்தது அந்தச் சாக்கடை நாள்.


–  அழகிய பெரியவன் 

 நன்றி: ஓவியம் – Infocus

குறிப்பு:

 ‘அழகிய பெரியவன் கதைகள்’ எனும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கும் இந்தச் சிறுகதை ஆசிரியரின் உரிய அனுமதிப் பெற்று ‘பெட்டகம்’ பகுதியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

5 COMMENTS

  1. ஆயாவோடும் ஆயாவின் கதைகளோடும் பீக்காட்டோடும் சாக்கடையோடும் பைபிளோடும் இத்துப்போன பழம் நினைவுகளோடும் பிணைக்கப்பட்டிருக்கும் யூதாவின் பரிதாபகரமான பால்யமும் அற்புதங்கள் நிகழ்வதற்காகக் காத்திருக்கும் பிஞ்சுமனத்தின் பேதைமையும் மனமுருக்குகின்றன.

  2. மாமன் வீட்டில் வளரும் பலரின் வாழ்க்யை மன புழுக்கத்தை யூதா வெளிப்படுத்தியுள்ளான்

  3. எனது பால்ய கால நினைவு கிளர்ந்து வந்து விட்டது. நானும் 3வயது முதல் எனது மாமன்மார் வீட்டில் வளர்ந்தேன். ஆனால் எனது அம்மாவின் அம்மாதான் வளர்த்தது.பலநாட்கள் யூதாவைப்போல எனது தந்தை தாய் உடன் சேர அழுதுஉள்ளேன்.ஒரு இளம் சிறுவனின் மன ஓட்டம் அழகாக வரையப்பட்டுள்ளது.நன்றி.

  4. Touches my heart …Azhagiya Periyavan … ‘s Youthaa(Jude) ….my pulses goes down… !
    Today only I came to know about Kanali.
    Mikka Nanri.

  5. எந்த கடவுளை கும்பிட்டாலும் சாதியை இழிநிலையை , சமூக பொருளாதாரத்தை, குறைந்தபட்சம் மனிதனாக கூடமாற்றிட முடியாது குறிப்பாக அருந்ததியர், சக்கிலியர் நிலை பலநகர்புறசேரி,( குடிசைகள் வாழ்விடம்)காலனிக்கு வந்து சேரும் பல குடும்பங்களில் நிழவும் நிகழ்வு வடிவம், இந்த கதையில் சிறு துளி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.