பெருசும் பொடுசும்

 

யூத மொழியில் மூலம் : ஐசக் பாஸாவிஸ் சிங்கர்.

ஆங்கில மொழியாக்கம் : மிர்ரா கின்ஸ்பர்க்

தமிழில்: R. விஜய ராகவன்.


நீங்கள்ளாம் சொல்லுவீங்க மனுஷன்ல வளந்தவனென்ன குட்டையனென்ன,

மனுஷனை கஜக்கோல்வைத்து அளப்பதில்லை. தலை தான் முக்கியம், கால் அல்ல. ஆனாலும் ஒரு மனிதன் முட்டாள் தனமாக இதைப்பற்றி முடிவெடுத்துக்கொண்டால் அது எங்கு போய் முடியும் என உங்களால் புரிந்துகொள்ள முடியாது.

நான் உங்களுக்கு ஒரு கதையை சொல்லுகிறேன். எங்கள் நகரத்தில் ஒரு ஜோடிஇருந்தார்கள். அவனது பெயர் குள்ள மோட்டீ, அவளது பெயர் மோட்டீக்கீ. யாரும் அவளது இயற்பெயரைச் சொல்லி அழைத்ததேயில்லை. அவன் குள்ளம் என்றால் மிகவும் சிறிய உருவத்தினன்; சித்திரக்குள்ளர்களைவிட சற்றே பெரியவன்.

வேலையற்ற கேலிபேசுபவர்கள்  சுற்றுவட்டாரத்தில் இவர்கள்தான் அதிகமாயிற்றே இவர்களனைவரும் இந்த அப்பாவியை நக்கலடித்து சந்தோஷப்பட்டுக்கொள்வர். இளம் குழந்தைகளுக்கு யூத மத நூலானடோராவை’ கற்ப்பிக்கும் ஆசிரியரான பேரிஷ் பாதிரியின் உதவியாளன், மோட்டீயின் கையை பிடித்து, பாதிரி கற்ப்பிக்கும் சிறார் பள்ளிக்கு அழைத்துப் போவான், என சொல்லி நகைப்பார்கள். புனித நூல் படிப்பு முடிவுநாளானசிம்க்காஸ் டோரா’ தினத்தில் இந்த ஆட்கள் குடித்து போதையாகி, மோட்டீயையும் சிறுபிள்ளைகளோடு டோராவை படிக்கக் கூட்டிச்செல்வார்கள்.

 யாரோ ஒருவர்  மோட்டீக்கு விடுமுறை தின கொடியைக் கொடுத்திருந்தார், அந்த கொடிக்குச்சியில் ஒரு ஆப்பிள் பழத்தையும், மெழுகுவர்த்தியையும் இணைத்திருந்தார். பெண்மணிகள் யாராவது பிரசவிக்கும்போது, கிழவிகள் வந்து இவனை அவ்விடம் கூட்டிச்செல்வார்கள். ஏனெனக் கேட்டால் கெடுதலான ஆவிகளை விலக்கி நல்லபடியான பிள்ளைப் பேற்றிற்க்காக ஜபித்துக் கும்பிட, ஒரு பையனாக இவன் வேண்டும் என்பார்கள். இவனுக்கு நல்லபடியாக தாடி முளைத்திருந்தாலாவது தப்பியிருக்கலாம்! ஆனால் இவனுக்கு வாய்த்ததோ அங்கொன்றும் இங்கொன்றுமான ரோமங்களே. அவனுக்குக் குழந்தைகள் ஏதுமில்லாமல் உண்மையை சொல்லவேண்டுமென்றால்அவனே ஒரு பள்ளிசெல்லும் சிறுவன்’ போல்தானிருந்தான். அவனது மனைவி மோட்டிக்கீயும் பெரிய அழகொன்றும் கிடையாது, ஆனாலும் முழுமையான பெண்ணாக இருந்தாள். எப்படியிருந்தாலும் சரி, அவர்களிருவரும் சேர்ந்துவாழ்ந்து வந்தனர். மேலும் மோட்டீ தானியங்களை வாங்கி கிட்டங்கியில் வைத்து விற்றுவந்ததால் காலப்போக்கில் சற்றேரக்குறைய பணக்காரனாகிப் போனான்.அந்த இடத்து நிலஉரிமையாளருக்கு மோட்டீயை பிடித்துப்போனாலும்அவ்வப்போது அவனது குள்ள உருவத்தை பகடி செய்து’ சிரித்துக்கொள்வார்இருந்தும் இது ஒருமாதிரியான வாழ்க்கையாகவே போய்கொண்டிருந்தது.

வளர்ந்தவனாக இருந்து அதைவிட பெரிய அளவில் கால்சட்டைப்பை ஓட்டையாக இருந்தால் அது என்ன புண்ணியம்?. 

ஆனால், இதில் பெருங்கொடுமை என்னவென்றால் மோட்டீக்கி அவனை எப்போதும் நக்கலடிப்பதுதான். ( இதற்காக அவள் மன்னிக்கப்படலாம். )

பொடுசு இதைச்செய்யி

பொடுசு அதைச்செய்யி என அவன் எட்டிச்செய்ய முடியாத உயரத்தில் உள்ளதையெல்லாம் எடுக்கவோ வைக்கவோ சொல்வாள்.

அதோ அங்க அந்த சுவத்துல ஆணிய அடி

 “அந்த செம்பு வட்டியை அலமாரியிலேர்ந்து எடு

வெளியாட்கள் முன்பாக அவனை கிண்டல் செய்து அவள் பேசுவது மெதுவாக அவர்களது ஊர்பூராவும் பரவியது.

 ஒரு நாளில் அவள் இப்படி சொன்னாள், ( ஒரு நல்ல நேர்மையான யூத மனைவியானவள் இப்படிப் பேசுவாள் என நீங்கள் கற்பனை செய்திருப்பீர்களா? )அவளோடு கட்டிலில் ஏறிப் படுக்க அவனுக்கு ஒருமுக்காலி” தேவைப்படும், என சொன்னபின்  என்னமாதிரி கிசுகிசுப்புகள் ஏற்பட்டிருக்கும் என நீங்கள் யூகித்துக்கொள்ளலாம்!

அவன் வெளியே போயிருக்கும் போது யாரேனும் அவனை கேட்டுவந்தால் அவள்,” மேசைக்கு கீழே பாருங்களேன் என்பாள்.

ஒரு சுடுசொல் ஆசிரியர் ஒருவர், ஒருமுறை தனது சுட்டு குச்சியை காணாமல் தேடும்போது மோட்டீ அதை நடக்கஊன்று கோலாக” உபயோகித்ததைப் பார்த்ததாகச் சொன்னார். அந்த காலக்கட்டத்தில் மனிதர்களுக்கு அவர்களிடம் வேலை போக ஓய்வு நேரம் அதிகமாக இருந்த காரணத்தால் வேறேதும் செய்வதைவிட வாயாடுதலே அதிகமாக இருந்தது. இந்த தரம்தாழ்ந்த பகடிகளை மோட்டீ புன்னகையோடு நேர்கொண்டாலும் வலிக்கத்தான் செய்தது. எப்படியாயினும் சிறியவனாக இருப்பது எந்தவகையில் விந்தை? ஒரு மனிதன் நீளமான கால்களை பெற்றிருப்பதால் மட்டும் கடவுளர்களின் மதிப்பைப் பெற்றுவிட முடியுமா? ஒன்றை மட்டும் தெரிந்து கொள்ளுங்கள், இந்த மாதிரி பேச்சுக்களை பேசுபவர்கள் அரைகுறைகள் மட்டும்தான், கடவுள் பக்திமிக்க ஜனங்கள் இம்மாதிரியான தீய வம்பு பேச்சுக்களை ஒதுக்கியிருந்தனர்.

இந்த மோட்டீ பெரிய படிப்பாளியொன்றும் அல்ல, மிகவும் சாதாரண மனிதன். யூத தேவாலயத்திற்கு அவ்வப்போது வந்துபோகும் பிரசங்கிகளின் விடுகதைகளைக் கேட்க விரும்புவான். சனிக்கிழமை காலைப்பொழுதுகளில் தேவாலய வேதகாம உச்சாடனப் பாடல் குழுவில் அவனும் கலந்துகொள்வான், அதேசமயம் அவ்வப்போது அருந்தும் மதுபானமான விஸ்கி மேலும் விருப்பமுள்ளவன்தான்.

எப்போதாவது அவன் எங்கள் வீட்டுக்கு வந்து போவதுண்டு.

எனது தகப்பனார் ( அவரது ஆத்மா சாந்தியடைவதாகுக ) இவனிடம் ஓட்ஸ் தானியம் வாங்குவார். மோட்டீ எங்கள் வீட்டுக் கதவின் நாதங்கியை சுரண்டுவது, பூனை உள்ளே விடச்சொல்லி பிராண்டுவது போலவேயிருக்கும். அப்போதெல்லாம் நாங்கள் வயதில் சிறிய பெண்களாயிருந்தோம், அவன் வீட்டினுள் வரும்போது எங்களது வெடிச்சிரிப்பால் வரவேற்போம். எனது தந்தை அவனுக்கு ஒரு நாற்காலியை இழுத்து போட்டு, உட்காருங்கள் திரு.மோட்டீ என மரியாதையாக விளிப்பார். ஆனால் எங்களது நாற்காலிகள் உயரமானவையாக இருந்தமையால், அவனால் அதில் ஏறி அமர சிரமப்பட நேர்ந்தது.தேநீர் கொடுக்கும்போது நெளிந்தும் தடுமாறியும் தேநீர் கண்ணாடி கோப்பை விளிம்பை உதடுகளால் பற்றமுடியாமல்  பதறுவான்.? விஷ நாக்குபடைத்தோர் அவன் தனது பாதங்களை கனப்படுத்தியிருப்பதாகவும்,அவன் எப்போதோ ஒரு முறை குளியலறை மர வாளியில் விழுந்ததாகவும் பலவாறாகப் பேசிக்கொண்டனர். இதெல்லாம் ஒரு புறமிருந்தாலும், அவன் புத்திசாலி வியாபாரியாகவுமிருந்தான்.மோட்டீக்கீ அவனோடு வசதியான வாழ்க்கையை வாழ்ந்தாள். அவர்கள் வீட்டு அலமாரிகளிலும் சமையலறை யிலும் சிறப்பான பொருள்களால் நிறைந்திருந்தது.

 இப்போது இதைக்கேளுங்கள்,

ஒருநாள் இருவருக்குள்ளும் எதோ கருத்துவேறுபாடு வந்து வார்த்தைகள் தடித்து நிஜமான சண்டை ஏற்பட்டது. எல்லா குடும்பங்களிலும் இது ஏற்படுவதுதான். ஆனால் துரதிர்ஷ்டமாக இப்பிரச்சனை நடக்கும்போது ஒரு பக்கத்து வீட்டாள் ஒருவரும் இருந்தார்.

மோட்டீக்கீ (அவள் என்மீது கோபம் கொள்ளாதிருப்பாளாக!)கோபாவேசம் கொண்டபோது கடவுளைக்கூட பொருட்டாகக் கொள்ளாமல் வாயாட ஆரம்பித்து, தனது கணவனை பார்த்து கூக்குரலிட ஆரம்பித்தாள்:          

குள்ளா, நாத்தம்புடிச்ச பொடியா, என்னா ஆளுயா நீ ”

“ ‘ஈ ’ அளவுக்கு இருக்குற உன்னோட, யூத தேவாலயத்துக்கு நடந்துபோறதுக்கே எனக்கு கேவலமாயிருக்குஎன மேலே, மேலே அடுக்கிக்கொண்டே போனாள். அனல் பூத்த சாம்பல் மேல் கரியை கொட்டுவதைப்போல அடுக்கிக்கொண்டே போனதை பார்த்த மோட்டீயின் முகம் ரத்தமெல்லாம் வடிந்து வெளிறிப்போயிற்று. அவன் ஏதும் பேசாமல் இருந்ததே அவளை மேலும்மூர்க்கமாகத்” தூண்டியது.

இந்த மாதிரி குள்ள மனிதனைவைத்துக்கொண்டு நான் என்ன செய்வது? ஒரு மிதி முக்காலியை வாங்கி அதன்மூலம் உன்னை தொட்டிலில் போடுகிறேன். என் அம்மா என்னை உண்மையாக நேசித்திருந்தால் ஒரு மனிதனுக்கு கட்டிக்கொடுத்திருப்பாள், இதுபோன்ற புதிதாகப் பிறந்த குழந்தைக்கல்ல ! ” அவளது சீற்றத்தால் என்ன பேசுகிறாள் என்பதையே உணரவில்லை.

சாதாரணமாக செம்பட்டைத் தலைமுடியும் சிவந்த முகத்தையும் உடையவனான மோட்டீ தற்போது பள்ளிச்சுவற்றில் எழுதும் சாக்குகட்டி போல வெள்ளையாக வெளிறிப்போனான். அப்போது அவளை நோக்கி இப்படி சொன்னான்: ” என்னை விட உயரமாக இருப்பான் உனக்கு வரும் இரண்டாவது கணவன்” 

இதைச் சொல்லும்போதே மனதுடைந்து சிறு குழந்தைபோல கதறியழுதான், யாருமே இதற்கு முன் அவன் அழுது பார்த்ததில்லை. பாவமன்னிப்பு விரத நாளானயோம் கிப்பூர் நாட்களில் கூட அழுது பார்த்ததில்லை.

அவனது மனைவி இதைப்பார்த்து அப்போதே உறைந்து போனாள். அதன்பின் நானங்கில்லாததால் என்ன நடந்தது என எனக்குத் தெரியாது, அவர்கள் சமாதானமாகியிருக்கலாம். ஆனால் பழமொழி சொல்வதைப்போல் அடித்த அடி கூட மறந்து ஆறிவிடலாம், ஆனால் பேசிய வார்த்தை மறக்காது.

 அடுத்த ஒரு மாதம் கடப்பதற்குள் ஊர் ஆட்களுக்கு பேச புதிய விஷயம் கிடைத்தது. மோட்டீ தனக்கொரு உதவியாளனை லப்ளின் நகரத்திலிருந்து கூட்டி வந்திருந்தான். தனது உதவியாளனிடமிருந்து என்ன எதிர்பார்த்தானோ?

 இத்தனை வருடங்களாக தனது வியாபாரத்தைத் தனியொருவனாகத்தான் செம்மையாக கவனித்து வந்தான்.

புதிதாக வந்தவன் தெருவில் இறங்கி நடக்கும்போது எல்லோரும் அவனை திரும்பி நோக்கினர். ராட்சதன் போன்றவன், இருள் போன்ற கருநிறத்தவன், கருமணிக் கண்களும் கருப்பு தாடியுமுடையவன். மற்ற வியாபாரிகள் மோட்டீயிடம், “உதவியாளனை இப்போது வைத்துக்கொள்ள என்ன அவசியம்?” என கேட்டனர்.

அதற்கு பதிலலளித்து,  “கடவுளருளால், வியாபாரம் பெருகிவிட்டதால் தனியொருவனாக என்னால் சமாளிக்க முடியவில்லைஎன்றதால்  அவன் என்ன செய்கிறான் என்பதை புரிந்துதான் செய்கிறான் போல என மற்ற வியாபாரிகள் நினைத்துக் கொண்டனர்.

ஆனால் சிறிய ஊரான இங்கு அடுத்தவர் உலையில் என்ன வேகிறது என்பதை எல்லோரும் பார்த்துக்கொண்டுதான் இருந்தார்கள்.

லப்ளினிலிருந்து வந்தவனின் பெயர் மெண்டில் அவனுக்கு வியாபார நுணுக்கம் எதுவும் தெரிந்திருக்கவில்லை. கிட்டங்கி வாசலில் கண்களை உருட்டிக்கொண்டும் வெறித்து இப்படியும், அப்படியும் பார்த்துக்கொண்டு இருப்பான். சந்தை கூடும் நாட்களில் சரக்கு வண்டிகளுக்கு நடுவே தூண்போலவும்  சந்தைக்கு வந்துள்ள விவசாயிகளுக்கு மேல் உயர்ந்தும் நின்று கொண்டு வைக்கோல் தட்டையை அசை போட்டுக்கொண்டிருப்பான்.

 அவன் பிரார்த்தனைக்கு வரும்போது, லப்ளினில் நீ என்ன செய்து கொண்டிருந்தாய்?, என ஊர் ஆட்கள் கேட்டதற்கு  “நானொரு மரம் வெட்டி

 

உனக்கு மனைவி இருக்கிறாளா ?

இல்லை

என அவன் சொன்னான். அவன் மனைவியை இழந்தவன்.

செங்கல் சூளை தெருவில் உள்ள வேலையற்ற வெட்டிப் பயல்களுக்கு வாயைமெல்ல அவல் கிடைத்ததைப்போலாயிற்று. புதிய அந்த மனிதனும் மோட்டீயும்உயரமும் குட்டையுமாக” இருப்பதே ஒரு வித்யாசத் தன்மையோடிருந்தது. அவர்கள் இருவரும் பேசும்போது, புதியவன் இடுப்பை வளைத்து குனிந்தும், மோட்டீ நுனிக்காலில் உண்ணி நின்றும் பேசுவார்கள். இருவரும் தெருவில் நடந்து போவதை எல்லோரும் அவரவர் ஜன்னலிலிருந்து பார்க்க ஓடுவர். பெரிய உருவத்தான் பெருங்காலெடுத்து நடக்க அதற்கு ஈடுகொடுக்க முடியாமல் மோட்டீ குறு ஓட்டம் ஓடி பின் வருவான். புதியவன் தன் கைகளை உயர்த்தினால் மேல் கூரையையே தொட்டுவிடுவான் போலிருந்தது. இது பைபிளில் வரும் கதைபோலிருந்தது, இஸ்ரேலிய ஒற்றர்கள் வெட்டுக்கிளிகளைப் போலவும் மற்றவர்கள் ராட்சதர்களைப் போலவும் காட்சியளித்ததைப் போலிருந்தது.

இந்த உதவியாளன் மோட்டீயின் வீட்டில் தங்கியிருந்தான். மோட்டீக்கீ தான் அவனுக்கு உணவு வழங்கினாள். மற்ற பெண்கள் அவளிடம்,”கோலியாத் போன்ற ராட்சஸனை ஏன் மோட்டீ கூட்டி வந்தான்?” என கேட்டதற்கு இப்படி பதிலளித்தாள்:

ஏன் என்பதை அறிந்ததைப்போல நான் தீமையைப் பற்றியும் அறிந்து கொள்ளவேண்டும் போலிருக்கிறது, அவன் வியாபாரத்தை தெரிந்து வைத்திருந்தால் கூட பரவாயில்லை, ஆனால் கோதுமைக்கும் கம்புக்குமே வித்யாசம் தெரியாதவனாக இருக்கிறான். குதிரையைப் போல திண்ணுகிறான், காளைமாட்டைப் போல குறட்டைவிடுகிறான். எல்லாவற்றிற்கும் மேல் அவன் ஒரு முட்டாள் எதோ தங்கக் காசை வெளிவிடுவதைப் போல ஒரு வார்த்தை பேச அவ்வளவு தயக்கம்.”

 

மோட்டீக்கீ தனது தங்கையிடம் மனவருத்தம் அனைத்தையும் கொட்டித் தீர்த்தாள்.

தலையில் விழுந்த பொத்தல் போல மோட்டீக்கு உதவியாளன் அமைந்துள்ளான்.

இது அனைத்துமே குரோதத்தாலும் காழ்ப்பாலும் நடந்தது. ஒரு வேலையையும் செய்யாமல் இவன் தின்றே வீட்டையும் கடையையும் முடித்துவிடுவான், என்பது அவளது சொற்கள்.

 எங்களது ஊரில் ரகசியங்களே கிடையாது, ஊரார் உங்களது ஜன்னலோரமும் சாவிதுவாரத்திலும் காதைவைத்து ஒட்டு கேட்பார்கள்.

ஏன் குரோதம்?” என தங்கை கேட்க, மோட்டீக்கீ தேம்பிய படியே ஏனென்றால் நான் மோட்டீயை குறை மாதத்தில் பிறந்த குழந்தை என்றேன்.”

 அவளின்   இந்த கூற்றானது ஊர்முழுக்க உடனே பரவியது. மனிதர்களால் உடனடியாக  இதை நம்ப முடியவில்லை. என்னவிதமான குரோதமிது? இந்த மாதிரியான துருக்கிய தந்திரத்தின் மூலம் யாரை நோகடிக்கிறான்?

இதற்காகச் செலவிடும் பணம் அவனுடையது,

அவளுடையதல்ல. ஆனால் ஒருவன் முட்டாள் தனமான யோசனையைத் தன் மண்டைக்குள் ஏற்றிக்கொள்ளும்போது கடவுள் அவனை பார்த்து பரிதாபப்படுகிறார் ? இது உண்மையே, என எழுதப்பட்டிருப்பது உண்மைதான் எங்கே எழுதியிருக்கிறது என்பதை நான் மறந்துவிட்டேன்.

 

இரு வாரங்கள் கழிவதற்குள் யூத பாதிரியை அழுதுகொண்டே வந்து பார்த்தாள் மோட்டீக்கீ.

 

பாதிரியேஎன இறைஞ்சியவள்         ” என் கணவனுக்குப் புத்தி கெட்டு போயிற்று,ஒரு வெற்றுத் தண்ட தடியனை வீட்டில் வைத்துப் பராமரிப்பது மட்டுமல்லாமல் தனது மொத்தப் பணத்தையும் அவனிடமே கொடுத்துள்ளார்.” அவளது எந்தவகையான செலவுகளுக்கும் இந்த அயலானிடம் தான் போய் நிற்கவேண்டியுள்ளதாகவும், தற்போது இவனே வீட்டின் காசாளனாக. உள்ளான்.

புனித பாதிரியேஎன கதறியழைத்து

நான் மோட்டீயை குட்டை பொம்மை என அழைத்து திட்டியதை, வன்மமாக எடுத்துக்கொண்டு இப்படியெல்லாம் செய்கிறான்

அவள் என்ன விருப்பப்படுகிறாள் என விளங்கவில்லை, புனித மனிதரான அவருக்கு லௌகீக விஷயங்கள் புரிவதில்லை.

அதனால்: ” உனது கணவனின் அலுவல் பணிகளில் நான் தலையிட முடியாதுஎன்றார். ” ஆனால் பாதிரியே, இது எங்களையெல்லோரையுமே அழித்துவிடுமேஎன கூவியழுதாள்.

 பாதிரி மோட்டீயை அழைத்து வரச்சொல்லி கேட்ட போது அவன், “நான் போதுமான அளவு தானிய மூட்டைகளை சுமந்துள்ளேன் தற்போது , ஒரு உதவியாள் அவசியமாகிறதுஎன்றான்.

முடிவாக பாதிரி இருவருக்கும் பொதுவாக அமைதியை காக்கும்படி அறிவுரை சொல்லி அனுப்பினார். அவர் வேறென்ன சொல்ல முடியும்?

R. விஜய ராகவன்.

     அதன்பின் திடீரென குள்ள மோட்டீ நோய்வாய்ப்பட்டான். யாருக்கும் அவனது நோய் இன்னதென்று தெரிவில்லை, அவனது நிறம் வெளுத்து சிறிய தேகம் மேலும் சுருங்கிப்போனது. கும்பிட தேவாலயத்துக்கு வருபவன் எதோ ஒரு மூலையில் ஒரு நிழலைப்போல தோற்றமளிக்கலானான். சந்தை நாட்களில் முன்புபோல வண்டிகளுக்கு நடுவில் போய் வியாபாரம் செய்வதில்லை. அவனது மனைவி கேட்டாள்: ” எனது கணவனே, உனக்கு என்ன உடல் கெடுதல் நடந்துள்ளது?” 

ஒன்னுமில்லையே,

ஒன்னுமேயில்லைஎனஅவன் பதிலளித்தான்.

அவள் மருத்துவமனைக்கு அழைத்துவந்து காட்டினாள், ஆனாலும் மருத்துவனுக்கு என்ன தெரியும்? அவன் சில மூலிகைகளை உட்கொள்ள கொடுத்தும் அவை குணமளிக்கவில்லை. இப்போதெல்லாம் நடுப்பகலிலேயே மோட்டீ , வீட்டிற்கு வந்து படுக்கையில் படுத்துகொள்வது வழக்கமாயிற்று.

மோட்டீக்கீ, ” உனக்கு எதாவது வலிக்கிறதா?”

எதுவும் வலிக்கலியே

பின்னே எதுக்கு நோயாளி மாதிரி படுத்தே கிடக்க?”

 

எனக்கு உடம்புல தெம்பேயில்ல

 

குருவி கொத்தித்தின்கிற மாதிரி கொஞ்சூண்டு சாப்பிட்டா எப்படி உனக்கு தெம்பு வரும்?”

 

எனக்கு பசியே எடுக்கமாட்டேங்குதேஎன்றான்.

 

நான் என்னத்தை சொல்ல? எல்லோருமே மோட்டீயின்  உடல்நிலை மோசமாக போய்க்கொண்டுள்ளதை பார்த்துக்கொண்டுதானிருந்தனர். விளக்கு மங்கி மறைவதைப்போல அவன் நிலை இருந்தது. லப்ளின் நகருக்கு அவனை எடுத்துப்போய் வைத்தியம் பார்க்க மோட்டீக்கீ விரும்பினாலும் அதை அவன் மறுத்துவிட்டான். அவள் அழுகவும் புலம்பவும் ஆரம்பித்து விட்டாள்.

என் நிலைமை என்னாவது? யாரோடு என்னை விட்டுவிட்டு போகிறாய்?”

அந்த பெரிய ஆளை நீ மணந்து கொள்என பதிலளித்தான்

அடக்கருமமே, கொலைக்காரா,

எந்த ராட்சஸனையும்விட நீதான் எனக்கு மனதுக்கினியவன், ஏன் என்னை வதைக்கிறாய்?

நான் சிலவார்த்தைகள் அத்துமீறி பேசினால்தான் என்ன? உன் மேல் உள்ள பிரியத்தால்தான் பேசினேன். நீ என் புருஷன்,என் குழந்தை, இந்த உலகத்துல எல்லாமே எனக்கு நீதான்.நீயில்லாத என் வாழ்வு ஒரு கைப்பிடி மண்ணுக்கும் கீழானதுஎன கதறினாள்.

ஆனால் அவள் இவ்வளவு சொல்லியும் அவன், ” நான் ஒரு பட்டுப்போன மரக்கிளை. அவனோடு நீ பிள்ளைகளை பெறுவாய்என சொன்னான்.

அங்கு நடந்ததையெல்லாம் நான் உங்களுக்குச் சொல்ல வேண்டுமென்றால் இங்கு நான் ஒரு பகலும் இரவும் இருந்து சொல்லவேண்டும். ஊரின் முக்கியபுள்ளிகள் அனைவரும் வந்து அவனோடு பேசினர். பாதிரியும் நோயாளியின் படுக்கைக்கே வந்து பேசினார்.” இதென்ன பைத்தியக்காரத்தனமாக உள்ளதே, இது மனிதனின் உலகமல்ல, கடவுளுடையது புரிந்துகொள்என்றாலும் மோட்டீ புரியாததுபோல் நடித்தான்.

நிலைமை மேலும் சீர்கெட்டுப் போவதை பார்த்த மோட்டீக்கீ, ரகளை செய்து, அயலவனைவீட்டைவிட்டு வெளியேற ஆணையிட்டாள்.

ஆனால் மோட்டீ,” முடியாது

நான் உயிரோடிருக்கும்

வரை இந்தவீட்டின் எஜமானன் நானே, அதனால் அவன் இங்குதானிருப்பான்என்றான்.

 ஆனாலும்,அந்த அயலவன் தினசரியும், ஊர் மடத்தில்தான் போய் படுத்தெழுந்து வந்தான். காலையில் வந்தவுடன் வியாபாரப் பொறுப்புகள் அனைத்தையும் பார்த்துக்கொள்வான். தற்போது அனைத்தும் அவனது கைகளிலேயே இருந்தது பணம், சாவிக்கொத்து, கடைசி துகள்வரை. மோட்டீ எதையும் கணக்கெழுதி வைத்ததில்லை, ஆனால் அவனது உதவியாள் எல்லா கணக்கு வழக்குககளையும் பெரிய பேரேட்டில் பதிந்து வைத்தான். அவன் கஞ்சனாகவுமிருந்தான். வீட்டுச்செலவுகளுக்காக மோட்டீக்கீ பணம் கேட்கும்போதெல்லாம் ஒவ்வொரு கோப்பெக்குக்கும் கணக்கு கேட்டு எழுதிக்கொண்டான். எந்த ஒரு சிறு பொருளாக இருந்தாலும் அதை எடைபோட்டு அளவிட்டே கொடுத்தான்.

கோபமுற்று அவள் சீறினாள்,

நீ ஒரு அயலான், இது உனது காரியமல்ல, திருடா, கொலகாரா, காட்டுல திரியுற வழிப்பறி கொள்ளைக்காரா, உனது கறுத்த சாத்தான்களிடமேயே போய் சேர்

 

அவனது பதில், “உங்கள் கணவர் என்னை வெளியேற்றினால் நான் போய்விடுவேன்

ஆனால் பெரும்பாலான நேரங்களில் கரடிபோல உறும மட்டுமே செய்வான்.

வெயில் காலத்து பொழுதுகளின் உஷ்ணத்தில், குள்ள மோட்டீ எழுந்து நடமாட ஆரம்பித்தான். யோம் கிப்பூர் தினங்களில் உண்ணாவிரதத்தைக்கூட கடைபிடித்தான். ஆனால் புனித சக்கோத் தினத்திற்கு பின் ( ஆதி யூதர்கள் நாற்பது நாள் நடந்து இஸ்ரேலிய மண்ணை அடைந்து குடிசைகள் கட்டியதை நினைவுகூரும் விழவு )

அவனது உடல்நிலை சீர் கெட ஆரம்பித்தது. படுக்கையில் வீழ்ந்தவன் எழவேயில்லை. அவனது மனைவி ஸமோஸ்க் நகரிலிருந்து மருத்துவரை அழைத்து வந்து காட்டியும் அவரால் குணப்படுத்த முடியவில்லை. மந்திரவாதிகளிடமும் சூனியம் எடுப்பவர்களிடம் ஆலோசனை கேட்டு கல்லறைகளை திரி கொண்டு அளந்து செய்யவேண்டிய சாங்கியங்களைச் செய்து பார்த்தாள். தேவாலயத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி பிரார்த்தித்தாள். புனித பாதிரிகளிடம் வேண்டுதல் வைத்தாள். ஆனாலும் தினப்படி மோட்டீ பலகீனமாகிக்கொண்டே போனான். அவன் மல்லாந்து படுத்து முகட்டை பார்க்கலானான். இப்போதெல்லாம் காலை வேளைகளில் அவனது பிரார்த்தனை சால்வையையும் தியான மணிகளையும் போட்டுவிட்டு உதவ வேண்டியிருந்தது, அவனாகவே அணிந்து கொள்ள முடியாத அளவு பலவீனனாகிப்போனான். எப்போதாவது ஒரு தேக்கரண்டி ஓட்ஸ் கஞ்சியை மட்டும் குடிப்பான்.

இப்போதெல்லாம் சபாத் விடுமுறை நாள் நேரங்களில் தேவாலய வொயின் கோப்பையின் முன் ஜபிக்க முடிவதில்லை. இவனது பெரிய உதவியாளன் தேவாலயம் வந்து தேவதைகளை பிரார்த்தித்து ஜபித்து செல்வான்.

போகும் இந்த போக்கையெல்லாம் அவதாணித்த மோட்டீக்கீ, சாட்சியாக மூன்று யூதர்களையும் வைத்து, கைகளை கழுவி சுத்தம் செய்த பின்னர் பைபிளை கையில் வைத்தவாறு, “நீங்களே எனது சாட்சி, புனித நூலும் கடவுளும் அறிய நான் பிரதிக்ஞை செய்கிறேன், இவனை நான் மணம்புரியமாட்டேன்,90 வருடம் விதவையாக இருந்தாலும்கூட இவனை திருமணம் செய்து கொள்ளவே மாட்டேன்.” என அறைகூவிய பின் அவனது கண்களை பார்த்து துல்லியமாக காரி உமிழ்ந்தாள்.அவன் கைக்குட்டையை எடுத்து துடைத்துக்கொண்டு வெளியே போனான்.

 

இதெல்லாம் பொருட்டேயில்லை. உனது உறுதிமொழியிலிருந்து விடுவிக்கப்படுவாய்….” 

என்று மோட்டீ முணகினான்.

 அடுத்த ஒரு வாரத்திற்குள் மோட்டீ மரணபடுக்கையில் வீழ ஆரம்பித்தான். அது மிக சீக்கிரமாக முடிந்தது. தற்போது மோட்டீ உயிரோடில்லை. தரையில் படுக்கவைத்து தலைமாட்டில் மெழுகுவர்த்திகளும், கால் வீட்டு வாசலை பார்த்தும் கிடத்தி வைத்திருந்தார்கள். மோட்டீக்கீ தன் கன்னங்களை கிள்ளிக்கொண்டு கதறினாள்.

கொலகாரா, உனது உயிரை நீயே எடுத்துக்கொண்டாயே! உனக்கெல்லாம் புனிதமான யூத புதைப்பு சடங்கை நடத்த அவசியமேயில்லை! சுடுகாட்டுச் சுற்றுசுச்வருக்கு வெளியேதான் உன்னையெல்லாம் புதைக்கோணும்!” 

என பித்தேறி பிதற்றினாள்.

 

அந்த உயர்ந்த அயலான் இதில் எதுவும் கலந்துகொள்ளாமல் கண்மறைவாக இருந்துகொண்டான். சாவுச்சடங்குகளுக்காக இடுகாட்டு ஆட்கள் செலவுக்கு பணம் கேட்கும்போது மோட்டீக்கீயிடம் ஒரு கோப்பெக்கூட இல்லை.அவள் தனது நகைகளை அடகு வைக்கவேண்டியிருந்தது.மோட்டீயை புதைக்க தூக்கி சென்றவர்கள் அவன் குருவியை போல எடையற்று இலகுவாக இருந்ததாக சொன்னார்கள். உயிரற்ற உடலைத் தூக்கி மண்ணில் வைத்தபோது நான் பார்த்தேன். துணியில் சுற்றிய குழந்தை உருவம் போலிருந்தது. அவனது சடலத்தோடு அவன் தானியத்தை அளந்து போட்ட படியும் வைக்கப்பட்டிருந்தது. தான் எப்போதும் சரியாக அளந்து தானியங்களை கொடுத்ததால் கடைசியில் தன்னோடே இந்த படியையும் வைக்க சொல்லி பணித்திருந்தான். அவர்கள் குழியைத்தோண்டி அவனை புதைத்தார்கள். திடீர் என மண்ணிலிருந்து எழுந்து வந்ததைப்போல் அந்த ராட்சஸன் வந்து சேர்ந்தான். அவன் யூத இறப்பு மந்திர உச்சாடாணமான காடீஷ் ஸை ஜபிக்கலானான்.

ஏய் எமனே, உன்னால்தான் அவர் இந்த உலகை நீத்தார்!” என கத்தியபடியே அவனை பிராண்ட பாய்ந்தாள் இந்த விதவை.கூடியிருந்தவர்கள் சிரமப்பட்டு அவளைப் பிடித்து வைத்தனர்.

 

பகல் பொழுது சுருங்கி மாலை வந்தது, மோட்டீக்கீ தனது ஏழு நாள் துக்க அனுஷ்ட்டிப்பை ஒரு குட்டை நாற்காலியில் அமர்ந்தவாறு தொடங்கினாள். இதனூடே அந்த உயர்ந்த மனிதன், முற்றத்தில் அங்குமிங்கும் நடந்தவாறு பொருட்களை சுமந்துகொண்டும், இதையும், அதையும் செய்துகொண்டுமிருந்தான்.ஒரு பையனிடம் கொஞ்சம் பணத்தை கொடுத்து அதை இந்த விதவையிடம் சேர்ப்பித்தான். இப்படியாக அவர்களது தினங்கள் கழிந்தன.முடிவாக ஊர்ச்சமூகம் அயலானை பாதிரி முன் நிறுத்தியது.

ஊரார்,

இதெல்லாம் என்ன?

ஏன் அந்த வீட்டோடு ஒட்டிக்கொண்டுள்ளாய்? என கேட்டனர். முதலில் தன்னை பற்றியதல்ல என்பதைப்போல் சும்மா நின்றவன், பின்பு தனது சட்டைப்பையிலிருந்து ஒரு தஸ்தாவேஜை எடுத்து அவர்களுக்குக் காட்டினான். மோட்டீ தனது அனைத்து சொத்துகளுக்கும் இவனையே வாரிசுதாரராக ஆக்கியிருந்தான். வீட்டுப் பொருட்களை மட்டும்தான் தன் மனைவிக்காக என எழுதியிருந்தான். இதைப்படித்த ஊர் ஜனங்கள் அதிர்ச்சியடைந்தனர்.

 

பாதிரி,”எப்படி இம்மாதிரியான செயலை மோட்டீயால் செய்ய முடிந்தது? என கேட்டார்.

இது எப்படியானது என்றால், லப்ளின் நகருக்கு சென்ற மோட்டீ அங்கு கண்டதிலேயே பெரிய உயர்ந்த ஆளை தேர்ந்து தனது வாரிசாகவும் செயலாளியாகவும் பத்திரமெழுதிவிட்டான்.

இந்த அயலான் அதற்கு முன்பாக மரம்அறுக்கும் குழுவுக்கு மேற்பார்வையாளனாக இருந்தான்.

 பாதிரியார் தனது கட்டளைகளாக அவனிடம் சொன்னார்:

இந்த விதவை உறுதிமொழியை எடுத்திருப்பதால், நீ அந்த வீட்டிற்குள் நுழையக்கூடாது. அவளது சொத்துக்கள் பூராவற்றையும் அவளிடமே திருப்பிக்கொடுத்து விடு, ஏனெனில் இந்த மொத்த விவகாரமுமே புனிதமற்ற செயலாக உள்ளது“.

ஆனால் அந்த பூதாகரமானவன்,            ” இடுகாட்டிலிருந்து எந்த பொருளும் திரும்பி வராதுஎன சொல்லியபோது கூட்டத்தினர் திட்டியும்,   சாதி பிரஷ்டம் செய்ய உச்சரிக்கும் மூன்று சொற்களைச் சொல்லி விலக்கம் செய்யப்போவதாகவும், தண்டனையாக கட்டி வைத்து உதைக்கப்போவதாகவும்,கூறினர்.

ஆனால் அவன் அசரவேயில்லை. ஓக் மரத்தைப்போல உயரமாகவும், பேசினால் தகர அண்டாவிலிருந்து அதிர்வதைப்போல ஒரு கம்பீரமான குரலையும் கொண்டிருந்தான்.

இதே சமயம் மோட்டீக்கீ தனது உறுதிமொழியை துக்கம் விசாரிக்கவருபவர்களிடமெல்லாம்மெழுகுவர்த்தி மேலும், புனித நூல்களாலும்,அவள் நினைக்கும் எந்த பொருளாலும் சத்தியம் வைத்து உறுதி செய்தாள். சபாத் தினத்தன்று ஒரு குழு பிரார்த்திக்க வீட்டிற்கு வந்த போது அவள் ஓடிப்போய் புனிதச்சுவடியை எடுத்து வந்து, மோட்டீ நினைத்ததுபோல் தான் செய்யப்போவதில்லை, அவன் நினைத்தபடி நடக்காது என அழுது ஆர்ப்பரித்து உறுதிமொழியைப் பதிவு செய்தாள்.

 

அவளோடு சேர்ந்து எல்லோரும் சோகத்தோடு தேம்பி அழுதனர்.

நல்லது, என் அன்பு மக்களே,

அவள் அவனை திருமணம் செய்து கொண்டாள். இது நடப்பதற்கு எவ்வளவு நாள் ஆகியது என எனக்கு சரியாகத் தெரியவில்லை ஆறு மாதத்திலிருந்து ஒன்பது மாதங்களுக்குள்ளிருக்கும்….

வருடத்திற்குள்ளாகத்தானிருக்கும். பெருத்தவன் எல்லா சொத்தையும் வைத்திருக்க இவளிடம் ஒன்றுமில்லை.தனது கௌவரவத்தை பொருட்டாக எண்ணாமல் பாதிரியிடம் சென்று,

புனித பாதிரியே நான் என்ன செய்வது? மோட்டீயின் விருப்பமது, கனவுகளில் வந்து தொந்திரவு செய்கிறான், கிள்ளுகிறான், காதில்வந்து ஓதுகிறான், மூச்சே அடைத்துப்போய்விடும் போல் உள்ளதுபாதிரியின் படிப்பறையில், தனது கைச்சட்டையை மேலேற்றி கையிலுள்ள நீலமும் கறுப்புமான வடுக்களை பாதிரியிடம் காட்டியழுதாள். பாதிரி தானே முடிவெடுக்க தயங்கி லப்ளின் மதகுருக்களுக்கு கடிதமெழுதினார். அங்கிருந்து மூன்று குருமார்கள் இங்கு வந்து தங்கி மூன்று நாட்களாக புனித நூலான தால்மண்டுவைப் படித்து முடிவாக அவளுக்கு, என்னவென்று சொல்வது? —

விடுவிப்பை கொடுத்தனர்.

 இந்தத் திருமணம் அமைதியாக நடந்த ஒன்றுதான், ஆனாலும் வந்த கூட்டம் கூச்சலிட்டு அதை நிரப்பியது. கிண்டலையும் கேலியையும் நீங்கள் கற்பனையிலேயே புரிந்துகொள்ளலாம். திருமணத்திற்கு முன் மோட்டீக்கீ பலகைபோல ஒல்லியாகவும் பார்க்க பச்சையும் மஞ்சளுமான பசலை படர்ந்திருந்தாள். ஆனால் மண நிகழ்விற்கு பின் ரோஜாவைப்போல மலரத்தொடங்கினாள்தற்போது அவள் இளவயதைக் கடந்திருந்தாலும், கர்ப்பிணியானாள். ஊரே அல்லோலகல்லோலப்பட்டது.

அவளது முதல் கணவனைபொடுசுஎன கூப்பிட்டது போல இரண்டாவது கணவனைபெருசுஎன அழைத்தாள்.

பெருசு இதை பாருங்க, பெருசு அதைச்செய்யுங்க என அவனோடு ஒட்டி உறவாடினாள். ஒன்பது மாதங்களில் ஒரு ஆண் குழந்தையை பெற்றெடுத்தாள். அந்த குழந்தை மிகப்பெரியதாகவே வந்து பிறந்ததால் பேற்றுவலி அவளுக்கு மூன்று நாட்களுக்கு இருந்தது. ஊராட்கள் பிள்ளைப்பேற்றிலேயே அவள் இறந்து விடுவாள் என நினைத்தனர், ஆனால் எப்படியோ தப்பிப் பிழைத்துக்கொண்டாள்.

குழந்தையின் உறுப்புசேதன (சுன்னத்) விழாவுக்கு ஊரில் பாதி வந்திருந்தது. அதில் சிலர் சந்தோஷப்படவும், பலர் கிண்டலடித்துச் சிரிக்கவும் வந்திருந்தனர். அது ஒரு அருமையான விழாவாக இருந்தது.

 

ஆரம்பத்தில் எல்லாம் நல்ல முறையில் போனது. வயதான காலக்கட்டத்தில் ஆண் குழந்தை பிறப்பு என்பது என்னவிருந்தாலும் சிறியவிஷயமில்லை!

மோட்டீ எப்படி எல்லா விஷயத்திலும் அதிர்ஷ்ட்டக்காரனாக இருந்ததைப்போல மெண்டில் துரதிர்ஷ்ட்டக்காரனாயிருந்தான். மெண்டிலை நில உரிமையாளருக்கு பிடிக்க வில்லை. மற்ற கூல வியாபாரிகளும் அவனை ஒதுக்கி வைத்தனர். தானிய கிட்டங்கியில் வைத்த பொருட்கள் பூனை அளவுள்ள பெருச்சாளிகளால் கபளீகரம் செய்யப்பட்டது

இது மேலிருந்து அளிக்கப்பட்ட தேவதண்டனை என எல்லோரும் ஒப்புக்கொண்டனர், மிக சொற்ப காலத்திலேயே மெண்டில் வியாபாரி என்ற ஸ்தானத்தை இழந்தான். பழையபடியே மரமறுக்கும் மேற்பார்வையாளனாகச் சென்று சேர்ந்தான்.

இப்போது இதைக்கேளுங்களேன். அவன் ஒரு மரத்தடியில் நின்று தன் கோடாலியால் வெட்ட, அந்த மரம் நேராக அவன்மீதே விழுந்தது. காற்றுகூட அப்போதுவீசவில்லை. சூரியன் பிரகாசமாக ஒளிர்ந்துகொண்டிருந்தது. அவனுக்கு சத்தமிடக்கூட நேரமில்லை.

 

மோட்டீக்கீ மேலும் சில காலமே வாழ்ந்தாள். ஆனால் அவளது சித்தம் கலங்கிவிட்டது போலிருந்தது. எதையோ எப்போதும் முணுமுணுத்தவாறே இருப்பாள்  —- பொடுசு,பெருசு, பெருசு,பொடுசு….

தினமும் இடுகாட்டுக்கு ஓடிச்சென்று மாறி மாறி இரு கல்லறைகள் முன்பாக அழுது புலம்புவாள். அவள் இறந்தபோது, நான் அந்த ஊரில் இல்லை. எனது கணவரின் பெற்றோரோடு வசிக்க வந்துவிட்டேன்.

 

நான் சொல்லிக்கொண்டிருந்ததைப்போல குரோதம்….

ஒருவரை குரூரமாக பகடி செய்யக்கூடாது.

சிறியதோ பெரியதோ அதனதன் நிலை அததற்கு. இதெல்லாம் நாம் நம் உலகில் உருவாக்கியதல்ல. ஆனால் ஒரு மனிதன் இதைப்போன்ற இயற்க்கைக்கு மாறான செயலைச் செய்வது!

இதுபோல் நடந்ததாக எங்காவது கேள்விப்பட்டுள்ளீரா?உறுதியாக சாத்தான்தான் அவனுள் ஊடுறுவியிருக்க வேண்டும்.இதை நினைக்கும் போதெல்லாம் எனக்கு நடுக்கம் ஏற்படும்.


ஆசிரியர் குறிப்பு:
R.விஜயராகவன் 

தென்னமரிக்க எழுத்தாளரான இஸபெல்லா அலந்தே,D.H லாரன்ஸ், சல்மான் ரஷ்டி,ஆகியோரின் சிறுகதைகளை தமிழில் மொழிபெயர்த்துள்ளார்.

காலச்சுவடு வெளியீடாக ரேமண்ட் கார்வரின் சிறுகதை தொகுப்பாக ” வீட்டின் மிக அருகே மிகப்பெரும் நீர்பரப்பு”
எனும் புத்தகம் நண்பர்களின் பங்களிப்போடு வந்துள்ளது.
இந்திய ஆங்கில எழுத்தாளர்களான ஜேனீஸ் பரியட் மற்றும் அனிதா அக்னிஹோத்ரி ஆகியோரின் சிறுகதையையும் மொழிபெயர்த்துள்ளார். ஜேனீஜ் பரியடின் கதைகள் நண்பர்கள் தொகுப்பாக நற்றிணை வெளியீடாக வந்துள்ளது.
ஐசக் பாஷாவிஸ் சிங்கர் :
போலந்தில் பிறந்து அமெரிக்காவில் குடியேறியவர்.
யூத இட்டிஷ் மொழியில் 14 நாவல்களும் 12 சிறுவருக்கான கதைப்புத்தகங்களாயும் பல சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டவர்.
இவரது இலக்கிய படைப்புகளுக்காக 1978 ம் வருடம் நோபல் பரிசளிக்கப்பட்டது.
இவரது எழுத்து மனித மனத்தின் நேர்மறைத்தன்மையை பற்றியும் அதேசமயம் எதிர்மறை தன்மையால் அலைக்கழிக்கப்படுவதையும் தனது பரந்துபட்ட படிப்பாற்றலால் வெளிப்படுத்தினார்.
இவரது காலக்கட்டத்தில் பேசத்தயங்கிய பெண்களின் தன்பாலின ஈர்ப்புகளை பற்றியும் திருநங்கைகளை பற்றியும்,தேவாலய குருமார்களின் ஆன்மீக வரட்சி மற்றும் மனசலனங்களையும் சிறுகதைகளாக படைத்துள்ளார்.
கீழைதத்துவமான காம குரோத மோகங்களை அங்கீகரித்ததைப்போல தனது கதைமாந்தர்கள் இவற்றால் அலைக்கழிக்கப்படுவதை சித்தரித்துள்ளார். தாஸ்த்தாவ்ஸ்க்கி போன்ற ரஷ்ய இலக்கியவாதிகள் மேல் மிகுந்த ஈர்ப்புடையவர்.
அமெரிக்க இலக்கிய சமூகம் இவரது எழுத்தை கொண்டாடி இவரது எழுத்தை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து கொண்டது.
நோபல் மட்டுமன்றி அமெரிக்காவின் பல இலக்கிய விருதுகளை வென்றிருக்கிறார்.
இவரை கௌரவிக்கும் பொருட்டு நியூயார்க்கிலும் உள்ள ஒரு தெருவுக்கும்
புளோரிடாவின் ஒரு தெருவுக்கும் இவரது பெயரை வைத்திருக்கிறார்கள். போலந்திலும் இவர் வாழ்ந்த லப்ளின் நகரின் ஒரு வளாகத்திற்கு இவரது பெயரை சூட்டியுள்ளார்கள்.
இவர் 20 நூற்றாண்டின் தலை சிறந்த யூத எழுத்தாளராவார்.

 

Previous articleஅவன் மனைவிக்குத் தெரிந்துவிடக்கூடாது
Next articleபெரு விஷ்ணுகுமார் கவிதைகள்
Avatar
விஜயராகவன்: திரு. மனோன்மணியின் ’புதிய எழுத்து’ இதழில் , இசபெல்லா அலேண்டே, D.H லாரன்ஸ், சல்மான் ரஷ்டி, பாஷாவிஸ் சிங்கர் ஆகியோரின் சிறுகதைகளை முதலில் மொழியாக்கம் செய்துள்ளார். பின்பு காலச்சுவடு பதிப்பகத்தின் வெளியீடாக ரேமண்ட் கார்வரின் " வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு" மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்பில் விஜயராகவன் மொழிபெயர்த்த கதைகளும் வெளியாகின. இவரின் அனைத்து மொழியாக்க கதைகளையும் "தேரையின் வாய்" என்ற தலைப்பில் புதுநெல் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments