ஃபிலிப் லார்கின் கவிதைகள்

1.

புலர் காலை
கண் விழித்து
தொலைதூர சேவல் கூவுவதைக் கேட்பதுவும்
திரைசீலைகளை விலக்கி
மேகங்கள் பறந்தோடுவதைப் பார்ப்பதும்
இவைபோலவே
உறைந்தும் காதலற்றும் இதயம் இருப்பதுவும்
எத்தனை விசித்திரமாய் உள்ளது.

2.

சென்றுகொண்டிருத்தல்

வயல்களினூடே, இதுவரை யாருமே கண்டிராத
எந்த விளக்கையும் ஏற்றாத
ஒரு மாலைப் பொழுது வந்துகொண்டிருக்கிறது

தூரத்திலிருந்து காண
பட்டுபோல் தெரிந்தாலும் கால்களுக்கும் மார்பிற்கும் மேல்
போர்த்திக் கொள்ளும் போது
அது ஆறுதலை அளிப்பதில்லை
விண்ணையும் மண்ணையும் பூட்டி வைத்த அந்த மரம்
எங்கே போய் விட்டது?என்னால் உணர முடியாதபடி
என் கைகளுக்குக் கீழ் என்ன உள்ளது?

எந்த பாரம் என் கைகளை கீழே இழுக்கிறது?

3.

தேவைகள்

இவை அனைத்தையும் மீறுகிறது தனியே இருக்கும் ஆவல்:
அழைப்பிதழ்களால் வானமே மறைந்து போனாலும்
அச்சிடப்பட்ட உடலுறவு வழிமுறைகளைப் பின்பற்றினாலும்
கொடிமரத்தின் கீழ் குடும்பம் புகைப்படம் எடுக்கப்பட்டாலும்
இவை அனைத்தையும் மீறுகிறது தனியே இருக்கும் ஆவல்.

இவை அனைத்திற்கும் கீழ்,மறந்துவிடுதலுக்கான அவா ஓடுகிறது
நாள்காட்டி சுட்டும் தந்திரமான அழுத்தங்களின்,
ஆயுள்காப்பீடுகளின்,,கருவுருவதற்கான பட்டியலிடப்பட்ட ஏற்பாடுகளின்,
மரணத்தைக் காண மறுக்கும் கண்களின்,
இவற்றின் கீழ் எல்லாம் மறதிக்கான அவா ஓடிகொண்டிருக்கிறது.

4.
நான் புரிந்து கொண்ட
முதல் விடயம் இதுதான்
காலம் என்பது
மரத்துக்குளே கேட்கும் கோடாரியின் எதிரொலி.

5.

தோல்விக்கு
தன் கால்களைத் தூக்கி தன் பாதங்களுக்கிடையே
என் வாழ்க்கையை பொருத்திக் கொள்ளும் ட்ராகனைப் போல்
நீ வியத்தகு முறையில் வருவதில்லை.
அல்லது குதிரைகள் வெருள வண்டிகளின் அருகில்
என்னை வெட்டித்தள்ளுவதில்லை, ஒர் உட்கூறாக தெரிவதில்லை

எது தொலையலாம் எனத் தெளிவான எச்சரிக்கையாய்
கையிலிருந்து என்ன செலவழிக்க வேண்டுமென்றோ
என்ன செலவு ஆனதென்றோ கூறுவதில்லை
அல்லது சில காலைப் பொழுதுகளில்
புல்வெளியினூடே ஓடும் குளிர்ந்து போன ஆவிகள் போலும் வருவதில்லை
இந்த சூரியன் ஒளிந்திருக்கும் மதியங்கள் தான்
உன்னை என் முழங்கைகளில் துளையிட்டு பொருத்துகின்றன
என்று தெரிந்து கொண்டேன்.
செஸ்நட் மரங்களில் மௌனம் அப்பிக் கொண்டிருக்கிறது
முன்பைவிட நாட்கள் வேகமாக நகர்கின்றன என்றுணர்கிறேன்
அவற்றில் இற்றுபோன வாடை வீசுகிறது
தாமதமாகி விட்டால் அவை சிதிலம் போல் காட்சியளிக்கின்றன
(சில நாட்களாய் நீ இங்கேயே இருக்கிறாய்)

6.
நேற்றிரவு உன்னைப் பற்றி நான் ஏன் கனவு காணவேண்டும்?
பார் காலை இப்பொழுது பழுப்பு நிற ஒளியாலென் சிகையை பின் தள்ளுகிறது
முகத்தில் விழும் அறைகளைப் போல
நினைவுகள் கரையேறுகின்றன
முழங்கையைத் தாங்கிய வண்ணம்
ஜன்னலூடே பனியை வெறிக்கிறேன்.
பல வருடங்களுக்கு முன் வீட்டைவிட்டுச் சென்றவனுக்கு
வரும் கடிதங்களைப் போல
நான் மறந்து போன பல விஷயங்கள்
அறிந்தே இரா வலிகளுடன்
மனதிற்கு திரும்புகின்றன.


-ஃபிலிப் லார்கின்

தமிழில் : பத்மஜா நாரயணன்

 

ஆசிரியர் குறிப்பு:

ஃபிலிப் லார்கின் (1922-1985)

இங்கிலாந்தை சேர்ந்த கவிஞர். லார்கினின் கவிதைகள் தொடர்ச்சியாக, அவநம்பிக்கைவாதத்தை (Pessimism) முன்வைப்பவை. மனிதன் காதல், அடையாளம், பொருட்கள் போன்றவற்றுக்கு மத்தியில் எவ்வாறு கைவிடப்பட்டுள்ளான் என்பதை பரிசீலித்துப் பார்ப்பவை. தோல்வி, வெறுப்பு, மரணத்தின் அருகாமை போன்றவற்றை பகடியும் பாடல்த்தன்மையுள்ள வரிகளின் மூலம் வெளிப்படுத்துபவை. Jill, A Girl in Winter என நாவல்களை எழுதியுள்ளார். இங்கு மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கும் கவிதைகள் Complete poems தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை.


பத்மஜா நாராயணன்:

வங்கி பணியாளர்  மூன்று கவிதை நூல்களும்  இரண்டு மொழிபெயர்ப்பு கவிதை நூல்களும்  நான் மலாலா,  தடங்கள்,  வெண்ணிற இரவுகள், ஷ்இன் ஒலி,  கடைசி வைசிராயின் மனைவி உள்ளிட்ட ஐந்து மொழிபெயர்ப்பு நாவல்களும்  வெளியிட்டுள்ளார்.

3 COMMENTS

  1. காலம் என்பது மரத்துக்குள்ளேயே கேட்கும் கோடாரியின் எதிரொலி….என்னமாய்ச் சிந்தித்திருக்கிறார் ஃபிலிப் லார்க்கின். பத்மஜா நாராயணனின் மொழிபெயர்ப்பும் அசலைக் கொண்டுவரும் ஆற்றல் உள்ளது. அருமை.

    • இந்த மொழிபெயர்ப்புகளை உயிரோட்டமாக உள்வாங்கிக் கொண்டேன். கனலியின் பணி மகத்தானது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.