பிள்ளைப்பருவம் (நான்கு அங்கங்களில்*) -ஜில் பியலாஸ்க்கி

(எமது மீட்பர் சார்லஸ் எம்.ஷல்ட்ஸ்-க்கு)

1.
அக்டோபர் இறுதி,
பகல்கள் இரவுக்குள்
விரைந்து ஒடுங்குகின்றன.
இலைகள் மந்தகதியில் விழுகின்றன.
இது ஹாலோவீன்.

ஒரு முகமூடிக்காகத் தோண்டித் துருவுகிறோம்
அதன் பின்னே ஒளிந்துகொள்ள,
ஒரு ஆளுமையாக உருமாற அல்லது உருவாக.
ஒரு தாயை
அவளுக்கேயான வினோதக் கொள்ளையளாக
ஆக்கியிருக்கிறது துக்கம்.
இவை வெல்லப்பட்டாக வேண்டிய போர்கள்.

தண்ணொளி சிந்தும் நீலப்பச்சை விழியழகித்
தானே உடுத்துகிறாள்
தன் தாயின் இளஞ்சிவப்புத் தளராடையை
உரோமங்களினாலான சிறிய இரவு மேலுடுப்பினை.
ப்ளாஸ்டிக் மலர்களிலான கிரீடத்தை அணிகிறாள்.
நமது விருப்பங்களின் இளவரசி.

தாய் வீடு வரத் தாமதமானால்
நம்மைச் சிரிக்க வைக்கிற கோமாளியானவள்
முகத்தில் வெண்ணிறம் பூசுகிறாள்
தொப்பியை இழுத்து அணிகிறாள்
தலைகீழாக ஒரு புன்னகையை வரைகிறாள்.

வெள்ளைப் போர்வை போர்த்தி
கண்களுக்காகத் துளைகளிட்டு
என் விருப்பத்தை எய்துகிறேன்.
ஒரு பேயாகும் நான்
ஒருவழியாக அரூபமாகிவிட்டேன்,

யுத்தங்களை நல்வினைகளை நிகழ்த்த
எங்கள் தந்தையை விடுவித்து
எங்கள் இல்லத்தை மீட்டளிக்குமாறு
கடவுள்களைத் தந்திரம் செய்யும்
கனவுகள் காணும் நாங்கள்
இரவின் மகள்கள்.

கடையில் வாங்கப்பட்ட
ஸ்பைடர் மேன், பாட்மேன்,
கேஸ்ப்பர் தி ஃப்ரெண்ட்லி கோஸ்ட் உடைகளில்
அணிவகுத்துச் செல்லும் குழந்தைகள்
அவர்களைப் பின்தொடர்ந்து
நகரக் குடியிருப்பில் நீண்ட நடை
அசங்கியமான வௌவால்கள், எலும்புக்கூடுகள்
குரூரமாக வெட்டப்பட்ட பூசணி விளக்குகளை
அணிந்துகொண்டு நிற்கும்
முன்முற்றங்கள் வரை செல்கிறோம்.

ஐயோ! அந்த இருண்ட அச்சமூட்டும் வீடு.
கெட்ச்சப் ரத்தத்தில்
குளிர்ந்த ஸ்பெகட்டி குடல்களில்
நாம் நம் கைகளை நனைத்துத்தான் ஆகவேண்டுமா?

ஆப்பிள்களில் ஒளித்துவைக்கப்படும் ரேஸர் கத்திகள்
உறைநீக்கப்பட்டிருக்கும் நஞ்சூட்டப்பட்ட மிட்டாய்கள்
அறியாதவர் வண்டிகளில் ஏறலாகாது
எங்களை இழுத்துச் சென்று கொன்றுவிடக்கூடிய
மனிதர்கள் உண்டு
இவை குறித்தெல்லாம் எச்சரிக்கப்பட்டிருந்தோம்.
திடீரென உலகம் வதைகொண்டு இருண்டுவிட்டது

வான் கீறுகிறது. இடி.
காற்று மரங்களைக் கிழித்தெறிகிறது
மழையான மழை.

இலை நீங்கிய மரங்கள் முறுக்கிக்கொண்டு சலசலக்கின்றன
நிலவின் வினோத ஆரஞ்சு நிறம்.
முன்வாசல் பூசணிகள் மிதித்து நொறுக்கப்படுகின்றன
போக்கிரிகள் சாளரங்களில் முட்டையடிக்கத் தொடங்கிவிட்டனர்.
வீட்டுக்குச் செல்லும் நேரம் வந்துவிட்டது.

ஆண்டு முழுதும் இருண்டு கிடக்கும்
சூனியக்காரிகள் உறைவதாகக் கருதப்பட்ட வீடு
விரைந்து அதைக் கடக்கிறோம்
மழையில் நைந்து அடிபாகம் கிழிந்துவிட்டன
ட்ரிக்-ஆர்-ட்ரீட்டுக்கு எடுத்துச் சென்ற
பழுப்பு நிறப் பொருட்கொள் பைகள்.

சூனியக்காரியின் கதவு கிறீச்சிட்டுத் திறக்கிறது
அச்சமில்லாவிட்டால் ஏது தீயசக்தி?
முதிர்பருவத்துக்கு ஆயத்தம் செய்யா
பிள்ளைப் பருவம் ஏது?
ஓடுகிறோம்.

பின்னர் வேண்டுமென, பகிராமல் பதுக்கிவைக்கும்
பேராசையின்
ஏக்கத்தின்
விருப்பின்
நினைவுச்சின்னமாக
நடைபாதையில் மின்னிக்கொண்டு கிடக்கின்றன
அங்கேயே விட்டுவிட்டு வந்த
மிகவும் விரும்பப்பட்ட அம்மிட்டாய்கள்.
நாம் வெகுவாக அவாவும்
நம்மைச் சீர்கெடுக்க இருக்கும்
எல்லாவற்றின் சின்னமுமாகக் கிடக்கின்றன
ஒவ்வொரு மிட்டாயும்.

2.
இட்ஸ் தி க்ரேட் பம்ப்கின், சார்லீ ப்ரௌன்.*
லூஸி அதிகாரம் செய்யும் தமக்கை.
விடைகளை அறிந்தவளாயிருக்கிறாள்
அவள் எப்போதும்.
நான் லைனஸ் –
க்ரேட் பம்ப்கினின் எழுச்சிக்குக் காத்திருக்கும்
நம்பிக்கை மிகுந்த ஒருவன்.
ஒருவேளை அவன் கடவுளாயிருக்கலாம்,
ஒருவர் நம்பிக்கை வைக்கத் தகுந்த ஒருவன்.
நம் ஆசைகளிலிருந்து
அவமானங்களிலிருந்து
நம்மைக் காக்கும் ஒருவனாக அவன் இருக்கலாம்.
உலகப் போரில் ரெட் பாரனை எதிர்த்து குண்டு வீசும்
ஸ்னூப்பி எல்லாருக்கும் இளையது.
க்ளப்ஹவுஸ் உச்சியில் ஏறி மார்தட்டும் அந்தப் பெண்.
காதலோன், கல்விமான்,
ஆத்மிகன், அடையவொண்ணான்,
பியானோவில் ஆழ்ந்தவனாம்
அந்த ஷ்ரோடராக மறு பிறவி எடுத்துள்ளான்,
பள்ளியில் நான் விரும்பும் பையன்.
அல்லது ஒருவேளை நான் சார்லீ ப்ரௌன் –
வயலெட்டின் விருந்துக்கு அழைப்பு கிட்டியதை நம்பமுடியாத
தனது வெள்ளைப் பேய்ப் போர்வையில் மேலதிகத் துளைகளிட்ட
கத்திரிக்கோல் கையாளப் பிரச்சினை கொண்ட
தன் பையில் கருங்கற்கள் சேரப் பெற்ற
சார்லீ ப்ரௌனாக நான் இருக்கலாம்.
ஏன் ஒரு தோல்வி இன்னொரு தோல்விக்கு இட்டுச் செல்கிறது?
அல்லது ஒருவேளை நான் லைனஸை நேசிக்கும் ஸாலி.
நான் பிக்-பென் இல்லையென எனக்குத் தெரியும்.
பெப்பர்மின்ட் ப்யாட்டி போல் நேர்படப் பேசுபவளும் அல்ல.
கர்ள் வித் நேச்சுரலி கர்லி ஹேர் போல்
சுருள்கற்றை எனக்கில்லை.
ஒருவேளை நாங்கள்
ஒருவருக்கொருவர் பொருந்தாதவர்களாக இருக்கலாமோ?
சார்லீ ப்ரௌன் இலைச் செத்தைகளைக் கூட்டுகிறான்.
ஸ்னூப்பி பாய்கிறது.
கால்பந்தை உதைக்க ஆயத்தமாயிருக்கிறான் சார்லீ ப்ரௌன்
மேகங்களில் தலையுயர்த்திக்கொண்டு
உதைக்கப் போகும் வேளையில்
பந்து பறித்துச் செல்லப்படுகிறது.
லைனஸ் பூசணித் திட்டில் இருக்கிறான்
நடுங்கிக்கொண்டு, விரல் சூப்பிக்கொண்டு,
ஒரு கையில் போர்வையைப் பற்றியவண்ணம்,
பூசணித்திட்டின் மேலாக எழுந்துவரப் போகும்
க்ரேட் பம்ப்கினுக்குக் காத்துக்கொண்டிருக்கிறான்
வெகுகாலமாகக் காணாமல் போயிருக்கும்
எங்கள் தந்தைக்குக் காத்திருப்பது போல்,
எப்படியும் இறுதியில் அவன்
எங்களுக்குத் தன்னை வெளிப்படுத்துவான் என்னும் நம்பிக்கையில்.

3.
கிறிஸ்துமஸுக்கு முந்தைய தினம்
சோளப்பொரியையும் க்ரான்பெர்ரியையும் கோத்துக் கட்டுகிறோம்.
சிவப்பு, பச்சைக் கண்ணாடிக் குமிழ் விளக்குகள்
ஜிஞ்சர்ப்ரெட் அலங்காரங்களை எல்லாம்
கொக்கியிட்டு மாட்டுகிறோம் –
அழகூட்டி மாற்றியமைக்கும்

எங்கள் பேராசையின் பாரம் தாளாமல் கிளைகள் தாழும் வரை.
பரவாயில்லை.
பட்டுத்துணி தேவதை, அணிமிகு தலைப்பூண்
அல்லது பொன் நட்சத்திரம் கொண்டு
மரத்தின் உச்சிக்குக் கிரீடம் சூட்டப்போவது யார்?
அதோ… பனிபடர்ந்த சாளரங்களூடே சூரியவொளி.
ஒருவேளை ஏதேனும் அதிசயம் நேரலாம்.

புறநகரிலிருந்து நகர்மையத்துக்குத்
துரிதப் போக்குவரத்தில் பயணிக்கிறோம்
டெர்மினல் டவரில் திருவாளர் ஜிங்கலிங்கைக் காணவும்
பிறகு ட்விக்பீ கடைக்குச் சென்று
பையன்களும் பெண்களுமாக
வரிசையில் நின்று பரிசுகள் வாங்கவும்.
பெற்றோருக்கு அனுமதியில்லை.

சான்ட்டா ரொம்பப் பாவம்.
சோகமாகக் காட்சியளிக்கிறார்.
அவர் தாடி தாழ்ந்து தொங்குகிறது.
எங்களில் ஒருவர்கூட
அவர் மடியிலமர்ந்து
எங்களுக்கு என்ன வேண்டுமெனச் சொல்ல விரும்பவில்லை.
அப்படிச் சொல்வதென்பது
அவரைப் பரிகசிப்பதாயிருந்திருக்கும்.
இருந்தும், நம்பிக்கை நல்லது.

துரித ரயிலில் வீடு திரும்புகையில்
பரிசுத்தாள் சுற்றப்பட்ட மெழுகுத்திரிகளும், சோப்புகளும்
அந்த அழகிய கடைக்கு வெளியே
எங்கள் மடிகளில் காண்கையில்
திடீரெனப் பரிதாபமாகத் தோற்றமளிக்கின்றன.

பலவர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட
வீடுகளின் காட்சிகள்
மின்னல் போல் கடந்துசெல்கின்றன.
ஒவ்வொன்றும் பிறிதினும் பிரமாதம்.
இருட்டிக்கொண்டே வருகிறது.
பனி, முற்றத்துப் புல்வெளிகளை
வெண்போர்வையில் மூடத் தொடங்குகிறது.
குளிரில் நாங்கள் நடுங்கிக் கொண்டிருக்கிறோம்.

வீடு.
குக்கீத் தட்டு, பால் குவளையை வைத்துவிட்டுப்
படியேறுகிறோம்
எங்கள் அறைகளில் காத்திருக்க.
எங்களில் ஒருவர் வானில் தேடுகிறோம்.
துருவமான்களால் பறக்கமுடியுமா?

4.
சார்லீ ப்ரௌன் மனவழுத்தத்தில் இருக்கிறான்.
அவனுக்கு யாருமே கிறிஸ்துமஸ் வாழ்த்தட்டை அனுப்பவில்லை.
கிறிஸ்துமஸின் பொருள் என்ன?
லைனஸ் தன்னோடு கிளத்தலைத் தொடங்குகிறான்:
“பிறகு அங்கே மேய்ப்பர்கள் நிலத்திலே தங்கி,
இரவில் கால்நடைகளைக் காத்துக்கொண்டிருந்தனர்.
அதோ அங்கே திடீரென வந்தது அவர்களிடையே,
கடவுளின் தேவதை ஒன்று.
தெய்வீக ஒளி அவர்களைச் சூழ்ந்தது
அவர்கள் மிகவும் அஞ்சினர்.
தேவதை சொன்னது,
‘அஞ்சவேண்டாம். கேளுங்கள்.
கரைபுரளும் ஆனந்தத்தைக் கொண்டு வந்திருக்கிறேன்
அது எல்லா மக்களுக்கும் ஆனது.
உங்களுக்காக மீட்பர் பிறந்திருக்கிறார்
தாவீதின் நகரத்திலே
அவர்தான் தேவன் கிறிஸ்து.
இதுவே உங்களுக்கு ஒரு அடையாளம்
மாட்டுக்கொட்டிலில் துணிகளில் பொதியப்பட்ட
ஒரு குழந்தையாக அதைக் காண்பீர்கள்.’
பிறகு திடீரெனக் கடவுளைத் துதித்துக்கொண்டு,
தேவதையுடன் பற்பல தேவதூதர்கள் தோன்றினர்,
‘மேலான கடவுளுக்கும்
பூலோக அமைதிக்கும் போற்றி
இகலோகவாசிகட்கு நல்லெண்ண நீட்சி.

சார்லீ ப்ரௌன் உறுதியேற்றிருக்கிறான்.
அவன் பள்ளி நாடகத்தை இயக்கவும்
கிறிஸ்துமஸ் மரம் வாங்கவும்
லூஸி ஆணையிட்டிருக்கிறாள்.
பரிவு அவனை எப்போதும் மிகுதுயரைத் தேர்ந்தெடுக்கச் செய்கிறதா,
நாம் அனைவரும் நமது சொந்த வினோத விதியிலும்
குறு வெற்றிகளிலும் கட்டுண்டிருக்கிறோமா,
மனம் நிலைகொள்ளுதலை விரும்பிக்கொண்டு?
ஸ்னூப்பியின் நாய் இல்லத்திலிருந்து கத்தரிக்கப்பட்ட
ஒரு சிவப்புக் குமிழ் விளக்கும் சேர்ந்தபின்,
ஊசிக்கு இடமில்லாக் கிளைகள்
தரைக்குத் தாழ, வீழ்கிறது மரம்.
நான் ஒரு மரமண்டைதான் – சார்லீ ப்ரௌன் சொல்கிறான்.
‘இது ஒரு நல்ல மரம்’ என்கிறான் லைனஸ்,
‘இதற்குத் தேவையானதெல்லாம்
கொஞ்சம் அன்பு.’
நாம் எப்படிப்பட்டவராக இன்னும் ஆகமுடியுமோ
அப்படியாகப்பட்டவர்கள்தான் நாம் அனைவரும்.
இரவின் மகள்கள்,
எங்கள் சொந்தத் தொல்கதைகளின் அதிகாரிகள்
அதுமட்டுமா… பாருங்களேன்…
இன்னொரு சிறந்த மரத்துக்கு
இம்மரத்தைப் பரிமாற்றம் செய்கிறது குழு.
பிறகு தேவதைகளின் பாடலைக் கூர்ந்து கேட்கிறார்கள்.

-ஜில் பியலாஸ்க்கி

*அங்கங்கள் – (Acts) – நாடகப் பகுதிகள் என்ற பொருளில்.

*இட்ஸ் தி க்ரேட் பம்ப்கின், சார்லீ ப்ரௌன். – Peanuts கார்ட்டூனை அடிப்படையாகக் கொண்டு அமெரிக்காவில் வெளியான தொலைக்காட்சித் தொடர். அதில் வரும் பாத்திரங்களே இங்கு சார்லீ ப்ரௌனுடன் இடம்பெறும் பெயர்கள்.

(அடிக்குறிப்புகள், மொழிபெயர்ப்பாளருடையவை. குறிக்கப்பட்ட பதங்களின் சூழற்பயன் குறித்துச் சேர்க்கப்பட்டுள்ளன.)

ஜில் பியலாஸ்க்கி: ‘ப்ளேயர்ஸ் அண்ட் அஸைலம்’ உள்ளிட்ட ஐந்து கவிதைத் தொகுதிகள் மற்றும் ‘தி ப்ரைஸ்’ உள்ளிட்ட மூன்று நாவல்களின் ஆசிரியர் ஆவார். ‘ஹிஸ்டரி ஆஃப் அ ஸூஸைட்’, ‘பொயட்ரி வில் சேவ் யுர் லைஃப்’ ஆகிய நினைவுக்குறிப்பு நூல்களையும் எழுதியவர். ‘வான்ட்டிங் அ சைல்ட்’ நூலின் ஆசிரியர்களுள் ஒருவர். கவிதைக்கான குறிப்பிடத்தக்க இவருடைய பங்களிப்புக்காக, 2014ல் ‘பொயட்ரி சொஸைட்டி ஆஃப் அமெரிக்கா’வால் கௌரவிக்கப்பட்டுள்ளார். டபிள்யு.டபிள்யு.நார்ட்டனின், பொறுப்பாசிரியராகவும், துணைத் தலைவராகவும் உள்ளார். 1957ல் ஒஹையோ மாகாணத்தில் பிறந்தவர். தற்போது நியூயார்க்கில் வசிக்கிறார்.

Previous articleகலை அறுதியாக அகவயமான ஒன்று-காலத்துகள்
Next articleநான்கு கவிதைகள்-மஸின் கம்சியே
Avatar
கார்த்திகா முகுந்த் (1982): பிறந்த ஊர் திருநெல்வேலி. கணவர் முகுந்த் நாகராஜன் மற்றும் மகளுடன் பெங்களூரில் வசிக்கிறார். தமிழில் இளமுனைவர் பட்டம். கல்கி வார இதழின் ஆசிரியர் குழுவில் இரண்டு வருடங்கள் பணியாற்றியுள்ளார். முன்னணி தமிழ் எழுத்தாளர்களுடைய புத்தகங்களைப் பிரதி மேம்படுத்தியுள்ளார். பெங்களூர் சித்ரகலா பரீக்ஷத்தில் ஓவிய அறிமுகச் சான்றிதழ் பயிற்சி பெற்றவர். Knitting ஆடை வடிவமைப்பு, புகைப்படக் கலை, கல்வெட்டியல், சைகை மொழி ஆகியன இவருடைய பிற ஆர்வங்கள். வெளியாகியுள்ள நூல்கள்: 1. இவளுக்கு இவள் என்றும் பேர் (2010) – கவிதைத் தொகுப்பு 2. குட்டி யானைக்கு பச்சைத் தொப்பி (2018) – சிறார் கதைகள் தொகுப்பு 3. ஒரு வெப்பமண்டலத் தாவரமாகிய நான் (2021) – கவிதைத் தொகுப்பு 4. துமி (2022) – கவிதைத் தொகுப்பு இரண்டு கவிதைத் தொகுப்புகளும் ஒரு சிறுகதைத் தொகுப்பும் விரைவில் வெளியாகவுள்ளன. மின்னஞ்சல் – [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.