குழந்தைகளுடன் பொழுதை கழிப்பதென்பது சாரல் மழையில் நனைவது போன்றது. இக்கவிதைத் தொகுப்பை நமக்களித்த கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்கள் நம்மையும் அம்மழையில் நனைய வைக்கிறார். கவிஞர் உருவாக்கிய வீட்டில் குழந்தைகளுடன் நாமும் குழந்தையாக மாறி விளையாட ஆரம்பித்து விடுவோம் என்பதில் சிறிதும் ஐயமில்லை. இவரின் ஒவ்வொரு கவிதையும் குழந்தையின் கொஞ்சல் போன்று அவ்வளவு அழகானது. ஆனால் அதற்கு மத்தியில் சில கவிதைகள் நம்மை கண்ணீரும் சிந்த வைக்கிறது. வாருங்கள் கவிஞர் படைத்த பட்டாம்பூச்சிகளுடன் சிறிது பறந்து பார்க்கலாம்.
“சிலைகளாகத்தான்வருகிறார்கள்
குழந்தைகள்!
நாம்தாம்
செதுக்குவதாய்நினைத்துச்
சிதைத்துக் கொண்டிருக்கிறோம்!”
பட்டாம்பூச்சியின் சிறகுகளை உதிர்த்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு பெற்றோருக்கும் ஆசிரியருக்குமான கவிதை. குழந்தைகளை பறக்க விடுங்கள் உயர உயர பறக்கட்டும், எதையும் வலிய திணிக்காதீர்கள் என்று பிரம்பெடுத்து பாடம் நடத்துகிறார் இக்கவிஞர்.
“ஆண் குழந்தைகள்
அஞ்சி ஓடும்
அப்பாக்களின் மீசையில்தான்
பெண் குழந்தைகள்
ஊஞ்சல் கட்டி ஆடுகிறார்கள்!”
இக்கவிதையை வாசித்த பின் ஒவ்வொரு ஆண்மகனும் பெரிய மீசை வளர்த்து முறுக்கிக் கொள்வார்கள். ஆணின் கம்பீரம் மீசை என்ற பிம்பம் உடைந்து விட்டது இக்கவிதையில்.
அப்பாவின் கட்டை மீசையும் தாத்தாவின் முறுக்கு மீசையும் கவிதையாகிப் போயிருக்கிறது கவிஞரின் கையில்.
கிறுக்காதே
கிறுக்காதே என்கிறோம்
குழந்தையிடம்!
ஒவ்வொரு புதுப்பேனாவும்
நம்மை
குழந்தையாக்குவதை மறந்து!
ஒவ்வொரு புதுப்பேனாவும் நம்மை குழந்தையாக்குவதை என்றாவது உணர்ந்திருக்கிறார்களா? இந்த கவிதை எப்போதும் உங்களை கிறுக்கிக் கொண்டேயிருக்கும் ஒரு புதுப் பேனாவாக. குழந்தைகள் கிறுக்குவது கவிதையென்றால் நீங்கள் புதுப்பேனா பிடிக்கையிலெல்லாம் கவிஞர் ஆகிவிடலாம்.
“அன்பெனும் ஆணிவேர்
அறுந்து நிற்கும்
இல்லற மரங்களை எல்லாம்
சாய்ந்து விடாமல்
தாங்கிப் பிடிக்கின்றன
குழந்தைகள் என்னும்
சல்லி வேர்கள்!”
நிச்சயம் இக்கவிதை கண்களை குளமாக்கி விட்டிருக்கும். இன்றைய வாழ்க்கைச் சூழலில் நிறைய வீடுகளில் இதுதான் என்பது மறுக்க முடியாத உண்மை. வலிமிகுந்த வரிகளைக் கொண்டு அழகாக கையாண்டிருக்கிறார் கவிஞர்.
கவித்துவமும், அழகியலும், அன்பின் உணர்வுகளும் மிகுந்த இத்தொகுப்பை வாசிக்க வாசிக்க குறும்புத்தனம் வந்து ஒட்டிக் கொள்கிறது கூடவே கொஞ்சம் வலியும். சில கவிதைகள் நம்முடன் கண்ணாமூச்சி ஆடி மகிழ்விக்கிறது. பொம்மையாக இருக்கப் பிரியப்படும் கடவுள் கவிதையாகவும் தவழ பிரியப்படுகிறார் கவிஞரின் கையில். இப்படியான கவிதை தொகுப்பை தந்திருக்கும் கவிஞர் துஷ்யந்த் சரவணராஜ் அவர்களின் கரங்களை இறுக அணைத்துக் கொள்கிறேன் நான்…
வாழ்த்துக்கள்…!
– பூ.விவேக்
நூல்: பொம்மையாக இருக்கவே பிரியப்படுகிறார் கடவுள்
ஆசிரியர் : துஷ்யந்த் சரவணராஜ்
வெற்றிமொழி வெளியீட்டகம்
விலை: ரூ.60