பிரசாரம்

ங்கேயோ ஓர் இடத்தில் பாரதி, “நாலு துணையிருந்தாலும் சுய புத்தி வேணும் பெண்ணே!” என்று பாடியிருப்பதாக ஞாபகம் வருகிறது. அதைப் போலத்தான் பிரசார விஷயத்திலும். சாதாரணமாக, மருந்துகள், வாசனைத் திரவியங்கள், தின்பண்டங்கள், சுக வாழ்வுக்குரிய ஜடப்பொருள்கள் இவைகளைப் பற்றித்தான் முக்காலும் பிரசாரம் ஆக்கிரமித்துக் கொண்டிருந்தது. ஆனால், இப்பொழுது, சற்றும் எதிர்பாராத விதமாக, ஒரு புதிய பிரசாரம் தலையெடுத்திருக்கிறது. இதைத்தான் இலக்கியப் பிரசாரம் என்று சொல்லவேண்டியிருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட எழுத்தாளரைப் பற்றியோ, ஒரு குறிப்பிட்ட புத்தகத்தைப் பற்றியோ சில பிரசுரகர்த்தர்கள் வானளாவப் புகழ்ந்து பேசுவதைப் பார்த்தால், நமக்கு ஒரு விதமான மதிப்பு ஏற்படுகிறது. வர்ண விசித்திரங்களும், எழுத்து வன்மையும் உபயோகிக்கப்படுகின்றன. நமது மதிப்பைக் கவர்ந்த சிறந்த அறிவாளிகளின் புகழுரைகள் அணிந்துரைக்கப்படுகின்றன. சில சமயங்களில், இவ்வரிய நூல்களைப் பற்றிப் படிக்காத நம்மில் பலர், சிறந்த ஆசிரியர்கள் இந்நூல்களை எழுதிய விமர்சனங்களைப் படிக்க நேர்கிறது. விமர்சனத்தின் சிறப்பை நோக்கி, நாம் வெகு ஆத்திரத்துடன் (ஆங்கில ஆசிரியர் ஒருவர் சொல்வது போல) ‘உடனே நமது சட்டையை மாட்டிக்கொண்டு’ அவசர அவசரமாக, வெகு அருகிலுள்ள ஒரு புத்தகக் கடைக்குப் போய், அப்புத்தகத்தின் ஒரு பிரதியை வாங்கிக்கொண்டு வந்து விடுகிறோம். வாங்கி வந்தவுடன் படிக்க மணியில்லாமல், ஆர அமர அனுபவிக்க விரும்புகிறோம். ஆனால், மனத் துடிப்பைப் பொறுக்க முடியாமல், படிக்க ஆரம்பிக்கிறோம்! படிக்க ஆரம்பித்ததும் ஒரு சந்தேகம் தோன்றுகிறது! படித்துக் கொண்டே போகையில் சந்தேகம் ஊர்ஜிதமாகிறது! படித்து முடித்தவுடன் ஏமாற்றந்தான் தலையெடுத்து நிற்கிறது.

என்னவோ, யாரோ நமக்குப் பின் இருந்துகொண்டு நகைப்பது போல் தோன்றுகிறது. யாருமில்லை. நமது நண்பர் முதலாளிதான் மிகவும் எக்காளத்துடன் சிரிக்கிறார்:

  “மூடனே! பணம் சம்பாதிக்க இலக்கியமும் உபயோகிக்கப்படும் என்பதை நீ இன்னும் அறிந்துகொள்ளாவிட்டால், இனியாவது அறிந்துகொள். சில சமயம், நாங்கள் உண்மையான சரக்கையும் வெளியிடுகிறோம். பல சமயங்களில், மோசமான சரக்கை மிகவும் நல்லதென்று தள்ளிவிடுவதும் உண்டு. இதைத்தான் வியாபார முறை என்கிறோம்.”

 

ஆகவே, இலக்கியப் பிரியர்களும் கொஞ்சம் கண்விழிப்புடன்தான் இருக்க வேண்டியிருக்கிறது.

——————————————————————

“பிரசாரம் என்பதற்கு அர்த்தம் கௌரவமான விளம்பரம்” என்கிறார் கட்டுரை ஆசிரியர். இது உண்மைதானா?

Previous articleநன்றாக குடி
Next articleநகுலனின் கவிமொழி
Avatar
https://ta.wikipedia.org/wiki/நகுலன்_(எழுத்தாளர்)
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments