பொதுத்தேர்வு


ந்த  யானைக்குட்டியின் பெயர், யாங்கு.  அது சொன்ன செய்தி  எல்லாரையும் திடுக்கிட வைத்தது.

“இந்த ஆண்டிலேர்ந்து, அஞ்சாம் வகுப்புக்குப் பொதுத் தேர்வு வரப் போவுதாம். முடிவே பண்ணிட்டாங்களாம்”. .

“இனிமே தெனமும், நாம விளையாடவே முடியாதுல்ல,” என்று சோகமாகக் கேட்டது, முயல்குட்டி முங்கு..

“பொதுத் தேர்வு இல்லாதப்பவே,, எங்கம்மா, எப்பப் பார்த்தாலும், படி படின்னு, படுத்துவாங்க;  இனிமே நாலாங் கிளாசிலேயே, டென்ஷன் ஆரம்பிச்சிடும்,” என்றது, கரடிக்குட்டி கங்கு.

“நாம மகிழ்ச்சியா இருந்தாலே, இந்தப் பெரிசுகளுக்குப் பொறுக்காது போல ருக்கு; இவங்கள்லாம் சின்னப்புள்ளையா இருந்தப்ப, ஜாலியா வெளையாடிட்டு தானே, வந்திருப்பாங்க?,” என்று குறைபட்டுக் கொண்டது, வரிக்குதிரை குட்டி, வங்கு..

“இந்தத் தேர்வுல, நாம பெயிலாயிட்டா, என்ன பண்றது? அதுக்கு மேல படிக்க முடியாதா?,” என்று கேட்டது, வான்கோழி வாங்கு.

“பெயிலாயிட்டா, அவ்ளோ தான்;  அதுக்கப்புறம், அப்பாம்மாவுக்கு ஒதவியா,  ஏதாவது வூட்டு வேலை பார்க்க வேண்டியது தான்,” என்று அலுத்துக் கொண்டது, நரிக்குட்டி நங்கு.

“இனிமே நாம, பூங்காவுக்கு வந்து, சேத்துத் தண்ணியில குதிக்கவே முடியாதா?” என்று அழுகிற குரலில் கேட்டது, பன்றிக்குட்டி, பங்கு.

“சனி, ஞாயிறு லீவு தானே? அப்ப வரலாம்” என்று பங்குவுக்குச் சமாதானம் சொன்னது, புலிக்குட்டி புங்கு

“நீ வேற; சனிக்கிழமை, பள்ளிக்கூடத்துலேயே, சிறப்பு வகுப்பு  வைச்சிடுவாங்க;  ஞாயிறு டியூஷனுக்குப் போகணும்; இனிமே வெளையாட்டுக்குத் தடா தான்,” என்றது, கோபமாக யாங்கு.

“நாம ஏதாவது போராட்டம் பண்ணி, இதைத் தடுத்து நிறுத்தணும்,” என்றது கொக்குக் குஞ்சு, கொங்கு..

“ஹூகும்; ஏற்கெனவே எங்கம்மா முத்தழகு, இதைத் தடுத்து நிறுத்த, ரொம்ப போராடிப் பார்த்துட்டாங்க; ஒன்னும்  நடக்கல,”  இது யாங்கு.

“அப்படீன்னா நமக்கு வேற வழியில்ல;  முடியற வரைக்கும் படிப்போம்.  பெயிலாயிட்டா, படிப்பை விட்டுட்டு, ஏதாவது வேலைக்குப் போய்ப் பொழைக்கிற வழியைப் பார்ப்போம்,” என்று சோகமாகச் சொன்னது, மான்குட்டி மாங்கு.

எல்லாம் ‘டாடா’, ‘பைபை’ சொல்லிவிட்டு, வருத்தத்துடன் பிரிந்தன.

எட்டு மாதங்கள் ஓடியதே, தெரியவில்லை.  அன்று காலை ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு நடத்தி, முடிவுகளை அறிவிக்கும் பொறுப்பைச் சிங்கராஜா, சியாவிடம் ஒப்படைத்திருந்தது.

சியா ஒரு கொரில்லா குரங்கு. அன்று காலை, சியா பள்ளிக்கு முன்கூட்டியே வந்து, தேர்வுக்கான முன்னேற்பாடுகளைச் செய்து முடித்தது.

ஒன்பது மணிக்குத் தேர்வு துவங்க வேண்டும்;  ஆனால் எட்டரை மணி வரை, யாரும் வரவில்லை; மணி. ஒன்பது அடிக்க, சில நிமிடங்கள் இருந்த போது, புங்குவின் அம்மாபுலி பூனா, வேகமாகப் பாய்ந்து வந்தது.

“என் புங்குவை, இன்னிக்கு காலையிலேர்ந்து. காணோம்; எங்கப் போச்சுன்னு தெரியலை;  எல்லா இடத்துலேயும் தேடிட்டேன்; ஒரு வேளை, இங்க வந்துருக்கான்னு பார்க்க வந்தேன்;” .

“இல்லியே! இங்க யாருமே வரலை,” என்றது, சியா..

அதற்கடுத்து, யானை முத்தழகு வந்தது. “என் யாங்கு, இங்க வந்துச்சா?”.

அடுத்து மான். “என் மாங்கு, இங்க வந்துச்சா?”

“தேர்வு எழுத வராமல், எல்லாம் சேர்ந்து, எங்கே போயிருக்கும்?’ என்று கவலையில் ஆழ்ந்தன, குட்டிகளின் பெற்றோர்.

‘யாரும் தேர்வு எழுதாம புறக்கணிக்கணும்’’ என்ற யாங்குவின்  யோசனைப்படி, எல்லாம்  அன்று விடிகாலையில், ஓர் ஆலமரத்துக்கடியில் கூடி, அங்கிருந்து  அடுத்த காட்டுக்குச் சென்றுவிட்டன.

எட்டு மாதங்களாகப் படித்து, வெறுப்புற்றிருந்த அனைத்தும், நேரம் போவது தெரியாமல், மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருந்தன.

“பாவம்; எங்கம்மா தான், என்னைக் காணோம்னு, தவிச்சிக்கிட்டிருப்பாங்க!” என்றது, மான்குட்டி மாங்கு.

“நல்லாத் தவிக்கட்டும்;  இந்த ஒரு வருஷமா, படி படின்னு நம்மளைச்  சித்ரவதை பண்ணினாங்கல்ல, இன்னிக்கு ஒரு நாள், நல்லாத் தவிக்கட்டும்,” என்றது, புலிக்குட்டி புங்கு.

தேர்வு நேரம் துவங்கியும், யாரும் வராததால், எல்லா அப்பா அம்மாக்களும், தேர்வு மையத்தின் முன், கவலையுடன் காத்திருந்தன.

“மணி பத்தாயிட்டுது;.  யாரும் தேர்வு எழுதலை;  அதனால எல்லாம் பெயிலுன்னு, சிங்க ராஜாவுக்கு, அறிக்கை அனுப்பப் போறேன்,” என்றது சியா.

“ஒரு நிமிசம்,” என்றது முத்தழகு.  “கேள்வித்தாள், யாரு தயாரிச்சான்னு நாங்க தெரிஞ்சுக்கலாமா?”

“எம்.ஏ படிச்சவங்க, நாலு பேரு சேர்ந்து, ஒரு வாரம் கஷ்டப்பட்டுத் தயாரிச்சிருக்காங்க”.

“ஒன் பேருக்குப் பின்னாடி, எம்.ஏ ன்னு போட்டிருக்கியே!  இதுல உள்ள எல்லாக் கேள்விக்கும், ஒனக்குப் பதில் தெரியுமா?” என்று நக்கலாகக் கேட்டது, முத்தழகு.

“ஏன் தெரியாது? அஞ்சாங் கிளாஸ் கேள்விக்கு, எனக்கு விடை தெரியாம இருக்குமா?”  கோபமாகக் கேட்டது, சியா..

“அப்ப ஒன்னு செய்;  ஒனக்கு ஒரு மணி நேரம் தர்றேன். நீ தேர்வு எழுது; நான் திருத்தறேன்.  நீ பாஸ் மார்க் வாங்கிட்டா, எங்கப் பசங்க எல்லாம் பெயில்னு, நாங்க ஒத்துக்கறோம்,” என்றது, முத்தழகு.

“முடியாது; நான் எதுக்கு எழுதணும்? நீ யாரு, என்னை எழுதச் சொல்ல?” ..

“எங்கப் புள்ளைங்க எல்லாரும், பாசாயிட்டாங்கன்னு, ராஜாக்கிட்ட அறிக்கை அனுப்பனும்; இல்லேன்னா, நீ  தேர்வை எழுதணும்;.  ரெண்டுல ஒன்னு பண்ணனும்.  நீங்க எல்லாரும் என்ன சொல்றீங்க?” என்று கூட்டத்தைப் பார்த்துக் கேட்டது, முத்தழகு.

“ஆமாம். ஆமாம். முத்தழகு சொல்றது சரி.  அதுவும் நெறையாப் படிச்சிருக்கு. அது சொல்ற மாதிரி, நீ பாஸ் மார்க் வாங்கிக் காட்டணும்; இல்லேன்னா, எங்கப் புள்ளைங்க எல்லாம், பாஸுன்னு சொல்லணும்”;  என்று கூட்டம், ஆக்ரோஷமாகக்  கோஷமிட்டது.

“சரி. சரி. சத்தம் போடாதீங்க. எல்லாரும் பாஸுன்னு, சிங்க ராஜாக்கிட்ட அறிக்கை அனுப்பிடறேன்,” என்று பின்வாங்கியது, சியா..

“அப்படிச் சொல்லு,”  என்று எல்லா விலங்குகளும், முத்தழகுக்கு நன்றி சொல்லிவிட்டு, மகிழ்ச்சியாகக் கிளம்பின.

“சியா பாஸ் மார்க் வாங்கிக் காட்டியிருந்தா, அப்ப என்ன பண்ணியிருப்பே?” என்று திரும்பும் வழியில், முத்தழகுவிடம் கேட்டது, பூனா.

“அவனால முடியாதுன்னு, எனக்கு நல்லாத் தெரியும்; அவன் என் கூடத்தான் படிச்சான்;  அஞ்சாவதுல பெயிலு.  இப்ப மந்திரி ஆனப்புறம், எம்,ஏ ன்னு, சும்மா ஒரு பட்டத்தைப் போட்டுக்கிட்டு அலையுறான்,” என்றது முத்தழகு.

‘எல்லாரும் பாஸ்; இனிமேல் ஐந்தாம் வகுப்புக்குப் பொதுத்தேர்வு கிடையாது,’ என்ற சியாவின் அறிவிப்பைக் கேட்டுவிட்டு, எல்லாக் குட்டிகளும், மகிழ்ச்சியாக அன்று மாலை, வீட்டுக்குத் திரும்பின.


  • ஞா.கலையரசி

8 COMMENTS

  1. மிகவும் ரசித்தேன். இன்றைய நாட்டு நடப்பையும் குழந்தைகளின் மனநிலையையும் ஒரு சேர கதையில் காட்டியவிதம் மிகவும் அருமை.

  2. பொதுத்தேர்வு கதை படித்தேன். இன்றைய நிகழ்விலிருந்து எழுந்துள்ள கற்பனை. போராட்டம் எல்லாம் குழந்தை களுக்கு தோன்றுமா என்று தெரியவில்லை. முத்தழகு சியா இடையேயான விவாதம் சிறார் உலகோடு தொடர்பு உடையதா தெரியவில்லை. சிறார் உலகை சிறார் மன நிலையிலிருந்து படைத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும்…. வாழ்த்துக்கள்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.