குலாபிகளாகும் வரை நீட்டி எழுதப்பட்ட நான்கள்

முஸ்தீபு: நானின் கற்பிதம் உடையும் போது நாமனைவரும் அல்பைகள் ஆகிறோம்
அது ஒரு ஆனந்தக் களி நடனம்தான்.

நான் பேசிக்கொண்டிருக்கிறேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
நான் பேசிக் கொண்டிருந்தேன்
அவன் கேட்டுக் கொண்டிருக்கிறான்
அவன் பேச ஆரம்பித்தான்
எனக்கு பதற்றம் தொற்றிக்கொண்டது
நான் கோவமாய் தாண்டவத் தொணியில் பேசினேன்
அவன் திரும்பவும் மௌனித்து கேட்க ஆரம்பித்துவிட்டான்
நானோ திடீரென காலி ஆனவனாய்
சோர்வு மேலிட கிளம்பிவிட்டேன்.
ஆனால் அவனோ இன்னும் என்னைக் கேட்டபடிதான் இருந்தான்.

***

எனக்கு சந்தேகம் வருகிறது
அவன் கேட்டுக் கொண்டிருந்தது
என் பேச்சையா இல்லை என் மௌனத்தையா
நான் அவனையே கேட்டிருக்கலாம்
ஆனால் அவனைக் கேட்பது என்பது
எனக்குக் கிஞ்சித்தும் பிடிப்பதில்லை;
அவன் என்பது நான்தான் என்பதிலிருந்தே
இவ் ஒவ்வாமை என்னை பீடிக்கத் தொடங்கிவிட்டது.

***
நான் செல்கையில் அவன் என்னைப் பின் தொடர்ந்தான்..
அவன் செல்லும் போது நான் அவனைத் தொடர்வது என்பது
எனக்கு விதிக்கப்பட்டுவிட்டது.
விதிக்கப்பட்டதிலிருந்து எப்படி வெளியேறுவது
நான் அவனில்லை என்று சொல்லிப்பார்த்தேன்
கொஞ்சபேர் நம்பிவிட்டார்கள்
கொஞ்சபேருக்காக வாழும் இவ்வாழ்க்கைக்கு
இதுபோதாதா என்ன?

***

நான் ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன்
அவன் ஒரு வாழ்க்கை வாழ்ந்தேன்
இவனும் ஒரு வாழ்க்கை வாழ்ந்திருக்கிறான்
எவனுமே ஒரு வாழ்க்கை வாழ்ந்தாக வேண்டியதுதான் என்கையில்,
அவன் இவன் எவன் ஆகியோர் வாழும் வாழ்க்கையைப்
நான் சந்தைக்குக் கொண்டு சென்று, கூவி விற்றேன்
கொள்வாரற்ற அதை ஒரு வறிய நாய் மட்டும் பெரிதும் மதித்து
தன் காலால் வானமளந்து மூத்திரம் இருத்துவிட்டுச் சென்றது…

***
நான் நேற்று வெளிர்நிறத்தில் இருந்தேன்
அவளோ வெளிறிப்போயிருந்தாள்
நான் இன்று கொஞ்சம் கருத்துப் போயிருக்கிறேன்
அவள் கண்களின் ஈர்ப்பு என்னைக் காவு கொள்ளக் காத்திருக்கிறது
நாளை நான் எந்த நிறத்தில் இருக்கும் என அறிய ஆவலாய் இருக்கிறேன்
நிச்சயம் நாளையும் அவர்களுடைய சந்திப்பு நடந்தேறுமென்று நினைக்கிறீர்களா?
அப்படியானால் இந்தக் கனவைத் தொடர்ந்து
எத்தனை நாட்கள்தான் நான் காண வேண்டும் தோழர்?

***
அவளும் அவனும் விளையாடிக்கொண்டிருந்தார்கள்
ஆவலோடு நான் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்தேன்
அவர்கள் வெடுக்கென்று என் வேடிக்கையைப் பறித்துக் கொண்டார்கள்
நான் வெறுமையோடு பார்த்துக் கொண்டிருந்தேன்
அவர்கள் பாவம் அவன் என்று
எனக்காக வேடிக்கைக் காட்ட ஆரம்பித்தார்கள்
நானோ பாவம் இவர்கள் என்று ஒரு இரண்டு ரூபாயை
எடுத்து வீசிவிட்டுக் கிளம்பினேன்.

***
இரண்டு நாட்களுக்கு முன்பு நான்’ஐ கடைத் தெருவில் சந்தித்தேன்
அது நான் யாருடைய ‘நான்’ என்று கேட்டுக் கொண்டிருந்தது
அந்த நான் நான்தான் என்பதை இவ்வஞ்சக் கவிதைச் சொல்லி
சொல்லும் போது அவன் குரல்வளை நீங்கள் அறுத்துவிடுங்கள்

**
ஒரு நாளில் நான் மூன்று வேளை சாப்பிடும் வழக்கம் கொண்டது
ஒரு நாளில் நான் மூன்று வேளை சாப்பிடும் வழக்கம் கொண்டவன்
ஒரு நாளில் அவனுடைய நான் மூன்று வேளை மூச்சா இருக்கும்
ஒரு நாளில் இவனுடைய நான் மூன்று வேளை கக்கா போகும் வாய்ப்பில்லை
(ஏனெனில் அது அந்த அளவு பலவீனமான நான் என்று அதை நான் கருதவில்லை)
ஒரு நாளில் எவனுடைய நான் மூன்று வேளை தூங்கும் என்பது பற்றிய புள்ளிவிவரம் தற்போதைக்கு என்னிடம் இல்லை.
ஒரு நாளில் பல வேளை புணரும் ஓர் நானைத் தேடி நான் சென்று கொண்டிருக்கிறேன்.
இதனால் ஒரு நாளில் பல வேளை மடியக் காத்திருக்கும் ஒரு நானாக நான் இருப்பேன் என்பதை நீங்கள் கணித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

***
கழுதை மேல் நான் குதிரை சவாரி செய்து கொண்டிருந்தது
நான் குதிரை மேல் ஏறி கழுதை சவாரி செய்து கொண்டிருந்தேன்
அவன் ஆனை மேல் ஏறியபடி
இந்தக் காண்டாமிருகக்திற்குக் கொம்பில்லை என்றான்
இவனோ பூனை மேல் ஏறியபடி
இந்தப் புலி ஏன் இவ்வளவு சாதுவாய் இருக்கிறது என்றான்
இஃதொரு படுகளக் காட்சி என்பதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள் என்பதை ஊர்ஜிதமாக நான் நம்புகிறேன்
என்பதற்காகவாவது அந்த ஆம்புலன்ஸைக் கொஞ்சம் அழைத்து வாருங்கள் ப்ளீஸ்!

**
நான்களில் சடலங்கள் அங்கு குவிந்து கிடந்தன
சடலங்களின் நான்கள் அங்கே இரைந்து கிடந்தன
நான்கள் பல நடந்து சென்றுகொண்டிருந்தன
நான்கள் பல அங்கேயே ஊர்ந்து கொண்டிருந்தன
நான்கள் பல அங்கும் இங்கும் தாவிக்கொண்டிருந்தன
நான்கள் பல அங்கிங்கெனதாபடி பறக்க ஆசைப்பட்டன
நான்கள் மிதந்து கொண்டிருக்க அதன் இறகுகள் உதிர்ந்துகொண்டிருந்தன
இறகுகள் உதிர்ந்தவை நிச்சயம் நடக்க வேண்டியதுதான்
நான்கள் நீந்திக் கொண்டிருந்தன
இது என்னடா இது வேலையத்த வேலை என்று
சில நான்கள் செத்துக் கொண்டிருந்தன
அவற்றில் சில நான்கள் பற்றிய தலைப்புச் செய்தி இடம்பெற்ற
முதலிரு வரிகளைக் கடந்துதான் இங்கு வந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்
வாருங்கள் ஒரு மிடறு மது அருந்துவிட்டு ஒரு மில்க் சேக் குடிக்கலாம்!

**
எட்டு அடிதான் இருக்கும் எனக்கும் நானுக்கும்
எட்டிய படி இருக்கிறேன் நானும் அவனும்
எட்டுந் தொலைவில் இல்லை என்பது
அவளுக்கு இருக்கும் அவன் குறித்த வருத்தம்
எட்டுந் தொலைவிலேயே இருந்து தொலைக்கிறோம் என்பது பற்றிய
வருத்தம் எப்போதும் இருந்து தொலைக்கிறது
இவனுக்கு அவள் குறித்து
அவன், அவள், நான் கொஞ்ச நேரம்
கண்ணா மூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறோம்
அதில் தொலைந்து போனவர்களைக் கண்டுபிடிப்பவர்கள்
அவற்றை இந்தக் கவிதையில் கொண்டுவந்து
இரக்கமற்ற முறையில் கட்டிப்போடவும்!

**
அவன் நானுக்கு பால்கோவா பிடிக்கும்
இவன் நானுக்கு ஜிலோபி பிடிக்கும்
எவன் நானுக்கு குலாபி பிடிக்கும் என்று கையை உயர்த்தச் சொன்னபோது
அவள் நான் கொஞ்சமே கொஞ்சம் வெட்கிப்பார்த்தது
அந்தக் கருமம் அதற்கு வரவில்லை
உடனே அது ஐஸ்க்ரீம் சாப்பிட ஆரம்பித்தது
அவளோ குலாபி சூடிக் கொண்டிருந்தாள்

**
குலாபிக்காரன் நான் செத்தது என்றது ஒரு நான்
குலாபிக்காரன் நானுக்கு வாழ்வுதான் என்றது ஒரு நான்
குலாபிக்காரன் நான் செத்து செத்து விளையாடிருக்கும் என்றது ஒரு நான்
நானோ குலாபிக்காரனாய் ஒருநாள் ஆச்சும் இருந்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் கொண்டலைந்தேன்;
முடிவில், என் நான் அவன் நானின் உறுப்பைத் தன் வாயிட்டுப் புசித்தது;
அதுவோ ப்ளேவரற்ற ஐஸ்கிரீம் போல் இருந்தது.
**
ஒரு குலாபி ரசிகனை நீங்கள் சந்திக்க நேர்ந்தால்
அவன் குணத்தை மட்டும் வைத்து குலாபி ரசிகர்களை அனுமானித்துவிடக்கூடாது;
குலாபி ரசிகர்கள் பல விதம் ஆக அவர்கள் ஒவ்வொருவரும் ஒருவிதமாக இருக்க வாய்ப்புண்டு
அல்லது இல்லை அவர்கள் இருவிதமாகவும், முவ்விதமாகவும், நால்விதமாகவும், விதவிதமாகவும்,
வித்யாசமாகவும் இருக்கவும் வாய்ப்புண்டு
குலாபிகளின் வித்யாசங்களைப் போலவே.

**
அவள் அணிந்து வந்த குலாபியை அவன் புசித்துப் பார்த்தான்;
அவள் அவன் குலாபியை விரல்களால் வருடினாள்;
குலாபிகள் இரண்டு கொஞ்சிக் கொண்டன;
குலாபிகள் இரண்டும் பேசிக்கொண்டன; குலாபிகள் இரண்டும் ஓடிப்போயின;
இவர்களின் நான்கள் மட்டும் ஊருக்குள் ஒய்யாரமாய் நடந்துவந்தன.

**
இந்த நான்களாவது வேறு நான்களாக இருக்க வேண்டும் என வேண்டிக்கொண்டு இக்கவிதையை இத்துடன் முடித்துக்கொள்கிறேன். நன்றி. நானக்கம்.


-றாம் சந்தோஷ்

1 COMMENT

  1. Onnume puriyala..kavithai nalla irunthu nu than ninaikiren..but enaku atha purinjikira alavu arivu illa nu ninaikiren

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.