Monday, Aug 8, 2022
Homeபடைப்புகள்கவிதைகள்அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது

அதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது

முதுமை அடைந்த பிறகே மரணிக்க வேண்டும்
என்று என் தாய் சத்தியம் வாங்கியிருந்தாள்.
எப்போதும் சொல்பேச்சு
கேட்காத குழந்தை நான்
இதோ முயல்களை வேட்டையாடித் திரிந்த
குளிர் நிலத்தில் சுடப்பட்டு கிடக்கிறேன்
“காப்பிச் செடிக்கு உரமிட வேண்டும்
சின்னவனே உன் வேட்டைக்கத்தியை
எறிந்துவிட்டு வா”
அக்கக்கா குருவிகளின் கீச்சொலி சப்தங்களுடன்
தாயின் குரல் மலைகளில் எதிரொலிக்கிறது.

அம்மாவின் கருவறைக்கு தூரமாகிவிட்ட
பிள்ளையின் மரணம் எவ்விதமும் நிகழலாம்
நான் மல்லாந்து கிடக்கிறேன்
எப்போம்தையும்விட தெளிந்து கிடக்கிறது
பழுத்த கொய்யாவாய் வானம்
தலைக்கருகே புற்களை மேய்ந்துகொண்டிருக்கிறது பசுங்கன்னுக்குட்டி
தூசி கிளம்பாத காற்று
நித்ய அமைதி
நிம்மதி
மரணத்தைவிட தூய்மையானது ஒன்றில்லை
அது மரணித்த பிறகே தெரிகிறது
ஆகா! காற்றில் வருகிறது பலாப்பழ வாசனை
என்னைச் சுட்டவனின் கைகளை
முத்தமிட விரும்புகிறேன்.

போலீஸ்காரர்களின்
குளம்பொலிகளைக் கேட்கிறேன்
பூட்ஸ்கால்களில் தேக்கிலைகள் சரசரக்கிறது
பாவம் அவனுக்கு பசித்துவிட்டதுபோல
ஒரு கொய்யாவை பறித்து தின்கிறான்
இன்னும் ஐந்தெட்டு பின்னகர்ந்தால்
கண்டுபிடித்திருப்பான்
கொய்யா மரத்திற்கு பின்னால்தான்
கிடக்கிறேன்
சிறுவர்களாக ஓடித்திரிந்தபோது
“கண்கட்டு வித்தைக்காரன் நீ உனை
கண்டுபிடிக்கவே முடியாதென்று”
அண்ணன் விளையாட வரமறுப்பான்.

நான் இறந்து கிடக்கும் இடத்திலிருந்து ஒரு
நீருற்று கிளம்புகிறது
கோடையில் நாங்கள் அதை
தேடிக்கொண்டிருப்போம்
வீட்டில் நீர் நிரப்புவது தங்கையின் வேலை
அவள் முடியாதென்று அழுவாள்
சீழ்க்கையொலியோடு நீர் நிரம்பிய இரண்டு
குடங்களை வீட்டு வாசலில் வைக்கும்போது
தங்கையின் முகம் மலரும்
நீருற்று பரிந்துகொண்டிருக்கிறது
உடல் குளிர்கிறது
கொஞ்சம் நகரவேண்டும்
இறந்தவுடன் உடலை எப்படி
நகர்த்திக்கொள்வது என்ற பாடத்தை
ஒருநாளும் நான் கற்றுக்கொள்ளவில்லை.

நாடோடியாய் புத்தகங்களோடு
மலையிறங்கிப்போய்விட விரும்பினேன்
ஆனால் எனக்கு நிலத்தின் பாடல் ஊட்டப்பட்டது
“நிலமற்றவனாய் சாகக்கூடாது மகனே”
என்றார் தந்தை
என் சகாக்கள் செந்நிறத் துண்டினை
பரிசளித்தார்கள்
நிலம் எங்கள் உரிமை என்றோம்
அது ஒளிமிக்கதொரு வாழ்வு.

எதைக்கண்டு மிரள்கிறாய்
மலை பொழியும் இந்தக் குளிரைக் கண்டா
இதற்கு முன்பும் இந்த மஞ்சி
மூட்டத்திற்குள்தான் வாழ்ந்தோம்
மூடுபனியை உறிஞ்சியபடி அடுப்பின்
கதகதப்பில் வெப்பமானோம்
கரடி உற்றுநோக்கி வெறித்தபோதும்
அதன் கண்களை பார்த்தபடி
நாம் இங்குதான் இருந்தோம்
இங்குதான் நம் வாழ்விருந்தது
பசுங்கொடியில் மினுங்கிய
மிளகுகள்தான் பசியாற்றியது
அதன் நறுமணத்தை ருசித்தபடியே
மீதிவாழ்வும் முடிந்திருக்கும்
அவர்கள் மிளகுக்கொடிகளை அறுத்தெறிந்து
வீடுகளை இடித்துவிட்டனர்
எம்மக்கள் இந்நேரம்
சமவெளிக்கு போயிருப்பார்கள்
என் அருமை ஆன்மாவே
உடலும் நீயும் வேறு வேறு
அதைவிட்டு நீ ஏன் போக மறுக்கிறாய்
கனவுகள்கூட மிஞ்சாத வெற்றுடலே இது
இவ்விடம் வெறும் கடந்தகாலம்தான்
யாத்ரீகனைப்போல வெளியேறு.

காட்டோடையில் நீரோடும் சப்தம்
குறுகுறுவென இளம்பருவத்தில் நுழைகிறது
நீலநிறத் தட்டான்களை அவளுக்கு பிடிக்கும்
அவை எங்கள் தலைக்கு மேலே
பறந்தோடியபோதுதான் எனக்கு முத்தமிட்டாள்
ரோஜா செடிகளை அவளுக்கு
பதியமிட்டு தந்தபோது சமவெளியைவிட்டு
என்னோடு மலையேறினாள்
நாளையோ நாளை மறுநாளோ காடெங்கும்
எனைத் தேடியபடி அம்முத்தத்தை
நினைவு கொள்வாள்.

இப்போது மகிழ்வுடன்
நினைத்துக்கொள்கிறேன்
முன்னம் ஒருநாள் இங்கிருந்தேன்
இளம் வெயிலில் மாடுகளை மேய்த்தபடி
புத்தகங்களை வாசித்தேன்
பறவைகளின் சத்தங்களோடு
பாடல்களை கேட்டிருக்கிறேன்
முதுவேனிற் கால வானத்தின் நீலநிறம்
கண்களில் நிரம்பி இருக்கிறது
என்தாய் மீன்துண்டுகளை
பதமாக வறுத்துக்கொடுப்பாள்
இன்று ஒருவரும் அறியாது இங்கிருக்கிறேன்
எப்போதும் காணாத மலையின் காட்சியை
கண்டபடி வெண்மேகம் ஒன்று கீழிறங்கி
என் தலை தடவிச் செல்கிறது.

சூரியன்
மேற்கு மலைக்கு கீழே மறைகிறது
இருள்சூழும் காட்டிற்கு
குளிர்ந்த பனியே துணை
இனி அவர்கள் என்னைத்தேடி வரமாட்டார்கள்
தனித்துவிடப்பட்ட உடலின் அருகே ஓநாயாக
காவலிருக்கிறது என் ஆன்மா
அதை விரட்டுகிறேன்
அது நகர்ந்து சென்றால்
எச்சில் ஒழுக காத்திருக்கும் பசித்த புலிக்கு
என் உடலை தானமிடலாம்

மரணத்தைப் போன்ற உண்மை
உலகில் வேறெதுவுமில்லை
நாளை என் தாய் அதன் காலடியில்
கிடந்து கதறினாலும்
என்னை விட்டு அகலாது
உன்னைத்தவிர என் ஆசைகளைச் சொல்ல
பொருத்தமானவர் எவருமில்லை
கிழக்கு மலையில் தீ
எரிந்துகொண்டிருக்கிறது
வெகுநாள்களாக அதன் உச்சியை
அடைய விரும்பினேன்
என் உயிரே
என் மரணமே
என் அன்பே
என் ஆன்மாவே
தீயில் கருகிவிடாமல் அவ்விடம்
சென்றுபார்த்து திரும்பிவா.

இழுத்துச் செல்லப்படுகிறது என் உடல்
கொஞ்சம் பதமற்ற இழுவைதான்
பரவாயில்லை பிரேத பரிசோதனைக்
கத்திகள் சதையை கூறுபோட,
வீச்சமெடுத்து என் உடல் கருகுவதைவிட
புலியின் நாக்கிற்கு
சுவையாகவே விரும்புகிறேன்
கடைசியாக நதியின் தெளிந்த நீரில்
என் உடலைக் காண்கிறேன்
அதுவொரு உருண்ட
சுரைக்குடுவையைப் போலிருந்தது.


-சந்திரா தங்கராஜ்

பகிர்:
Latest comments

leave a comment

error: Content is protected !!