செல்வசங்கரன் கவிதைகள்

  • பாவனை

வெறும் விரல்களை வைத்து சிகரெட் குடிப்பது போல பாவனை செய்ய
விரல்களும் என் பாவனைக்கு இணங்கி
வாய் வரை வந்து போய்க்கொண்டிருந்தது.
வாயைக் குவித்தால் தான் சிகரெட் பிடிக்கிறோமென்றே அர்த்தம்.
உள்ளே சொன்னேன்.
வெளியே வாய் வந்து குவிந்து கொண்டது.
அடுத்து நாம் தானெனப் புரிந்து குபு குபுவென வெளியேறி
புகை காற்றின் நாலாப் பக்கமும் கரைந்தது .
ஒரே புகை மூட்டமென அங்கிருந்தவர்கள் எனக்கு ஜால்ரா அடித்தனர்
சிறு குழந்தைகளின் முகங்களைப் பெரியவர்கள் தமது வயிறுகளுக்குள்
புதைத்துக் கொண்டனர் .
சிகரெட் உடம்பிற்கு கெடுதல் இல்லையா தம்பி என்று
ஒரு பெரியவர் கனிவான குரலில் வந்து கூறினார்.
அதற்குள் நெருப்பு எனது விரல் வரைக்கும் வந்து விட்டது.
சுடுவதற்குள்ளாக கையை வேகமாக உதறியதில் சிகரெட் கீழே விழ
சிகரெட் நெருப்பை காலால் மிதித்துத் தேய்ப்பது போல பாவனை செய்த
எனக்கு அங்கு நடந்த எல்லாமே ஆச்சர்யமாக இருந்தது.
வாழ்வது போல பாவனை செய்து வருகிறோம் என்ற
ஒரு மனக்குறிப்பு கொண்டவர்கள்
ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ஒரே விசயத்திற்குள் வந்து
கூடியிருக்கிறார்களென்று அப்புறம் தான் தெரிந்தது.


  • மன்னித்து விடுங்கள் ராஜா

நாம் நினைத்த இடத்திற்கெல்லாம் இளையராஜா வரமாட்டார்.
இளையராஜா எங்கு கூட்டிப் போகிறாரோ அங்கே தான்
நாம் போகவேண்டும்.
அவருக்கு அப்படியென்ன செருக்கு
அதனால் தான் அவரை குண்டுக்கட்டாக தூக்க முடிவெடுத்தேன்.
அப்பொழுது இளையராஜா பான்பராக் மென்று கொண்டிருந்தார்
என்ன அவசரம்… துப்பிவிட்டு வருகிறேன் என்றார்.
அவரது ரசிக கோடிகள் இளையராஜா ஹிட்ஸ் லயிப்பில் கிடந்தனர்
நான் கூறியது தெரிந்திருந்தால் என்னை வெட்டிக் கூறு போட்டிருப்பர்.
எப்படியாவது இதை மறைக்க வேண்டும்
வாய் கழுவுவதற்கு வேகவேகமாக ஒரு குவளை மொண்டு வர
என்னைக் கோபமாகப் பார்த்து பித்தளைக் குவளையை புறங்கையால்
தட்டிவிட்டார்.
அவர் இளையராஜா எது வேண்டுமானாலும் செய்வார்.
இப்பொழுது உருகுகிற மனநிலையில் இல்லை என்றால் கூட
வைத்து உருக்காமல் விடமாட்டார் .
விபத்திற்குள்ளாகிக் கிடக்கும் பேருந்து அங்கும் ஒருவரைப்
பிசைந்து கொண்டிருப்பார்
கொஞ்சங் கூட இங்கிதம் தெரியாத மனிதர்
இங்கு தானே கார்த்திக் வசீகரித்துக் கொண்டிருந்தார்.
இங்கு தானே ரேவதி குத்தலாகப் பேசினார்.
இங்கெல்லாம் தானே மௌன ராகத்தின் ஹைலைட்டான பிஜிஎம் என
மணிரத்னம் படத்தில் வரும் காஸ்மோபாலிடன் நகர வீதிகளில்
என்னை ஏமாற்றியவர் தானே இந்த இளையராஜா
மனுஷன் என்னையே பார்த்தபடி இருந்தார்.
இப்படித் தான் அவரைப் பக்கத்திலிருந்து பார்க்க வேண்டுமென்ற ஆசை
வேறென்ன பெரிய மயிரு காரணங்கள்
அவரது வாயில் இன்னும் பான் பராக் மணம் அடித்தது.
இப்பொழுது இதைச் சொல்லாமல் இருக்க முடியவில்லை
மன்னித்து விடுங்கள் ராஜா
பான்பராக் சுகம் இளையராஜாவை என்ன செய்ய முடியும்
இப்படிச் சில்லரைச் சங்காத்தங்களைஅடித்து காலி செய்யும்
ஒன்றுக்காகத் தான்
நாற்பது ஆண்டுகளாக நம்மை இப்படிப் பிழிந்து கொண்டிருக்கிறார்
வேறு எதற்காக அவர் இப்படி இசைக்க வேண்டும்.


– செல்வசங்கரன்

Previous articleஜீவன் பென்னி கவிதைகள்
Next articleஅதுவொரு உருண்ட சுரைக்குடுவையைப் போலிருந்தது
Avatar
கனலி - கலை இலக்கியச் சூழலியல் இணையதளம். www.kanali.in
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments