இந்தியா சுதந்திரத்துக்குப் பிறகு பிரச்சினைக்கு வழிவகுத்த பல வருடங்களிலிருந்து இந்துத்துவாவைத் தோற்கடிப்பதற்கான படிப்பினைகள்! மூலம்: ராமசந்திர குஹா

இந்து மனம் அதன் மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் பன்மைத்துவ கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொண்டு அதன் சமநிலையை மீட்டெடுக்க முடியுமா?

1947 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30 ஆம் தேதியிட்ட ஹரிஜன் என்கிற இதழ் ஓர் ஆங்கிலேயப் பெண்ணாக இருந்து இந்தியாவைத் தனது நாடாக வரித்துக்கொண்டு இந்தியப் பெண்ணாக மாறிய ஒருவர் அந்நாட்டு மக்களுக்கே விடுத்த வேண்டுகோளை அச்சிட்டிருந்தது. அதில்  “இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு தொலைந்துபோய் அலைந்து திரிபவளாக இருந்த நான் என் ஆன்மாவின் அகத்தை இந்தியாவில் மீட்டெடுத்தேன். இந்தியாவில், அதன் வரலாற்றின் காலங்கள் ஆன்மீக மகத்துவத்தின் காவியங்களில் மீண்டும் மீண்டும் வருகின்றன. எல்லையற்ற உத்வேகத்துடனும் உற்சாகத்துடனும் போரினால் பாதிக்கப்பட்ட, மூழ்கிக் கொண்டிருந்த உலகத்தில் கண்முன் விரிந்து கொண்டிருந்த நம்பிக்கை ஒளியில் மூழ்கினேன். பாபுவிடம் (Bapu) நான் வழிகாட்டும் நட்சத்திரத்தையும்; இந்து மதத்தில் சத்தியத்தையும்; இந்தியாவில் தாயையும்.” கண்டேன் எனக் குறிப்பிட்டிருந்தவர் மேலும், “இருபத்தி இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தன் சொந்தக் குழந்தைகளால் அம்மாவின் மார்பகங்கள் கிழிக்கப்பட்டு அதனால் ஏற்பட்ட காயங்களிலிருந்து இரத்தம் சிந்துவதை நான் பார்க்க வேண்டும் என்பதையும், தங்களை இந்துக்கள் என்று அழைத்துக் கொள்ளும் மக்களால் சத்தியம் மிதிக்கப்படும் என்பதையும் நான் எதிர்பார்க்கவில்லை” எனவும் குறிப்பிட்டிருந்தார்.

இப்படி வேதனையடைந்த இந்தியர் மீரா பென். இவர் 1925 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் காந்தியுடன் இணைந்து பணியாற்ற வந்த பிரிட்டிஷ் அட்மிரல் ஒருவரின் மகள் ஆவார். அவர் தனது ‘பாபு’வுடன் அவரது சபர்மதி மற்றும் சேவாகிராம் ஆசிரமங்களில் வசித்து வந்தார், இந்தியாவின் சுதந்திரத்துக்காகப் பிரிட்டனிலும் அமெரிக்காவிலும் பேச்சுப் பயணங்களை மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார், மேலும் தனது தத்தெடுக்கப்பட்ட நாட்டின் நன்மைக்காக நீண்ட காலத்தைச் சிறையில் கழித்தார். தீண்டாமை ஒழிப்பு, காதியை ஊக்குவித்தல் மற்றும் இந்து-முஸ்லிம் நல்லிணக்கத்தைப் பின்தொடர்தல் ஆகிய காந்திய கொள்கைகளின் கோட்பாட்டிலும், நடைமுறையிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார்.

மீரா எழுதிய வேண்டுகோள் குறிப்பாக இந்த இலட்சியங்கள் நீடித்திருப்பதற்காக  எழுதப்பட்டது. துணைக்கண்டத்தின் பிரிவினைக்கு முன்னும் பின்னும் தொடர்ச்சியான இரத்தக்களரியான கலவரங்கள் நிகழ்ந்தன, இதில் இந்துக்கள், முஸ்லிம்கள் மற்றும் சீக்கியர்கள் அனைவரும் பாதிக்கப்பட்டதோடு குற்றவாளிகளாகவும் ஆனார்கள். மீராவின் வழிகாட்டியான காந்தி, வன்முறையைத் தடுக்க வீரத்துடன் உழைத்தார். செப்டம்பர் மாதம் கல்கத்தாவை அமைதிப்படுத்துவதில் வெற்றிபெற்ற பிறகு ஆபத்தான நிலையிலிருந்த  டெல்லிக்கு அவர் சென்றார், பிரிவினையால் அகதிகள் ஆன இந்துக்களும் சீக்கியர்களும் டெல்லியில் இன்னும் வாழ்ந்த முஸ்லிம்களுக்கு எதிராகப் பழிவாங்க முயன்றனர்.

வட இந்தியாவில் சிறுபான்மை முஸ்லிம்களின் பாதுகாப்பை மீட்டெடுக்க முடிந்த பிறகு எல்லையைத் தாண்டி பாகிஸ்தானில் இன்னும் தங்கியுள்ள இந்துக்கள் மற்றும் சீக்கியர்களின் பாதுகாப்பை உறுதிசெய்யப் பணியாற்ற வேண்டும் என்பது காந்தியின் நம்பிக்கையாக இருந்தது.

இருப்பினும், டெல்லியிலும் அதன் சுற்றுப்புறங்களிலும் அமைதியை மீட்டெடுப்பது காந்தி எதிர்பார்த்ததை விட மிகவும் கடினமாக இருந்தது. ஏற்கனவே கோபமடைந்திருந்த இந்து மற்றும் சீக்கிய அகதிகளின் உணர்வுகளை இந்து மகாசபா, ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கம் போன்ற தீவிரவாத அமைப்புகள் மேலும் தூண்டிவிட்டன. இந்தியாவிலேயே வாழ்வது எனத் தெரிவு செய்திருந்த முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுவதில் அவை தீவிரமாக ஈடுபட்டிருந்தன.

1947 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 24 ஆம் தேதியிட்ட தில்லி காவல்துறை அறிக்கை ஆர்எஸ்எஸ்-ன் திட்டங்களைப் பற்றிக் கூறியது: “சங்கத் தொண்டர்களின் கூற்றுப்படி, டெல்லியில் எப்போதோ தொடங்கப்பட்டதைப் போன்ற மற்றொரு இயக்கம் முஸ்லீம்களை அழித்தொழிக்கும் போதுதான் அவர்கள் இந்தியாவை விட்டு வெளியேறுவார்கள்….. மகாத்மா டெல்லியில் இருக்கும் வரை, சங்கத்தினரால் தங்கள் திட்டங்களைச் செயல்படுத்த முடியாது என்று அவர்கள் நம்பியதால், டெல்லியிலிருந்து மகாத்மா காந்தியின் புறப்பாடுக்காக அவர்கள் காத்திருந்தனர்.”

1947 ஆம் ஆண்டு நவம்பர் 15 ஆம் தேதியிட்ட ஒரு புலனாய்வுப் பணியக அறிக்கை, “ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங்கத்தின் தொழிலாளர்கள், குறிப்பாக மேற்கு பஞ்சாபிலிருந்து அகதிகளாக வருபவர்கள், தீபாவளி பண்டிகைக்குப் பிறகு டெல்லியில் வகுப்புவாத பிரச்சனையைத் தொடங்க விரும்புகிறார்கள். டெல்லியில் முஸ்லீம்கள் நடமாடுவதை அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை என்கிறார்கள்…” எனக் கூறியது.

‘இருண்ட படுகுழி’

1947 ஆம் ஆண்டு அக்டோபர், நவம்பர் மாதங்களில் மீரா டெல்லியில் வசித்து வருகையில் இந்த வெறுப்பு நிறைந்த சித்தாந்தம் அதிகமான இந்துக்களின் மனதில் வேரூன்றுவதைத் திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தார். இதற்கு ஏதாவது செய்ய வேண்டுமெனத் தூண்டப்பட்ட அவர் பொதுவாக இந்தியர்களுக்கும் குறிப்பாக இந்துக்களுக்கும் தனது வேண்டுகோளை விடுத்தார். “இதற்காகவா நாம் நமது சுதந்திரத்தைப் பெற்றோம்?” எனக் கேட்டதோடு அவர், “இது ஒளியின் நிலமாக இல்லாமல் இருளின் நிலமாக இருக்க வேண்டுமா?” எனவும் கேட்டார்

தங்களை ‘இந்துக்கள்’ என்று சொல்லிக்கொள்ளும் இந்த மத அடிப்படைவாதிகளின் இறுதி ஆட்டம் என்ன? அவர்கள் வெற்றி பெற்றால் எப்படிப்பட்ட நாட்டை உருவாக்குவார்கள்? இந்து தீவிரவாதிகள் கனவு கண்ட இந்தியா “சுய பாணியிலான, உயர்ந்த இன மக்களால் ஆளப்படுவதோடு உண்மையான இந்து மதத்தின் ஆன்மீகச் சகிப்புத்தன்மைக்கு மறுப்பாக இருக்கும். அனைத்து முஸ்லீம்களும் தங்கள் மூதாதையர் வீடுகளிலிருந்து இரக்கமின்றி வேரறுக்கப்பட்டு வெளியேற்றப்படுவார்கள், இந்த நிலையில் இந்துக்கள் அல்லாத மற்றவர்களுக்கும் இதே கதி ஏற்படவில்லை என்றால் அது ஆச்சரியமாக இருக்கும்’ என மீரா எழுதினார்.

இந்த பரபரப்பான பதியுடன் மீரா தனது வேண்டுகோளை முடித்திருந்தார், அதை நான் முழுமையாக மேற்கோள் காட்ட வேண்டும்: “ஆனால் என் இதயமும் மனமும் இந்த வெறுப்பூட்டும் காட்சியைத் தவிர்க்க முடியாதது என்று ஏற்க மறுக்கிறது. இந்து இயல்பு என்பது முதலில் அதன் சமநிலையை மீட்டெடுக்கும், மேலும் அவர்கள் வெறுக்கும் விஷயத்தால் விஷமாகிவிட்ட ஒரு வெறித்தனமான மக்கள் கூட்டத்தால் அது இருளுக்குள் இட்டுச் செல்லப்பட்டதை உணரும். ஒரு தீமையானது அதன் சொந்த வழியில் அதை முறியடிக்க முயல்வது தீர்வாகாது. பொதுமக்கள் தங்களுக்கு என்ன நடக்கிறது என்பதை அறிந்து தாங்களே நிறுத்திக்கொள்ள வேண்டும். வெறித்தனமான பிரச்சாரத் தாக்கத்தின் கீழ் அவர்கள் நம்பிக்கையற்ற மனச் சோர்வு நிலையிலிருந்த தங்களைச் சுதந்திரத்தின் மிகப் பெரிய உயரத்திற்குக் கொண்டுவந்த சிறந்த தலைவர்களைக் கண்மூடித்தனமாகத் திட்டுகிறார்கள். அவர்கள் இன்று அந்த மனிதர்களுக்குச் செவிசாய்க்கவில்லை என்றால், அவர்கள் பள்ளத்தாக்கிலிருந்து இருண்ட படுகுழிக்கு நழுவுவார்கள்.”

கடந்த காலத்திலிருந்து படிப்பினைகள்

மீரா தனது சக இந்தியர்களுக்கு விடுத்த வேண்டுகோள் 1947 ஆம் ஆண்டின் கடைசி வாரங்களில் வெளியானது. எழுபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு நான் இந்தக் கட்டுரையை எழுதுகையில், அவரது வேண்டுகோள் நாம் இப்போது வாழும் நாட்டிற்கு மிகவும் பொருத்தமானதாகத் தெரிகிறது. “சத்தியம் என்பது தங்களை இந்துக்கள் என்று அழைத்துக்கொள்ளும் மக்களால் காலடியில் போட்டு மிதிக்கப்பட்டு விட்டது” என்பது வார்த்தைக்கு வார்த்தை, பாஜகவின் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் செயல்பாடுகளுக்குப் பொருந்தும். கற்பனையான இந்துத்துவா தேசம் பற்றிய அவரது விளக்கம், “சுய பாணியிலான, உயர்ந்த இன மக்களால் ஆளப்படுவதோடு உண்மையான இந்து மதத்தின் ஆன்மீகச் சகிப்புத்தன்மைக்கு மறுப்பாக இருக்கும்” என்பது இன்று இந்தியாவில் அதிகாரத்தில் இருக்கும் கட்சியின் சித்தாந்தத்தை மிகச்சரியாக விவரிக்கிறது.

பிரிவினைக்குப் பின் உடனடியாக, இந்துத்துவா சித்தாந்தவாதிகள் “அனைத்து முஸ்லீம்களும் இரக்கமின்றி அவர்களது மூதாதையர் வீடுகளிலிருந்து வேரறுக்கப்பட்டு பாகிஸ்தானுக்கு விரட்டப்பட வேண்டும்” என்று விரும்பினர்; இப்போது, இந்தியக் குடிமக்களாக இருக்கும் முஸ்லீம்கள் இந்துக்களின் இறையியல், கலாச்சார, அரசியல் மற்றும் சமூக அளவில் அடிபணிய ஒப்புக்கொள்ள வேண்டும் என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நோக்கத்தை அவர்கள் மாற்றியமைத்துள்ளனர்.

இந்து மனம் அதன் சமநிலையை மீட்டெடுக்க முடியுமா, அதன் மத மற்றும் அரசியல் மேலாதிக்கத்தின் மீதான நம்பிக்கையை விட்டுவிட்டு, சுதந்திரப் போராட்டத்தின் மதச்சார்பற்ற, பன்மைத்துவ கொள்கைகளை உண்மையாக ஏற்றுக்கொள்ள முடியுமா? இரண்டு காரணங்களுக்காக 1947-48 ஆம் ஆண்டு குளிர்காலத்தில் அவ்வாறு செய்ய முடிந்தது; முதலாவதாக, காந்தியின் உண்ணாவிரதம், எழுபத்தெட்டு வயது முதியவரின் அசாதாரணமான தார்மீக மற்றும் உடல் தைரியம், வகுப்புவாத நல்லிணக்கத்தின் உறுதிமொழியாக டெல்லி மக்களை அவமானப்படுத்தியது; இரண்டாவதாக, காந்தியின் படுகொலை, எல்லா இடங்களிலும் உள்ள இந்துக்களை வெட்கப்படச் செய்ததோடு, மகாத்மாவின் கொலையாளிகள் உருவான ஆர்எஸ்எஸ் மற்றும் மகாசபா போன்ற அமைப்புகளையும் தவிர்க்கச் செய்தது.

சாதாரண இந்துக்களை அவமானப்படுத்தியதைத் தவிர, காந்தியின் படுகொலையானது ஜவஹர்லால் நேருவையும் வல்லபாய் படேலையும் மீண்டும் ஒன்றிணைத்ததன் மூலம் முக்கிய விளைவையும் ஏற்படுத்தியது. சுதந்திரத்திற்குப் பின் சில மாதங்களில் பிரதம மந்திரியும் உள்துறை அமைச்சரும் சோதனைக் காலத்திலிருந்தனர்; இருப்பினும், அவர்களின் பரஸ்பர தலைவரின் கொலையைத் தொடர்ந்து, அவர்கள் தங்கள் வேறுபாடுகளைப் புதைத்து விட்டனர். 1948 முதல் 1950 வரையிலான அந்த முக்கியமான ஆண்டுகளில், நேருவும் படேலும் எதிரிகளாக இல்லாமல் தோளோடு தோள் சேர்ந்து உழைத்து, துண்டு துண்டாக இருந்த நாட்டின் வார்ப்புருவை அதன் ஜனநாயக எதிர்காலத்துக்காகக் கட்டியெழுப்பினார்கள் என்ற வரலாற்று உண்மையை பாஜக பிரச்சாரகர்கள் எவ்வுளவு முயன்றாலும் அவர்களால் அழிக்க முடியாது.

காந்தியின் உண்ணாவிரதம், காந்தியின் கொலை, நேருவும் படேலும் இணைந்து பணியாற்றியது ஆகிய அனைத்தும் இந்திய சுதந்திரத்தின் ஆரம்பகால இடர் நிறைந்த ஆண்டுகளில் இந்துத்துவ சக்திகளைத் தோற்கடிப்பதில் தங்கள் பங்கை ஆற்றின. இப்போதிருக்கும் சர்ச்சைக்குரிய நிகழ்காலத்திற்கு அந்தத் தொலைதூர கடந்த காலத்திலிருந்து ஏதேனும் படிப்பினைகள் உள்ளதா?

1947-48 இல், இந்துத்துவா ஒரு கிளர்ச்சி சக்தியாக இருந்தது, வெளியிலிருந்து அரசைத் தாக்கியது; இப்போது, அது அரச அதிகாரத்தின் நெம்புகோல்களுக்கே கட்டளையிடுகிறது, மேலும் ஒவ்வொரு அமைப்பையும் (நீதித்துறை, இராணுவம் உட்பட) அதன் விருப்பத்திற்கு வளைக்க முயல்கிறது. நெருக்கடிகள், பேரழிவுகள் மற்றும் தொலைநோக்கு தலைமை என எந்தமாதிரியான  கலவையானது இந்துத்துவாவை அதிகாரத்திலிருந்து அகற்றும்? அல்லது நம் அனைவரையும் பிளவுபடுத்தி அழிவுகரமான எதிர்காலத்திற்கு இட்டுச் செல்வதோடு இந்து மனம் ஒருபோதும் அதன் சமநிலையை மீட்டெடுக்காது என்று இருக்க முடியுமா? இந்தக் கேள்விகளுக்கு வரும் மாதங்கள் மற்றும் வருடங்களில் எவ்வாறு பதிலளிக்கப்படும் என்பதைப் பொறுத்தே நமது குடியரசின் எதிர்காலம் அமையும்.

(இந்தக் கட்டுரை முதலில் தி டெலிகிராப்பில் வெளிவந்தது)

தமிழில்; சித்தார்த்தன் சுந்தரம்

Previous articleஜீவியம்
Next articleஅழிந்துவரும் கால்தடங்கள்
Avatar
மதுரையைச் சேர்ந்த சித்தார்த்தன் சுந்தரம் மேலாண்மைத் துறையில் முதுகலை பட்டம் (எம்.பி.ஏ) பெற்றவர். 2014 ஆம் ஆண்டு வரை பன்னாட்டுச் சந்தை ஆய்வு நிறுவனம் ஒன்றில் இயக்குநராக பணிபுரிந்து வந்தவர். இப்போது ஒரு சிறு நிறுவனத்தை நடத்தி வருகிறார். வணிகம், மேலாண்மை, சந்தைப்படுத்தல் சம்பந்தமான புத்தகங்களை ஆங்கிலத்திலிருந்து தமிழில் மொழிபெயர்த்து வருகிறார். இதுவரை பதினைந்து புத்தகங்கள் அச்சில் வந்துள்ளன. இன்னும் ஐந்து புத்தகங்கள் கூடிய விரைவில் வெளிவரவிருக்கின்றன. இவர் மொழியாக்கம் செய்த புத்தகங்களில் குறிப்பிடத்தக்கவை: மால்கம் கிளாட்வெல் எழுதி விற்பனையில் சாதனை ஏற்படுத்திய `டிப்பிங் பாயிண்ட்’, `அவுட்லையர்’, `ப்ளிங்க்’, காமத் ஹோட்டல் புகழ் விட்டல் வெங்கடேஷ் காமத் அவர்களின் சுய சரிதமான ‘ இட்லி, ஆர்கிட், வில்பவர்’,சுப்ரதோ பாக்‌ஷியின் புத்தகங்கள், ஜெ.டி. சாலின்ஜெர், ஹார்ப்பர்லீ ஆகியோருடையநாவல்கள்.பிரபல ஆங்கில மற்றும் தமிழ் பத்திரிகைகளில் சில்லறை வணிகம், சந்தை ஆய்வு,நுகர்வோர் கலாச்சாரம் பற்றி கட்டுரைகள் எழுதுவதுடன் புத்தக விமர்சனமும் செய்து வருகிறார். மொழியாக்கத்துக்காக 2018 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் `கலைஞர் பொற்கிழி விருது’ பெற்றவர். தற்சமயம் பெங்களூருவில் வசித்து வருகிறார். தொடர்புக்கு; [email protected]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.