ஜீவியம்

1

அவள் ஆடைகள் வெளுத்திருந்தாலும் அவளுக்குப் பொருத்தமாக இருந்தது. முன்பொரு காலத்தில் அவள் அழகாகவும் பலரைக் கவர்பவளாகவும் இருந்திருப்பாள் எனப் பார்த்தவுடன் எவராலும் ஊகிக்க முடியும். ஆனால், இப்போது சோர்ந்திருந்தாள். லௌகீக வாழ்க்கை அவள் உடலைச் சிதைத்துத் தளர்த்தியிருந்தது. காதோரத்திலும் நெற்றியின் மேற்புறத்திலும் நரை நன்றாகத் தெரிந்தது. அவள் ஒவ்வொருமுறையும் கர்த்தரின் முன் மண்டியிட்டுக் கண்களை மூடியதும் தான் வேண்ட நினைத்ததையெல்லாம் மறந்துவிட்டு, முந்திய நாள் வீட்டில் நடந்த சண்டைகளும் அவள் கணவனை அந்த நேரத்தில் திட்டாமல் மறந்த வார்த்தைகளும் அடிவயிற்றிலிருந்து பொங்கிப் பெருகி, அவள் அதை விழுங்க நினைத்தும் முடியாமல் வெளியேற முயலும்போது தலையைச் சிலுப்பிக் கண்களைத் திறந்துகொள்வாள். பிறகு கர்த்தரைப் பார்த்தபடி சிறிது கண்ணீர்விட்டுவிட்டு தேவாலயத்திலிருந்து வெளியேறுவாள். பெரும்பாலான நேரம் இதுவே நிகழும். இப்போதும் அதுவே நிகழ்ந்தது. இந்தமுறை அவள் தேவாலயத்தின் போதகரைச் சந்தித்துப் பேச விரும்பினாள். ஏன் எனத் தெரியவில்லை. அவரிடம் பேசி நீண்ட நாட்கள் ஆகிறது. அவரது ஆறுதலான வார்த்தைகள் அவளுக்குக் கொஞ்சம் நிம்மதியைத் தருவதாக நம்பினாள்.  பூசை முடிந்து காத்திருந்தாள். அவர் பல முக்கியஸ்தர்களை ஒவ்வொருவராகப் பார்த்துத் தலையசைத்துக் கொண்டும் சிலரிடம் ஓரிரு வார்த்தைகள் பேசிக்கொண்டும் வந்தார். சற்று தூரத்திலேயே இவளைக் கண்டுகொண்டார். இவளைப் பார்த்தவுடனேயே அவர் முகம் மாறியது. அவர் முகத்தில் தோன்றிய வெறுப்பை மறைக்க மிகவும் பிரயாசைப்பட்டார். லேசாகச் சிரிக்க முயன்றார். ஆனாலும் ஆழ்மனதிலிருந்து கிளர்ந்த அந்த வெறுப்பு அவர் முகத்திலிருந்து அகல மறுத்தது. அவர் இவளைத் தவிர்த்துவிட்டு நகர முற்பட்டார். ஆனால், அவள் விடாப்பிடியாக அவரை அழைத்துப் பேசினாள்.

“ஃபாதர்”

“எப்படி இருக்கமா”

“நல்லாருக்கேன் ஃபாதர்” என்றவள், அதன் பிறகு என்ன பேசுவதென்று தெரியாமல் தவித்தாள். போதகருக்கும் அதே தவிப்பு இருந்தது. அதனையும் மீறி அவர் மெல்ல, “உன் வீட்டுக்காரர் என்ன செய்யறார்ன்னு தெரியுமா?” என்றார்.

அவள் ஒன்றும் புரியாமல் விழித்தாள். அவள் முகபாவத்திலேயே, இவளுக்கு இன்னும் விஷயம் தெரியவில்லை எனப் போதகருக்குத் தெரிந்தது. மெல்லப் பெருமூச்சுவிட்டார்.

“அவரப்பத்தி என் காதுல விழறது எதுவும் சரியில்ல. நீ வீட்டுக்குப் போயி உன் புருஷன் கிட்டப் பேசு. அவன் என்ன செய்யப் போறான்னு கேளு. இதெல்லாம் நீதான் நடக்காமப் பாத்துக்கனும். இவ்வளவு நாள் நீ கஷ்டப்பட்டது, உன்னுடைய பக்தி, அன்பு, வேண்டுதல் எல்லாத்தையும் அவனுடைய காரியம் நாசமாக்கிடும் போல இருக்கு. நேத்து நான் விஷயத்தைக் கேள்விப்பட்டதும்…” என்று நிறுத்திவிட்டு அவள் முகத்தைப் பார்த்தார். அதில் குழப்பங்களும் கேள்விகளும் மட்டும் இருந்ததைக் கண்டு, அவளை ஆசிர்வதித்துவிட்டு அவர் மெல்ல அந்த இடத்தைவிட்டு நகர்ந்தார். அவளுக்கு அவர் என்ன சொல்ல வருகிறார் என்றே புரியவில்லை. மிதப்பதா மூழ்குவதா என்று புரியாமல் தவிக்கும் தக்கையைப் போலத் தவித்தாள். பிறகு கணவனிடம் பேசிக்கொள்ளலாம் என்று நினைத்தவள் தேவாலயத்தை விட்டு வெளியேறினாள். குழப்பங்கள் ஈக்களைப் போல அவள் காதுகளில் ரீங்கரித்தன.

நடந்துகொண்டிருந்தவளுக்கு இறைச்சி வாங்க வேண்டும் என்றும், அதேசமயம் ‘தான் சொல்லும் வரை இறைச்சியெல்லாம் வாங்க வேண்டாம்’ என்று கணவன் சொன்னதும் ஒருசேர நினைவிற்கு வந்தது. அவள் கால்கள் தன்னிச்சையாக இறைச்சிக் கடைக்குச் சென்று நின்றது. இறைச்சி வாங்கிக்கொண்டு அவள் வீட்டிற்கு நடந்தே சென்றாள். எதிரில் வந்த முகங்கள் காட்சிகள் என எதுவும் அவள் மூளையின் அடுக்குகளில் பதியவே இல்லை. தெருவில் நுழைந்ததும் எதிரில் வந்த ஜான்சி அக்கா, “இன்னா மேரி உன் ஊட்டுக்காரன் இப்படி பண்ணிட்டான்” என்று சொல்லவே அவள் சுய நினைவுக்கு வந்தாள்.

“என்னக்கா?”

“நீயே போய்ப் பாரு அந்தக் கூத்த” என்று சொல்லிக்கொண்டே அவள் நகர்ந்தாள்.

என்னவோ ஏதோ என்று வேகமாக வீட்டிற்குள் நுழையும்போதே அவள் கணவனின் குரலும் மகனின் குரலும் சத்தமாகக் கேட்டதும், ‘தன் மகனைக் கணவன் எதாவது செய்துவிட்டானோ’ என்று அஞ்சியபடி வேகமாக உள்ளே நுழைந்து கணவனைப் பார்த்தவள் ஒருநொடி உறைந்தே போனாள். அவள் இதயம் ஒருநொடி நின்று துடிப்பதை உணர்ந்தாள். எதிரிலிருந்த கணவனும் மகனும் இவளைப் பார்த்ததும் அமைதியானார்கள். இவளைப் போலவே மகனும் அதிர்ச்சியிலிருக்கிறான் என்று அவனது முகத்திலேயே தெரிந்தது. அவள் கணவனையே பார்த்துக்கொண்டிருந்தாள். அவன் கருப்பு வேட்டியணிந்து தோளில் கருப்பு துண்டு ஒன்றைப் போர்த்திக்கொண்டு, நெற்றியில் பெரிதாகச் சந்தனப் பொட்டு வைத்துக்கொண்டு சபரிமலை ஐயப்பனுக்கு மாலை போட்டிருந்தான்.

2

கெளரி தாமஸைத் திருமணம் செய்துகொள்ள விரும்புவதாகத் தெரிவித்த நொடியிலிருந்து அவளுடன் பேசுவதையே அவள் அப்பா சுதர்சன் நிறுத்தியிருந்தார். அதுநாள் வரை கெளரி அவருக்கு ஒரு குழந்தையாகவே இருந்திருந்தாள். சட்டென பலூன் வெடித்ததும் அதிர்ச்சியடையும் குழந்தையைப் போல ஆகிவிட்டார். அந்த நேரத்தில் தன் மனைவி இறக்காமலிருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. கெளரியும் ‘அம்மா இருந்திருந்தால்’ என்று யோசிக்காமல் இல்லை. பெரிய பிரச்சினையாக இருந்தது, அவர்களுக்கு இடையிலிருந்த இடைவெளியை இட்டு நிரப்ப யாரும் இல்லாததே. அப்பா என்ன நினைக்கிறார் என்று கெளரிக்கும் அவள் என்ன நிலையில் இருக்கிறாள் என்று அப்பாவுக்கு எடுத்துச் சொல்ல யாரும் இல்லை. வந்துபோன சொந்தங்களும் ரெண்டுபட்ட வீட்டில் கூத்தாடிகளாகவே இருந்தனர். இருந்த பாட்டியும் எதிலும் தலையிட்டுக் கொள்ளவில்லை. நீண்ட அமைதி வீட்டைத் திருடிக்கொண்டது. யாரும் யாருடனும் சண்டையிடவில்லை. யாரும் யாரையும் திட்டவில்லை. அதேநேரம் வெறுப்பும் கோபமும் அந்த வீடு முழுக்க ஒரு புகை மூட்டமாக இருந்துகொண்டேயிருந்தது. அது வீட்டிலிருக்கும் அடுத்தவரை ஏறெடுத்தும் பார்க்கவிடாமல் தடுத்தது. கெளரிக்கு இது சுத்தமாகப் பிடிக்கவில்லை. வீட்டிலிருப்பவர்கள் எந்தவொரு முடிவும் எடுக்கப்போவதில்லை என அவள் நம்பினாள். வாழ்வோ சாவோ, தாமஸோ அல்லது வேறு ஒருவனோ தான் மட்டுமே அதைத் தீர்மானிக்க வேண்டும் என்ற நிலைக்கு அவள் தள்ளப்பட்டிருந்தாள். தாமஸுடன் பேசினாள். அவன் வீட்டிற்கு அழைத்துப்போய் தன் பெற்றோர் முன் நிறுத்தினான். அவர்களும் எந்த ஆட்சேபனையும் விதிக்கவில்லை. ஆனால், ஒரே ஒரு நிபந்தனை மட்டும் அவர்களிடம் இருந்தது.

கெளரி தான் போவதாகச் சொன்னபோது அவள் அப்பா அமைதியாக விட்டத்தைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவரை மீறி பாட்டி எதுவும் பேசவில்லை. அவள் புடவையின் தலைப்பை வாயில் பொத்தியபடி அழுதுகொண்டிருந்தாள். சிறிது நேரம் அமைதியாக நின்றுகொண்டிருந்த கெளரி கண்கள் கலங்கியவாறு வாசலை நோக்கி நடக்கத் தொடங்கினாள். “கொஞ்சம் இரு” என்ற அப்பாவின் குரலைக் கேட்டு நின்று திரும்பிப் பார்த்தாள். அவர் இவள் முகத்தைப் பார்க்காமல் எழுந்து உள்ளே சென்றார். நீண்டநேரம் அவர் அறையில் ஏதோ செய்யும் சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தது. ஆனால், கதவு சாத்தப்படவில்லை. சந்தேகமடைந்த பாட்டி மெல்ல எழுந்து சென்று எட்டிப் பார்த்தாள். அவள் பார்வையிலேயே எந்தவித அசம்பாவிதமும் நடக்கவில்லை என்பதைக் கெளரி புரிந்துகொண்டு காத்திருந்தாள். நீண்ட நேரம் கழித்து அவள் அப்பா ஒரு சூட்கேசுடனும் ஒரு பையுடனும் வந்தார். சூட்கேஸில் துணிமணிகளும், அவள் சான்றிதழ்களும் அவளுக்காகச் சேர்த்துவைத்த நகைகளும், கைப்பையில் கொஞ்சம் பணமும் இருப்பதாக எங்கோ பார்த்தபடி சொன்னார். சொல்லும்போதே அவர் குரல் உடைந்தது. கெளரி அவையனைத்தையும் மறுத்தாள். பாட்டி கெளரியைத் திட்டி அதை அவள் எடுத்துப் போகும்படி செய்தாள்.

அதன் பிறகு கெளரியின் வாழ்க்கை தலைகீழாக மாறியது. உடை, அலங்காரம் என அனைத்தும் மாறியது. மதம் மாறினாள். தேவாலயத்திற்குச் சென்று ஞானஸ்நானம் பெற்றாள். அதற்கான தேர்வை முடிக்க மிகவும் சிரமப்பட்டாள். மேரி என்ற பெயரைக் கர்த்தரின் முன்பு ஏற்றுக்கொண்டாள். தாமஸைத் திருமணம் செய்துகொண்டாள். அதன் பிறகு அவள் அப்பா கொடுத்த நகைகளுக்கு வேலையில்லாமல் போனது. பிறகு அவை எப்போதாவது அவசரத்திற்கு உதவியது. ஆனால், அவள் அப்பா ஆசையாக அவளுக்கு அணிவித்த மூக்குத்தியை மட்டும் பத்திரமாக எடுத்து வைத்துக்கொண்டாள்.  தாமஸின் அம்மா வாரந்தோறும் இவளைப் பல இடங்களுக்குக் கூட்டிச் சென்றாள். ஒருமுறை கூட இவளுக்கு அதில் விருப்பமிருக்கிறதா என்று யாரும் கேட்கவில்லை.  பிறகு தன்னைத் தீவிரமாக இணைத்துக்கொண்டாள். அக்கம்பக்கத்து வீடுகளில் பண்டிகை காலங்களில் கொடுக்கும் பலகாரங்களை வாங்க மறுத்தாள். கோவில்களைக் கடந்துபோகும்போது மறந்தும் அந்தப்பக்கம் திரும்பிப் பார்ப்பதில்லை என உறுதியாக இருந்தாள். வாரம் தவறாமல் தேவாலயத்திற்குச் சென்றாள். அவள் யாருக்காக மதம் மாறினாளோ அந்த தாமஸே அவளுடன் தேவாலயத்திற்கு எப்போதாவது தான் வருவான். வீட்டில் வேலையில்லாத நேரத்தில் மேரியின் கைகளில் பைபிள் இருந்து கொண்டேயிருந்தது. எப்போதாவது வரும் அப்பாவின் நினைவுகளைத் தடுக்க, அல்லது அப்படி எதுவும் வருவதில்லை எனக் காட்டிக்கொள்ள மிகவும் சிரமப்பட்டாள். எப்போதாவது எங்காவது எதிரில் தென்படும் அப்பாவோ அல்லது பாட்டியோ இவளைக் கண்டும் காணாமல் போகும்போதெல்லாம் அவளுக்கு இருக்கும் ஒரே துணை கர்த்தர்தான் என்றானது.

3

இரண்டு நாட்களுக்கு யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை. அன்று வாங்கிக்கொண்டு வந்த இறைச்சியை ஜான்சியிடம் கொடுத்துவிட்டாள் மேரி. அன்று முழுக்க அவள் சமைக்கவில்லை. அறைக்குள் சென்று படுத்தவள் எழுந்திருக்கவேயில்லை. தன் வாழ்க்கைப் பட்டத்தின் நூல் அறுந்துவிட்டதோ என்று அஞ்சினாள். தன் கணவன் ஏன் இப்படியானான் என்று திரும்ப திரும்ப யோசித்தாள். இதற்கு யார் காரணமாக இருக்கும். யார் இவன் மனதை மாற்றியது என்று குழம்பினாள். நீண்ட நேரம் இருந்த அந்த யோசனை வேறு விதமாக மாறியது. நான் ஏன் இப்படியானேன் என்று யோசித்தாள். தன்னை யார் இப்படி மாற்றியது எனத் தனக்குள் கேட்டுக்கொண்டாள். தான் யாராக இருந்தோம் என்ற நினைவுகள், அவள் மறந்து மறைத்து வைத்திருந்த அவள் ஞாபகங்கள் எல்லாம் தரையில் சிதறிய அமிலம்போல் பொங்கி எழும்பியது. எழுந்து வேகமாகச் சென்று ஹாலில் உட்கார்ந்திருந்த தன் கணவனின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள். அவள் அருகில் மகனும் வந்து நின்றுகொண்டான். வழக்கமாக இதுபோன்ற சந்தர்ப்பங்களில் என்ன நடக்குமென்று அவனுக்குத் தெரியும். முடிந்த அளவிற்குத் தன் அப்பாவிடமிருந்து தன் அம்மாவைக் காக்க முயல்வான். தாமஸ் மேரியை அடிப்பது என்பது மேரியின் அடியிலிருந்து தப்பிக்கத்தான் என்பதும் தாமஸ் ஒன்றும் கொடுமைக்காரன் இல்லையென்றும் அவனுக்குத் தெரியும். ஆனால், இந்தமுறை தன் அப்பா எதாவது செய்தால் தான் சும்மா இருக்கக்கூடாது என்று நினைத்துக்கொண்டான். ஆனால், ஆச்சரியமாக தாமஸ் அமைதியாக இருந்தான். முடிந்த அளவிற்கு மேரியிடமிருந்து விலகியிருக்க முயன்றான். ஒருகட்டத்தில் மேரி தரையில் உட்கார்ந்து அழ ஆரம்பித்தாள்.

“உனக்காக எல்லாத்தையும் விட்டுட்டு எல்லாத்தையும் மாத்திகிட்டு இப்படி கிடக்கறனே, என்னப் பாத்தா உனக்கு எப்படித் தெரியுது. நீ உன் இஷ்டத்துக்கு இருக்கறதுக்கு என்ன எதுக்கு இப்படிப் பண்ண” என்றாள்.

தாமஸ் அமைதியாக இருந்தான்.

“உனக்காகத் தானே மதம் மாறி, எல்லாத்தையும் ஏத்துகிட்டு வீடு வீடா போய் மத்தவங்ககிட்ட கர்த்தரப் பத்தி சொல்லி சொல்லி, இப்ப அவங்கலாம் என் மூஞ்சில காறித் துப்ப மாட்டாங்க. இனிமே எந்த மூஞ்ச வெச்சிகிட்டு நான் சர்ச் பக்கம் போவேன்.”

“இதப்பாரு, நான் ஒன்னும் இதெல்லாம் உன்ன பண்ணச் சொல்லல. நீயா விருப்பப்பட்டு செஞ்ச…”

“உங்கம்மா என்னையும் வாரா வாரம் இழுத்துகினு போவும்போது கம்முனு தான இருந்த. அப்ப உங்கம்மாகிட்ட சொல்ல வேண்டியதுதான. அவளுக்கு புடிக்கலனா விட்ருனு”

“இதப்பாரு, இப்ப என்ன ஆச்சுன்னு இப்படி கத்தினு இருக்க? எவ்ளோ முஸ்லீம் கிருஸ்டீனுங்க சபரி மலைக்குப் போறாங்க. எவ்ளோ இந்துங்க மத்த மத கோயிலுக்கு போறாங்க. இன்னா குடி முழுவிப் போச்சி இப்போ”

“அப்ப இவ்ளோ நாளா நான் ஒரு விஷயத்த நம்பிட்டு இருந்தனே, அதுக்கு என்ன அர்த்தம். ஏற்கனவே நம்பிட்டு இருந்தத உனக்காக விட்டனே அதுக்கு என்ன அர்த்தம். இப்ப நான் என்னவா இருக்கறது. நீயே சொல்லு.”

“அது உன் இஷ்டம்” என்று சொல்லிவிட்டு தாமஸ் வேகமாக வெளியேறினான்.

4

இதெல்லாம் எப்போது முடியும் என்று அவள் தனக்குள் நினைத்த நொடியே அவளுக்குள் ஒரு பதிலும் உதித்தது, “இதை இப்போதே முடித்துவிடலாம். யார் என்னைத் தடுத்துக்கொண்டிருப்பது. பிரச்சினைகளை வளர்ப்பதும் முடிப்பதும் நம் கையில் தானே இருக்கிறது” என்று அவளுக்குள் தோன்றியதும் ஒரு நீண்ட பெருமூச்சுவிட்டாள். ஏதோ ஒன்று அவளுக்குள்ளிருந்து விடைபெற்றது, அவளுக்குள் ஒளிந்துகொண்டிருந்த நினைவுகள் ஒரு வாசனையைப் போல் மெல்ல மெல்லக் கிளர்ந்தெழுந்து கண்களின் முன் காட்சிகளாக ஓடத்தொடங்கின. அதில் பெரும்பாலும் அவள் அப்பாதான் நிறைந்திருந்தார். அவரின் சிரித்த முகம் அவருடனான அவளின் விளையாட்டுகளும் மேலெழுந்து வர வர அவள் கண்களில் நீர் உடைந்து வழிந்தது. அவள் மெல்ல எழுந்து அறையின் மூலையிலிருந்த பழைய இரும்பு அலமாரியின் அருகில் சென்று அதை மெல்லச் சத்தம் எழுப்பாதவாறு திறந்தாள். அவளது பிரயாசையையும் மீறி அது மெல்லச் சத்தம் எழுப்பியது. பெண்களின் அலமாரி மர்ம அடுக்குகளைக் கொண்டது. அதிலிருக்கும் அனைத்தையும் எடுத்து வெளியே போட்டுவிட்டாலும் அதில் அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஏதோ ஒன்று மறைந்துகொண்டுதான் இருக்கும். அதை யாராலும் அறிந்துகொள்ள முடியாது. முக்கியமாக ஆண்களால் அதன் நிழலைக் கூடத் தீண்ட முடியாது. அவள் அப்படிப்பட்ட ஒரு மர்ம அடுக்கிலிருந்து ஒரு சிறிய பெட்டியை எடுத்தாள். மெல்லக் கட்டிலின் அருகில் வந்து அதிலிருந்து ஒரு சிறிய குங்குமச் சிமிழை எடுத்துப் பார்த்தாள். அது அவள் அம்மாவுடையது. அம்மாவின் ஞாபகமாக அவளிடம் இருப்பது. நீண்ட நாட்கள் எடுக்காமலிருந்தாள் அது அழுத்தமாக இருந்தது. சற்றுச் சிரமப்பட்டுத் திறந்தாள். உள்ளே நிறம் மங்கிய கல் வைத்த சிறிய மூக்குத்தி ஒன்று இருந்தது. அவள் ஆசைப்பட்டாள் என்பதற்காக அவள் அப்பா அவளுக்குப் போட்டுவிட்டது. சிமிழைக் கீழே வைத்துவிட்டு மூக்குத்தியை மட்டும் எடுத்துப் பார்த்தாள். அதில் ஏதோ ஒட்டிக்கொண்டிருப்பதுபோல் தெரிய அதைச் சுரண்டினாள். பின் எழுந்து சென்று மின்விளக்கைப் போட்டுவிட்டு அறையின் மற்றொரு மூலையிலிருந்த நிலைக் கண்ணாடியின் அருகில் சென்று அந்த மூக்குத்தியைத் தனது மூக்கின் அருகில் வைத்துப் பார்த்தாள். ஒரே ஒருநொடி சட்டெனப்  பலவருடங்கள் பின்னோக்கிச் சென்றதுபோல் அவளுக்குத் தோன்றியது. மேரி சட்டெனக் கெளரியானாள். மீண்டும் கண்களில் நீர் வழிய ஆரம்பிக்க, சட்டெனத் திருகாணியைக் கழட்டி மூக்குத்தியைத் தனது வலதுபுற மூக்கில் வைத்து ஒரு அழுத்து அழுத்தினாள். வலி தெரியவே சில நொடிகள் ஆனது. திருகாணியையும் போட்டுவிட்டு கைகளை மூக்கிலிருந்து எடுத்தாள். மூக்குத்தி போட்ட இடத்தில் லேசாக ஒரு கோடுபோல் ரத்தம் வழிந்தது. சட்டென ஒருநொடி நிலைக் கண்ணாடியில் அவள் அப்பா வந்துபோனார். அவர் உருவம் மறைந்ததும் அவள் கண்களுக்குப் பின் சுவரில் தொங்கிக் கொண்டிருந்த சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் பொம்மை தெரிந்தது. அவள் அதை உற்றுப் பார்த்தாள். சிலுவையில் அறையப்பட்ட ஏசுநாதரின் கைகளில் வழியும் ரத்தக்கோடும் இவள் மூக்கிலிருந்து வழிந்த ரத்தக்கோடும் ஒரே மாதிரி இருந்தன.

1 COMMENT

  1. கேரளாவில் பாதிரியார் ஒருவர் சபரிமலை சென்றார் என்ற செய்தியோடு இந்தச் சிறுகதை என் மனதை சேர்க்கிறது. வாழ்க்கையில் ஏதோ ஒன்று நம்மை சலனப்படுத்தியும், சலனப்படுத்தாலும் அதன் போக்கில் நடந்து கொண்டே இருக்கிறது. அம்மாவின் நினைவு மூக்குத்தி வழியாக வந்து கடந்த காலத்தின் மிச்சமாக இருக்கும் எதார்த்த அன்பினை நினைவு கொள்ளச் செய்கிறது. தியாகமோ, வலியோ நம்மை மீண்டும் கடந்த காலத்தினுள் நுழைக்கிறது ஏசுவின் கைவழியே ஓடும் இரத்தத்தைப் போல. அருமையான சிறுகதை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.