மலக்குழி

வைடூகேனு சொல்றாங்களே, அது உண்மையிலேயே பெரிய பிரச்சினையா? கம்ப்யுட்டர்லாம் வேலை செய்யாதுன்னு சொல்றாங்க’ அம்மாவின் தம்பி குரலைக் கேட்டு மலக்குழியிலிருந்து வெளிவந்தான். மாமா என்று அவரைப் பற்றி எண்ணுவது அன்னியமாக உள்ளது, நினைவு தெரிந்து பதினைந்துமுறை கூட அவரைப் பார்த்திருக்க மாட்டான். பதினைந்து என்பது அவன் வயதைவிட ஐந்து குறைவு, வருடத்திற்கு ஒருமுறை பார்த்திருக்கிறான் என்று கூடச் சொல்ல முடியாது. அவர் அம்மாவின் தம்பி அவ்வளவு தான். ஆனால் அவரிடம் தான் உதவி கேட்க வந்திருக்கிறான்.

‘ஆமா. ஆனா அதை சால்வ் பண்ண ஆரம்பிச்சுட்டாங்க’

‘இன்னும் ஏழெட்டு மாசத்துல டூ தவுசண்ட் வருது, அதுக்குள்ள சரியாயிடுமா,’

‘பண்ணிடுவாங்க’

‘அது சம்பந்தமா ப்ராஜெக்ட் செய்யேன்’

‘அது கோபால்ல செய்யணும், நான் விஷுவல் பேஸிக்ல பண்ணலாம்னு இருக்கேன்’

‘இப்ப எல்லாரும் வைடூகே பத்தி தானே பேசறாங்க, அதுல பண்ணலாம்ல, ஜாப் கிடைக்க ஈஸியா இருக்கும்ல’

‘ப்ராஜெக்ட் லெவல்ல அதைச் செய்ய முடியாது, எக்ஸ்பீரியன்ஸ் வேணும். தவிர அடுத்த வருஷத்துக்கு அப்பறம் வைடூகே ப்ராப்ளம் இருக்காது, ஸோ அதுக்குத் தேவையிருக்காது. ப்ளஸ், இப்ப விஷுவல் பேஸிக் தான் லேட்டஸ்ட் டெக்னாலஜி.’

‘செங்கல்பட்ல பிடிபிஸ்ல கோர்ஸ் போறான். நிறைய கம்ப்யுட்டர் கோர்ஸ் சென்டர் அங்கயே வந்துடுச்சு.’ என்று அம்மா கூறினாள்.

ஏழாவது செமஸ்டரே ப்ராஜெக்ட் குறித்து முடிவு செய்துவிட வேண்டும். இவன், ப்ரெடி, ரமணி ஒரு குழு, நாச்சியார் மேம் தான் கைட். ‘நம்மள சாவடிக்கறதுக்குன்னே அவங்களா கேட்டு வாங்கிருப்பாங்கடா’ என்றான் ப்ரெடி. ‘அத விடு, மொதல்ல என்ன ப்ரஜெக்ட் செய்யப் போறோம்னு டிஸைட் பண்ணுவோம்’. நிறைய இடங்களில் ப்ராஜெக்ட்டை  விலைக்குத் தருகிறார்கள், இவன் வகுப்பில் சில குழுக்கள் அந்த வழியில் செல்கிறார்கள். பாடியில் உள்ள மிகப் பெரிய தொழிற்சாலையில் ஆர் அன்ட் டி பிரிவின் தலைவராக மிகப் பெரிய பதவியில் உள்ள தன் தம்பியிடம் அங்கு வாய்ப்பிருக்கிறதா என்று கேட்டுப் பார்ப்பதாக அம்மா கூறினாள். முதலில் மறுத்தவன், முகத்தைச் சோகமாக வைத்துக் கொள்வது, தனக்குள் முணுமுணுத்துக் கொள்வது போன்ற அம்மாவின் வழக்கமான, மறைமுக  யுத்திகளால் ஒப்புக்கொண்டான். ஆனால் இதே யுத்திகளை அப்பனிடம் அவள் பிரயோகப்படுத்துவதில்லை, எந்தப் பலனும் இருக்காது என்று அவளுக்குத் தெரியும்.

இங்கு ப்ராஜெக்ட் செய்வதில் உள்ள சாதக அம்சங்களையும் உணர்ந்திருந்தான். கணினி சார்ந்த நிறுவனம்  இல்லையென்றாலும், சுயமாக முயற்சிசெய்து பார்க்க முடியும். இன்னும் ஒரு வருடத்தில் கிடைக்கப் போகும் பொறியாளர் சான்றிதழுக்குத் தான் எந்த விதத்திலும் தகுதியானவன் இல்லையென்றாலும், ப்ராஜெக்டிலாவது சிறிய உழைப்பைப் போடலாமே. அதைப் பற்றிக் கேட்கத்தான் இன்று கே.கே நகரிலுள்ள அவருடைய ப்ளாட்டிற்கு வந்திருந்தான்.

‘எதுவும் சாப்பிடாம இருக்கியே’ என்றபடி எதிரிலிருந்த தட்டைச் சுட்டியவர், ‘ஒரு நிமிஷம்’ என்று அறையை விட்டு வெளியே சென்றார். அதிலிருந்த ‘மேரி’ பிஸ்கட்டை எடுத்துக்கொண்ட அம்மா ‘சாப்டுடா’ என்றாள். தலையசைத்தான். அடுக்குமாடிக் குடியிருப்பில் இரண்டு படுக்கையறை கொண்ட வீடு. தரை தளம் முழுதும் இரு, நான்கு சக்கர வாகனங்கள். நான்கு மாடிகள், இருபது வீடுகள் இருக்கும். எல்லோரிடமும் வாகனங்கள் உள்ளனவா? பல வருடங்களுக்கு முன் அசோக் நகரில் அவர் வசித்ததும் அடுக்குமாடிக் குடியிருப்பில்தான். இது சொந்த வீடு, இரண்டு படுக்கையறைகளில் ஒன்றில் தான் அம்மாவுடன் அமர்ந்திருக்கிறான். இத்தகைய இடங்களில்  வீட்டிற்குள்ளேயே கழிவறை இருக்கும் என்று தெரிந்திருந்தாலும் படுக்கையறையிலேயே அந்த அறை இருப்பது குமட்டுகிறது. குளிக்கவும் அதே அறை. செங்கல்பட்டில் இன்னும் இத்தகைய குடியிருப்புகள் பரவலாகக் கட்டப்பட ஆரம்பிக்கவில்லை. அங்கு இவன் குடியிருக்கும் வீட்டில், பின்புறமாகக் குளிக்கவும், மலங் கழிக்கவும் என இரு தனி அறைகள் உண்டு. இங்கு எப்படி வசிக்கிறார்கள், பிரட்டாதா?. இவனால் இங்குச் சிறுநீர் கழிக்கக்கூட முடியவில்லை, அரைகுறையாக முடித்து வெளியே வந்தான். குளிக்கும்போது மலக்குழியைப் பார்ப்பதைத் தவிர்க்க முடியாதே, உடல் சுத்தமான உணர்வே கிடைக்காதே. இதில் அம்மா இங்கமர்ந்து சாப்பிட வேறு சொல்கிறாள், இங்கு உண்பதற்கும், இரண்டடி நடந்து, கழிவறைக்குள் நுழைந்து, அங்கமர்ந்து சாப்பிடுவதற்கும் என்ன வித்தியாசம். மீண்டும் மலக்குழி மணம் இவனைச் சூழ்ந்தது. வீட்டின் வெளியே கழிவறை இருப்பது  மழைக் காலத்தில் சிரமமாக இருந்தாலும் இந்த மணம் வீட்டினுள் இருக்காது. ஒருவேளை சில நாட்கள் இத்தகைய வீட்டில் வசித்தால் பழகிவிடக் கூடும்.

உள்ளே வந்த மாமா தண்ணீர் பாட்டிலை எதிரே வைத்தவர்  ‘எத்தனை நாள் ப்ராஜெக்ட்’ என்றார்.

‘நெக்ஸ்ட் மந்த், அக்டோபர்ல ஆரம்பிக்கணும். வாரத்துல ஒரு நாள். மண்டே. ஆறு மாசம் பண்ண வேண்டியிருக்கும்’

‘எங்க கம்பெனில பண்றது யூஸ்புல்லா இருக்குமா? நாங்க டிசைனிங்க்கு காட் யூஸ் பண்ணுறோம், பட் உங்க லைன்ல …’

‘அது பரவாயில்லை, ஏதாவது சின்ன ப்ராசஸ் இல்லை அதில ஒரு பார்ட் மட்டும் சூஸ் பண்ணி அதை விபில இம்ப்ளிமண்ட் பண்ணலாம்’

‘அடுத்த ரெண்டுநாள் வேண்டாம், புதன்.. இல்ல, ப்ரைடே கம்பெனிக்கு வா. என் டிபார்ட்மெண்ட்ல ஒருத்தரை இன்ட்ரோட்யுஸ் பண்றேன், அவர் கிட்ட டிஸ்கஸ் பண்ணி பைனலைஸ் பண்ணிடலாம். லெட்டர் தேவைப்படும்ல’

தலையசைத்தான்.

‘அதையும் குடுத்துடலாம்’.

‘தேங்க்ஸ்’ என்றவனைத் தொடர்ந்து ‘ரொம்ப தேங்க்ஸ்பா’ என்றாள் அம்மா.

‘என்ன சாப்பிடவே மாட்டேங்கறான், பிஸ்கட் பிடிக்காதா’ என்றவர் கேட்க ‘அப்படிலாம் இல்ல’ என்றாள் அம்மா. ஒரு பிஸ்கட்டை எடுத்துக் கடித்தான். மலக்குழியின் மணம் தொண்டையில் இறங்கியது, பிஸ்கட் துண்டு மலமாக மாறிவிட்டது. முழுங்கினான்.

‘காலேஜ்ல ட்ரெஸ் கோட் உண்டா’ என்றவர் கேட்க

‘ஜீன்ஸ். டி-ஷர்ட் போடக் கூடாது, மத்தபடி எதுவுமில்லை’

‘வரேன்’ என்றவர் மீண்டும் வெளியே சென்றார். கதவைத் திறக்கும்போது பிரிட்ஜிலிருந்து மாமி எதையோ எடுத்துக் கொண்டிருப்பது தெரிந்தது. மாமா என்றழைப்பதே அன்னியமாக இருக்கும் போது, மாமி என்று எப்படி உரிமையாகக் குறிப்பிட முடியும். இவர்கள் இங்கு வந்தபோது மாமிதான் கதவைத் திறந்தார். முகத்தில் எந்தச் சலனமுமில்லாமல் விலகி வழி விட்டவர் மற்றொரு படுக்கையறைக்குள் சென்றார். இவன் அம்மாவின் பின்னால் முன்னறைக்குள் நுழைய, உள்ளிருந்து மாமா வந்தார். அங்கமர்ந்து சில நிமிடங்கள் பேசிய பின்னர், இந்த அறைக்கு அழைத்து வந்தார். ஹாலிலேயே பேசிக் கொண்டிருந்திருக்கலாம், மல மணம் இந்தளவிற்கு அழுத்தியிருக்காது. ஆனால் அங்கு இருந்தால், மாமியால் வெளியே வந்திருக்க முடியாது. தன்னிடம் எதுவுமே பேச மாட்டார் என்று அம்மா பலமுறை கூறியிருக்கிறாள். இவன் அப்பன் மற்றொரு வேலையை விட்டதால், வீட்டில் நடந்த வழக்கமான சண்டையின்போது, அங்கு வந்திருந்த மாமா ஏதோ சொல்ல அவரைத் தள்ளி விட்டிருக்கிறான். அவருக்கு அப்போதுதான் மணமாகியிருந்தது. இவர்களும் அப்போது மெட்ராஸில் தான் வசித்தார்கள், அந்தச் சண்டை குறித்து இவனுக்கு எந்த நினைவுமில்லை.

அம்மாவிற்கு அப்பன் மீது எந்தப் பாசமும் இல்லையென்றாலும், பொதுவாக வெளியாட்களிடம் அவனைப் பற்றி எதிர்மறையாகப் பேச மாட்டாள். அவன் மீதுள்ள அன்போ, மரியாதையோ காரணமில்லை, குடும்ப நிலைமையைப் பற்றி வெளியே பேசக் கூடாது என்ற அவளுடைய கட்டுப்பாடு. என்ன காரணமாக இருந்தாலும், ஒரு பொறுக்கி கணவனையே இப்படி விட்டுக் கொடுக்காமல் இருக்கும் போது, மாமி தன் கணவனுக்கு நேர்ந்த அவமானத்தை மறக்காமல் இருப்பதில், அவர் கோபம் தணியாமல் இருப்பதில் எந்த வியப்புமில்லை, தவறில்லை. ஆனாலும் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் அவர் திரும்பிச் சென்றது இப்போதும் குறுகச் செய்கிறது. இதோ, இதுபோல், அவ்வப்போது, மாமா வெளியே சென்று அவரிடம் ஏதோ பேசிவிட்டு வருவதும் இழிபிறவியாக இவனை உணரச் செய்கிறது. இந்த மலக் குழியிலிருந்து இப்போதே வெளியேறிவிட வேண்டும். முண்டச்சி அம்மா, இவளால் தான் இதையெல்லாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது.

‘எப்ப மா கிளம்பறது’

‘இரு, காரியமானவுடனே போக முடியுமா’

‘அதுக்காகாவா சொன்னேன்’

‘பிஸ்கட் சாப்பிடு’

மாமியிடம் என்ன பேசிக் கொண்டிருப்பார். ‘இன்னும் கொஞ்ச நேரத்துல அனுப்பிடறேன்’, ‘கொஞ்சம் பொறுத்துக்கோ’ என்று ஏதேனும் கெஞ்சிக் கொண்டிருப்பாரோ? இல்லை, தங்களிடம் தொடர்பே இருக்கக் கூடாது என்று மாமி சொல்லக் கூடியவர் அல்ல என்று அம்மா அவரைப் பற்றிப் பேசியதிலிருந்து தெரிகிறது. பொறுக்கி அப்பன் இல்லாவிட்டால், மாமா, மாமி இருவரிடமும் இவனுக்கு நல்ல உறவு இருந்திருக்கும், மாமியிடமே  ப்ராஜெக்ட் குறித்துக் கேட்டிருக்கலாம். பதினைந்து வருடங்களுக்கு முன்பு மாமாவிற்குத் திருமணமானபோது, அப்போதே கணினி நிறுவனமொன்றில் நல்ல வேலையிலிருந்தார் மாமி. நன்றாக வீணை வாசிக்கக் கூடியவராம். அம்மா சொல்லித்தான் தெரியும். அப்போது இவர்களும் மெட்ராஸில்தான் வசித்தார்கள், இவனுக்கு ஐந்தாறு வயதிருந்திருக்கும். மாமி திருமணம் நடந்து நாலைந்து வருடங்களுக்குப் பின் வேலையை விட்டு விட்டார் என்பதையும் அம்மா தான் கூறினாள். அவர்களுக்குக் குழந்தை இல்லாதது  தான் அவர் வேலையை விடக்  காரணமா என்று இவன் எண்ணியதை அம்மாவிடம் கேட்டதில்லை. வீணை வாசிப்பதையும் நிறுத்தி விட்டார். ‘வெறும் தயிர் சாதம் தான் மூணு வேளையும் சாப்பாடு’, ‘எப்பப்பாரு தயிரு, பால், பச்சை காய்கறி தான்’, ‘ஸ்லோகம் படிக்கறது, கோவில்ல நிறைய நேரம்’, என்று அம்மா பேசிக்கொண்டிருப்பதைக் கேட்டிருக்கிறான். வேலையை விடாமலிருந்தால், மாமாவைப் போல் மிகப் பெரிய பதவியிலிருந்திருப்பார், அவருடைய நிறுவனத்திலேயே ப்ராஜெக்ட் செய்திருக்கலாம். அங்கேயே வேலை கூட கிடைத்திருக்கக் கூடும், அமெரிக்காவிற்குகூட அவர்களே அனுப்பியிருப்பார்கள்.

பசித்தது. செங்கல்பட்டிலிருந்து காலை ஆறரை மணிக்குக் கிளம்பினார்கள். அந்த நேரத்தில் உண்ணப் பிடிக்கவில்லை. மலங் கழிக்கக்கூட இல்லை. இன்னொரு பிஸ்கட்டை எடுத்தான், அதைத் தொடவே அருவருப்பாக இருந்தது. கண்கள் மூடப்பட்டிருந்த  கழிவறை கதவையே தன்னிச்சையாக அவ்வப்போது பார்த்துக் கொண்டிருந்தன. பதட்டத்துடன் விரைவாகக் கடித்து முழுங்கினான்.

அழைப்பு மணியின் ஓசை கேட்டது. பேச்சுக் குரல். மாமியின் பேச்சுக் குரலை இன்று முதல் முறையாகக் கேட்கிறான். இயல்பான, உற்சாகமான வரவேற்பு என்று தெரிகிறது. உள்ளே வந்த மாமா ‘மாலியும், ப்ரசாந்த்தும் வந்திருக்காங்க’ என்றார். அம்மா எதுவும் சொல்லவில்லை. சில நொடிகள் கழித்து ‘வெளிய வரியா’ என்று மாமா கேட்க ‘இல்ல வேண்டாம், இங்கேயே இருக்கோம்’ என்றாள்.

மாமா வெளியே சென்ற பின் ‘சம்மர் லீவ்னாலே மாலி, சுந்தர், சாவித்திரி எல்லாரும் எங்க வீட்டுக்கு வந்திடுவாங்க’ என்று அம்மா மெல்லிய குரலில் கூறினாள். மாலி அம்மாவின் அத்தை மகன், பிரசாந்த் அவர் மகன் இவனை விட நாலைந்து வயது மூத்தவன். ‘ப்ரசாந்த் பாம்பேல தான இருக்கான்’ என்று இவன் கேட்க ஆமென்று தலையசைத்தாள்.

அப்பனின் இழி குணம், அவனுக்கும் அம்மாவின் உறவினர்களுடனான தொடர்பைக் கிட்டத்தட்ட இல்லாமல் ஆக்கி விட்டாலும், அவனுடைய கீழ்மையின் நிழல் எப்போதுமே அவள்  குடும்பத்தின் மீது படர்ந்திருந்தாலும், அனைவரிடமும் அவளுக்கு இன்னும் நல்ல உறவு இருக்கிறது. சென்ற வருடம் வீட்டில் தொலைப்பேசி வந்த பின் இப்போது இன்னும் கொஞ்சம் எளிதாகத் தொடர்புகொள்ள முடிகிறது. இரண்டு அத்தை, ஒரு சித்தப்பா, அவர்களுடைய பிள்ளைகள், எல்லோருடைய  பார்வையிலும், அம்மா உயர் நிலைக்குச் சென்றிருக்க வேண்டிய, திருமணம் என்ற ஒற்றை நிகழ்வால், அதலபாதாளத்தில் வீழ்ந்துவிட்ட பெண். மாமி மட்டும் தான் அவளிடமிருந்து விலகியிருக்கிறாள்.

சரளமான ஆங்கிலத்தில் பேசும் மாமியின் உற்சாகக் குரல். பிரசாந்த்திற்குத் தான் அவர் மாமி. இவன், அவர் வெறுக்கும் ஒரு பொறுக்கியின் மகன், அவ்வளவே. அம்மா வெளியே சென்றிருந்தால், இந்த அரட்டையில் பங்கு கொண்டிருந்திருக்கலாம். எனக்காக இங்கேயே இருக்கிறாளோ? அது மட்டுமல்ல. வெளியே சென்றால் அவளுக்கும், மாமிக்கும் சங்கடமாக இருக்கும். இப்படித் திருடன் போல் ஒளிந்திருப்பதற்கு அம்மா தான் காரணம், அவள் தலையைப் பற்றி உலுக்க வேண்டும், அவளை அறைந்து அழ வைக்க வேண்டும். அழுவது அவளுக்கு பிடித்தமான ஒன்று தானே. அப்பனைப் போன்ற ஒரு கணவன் வாய்த்தால் வேறென்ன செய்ய முடியும். விவாகரத்து செய்திருக்கலாம், ஏன் பிரியவில்லை என்று கேட்டால், ‘உனக்காகத் தான் எல்லாத்தையும் பொறுத்துக்கறேன்’ என்பாள். தன் இயலாமையை மறைக்க இவனைப் பயன்படுத்துகிறாள், இல்லை, இவனுக்காகத் தான் அப்பனுடன் இன்னும் குடும்பம் நடத்துகிறாள். அவளிடம் கனிவாக நடந்துகொள்ள வேண்டும். மலத்தின் வீச்சு மூச்சையடைத்தது.

வெளியே பேச்சு தொடர்ந்து கொண்டிருந்தது. நான்காவதோ ஐந்தாவதோ படிக்கும்போது பிரசாந்த் வீட்டிற்கு ஒருமுறை அம்மாவுடன் சென்றிருக்கிறான். அம்மா மாலியின் மனைவி பத்மாவுடன் சமையலறையில் பேசிக்கொண்டிருக்க, இவன் மாலி, பிரசாந்த்துடன் அமர்ந்து தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். எதிரே ஒரு கிண்ணத்தில் கொறிக்க ஏதோவொரு பண்டமிருந்தது. அவர்களிருவரும் சுவாதீனமாக அதிலிருந்து எடுத்துச் சாப்பிட்டுக்கொண்டே, ‘எடுத்துக்கோ  என்று அவர்கள் இவனிடம் கூறும்போது மட்டுமே இவன் எடுத்துக் கொண்டான். பின் வீட்டிலேயே சுண்டல் செய்து, இரு பெரிய பாத்திரங்களில் எடுத்துக்கொண்டு எல்லோருமாகச் சேர்ந்து கடற்கரைக்குச் சென்றார்கள். எல்லோரும் மிக இயல்பாகவே பழகினார்கள், அம்மா உற்சாகமாக இருந்தாள்.  ஆனால் இவனால்தான், தான் படித்திருந்த ‘டின்டின்’ ‘ஆஸ்ட்ரிக்ஸ்’ பற்றி பிரசாந்த் பேசியபோது அது குறித்து இவன் சொல்ல  நினைத்ததை வெளிப்படுத்த இயலவில்லை. படித்திருக்கிறேன் என்பதுடன் நிறுத்திக் கொண்டான். பட்டிக்காட்டான், படிக்காமல் பொய் சொல்கிறான், இந்தப் பெயர்களையே கேள்விப் பட்டிருக்க மாட்டான் என்று பிரசாந்த் இவனைப்பற்றி நினைத்திருப்பான். இவன்  இப்போது வெளியே சென்றால்  அடையாளம் கண்டு கொள்வானா? அவன் தன் வீட்டிற்கு வந்த தினம் பிரசாந்த்திற்கு ஞாபகம் இருக்குமா?. பேச, பழகத் தெரியாத, நாகரீகமற்ற சிறுவன் என்றளவில் மட்டுமே அவன் நினைவில் பதிந்திருப்பானோ?, மென்று முழுங்கிக் கொண்டிருந்த பிஸ்கட் மலக் கரைசலாக தொண்டையில் வழிந்து குமட்டியது. பாட்டிலை எடுத்து தண்ணீரைக் குடித்தான்.

வெளியே நிசப்தம். கிளம்பி விட்டார்களா? உள்ளே வந்த மாமா ‘போயிட்டாங்க. ப்ரசாந்த் லீவ்ல வந்திருக்கான். இந்தப் பக்கம் வந்தாங்களாம், அப்படியே பார்த்துட்டு போகலாம்னு ..’

‘ப்ரொக்டர் அன்ட் கேம்பிள்ல தானே இன்னும் வர்க் பண்றான்’ என்று அம்மா கேட்டாள்.

‘அங்க தான்’

சில நொடிகளுக்குப் பின்

‘கிளம்பறோம்’ என்று அம்மா கூற, ‘இரு, ஒரு நிமிஷம்’ என்று மாமா மீண்டும்  வெளியே சென்றார்.  கழிவறைக்குச் சென்று வந்த பின் அம்மா இவனிடம் ‘பாத்ரூம் போறதுனா போ, செங்கல்பட்டு போக ரெண்டு மூணு மணி நேரமாயிடும்’ என்றாள்.

‘வேண்டாம்.’ என்றேன்

உள்ளே பையுடன் வந்த மாமா ‘புல் ஹேண்ட் ஷர்ட் போடுவல்ல’ என்று இவனிடம் கேட்டார். தலையசைத்தான். இவனுக்குப் பிடிக்கவே பிடிக்காது. அப்படியே போட நேர்ந்தாலும், முழங்கை வரை மடித்து விட்டுக் கொள்வான், அப்போதும் அசூயையாக இருக்கும்.

‘நல்ல ப்ராண்ட் ஷர்ட்ஸ், புதுசு தான். சைஸ் பத்தும்னு நினைக்கறேன்’

‘சட்டலாம் இருக்கு’ என்று இவன் கூற

‘இருக்கறது இருக்கட்டும், இதையும் போட்டுக்கோ, எஞ்சினியர் ஆகப் போற’

‘இல்ல ..’

‘வாங்கிக்கடா. அவனுக்கு புல் ஹேண்ட் போடப் பிடிக்கும்’ என்றாள் அம்மா. முண்டச்சி,  பிச்சைக்காரனாக்கி விட்டாள்.

வாங்கிக் கொண்டான்.

‘வீட்ல எந்த பிரச்சனையும் …’ என்று மாமா கேட்க அம்மா எதுவும் சொல்லவில்லை. மாமா அவள் தோளில் கையை வைக்க, அவள் வாய் இறுகி, தலையசைவதை இவனால் பார்க்க முடிந்தது. இவனிடம் திரும்பி ‘உங்கம்மா பட்ட கஷ்டத்துக்கு நீ படிச்சு தான்டா அவளை நல்லா பார்த்துக்கணும்.’ என்று மாமா கூறும்போது அவர் குரல் இதுவரை பேசியது போலில்லை. இவன் கழிவறை கதவைப் பார்த்தான். ‘பஸ் ஸ்டாப்ல ட்ராப் பண்ணிடறேன். வெயிட் பண்ணு ட்ரெஸ் மாத்திட்டு வரேன்’ என்றபடி அறையை விட்டு வெளியேறினார்.

திருமணத்திற்கு முன்பு மெட்ராஸில்  தனியாக அறையெடுத்து மாமா தங்கியிருந்தபோது வார இறுதியில் இவர்களுடைய வீட்டிற்குவந்து, இவனைக் கடற்கரைக்கு மாலையில் அழைத்துச்  செல்வாராம், அம்மா சொல்லியிருக்கிறாள். இவனுக்கு அதெல்லாம் நினைவிலில்லை, அவருக்காவது இருக்குமா? அப்பன் மட்டும் இல்லையென்றால், அவருடன் இயல்பான உறவு இருந்திருக்கும், பரிதாபப்பட்டு இவனுக்குத் தன் உடைகளைத் தந்திருக்க மாட்டார், மாமி இவர்களைப் பார்த்தவுடன் உள்ளே வருமாறு வரவேற்றிருப்பார், அவருடன் இவன் ஆங்கிலத்தில் உற்சாகமாகப் பேசியிருப்பான், பிரசாந்த்திடம் தனக்கு ஓபிலிக்ஸ் தான் மிகவும் பிடிக்கும் என்று கூறியிருப்பான், எப்போதேனும் பார்க்கும் உறவினர் எல்லோரும்  இவனைக் கழிவிரக்கத்தோடு பார்க்க மாட்டார்கள். இவன் இந்த மலக்குழிக்குள் உழல வேண்டியிருந்திருக்காது.

எழுந்து கழிவறைக்குள் நுழைந்தவன், கால்சட்டையைக் கழற்றி, குந்தி, தலையைக் குனிந்து அமர்ந்தான். கரிய மலக்குழியின் மேற்பரப்பில் அதே  நிறத்தில் நீர். அதிலிருந்து எழும் மலத்தின் வீச்சம், பெரிய மஞ்சள் நிறக் கரங்களாக உருமாறி இவனைத் தன்னிடம் உள்ளிழுத்துக் கொள்ளப்போகிறது. வயிற்றைச் சுருக்கியும், இழுத்தும், முறுக்கியும்  கிழிப்பது போன்ற உணர்வு, மலம் வெளியேற நீங்கியது. புது மலத்தின் வீச்சத்தை   ஆழமாக மூச்சிழுத்தான். ஆசுவாசமாக இருந்தது.

Previous articleஷார்ட் சர்க்யூட்
Next articleஜீவியம்
Avatar
இயற்பெயர் அஜய். சிறுகதைகள், நாவல், கட்டுரைகள் எழுதி வருகிறார். பதாகை, சொல்வனம், யாவரும், இணைய இதழ்களில் எழுதியுள்ளார். 'இயர் ஜீரோ' என்ற நாவலும் 'வேதாளத்தின் மோதிரம்' என்ற சிறுகதை தொகுப்பும் வெளியாகியுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.