- ஞானம்
போதும் போதும் இருந்ததென
அப்போதுதான் உதிர்ந்தது மரத்திலிருந்து
இன்னும் ஒரு நாளோ
இரு நாளோ
புகாரேதுமின்றி
வான் நோக்கிக் கிடக்கிறது
வெயிலையும் வாங்கிக்கொண்டு
காற்றுக்கு அசையும் அதை அதன் சொற்ப வாழ்வில்
என் கரங்களும் ஸ்பரிசிக்கட்டுமேயென
எடுத்தேன்
எத்தனை மருது, வண்ணம், வாசனை, வடிவம்.
தான்மை இல்லை சலனமில்லை
மெல்ல அதை தரையிலேயே
வைத்துவிட்டு நடந்தேன்
எப்போதோ படித்தது
நினைவுக்கு வர
நீங்கள் மாறவேண்டும்
ஒரு மலரைப்போல என்று.
- ஊரடங்கு
வானத்து மேகங்கள்
அலையவில்லை
சூரியனைக்
காணவில்லை
என்னாயிற்று
இந்த மரங்களுக்கும்
சன்னமாய் அசையும் இலைகள்
காவல் வாகனங்கள் தவிர
ஏதுமோடா சாலைகள்
மனிதர்கள் நடமாட்டமட்டுமல்ல
ஆடுமாடுகள் கோழி நாய்களும்
தூசு தும்பு சப்தங்கள்
ஏதுமில்லை
கடினமான
கடக்கமுடியா இந்நாளிலும்
வந்துற்ற அந்திக்காய் திண்ணை மாடத்தில் திருவிளக்கேற்றினேன்
காற்றோடும் இருளோடும் இணைந்து வந்ததொரு
இனம் புரியா பீதியில்
சதுரத்துள் படபடக்கிறது சுடர்.
-ரவி சுப்பிரமணியன்
சிறப்பு
சதுரத்து சுடர்
நீங்கள்தான் ரவி சார்
அல்லது
உங்கள் சிரிப்பு