மீள்வருகை


ன்னிடம் ஒரு நல்ல செய்தியும், ஒரு கெட்ட செய்தியும் இருக்கிறது. நல்ல செய்தி என்னவென்றால், இந்த வாழ்க்கை முடிந்த பிறகும் (ஒரு வகையான) வேறொரு வாழ்க்கை இருக்கிறது. கெட்ட செய்தி என்னவெனில் ஷான் – க்ளாட் வில்னவ் ஒரு பிணப்புணர்வாளன். 

பாரிஸ் டிஸ்கோவில் விடியற்காலை நான்கு மணிக்கு மரணம் என்னை வந்து சந்தித்தது. என் மருத்துவர் ஏற்கனவே என்னை எச்சரித்திருந்தார், இருந்தாலும் சில விசயங்கள் பகுத்தறிவை குருடாக்கிவிடும் வல்லமையுடையவை. என்னுடைய பழக்கங்களிலேயே குடியும், நடனமும் தான் மிகவும் தீங்கற்றவை என்று தவறுதலாக, என்னை நானே நம்ப வைத்துக் கொண்டிருந்தேன் (இப்போதும் கூட நான் எண்ணியெண்ணி வருந்தும் ஒன்று இது). பாரிஸின் நவநாகரீக இடங்களுக்கு ஒவ்வொரு இரவுகளிலும் நான் சென்று வந்ததற்கு ஃப்ராஸ்காவில் மேலாளராக நான் பணிபுரிந்ததும் கூட காரணம்; அலுவல் பணிகளில் கிட்டாத திருப்தி அல்லது உட்குரலின் வாழ்வு என்று சொல்வார்களே அதற்கான தேடலில் இருந்தேன்; பணிச்சுமையின் அதீதத்தின் தெவிட்டு நிலையில் தவறாமல் ஒலித்து வந்த ரீங்கரிப்பு அது.  

ஆனால் அதைப்பற்றி பேசாமல் இருந்து கொள்கிறேன், இல்லாவிடில், எவ்வளவு தேவையோ அந்த அளவிற்கு மட்டும் பேசிக் கொள்கிறேன். முப்பத்திநான்கு வயதாகி இருந்த எனக்கு, மரணம் சம்பவிக்கையில் சமீபத்தில்தான் மணமுறிவு ஏற்பட்டிருந்தது. என்னைச் சுற்றி என்ன நடந்தது என்பது குறித்து பெரிதாக புரிதலில்லை. சடுதியில் மார்பில் ஒரு கூரிய வலி, அவள் முகம், என் கனவுப் பெண்மணி சீசில் லேம்பெல்லின் முகம், எப்போதும் போலவே நிச்சலனத்தில் காட்சிதர, நடனத்தளமோ அசுரச் சூறாவளி போல் சுழன்று அங்கிருந்த நடனமாடிகள் அனைவரையும் அவர்களது நிழல்களோடு சேர்த்து உள்ளிழுத்துக் கொண்ட போது ஒரு குறு இருள்தருணம் நிகழ்ந்தது. 

அடுத்தாக நடந்ததோ, திரைப்படங்களில் எல்லோரும் பார்ப்போமே அப்படி இருந்தது, அதைப்பற்றிச் சில வார்த்தைகளை உங்களோடு பகிர்ந்து கொள்ள விழைகிறேன். 

வாழ்க்கையில் நான் குறிப்பிட்டும்படி அறிவுப்பூர்வமாக இருந்ததில்லை. (நான் நிறையவே கற்றிருந்த போதும்) இப்போதும் அப்படித்தான். அறிவுப்பூர்வமாக என்று நான் குறிப்பிடுவது, உண்மையில் சிந்திக்கும் திறனுடைய என்ற அர்த்தத்தில். ஆனால், எனக்கென்று குறிப்பிடும்படியான ஆற்றலும் இரசனையும் இருந்திருக்கிறது. நான் ஒரு கலையெதிர்ப்பாளன் அல்ல என்று சொல்ல வருகிறேன். என்னைப் பொறுத்தவரை எப்போதாவது கலாயெதிரியாக நடந்து கொண்டிருக்கிறேனா எனில், இல்லை என்பது திண்ணம். நான் வணிகத்தில் பட்டம் பெற்றிருந்தாலும் ஒரு நல்ல நூலை வாசிப்பதிலிருந்தோ அவ்வப்போது நல்ல நாடகங்களைப் பார்ப்பதிலிருந்தோ பலரை விடவும் மேம்பட்ட திரைப்பட விரும்பியாக இருந்ததிலிருந்தோ, அது என்னை விலக்கிவிடவில்லை. சில திரைப்படங்கள் எனது முன்னாள் மனைவியின் தொந்தரவினால் பார்க்கப் போயிருக்கிறேன் என்றாலும், மற்றவை எல்லாம் ஏழாம் கலையின் மீது நான் கொண்டிருந்த காதலால் பார்த்தவை. 

அனைவரையும் போலவே நானும் கோஸ்ட் திரைப்படத்தைப் பார்க்கப் போயிருந்தேன், அந்த படம் உங்கள் நினைவில் இருக்கிறதா இல்லையா என்று தெரியவில்லை, ஆனால் அது ஒரு பெரும்வசூல் வெற்றிப்படம், டெமி மூரும் வோப்பி கோல்ட்பெர்கும் நடித்தது. அதில் பேட்ரிக் ஸ்வாசி கொலை செய்யப்பட்டு அவரது சடலம் மன்ஹாட்டன் தெருவில் கிடக்க, (அல்லது ஒரு மாடியில் அல்லது அசுத்தமான சந்தில்) சிறப்பு வரைகலைத் தொழில்நுட்பத்தால் பிரமிப்பேற்படுத்தும் முறையில் அவரது ஆன்மா அவரது உடலிலிருந்து வெளிப்பட்டு தன்னுடலைத் தானே ஆச்சரியத்துடன் பார்த்துக் கொண்டு நிற்கும். வரைகலையின் சிறப்பைத் தவிர்த்து விட்டுப் பார்த்தால், அந்தக் காட்சி மட்டரகமாக இருந்தது என்றே நான் எண்ணினேன். வழக்கமான ஹாலிவுட் வகையறா; பாசாங்கான நம்பகத்தன்மையற்ற மசாலா. 

ஆனால் எனது முறை வந்த போது அப்படியே அதுதான் நடந்தேறியது. நான் திகைப்படைந்தேன். எப்போதும், (சில தற்கொலை சம்பவங்களைத் தவிர என்று எண்ணுகிறேன்) இறப்பு எதிர்பாராத விதமாகவே வந்து சேரும் என்பது, என் திகைப்பிற்கு முதல் காரணம். இன்னொரு காரணம் நான், எனது விருப்பத்திற்கு மாறாக கோஸ்ட் படத்தின் மோசமான காட்சிகளுள் ஒன்றை நிகழ்த்திக் கொண்டிருந்தது. பட்டறிவு எனக்குச் சொல்லித்தந்த பலவற்றுள் ஒன்று, விழிகளில் புலப்படும் அமேரிக்க அப்பாவித்தனத்திற்கு மேலதிகமாக ஏதோ ஒன்று அதில் உண்டு; ஐரோப்பியர்களான நாங்கள் மறைத்து வைக்க முடியாததை மறைத்துக் கொள்ளும் திறன் அதற்கு உண்டு. ஆனால் நான் இறந்து பட்ட பிறகு அதுபற்றியெல்லாம் பொருட்படுத்தவில்லை. இறந்த உடனேயே வெடித்துச் சிரிக்க வேண்டும் என்றுதானிருந்தது. 

எந்த நிலைமைக்கும் கடைசியில் பழக்கப்பட்டுத்தான் ஆக வேண்டும் என்றாலும் அன்று காலை சில மணிநேரங்கள் தலைச்சுற்றலையும் போதையுணர்வையும் ஒரு சேர உணர்ந்தேன். நான் இறந்த இரவின் போது ஆல்கஹால் அருந்தி இருந்து, அதனால் அப்படி நிகழவில்லை. மாறாக, அன்று நான் ஆல்கஹாலை உட்கொள்ளவில்லை, வெறும் அன்னாசிச் சாறினையும், ஆல்கஹால் அற்ற பீரையும் தான் அருந்தியிருந்தேன். இறந்துபட்டுவிட்டோம் என்பதன் திகைப்பினாலும், இறந்துவிட்டதால் அடுத்து என்ன நிகழுப்போகிறதோ என்ற கேள்வியால் வரும் பீதியினாலும் தான் எனக்கு அப்படி தலைச்சுற்றல் ஏற்பட்டது. ஒருவர் இறக்கையில் நிஜஉலகம்  ஒட்டுமொத்தமாய் கொஞ்சம் இடம்நகர்ந்து கொள்வதால் அது தலைச்சுற்றலுக்கு வழிகோலுகிறது. அது பார்வைக்குப் பொருந்தாத திறன் கொண்ட ஒரு கண்ணாடியை அணிந்து கொண்டதைப் போன்றிருக்கும்; அவை காட்சிகளை முழுக்க வேறொன்றாக காட்டிவிடாது என்றபோதும் கொஞ்சம் வித்தியாசமாக அனைத்தையும் காட்டும் இல்லையா. அதில் இன்னும் மோசமானது என்னவெனில், உங்கள் கண்ணாடிகள் உங்கள் சொந்த கண்ணாடியே அன்றி வேற்றாருடையதில்லை என்ற தன்னுணர்வு. நிஜஉலகம் உங்களிடமிருந்து வலப்புறமாக, கொஞ்சம் கீழாக, உங்களுக்கும் நீங்கள் ஒரு பொருளுக்கும் இடையிலிருக்கும் தொலைவை உணர்ந்துகொள்ள முடியாத அளவில் இடம்பெயர்ந்திருக்கும், ஆயினும், அந்த மாற்றத்தை ஒரு பெரிய விரிசலென நம்முள்ளம் அறிகையில், அது உங்களது தலைச்சுற்றலை இன்னும் கூட்டும், ஆனாலும் இறுதியில் இவை எல்லாம் ஒரு பொருட்டே இல்லைதான். 

அது உங்களை அழவோ அல்லது பிரார்த்திக்கவோ தூண்டும். ஆவிப்பருவத்தின் முதல் சில நிமிடங்கள் திடிர்தாக்குதல். குத்துச் சண்டை மேடையில், தலையில் தொடர்ந்த அடிகளை வாங்கியதால் மூளை குழம்பிய ஒரு குத்துச்சண்டை வீரர் தடுமாறிக் கொண்டிருப்பதைப் போல நீங்கள் இருப்பீர்கள். உங்களைச் சுற்றி மேடையின் வளையம் ஆவியாகிக் கரைந்து கொண்டிருக்கும். பிறகு மெல்ல சாந்தமடைய அடைய என்ன நிகழுமென்றால், இறந்த உடன் – உங்கள் காதலி, அல்லது உங்கள் நண்பர்கள் என – அவ்விடத்தில் இருந்தவர்களுள் யாரையாவது பற்றி பின்தொடர்ந்து செல்ல ஆரம்பிப்பீர்கள். அல்லது உங்கள் சொந்த உடலைப் பின்தொடர்வீர்கள்.  

நான் என் கனவுப் பெண்மணி சீசில் லேம்பலுடன் இருந்தேன், இறப்பதற்கு முன்பு அவளைப் பார்த்தபடி இருந்தேன், ஆனால் எனது உடலிலிருந்து ஆத்மா வெளியேறிய பிறகு, அவளை எங்கேயும் என்னால் காண முடியவில்லை. அந்த தருணத்தில், எனக்கு துக்கம் அனுசரிக்க நேரமில்லாமல் போய்விட்டதால், இப்போது, அச்சம்பவம் மிகுந்த ஆச்சரியத்திற்கும், ஏமாற்றத்திற்கும் உரியதாக மனதில் உருக்கொள்கிறது. எனக்கு முன்பாக என்னுடல் அவலட்சணக் குவியலாய் தரையில் கிடந்ததை பார்த்தபோது, நடனமாடி மாரடைப்பால் முற்றுகையிடப்பட்டு வீழ்ந்திருக்கலாம் என்றோ அல்லது நான் மாரடைப்பினால் இறந்து பின் ஏதோவொரு பன்னடுக்கு மாடியின் உச்சியிலிருந்து விழுந்து இருக்கலாம் என்றோ தோன்றியது. அதைப் பார்த்தபடி சுற்றி நடந்து வருகையில், கீழே விழுந்ததும் (ஏனென்றால் நான் முற்றிலுமாக கிறுகிறுத்திருந்தேன்) ஒருவர் தானாக முன்வந்து (அப்படி ஒருவர் எப்போதும் இருக்கத்தான் செய்கிறார்), எனக்கு (அல்லது எனது உடலுக்கு) வாய்வழி சுவாசம் தந்து கொண்டிருக்க, இன்னொருவர் எனது மார்பை ஓங்கியோங்கி குத்தியபடி இருக்க, வேறொருவர் இசையினை நிறுத்தும் யோசனையைச் செயல்படுத்தினார். அற்காலமாக இருந்ததால் முழுவதும் ஆட்களால் நிரம்பி இருந்த டிஸ்கோவில் எல்லா இடங்களிலிருந்தும் ஏற்பின்மையின் முனகல்கள் பரவிக்கொண்டிருக்க, டிஸ்கோ காவலாளி அல்லது உணவாணை ஏற்பாளரின் ஆழ்குரல் எழுந்து அவர்களுக்குக் காவல் அல்லது நீதித்துறை ஆட்கள் வரும்வரை என்னைத் தொடாதிருக்கும்படி அறிவுறுத்தியது, அப்போது பிடிப்பற்றுத் தள்ளாடும் நிலையில் நான் இருந்திருந்தப்போதும் தொடருங்கள், தொடர்ந்து என்னை மீட்க முயற்சி மேற்கொள்ளுங்கள் என்று சொல்ல விரும்பியிருந்திருப்பேன். ஆனால், அவர்கள் களைப்புற்றிருந்தார்கள், காவல்துறையினருக்கு அறிவிக்கை தரப்பட்ட உடனேயே அவர்கள் பின்னோக்கி நகர்ந்தனர், அப்போது, யாரோ ஒரு கருணையுள்ளம் கொண்ட ஆத்மா வந்து நான் இறந்துவிட்டதை ஊர்ஜிதம் செய்யும் விதமாக எனது உடல் மீது மூடுதுணியினைப் போர்த்திடும் வரை என்னுடல் விழிகள் மூடி அங்கே நடனத்தளத்தின் விளிம்பிலேயே தனியாகக் கிடந்தது. 

பிறகு சில நபர்களுடன் அங்கு வந்து சேர்ந்து ஏற்கனவே அனைவருக்கும் தெரிந்திருந்ததை நிச்சயம் செய்தது காவல்துறை, பிறகு மாஜிஸ்ட்ரேட் வந்து சேர்ந்தார், அதன் பின்புதான் சீசில் லேம்பெல் டிஸ்கோவிலிருந்து மறைந்திருந்ததை நான் உணர்ந்தேன், எனது உடலை எடுத்து அவர்கள் சிகிச்சையூர்தியின் உள்ளே வைத்ததால் நான் மருத்துவ உதவியாளர்களைப் பின் தொடர்ந்து வாகனத்தின் பின்புறம் ஏறிக் கொண்டு, சோர்வுற்று, துயரம் கவிழ்ந்தபடி இருந்த பாரிஸின் விடியலில் அவர்களுடனேயே சென்றேன். 

என்னுடல் அல்லது எனது முன்னாள் உடல் (எப்படிச் சொல்வது சரியாக இருக்கும் என்று எனக்குத் தெரியவில்லை), மரணத்தின் சிடுக்கான அதிகாரத்தினை எதிர்கொண்டு எத்தனை அற்பமானதாகக் காட்சியளிக்கிறது. முதலில் அவர்கள் என்னை ஒரு மருத்துவமனையின் தரைகீழ் தளத்திற்கு எடுத்து சென்றனர், என்னால் அதை மருத்துவமனைதானா என உறுதியாகச் சொல்ல முடியவில்லை. அங்கு கண்ணாடி அணிந்திருந்த ஒரு இளம்பெண் எனது உடைகளைக் களைந்து விடும்படி அவர்களுக்கு உத்தரவிட்டாள். அவர்கள் அவளிடம் என்னுடலைத் தனியாக விட்டுச் சென்ற பின்னர் அவள் சில நொடிகள் என்னைத் தொட்டு ஆராய்வதில் செலவளித்தாள். பிறகு அவர்கள் என்னை ஒரு உறையிலிட்டு மூடி அனைத்து விரல்களின் ரேகைகளை பதிவு செய்து கொள்ளும் பொருட்டு மற்றொரு அறைக்கு எடுத்துச் சென்றனர். அவர்கள் என்னை முதலில் இருந்த அறைக்கே மீண்டும் எடுத்து வந்தபோது அது காலியாக இருக்கவே, எத்தனை மணி நேரங்கள் என்று துல்லியமாக என்னால் சொல்ல இயலவில்லை என்றபோதும், நீண்டநேரம் அங்கேயே இருக்கவேண்டியதாயிற்று. ஒருவேளை சில நிமிடங்களுக்குள்ளும் இருக்கக்கூடும், ஆனால் நான் மேலும் மேலும் சலிப்படைந்தேன். 

கொஞ்ச நேரம் கழிந்ததும் என்னை எடுத்துச் செல்ல ஒரு கறுப்பு வேலையாள் வந்து, என்னை இன்னொரு நிலத்தடி அறைக்கு கொண்டு போய் இரு இளைஞர்களிடம் ஒப்படைத்தான், வெண்ணிற உடையணிந்திருந்த அந்த இளைஞர்கள் ஆரம்பம் முதலே எனக்கு சங்கட உணர்வை தந்து கொண்டிருந்ததற்கான காரணம் என்ன என்று எனக்குப் புரியவில்லை. ஒருவேளை அவர்களது முலாம் பூசிய பேச்சுமுறை அவர்களை பத்தாம்பசலித்தனமான கலைஞர்கள் என்று அடையாளப்படுத்தியதோ அல்லது பொறுப்பற்ற தொடர்ச்சியற்ற முறையில் அவ்வப்போது சென்று வந்து கொண்டிருந்த டிஸ்கோவில் கூட்டமாக இருக்கும் போது, புதுப்புது போக்கிலான தோற்றத்தை பூண்டு கொள்பவர்களை ஒத்திருந்த தோடுகளை அவர்கள் அணிந்திருந்ததோ (அது வடிவத்தில் அறுங்கோணமாகவும் விசித்திரமான விலங்குகள் தப்பியோடுவதற்கு உண்டான வளையத்தைப் போலவும் இருந்தது அல்லது அப்படி எனக்குத் தோன்றி இருக்கலாம்) காரணமாக இருக்கலாம்.

அந்த புதிய பணியாட்கள் ஒரு ஏட்டில் சில குறிப்புகளை மேற்கொண்டனர், பின்னர் சில நிமிடங்கள் அந்த கறுப்பனுடன் பேசிக் கொண்டிருந்தனர் (எதைப் பற்றி என்று எனக்குத் தெரியாது). அந்த கறுப்பு வேலையாள் எங்களைத் தனியே விட்டு விட்டுக் கிளம்பினான். இவ்வாறு, அறையில் இரண்டு இளைஞர்கள் பலகையின் பின்புறமாக நின்றபடி படிவங்களை நிரப்பிக் கொண்டே அரட்டை அடிக்க, சக்கரப்படுக்கையில் எனது உடல் தலைமுதல் அடிவரை முழுவதும், மூடப்பட்ட நிலையில் கிடக்க, நான் அதற்குப் பக்கத்தில் தள்ளுப்படுக்கையின் உலோகவிளிம்பில் எனது கரங்களை ஓய்வாக வைத்து நின்றபடியே, தெளிவின்மை கொண்ட வரவிருக்கும் தினங்களில் என்ன நிகழும், அப்படி தினங்கள் என்று ஏதேனும் எனக்கு இனி உண்டா என்றெல்லாம் பதிலற்று கிடக்கும் தொலைவைப் பற்றிச் சிந்திக்க முயன்று கொண்டிருந்தேன்.

அந்த இளைஞர்களுள் ஒருவன் தள்ளுபடுக்கையினை நோக்கி வந்து என்மீதிருந்த அல்லது எனது உடலின் மீதிருந்த துணியை விலக்கி, ஆழ்ந்து சிந்திக்கும் முகத்தோடு ஆராய்ந்த போது திருப்தியில்லை எனும் ரீதியிலான முகமாற்றம் அவனிடம் தென்பட்டது. கொஞ்ச நேரத்திலேயே மீண்டும் அவன் அதை மூடிவிட்டு இருவரும் என்னை அடுத்த அறைக்கு தள்ளிச் சென்றனர். அது ஒரு குளிரூட்டப்பட்ட தேன்கூடு போல இருந்தது. விரைவிலேயே அது பிணங்களை இருப்பு வைக்கும் அறை என்பதைப் புரிந்து கொண்டேன். பாரிஸின் ஒரு சாதாரண இரவில் இத்தனை பேர் இறந்து போகிறார்கள் என்பதை என்னால் ஒருபோதும் கற்பனை செய்திருக்க முடியாது. அவர்கள் என்னுடலைக் குளிரூட்டப்பட்ட இழுப்புப் பெட்டிக்குள் வைத்து உள்ளே தள்ளிவிட்டு அங்கிருந்து அகன்றனர். நான் அவர்களைப் பின் தொடரவில்லை. 

அந்த முழு தினத்தையும் பிணவறையிலேயே செலவிட்டேன். அவ்வப்போது அடிக்கடி நான் சிறிய கண்ணாடி சாளரத்தைக் கொண்டிருந்த கதவருகே சென்று அடுத்த அறையில் இருந்த சுவர்கடிகாரத்தில் மணி பார்த்தபடி இருந்தேன். தலைசுற்றல் உணர்வு மெல்ல அகன்று கொண்டிருந்தது, ஒரு புள்ளியில், நான் சொர்க்கம் மற்றும் நரகம், வெகுமதி மற்றும் தண்டனை ஆகியவற்றைப் பற்றிச் சிந்தித்தாக வேண்டியிருந்ததும் எனக்குள் பீதியுணர்வு வெகுவாக எழுந்தது, ஆனால் அந்த அர்த்தமற்ற அச்சஉணர்வு விரைவிலேயே விலகிவிட்டது. உண்மையில், நான் மிகவும் சிறப்பாகவே உணரத் தொடங்கினேன். 

நாள்முழுவதுமே பிணங்கள் வந்தபடி இருந்தாலும் அவற்றுடன் ஒரு ஆவி கூட வந்து சேர்ந்திருக்கவில்லை. ஒரு கிட்டப்பார்வை கொண்ட ஆள் எனக்குப் பிரேத பரிசோதனை மேற்கொண்டு, எனது மரணவிபத்திற்கான காரணத்தை நிறுவிக் கொண்டார். அவர்கள் என்னைப் பிளந்து பார்ப்பதைக் கண்கொண்டு பார்க்கும் தைரியம் எனக்கிருக்கவில்லை என்பதை நான் ஒத்துக்கொண்டாக வேண்டும். ஆனால், பிரேத பரிசோதனை அறைக்குள் சென்று ஆய்வாளரும், அவரது அழகிய பெண் உதவியாளரும் தனது பணியினைச் செவ்வனே விரைந்து செய்து கொண்டிருந்ததைப் பார்க்காமல் தவிர்த்து, முதுகைக் காட்டியபடி, தந்தத்தின் நிறத்தில் இருந்த தரையோடுகளில் கண்பதித்து கவனித்துக் கொண்டிருந்தேன். எல்லா பொதுத்துறை பணியாளர்களும் இப்படி நேர்த்தியாகச் சேவை செய்தால் எப்படியிருக்கும். பிறகு, அவர்கள் என்னைக் கழுவி தைத்து ஒருக்கியதும் இன்னொரு வேலையாள் வந்து மீண்டும் பிணவறைக்கே என்னை எடுத்துச் சென்றான்.  

எனது குளிரூட்டப்பட்ட மூடுபெட்டிக்கு எதிரே தரையில் அமர்ந்தபடி அங்கேயே இரவு பதினொன்று மணிவரை இருந்தேன். ஒரு புள்ளியில் நான் துயில் கலக்கத்தை உணர்ந்தாலும், உறக்கத்தின் தேவையை எல்லாம் கடந்த நிலையில் இருந்தேன். அதனால், என்ன செய்தேன் என்றால், எனது கடந்தகால வாழ்வைப் பற்றியும் என் முன்பாக விரிந்திருக்கும் புதிரான வருங்காலத்தைப் (ஏதோ ஒருவகை பெயரிட வேண்டும் என்பதால்) பற்றியும் சிந்திக்கத் தொங்கினேன். வருவது போவதாக பகல் முழுக்க இருந்த பரபரப்புகள், இதுதான் இந்த இடத்தின் நித்தியநிலை என்று தோற்றமளித்துவிட்டு பத்து மணிக்கு மேல், மெல்ல குன்றி குறிப்பிடும்படி எந்த ஆள்நடமாட்டமும் இல்லாமல் போயிருந்தது. அறுங்கோண வடிவ தோடுகள் போட்டிருந்த அந்த இளைஞர்கள் பதினொன்றாகி ஐந்து நிமிடங்களில் அங்கு வந்தனர். அவர்கள் கதவினைத் திறந்த போது நான் திடுக்கிட்டேன். அவர்களை அடையாளம் கண்டுகொண்டதும், மீண்டும் நான் எனது ஆவி நிலைக்குப் என்னைப் பொருத்திக் கொண்டு தரையிலேயே தொடர்ந்து அமர்ந்தவாறு, என்னையும் சீசில் லேம்பெல்லையும் இடையே விரிந்திருக்கும் தொலைவைப் பற்றி யோசித்துக் கொண்டிருந்தேன். அது நான் உயிரோடிருக்கையில் அவளுக்கிடையே இருந்த இடைவெளியைவிட அளவிடமுடியாத தொலைவினைக் கொண்டதாக இருந்தது. புரிந்துணர்வுகள் எப்போதும் தாமதமாகவே வரும். உயிரோடிருந்தபோது, சீசிலின் மடியில் ஒரு விளையாட்டுப் பொருளாக (அல்லது அதையும் விட தாழ்வானதாக) ஆகிவிடுவோமோ என்று தொடர்ந்து அஞ்சியபடி இருந்திருக்கிறேன். ஆனால் இப்போது நான் இறந்துவிட்டேன். ஒருகாலத்தில் எனது உறக்கமின்மைக்கும், வெறித்தனமான பாதுக்காப்பற்ற எண்ணங்களுக்கும் காரணமாக இருந்த விதியை, இந்த அந்தம் இனிமையானதாகக் காட்டியது. அவற்றில் இன்னமும் அர்த்தமும், நயமும் இருந்தது : உண்மையின் திடத்தன்மை. 

ஆனால் நான் அந்த கோமாளித்தனமான பணியாட்களைப் பற்றிச் சொல்லிக்கொண்டிருந்தேன். அவர்கள் பிணவறைக்குள் நுழைவதை நான் பார்த்திருந்தேன், அவர்களது நடத்தையில் இருந்த எச்சரிக்கைத் தன்மையை நான் கவனிக்கத் தவறவில்லை. அது அவர்களது வழவழ பூனைத்தனமான நடத்தைக்கிடையில், கலைஞராக விரும்புபவர்கள் சேர்ந்து வெளியே சுற்றுவது போல துருத்தி தெரிந்து கொண்டிருந்தது. அவர்களுள் ஒருவன் எனது சடலம் கிடந்த பெட்டியை இழுத்து திறக்கும் வரையிலும், நான் அவர்களது அசைவுகளுக்கும், குசுகுசுப்பான பேச்சுகளுக்கும் பெரிதாக கவனத்தைத் தரவில்லை. 

பிறகு நான் எழுந்து அவர்களைக் கவனிக்கத் தொடங்கினேன். பழக்கப்பட்ட தோரணையுடன் அவர்கள் அசைந்து எனது உடலினை தள்ளுபடுக்கையில் ஏற்றினார்கள். பிறகு பிணவறைக்கு வெளியே தள்ளிச்சென்று நீண்ட தாழ்வாரத்தைக் கடந்து மெல்ல சாய்வுதளத்தின் மேலேறியபோது, அப்பாதை கடைசியில் கட்டிடத்தின் வண்டிகள் நிறுத்துமிடத்தில் சென்று முட்டியது. ஒருகணம் அவர்கள் எனது சடலத்தைத் திருடிக் கொண்டிருக்கிறார்கள் என்று எண்ணினேன். மனப்பிரம்மை கொண்ட நிலையில் நான் சீசில் லேம்பெல்லை – பால் வெண்மை பொங்கும் சீசில் லேம்பெல்லின் முகத்தினை – நினைத்துப் பார்த்தேன்; எனது சடலத்தினைக் கைப்பற்றி வருவதற்காகக் கோரப்பட்டிருந்த தொகையை அந்த போலி கலைஞர்களிடம் தருவதற்காக அவள் வண்டி நிறுத்தத்தின் இருளிலிருந்து வெளிப்படுவதாக நான் கற்பனை செய்துகொண்டேன். ஆனால், அந்த வண்டிகளுக்கிடையில் எவரும் நிச்சயமாக இருக்கவில்லை. உளச்சமநிலையையும், பகுத்தறிதலையும் மீட்டெடுக்கும் நிலைக்கு வெகு தொலைவிலேயே இன்னும் இருந்தேன். உண்மையைச் சொல்ல வேண்டுமெனில் ஒரு அமைதியான இரவிற்காக நான் ஏங்கிக் கொண்டிருந்தேன். 

சில நிமிடங்களாக கடும் பதற்றத்துடனும், படபடப்புடனும் எனக்கு இன்முகம் தராத மகிழுந்துகளின் வரிசைகளைக் கடந்து, அந்த பணியாட்களைப் பின்தொடர்ந்தவாறு இருக்கும் போது, ஆவியான முதல் நிமிடங்களில் ஏற்பட்டதைப் போன்ற தலைச்சுற்றல் மீண்டும் எனக்கு ஏற்படத் தொடங்கி இருந்தது. அவர்கள் என்னை மேடு பள்ளங்கள் போல வளைவு கொண்டிருந்த சாம்பல்நிற ரெனால்ட்டின் பொதிப்பெட்டியில் வைத்துவிட்ட பின், அனைவருமாக, நான் ஏற்கனவே எனது வீட்டைப் போல நெருக்கமாக உணரத் தொடங்கியிருந்த அந்த கட்டிடத்தின் வயிற்றிலிருந்து வெளியேறி, சுதந்திரத்திற்குள், பாரிஸ் இரவிற்குள் முழுமையாகப் புகுந்தோம். 

எந்த வளைவுகள், எந்த தெருக்களில் எல்லாம் சென்றோம் என்பது இப்போது எனக்கு நினைவில் இல்லை. வேலையாட்களைக் கூர்ந்து அவதானித்ததில், அவர்களது சமூகதளத்தில் இருந்து வெகு உச்சத்தில் இருக்கும் நபர்களைப் பற்றிப் பேசுவதை, என்னால் திடமாக அறிய முடிந்தது. எனது முதல் மனக்கணக்கு விரைவிலேயே உறுதிப்படுத்தப்பட்டது: அவர்கள் கேவலமான தோல்வியாளர்கள், ஆயினும் அவர்களது மனோபாவத்தில் ஏதோ ஒன்று இருந்தது, முதலில் நான் அதை நம்பிக்கை என்று நினைத்தேன், பின்னர் அதை அப்பாவித்தனம் என்று நினைத்ததும், ஏதோ ஒரு விதத்தில் நான் அவர்களோடு நெருங்கியவன் என்று எண்ணம் மயங்கியது. வெகு ஆழத்தில் நாங்கள் ஒன்று போலவே இருந்தோம், அப்போதைக்கு எனது மரணம் தொடர்பான சம்பவங்களைப் பொறுத்தவரை அல்ல, மாறாக அவர்கள் நான் என்னை எனது இருபத்திரண்டு இருபத்தைந்து வயதுகளில் மாணவனாக இருந்தபோது எப்படி கற்பிதம் செய்து கொண்டிருந்தேனோ, இந்த உலகமே ஒரு நாள் என் காலடியில் வந்து விழும் என்று நினைத்துக் கொண்டிருந்தேனோ அப்படி இருந்தார்கள். 

பாரிஸின் மிகவும் பிரத்யேகமான குடியிருப்புகள் இருந்த பகுதியில் ஒரு விடுதிக்கு முன்பாக மகிழுந்து நின்றது. எனக்கு அப்படித்தான் தோன்றியது. போலிக்கலைஞர்களுள் ஒருவன் கீழிறங்கி அழைப்பு மணியை அடித்தான். கொஞ்ச நேரத்திற்குப் பிறகு இருளில் இருந்து ஒரு குரல் வெளிப்பட்டு அவனை அசையச் சொன்னது, இல்லை அவனை வலது புறமாக நகர்ந்து சற்றே தாடையை உயர்த்திக் காட்டும்படி சொன்னது. வேலையாள் சொன்னபடியே நடந்து கொண்டான். தன் தலையை உயர்த்தினான். மற்றவன் மகிழுந்தில் அமர்ந்தபடியே சன்னலின் வெளியே தலையை விட்டு வாயிற்கதவின் உச்சியில் இருந்து எங்களை உற்று நோக்கிக் கொண்டிருந்த காமிராவின் திசையில் கையசைத்தான். அந்த குரல் தொண்டையைச் செருமும் ஒலியெழுப்பி (அந்த புள்ளியில் நான் விரைவிலேயே, தீவிர உள்ளொடுக்கப் பண்பு கொண்ட ஒரு மனிதனைச் சந்திக்கவிருக்கிறேன் என்பதைத் தெரிந்திருந்தேன்) எங்களை உள்ளே நுழையுமாறு அறிவித்தது. 

வாயிற்கதவு ஒரு மெல்லிய கீறீச்சொலியுடன் திறக்கப்பட்டதும், மகிழுந்து ஒரு பாம்பு போன்ற நீண்ட பாதையின் வழியாக நேரே மரங்கள் மற்றும் புதர்ச்செடிகளின்- அவற்றில் சில விசித்திரமாக வளர்ந்திருந்து என்றாலும் புறக்கணிக்கத்தகும் அளவிற்கு இல்லை – ஊடே நுழைந்து சென்றது. நாங்கள் அந்த வசிப்பிடத்தின் பல நீட்சிகளில் ஒன்றில் நிறுத்திக் கொண்டோம். பணியாட்கள் எனது சடலத்தினை பெட்டியிலிருந்து இறக்கிக் கொண்டிருக்கும் போது திகைப்புடனும் பிரமிப்புடனும் அந்த கட்டிடத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அத்தகைய வீட்டிற்குள், எனது வாழ்க்கையில் ஒருபோதும் நான் கால்வைத்திருந்ததே இல்லை. அது பழைமையான கட்டிடமாகத் தோற்றமளித்தது. அது நிச்சயம் பெருமதிப்பு கொண்டதாய் இருக்கவேண்டும். எனது கட்டிடவியல் அறிவினை நீட்டி முழக்கி இதற்கு மேல் எதையும் சொல்ல முடியவில்லை.

நாங்கள் ஒரு நுழைவாயிலின் வழியைப் பிடித்து உள்நுழைந்தோம். உணவகத்தில் பல்லாண்டுகளாக மூடி வைக்கப்பட்டதால் குளிர்ந்தும் அழுக்கின்றியும் இருப்பதைப் போன்ற தோற்றத்தில் இருந்த அடுமனையை நாங்கள் கடந்து சென்ற பின், ஒரு மங்கிய வெளிச்சம் கொண்ட நடைபாதையைக் கடந்து, மூலையில் இருந்த ஒரு மின்தூக்கியில் ஏறி அடித்தளத்திற்குச் சென்றோம். மின்தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்ட போது அங்கு ஷான் – க்ளாட் வில்னவ் இருந்தார். அவரை நான் உடனடியாகவே அடையாளம் கண்டு கொண்டேன். நீண்ட வெண்மயிரும், தடித்த கண்ணாடியும், அநாதரவாக விடப்பட்ட குழந்தையின் அரைவிழிப் பார்வையும் என்றிருந்த அவரது இறுகிக் குறுகியிருந்த உதடுகள் மட்டும், அவர் தனக்கு என்ன தேவை என்பதில் தீர்க்கத்துடன் இருப்பவர் என்ற அடையாளத்தை ஏற்றிக் காட்டியது. அவர் ஜீன்ஸும், வெள்ளை நிற அரைக்கைச் சட்டையும் அணிந்திருந்தார். நான் ஆச்சரியப்பட்டேன், ஏனென்றால் எல்லா புகைப்படங்களிலுமே அவர் நேர்த்தியான உடையணிந்தே நான் பார்த்திருக்கிறேன். கவனத்துடன் தேர்ந்தெடுக்கப்பட்டவை என்ற போதும் நேர்த்தியானவை. ஆனால் இப்போது எனக்கு முன்பு நின்று கொண்டிருந்த வில்னவ்வோ தலைகீழாக ஏதோ தூக்கக் கொள்ளைநோயால் பாதிக்கப்பட்டிருந்த ஒரு பழைய ராக் பாடகன் போல இருந்தார். அவரது நடை அப்போதும் தடுமாற்றமின்றி இருந்தது; எனினும் தொலைக்காட்சியில் இலையுதிர்-குளிர்கால அல்லது வசந்த-கோடைக்கால நிகழ்ச்சிகளின் இறுதியில் இருக்கும் அவரது பூனைநடையின் போது தோன்றும் அதே சமநிலையற்ற தன்மையுடனான விதத்தில் – பழகிய வீட்டுவேலையைச் செய்யும் தேர்ச்சியுடன், தனது மாதிரிகளிடமிருந்து வரும் கட்டற்ற பாராட்டுகளைப் பெறுவதாகவும், பொதுமக்களின் ஏகமனதான கைத்தட்டல்களை அள்ளுவதாகவும் – அது இருந்தது. 

அடர்பச்சைநிற சோஃபாவில் எனது உடலினைக் கிடத்திவிட்டு வில்னவ்வின் முடிவிற்காகக் காத்திருப்பவர்கள் போல சில அடிகள் பின்னால் நகர்ந்து கொண்டனர் அந்த பணியாட்கள். அவர் எனது உடலருகே வந்து, என் முகத்தைத் திறந்து பார்த்துவிட்டு, ஒரு வார்த்தை கூட பேசாமல் (எனக்குத் தோன்றியபடி) அழகிய மரத்தில் வார்த்துச் செய்யப்பட்ட சிறிய மேசையினை நோக்கிச் சென்று அதிலிருந்து ஒரு உறையினை வெளியே எடுத்தார். பணியாட்கள் இருவரும் உறையினைப் பெற்றுக் கொண்டனர், நிச்சயம் அதில் குறிப்பிடத்தக்க அளவு பணம் இருந்திருக்கும் என்றபோதும் அதை எண்ணிப் பார்க்க யாரும் நினைத்ததாகத் தெரியவில்லை. பிறகு அவர்களில் ஒருவன் மறுநாள் காலை ஏழு மணிக்கு என்னை எடுத்துக் கொண்டு போக மீண்டும் வரவிருப்பதாகச் சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றனர். அவர்களது பிரியாவிடையினை வில்னவ் அலட்சியப்படுத்தினார். நாங்கள் உள்ளே வந்த அதே பாதையில் வேலையாட்கள் இருவரும் வெளியேறினர். எனக்கு மின்தூக்கியின் சத்தமும் பிறகு மெளனமும் செவிப்பட்டது. எனது உடலை எவ்விதமும் பொருட்படுத்தாமல் தொலைக்காட்சித் திரையை ஓடவிட்டான் வில்னவ். நான் அவனது தோள்பட்டைக்கு மேலே பார்த்தேன். போலி கலைஞர்கள் இருவரும் வில்னவ் வாயிலைத் திறப்பதற்காக காத்துக் கொண்டிருந்தனர். பிறகு மகிழுந்து அந்த பிரத்யேகமான குடியிருப்புகள் இருந்த தெருக்களுக்குள் புக இரும்பு வாயிற்கதவு கீறீச்சிடும் சிற்றிரைச்சலை எழுப்பியபடி மூடிக்கொண்டது.

அந்த நொடியிலிருந்து எனது மீயதார்த்த வாழ்வின் அத்தனையும் மாற்றம் காணத் தொடங்கியது. வேகவேகமாக அவை சம்பவித்த போதும், ஒன்றிலிருந்து ஒன்று முற்றிலும் மாறுபட்டதாக, அவை முடுக்கம் கொண்டிருந்தன. வழக்கமான விடுதி மதுவருந்தகம் போலிருந்த இடத்திற்குச் சென்று வில்னவ், அங்கிருந்து ஒரு ஆப்பிள் சாறினை வெளியே எடுத்தான். குடித்துக் கொண்டே இசையை போட்டுவிட்டான். அந்த இசை நான் கேட்டிருக்காதது, அல்லது கேட்டிருக்கக்கூடும் என்றாலும் உற்று கேட்கையில் பழக்கப்பட்டதாகத் தெரியவில்லை : மின்கிடார்கள், பியானோ, ஒரு சாக்சபோன் இவற்றிலிருந்து வெளிப்படும் துன்பம் நிறைந்த துக்கம் கவிழும் ஒரு இசை, ஆயினும் இசையமைத்தவரின் விடாப்பிடியான உள்ளத்தை காட்டக்கூடிய ஒரு தீவிரமான இசையாகவும் இருந்தது. இசைவட்டின் மீது இசையமைப்பாளரின் பெயர் இருக்கக்கூடும் என்ற எண்ணத்துடன் ஒலிக்கருவியின் அருகே சென்று பார்த்தேன், எதுவும் காணக் கிடைக்கவில்லை. வில்னவுடைய முகம் மட்டும் அரையிருளில் விசித்திரமாக தனியனாக இருந்து கொண்டிருக்கும் அவரது முகம் ஆப்பிள் சாறினை அருந்தியதால், இன்னும் சூடான செம்மை கொண்டதைப் போல தோற்றமளித்தது. அவரது கன்னத்தின் மையத்தில் இருந்த ஒரு துளி வியர்வையை நான் கவனித்தேன். மெல்ல, தாடையை நோக்கி துளி உருண்டோடி வந்தது. அவர் மென்நடுக்கம் கொண்டிருப்பதையும் என்னால் பார்க்க முடிந்தது என்று எண்ணிக் கொண்டேன். 

பிறகு இசைக்கருவியின் அருகே தனது கையில் இருந்த கண்ணாடிக் குடுவையை வைத்துவிட்டு என் உடலை நோக்கி வந்தார். கொஞ்ச நேரத்திற்கு என்னைப் பார்த்துக் கொண்டு, என்ன செய்யப் போகிறோம் என்ற குழப்பத்தில் இருப்பது போல – பிறகு அதைச் செய்தே விட்டான் என்ற போதும் – நின்றபடி இருந்தார், அல்லது இந்த நெகிழிப்பையில், தன் காலடியில் எதற்கும் தயாராகக் கிடக்கும் இந்த பொருளுக்குள்ளே ஒரு காலத்தில் எத்தகைய இச்சைகளும் நம்பிக்கைகளும் கொந்தளித்துக் கொண்டிருந்திருக்கக் கூடும் என்று ஊகிப்பது போல இருந்தார். அவர், அப்படியே கொஞ்ச நேரம் அங்கிருந்தார். எனக்கு அவரது உள்நோக்கங்கள் என்னவாக இருக்கும் என்று தெரிந்திருக்கவில்லை – நான் எப்போதுமே அப்பாவியாகவே இருந்திருக்கிறேன். எனக்குத் தெரிந்திருந்தால் பதற்றத்துடன் இருந்திருப்பேன். ஆனால் பதற்றமின்றி இருந்ததால், நான் அறையில் இருந்த தோல்நாற்காலியில் கைகளைத் தளர்த்தி வைத்து வசதியான முறையில் அமர்ந்து கொண்டு காத்திருந்தேன். 

எனது உடலிருந்த கட்டினை மிகுந்த கவனத்தோடு திறந்த வில்னவ், எனது கால்களின் கீழிருந்து பையினை மேல் நோக்கி மடித்து விட்டார், அதன்பிறகு (இரண்டு அல்லது மூன்று நீள்நிமிடங்களில்) அதை முழுவதுமாக விலக்கிவிட்டிருந்தார், எனது உடல் பச்சைத் தோலுறையால் மூடப்பட்டிருந்த சோஃபாவில் நிர்வாணமாய் கிடந்தது. எதிரில் நின்று கொண்டிருந்தான் – மண்டியிட்டுக் கொண்டிருந்தான் – தனது சட்டையைக் கழற்றிவிட்டு கொஞ்சம் நிலைத்திருந்த அவன் என்னுடல் மீது தனது பார்வையைப் பதித்தான், அப்போதுதான் நானும் எழுந்து நின்று அருகே வந்து எனது நிர்வாண உடலைப் பார்த்தேன், நான் விரும்பியதை விடவும் சற்று குண்டாகத்தான் இருந்தது என்ற போதும், அப்படியொன்றும் மோசமில்லை – விழிகள் மூடப்பட்டும், முகத்தில் உணர்ச்சிகள் ஏதுமற்றும் இருந்தது – அப்போது நான் வில்னவுடைய மார்பினைக் கண்டேன், மிகக் குறைவானவர்களே பார்த்திருக்கக் கூடியது அது, ஏனெனில் தனது பலபண்புகளில் ஒன்றான முன்னெச்சரிக்கை குணத்திற்காக நன்கு அறியப்பட்டவர், இந்த மகத்தான வடிவமைப்பாளர்  (உதாரணமாக, இவர் கடற்கரையில் இருப்பதான படங்களை ஒருபோதும் ஊடகங்கள் வெளியிட்டதில்லை). அடுத்து என்ன நடக்கும் என்பதைப் புரிந்துகொள்ளும் பொருட்டு அவனது முகத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகளைக் கவனித்துக் கொண்டிருந்தேன், ஆனால் அவனது முகம் முழுக்க என்னால் கூச்சத்தைத்தான் காண முடிந்தது; புகைப்படங்களில் தோற்றமளிப்பதை விடவும் கூடுதலான கூச்சத்துடன் காணப்பட்டான், அதீத கூச்சம், சொல்லப் போனால் கிசுகிசுப் பத்திரிக்கைகளில் வரும் புகைப்படங்களில் இருப்பதை விட கூடுதலான கூச்சத்துடன் காணப்பட்டான். 

வில்னவ் தனது கால் சராயையும் காலுறைகளையும் கழற்றிவிட்டு எனது உடலுக்கு அருகில் படுத்துக் கொண்டான். சரியாக, அந்த நொடியில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது எனக்குப் புரிந்தது மூர்ச்சையாகினேன். அடுத்து நடக்கப் போவதை யூகிப்பது மிகவும் எளியதுதான் என்றாலும், எல்லோரும் சொல்வதைப் போல அது ஆசனவாய்ப்புணர்வு அல்ல. வில்னவ் என்னைக் கட்டியணைத்து, வருடி, எனது உதடுகளில் வெறித்தனமாக முத்தமிட்டான். அவன் எனது சிசினம் மற்றும் விதைப்பைகளை மசாஜ் செய்து கொண்டிருந்தது, ஒரு காலத்தில் என்னுடைய கனவுப் பெண்மணியாக இருந்த சீசில் லேம்பெல் என் மீது காட்டிய அளப்பரிய மோகத்தை ஒத்திருந்தது. அரையிருளில் கால் மணி நேரமாக என்னைக் கொஞ்சிய பிறகு அவனுக்கு குறி விரைத்தெழுந்ததை நான் கவனித்தேன். அடக் கடவுளே, இப்போது அவன் என்னை வன்புணரப் போகிறான். ஆனால் அப்படி ஏதும் நிகழ்வில்லை. உச்சம் அடையும் வரை எனது ஒரு தொடையில் தன்னைத் தேய்த்துக் கொள்ள தொடங்கிவிட்டான் அந்த வடிவமைப்பாளன். எனது எதிர்வினையோ தலைகீழாகிப் போனது; நான் பார்த்துக் கொண்டிருந்தது என்னை மிகவும் தாழ்வுணர்வு கொள்ள வைத்தது, வன்புணர்விலிருந்து தப்பியதற்கு நன்றியுணர்வு இருந்த போதும், வில்னவின் ரகசியத்தை அறிந்ததற்கு திகைப்பு எழுந்தது, எனது உடலை வாடகைக்கு விட்டதற்காக அந்த பணியாட்கள் மீது எரிச்சல் வந்தது, விரும்பத்திற்கெதிராக, ஃப்ரான்ஸின் மிக முக்கியப் பிரமுகர் ஒருவருக்கு சேவைப் பொருளாவதால் சங்கடமும் எழுந்தது.

உச்சமடைந்த பிறகு வில்னவ் விழிகளை மூடியபடி பெருமூச்சினை வெளியேற்றினான். அந்த பெருமூச்சில் சிறுபகுதியில் அருவருப்பும் இருந்ததாக எனக்குத் தோன்றியது. அவன் விரைந்து எழுந்து அங்கிருந்த சோஃபாவில் எனது உடலுக்குத் தனது முதுகைக் காட்டியபடி சில நொடிகள் அமர்ந்திருந்தபடியே தனது உமிழுறுப்பைத் கைகளால் துடைத்துக் கொண்டிருந்தான். நீ இதற்காக வெட்கப்பட வேண்டும், என்று நான் சொன்னேன்.

இறப்பிற்குப் பிறகு அப்போதுதான் நான் முதல் முறையாகப் பேசுகிறேன். கொஞ்சம் திகைப்புடன் அல்லது திகைப்பு என்று சொல்லும் அளவை விடக் குறைவான அளவிலான ஆச்சரியத்துடன் – நிச்சயம் இத்தகைய நிலைமையில் நான் கூடுதலான திகைப்புடன்தான் இருந்திருப்பேன் – வில்னவ் தனது தலையை உயர்த்தி ஜமுக்காளத்தில் இருந்த தனது கண்ணாடிக் குவளையை நோக்கித் தன் கைகளை நீட்டினான். 

அவன் என்னைக் கேட்டுவிட்டான் என்பதை உடனடியாகவே புரிந்து கொண்டேன். அது ஒரு அற்புதத்தைப் போலிருந்தது. உடனடியாக, அவனது கீழ்மையான பழக்கத்திற்காக அவனை மன்னித்துவிட்டேன் என்ற எண்ணம் எனக்கு அதீத மகிழ்ச்சியை அளித்தது. இருந்த போதும் ஒரு மூடனைப் போல நான் மீண்டும் சொன்னேன்: நீ வெட்கப்பட வேண்டும். “யாரது?”, வில்னவ் கேட்டான். “நான் தான்” என்றபடி, “நீ இப்போது வன்புணர்ந்தாயே அந்த சடலத்தின் ஆவி”, என்றேன். வில்னவ் வெளிறிப்போனான், அதேசமயம், அவனது கன்னத்திற்கு கூடுதலாய் செந்நிறமேறியது. அவன் பயத்தினாலோ அல்லது மாரடைப்பு வந்தோ இறந்துவிடப்போகிறான் என்று எனக்கு வருத்தமேற்பட்டது இருந்த போதும் உண்மையில் அவன் அந்த அளவிற்கெல்லாம் அச்சமடையவில்லை. 

அது ஒரு பெரிய பிரச்சனை இல்லை என்று இணக்கத்தொனி தெரியும் குரலில் சொன்னேன், “நீ மன்னிக்கப்பட்டுவிட்டாய்.”

வில்னவ் விளக்குகளை எரியவிட்டு அறையின் மூலைகளை எல்லாம் பார்த்தான். அவன் பைத்தியக்காரத்தனம் செய்கிறான் என்று நினைத்தேன், மிகத்தெளிவாக வேறு யாரும் அங்கிருக்கவில்லை; ஒரு குள்ளனை மட்டும் தான் அந்த அறையில் ஒளித்து வைக்க முடியும். குள்ளன் கூட அல்ல விசித்திரக் குள்ளனை மட்டும்தான். பிறகுதான் பைத்தியம் அடையும் அளவிற்கெல்லாம் போகப்போவதில்லை, இந்த இரும்பு நரம்பமைவு கொண்ட வடிவமைப்பாளர் என்பதை நான் உணர்ந்து கொண்டேன்: அவன் ஒரு ஆளைத் தேடவில்லை ஏதேனும் ஒலிப்புகருவி இருக்கிறதா என்றுதான் தேடிக் கொண்டிருந்திருக்கிறான். நான் அமைதி அடைந்ததும், அவன் மீது கருணையுணர்வு பெருகியதை நான் உணர்ந்தேன். அவன் அறையினைத் துழாவிய விதத்தில் மதிக்கத்தக்கதாய் ஏதோ ஒன்று இருந்தது. நானாக இருந்திருந்தால் விருட்டென அங்கிருந்து வெளியேறி ஓடியிருப்பேன்.  

நான் ஒலிபெருக்கியில் இருந்தும் பேசவில்லை, வீடியோ காமிராவில் இருந்தும் பேசவில்லை என்று சொன்னேன். தயவு செய்து கொஞ்சம் அமைதிகொள்; நாற்காலியில் அமர், நாமிருவரும் பேசலாம். எல்லாவற்றிற்கும் மேலாக என்னிடம் அச்சம் கொள்ள வேண்டாம். உனக்கு எந்த தீங்கும் நான் இழைக்கப் போவதில்லை. அப்படித்தான் நான் சொன்னேன், சொல்லிவிட்டு, என்னைப் பொருட்படுத்தாமல், தனது தேடலைத் தொடர்ந்து கொண்டிருந்த வில்னவை பார்த்துக் கொண்டிருந்தேன். அவன் செய்வதைச் செய்யட்டும் என்றிருந்தேன். அவன் அறையையே தலைகீழாகக் குழப்பிப் போட்டுக் கொண்டிருக்க, நான் நாற்காலியில் கரங்களை வைத்து அமர்ந்திருந்தேன். பிறகு எனக்கொரு யோசனை உதித்தது. நாமிருவரும், ஒரு ஒலிப்பெருக்கியையோ காமிராவையோ மறைத்து வைக்க முடியாத அளவிற்கான ஒரு சிறிய அறைக்குள் போய் அடைத்துக் கொள்வோம் (சவப்பெட்டியைப் போல சிறுத்திருக்கும் அறை என்பதுதான் நான் வெளிப்படுத்திய துல்லியமான சொற்கள்) என்று வைத்துக் கொள்வோம், அங்கும் நான் தொடர்ந்து உன்னிடம், எனது இயல்பை, எனது புதிய இயல்பை நீ ஏற்கும்படி பேசிக் கொண்டே இருக்கமுடியும். அவன் எனது கருத்தினைப் பரிசீலித்துக் கொண்டிருக்கையில் நான் என்னைச் சரிவர முன்வைக்கவில்லை என்று எனக்குள் தோன்றியது, எப்படிப்பார்த்தாலும் ‘இயல்பு’ என்று எனது ஆவி நிலையைச் சுட்ட சரிவராது. என் இயல்பு, நீங்கள் என்ன நினைத்தாலும், உயிர்வாழ்பவரைப் போன்றதே, ஆனாலும் நான் உயிருடன் இல்லை என்பது தெள்ளத்தெளிவு. இவை அனைத்துமே கனவாக இருக்கக்கூடும் என்ற எண்ணம் என் மூளையில் உதித்தது. எனது ஆவித்தனமான தைரியத்தை வரவழைத்துக் கொண்டு, ஒருவேளை நான் இருப்பது கனவெனில், அதைத் தொடர்ந்து கண்டுகொண்டிருப்பது மட்டுமே இயல்வது (இருக்கும் ஒரே வழி) என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். கொடுங்கனவிலிருந்து, உங்களை நீங்களே பிடுங்கிக் கொள்வதென்பது பயனற்றது மட்டுமின்றி, வெறுமனே வலிக்கு வலியையும், பீதிக்குப் பீதியையும் மேலதிகமாய் கூட்டிவிடக் கூடியது என்பதை பட்டறிவின் மூலம் நான் அறிந்திருந்தேன்.

எனவே, எனது கருத்தினை நான் மீண்டும் முன்வைத்தேன், இம்முறை வில்னவ் தனது தேடலை நிறுத்திக் கொண்டு உறைந்தான் (பளபளக்கும் சஞ்சரிகைகளில் நான் ஏற்கனவே அடிக்கடி பார்த்திருக்கக் கூடிய) அவனது முகத்தினை ஆய்ந்தேன், என்ன இப்போது அவன் உள்ளத்தைச் சுட்டுவதாய் முத்து வியர்வைத் துளிகள் அவனது நெற்றியிலிருந்தும் கன்னங்களில் இருந்தும் உருண்டுகொண்டிருந்தன). அவன் அறையிலிருந்து வெளியேற, நான் பின் தொடர்ந்து சென்றேன். நீண்ட தாழ்வாரத்தின் மத்திக்கு வந்ததும் நின்று, இன்னும் நீ என்னோடு இருக்கிறாயா? என்று கேட்டான். அவனது குரல் இதமான தன்மையோடு, ஒரு இன்புள்ளி நோக்கிக் குவிவதைப் போல ஒலித்தது, ஆயினும் அநேகமாக அது ஒரு உளமயக்காகவும் இருக்கலாம். நான் இங்குதான் இருக்கிறேன், என்றேன்.

என்னால் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாத வகையில் தனது தலையை அசைத்துக் கொண்டே இருந்த வில்னவ், தனது வீட்டின் ஒவ்வொரு அறையின் முன்னும் நின்று கொண்டு, நான் இன்னும் அவனுடன்தான் இருக்கின்றேனா என்பதை உறுதிபடுத்திக் கொள்வதற்காக கேள்வி வைத்தபடி இருந்தபோது, தவறாமல் எனது இருப்பினை பதிலளித்தேன். அப்படி சொல்கையில் நான் சாந்தமாகத்தான் இருக்கிறேன் என்பதை அறிவிக்கும் பொருட்டு எனது குரல் மென்மையாகவும் அல்லது குறைந்தபட்சம் ஒரே தொனியில் இருப்பதாகவும் வைத்துக் கொண்டேன். (நான் உயிருடன் இருந்த போதே, எனது குரல் மிகவும் சாதாரணமானதாக எந்த வித சிறப்புத் தன்மையற்றுமே இருந்தது). அப்போது எனது குரல் சந்தேகத்திற்கு இடமற்ற வகையில் பிரத்தியேகமாக தனிச்சிறப்பு கொண்ட வடிவமைப்பாளனின் குரலின் தாக்கத்தால் ஆனதாக இருந்தது. நம்பகத் தன்மையை அதிகரிக்கும் பொருட்டு, ஒவ்வொரு இடத்திலும் பதிலளிக்கும் போது அந்த இடத்தின் அமைப்பு குறித்த நுண்ணிய விபரங்களையும் தந்தேன்; உதாரணமாக அங்கு ஒரு புகையிலைநிறத்தில் விளக்குக் கம்பங்கள் இரும்பினால் செய்யப்பட்டிருந்தால், அதைச் சொன்னேன். வில்னவ் ஆம் என்றோ அல்லது ஏதேனும் தவறிருப்பின் அது வார்க்கப்பட்ட இரும்பு என்பதைப் போல திருத்தத்துடனோ பதில் சொல்வான். ஆனால் அவன் பேசும் போதெல்லாம் நான் ஏதேனும் உருவம் கொண்டு எழுந்துவிடப் போகிறேன் என்ற எண்ணத்தில் இருப்பதைப் போல அல்லது என்னைச் சங்கடப்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பது போல தரையைப் பார்த்துக் கொண்டே பேசுவான். அதற்கு, மன்னிக்க வேண்டும், நான் சரியாக கவனிக்கவில்லை அல்லது நான் அப்படியான அர்த்ததில் குறிப்பிடவில்லை என்று பதிலளிப்பேன். வில்னவ் என் கூற்றை ஏற்கும் விதமாகவோ அல்லது தான் சமாளிக்கப் போகும் ஆவியின் குணத்தைப் புரிந்து கொள்ளும் விதமாகவோ இடவலமாக தன் தலையை  ஆட்டிக் கொண்டான்.  

அப்படியே நாங்கள் வீடு முழுவதும் சுற்றி வந்துவிட்டோம், ஒவ்வொரு இடமாக செல்லச் செல்ல வில்னவ் அமைதியடைந்து கொண்டே வர, நானோ பதற்றமடைந்து கொண்டே சென்றேன். ஏனென்றால் நான் எப்போதும் பொருட்களைப் பற்றிய விவரணைகளைச் சொல்வதில் தேர்ந்தவனில்லை. அது ஒருவேளை தினசரி பயன்பாட்டு பொருட்களாக இல்லாமல், விலைமதிப்பற்றதாக கருதப்படும் சமகால கலைஞர்கள் தீட்டிய ஓவியங்களாகவோ, தனது உலகளாவிய இரகசிய பயணங்களின் போது வில்னவ் கண்டெடுத்து சேகரித்து வைத்த சிற்பங்களைப் போலவோ இருக்குமாயின் எனக்கு அதைப் பற்றி அகரம் கூடத் தெரியாது.

அப்படியே நடந்து நாங்கள் சிமெண்டு தளமிடப்பட்டு, ஒரு பொருளோ, ஒரேயொரு நாற்காலி மேசையோ கூட இல்லாமல் இருந்த, விளக்குகளற்ற ஒரு இருண்ட அறையின் உள்ளே சென்று கதவடைத்துக் கொண்டோம். மேலோட்டமாகப் பார்த்தால் சங்கடம் தரும் சூழலைப் போலிருந்தாலும், என்னைப் பொறுத்தவரை இரண்டாவது அல்லது மூன்றாவது பிறப்பைப் போலிருந்தது; அதாவது ஒரு நம்பிக்கைச் சுடர்விடுதல், அத்துடன் நம்பிக்கைக் குறித்த தன்னுணர்வினை அங்கு உணர முடிந்தது. வில்னவ் சொன்னான்: நாமிருக்கும் இந்த அறையினை விவரித்துச் சொல். நானோ இது இறப்பைப் போலிருக்கிறது, அதாவது நிஜமான இறப்பைப் போல அல்ல, நாம் உயிரோடிருக்கையில் கற்பனை செய்வோமே அந்த இறப்பைப் போல இருக்கிறது என்று சொன்னேன். மீண்டும் வில்னவ் சொன்னான்: இங்கிருப்பவற்றை விவரி. எல்லாமே இருளாக இருக்கிறது. ஒரு அணுகுண்டிற்கான கவசம் போலிருக்கிறது. அத்துடன் அவ்விடம் ஒரு ஆன்மா சுருங்குவதற்கு ஏற்ற இடம் போலிருக்கிறது என்றேன், நான் இறப்பதற்கு வெகு முன்னதாகவே, என்னுள் வந்து குடியேறி விட்டு, நான் இறந்த பிறகே என்னால் உணரப்பட்டிருந்த ஒரு வெறுமையைப் போல இருக்கிறது, மேலும் நான் உணர்ந்ததை எல்லாம் தொடர்ந்து சொல்லிக் கொண்டே இருக்க முடியுமெனத் தோன்றியது, ஆனால் வில்னவ் என் பேச்சை இடைமறித்து நிறுத்திச் சொன்னான், இது போதும் என்று. அவன் என்னை நம்பிவிட்டான், சட்டென கதவைத் திறந்தான். 

வாழ்வறைக்கு சென்ற அவனை நான் பின்தொடர்ந்து போக, அவன் தனது குடுவையில் விஸ்கியை ஊற்றிக் கொண்டு, சரியாக அளவெடுக்கப்பட்ட சில சொற்தொடர்களில், தான் எனது உடலுக்குச் செய்த கீழ்மை தொடர்பாக என்னிடம் மன்னிப்பு கேட்கும் விதத்தில் பேசத் தொடங்கினான். நீ மன்னிக்கப்பட்டாய், என்றேன் நான். நான் திறந்த உள்ளமுடையவன். உண்மையில் திறந்த மனம் என்றால் என்ன என்பதை நான் அறியேன், ஆனாலும் நடந்த சம்பவங்களை எல்லாம் முற்றிலுமாக அழித்துவிட்டு, எங்களது வருங்கால உறவில் எந்த குற்றஉணர்வோ, மனக்கசப்போ மிச்சம் இருந்துவிடக் கூடாது என நினைத்தேன்.

நான் செய்ததை ஏன் செய்தேன் என்று அநேகமாக நீங்கள் ஆச்சரியப்பட்டுக் கொண்டிருக்கக் கூடும் என்று என்னிடம் வில்னவ் தெரிவித்தார்.

நான் அவனிடம் எந்த விதமான விளக்கத்தையும் கோரப் போவதில்லை என்று உறுதியளித்தேன். இருந்த போதும் வில்னவ் எனக்கு ஒரு விளக்கம் தந்தாக வேண்டும் என்பதை வற்புறுத்தினார். வேறு யாருடனேனும் என்றிருந்திருந்தால், அந்த மாலை மகிழ்ச்சியற்றதாக இருந்திருக்கும். ஆனால் என்னுடன் இருந்ததோ ஃபிரான்ஸின் மகத்தான வடிவமைப்பாளராகிய ஷான்-க்ளாட் வில்னவ். காலம் தொடர்ந்து பறந்து கொண்டிருக்க எனக்கு அவரது குழந்தைப்பருவம், பதின்வாழ்வு, இளமை, உடலுறவு பற்றிய மனத்தயக்கங்கள், ஆண்கள் மற்றும் பெண்களுடனான அனுபவங்கள், தனிமைப் பழக்கங்கள், தான் காயப்படுத்தப் படுவோம் என்ற அச்சத்தினால் அவருக்கு விளைந்த ஒரு பழக்கமான, பிறரைக் காயப்படுத்தும் நோய்மை, அவரது கலாரசனை (அதை நான் மரியாதை செய்தேன் சொல்லப் போனால் பொறாமைப்பட்டேன் எனலாம்), நீண்டகால பாதுகாப்பின்மை உணர்வு, பல பிரபலமான வடிவமைப்பாளர்களுடன் அவர் கொண்ட பிணக்குகள், ஒரு வடிவமைப்பகத்துடன் அவரது முதல்பணி, அவரது மிகப்பிரபலமான பயணங்கள் (அதை நுண்ணிய விபரங்களுடன் மிக விமரிசையாகவே பேசினார்), ஐரோப்பாவின் முதன்மையான மூன்று நடிகைகளுடன் அவர் கொண்டிருந்த நெருக்கம், பிணவறையில் இருந்து வந்த, அவ்வப்போது அவருக்குப் பிணங்களை எடுத்து வந்து தரும் இரண்டு போலிக் கலைஞர்களுடன் அவர் கொண்டிருந்த தொடர்பு மற்றும் அப்பிணங்களுடன் அவர் இருக்கும் ஓரிரவுகள், மெதுவான காட்சி ஓட்டத்தில் நடைபெறும் அழிவுக் காட்சியைப் போன்ற அவரது பலவீனங்கள் ஆகியவற்றைப் பற்றிய விபரங்களை, திரைச்சீலையின் வழியே வடிகட்டப்பட்டு விடியற்கிரணங்கள் உள்ளே நுழையும் வரைச் சுருங்கச் சொல்லிக் கொண்டிருந்தார்.   

நாங்கள் நெடுநேரம் மெளனமாக அமர்ந்திருந்தோம். நாங்கள் இருவருமே அதீத மகிழ்ச்சியால் ஆட்பட்டிருக்காவிடிலும், குறைந்தபட்ச மகிழ்வுடனேயே இருந்தோம் என்பதை அறிந்திருந்தேன். கொஞ்சநேரம் கழித்து அந்த பணியாட்கள் வந்து சேர்ந்தனர். வில்னவ் தரையினைப் பார்த்தபடி என்னிடம் தான் என்ன செய்வது என்று கேட்டார். எப்படியிருந்தாலும் வந்து சேர்ந்திருப்பது என்னுடல்தானே. நான் அவனது பண்பிற்கு நன்றி கூறியதோடு, அத்தகைய எண்ணங்களை எல்லாம் பொருட்படுத்த முடியாத இடத்திற்குக் கடந்து போய் விட்டேன் எனத் தெரிவித்தேன். எப்போதும் என்ன செய்வீர்களோ அதையே இப்போதும் செய்யுங்கள் என்றேன். நீ போய் விடுவாயா? என்று அவர் கேட்டார். நான் ஏற்கனவே முடிவு செய்திருந்த போதும், கொஞ்சம் யோசித்து சொல்வதைப் போல மறுப்பு சொன்னேன், நான் அங்கிருந்து கிளம்பி வெளியேறப் போவதில்லை, அவருக்கு எந்த ஆட்சேபணையும் இல்லாத பட்சத்தில். வில்னவிற்கு நிம்மதியாக இருந்தது போல தோன்றியது: அதற்கு அப்படியே நேரெதிராக தான் ஆட்சேபிக்கப் போவதில்லை என்றார். அழைப்பு மணியடித்ததும், திரையில் இருந்த மாற்றியைச் சொடுக்க வாயிற்கதவு திறந்து வாடகைக்கார பையன்கள், ஒரு வார்த்தைக் கூட பேசாமல் உள்ளே வந்து சேர்ந்தனர். 

இரவில் நடந்த நிகழ்வுகளால் களைப்புற்றிருந்த வில்னவ் சோஃபாவை விட்டு எழவில்லை. போலிக்கலைஞர்கள் அவருக்கு முகமன் செய்தனர். அவர்களுள் ஒருவன் அரட்டைக்குத் தயாராவதைப் போலத் தெரிந்தது, ஆனால் மற்றொருவன் அவனை முழங்கையால் இடித்துச் சைகை செய்ய இருவரும் வேறொரு வீண்பேச்சும் பேசாமல் கீழிறங்கி எனது உடலை எடுத்துவரச் சென்றனர். வில்னவ் தனது இமைகளைத் தாழ்த்தி உறங்குவது போல காணப்பட்டார். நான் பணியாட்களைத் தொடர்ந்து கீழ்தளத்திற்குப் போனேன். பிணவறைப் பையில் அரையளவு நுழைக்கப்பட்டு எனது உடல் அங்கே கிடந்தது. அவர்கள் அதை முழுமையாக பையில் இட்டு, எடுத்துச் சென்று மகிழுந்தின் பொதிப்பெட்டியில் வைப்பதை பார்த்துக் கொண்டிருந்தேன். அது குளிர்ந்த பிணவறையில் எனது மனைவியோ அல்லது உறவினரோ வந்து கோரும் வரை காத்திருக்கப் போவதை கற்பனை செய்து பார்த்தேன். ஆனால் நான் இப்போது உணர்ச்சிப்பூர்வமான எண்ணங்களுக்கு இடமளித்துவிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டேன். பின்னர் பணியாட்கள் மகிழுந்தில் ஏறி நேர்த்தியான மரங்கள் இருபுறமும் வரிசையாக நடப்பட்ட பாதையில் சென்ற போது, ஒரு துளி நினைவேக்கமோ துக்கமோ என்னுள் எழவில்லை. 

நான் மீண்டும் வீட்டின் வாழ்வறைக்கு வந்த போது, வில்னவ் இன்னமும் சோஃபாவில் அமர்ந்திருந்தார். அவர் தன் கைகளைக் குறுக்காகக் கட்டிக் கொண்டு, குளிரால் நடுங்கியபடி தனக்குத் தானே பேசிக் கொண்டிருந்தார். (அவர் என்னிடம் தான் பேசிக் கொண்டிருந்திருக்கிறார் என்று சீக்கிரமே புரிந்து கொண்டேன்). நான் அவருக்கு எதிரில் இருந்த மென்மையான முதுகுத்தாங்கி வைக்கப்பட்டிருந்த மரநாற்காலியில் அமர்ந்து, சாளரத்தின் வழியே சோலையையும், இன்காலை ஒளியையும் நோக்கியவாறு, அவர் தனக்கு தோன்றும் வரை தோன்றியதை எல்லாம் பேசட்டும் என்றிருந்தேன். 


மூலம் : இராபர்டோ பொலான்யோ

தமிழில் : கோ.கமலக்கண்ணன்


ஆசிரியர்கள் குறிப்பு:

இராபர்டோ பொலான்யோ :சிலி நாட்டின் எழுத்தாளர். எழுத்தின் பெரும்பான்மையான வடிவங்களில் உச்சம் தொட்டவர். 2666 என்ற நாவல் அவரது மற்றும் இலத்தீன் அமேரிக்க எழுத்தின் மிக முக்கியமான ஆக்கம். அவரது நாவல்களின் முக்கிய பாத்திரங்கள் அனைத்தும் பெரும்பாலும் எழுத்தாளர்களாகவே இருக்கிறார்கள். ‘தி ரிட்டன்’ என்ற சிறுகதைத் தொகுப்பில் உள்ள அதே தலைப்பைக் கொண்ட சிறுகதை இங்கு தமிழாக்கம் செய்யப்பட்டுள்ளது. குற்றங்களின் உளவியலையும் அது இயல்பான வாழ்கை கொண்டதாக தோற்றமளிப்பவர்களோடு கொண்டிருக்கும் தொடர்பையும் புனைவாக்குவதில் பொலான்யோ நீண்ட தூரம் சென்றிருக்கிறார்.

கோ.கமலக்கண்ணன்: திருச்சிராப்பள்ளியைச் சார்ந்தவர். தொடர்ந்து இலக்கிய மற்றும் சினிமா கட்டுரைகள், மொழிபெயர்ப்பு, சிறுகதைகள் எழுதி வரும் இவர் அரசுப் பணியாளர் ஆவார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.