Monday, Aug 8, 2022

வெரோனிக்கா வோல்கோவ்


வெறுமையின்மீது நடனமாடும் ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்

மிழில் இதுவரை அறியப்படாத ஸ்பேனிஷ் மொழிப் பெண் கவிஞர்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவர்  வெரோனிக்கா வோல்கோ. இவரது கவிதைகள் மெக்சிகோவின் ஆன்மீகப் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு காமம் உட்படப் பலவற்றையும் தனித்துவமான முறையில் பேசுபவை. இவை ஸ்பேனிஷ் பண்பாட்டுடன் அதிகம் கலந்தவை என்பதால் மொழிபெயர்க்கக் கடினமானவை.

ஸ்பேனிஷ் மகாகவி ஆக்டேவியோ பாஸ் கவிதைகளால் பெரிதும் கவரப்பட்ட இவர் அமெரிக்கக் கவிஞர்களையும், பல பிரெஞ்சுக் கவிஞர்களையும் ஸ்பேனிஷ் மொழியில் ஏராளமாக மொழிபெயர்த்தார்.  அமெரிக்க ,  பிரெஞ்சு கவிதைகளில் காமத்தைக் கவித்துவமாகப் பேசும் நுட்பத்தை மொழிபெயர்க்கும்போது உணர்ந்த வெரோனிக்கா ஸ்பேனிஷ் மொழியில் குறைவாகக் காணப்பட்ட சிற்றின்பத்தைப் பேசுதலை ஸ்பேனிஷ் மொழியில் கையாளும் முயற்சியில் இறங்கினார். ஆனால் தனிப்பட்ட மனிதனின் இன்பமும், துன்பமும் மொத்த பிரபஞ்சத்தின் புரிதலில் மிகக்குறைவான முக்கியத்துவத்தைப் பெறுகின்றன என்று ஒரு நேர்காணலில் சொல்கிறார்.

தன் சொந்த ஆன்மாவையும், பிரதேச அடையாளங்களையும் புதிய கண்டுபிடிப்புக்கு உட்படுத்த உலக அளவிலான கவிஞர்களின் வாசிப்பு உதவுகிறது என்று இவர் பேசினார். அதே நேரத்தில் காலனித்துவ மதிப்பீடுகளை மறுபரிசீலனை செய்வதிலும் இவர் ஈடுபட்டார்.

இவர் 18 வயதிலேயே கவிதைகள் எழுதத் தொடங்கி, விமர்சனம், புனைவு, மொழிபெயர்ப்பு, ஓவிய விமர்சனம் ஆகியவற்றிற்குப் பங்களித்தவர். தென்னாப்பிரிக்காவுக்குச் சென்று அங்கிருந்த ஆப்பிரிக்கர்களின் இன்னல்களை மையப்படுத்தி தென் ஆப்பிரிக்காவின் அன்றாட வாழ்க்கை பற்றி புத்தகம் எழுதியவர். இவரது “குவி ஆடியில் தெரியும் சுய உருவம்”, “இருத்தலின் பசி “ ஆகியவற்றில் தொடுதலின் மூலமாக அறியப்படும் உலகம், இருள், இரவு, சிறிது வெளிச்சம் ஆகியவை பற்றி நிறைய எழுதி இருக்கிறார்.

“வார்த்தைகளில் பிறக்கிறோம். வார்த்தைகளில் வாழ்கிறோம். மௌனத்தின் பிரச்சினை கவிஞர்களுக்கு இருக்கிறது. வெறுமையோடும் கவிஞர்களுக்குப் பிரச்சினை இருக்கிறது.” என்று ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். இதுவரை தமிழில் மொழிபெயர்க்கப்படாத இவரது கவிதை ஒன்றை இங்கு மொழிபெயர்த்துக் கொடுத்திருக்கிறேன்.


தொடக்கம்

நீ ஆடையற்று இருக்கிறாய்.
உனது மிருதுத்தன்மை எல்லையற்றது.
என் விரல்களில் நீ நடுங்குகிறாய்.
உனது மூச்சுக் காற்று
உனது உடம்புக்குள்ளேயே பறக்கிறது.

எனது கரங்களில் நீ ஒரு பறவை.
ஆசை உன்னைக் காயப்படுத்தும் நிலைக்கு ஆளாக்குகிறது.
நுட்பமான வலியுடன் நாம் ஒருவரை ஒருவர் தொடுகிறோம்.
சரணடைவதால் பலிகடாவாக்கப்படுபவர்கள்
கவனிக்கப்படாமலேயே விட்டு விடப்படுகிறார்கள்
என்பதை நாம் அறிவோம்.

இன்பப் பரவசம்
ஒரு நாக்கைப்போல் நம்மை நக்குகிறது.
விழுங்குகிறது.
நெருப்பில் தகிக்கும் நம் கண்கள்
தொலைந்து போய் விட்டன.


தமிழில் : இந்திரன்


மொழிபெயர்ப்பாளர் குறிப்பு:

இந்திரன்  (இராசேந்திரன்) தமிழகத்தின் மிக முக்கிய கலை விமர்சகர். கவிஞர். மொழிபெயர்ப்பாளர். ஓவியர். தமிழ், ஆங்கில மொழிகளில் எழுதும் இவர் தற்போது இந்தியாவில் சென்னையில் வாழ்கிறார். 2000 ம் ஆண்டில் தமிழக அரசு கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலை திறந்தபோது 133 அதிகாரங்களுக்கு 133 நவீன ஓவியர்களின் படைப்புகளைத் திரட்டி மாபெரும் கண்காட்சி அமைத்தவர். பிரிட்டீஷ் கவுன்சிலினால் தேர்ந்தெடுக்கப்பட்டு லண்டன் அருங்காட்சியகங்களில் இருக்கும் இந்தியக் கலைப் பொருட்களை ஆய்வு செய்வதற்கு அனுப்பப்பட்டவர். இந்திரன் 2011 ஆம் ஆண்டுக்கான சாகித்திய அகாதமியின் மொழிபெயர்ப்பு விருதினை “பறவைகள் ஒருவேளை தூங்கிப் போயிருக்கலாம்” என்கிற மனோரமா பிஸ்வால் மஹபத்ராவின் ஒரிய மொழிக் கவிதைகளின் மொழிபெயர்ப்புக்காகப் பெற்றார்.

பகிர்:
Latest comment
  • அருமையான மொழி பெயர்ப்பு வாழ்த்துக்கள் இந்திரன் அவர்களே

leave a comment

error: Content is protected !!