நீங்கள் எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ, அந்த மரணம் நிச்சயமாக உங்களைச் சந்திக்கும், பிறகு, மறைவானதையும் பகிரங்கமானதையும் நன்கறிந்தவனிடம் நீங்கள் கொண்டு மீட்டப்படுவீர்கள் – அப்பால், அவன் நீங்கள் செய்து கொண்டிருந்தவை பற்றி உங்களுக்கு அறிவிப்பான்” நபியே! நீர் கூறுவீராக.
நாம் நிற்கும் உயரத்திற்கு ஏற்ப கயமைகளும் கீழ்மைகளும் இல்லாது அழகு ததும்பும் உலகைக் காணலாம். மலையேற்றம், மலையில் நின்று கீழே பார்த்தல் எல்லாம் தோற்றம் தரும் அழகில் கொஞ்சநேரம் மகிழ்ந்திருக்கவே. அது நம் நினைவுகளில் மாற்றத்தைக் கொண்டுவரும். கு.ஜெயப்பிரகாஷின் சா நாவலில் தற்கொலை செய்துகொள்ள நினைப்பவன் பத்துமாடிக் கட்டிடத்தின் மேல் நின்று உடன் அங்கிருந்து விழுந்து சாவாது கீழே உள்ளவற்றை ரசிக்கத் தொடங்குகிறான். நினைவு அவனை சுழலடித்துக் கொண்டிருக்க நாமும் நாவலில் நம் பயணிப்பை தொடங்குகிறோம். நபிகள் கூறும் அறிவிப்பனாக மாற்றம் கொள்கிறான். ‘உண்மையில் உனக்கு சாவதற்குப் பயமாக இருக்கிறது. அதனால்தான் இவ்வளவு யோசிக்கிறாய்‘ என தீர்மானகரமாக சொல்ல முடிவதன் காரணிகளை நாவல் தன்னகத்தே கொண்டுள்ளது.
சூரியன் கனிவதற்கு முன் வாங்கிக்கொண்ட மஞ்சள் நிறத்தில் தகதகத்தது சாமந்திப்பூக்காடு. மனம் வெறுமை கொள்ளும் நாட்களில் ஓசூரிலிருந்து சில கிலோமீட்டர் பயணிப்பில் சாமந்திப்பூக்காடுகளை நிறைய பார்க்க வாய்த்திருப்பது எனக்கான ஆறுதல். சாமந்திப்பூவை சாவோடு தொடர்புடையதாக ஒரு நாளும் நினைக்கத் தோன்றியதில்லை. சாவு உண்டாக்கும் அவதிப்பாட்டின் மனவோட்டமே ‘சா‘.
மரண ஊர்வலம் ஒன்றைக் காட்சிப்படுத்தி அங்கு வீசப்படும் சாமந்தி பூ பஸ்சின் சீட்டில் விழ, வந்தமரும் பெண் அதன் மணத்தை தன்னுள் கிரகித்தபடி இருக்கிறாள். சாலையில் இறந்து கிடக்கும் குரங்கை அப்புறப்படுத்திய இடத்தில் நீரை ஊற்றி அவ்விடத்தில் சாமந்தியை அவள் வைக்கும் கணம் நம் மனதிலும் பயணிக்க துவங்கிடுகிறாள். பேருந்தில் குரங்கு செத்திடுச்சி என எல்லோரும் பேசிக்கொண்டிருப்பதைக் கண்ட குழந்தை தன் அம்மாவிடம் செத்திடுச்சினா என்னம்மா எனக் கேட்பது, நான் இக்கேள்வியை எதிர்கொண்ட நாட்கள் நினைவில் வந்தது. நம்மிடம் இருக்கும் டெம்ப்ளேட் பதில்கள் எல்லா குழந்தைகளையும் திருப்தி அடையச் செய்திடுவதில்லை. நண்பரின் மகள் இக்கேள்வியைக் கேட்டபோது உடனடியாக சமாளிக்க சாமிகிட்ட போயிடுவாங்க என்றேன். அவங்கள சாமி என்ன செய்யும் எனும் அடுத்த கேள்வியை நான் எதிர்பார்க்காதிருக்க அவங்களையும் சாமியாக்கிடும் என்றேன். அப்ப நிறைய்ய சாமி இருக்குதானே ஏன் கொஞ்ச சாமிய மட்டும் கும்பிடுகிறோம் என்றால். கேள்வியும், பதிலுமற்று வளர்ந்த புத்தி மடைமாற்றி நழுவிப்போனது. இனி குழந்தைகளிடம் உண்மையைப் பேசவேண்டுமெனும் அறிவைத் தந்தது. நாவல் இப்படி நமக்கான பல பயணிப்புகளை அசைபோடச் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.
நாவலில் நாய் ஒன்றுக்கு அரசு எனப் பெயரிட்டு, அதற்கு வெறிகொள்ளச் செய்து, இறந்துபோக புதைத்து சாமந்திப் பூவை வைத்திருப்பது நல்ல எள்ளல். மதவெறிகொண்ட அரசும் என்றாவது இல்லாமல் போகும். அன்று சாமந்திகளைக் கொட்ட மனம் குளிரும்.
அக்காள்களின் உலகம் தனித்துவமானது. உறவை மீறிய ஒரு அற்புதம். மொட்டையன் மவனும் தன் சாந்தி அக்காவின் அன்பின் பிடியில் கட்டுண்டு கிடப்பவன். அப்பாவை வெறுப்பவனாக இருந்ததால் அக்காவே உலகமாகி கிடந்தவனுக்கு அக்காவின் தற்கொலை அவனை தனித்திட்டது. ஊரை விட்டு ஓடிவிடுகிறான். இப்படி ஓடுகிறவர்கள் எல்லோருமே நோக்கமற்றே ஓடுவார்கள். உலகம் நமக்கு நல்ல ஆசானாக மாறும். மரணத்தை விடக் கொடியது பசி என உணருகிறான். கிடைக்கும் வேலையில் வெற்றிகொள்ள மீண்டும் ஊர் திரும்புகிறான். இருக்கையில் எதையும் காட்டாத ஊர், பிரிவுக்குப் பின் வந்தவன் மீது கொட்டப்படும் அன்பை வெகு நுட்பமாகப் பதிவு செய்துள்ளார் ஜெயபிரகாஷ். சாந்தியின் இடத்தை நிரப்ப சாவித்திரி வருகிறாள்.
மீட்கும் பொருளாகத் தம்முடைய ஜீவனைக் கொடுப்பதற்கு’ தாமாகவே இயேசு முன்வந்தார். மனித சரித்திரத்திலேயே ஈடிணையற்ற அன்பைக் காட்டுபவராக இயேசு மனமுவந்து ‘ஒவ்வொருவருக்காகவும், மரணத்தை ருசி பார்த்தார்.’—எபிரெயர் 2:9.
பற்றிக்கொள்ள ஏதுமற்று தத்தளிக்கும் கொடிக்குக் கிடைத்த பற்றுகோலாக சாவித்திரி வந்தாள். வாழ்வை வாழத் தொடங்கினான். புதிய வரவுகள் நம்மை வேறு தளத்திற்குக் கொண்டுசெல்லும் தானே. சாதனாவின் வருகையால் வாழ்வைக் கொண்டாடத் தொடங்கினான். இச் சமூகம் நம்மை நம் போக்கில் வாழவிடாதுதானே. அது கட்டமைக்கும் பொதுப்புத்துயின் அளவுகோலை நம்மீது வைத்துக்கொண்டே இருக்கும். இம்மி பிசகினாலும் குற்ற உணர்வை உருவாக்கிவிடும். சாவித்திரி அதில் சிக்கிக்கொள்ள சாதனாவிடம் இருக்கும் பாடும் ஆற்றலை அவள் பொருட்படுத்தவில்லை. நல்லா படி நல்ல மதிப்பெண் எடு என்பதே அவளின் கீதையாகியது. மதிப்பெண் குடும்பத்தின் கௌரவமாகவும் பெருமிதமாகவும் மாற்றப்பட்டதை நாவல் சாவித்திரி மூலம் நினைவூட்டியபடியே இருந்தது. பனிரெண்டாம் வகுப்பில் தோல்வியடைந்தாள் சாதனா. சமகால தற்கொலைகளை நினைவூட்டி சாதனாவும் தற்கொலை செய்துகொண்டாள். சமூகத்தாலும், குடும்பத்தாலும் தற்கொலையை ஆயுதமாக எடுத்தவர்களின் கூட்டு நினைவாக சாதனாவை நாவலில் வடிவமைத்திருக்கும் ஜெயபிரகாஷின் நேயம் இப்பகுதியில் எதார்த்தமாக வெளிப்பட்டிருக்கிறது.
அதிகாரம் நிலத்தை வெறும் மண்ணாகத்தான் பார்க்கும். அது அப்படித்தான் பழக்கப்படுத்தப்பட்டிருக்கு. உணர்வின் பிணைப்பு குறித்து சிந்திக்கத் துவங்கியிருந்தால். திட்டங்களுக்கான மாற்றுகள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும். எது எளியதோ அதையே பிடித்துக்கொண்டு தொங்கும். சாமந்திப் பூக்காடு சாலைக்காக சாகடிக்கப்படும்போது வாசகர்களை ஜெயபிரகாஷ் மொட்டையன் மகனாக்கிடுகிறார். சாலை விரிவாக்கத்திற்காக பிள்ளைபிடிக்கும் அரசுக்கு எதிராகப் போராடும் மக்களின் உணர்வுகளைத் தினம் கண்டவர்கள்தானே நாம்.
ஆத்மாவுக்கு உண்மையில் பிறப்பு இறப்பு கிடையாது. தேகசம்பந்தமே பிறப்பெனவும், அதன் பிரிவே இறப்பெனவும் கூறப்படும். – கீதை.
வாழ்வு நம் விருப்பு வெறுப்புகளைக் கணக்கில் கொள்ளாது பல விசித்திரங்களைச் காணச் செய்திடுகிறது. சாமந்திப் பூக்களை விளைவித்து ஊரை மணக்கச் செய்த இவ்வாழ்வு போதுமென்று இருந்தவனிடம் எல்லாவற்றையும் பிடுங்கி வாட்ச்மேனாக்கியதை யாரால் எதிர்பார்த்திருக்க முடியும்.
சாந்தி, சாவித்திரி, சாதனா, சாமந்திப் பூக்களின் பேரன்பில் கிடந்தவன் தனியனாகிட அவன் மனவோட்டத்தை இயல்பாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ஜெயப்பிரகாஷ். எல்லாவற்றிலிருந்தும் தனித்திருக்க நினைவின் பித்து என்னவாக இருக்கும் என்பதை நாமும் உணரத்தக்க வகையில் மொழியை அமைதியான நீரோடையாகப் பயணிக்க வைத்துள்ளார். வாழ்வைக் கண்டு அஞ்சி பயந்துகிடந்தவனை நம்பி அபார்ட்மெண்ட்டில் எல்லோரும் நிம்மதியாக இருக்கிறார்களே என நினைக்குமிடம் சிறப்பு. விற்பனை பிரதிநிதிகளின் உடை குறித்த அவரின் ஐயப்பாடு நம்மின் மனவோட்டமே. இவ்விடத்தில் ஷங்கர் ராம சுப்ரமணியனின் கவிதை நினைவில் காட்சியானது. சாகும் மனநிலையில் இருந்தவன் அடையாளமற்று கிடந்த பிணத்தைக் காண்பது நல்ல சித்தரிப்பு. நிறைவாக மன அமைதிகொள்ள சாமியாரைக் காணச்செல்லும் பயணிப்பின் உரையாடல் நாவலின் துவக்க பயணிப்பின் மனவோட்டத்தோடு பொருத்திப் பார்க்கச் செய்தது. மன அமைதிக்காகச் செல்லும் இடத்திலும் மனிதப் பதர்களின் பிற உயிர்கள் மீதான அக்கறையற்ற செயல்பாடுகளைச் சித்தரிக்கும் காட்சிகள் நாமும் கண்டு எரிச்சலடைந்தவையே. பீர் பாட்டிலுக்குள் பறவையின் கழுத்தறுந்து கிடக்கும் காட்சி நீங்காத வலி. சாமியாரின் தரிசிப்பில் உடன் வந்தவர் நிறைவுகொள்ள மொட்டையன் மகனுக்கோ மேலும் ஒரு விசித்திரம். எதற்கும் விளங்காத பைத்தியக்காரனாக இருந்த தன் அப்பாதான் அந்த சாமியார் என்பது. நம்மையும் அந்த விசித்திரம் ஆட்கொண்டது.
சிறிய நாவலாக இருந்தபோதும் மூன்று பகுதிகளாகப் பிரித்துள்ளார். ஒவ்வொரு பகுதியிலும் சிறு சிறு அத்தியாயங்களே. ஒவ்வொரு அத்தியாயத்திற்குள்ளும் செல்ல அதற்கான மனநிலையைத் தகவமைக்க ஆளுமைகளின் கூற்றுகளென நிறைவான திட்டமிடலோடு நவாலை கு.ஜெயபிரகாஷ் தந்துள்ளார். நாவலை வாசித்து முடிக்க ஒருவிதமான அமைதியை உணர முடிந்தது. அது ஏற்கனவே பழக்கப்பட்ட சாவு வீட்டில் கிடைத்த அமைதியாகவும் இருந்தது. இதுவே இந்நூலின் வெற்றியாகவும் உணர்கிறேன்.
- ந.பெரியசாமி
நூல் : சா
ஆசிரியர்: கு.ஜெயபிரகாஷ்
பதிப்பகம் :ஆதி பதிப்பகம்
விலை : ₹120