சாகவா சிகா கவிதைகள்


மதியம்

 

மலர் இதழ்களைப் போன்று

மழை பொழிகிறது

அதீத எடையினால் தாக்கப்பட்ட

பூச்சிகள் மரத்தின் நிழலில் வீழ்கின்றன

பெரும் சுவரொன்றின் மீதான

மென் பூங்காற்றின் ஒலி

சூரியனால், அலைகளினால்

அமுக்கப்படுகின்றன  

எனது எலும்புக்கூடு அவற்றின் மீது

வெள்ளைப் பூக்களை பரப்புகிறது

எண்ணங்கள் சிதறுபட, மீன்கள்

குன்றின் மீதேறுகின்றன

 


இருண்மை கானம்

 

புதிய தரைவிரிப்பின் மீது அனைத்தும்

ஒளிர்வுறுகிறது

அமைதியாக மெதுவாக

இரண்டு கழுதைகள் ஒரு வண்டியை

இழுக்கின்றன.

சாலையில் மலரின் இதழ்கள்

எரிகின்றன

பட்டு இறகுகள் மகரந்தத்தால்

தோய்க்கப்பட்டு

நிறமேற்றப்பட்டுள்ளன.

அவள் கால் விரல்கள் தொடும்

இடமொன்றில்

வெண்ணிற வானவில் உருவாகின்றது

 


கடல் தேவதை

 

தொட்டில் சத்தம் பேரரவமாகிறது

இறகுகளைப் பிய்த்தெடுப்பதைப்

போன்று…

மின்வெட்டாய் ஒரு தெறிப்பு,

உறங்குபவர்களின் மீள் வருகைக்காக

காத்திருக்கிறேன்.

இசையால் குறிக்கப்பட்டுவிட்டது

ஒளிரும் மணித்தியாலம்  

எதிர்க்க முயல்கிறேன்,

என் குரலின் அழைப்புக்களை –

பின்னாலிருந்து அலைகள்

அழிக்கின்றன.

 

நான் கடலில் கைவிடப்பட்டேன்.

 


நீலக் குதிரை

 

மலையைக் கிழித்து வந்த ஒரு குதிரைக்கு பைத்தியம் பிடித்தது. அன்று முதல் அவள் நீல நிற உணவையே உண்ணுகிறாள். கோடை பெண்களின் விழிகளையும் உடைகளையும் நீலமாக்குகிறது, பின்னர் நகரச் சதுக்கத்தில் மகிழ்ச்சியுடன் சுழல்கிறது.

மொட்டைமாடியிலிருந்த வாடிக்கையாளர்கள் பல சிகரெட்டுகளை ஊதிக்  கொண்டிருக்க,

புகை,  மேகமாக பெண்களின் தலைமுடியை வருடுகிறது

காப்புரிமை பெற்ற தோல் சப்பாத்துக்களைப் போல,

துயரமான நினைவுகள் ஒரு கைக்குட்டை போல வெளியே தூக்கி எறியப்பட வேண்டும். என்னால் அக்காதலை மறந்து மறுத்து ஒதுக்க முடியுமெனில்…

இரண்டாவது மாடியிலிருந்து குதிக்காமல் காப்பாற்றப்படுகிறேன்

கடல் வானளவு உயர்கிறது.

 


 

துருப்பிடித்த கத்தி

 

நீலநிற அந்தி மங்கலாகி

திரைச்சீலையை நனைக்கிறது.

ஒரு பெண்ணின் கழுத்தைப் போல

தொனிவிளக்கு ஒளிர்கிறது.

கறுத்தக் காற்று அறையை ஊடுருவிச் செல்கிறது –

ஒற்றைப் போர்வை விரிக்கப்படுகிறது.

புத்தகங்கள், மை மற்றும் துருப்பிடித்த கத்தி

ஆகியவை படிப்படியாக

என்னிடமிருந்து வாழ்க்கையைத்

திருடுவதாகத் தெரிகிறது.

 

எல்லாமே தலைகீழாகிக் கொண்டிருக்க

இந்த இரவு இன்னும் என் வசம்தான் உள்ளது

 


 

பச்சை

 

காலை ஒரு பேரலையாய் உருமாறி

நகரெங்கும் விரைந்து ஓடுகிறது

எல்லா இடங்களிலும் வெள்ளம்

நானொரு மலைப்பாதையில் மூழ்கினேன்

மூச்சுத் திணறி,

முன்னோக்கி  விரைவதைத் தடுக்கிறது

விழிகளின் அசைவில் நகரம் திறந்து மூடுகிறது,

எனது கனவுகள் சுழல்கின்றன

அதன் நோக்கில், ஆண்கள் மிகப் பெரிய வீச்சில்

சிக்கிச் சிதைவுறுகிறார்கள்

நான் கைவிடப்படுகிறேன்.

 


 பூச்சிகள்

 

மின்சார வேகத்துடன் பூச்சிகள் பெருகுகின்றன.

பூமியின் மேற்பரப்பு கொதிநிலைக்குச் செல்கிறது.

 

நகர்ப்புற இரவு தன் நேர்த்தியான உடையைத் திருத்தி,

ஒரு பெண்ணைப் போல உறங்கிக் கொண்டிருக்கிறது

 

இப்பொழுதில் நான் எனது கூட்டினை உலர வைக்கிறேன்.

எனது சருமம் உலோகம் போலக் குளிர்கிறது.

 

என் முகத்தைப் பாதியாக மறைக்கும் இந்த ரகசியம் ஒருவருக்கும் தெரியாது.

 

துயர்மிகுந்த பெண்ணை, அவளது சுதந்திரத்தின் கொண்டாட்டத்தை

இவ்விரவு, மகிழ்வுடன் ஆர்ப்பரித்து வெறியூட்டுகிறது.

 


எனது புகைப்படம்

 

தொலைபேசி திடீரென ஒலிக்க, கிராம மக்கள் ஆச்சரியப்பட்டனர்.

மீண்டுமொரு இடமாற்றத்திற்கான குறிப்பிதுவோ?

கிராமத் தலைவர் அதிர்வுற்று தனது நீல நிற அங்கியை அகற்றினார்.

ஒரு  தாயின் அளவுகோல் உண்மையில் சரியானதே.

இவ்வளவு நீளமான நீலக் கிராமம்! மீண்டுமொரு கோடைக்காலம், நதியைப் போல அவர்களைத் துரத்தியது.

 

சிவப்புக் கொண்டைச் சேவல், கைவிடப்பட்ட ரயில் நிலையத்தில் இறங்கியது.

 


சாகவா சிகா 

தமிழில்: உமா ஷக்தி

ஜப்பானிய மொழியிலிருந்து ஆங்கிலத்தில் Sawako Nakayasu மொழிபெயர்த்தார்

 

[tds_info]

ஆசிரியர் குறிப்பு: 

ஜப்பானியக் கவிஞர் சாகவா சிகாவின் நிஜப் பெயர் கவாசாகி ஐகோ. 1911-ம் ஆண்டில் ஜப்பானின் ஹொக்கைடோவில் பிறந்தார்.  கவிஞரும் ஆசிரியருமான அவரது சகோதரரின் உந்துததால் கிடாசோனோ கேட்யூவைச் சார்ந்த ஒரு  சமூகக் கூட்டமைப்பில் உறுப்பினரானார்,

சாகவா சிகா அவரது சமகாலக் கலைஞர்கள் பலரால் மிகவும் மதிக்கப்பட்டார். வயிற்றுப் புற்றுநோய் காரணமாக தனது 25 வயதிலேயே இயற்கை எய்தினார், அந்தச் சமயத்தில் அவரது கவிதைகள் இட் சேயால் என்பவரால் சேகரிக்கப்பட்டு திருத்தப்பட்டு வெளியிடப்பட்டன. அவரது உரைநடை, பிற  கவிஞர்களின் நினைவோடைகள், வாழ்க்கைக் குறிப்பு உள்ளிட்ட ஒரு முழுமையான நூலாக 1983- ஆம் ஆண்டில் ஷின்கைஷா என்பவரால்  சாகாவா சிக்காவின் சேகரிக்கப்பட்டப் படைப்புகள் என்ற தலைப்பில் வெளியிடப்பட்டது.

மொழிபெயர்ப்பாளர் : 

இயற்பெயர் : உமா பார்வதி
புனை பெயர் : உமா பார்வதி / உமா ஷக்தி
பிறந்த தேதி மற்றும் இடம் : 29-04-1974, சென்னை
தற்போது வசிக்கும் ஊர் : சென்னை
படிப்பு : எம்.ஏ. (ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்)
பணியும் பணிபுரியும் பதவியும்: Behindwoods – Senior Relationship Manager

முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த ஆண்டு, கவிதைத் தொகுப்பின் பெயர் 2009, வேட்கையின்
நிறம்

பிற கவிதைத் தொகுப்பு நூல்கள் : பனிப் பாலை பெண் – 2014, புது எழுத்து,

பிற நாவல், சிறுகதை, கட்டுரை நூல்களின் பெயர்கள் :
1) திரைவழிப் பயணம் 2012 (உலக சினிமா கட்டுரைகள் தொகுப்பு), காலச்சுவடு பதிப்பகம்
2) சாம்பல் பூத்த மலர்கள் 2018 (உலக சினிமா கட்டுரைகள்), யாவரும் பதிப்பகம்
3) நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை – சிறுகதை தொகுப்பு – யாவரும் பதிப்பகம்
4) நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் – குறுநாவல் – யாவரும் பதிப்பகம்
நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை தொகுதி க.சீ.சிவகுமார் நினைவு சிறுகதை போட்டியில்
பரிசு வென்றுள்ளது
இவரது சில கவிதைகளை கவிஞர் லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.

[/tds_info]

Previous articleவிநோதமாகவும் அதோடு சில நேரங்களில் துயரமாகவும்!
Next articleவீழும் உலகைப் புனைவது எப்படி?
Avatar
இயற்பெயர் : உமா பார்வதி புனை பெயர் : உமா பார்வதி / உமா ஷக்தி பிறந்த தேதி மற்றும் இடம் : 29-04-1974, சென்னை தற்போது வசிக்கும் ஊர் : சென்னை படிப்பு : எம்.ஏ. (ஜர்னலிஸம் அண்ட் மாஸ் கம்யூனிகேஷன்) பணியும் பணிபுரியும் பதவியும்: Behindwoods – Senior Relationship Manager முதல் கவிதைத் தொகுப்பு வெளிவந்த ஆண்டு, கவிதைத் தொகுப்பின் பெயர் 2009, வேட்கையின் நிறம் பிற கவிதைத் தொகுப்பு நூல்கள் : பனிப் பாலை பெண் – 2014, புது எழுத்து, பிற நாவல், சிறுகதை, கட்டுரை நூல்களின் பெயர்கள் : 1) திரைவழிப் பயணம் 2012 (உலக சினிமா கட்டுரைகள் தொகுப்பு), காலச்சுவடு பதிப்பகம் 2) சாம்பல் பூத்த மலர்கள் 2018 (உலக சினிமா கட்டுரைகள்), யாவரும் பதிப்பகம் 3) நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை – சிறுகதை தொகுப்பு – யாவரும் பதிப்பகம் 4) நித்தியத்தின் சாலையில் மூன்று இடைநிறுத்தங்கள் – குறுநாவல் – யாவரும் பதிப்பகம் நாம் ஏன் அந்தத் தேநீரைப் பருகவில்லை தொகுதி க.சீ.சிவகுமார் நினைவு சிறுகதை போட்டியில் பரிசு வென்றுள்ளது இவரது சில கவிதைகளை கவிஞர் லதா ராமகிருஷ்ணன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்.
Subscribe
Notify of
guest
0 Comments
Inline Feedbacks
View all comments