சிறார் இலக்கியம்: இன்றைய நிலையும் சவால்களும்

 

“தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது?  சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதைச் சொல்வீர்கள். அந்த சவால்களைச் சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதைச் சொல்வீர்கள்?” எனும் இந்த கேள்வியைச்  சிறார் இலக்கியத்திலும் சிறார் கலை இலக்கியம் சார்ந்து தொடர்ந்து எழுதி, செயல்பட்டுக் கொண்டிருக்கும் சிறார் இலக்கிய எழுத்தாளர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களிடம் கனலி கலை இலக்கிய இணையதளம் சார்பாக நண்பர் க.விக்னேஷ்வரன் கேட்டிருந்தார்.  

சிறார் இலக்கியச் சூழல் தற்போது உள்ள நிலையைக் குறித்தும்,  எதிர்கொள்ள வேண்டிய சவால்கள் மற்றும் தீர்வுகளைச்  சிறார் கலை இலக்கிய ஆளுமைகள் அளித்த பதில்களைத் தொகுக்கப்பட்ட முதல் பகுதி இது.

விஷ்ணுபுரம் சரவணன் :

தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் தற்போது எப்படி இருக்கிறது?

“தமிழகச் சூழலில் சிறார் இலக்கியம் தொடர்பாகச் சிலரின் கவனம் திரும்பியிருக்கிறது. அதற்கென அளிக்கப்படும் விருதுகளால் கூட இம்மாற்றம் நிகழ்ந்திருக்கலாம். ஆனால், படைப்பாக்க ரீதியில் இன்னும் வலுவாகப் பாய வேண்டியதுள்ளது. சிறுவர்கள் கதைகளுக்கு எனக் கட்டமைத்திருக்கும் சில சடங்கான விஷயங்களை உதற வேண்டும். சுருக்கமாகச் சொல்வதென்றால், சிறார் கதைகள் நிறைய வருகின்றன. ஆனால், அவை சிறார் இலக்கியமாக இருப்பதில்லை. அப்படி மாற வேண்டுமெனில் சிறார் இலக்கிய ஆர்வலர்கள் திறந்த மனத்தோடு நீண்ட உரையாடல் நடத்த வேண்டும்”

சிறார் இலக்கியம் எதிர் கொள்ளும் மிகப்பெரிய சவால்களாக எதை எதை சொல்வீர்கள். அந்த சவால்களை சிறார் எழுத்தாளர்களும், வாசகர்களும் (குழந்தைகளும்) கடந்து வர செய்ய வேண்டிய முதற் கடமைகளாக எதை எதை சொல்வீர்கள்?

“பெரிய கட்டுரைக்கான விஷயம் இது. எழுத்தாளர்கள், பெற்றோர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள், அரசியல் இயக்கங்கள், அரசியல் அமைப்பு உள்ளிட்ட பலவும் இணைந்து பணியாற்ற வேண்டிய தேவை இருக்கிறது. ஆம்! அந்தளவு சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சிக்கல் பெரியது. சிறுவர்களிடமிருந்து இலக்கியம் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டது… முழுநேரமும் கல்வி பற்றியே சிந்திக்க வைத்தது ஏன்… காட்சிவழி கேளிக்கை விஷயங்கள் ஏற்படுத்தியிருக்கிற தாக்கங்கள் குறித்து நிறைய பேசிவிட்டோம். அதனால், சிக்கல் என்பது சிறுவர்களின் கையெட்டும் தூரத்தில் இலக்கியம் வைக்கப்படுவதில்லை என்பதிலிருந்தே தொடங்குகிறது. அதைச் சரி செய்யத் தொடங்கினால், சரியான கதைகள், பாடல்கள், நாடகங்கள் உள்ளிட்டவை இயல்பாக மாற்றமடையும். அதற்கான முயற்சியை எல்லோரும் சேர்ந்து எடுக்க வேண்டும் எனச் சொல்லும்போதே அவர் வரவில்லை, அதனால் நானும் களத்தில் இறங்க வில்லை என்ற சமாளிப்புப் பதில்களும் கூடவே வந்துவிடுகின்றன. எனவே, நன்கு கட்டமைப்பு மிக்க இலக்கிய அமைப்பு தனது ஓராண்டு (குறைந்தது) களச்செயல்பாடாகச் சிறார் இலக்கிய மேம்பாட்டைத் தூக்கிச் சுமப்பதே சரியான வழியாக இருக்க முடியும் என நினைக்கிறேன்”

 

உதயசங்கர்:

 1. தற்கால சிறார் இலக்கியம் எப்படி இருக்கிறது?

கிட்டத்தட்ட இருபத்தைந்து ஆண்டுகளுக்குப் பிறகு சிறார் இலக்கியம் இலக்கிய வெளியில் பேசு பொருளாகியிருக்கிறது. இடைப்பட்ட காலங்களில் சிறார் இலக்கியம் ஏதோ துறைசார் இலக்கியம் போல ஒதுக்கப்பட்டிருந்தது. அதற்குக்காரணங்களும் இருந்தன. அழ.வள்ளியப்பாவின் காலத்தில் மேலோங்கியிருந்த சிறார் இலக்கியம் அவருடைய காலத்துக்குப் பிறகு தேய்வழக்காக, கூறியது கூறலாக, ஆசிரியத்தனமாக மாறி மையத்திலிருந்து விளிம்பை நோக்கி தள்ளப்பட்டிருந்தது. மீண்டும் சிறார் இலக்கியம் தன்னுடைய இடத்தை அடைய எண்ணற்ற முயற்சிகள் நவீன எழுத்தாளர்களாலும் புதிய பதிப்பகங்களாலும் எடுக்கப்பட்டுக் கொண்டேயிருந்தன.

அந்துவான் எக்ஸுபரியின் குட்டி இளவரசனை ஸ்ரீராம் பிரெஞ்சிலிருந்து அழைத்துக் கொண்டு வந்தார். லூயி கரோலின் அற்புத உலகில் ஆலீஸை எஸ்.ராமகிருஷ்ணன் கூட்டிக் கொண்டு வந்தார் மலையாளத்திலிருந்து பேரன்பின் அடையாளம், மாத்தன் மண்புழு வழக்கு, அழகான அம்மா, கடல் கடந்த பல்லு, அன்பின் வெற்றி, போன்ற எண்ணற்ற நூல்களை யூமாவாசுகி அறிமுகப்படுத்தினார். உதயசங்கரும் மலையாளத்திலிருந்து புத்தகப் பூங்கொத்து, புத்தகப் பரிசுப்பெட்டி, மீன் காய்க்கும் மரம், இயற்கையின் அற்புத உலகில், வாயும் மனிதர்களும், போன்ற பல நூல்களை மலையாளத்திலிருந்து கொண்டு வந்தார். கொ.மா.கோ.இளங்கோ, சரவணன் பார்த்தசாரதி, சுகுமாரன், ஜெயந்தி சங்கர், ஆதிவள்ளியப்பன், போன்றவர்கள் ஆங்கிலத்திலிருந்து ஏராளமான நூல்களை தமிழுக்குக் கொண்டு வந்தார்கள். இந்த நூல்களின் வருகை தமிழ்ச்சிறார் இலக்கியத்தில் சிறந்த பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கிறது.

பல பதிப்பகங்களும் தங்களுடைய பொருள் நஷ்டத்தையும் பொருட்படுத்தாமல் சிறார் புத்தகங்களைத் தொடர்ச்சியாக பதிப்பித்துக் கொண்டேயிருக்கிறார்கள். குறிப்பாக, புக்ஸ் ஃபோர் சில்ட்ரென், என்.சி.பி.ஹெச்., தூளிகா, போன்ற பதிப்பகங்களின் பணி குறிப்பிடத்தக்கது.

இடைப்பட்ட காலத்தில் நடந்த இவற்றின் விளைவாக சிறார் இலக்கியம் புதிய காற்றாக வீசத் தொடங்கியிருக்கிறது. ஆயிஷா நடராஜனின் ஆயிஷா மிகப்பெரும் கவனத்தைப் பெற்றது. தொடர்ச்சியாக ஜெயமோகன், எஸ்.ராமகிருஷ்ணன், பாவண்ணன், விழியன், உதயசங்கர், மு.முருகேஷ், யெஸ்.பாலபாரதி, கோ.மா.கோ.இளங்கோ, விஷ்ணுபுரம் சரவணன், விஜயபாஸ்கர் விஜய், கன்னிக்கோவில் ராஜா, சுகுமாரன், ஆதி வள்ளியப்பன், பஞ்சுமிட்டாய் பிரபு, உமையவன், பூவிதழ் உமேஷ், ரமேஷ் வைத்யா, என்று குறிப்பிடத்தக்க சிறார் எழுத்தாளர்கள் பங்களிப்பு செய்து வருகிறார்கள். அத்துடன் சிவஸ்வேதா செல்வி, எஸ்.அபிநயா, ரமணி, போன்ற குழந்தைப்படைப்பாளிகளும் தங்களுடைய படைப்புகளை புத்தகங்களாக வெளியிட்டிருக்கிறார்கள்.

சென்னைப்புத்தகக்கண்காட்சியிலும் பெற்றோர்கள் குழந்தைகளுக்குக் கதை சொல்லவேண்டும் என்ற ஆர்வத்துடன் புத்தகங்களைத் தேடித் தேடி வாங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.

உண்மையில் தற்காலச்சிறார் இலக்கியம் வளர்முகத்தில் இருக்கிறது என்று சொல்லமுடியும்.

 

 1. தற்காலச் சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் என்னென்ன?

நிறையச்சவால்கள் இருக்கின்றன.

 1. தொலைக்காட்சி, அலைபேசி, செயலிகள், சூழ்சிறார் உலகத்தில் சிறார் இலக்கியத்தின் வாசகர்களான குழந்தைகளை எப்படி வாசிக்க வைப்பது?
 1. குழந்தை இலக்கியப்படைப்புகள் மறுபடியும் பழைய சநாதனப்பாதைகளுக்கு போவதை எப்படி எதிர்கொள்வது. வழக்கொழிந்துபோன நிலவுடமைச் சமூகத்தில் நிலவி வந்த வெகுளியான நல்ல மன்னர், மதியூக மந்திரி, முனிவர்கள், சாமியார்கள், மந்திரவாதிகள், சாபங்கள், வரங்கள், பரிகாரங்கள், இளவரசிகள், இளவரசர்கள், போன்ற காலாவதியான விழுமியங்களை மீண்டும் சொல்கிற படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
 1. ஏற்கனவே சொல்லப்பட்ட பீர்பால், தெனாலிராமன், முல்லா, கதைகளின் இனப்பெருக்கத்தை எப்படி தடுத்து நிறுத்துவது?
 2. நவீன அறிவியல்பூர்வமான கல்வி கற்றுக்கொண்டிருக்கும் குழந்தைகளிடம் கடவுள், பூஜை, விரதம், தவம், பக்தி, போன்ற விழுமியங்களை கிளிப்பிள்ளையாக உருவேற்றுகிற படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
 1. இலக்கியத்தின் மிக முக்கியமான சாராம்சமான கலை இன்பத்தை துறந்து வெறும் செய்தியாக, அறிவுரையாக, அறவுரையாக எழுதப்படும் படைப்புகளை எப்படி எதிர்கொள்வது?
 1. கேரளாவில் அரசு ஒரு தனியான அமைப்பை உருவாக்கி அதில் சிறார் நூல்களைப் பதிப்பித்து பள்ளி நூலகங்களுக்கு அளிப்பதன் வாயிலாக சிறார் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை வாசகர்களுக்கும் பெற்றோர்களுக்கும் உணர்த்துகிறார்கள். அதனால் விரிந்த சந்தையும் உருவாகிறது. தமிழக அரசுக்கு இதன் முக்கியத்துவத்தை எப்படி உணர்த்துவது?
 1. வயது வாரியான குழந்தை இலக்கிய நூல்களை எழுதுவதற்கும், பதிப்பிப்பதற்கும், வாங்குவதற்குமான பாரதூரமான இடைவெளிகளை எப்படி எதிர்கொள்வது? அதிபுனைவு, யதார்த்தம், சாகசம், மர்மம், அறிவியல், சூழலியல், போன்ற வகைமைகளில் சிலவற்றைத் தவிர பல வகைமைகளில் படைப்பாளிகள் இல்லையென்பதை எப்படி எதிர்கொள்வது?
 1. சிறார் இலக்கியத்தில், பாடல், கதை, தவிர மற்ற வகைமைகளான, கதைப்பாடல், நாடகம், கட்டுரை, போன்றவற்றில் படைப்புகளும் அதிகமில்லை. வரவேற்புமில்லை என்பதை எப்படி எதிர்கொள்வது?
 2. குழந்தைகளுக்கான படைப்புகள், குழந்தைகளைப் பற்றிய படைப்புகள், குழந்தைகளே எழுதுகிற படைப்புகள், இந்த வகைப்பாட்டில் இன்னமும் நிறைய வரவில்லை. அதைப் பற்றிய பிரக்ஞாபூர்வமான விழிப்புணர்வு இல்லாததை எப்படி எதிர்கொள்வது?
 3. இன்னும் காத்திரமான உரையாடல்கள், விவாதங்கள் விமரிசனங்கள்,சமகாலச் சிறார் இலக்கிய உலகில் நடக்கவில்லை. அவற்றை எங்கிருந்து எப்போது துவங்குவது?

இப்படியும் இன்னமும் சவால்கள் இருக்கின்றன.

 1. இந்த சவால்களை கடந்து வர எழுத்தாளர்களும் வாசகர்களும் என்ன செய்ய வேண்டும்?
 1. குழந்தைகளின் படைப்பூக்கம் ஒரு கடலென விரிந்து அலையடிக்கும் குழந்தைமை நாட்களில் தான் அந்தக் குழந்தையின் ஆளுமை கட்டமைக்கப்படுகிறது. அந்தக் காலங்களில் குழந்தைகள் மரப்பாச்சியோ, டையர் வண்டியோ, தீப்பெட்டிகளோ, செப்பு சாமான்களோ, நவீன பிளாக்குகளோ, டிப்பர் லாரியோ, ரயில்வண்டியோ, ஜே.சி.பி.யோ, விதவிதமான கார்களோ எல்லாவற்றையும் உண்மையென நம்புகிறார்கள். அந்த நாட்களில் அவர்களுடைய கட்டற்ற கவித்துவமும், கற்பனையும் அணுகணமும் விந்தையான பூக்களை மலரச் செய்கின்றன.
 1. ஆனால் புத்தக வாசிப்பை வாழ்க்கையின் அடிப்படையான செயல்பாடுகளில் ஒன்றாகக் கொள்ளாமல் ஆடம்பரமான ( பொழுதுபோக்கு ) செயலாகக் கருதுகிற சமூகத்தில் சிறார் இலக்கியத்திற்கான சவால்களை கடந்து வர அரசு, பள்ளிகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள், துணை இன்றியமையாதது.
 2. சிறார்கள் முடிவெடுத்து புத்தகம் வாங்குகிற சூழல் கிடையாது. எனவே பெற்றோர்கள் மனது வைத்தால் தான் புத்தகம் வாங்க முடியும் என்பது யதார்த்தம்.
 3. சிறார் இலக்கியத்தின் பன்முகவளர்ச்சி என்பது அதன் சந்தையையும் கணக்கிலெடுத்துக் கொள்ளும்போது மட்டுமே சாத்தியம்.
 4. சிறார் இலக்கியப் படைப்புகளின் மொழி குறித்து சிறார் எழுத்தாளர்கள் மிகக்கவனமாக இருக்கவேண்டும். வாசிப்பின் ஆரம்பநிலையில் உள்ள குழந்தைகளை ஈர்க்கிற எளிய தமிழ்ச்சொற்களை பயன்படுத்தி அவர்களை வசீகரிக்கவேண்டும்.
 5. சிறார் இலக்கியப் படைப்பாளிகளின் பயிற்சி முகாம்களை நடத்தும் போது புதிய எழுத்தாளர்கள் வருவதற்கான வாய்ப்பு இருக்கும்
 6. சிறார் கலை இலக்கியக் கொண்டாட்ட நிகழ்ச்சிகள் ஆங்காங்கே நடைபெறுகின்றன. இனியன், விஷ்ணுபுரம் சரவணன், பஞ்சு மிட்டாய் பிரபு, வனிதாமணி, சரிதா, கதை சொல்லி சதீஷ், போன்ற குழந்தை நலச்செயற்பாட்டாளர்கள் குழந்தைகளிடம் இலக்கியத்தையும் கொண்டு செல்லும் பணியைச் செய்கிறார்கள். அனைத்து ஊர்களிலும் இப்படியான செயற்பாட்டாளர்கள் உருவாக வேண்டும்.
 7. எல்லா வகைமைகளிலும் படைப்புகளை எழுதுவதற்கான எழுத்தாளர்கள் உருவாகவேண்டும்.
 8. குழந்தைப் படைப்பாளிகளை உருவாக்க பயிற்சி முகாம்களை நடத்தவேண்டும்
 9. பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் குழந்தைகளின் உளவியலில், கதை என்ன செய்யும்? என்பது போன்ற பயிற்சி முகாம்களை நடத்த வேண்டும்.
 10. உலகக்குழந்தை இலக்கியத்தை வாசிக்கவும், தமிழில் செவ்வியல் குழந்தை இலக்கிய நூல்களை உருவாக்கவுமான படைப்பூக்கத்தைப் பெற எழுத்தாளர்கள் தீவிரமாக உழைக்கவேண்டும். 

ஆயிஷா நடராசன்:

என்னைப் பொறுத்தவரையில்  சிறார்களுக்கு வாசிப்பதற்கு தரப்படுகின்ற நேரம், அதற்கான ஊக்கம் பாடப்புத்தகத்திற்கு வெளியே, அவர்கள் புத்தகங்களை வைத்துக்கொள்ள அனுமதி,  இது போன்ற விஷயங்கள் இன்னும் நம்முடைய மண்ணைப் பொறுத்தவரையில் மிகவும் தேர்ந்த சமூகச் சிந்தனையுடைவர்களைத் தவிர வேறு யாருமிடமும் இல்லை.

குழந்தைகளுக்கு ஐஸ் கிரீம் வாங்கித் தருவதும், ஏனைய பார் சாக்லேட்ஸ் வாங்கித்தருவதையும் பெரிய சுமையாகக் கருதாத பெற்றோர்கள்  கூட புத்தகம் வாங்கித்தருவதைப் பெரிய சுமையாக,  தேவையில்லாத வேலையாகக் கருதுகிறார்கள் என்பதாக நான் கருதுகிறேன். என்றாலும், அதையும் மீறி புத்தக வாசிப்பைக் கொண்டு செல்ல வேண்டுமென்கிற விருப்பத்தோடு இருக்கின்ற  பெற்றோர்களுக்குத்  தேவையான, அவசியமான.. இன்னும் சொல்லப்போனால் அவர்களின்  நோக்கங்களை நிறைவேற்றத் தக்க  ஆர்வமான புத்தகங்கள்  தமிழில் அவர்களின் கைக்கு எட்டக்கூடிய தூரத்தில் கிடைப்பது கிடையாது.

உதாரணமாக,  ஏதேனும் ஒரு புத்தகக் காட்சிக்குப்  பழக்கமுடைய பெற்றோர்கள், புத்தகக் கண்காட்சியில் புத்தகம் வாங்குவதற்கான நெரிசலோடு சேர்ந்து செல்கிறார்கள் அப்போது குழந்தைகளுக்கு தன் புத்தகங்களைத் தேர்வு செய்துகொள்ளும் நேரம் கிடையாது. பெற்றோர்களே புத்தகங்களைத் தேர்வு செய்து ‘இதைப்படி” என்று கையில் கொடுக்கிறார்கள். அப்படிக் கொடுக்கப்படும் புத்தகங்களில் பெற்றோர்களுடைய சுயநலம் நிறைய இருக்கிறது.

உதாரணமாக ,சமீபத்தில் என் பெரிய அனுபவம் ஒரு நான்காம் வகுப்பு குழந்தைக்கு ’ஐஏஎஸ் ஆவது எப்படி’  என்கிற  புத்தகத்தை  எடுத்து ஒரு பெற்றோர் கொடுத்த அனுபவம். இதெல்லாம்  சித்ரவதை  என நினைக்கிறேன்.

அதே போல பொதுவான புத்தக வாசிப்பை ஏற்படுத்துவது எப்படி என்றால், முதலில் குழந்தைகளைச் செய்தித்தாள்களை வாசிக்க நாம் பழக்கப்படுத்த வேண்டும். செய்தித்தாள்களோடு சிறார் பக்கங்களை வாசிக்கப் பழக்கப்படுத்த வேண்டும். அதற்கு அடுத்த படிநிலையாக வீட்டிற்குச் சிறார் வார, மாத இதழ்களை வரவைக்க வேண்டும்.

அப்படிப் பார்த்தாலும் கோகுலம், சுட்டி விகடன் போன்ற இதழ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன.  இப்போது எதைக் கொண்டுபோய் குழந்தைகளிடம் கொடுப்பது?

அவர்கள் வேண்டுமானால்,  தினத்தந்தி, தமிழ் இந்து  போன்ற நாளிதழ்கள் வெளியிடும் சிறார் பக்கங்களை வாசிக்க வைக்கலாம். அதிலிருந்து வாசிக்கத் தொடங்குவது தவறென்று நான் சொல்லமாட்டேன்.  இது ஒரு புறம்.

இன்னொரு புறம் குழந்தைகள் மீதான பாடப்புத்தக வன்முறை. இது ரொம்பக் கொடுமையாக இருக்கிறது.  ஐந்தாம் வகுப்புக்கும், எட்டாம் வகுப்புகளுக்கும் கூட  பொதுத் தேர்வு என்று அறிவிக்கப்பட்டு, அவர்கள் பாடப்புத்தகங்களைக் கட்டிக்கொண்டு அழுபவர்களாக மாற்றப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இன்றையச் சூழலில் இதை ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் கைடு விற்பவர்களும், நோட்ஸ் விற்பவர்களும் பெற்றோர்களை ஈ-யை போல மொய்த்து எடுக்கப் போகிறார்கள், பள்ளிக்கூடங்களை மொய்த்து எடுக்கப்போகிறார்கள். வெறும் கேள்வி பதில்களாகப் படிப்பவர்களாக என் குழந்தைகள் மாற்றப்படப் போகிறார்கள்.

இந்தச் சூழல் மிகக் கொடுமையாக, அச்சமாக இருக்கிறது.  இவற்றிலிருந்து மீண்டு எந்த குழந்தையாவது  பொதுவான வாசிப்பு அரங்கில் புத்தகங்களைப் படிக்க வேண்டுமென்றால், நாம் செய்ய வேண்டிய மிக முக்கியமான வேலை இந்த குழந்தைகள் இருக்கும் இடம் தேடி புத்தகத்தை எடுத்துச் செல்ல வேண்டும். உதாரணமாக குழந்தைகள் கூடுகின்ற இடங்கள், பூங்காக்கள், கிஷ்கிந்தா போன்ற விளையாட்டு அரங்கங்கள்,

இன்னும் ஒரு படி மேலேப் போனால் பள்ளிக்கூடத்தின் வாசலில் எனக்குத் தெரிந்து இன்றைக்கும் கூட,  ஐஸ்கீரிமும் கொடுக்காப்புளியும் மாங்காவும் விற்றுக்கொண்டிருப்பவர்களோடு சேர்ந்து  புத்தகம் விற்பனையாளர்களும் அங்கு உட்கார வேண்டியிருக்கும். இதையெல்லாம் யோசிக்கும் போது.. இன்னும் பல வகைகளில் திட்டமிட்டு நாம் செயல்பட வேண்டியிருக்கிறது. அதற்கு கனலி போன்ற இதழ்கள் மிகவும் உதவிக்கரமாக இருக்கும் . இது போன்ற  உங்கள் முயற்சியை  நான் பாராட்டக் கடமைப்பட்டிருக்கிறேன்.

சிறார்களுக்கான எழுத்துகளை வரவேற்கும் அதே சமயத்தில், நீங்கள் சிறார்களின் படைப்பாக்கத்திற்கு ஊக்கம் தருவது போல அவர்களுக்கான படைப்பாக்க ஓர்க் ஷாப்புகளை நடத்த வேண்டும். அங்கங்கே ஊர் ஊராகச் சென்று ஓவியங்களுக்கு , வாசிப்புக்கு என ஓர்க் ஷாப் நடத்த வேண்டும்.  சர்ட்டிபிகேட் கோர்ஸ் மாதிரி நடத்தினால் பெற்றோர்களும் குழந்தைகளை அழைத்து வர வாய்ப்பிருக்கிறது.

அதே போலக் குழந்தைகளைக் கதை எழுதப் பழக்கலாம், கதை சொல்லப் பழக்கலாம். நாடகம் நடத்தப் பழக்கலாம். இந்த கலைகளெல்லாம் வளர்ந்தால் தான் வாசிப்புக் கலையும் வளரும். இதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஒரு பாரதியார் பாடலை சத்தமாகப் பாடுவது என்பது கூட போய்விட்டது. தமிழாசிரியர்கள் பாடி திருக்குறளை நடத்தும் காலமும் முடிந்துவிட்டது.  இப்படியெல்லாம் இருக்கும் சூழலில் உங்கள் முயற்சிகளைப் பாராட்டுகிறேன். இன்னும் மேன்மேலும் நாம் செயல்படுவதற்கு இது போன்ற விஷயங்களை எல்லாம் முதல் கடமையாகக் கொண்டு நீங்கள் செய்வதை நான் வரவேற்கிறேன். ஆதரிக்கிறேன்.


 மதுரை சரவணன் :

தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல் உண்மையில் நன்றாக உள்ளது. சிறார் சார்ந்த புத்தகங்களை வெளியிடுவதற்குப் பல பதிப்பகங்கள் காத்திருக்கின்றன. அதேபோல், சிறார் இலக்கியத்தினை சிறார்களிடம் எடுத்துச் செல்வதற்குப் பலரும் முனைந்து வருகின்றனர். குறிப்பாக, இனியனின் ’குழந்தைகளைக் கொண்டாடுவோம்’ அமைப்பு, அர்ச்சனாவின் நூல் கொடை அமைப்பு, எனது ‘நூல் வனம்’ அமைப்புடன் இணைந்து செயல்படும் ஜாஸ்மினின் ’சார்ஜா கிரின் குளோப்’ நிறுவனம் போன்றவைகளும். .சிறார் எழுத்தாளர்கள் விழியன், கன்னிக்கோவில் ராஜா  மற்றும் கலகல  வகுப்பறை சிவா போன்றோர் பள்ளி தோறும் நூலகம் அமைத்துக் கொடுத்தும் முகாம்கள் நடத்தியும்  சிறுவர்களின் வாசிப்பை ஊக்கப்படுத்தி வருகின்றனர். இருப்பினும், சிறார் இலக்கியம் உச்சத்தை எட்டவில்லை என்பது கவலைக்குரிய விசயம். சிறுவர்களுக்காக எழுதும் படைப்புகள் சிறுவர்களுக்கானதாக இல்லை. சிறுவர்கள் மொழியில் இல்லை. சமீபத்தில் கூட எழுத்தாளர் எஸ்.செந்தில்குமார் தமிழ் இந்துவில் சிறுவர்கள் படைப்புகளைப் பெரியவர்களே வாசிக்கின்றனர் என ஆதங்கப்பட்டுள்ளார். அதற்கான காரணம் சிறுவர்கள் மொழியில் , சிறுவர்கள் விரும்பும் வகையில் நாவல்கள் , கதைகள் இல்லை. ஆனாலும் சிறுவர்களுக்காக எழுத வேண்டும் என்று எஸ்.ராமகிருஷ்ணன் தனது மகனுடன் இணைந்து சிறார் நூல்களை எழுதியுள்ளார். கன்னிக்கோவில் ராஜா, விழியன், விஷ்ணுபுரம் சரவணன் இன்னும் சிலரும் சிறுவர்களுடன் பயணித்து கதைகளை எழுதி வருகின்றனர். இருப்பினும், குழந்தைகளின் உலகம் அறிந்து, அவர்கள் விரும்பும் வகையில் வெளியிடுதல் இல்லை என்பது குறையாக உள்ளது. குழந்தைகளுக்கான நாவல்கள் மற்றும் கதைகளில் வரும் ஓவியங்கள் குழந்தைகள் விரும்பும் விதத்தில் இல்லை என்பதும் பெரும் குறை. அதேநேரம் வயது குறிப்பிடாமல் புத்தகங்கள் வருவதால் எந்த வயதுக் குழந்தைகளுக்கு உரியப் புத்தகம் என்பதைக் குழந்தைகள் அறிய முடியவில்லை. 0-5 வயது வரைக்கான புத்தகங்கள் ஓவியத்துடன் இருக்க வேண்டும். மொழி அற்ற ஓவியங்கள் கதை சொல்லும் புத்தகங்கள் தமிழகத்தில் அரிதாகவே கிடைக்கின்றன. மேலும், தமிழக சூழலில் ஓவியரும் கதை ஆசிரியரும் ஒன்றாக இணைந்து வேலை பார்ப்பது இல்லை. எழுத , வாசிக்கத் தெரிந்த குழந்தைகளில் 5-10 வயது உள்ள குழந்தைகளுக்குத் தனியாகப் புத்தகங்கள் இல்லை. 11-18 அதேபோல் பதின்ம வயதுக் குழந்தைகள் மனதை அறிந்து புத்தகங்கள் வெளிவரவில்லை. இவை மிகப் பெரிய சவால்களாக உள்ளன. எழுத்தாளர்கள் குழந்தைகள் மனது, வயது அறிந்து பிடித்த விசயங்களைக் குழந்தைகளின் மொழி நடையில் எழுத வேண்டும். பெரியவர்கள் குழந்தைகளுக்குப் புத்தகங்களைப் பரிசளிப்பதன் மூலம் குழந்தைகளின் வாசிப்பையும் , சிறார் இலக்கியத்தினையும் வளர்த்தெடுக்கலாம்.


ஞா.கலையரசி:

தமிழகத்தில் சிறார் இலக்கியச் சூழல், மிகவும் வருந்தத்தக்க நிலையில் தான் உள்ளது.

பொதுவாகவே தமிழ்ச் சமுதாயத்தில், வாசிப்புப் பழக்கம் மிகவும் குறைவு. காசு செலவழித்து புத்தகங்கள் வாங்குவதை, அறிவுக்கான முதலீடாக நம் மக்கள் நினைப்பதில்லை.  அதை வீண் செலவாகவே நினைக்கிறார்கள்.  அதனால் வீட்டில் குழந்தைகளுக்குப் பாடப்புத்தகங்களைத் தவிர, வாசிப்புக்கு வேறு நூல்களே இருப்பதில்லை.

நேற்று புத்தகக்காட்சிக்குச் சென்றிருந்தேன்.  ஒரு பையனுக்குப் பத்து  பன்னிரண்டு வயதிருக்கும்.  ஏதோ ஒரு புத்தகத்தை வாங்கித் தரச் சொல்லி அப்பாவிடம் கேட்கிறான்.

அதற்கு அவர் சொல்லும் பதில்:- “நம் வீட்டுக்குப் பக்கத்தில் தான், நூலகம் இருக்கிறது.  முதலில் அங்குச் சென்று, இருக்கின்ற புத்தகங்களைப் படித்து முடி; அப்புறம் இங்கு வந்து புத்தகம் வாங்கலாம்”.

அவன் முகம் வாடியதை, நான் வருத்தத்துடன் கவனித்தேன். அவன் ஆசைக்கு ஒரு புத்தகம் கூட வாங்கித் தராமல், அவனைச் சும்மா சுற்றிப் பார்க்கத் தான், அழைத்து வந்திருந்தார் போலும்!

இவரைப் போலப்  புத்தகக்காட்சிக்கு வரும் கூட்டத்தினர்., பெரும்பாலும் பஜ்ஜி, போண்டா தின்று பொழுதுபோக்கவும், செல்பி எடுக்கவும் தான் வருகின்றார்கள்.  பெரும்பான்மையான அப்பாக்களின் பிரதிநிதி, அவர்!

புத்தகத்துக்கு ஓரளவு செலவு செய்ய நினைப்பவர்கள், நகரத்தில் வசிக்கும்   படித்த மத்தியத் தர வகுப்பினர் மட்டுமே.  துரதிர்ஷ்டவசமாக நம் தமிழகத்தில், அந்த வகுப்பு குழந்தைகள், ஆங்கில மீடியத்தில் படிக்கிறார்கள்.  தமிழை விட ஆங்கிலம், அவர்களுக்குப் பரிச்சயமாகிவிடுவதால், தமிழில் படிப்பது அவர்களுக்கு உகந்ததாக இருப்பதில்லை.

“என் பையனுக்குத் தமிழே வரவில்லை: என் பையனுக்குத் தமிழ் தான் கஷ்டம்” என்று பெருமை(!)யுடன் கூறும் அம்மாக்களை, நான் பார்த்திருக்கிறேன். பெற்றோர் அவர்களுக்கு வாங்கிக் கொடுப்பதெல்லாம், ஆங்கிலப் புத்தகங்களே.  அவர்கள் பார்க்கும்  கார்ட்டூன், நர்சரி பாடல்கள் எல்லாமே ஆங்கிலம்!

ஆங்கிலப் புத்தகங்களும் கெட்டியான அட்டைகளில், வழவழ தாள்களில் பெரிய பெரிய எழுத்துக்களில், வண்ண வண்ணப் படங்களுடன் மிகவும் தரமாக, குழந்தைகளைக் கவரும் விதத்தில் அமைந்துள்ளன. நமக்கே படிக்க ஆசையாக இருக்கின்றது!. அவற்றை ஒப்பிடும் போது, நம் தமிழ்ப் புத்தகங்கள் போக வேண்டிய தூரம், மிகவும் அதிகம்!  படங்களும் கருப்பு வெள்ளையில், ஏனோ தானோவென்று கோணல் மாணலாக இருக்கின்றன!

வழவழ தாளில் வண்ணப்படங்களுடன் வெளியிட்டால், புத்தகத்துக்கான விலை கூடும். ஐம்பது ரூபாய்க்குக் கூட, புத்தகம் வாங்கித் தர மறுக்கும், பெற்றோர் இருக்கும் சூழ்நிலையில், அப்படி வெளியிடுவதும் முடியாத காரியம்.  அரசு நூலகங்களும் புத்தகங்களை வாங்குவதை நிறுத்திவிட்ட இக்காலகட்டத்தில், பதிப்பாளர்களையும் இந்த விஷயத்தில் குற்றம் சொல்வதில் பயனில்லை..

இங்கிலாந்தில் குழந்தைகளுக்குப் புத்தக வாசிப்பை அதிகரிப்பதில் நூலகங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.  நான் கேம்பிரிட்ஜ் சென்றிருந்த சமயம், என் பேரனுக்குப் பள்ளி விடுமுறை.  அந்த விடுமுறையில் உள்ளூர் நூலகத்தில், குழந்தைகளுக்கான வாசிப்புப் போட்டி வைத்திருந்தார்கள். அத்திட்டத்தில் சேர்ந்த குழந்தை, ஒவ்வொன்றுக்கும் ஒரு வழவழ அடையாள அட்டை கொடுத்தார்கள்.

ஒவ்வொரு வாரமும் புத்தகம் எடுத்து வாசித்துத் திருப்பிக் கொடுக்கும் போது, அந்த அட்டையில் ஒரு ஸ்டார் குத்திக் கொடுத்தார்கள்.  மொத்தம் ஐந்து ஸ்டார் வாங்கும் குழந்தைக்கு, ஒரு சான்றிதழ் கொடுத்து அதைப் பள்ளிக்கு அனுப்பி, காலையில் பிரேயர் சமயம் எல்லோர் முன்னிலையில் குழந்தைக்குக் கொடுத்துப் பாராட்டுகிறார்கள்.

எனவே நம் நாட்டில் பள்ளி நூலகங்களுக்கு, முதலில் அரசு போதுமான நிதி ஒதுக்கிப் புதிய புத்தகங்களை வாங்க வேண்டும்.  வாரம் ஒரு வகுப்பாவது, நூலகத்துக்கென ஒதுக்க வேண்டும்.  வாசிப்பின் முக்கியத்துவத்தை ஆசிரியர் குழந்தைகளுக்குச் சொல்ல வேண்டும். பாடப்புத்தகங்கள் அல்லாத நூல்களை, ஆசிரியர் குழந்தைகளுக்கு வாசிக்கச் சிபாரிசு செய்ய வேண்டும். அதற்கு ஆசிரியர் முதலில் வாசிப்புப்பழக்கம் உள்ளவராய் இருத்தல் அவசியம்!

சிறார் எழுத்தாளர்கள் குழந்தைகளுக்குப் புரியும் விதத்தில் எளிமையான தமிழில் எழுத வேண்டும். நான் பல புத்தகங்களை வாசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு ஊரில் ஒரு செல்வந்தர் இருந்தார் என்று கதை ஆரம்பிக்கும்.  செல்வந்தர் என்ற புழக்கத்தில் இல்லாத வார்த்தையைச் சொல்லிக் குழந்தையை, முதல் வரியிலேயே பயமுறுத்துவானேன்? ஒரு ஊரில் ஒரு பணக்காரர் இருந்தார் என்று சொன்னால் என்ன குடி முழுகி விடும்?  எனவே தூய தமிழ்ப் பற்றை விட்டொழித்து விட்டு, குழந்தைகளுக்குப் புரியும் வார்த்தைகளில் சிறார் எழுத்தாளர்கள் எழுத வேண்டும்.

தாய்மொழி வழிக்கல்வி தான் குழந்தைகளுக்குத் தமிழில் வாசிப்பை எளிதாக்கும்.  எனவே சிறார் இலக்கியச் சூழல் மேம்பட, அரசு, நூலகம், பள்ளி, ஆசிரியர், பெற்றோர், பதிப்பகத்தார் மற்றும் சிறார் எழுத்தாளர் இவர்களின் கூட்டு முயற்சி வேண்டும்.


கதைசொல்லி சதீஷ்.:

சிறார் இலக்கியம் இன்னும் தென்தமிழக பள்ளிகளுக்கோ, அரசுப் பள்ளிகளுக்கோ சரிவரப் போய்ச்சேரவில்லை,  மாணவர்களிடத்தில் மட்டுமல்ல ஆசிரியர் பெற்றோர் மத்தியிலும் இன்னும் போதிய விழிப்புணர்வு ஏற்படவில்லை என்றே தோன்றுகிறது, எனது பயணங்களில் நான் கண்ட வகையில் ஆயிரம் மாணவர்களில் 20 மாணவர்களுக்கு மட்டுமே வாசிப்புப் பழக்கம் உள்ளது, மேலும் தனியார்ப் பள்ளிகளில் மதிப்பெண் நெருக்கடி மாணவர்களைப் பாடப்புத்தகம் தாண்டி வாசிக்கும் பழக்கம் இன் னும் சேரவில்லை, அலைபேசியைத் தனது குழந்தைகளிடம் கொடுக்கும் பெற்றோர் எத்தனை பேர் புத்தகங்களை வாங்கி கொடுக்கிறார்கள், இலக்கிய பரிச்சயம் உள்ள பெற்றோர் வீட்டில் கூட சிறார் இலக்கியம் காண்பது கொஞ்சம் அரிதாகவே உள்ளது.

இன்னும் பொது ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகங்களில் சிறார் இலக்கியம் குறித்த விழிப்புணர்வை மேம்படுத்துவதும், பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று சிறார்களைச் சந்திப்பதும் ஒரு நல்ல பலனைத் தரும். ஒரு கதைசொல்லியாக நான் செல்லும் எல்லா பள்ளிகளிலும், இதை முன்னெடுக்கின்றேன்.

4 COMMENTS

 1. இன்றைய குழந்தைகள் தாம், நாளைய வாசகர்கள். நம் வருங்கால சமுதாயம் அறிவார்ந்த சமூகமாக இருக்க வேண்டுமானால் குழந்தைகளுக்கு இப்போதிருந்தே வாசிப்பைப் பழக்கப்படுத்த வேண்டும். ஆயிஷா நடராஜன் சொல்லியிருப்பதைப் படித்து அதிர்ந்தேன். நான்கு வயது குழந்தைக்கு ஐ.ஏ.எஸ் புத்தகம்!
  5 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு அம்மாக்கள் இப்போதே தயார்ப் படுத்தத் துவங்கி விட்டார்கள். தம் 5 ஆம் வகுப்பு குழந்தை சரியாகப் படிக்கவில்லை என்று சில பெற்றோர் குழந்தைகளைத் தம்மிடம் அழைத்து வருவதாக மனநல மருத்துவர் ருத்ரன் வேதனையுடன் கூறியிருக்கிறார். இப்படிப் பட்ட சூழநிலையில் கனலியின் இந்த முன்னெடுப்பு வரவேற்கத் தக்கது.

 2. சிறார் இலக்கியம் குறித்த எழுத்தாளர்களின் ஆலோசனைகளும் செயற்பாடுகளும் நம்பிக்கையூட்டுபவையாக உள்ளன. அதே சமயம் அவர்கள் பதிவு செய்திருக்கும் ஆதங்கமும் கவனத்தில் கொள்ளப்படவேண்டும். மேலை நாடுகளில் உள்ளதைப் போல குழந்தை இலக்கியம், சிறார் இலக்கியம், இளைஞர் இலக்கியம் என வயதுவாரியாக இலக்கியங்கள் படைக்கப்படவும் வாசிக்கப்படவும் வேண்டும். கருத்துகளைப் பகிர்ந்துள்ள அனைவருக்கும் நன்றி.

  உதயசங்கர் அவர்கள் பட்டியலிட்டுள்ள சிறார் இலக்கியம் எதிர்கொள்ளும் சவால்கள் சற்றே கவலையளிப்பதாய் உள்ளன. சிறார் இலக்கியம் சார்ந்த நூல்கள் பரவலாக சிறார்களிடம் கொண்டுசெல்லப்படுவதொன்றே இதற்கான தீர்வாயிருக்கும். ஆயிஷா நடராஜன் அவர்கள் குறிப்பிடுவது போல சிறார்களின் படைப்பாக்கத் திறனை வெளிக்கொணரவும் மேம்படுத்தவும் பயிற்சிகளும் வாய்ப்புகளும் வழங்கப்படவேண்டும். நிச்சயம் அது மிகப்பெரிய அளவில் எழுத்து மற்றும் வாசிப்பு வெளியை சிறார்களிடத்தில் உருவாக்கிக் கொடுக்கும். கலையரசி அவர்கள் குறிப்பிட்டிருப்பதைப் போல பள்ளிகளில் நூலக வகுப்பு அறிமுகப்படுத்தப்படுவதும், எளிய மொழியில் சிறார் இலக்கியம் படைக்கப்படுவதும் சிறார் இலக்கியம் வளர மேலும் சில அருமையான யோசனைகள்.

 3. வணக்கம்.

  அனைவருமே தங்கள் கருத்துக்களைச் சிறப்பாக தெரிவித்துள்ளனர்.

  பள்ளிகள் முன்னெடுக்க வேண்டிய சில முக்கியமான விஷயங்களை இங்கு நான் பரிந்துரைக்கிறேன்.

  தமிழோ அல்லது ஆங்கிலமோ எந்த மொழியாகிலும், நாளிதழோ, புத்தகமோ, ஏன் விளம்பர நோட்டீஸாக இருந்தாலும் அந்த மாணவருக்கு கிடைக்கும் ஒரு அச்சடிக்கப்பட்ட காகிதத்தை குறைந்தபட்சம் தினமும் 500 வார்த்தைகளாவது வாசிக்க சொல்ல வேண்டும்.

  பாட புத்தகத்தில் இருப்பதை தவிர மற்ற சொல்லாடல்கள் அவர்களுக்கு தெரிவதே இல்லை.

  இதற்கான முயற்சியாக வாசிப்பு பாடவேளைக்கு நேரம் ஒதுக்க வேண்டும்.

  முதலில் பிழையற வாசித்தல் மற்றும் எழுதுதல் போன்றவை தான் இதற்கான அடிப்படைப் பயிற்சி.

  புதிய ஒரு விஷயத்தை வாசித்தல் என்பது அன்றாட பழக்கங்களில் ஒன்றாக மாறிவிடும்.

  அப்புறம் என்ன அவர்களே தேடித்தேடி படிப்பார்கள்.

  அடுத்து எழுத்தாளர்களுக்கு,

  குழந்தைகள் இலக்கியத்தில் பயன்படுத்தப்படும் மொழிநடை மிகவும் எளிமையாக இருக்க வேண்டும்.

  எடுத்துக்கொண்ட கருவை(கதை/கட்டுரை/பாடல்) படிப்படியாக அந்த உணர்வைக் கடத்த வேண்டும்.

  நீதிபோதனை சொல்வதற்காக மட்டுமே நாம் எழுத வரவில்லை.

  ஒவ்வொரு குழந்தைக்குள்ளும் இருக்கும் உணர்வை வெளிக்கொணர வேண்டும்.

  நம்ப முடியாத fantacy கதையைச் சொன்னாலும் கூட அடுத்தடுத்து விரியும் கற்பனை காட்சிகள், கதாபாத்திரத்தின் செயல்பாடுகள் அவர்களது மனதுக்கு நெருக்கமாக இருக்கும்படி எழுத வேண்டும்.

  பள்ளியில் நூலகம் அமைக்கப்பட்டு இருந்தாலும் அதை நோக்கி வரும்படி குழந்தைகள் கவரப்படுவது இல்லை. அது ஒருவிதமான போரடிக்கும் நிகழ்வாகவே பெரும்பாலான குழந்தைகள்கள் கருதுகிறார்கள். இது மறுக்க முடியாத உண்மை.

  வாசிப்பு/எழுதுவது என்கிற தினசரி பயிற்சியை ஆண்டாண்டுகாலமாக பின்பற்றும் பள்ளிகள் பாடத்திட்டத்துக்கு வெளியே இந்த பயிற்சியை முன்னெடுத்தால் தான் சுய சிந்தனை அவர்களுக்கு தூண்டப்படும். அறிவார்ந்த சமூகம் உண்மையாகவே உருவாகும்.

  காயத்ரி சிவக்குமார்
  மொழிபெயர்ப்பாளர்

 4. இங்கே கூறப்பட்டிருக்கும் ‘ குழந்தை இலக்கியம் ‘ பற்றிய அனைத்துக் கருத்துகளும் தீவிரமாகச் சிந்திக்க வேண்டியவை. கருத்தின் முக்கியத்துவத்திற்கேட்பச் செயல்படுத்த வேண்டியது அவசியம்.

  இங்கே என் தனிப்பட்ட கருத்தைக் கூற விரும்புகிறேன். நான் சில பிரபல நாளிதழ்களின் சிறுவர் இதழ்களில் அவ்வப்போது எழுதி வருகிறேன். அதுவும் நான் அனுப்பியது பிடித்திருந்தால் போடுகிறார்கள். அவர்களை விட்டால் வேறு வழியும் இல்லை.

  கடவுள் வழிபாடு , தலைவரைப் போற்றுதல், குரு – சிஷ்யன், மன்னர் கதைகளில் கடும் அதிருப்தியடைந்து கொஞ்சம் புதுமாதிரியாக எழுதிப் பார்க்கிறேன். நிறைய வகையில் கதை சொல்ல விருப்பம் கொண்டு இரண்டு ஆண்டுகளாக முயன்று வரும் நான், என்னை ஊக்கப்படுத்த, கதைகளின் குறை நிறைகளைச் சொல்லிப் பேச / விமர்சிக்க வாசகர் (அ) வாசகர் தொடர்பு இல்லாமல் ஏங்கிப்போய்க் கிடக்கிறேன் ( இதைச் சொல்வதற்கு நான் வெட்கப்படவில்லை. மனத்தின் வலி அவ்வளவு ) .

  ஒருகட்டத்தில், நான் வெறுத்த கதைக் களத்தையே எழுதித் தொலைக்கலாம் எதாவது வாசகர் கடிதத்தில் யாராவது பாராட்டியதைப் போடுவார்கள் என்று அதையும் செய்திருக்கிறேன் . ஒன்றும் நடக்கவில்லை. நான் வேதனைப்பட்ட நாள்கள் அவை.

  என்னைப் போன்ற ஆரம்ப நிலை சிறுவர் இலக்கிய எழுத்தாளர்கள் ஊக்கம் இல்லாமலேயே எழுத்தை விட்டொழிக்க வேண்டிய சூழ்நிலையை இங்கே பார்க்கலாம்.
  சொந்தமாகப் புத்தகம் போடுவது பற்றியெல்லாம் நினைத்துக்கூடப் பார்க்க முடியவில்லை.

  இதைப் போக்க வழி இருந்தால் சொல்லுங்கள்..

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.