ஸ்ரீநேசன் கவிதைகள்


  • சூரியனுடன் வருவேன்
நான் இங்கிருப்பேன்
இதே நேரம் ஏதோ மலையேறிப் பாதி வழியில் ஒரு பாறைமேல் தங்கியிருப்பேன்
மன்னியுங்கள் உங்களை இளங்கதிரில் வரச் சொல்லி
இப்படி எங்கென்றே தெரியாமல் எங்கேயோ போய்க் கொண்டிருப்பதற்கு
நீங்கள் பழியுரைக்கவோ நான் பொறுப்பேற்கவோ ஆகாது
நானோ ஓர் இரட்டை ஆள் வசதிக்கு ஏறிக் கொண்டிருக்கும்போதே இறங்கியும் கொள்பவன்.
தையும் சித்திரையும் ஒன்றேதான் அம்மனை வணங்கி நிற்க ஆடி வர வேண்டியதில்லை.
பனி ஓய்ந்து அனல் காய்ந்து மழையாக்கித் தரும் பகலில்
இந்த வயல்வெளியில் வெயில் தின்று நிழல் பருகி நிற்பேன்
ஒரே நேரத்தில் எதிரும் புதிருமாக நிலவெளிகளைக் கடக்கும்
நீண்ட தூரப் பயணிகளை ஒரு காரணமுமில்லாமல் காண
அரவமற்ற ரயில் நிலையம் போவேன் வருவேன்
வழியில் பள்ளி விட்டுத் துள்ளிவரும் குழந்தைகள்
இறைத்துச் செல்லும் மகிழ்ச்சியைப் பொறுக்கி அணிவேன்
அந்தி வந்து அணைக்கும்வரை ஏரிக்கரைமீது
கொண்டாட்டத் தனிமையில் சீரற்றுச் சிந்தித்துக் கிடப்பேன்
சிலதுளி கண்ணீரும் உகுப்பேன்.
இருள் என் கைப்பிடித்தெழுப்புகையில் பற்றிப் பிறை நிலவு நட்சத்திரங்களிடையே நடப்பேன்
களைத்தால் மேகங்களில் படுப்பேன்
உங்கள் பூமியில் நாளை என்று வரும்போதே சூரியனுடன் வருவேன்.
  • நானாக இருக்கும் இந்தத் தூசி
அழிவற்றதாய் ஒருபோதும் கனவை ஊடுருவிச் செல்லவியலா இந்தப் பூமியில்
உங்களோடு அலைந்து கொண்டிருக்கும் இந்தத் தூசிக்கு
தன்னால் மட்டுமே உணர முடிந்த உலகம் ஒன்றுண்டு
தனிப்பட்ட அதன் உலகிலிருந்த இன்றும் ஊற்றெடுத்து நிரம்பிக் கொண்டிருக்கும் அந்த மூன்று கிணறுகள்
இப்போது எல்லாம் தூர்க்கப்பட்டும் ரணமாறா எஞ்சிய நிலவடுக்கள்
இனி ஒருபோதும் பார்க்க வாய்ப்பற்ற மூடுண்ட கண்கள்
இளம் பெண்ணை நிகர்த்தும் பல்லுரு பிம்பங்களைப் பிரதிபலிக்கத் திராணியற்ற நீர்மப் பளிங்கங்கள்
இன்று கிணற்றின் அதுவாகிய வயிற்றின் நிரம்பாத காலத்தின் இருளார்ந்த ஆழத்தில்
இன்னும் மறதிக்காட்படாத தூசியின் ஞாபகத்தில் ஒரு திடுக்கிட்டக் கீறல்
அந்தப் பச்சை ரணத்தில் ரத்தப் பீறிடல்
கழுவத் திரும்பப் பெறவியலாக் கவலைமாடுகள் இறைத்துக் கொடுக்கும் துளைக்குழிநீர் போதாதே
செங்குருதியோடும் கழனிக் கால்வாயில் அதன் மீது மொய்த்து ஒத்திசைவோடும் நினைவு
இது தூசியின் பொருளற்றப் புலம்பல்தான்
இது தூசியின் ஒருபோதும் புலப்படாதமாட்டாத அலைவுக் காட்சிதான்
இது தூசியின் தூசியென்றுணர்ந்துவிட்ட நுண்ணறிவுதான்
இவை உள்ளவரை தூசியும் நிலைத்திருக்கும்
தூசியின் ஒரு கோடியில் புதைந்த கிணறுகள் என்றும் கண்திறந்து மனம்நிரம்பி நிலம்பரவி உலகென்று விரிந்திருக்கும்.
  • சித்திரி : கத்திரி
அதிபதி
அதிதேவதையாய் ஆவேசங்கொண்டு மேஷத்துள் வாசம்செய்நாளில்
கோட்டை மாசிக்கரியன் வந்து
அஸ்தமனத்துக்கு முன்பே அண்டயோனியை விழுங்கிப் போந்தான்
ஆதிஅனலி ஆதாரசக்தி முழுஉலகையும்
வெஞ்சினம் தணிக்க தம் உஷ்ண உதரத்துள் திணித்தாள் போலும்
மேல்கீழ்மூச்சு வாங்கி ஜனங்கள் உள்வெளி யலைந்து
தவியாய் தவிப்பது அவள் தன்னைத் தாலாட்டிக் கொள்வதேயாகும்
பருகிடத் தணியா நீரோ உலையடுப்பிலிருந்து ஆவிக் கிளம்ப
இந்த வைரோசனி மொண்டு தந்ததுதாம்
வெந்நீர் ஊற்றாய்ப் பீறிடும் குழாய்கள் எல்லி நா பொழியும் வசைமொழிதாம்
கனலியின் கரங்கள் கண்காணாது
இருண்ட விடமெல்லாம் நெருப்புத் தாரையாய் விரவ வல்லன
பனிச்சாதனப்பெட்டிக்குள் நுழைந்த எயிறிலி கட்டிக்கூழ்மத்தை நக்கிக் குலைக்கவும்
வளிச்சீரமைப்பியுள் வெஞ்சுடர் பாய்ந்து உள்ளே புழங்குவோர் வேர்வை பெருக்கவும்
விசிறிச் சுழற்சியில் விபரீதமாக சவிதா தன் தீக்கூந்தல் விரிக்கவும்
எனப் பல்வேறு வகையினில் பரவிய பானு
கட்டில் மெத்தையில் பருத்திக்குப் பதிலாய் அவள்தம் அக்னி சேலையைப் பரப்புகிறாள்
இனி பூலோகத்துள்ள எவரும்
உலர்ந்து மலர்ந்தும் மாலை மணந்து மயக்கிட
தம் அன்புக்குரியவள் அருகில் செல்ல நேர்ந்திட
அவர்கள் நண்பகல் மணலாய் கொதிப்பார்கள்
மீறி முத்தப் பகிர்வில் நாக்கைத் துழாவ சூரியத்துண்டாய் தீய்ப்பார்கள்.
  • ஜாலங்கள் ஜாக்கிரதை
முதலில் அது
வெள்ளியன்று சாமிக்குச் சூட்ட வாங்கி வந்த கதம்பத்தில்
மரிக்கொழுந்து வேஷமிட்டு நுழைந்திருந்தது
அதனால் சாமிக்கும் வாட்டமில்லை எங்களுக்கும் நட்டமில்லை
பின்போ பொரியலுக்கு வாங்கி வந்த சிறுகீரைக்கட்டோடு கலந்து வந்திருந்தது.
பார்த்துப் பார்த்து ஆயும் மனைவி கையில் சிக்கிக்கொண்டு குப்பைக்குப் போனது
பொரியலும் பிழைத்தது.
இம்முறை கொத்துமல்லி கட்டுக்குள் கண்டே பிடிக்காதவாறு முழு உருப்பொருத்தத்தில்
சமையலறை சட்னிக்கு தயாராயிருக்கிறது.
அரைக்கப் போவதும் பார்வை குறைவான அம்மாதான்
மூலிகையாய் மருந்தாய் சித்தர் வழிவழியாய் தமிழர் வீட்டில் நிலைத்திருந்த தாவரம்போல
வேஷமிட்டு ஒரு போலி நுழைந்திருக்கிறது
வயிற்றுள் புகுமுன் பார்த்தீனியம் ஜாக்கிரதை.

 

  • நாதஸ்வர ஓசையிலே
நாதஸ்வரத்துக்கும் அது வெளிப்படுத்தும் இசைக்கும்
ஏதோ ஓர் ஒத்திசைவு
நீண்டிருக்கும் அந்த வாத்தியத்திலிருந்து பெருகும் இசையில்
அக்கருவியே உருகி நாகமாக நீள்வதாக
காதுகளுக்குள் நுழையும் அது பாம்பாகவே படமெடுத்து அசைகிறது
நேற்றிரவு அனுபவமோ இன்னும் வேறு
முற்றாக அரவமடங்கிய முன்னிரவில் வீட்டுவெளி இருளில் மெதுவாக நடக்கிறேன்.
அருகிருக்கும் கிராமத்துத் திரட்டி விழா வீட்டில் முகமறியாக் கலைஞனின் தனி ஆவர்த்தனம்
ஒலிபெருக்கித் தந்த நாகஸ்வர இசை விருந்து
ராகம் இதுவென்று அறியும் அறிவில்லா எனைச்சூழ்ந்து லயிப்புள் புதைக்கிறது.
திரளும் கண்ணீரோடு திணறி மூச்சு மீள ஆகாயத்தை அண்ணாந்தேன்
அற்புதம்தான்
மொத்த நட்சத்திரக் கூட்டமும் அவ்விருளில் ஒருசேர ஜொலிக்கின்றன
பெருகி வந்த ஒலிக்கயிறு அதனூடே ஒளிக் கயிறாய் மாறி
ஒவ்வொன்றாய்த் துளைத்து வலையொன்று நெய்கிறது
அந்த இசை வலைக்குள் ஒட்டு மொத்த உலகும்
சில கணங்கள் எனைப் போன்றே வீழ்ந்து பின் மீள்கிறது
நானும் தலைத்தாழ வழிந்த கண்ணீரில் இசை வெள்ளம் வடிந்து ஓய்கிறது
இசை நாகமும் சூழும் இருள்வளைக்குள் புகுந்து மறைகிறது.

-ஸ்ரீநேசன் 

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.