- சிலவற்றைச் சரி செய்ய முடியாது
திடீரென
ஒரு நாள்
சூரியனும் சந்திரனும் நட்சத்திரங்களும்
மறைந்துவிடுகின்றன
அப்படியொரு நாளுக்குப்பின்
மீண்டும் சூரியன் முளைக்கிறது
சந்திரன் முளைக்கிறது
நட்சத்திரங்கள் பல்லைக் காட்டுகின்றன
ஆனால் இது பழகிய வானமல்ல
தலைக்கு மேல் பெரிய படுதா
இதன் அடியில்
ஒரு மரத்தில்
தூக்குமாட்டிக்கொள்ளக்கூட
முடியாது.
- தன்னோடிருத்தல்
தன்னந்தனிமையில்
ஒரு வீணை அதிர்ந்தது
தந்திகளின்றி
இசைத்துணுக்குகள்
கூரையை அடைந்து தொங்கின
அறை தோட்டமாகியது
ஒன்று புரிந்தது
என்னோடு நான் இருக்கும்போது
முன்னெப்போதையும்விட
நீ என்னோடிருக்கிறாய்
இசைக்கப்படாதிருக்கும்போது
இசையோடிருக்கிறது சப்தம்
இருத்தல் இழைதலாகும்போது
சாவு தள்ளி நிற்கிறது.
- இருவரைக் காதலிக்கும்போது
ஒரே சமயத்தில் இரண்டு நீலங்களில்
நீரைக் கிழிக்கிறேன்
காற்றைக் கிழிக்கிறேன்
ஒரு மார்புக்குள் என் உயிர்
ஒரு உள்ளங்கைக்குள் என் மனம்
இரண்டு கிழக்குகளை
நோக்குகிறதென் மூக்கு
இரண்டு நேற்றுகளிலிருந்து
இரண்டு நாளைகளுக்கு
ஒவ்வொரு நாளும் தாண்டுகிறேன்
இரண்டு கொள்ளைகளை
வெற்றிகரமாகச் செய்கிறேன்
சில இரவுகளில்
காரிருள் சுற்றி காரிருள்
அலறல்கள்
இரண்டு பொழுதுகள் புலர்ந்துவிடுகின்றன.
- சரணாகதி
ஒரு காலத்தில் எத்தனைக் காலத்தை
பார்க்க முடிகிறது?
அதைப் பொறுத்தே
திறக்கப்படுகின்றன கதவுகள்
பாதைகள் புலப்படுகின்றன
இருத்தலிலிருந்து ஆவதற்கு
ஒருவரிடமிருந்து தொடங்கி
அவரிடமே வந்தடையும் அவற்றில்
இப்போது
விளக்குகள் ஏற்றப்பட்டிருக்கின்றன.
- ஸ்ரீவள்ளி
Art Courtesy: Endmion