இனி ஒவ்வொரு கனலி இணைய இதழிலும் முழுமையான நேர்காணல் ஒன்று வெளியாகும்.அதுமட்டுமின்றி அதனுடன் ஆசிரியர் ஒருவரின் ஒரே ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு (சிறுகதைத் தொகுப்பு,நாவல்,கவிதைத் தொகுப்பு,அல்புனைவு)அத்தொகுப்புச் சார்ந்த நேர்காணல் கொண்டு வரலாம் என்று முடிவு செய்துள்ளேன். (இனி ஒவ்வொரு இதழிலும் இரண்டு அல்லது அதற்குமேல் நேர்காணல்கள் வெளியாகும்)
அந்த வகையில் முதல் புத்தகமாக ஆயன் (அனா பர்ன்ஸ் தமிழில் -இல.சுபத்ரா )மொழிப்பெயர்ப்பு நாவலை நேர்காணலுக்கு எடுத்துக் கொண்டிருக்கிறேன்
ஆயன்(Milkman)மொழிப்பெயர்ப்பு நாவலை இந்த முறை உரையாடலுக்கு எடுத்துக்கொண்டமைக்கு காரணம் என்னவென்றால்,சென்ற வருடத்தில் வெளியான மொழிப்பெயர்ப்பு நாவல்களில் ஆயன் முக்கியமான மொழிப்பெயர்ப்பு நாவல்.ஏற்கனவே 2018ஆம் ஆண்டிற்கான புக்கர் பரிசை வென்ற நாவல்.இதன் ஆசிரியர் அனா பர்ன்ஸ் வடக்கு அயர்லாந்து பகுதியைச் சார்ந்த பெண் எழுத்தாளர். இந்த நாவல் அனா பரன்ஸின் மூன்றாவது நாவல். 1970களில் வடக்கு அயர்லாந்து பகுதியில் ஏற்பட்ட (மூன்று தரப்பின்) அரசியல் உள்நாட்டுக் கிளர்ச்சிகளின் பின்புலத்தில் நாவலின் கதைக்களம் பயணிக்கிறது. இருந்தாலும் நாவலின் எந்தப் பெயர்களும் வெளிப்படையாக வாசகனுக்குத் தெரிவிக்கப்படவில்லை. பதினெட்டு வயதே நிரம்பிய இளம்பெண் ஒருவளை ஆயன்(பெயருக்கான காரணமும் நமக்குச் சொல்லப்படுவதில்லை) என்கிற அநாமதேயன் பின்தொடர்வதை நாவல் பேசத் துவங்குகிறது. ஒருவகையில் Stalking ’வன்தொடரல்’ நாவலாக இது மேலோட்டமாக வாசகனுக்குக் காட்சியளித்தாலும், ஒவ்வொரு பக்கத்திலும் பல்வேறு வரிகளிலும் அனா பர்ன்ஸ் பயன்படுத்தியிருக்கும் மொழியானது பூடகமாக மட்டுமின்றி வெளிப்படையாகவும் பல்வேறு இடங்களில் அரசியல் இடர்களால் நெறிக்கப்படும் குரல்கள், பெண் ஒருவரின் தனது சமகால வாழ்வின் அகம் சார்ந்த குழப்பங்கள் அதில் அவளுக்குப் புறவுலகம் தரும் அழுத்தம், உறவுகளின் ஏமாற்றம் அவை சிதைவுறும் போது ஏற்படும் மனவழுத்தங்கள், உள்நாட்டுக் கிளர்ச்சிகளால் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சிக்கல்களையும் அதனால் சிதைவுறும் குடும்பங்களின் துயரங்களைப் பேசுகிறது. இன்னொரு பார்வை இந்த நாவலுக்கு உண்டு அது Metoo போன்ற உலகளாவிய போராட்டங்களின் மிகப்பெரிய வெற்றியாகவும் இந்நாவலுக்குக் கிடைத்திருக்கும் புக்கர் பரிசு பார்க்கப்படுகிறது. ஆனால் நான் இதை வெறும் பெண்ணிய நாவலாக மட்டும் கட்டாயமாகச் சுருக்கிடமாட்டேன் காரணம் நாவல் பாலினச் சமநிலையற்ற மானுட விடுதலையைச் சில இடங்களிலும் பேசுகிறது. முக்கியமாக ஒற்றைத்தன்மை அல்லது கிளர்ச்சி அரசியல்/ ஆயுதப் போராட்டங்கள் அப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வியலில் ஏற்படுத்தும் அக/புறச் சிதைவுகள் நாவலின் முக்கியமான பேசுபொருள்,அதுவே இந்த நாவலுக்கு மிகச்சிறந்த இடத்தையும் அளிக்கிறது.
அனா பர்ன்ஸ் பயன்படுத்தியுள்ள மொழி சற்று கடுமையானது.ஒரே மூச்சில் வாசிப்பதற்கு நாவல் உகந்ததும் இல்லை.கட்டாயம் பொறுமையான வாசிப்பிற்கே உகந்தது. இந்த இடத்தில் இல.சுபத்ரா தனது அற்புதமான மொழியாக்கத்தின் வழியாக நாவலைத் தமிழ் வாசகனின் வாசிப்பிற்கு மிகுந்த இலகுவான ஒன்றாக மட்டுமின்றி தொடர்ந்து வாசிக்கும் ஒருவருக்கு நெருக்கமான ஒன்றாகவும் மாற்றியுள்ளார். அவரின் நாவல் மொழிப்பெயர்ப்பு அனுபவங்களை மட்டுமின்றி பொதுவான மொழிப்பெயர்ப்பு சார்ந்தும் சிறிய உரையாடலை ஒன்றையும் முயன்றுள்ளோம். சுபத்ராவும் எப்போதும் அவருடன் உலவும் அதே புன்னகை ,உற்சாகம், நம்பிக்கை போன்றவற்றுடன் இந்த உரையாடலில் பேசியிருக்கிறார். இனி நேர்காணல்
ஆயன் நாவலை மொழியாக்கம் செய்ய தேர்தெடுத்தின் பின்புலம் என்ன? அது உங்கள் தேர்வா அல்லது பதிப்பகத்தின் தேர்வா?
ஆயன் நாவல் பதிப்பகம் எனக்குத் தந்ததுதான். முதல் நாவலான பாதி இரவு கடந்து விட்டது மொழிபெயர்த்து முடித்து ஓரளவு நேர்மறையான feedback கிடைத்ததனால் அவர்களுக்கு என் மீது நம்பிக்கை தோன்றிய இருக்கக்கூடும்.
என்னைப் பொறுத்தவரை, ஆயன் நாவலில் stalking குறித்து மிக அழுத்தமாகப் பேசப்படுவது ஒரு முக்கியமான விஷயமாகத் தோன்றியது. மொழிபெயர்க்க மொழிபெயர்க்க நாவலின் ஏராளமான
கூறுகளை மனம் விரும்பியதென்றாலும், ‘stalking’ தான் அதை ஒப்புக் கொள்ளக் காரணமாக அமைந்தது.
‘stalking’ தான் நாவலை மொழியாக்கம்
செய்ய ஒப்புக் கொள்ளக் காரணமாக அமைந்தது என்கிறீர்கள் இன்னும் இதைப்பற்றி விரிவாகக் கூறிட இயலுமா?
(‘stalking’ குறித்து : Stalking என்பது தீவிரமாக ஒருவரைப் பின்தொடர்வது என்னும் பொருள் கொண்ட சொல். இதனை ஆயன் நூலில் நான் ’வன்தொடரல்’ என்னும் சொல்லாக மொழிபெயர்த்திருந்தேன்(திரு. கார்த்திக் வேலு இச்சொல்லைப் பரிந்துரைத்தார்).
ஒரு பெண் பள்ளி/கல்லூரி/பணி முடித்து வரும்போது அல்லது செல்லும்போது பின் தொடர்வது, அவளைப் பற்றிய எல்லா விஷயங்களையும் அறிந்து வைத்து அவற்றின் அடிப்படையில் அச்சுறுத்துவது, சமூக ஊடகங்களில் தீவிரமாகப் பின் தொடர்வது என எல்லாமும் இவ்வகைமையில் வரும். இது ஆண்களுக்கும் நிகழ்வதுண்டு தான். இவ்வாறு பின் தொடரப்படுவது ஒருவருக்கு எவ்வளவு சங்கடத்தையும் அச்சத்தையும் எரிச்சலையும் அதிருப்தியையும் தரும், உடல்நலனைக்கூடக் கெடுக்கும் என்பதை இந்நாவல் மிக அழுத்தமாக எடுத்துக்காட்டியிருக்கும்.)
ஆயன் நாவலை எழுதிய அனா பர்னஸை ஏற்கனவே வாசித்துள்ளீர்களா அல்லது ஆயன் நாவல் வழியாகவே உங்களுக்கு அவர் அறிமுகமா?
இல்லை. அனா பர்ன்ஸ் ஆயன் மூலமாகத்தான் எனக்கு அறிமுகம்.
பொதுவாக ஒரு கூற்று இங்குண்டு மூல எழுத்தாளரின் படைப்புகளை அதிகம் படித்து அவரின் படைப்புகளின் வேர்களை அல்லது அவரின் மனவோட்டத்தை, அவரின் மொழியை அறிந்து கொள்ளலாமே எப்படி ஒருவரை உடனடியாக மொழியாக்கம் செய்கிறார்கள் என்பது அக்கூற்று. இதற்கு மொழிப்பெயர்ப்பாளராக எப்படிப் பதில் அளிப்பீர்கள்.
நீங்கள் குறிப்பிடும் கூற்றுச் சரியானதும் நியாயமானதும்தான். ஒரு பிரதியை மொழிப்பெயர்க்கும் முன்பு அதன் ஆசிரியரைக் குறித்து அவர் வாழ்கின்ற சமூகத்தை/சொந்த வாழ்வைக் குறித்து மொழிபெயர்ப்பாளர் அறிந்துகொள்ளத்தான் வேண்டும். குறைந்தபட்சம் அப்பிரதியை அவர் எழுதத் தூண்டிய காரணத்தை/சூழலையாவது மொழிப்பெயர்ப்பாளர் அறிந்து கொள்ள வேண்டும். நான் ஆயன் நூலை மொழிபெயர்க்க ஒட்டுமொத்தமாக இரண்டு ஆண்டுகள் ஆயின. மொழிப்பெயர்க்கிற செயல்பாடு அதிகபட்சம் எட்டு மாதங்கள்தான் எடுத்திருக்கும். அதற்கு முன்பு அனா பர்ன்ஸ் குறித்து, அவரது வாழ்க்கை குறித்து, வட அயர்லாந்தின் அரசியல் குறித்து, The Troubles குறித்து, அவரது பிற இரண்டு புத்தகங்களைக் குறித்து இணையத்தில் குறிப்புகள் எடுத்து அதுகுறித்து நண்பர்களுடன் உரையாடி அதன்பின்புதான் மொழிபெயர்க்க முடிந்தது.
போலவே பாதி இரவு கடந்து விட்டது நூலை மொழிபெயர்க்கும் போது அதில் இருக்கும் நீண்ட வரிகள் இந்த நாவலுக்கென ஆசிரியர் பிரத்தியேகமாக உபயோகித்த உத்தியா அல்லது அது அவரின் பொதுவான நடையா என அறிவதற்கு அவரது வேறு இரு புத்தகங்களை கிண்டிலில் வாங்கி ரெஃபர் செய்துகொண்டேன்.
இரண்டு புத்தகங்களின் ஆசிரியர்களுமே இதுவரை தந்துள்ள பேட்டிகள், இரு புத்தகங்கள் குறித்தும் இதுவரை வந்துள்ள விமர்சனங்கள் என என்னவெல்லாம் வாசிக்க முடியுமோ அத்தனையையும் வாசித்துவிட்டுத்தான் மொழிபெயர்த்தேன்.
அயன் மாதிரியான நாவலை மொழிப்பெயர்ப்புக்கு எடுத்துக் கொள்ளும் போது முதலில் ஆங்கிலத்தில் முழுவதுமாக படித்து வீட்டு மொழிபெயர்ப்பு செய்யத் துவங்குவீர்களா அல்லது சின்ன சின்ன அத்தியாயங்களாகப் படித்துக்கொண்டு மொழிப்பெயர்ப்பு செய்வீர்களா?
ஒவ்வொரு வார்த்தையின் பொருளும், ஒவ்வொரு வாக்கியத்தின் முக்கியத்துவமும் தெரிகிற அளவு ஆழமான வாசிப்பு முதலில் நிகழாதென்றாலும், முழுமையாக நாவலில் என்ன இருக்கிறது, எந்த அத்தியாயத்தில் என்ன நிகழ்கிறது எந்தக் கதாபாத்திரங்கள் எப்போது அறிமுகமாகின்றன, எது சுவாரஸ்யமானது/அசுவாரஸ்யமானது, எது மொழிபெயர்க்கச் சுலபமானது/கடினமானது எனும் ஒரு யோசனை கிடைக்கும்படியாக நாவலை முழுமையாக வாசித்துவிட்டு ( skimming என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள்), அதன்பிறகு மொழிபெயர்க்கும்போது ஒவ்வொரு அத்தியாயமாக வாசித்து மொழிபெயர்ப்பேன்.
ஆயன் நாவலில் பெண் குரல் ஒன்று நாவல் முழுவதும் வருகிறது,அது தனக்கான சுதந்திரம்,தன் மீது செலுத்தப்படும் அகம் மற்றும் புற வன்முறைகள், சமூக மதிப்பீடுகள் மீதான தன்னுடைய விமர்சனங்கள்,அரசியல் இடர்களுக்கு இடையிலான தெளிவற்ற வாழ்வின் மீதான சலனமின்மைகளை மறைபொருளாக தொடர்ந்துப்பேசுகிறது.இக்குரலுடன் மொழிப்பெயர்ப்பாளராக உங்களைப் பொருத்துவது என்பது எவ்வளவு நிறைவான மற்றும் சவால்கள் நிறைந்ததாக மொழிப்பெயர்ப்பின் கணங்களில் இருந்தது?
ஆயன் நாவலில் வருகிற பெண் குரல் கூறுகிற நிறைய விஷயங்கள் ஓர் ஆணுக்கு மிகச் சாதாரணமாகவோ இயல்பாகவோ கூட தெரியக்கூடும். எடுத்துக்காட்டாக, நடைப்பயிற்சி செய்யும் இடம், கடைகள், ஃபிரெஞ்ச் வகுப்பு என எங்குச் சென்றாலும் தன் மனம் விரும்பாத ஓர் ஆண் அங்கே எதிர்ப்படுவதை எதிர்கொள்வது. ”அவன் பாட்டிற்கு அவன் வந்துவிட்டுப் போகிறான், நீ உன் வேலைகளைப் பார்த்துவிட்டுக் கிளம்பவேண்டியதுதானே” எனச் சிலருக்குத் தோன்றக்கூடும். நாவலில் நாயகியே அப்படிச் சிலர் கூறக்கூடும் என்பதையும் குறிப்பிடுகிறார், அதனாலேயே தான் அப்பிரச்சனையை யாரிடமும் பகிர்ந்துகொள்ளவில்லை என்கிறாள். ஒரே ஒருமுறை அம்மாவிடம் பகிர்ந்துகொள்ளும்போதும் கூட ஏமாற்றமே மிஞ்சுகிறது அவளுக்கு. அம்மாவும் அவளைப் புரிந்துகொள்வதில்லை. ஒரு பெண்ணாக என்னால் அவளது உணர்வுகளை எரிச்சலைத் தனிமைப்படுத்திக் கொள்ளும் பண்பினை மிக நன்றாகவே புரிந்துகொள்ள முடிந்தது. எனவே நாவலில் வரும் பெண்குரலின் உணர்வுகளை மொழிபெயர்ப்பதில் எனக்குச் சிரமம் எதுவும் தோன்றவில்லை. அவள் ஒரு தோழி போலவோ தங்கை போலவேதான் தோன்றினாள். சில சமயங்களில் அவள் எடுக்கும் முடிவுகள் சார்ந்து எனக்கு அதிருப்திகள் தோன்றினாலும், “பதினெட்டே வயதான எனக்கு இவற்றை எப்படி எதிர்கொள்வதெனத் தெரியவில்லை. இவ்விஷயங்களைச் சரியாக எதிர்கொண்ட முன்மாதிரிகளும் எங்கள் சமூகத்தில் இல்லை” என அவளே ஓரிடத்தில் கூறுவதால், அதுசார்ந்து அவளை மன்னிக்க முடிந்தது. நாவலின் பிற்பகுதியில் நாயகியின் அம்மாவின் மனநிலையில் ஏற்படும் மாற்றங்களையும் மிகவும் ரசித்துச் செய்தேன். ஒரு பெண்ணாக எனக்கு இந்த நாவல் சற்றுக் கூடுதலாகவே பிடித்தது. நாவலில் எழுதப்பட்டிருக்கும் நீண்ட வாக்கியங்களும், சில வரிகள் redundantஆக இருப்பதும், மிக நீண்ட பத்திகளும்தான் சற்றுச் சிரமத்தைத் தந்தன. ஆனால் அதுவும் நாவலின் உத்திகளில் ஒன்றுதான். விசித்திரமான(கிட்டத்தட்ட மனம்பிறழ்ந்த) மனநிலை கொண்ட கதாபாத்திரங்கள் நிறைந்த, அவர்களில் ஒருவரே கதைசொல்லியாக இருக்கிற நாவல் அப்படித்தானே எழுதப்பட வேண்டும்!
I don’t know whose milkman he was,” our narrator tells us. “He wasn’t our milkman. I don’t think he was anybody’s … There was no milk about him. He didn’t ever deliver milk.
இப்படி நாவலில் ஒரு தெளிவின்மையை நாவலாசிரியர் Milkman என்கிற கதாபாத்திரத்திற்குத் தருகிறார். அவர் Millkman என்கிற பெயரை நாவலுக்குச் சூட்டியதற்கான சரியான காரணம் நமக்குத் தெரியவில்லை.நீங்கள் அந்த தலைப்பை ஆயன் என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள்? ஆயன் என்பதை மாடு மேய்ப்பவன் என்று வைத்துக் கொண்டாலும் இந்த தலைப்பு சரியாக உள்ளது என்று நினைக்கிறீர்களா? பொதுவாகத் தலைப்புகளை மாற்றுவதில் மொழிப்பெயர்ப்பாளர்களுக்குச் சிக்கல்கள் அல்லது எவ்வளவு சுதந்திரம் இங்குள்ளது?
விளையாட்டாக ஒரு பதில்: யாருடைய Milkmanஆகவும் இல்லாத ஒருவனை மையமாகக் கொண்ட கதைக்கு ஆங்கிலத்தில் எழுத்தாளர் Milkman எனத் தலைப்பு வைக்கும்போது, யாருடைய பால்காரனும் அல்லாத ஒருவனை மொழிபெயர்ப்பாளர் ஏன் ஆயன்(பசுக்களை மேய்ப்பவன்) என அழைக்கக்கூடாது!
சற்றுப் பொறுப்பான ஒரு பதில்: ஆயன் அல்லது பசுக்களை மேய்க்கிற/கையாள்கிற ஒருவன் செய்யக்கூடியது என்ன? பசுக்களைத் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பது, தான் குறித்திருக்கிற எல்லையைச் சற்றும் மீறாமல் அப்பசுக்கள் மேய்வதைக் கண்காணிப்பது, அப்படி அவை மீறினால் அவற்றைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது. சரிதானே? இந்நாவலில் வரும் அரசாங்கமும் கிளர்ச்சிப் படையும் நாயகி வாழ்கிற சமூகமும் நாயகியின் அக்கா அம்மா அக்காவின் கணவன் உள்ளிட்ட குடும்ப நபர்களும் செய்வது என்ன? அதேபோன்ற கண்காணிப்புதானே… நாயகி என்றோ ஒருநாள் தன் கையில் ஒரு பூனையின் தலையை வைத்திருந்தாள் என்பது சமூகத்தில் பேசுபொருளாகிறது, யார் எங்கே சென்றாலும் கேமராவின் க்ளிக் சத்தங்கள் ஒலிக்கின்றன, எல்லோர் குறித்தும் கோப்புகள் பராமரிக்கப்படுகின்றன. இவையெல்லாம்கூட ஒரு ஆயனின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கிற ஒரு கால்நடையின் நிலை போன்றதுதானே. அதுமட்டுமின்றி, கிறிஸ்துவத் தேவாலயங்களிலும் ஆயர்கள் உண்டு. ஆயன் என்பது தேவாலயப் பதவிகளின் படிநிலைகளில் முதலில் வருபவை. வட அயர்லாந்தின் அரசியல் பிரச்சனை மதம் சார்ந்ததும்தான். அடிப்படையில் அது புராடஸ்டண்டுகளுக்கும் ரோமன் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான மோதல்தான். எனவே ஆயன் என்னும் தலைப்பு கதையின் மையக் கருத்துக்கு உகந்ததாகவும், ஆங்கிலத் தலைப்புக்கு நெருக்கமாகவும் இருக்கும் எனத் தோன்றியது. அதனால் வைத்தேன்.
தலைப்பு வைப்பதில் மொழிபெயர்ப்பாளர்களுக்குப் போதுமான சுதந்திரம் இருக்கிறது என்றே கருதுகிறேன். ஆனால் ஆங்கிலத் தலைப்புக்கு முற்றிலும் தொடர்பற்ற ஒரு தலைப்பை முடிவுசெய்கிற சுதந்திரத்தை மொழிபெயர்ப்பாளர்கள் எடுத்துக்கொள்ளக்கூடாது என்பதே என் கருத்து. இரண்டு காரணங்களுக்காக இதைச் சொல்கிறேன்:
1. என்ன தலைப்பாயினும், மூலமொழியில் அத்தலைப்பைத் தேர்ந்தெடுத்ததற்கு ஆசிரியருக்கு ஒரு காரணம் இருந்திருக்கும். அதை மொழிபெயர்ப்பாளர் மதிக்கவேண்டும்.
2. இணையத்திலோ நூலகத்திலோ எதன் பொருட்டேனும் மொழிபெயர்ப்பு நூலைத் தேடும் வாசகர்கள் மூல மொழியின் தலைப்பிற்குத் தொடர்புடைய வார்த்தைகளை மனதில் கொண்டுதான் மொழிபெயர்ப்புப் புத்தகத்தைத் தேடுவார்கள். நாம் முற்றிலும் மாறுபட்ட ஒரு தலைப்பை வைத்தால் அது அவர்களால் கண்டறியப்பட முடியாமல் கூடப் போய்விடக்கூடும்.
நாவலில் எழுதப்பட்டிருக்கும் நீண்ட வாக்கியங்களும், சில வரிகள் redundant (கூறியது கூறல்)ஆக இருப்பதும், மிக நீண்ட பத்திகளும்தான் சற்றுச் சிரமத்தைத் தந்தன என்கிறீர்கள் சரிதான் என் கேள்வியும் இதிலிருந்தே வருகிறது. நாவலில் உரையாடல் என்பது மிகக் குறைவு, நீண்ட வாக்கியங்கள் பத்திகள் பெரும்பாலும் தொடர்ந்து வருகிறது?இந்த இடங்களை மொழியாக்கம் செய்வது என்பது எவ்வளவு கடினமான ஒன்றாகவும்,மனதளவில் அழுத்தமளிக்கும் ஒன்றாகவும் இருந்தது? அவற்றையெல்லாம் எவ்வழியாகக் கடந்து வந்தீர்கள்?
ஆயன் நாவல் மொழிபெயர்ப்பு முடிந்தவுடன், அடுத்துச் செய்கிற மொழிபெயர்ப்பு நூல் நிச்சயம் எளிமையானதாகவும் சிறியதாகவும்தான் இருக்கவேண்டும் என மனம் ஆசைகொள்கிற அளவிற்கு ஆயன் நாவலின் நீண்ட வாக்கியங்களும் பத்திகளும் சிரமத்தைத் தந்திருந்தனதான். என்றாலும், எனது முதல் மொழிபெயர்ப்பு நூலான பாதி இரவு கடந்து விட்டது-ம் நிறைய நீண்ட வாக்கியங்களைக் கொண்டதுதான். எனவே ஏற்கனவே எனக்கு அதில் சற்றுப் பயிற்சி இருந்ததாகத் தோன்றுகிறது. அதோடு, நீண்ட வாக்கியங்களைச் சரளமாக மொழிபெயர்த்து முடிக்கிறபோது கிடைக்கிற மகிழ்ச்சியும் திருப்தியும்தான் இதற்கான அடிப்படை ஊக்கமாக இருந்திருக்கும் என நினைக்கிறேன்.
அதைவிடுத்துப் பார்த்தால், நிறையக் காற்புள்ளிகளோடு(கமா) வருகிற ஒரு வாக்கியத்தில் முதல் கமாவிற்கு முன் சொன்ன விஷயம் சார்ந்த விளக்கம்(adjective, adverb) சில சமயங்களில் இரண்டு மூன்று கமாவிற்குப் பின் வரும். அதுமாதிரியான சமயங்களில் வாக்கியத்தின் பொருளைப் புரிந்துகொள்வதிலேயே சிரமம் இருக்கும். அப்போதெல்லாம் கணவர் லட்சுமிகாந்தனிடம் அப்பத்தியை வாசிக்கத்தந்து அதன் பொருள் குறித்து விவாதித்துத் தெளிவாகிக் கொள்வேன். நான் காகிதத்தில் எழுதுவதைக் கணினியில் ஏற்றும் உதவியைச் செய்து வந்ததால் அவருக்கும் நாவல் குறித்தும் கதாபாத்திரங்கள் குறித்தும் அடிப்படை அறிதல் இருந்தது. எனவே நாவல் குறித்து அவரால் என்னோடு உரையாட முடிந்தது. அதுவும் உதவியாக இருந்தது.
பெண்ணியம் நாவல் என்கிற அடிப்படையில் ஆயன் நாவல் இருந்தாலும் இன்னொரு வடிவில் இது அரசியல் நாவலும். ஒற்றைத்தன்மை,கிளர்ச்சிகள்,ஆயுதப் போராட்டங்கள் போன்ற அரசியல் வடிவங்களை வாசித்துவிட்டு மொழியாக்கம் செய்யும் போது உங்களுக்கான அரசியல் பார்வைகளில் ஏற்படும் தாக்கங்கள் பற்றி பேசலாமா? ஏற்கெனவே இந்த அரசியலில் சொல்லாடல்களின் மீதான உங்களின் அறிதலும் தேடலும் இன்னும் மாறுபாடுகளைக் கண்டுள்ளதா?இன்னும் அதிகமான தேடல்களை ஊக்குவிக்கிறதா அல்லது மொழியாக்கத்துடன் அவ்வண்ணங்கள் முடிவுக்கு வந்துவிடுகிறதா?
ஆமாம், ஆயன் பெண்ணிய நூல் மட்டும் அல்ல. அடிப்படையில் வட அயர்லாந்தின் The Troubles ஒரு விடுதலைப் போருக்கு இணையானது. ஆனால் அதனை ஓர் இனமோதல் எனும் விதமாகத்தான் வரலாறு பதிவு செய்கிறது. 12ஆம் நூற்றாண்டு தொடங்கிப் பின் 17, 18 ஆம் நூற்றாண்டுகள் என அங்கு நிகழ்ந்த ஆங்கிலக் காலனியாதிக்கத்திலிருந்து விடுபட விரும்பிய பூர்வீக மக்களது நீண்ட நெடிய போராட்டம் அது. அதில் கிளர்ச்சிக்காரர்களின் பங்கு முக்கியமானது. மக்கள் குழந்தைகளுக்குச் சூட்டுகிற பெயர், கொண்டாடுகிற சினிமா/விளையாட்டு நட்சத்திரம், வாசிக்கிற செய்தித்தாள் என எல்லாமுமே அவர்களது அரசியல் நிலைப்பாட்டின் அடையாளமாகக் கருதப்பட்டது. அதேசமயம், நீண்ட நெடிய போராட்டத்தினூடாக, ஆள்பவர்கள் மற்றும் கிளர்ச்சிக்காரர்கள் என இருதரப்பினருமே மக்களுக்கு அயர்ச்சி தருகிறவர்களாக, கருத்தியல் உள்ளீடற்றவர்களாக ஆகிவந்ததில் கதாநாயகி உள்ளிட்ட பலரும் விசித்திரமான மனநிலைகளை/பழக்கவழக்கங்களை வரித்துக்கொள்வதன் மூலமாக அரசியல் சூழல் தரும் மன அழுத்தத்திலிருந்து தப்பிக்க முயல்கிறார்கள். அரசியல் காரணம் இல்லாத கொலைகள் நிகழும்போது அதை எப்படிக் கையாள்வதென்றே எங்களுக்குத் தெரியாதென்கிறாள் கதைசொல்லி. அந்த அளவிற்கு அரசியல் தினசரி வாழ்வில் கலந்திருக்கிறது.
நில உரிமை சார்ந்த போர்கள் நிகழ்கிற பல நாடுகளோடு நாம் இதை ஒப்பிட முடியும் – இலங்கை உட்பட. அதனால்தான் இந்நாவல் சமகாலத்தில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறதென நினைக்கிறேன். அடிப்படையில் வாசிப்பு என்பதே நம் அறிவை விசாலப்படுத்துவதுதான். இதில் ஒரு நூலை மொழிபெயர்க்கவும் செய்யும்போது அதற்காக நாம் மேற்கொள்கிற தேடலும் வாசிப்பும் இன்னும் ஆழமாகவும் இருப்பதால் நிச்சயம் நான் நிறைய விஷயங்களைத் தெரிந்துகொண்டேன். உலகில் நிகழ்கிற போர்கள் சார்ந்த செய்திகளை வாசிக்கும்போது அவற்றின் பரிமாணங்களை என்னால் முன்பைவிடக் கூடுதலாகப் புரிந்துகொள்ள முடியும், உலக வரலாற்றின் வெவ்வேறு கண்ணிகளை மேலும் தெளிவாகப் பொருத்திப் பார்க்க முடியும் என்றே நம்புகிறேன். என்றாலும்கூட இந்நாவலின் ஒட்டுமொத்த அரசியல் சார்ந்த விஷயங்களைவிட நாட்டு மக்களின் தனிமனித உளவியலில் அது ஏற்படுத்திய தாக்கங்கள் குறித்தே எனக்குக் கூடுதல் ஆர்வம் இருக்கிறது. அதுகுறித்து எனது வாசிப்பும் தேடலும் இனியும் தொடரும். எனது மனப்பாங்கு அப்படியாகத்தான் இருக்கிறது.
நாவலில் பாலியல் சொல்லாடல்களைத் தயக்கமின்றி மொழியாக்கம் செய்துள்ளீர்கள். அழுத்தமான இடங்களில் கூட நீங்கள் விலக்கம் எதுவும் கோரவில்லை எனது பாராட்டுகள். இதற்காக எதேனும் பின்னூட்டங்கள் அல்லது கருத்துகள் உங்களுக்கு வந்துள்ளனவா?
இலக்கியப் பிரதியில் பாலியல் சொற்கள் இடம்பெறுவது தவறு என்னும் எண்ணம் எனக்கு எப்போதும் இருந்ததில்லை. அப்படியே ஒருவேளை இருந்தாலும்கூட நான் அதை எனது சொந்தப் படைப்பில்தான் முடிவுசெய்யமுடியும். மொழியாக்கம் என்பது மூலத்தில் ஆசிரியர் என்ன கூற விளைகிறாரோ அதனை அப்படியே தமிழ் வாசகர்களுக்குத் தருவது. எனவேதான் நான் தயக்கமோ விலக்கமோ இன்றி அவற்றை அப்படியே மொழிபெயர்த்தேன். பாராட்டுக்கு நன்றி.
இல்லை – இது சார்ந்த விமர்சனங்களோ பின்னூட்டங்களோ தனிப்பட்டு வந்ததில்லை. ஆனால் அந்தியூர் உன்னதம் நடத்திய மொழிபெயர்ப்பு உரையாடல் நிகழ்வில் இதுசார்ந்த கருத்துகள் விவாதிக்கப்பட்டன. அப்படியே தயங்காமல் மொழிபெயர்ப்பதுதான் சரி என்பதே அங்கிருந்த அனைத்து மொழிபெயர்ப்பாளர்களின் கருத்தாகவும் இருந்தது.
வரலாற்றில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும்,உள்நாட்டுக் கிளர்ச்சிகள், அரசியல் சிக்கல்கள்,சமூகத்தில் பல்வேறு தளங்களில்,குடும்ப அமைப்புகளில் ஆண் பெண் உறவுகளில் பெண்கள் சந்திக்கும் வன்முறை,துயரங்கள்,சிக்கல்கள் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்றே நினைக்கிறேன். இந்த இடத்தில் ஆயன் மாதிரியான ஒரு பிரதி முன்வைக்கும் பெண் ஒருவரின் அக வெளிப்பாடுகள் சம காலத்திற்கு எப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்தது அல்லது ஏதேனும் சிறிதளவு மாற்றம் அளிக்கும் என்று நம்புகிறீர்களா?
பெண்களுக்கான சிக்கல்கள் என்பவை பல்வேறு வகையினவை மட்டுமின்றி அவற்றின் தீவிரம் இனரீதியாக, பொருளாதார ரீதியாகப் பெண்ணுக்குப் பெண் மாறுபடக்கூடியது, சமூகத்திற்குச் சமூகம் நாட்டிற்கு நாடு மாறுபடக்கூடியது. எனவே பெண்களின் பிரச்சனைகளை ஒட்டுமொத்தமாக வரையறை செய்ய இயலாது. உதாரணத்திற்கு, ’பெண் போராளிகள்’ என்னும் ஒரு அமைப்பின் செயல்பாடுகள் குறித்து நாவலில் சற்றே பகடியுடன் கூறப்பட்டிருக்கும். ஊரில் உள்ள வேறு சில பெண்களுக்கே அப்பெண் போரோளிகளின் கோட்பாடுகளில் ஒப்புதல் இருக்காது.
ஆனால் இவை எல்லாவற்றையும் தாண்டி, உங்கள் கேள்வியில் உள்ளதுபோல, ‘அகரீதியான’ சில பொதுவான பிரச்சனைகள் பெண்களுக்கு உள்ளன. நாவலின் நாயகியின் முதல் மைத்துனனோ ஆயனோ அநாமதேயனோ அவளை ஒருபோதும் உடல்ரீதியாகத் தொடுவதில்லை, ஆனால் அவர்களால் வெறும் பார்வையால் வார்த்தையால் அவளைச் சங்கடப்படுத்த முடிகிறது, அச்சுறுத்த முடிகிறது. அவர்களைத் தவிர்க்கும் பொருட்டு அவள் நடக்கிற பாதையை, செல்கிற பேருந்தை, கற்கும் இடத்தை மாற்றுகிறாள், ஆயனைக் காணும்போதெல்லாம் அச்சத்தில் முதுகுத்தண்டிலிருந்து கால்கள் வழியாக நடுக்கம் பரவுகிற உடல்.உபாதைக்கும் ஆளாகிறாள். அவர்கள் மூவருமே வெவ்வேறு வகையான stalkersஆக இருக்கிறார்கள். உலகின் எல்லாப் பெண்ணும் இதை ஏதேனும் ஓர் இடத்தில் ஒரு வயதில் எதிர்கொண்டிருப்பார்கள். இப்பிரச்சனையைப் போகிறபோக்கில் சொல்லாமல் அதன் தீவிரத்தை அழுத்தமாக முன்வைக்கிறது ஆயன் நாவல். அவ்வகையில் எல்லாக் காலத்திற்குமான எல்லா இடத்திற்குமான ஒரு பிரச்சனையை இந்நாவல் பேசுகிறது. ஸ்டாக்கிங் செய்து பெண்ணை காதலுக்குச் சம்மதிக்க வைப்பதை நாயகர்களின் பராக்கிரமமாக ஈகோவின் அங்கமாகக் கருதுகிற பழக்கம் சினிமாக்களிலும் நிஜத்திலும் இன்னமும் இங்கே இருக்கத்தான் செய்கிறது, இல்லையா! இதை வாசிக்கிற ஏதோ ஓர் ஆண் வன்தொடரல் ஒரு பெண்ணுக்கு ஏற்படுத்துகிற மன உளைச்சலைக்குறித்துப் புரிந்துகொண்டாலே அது இந்நாவலின் வெற்றிதான். அதெல்லாம்கூட வேண்டாம். தனக்கு நேர்கிற வன்தொடரலைக் குறித்து இவ்வளவு தீவிரமாக எழுதமுடியும் எழுத வேண்டும் என்கிற உணர்வை இந்நூலை வாசிக்கிற ஏதோ ஒரு பெண் அடைந்தால் அது போதும்.
இப்போதும் உலகில் பல்வேறு இடங்களில் நிலம் சார்ந்த அடையாளம் சார்ந்த கிளர்ச்சிகளும் போர்களும் நிகழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்விடங்களில் நேர்கின்ற உயிரிழப்புகள் உறுப்புகள் இழத்தல் போன்றவை எவ்வளவு முக்கியமானவையோ அதே அளவு முக்கியமானது மக்களின் உளவியலில் ஏற்படும் மாற்றமும்கூட. அரசியல் பிரச்சனைகளின் அழுத்தம் தாளாமல் விசித்திரக் குணாதிசயங்களுக்குள் தங்களை மூழ்கடித்துக்கொள்கிற ஏராளமானோர்(அணுப்பையன், மருந்துக்காரி, நாவலின் நாயகி, நிஜ ஆயர்…) இந்நாவலில் வருகின்றனர். போரினால் நேரும் உயிரிழப்புகள் சார்ந்து ஏராளமான நூல்கள் எழுதப்படுகின்றன. உளவியல் சிக்கல்கள் குறித்து அழுத்தமாக எழுதப்பட்டுள்ள முக்கியமான நாவலாக ஆயன் இருக்கிறது. அவ்வகையில் இது ஒரு புதிய கோணத்தைக் குறித்து நம் சிந்தனையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.
ஒட்டுமொத்தமாகக் கூறுவதானால்,, வாசகர்களின் மனதில் ஏற்படுத்துகிற அதே அளவு தாக்கத்தைச் சக எழுத்தாளர்களிடமும்(உலக அளவில்) ஏற்படுத்தும் வலிமையை இந்நூல் கொண்டுள்ளது. எழுத்தின்/எழுதும் விஷயத்தின் தீவிரத்திற்குள் தங்களை ஒப்புக்கொடுத்துக் கொள்வதன் அவசியத்தை இந்நூல் அவர்களுக்கு ஒரு நொடியேனும் உணர்த்தும்.
மட்டுமின்றி, “பெயரற்ற பெண் நாயகிகளைக் கதையின் மையமாகக் கொள்ளும் புதிய இலக்கிய வகைமைக்குத் தன் மாபெரும் பங்களிப்பை இந்நாவல் நல்கியுள்ளது” என தி நியூ ரிபப்ளிக் கூறுகிறது.
மொழிப்பெயர்ப்பு சார்ந்து ஓர் ஐயம் துப்பட்டா என்கிற வார்த்தையை ஓர் இடத்தில் பயன்படுத்தியுள்ளீர், துப்பட்டா அணியும் பழக்கம் அயர்லாந்து போன்ற நாடுகளில் இல்லை தானே? ஆடை கலாச்சாரம் மட்டுமின்றி உணவு,காலநிலை,பெயர்கள்,பழக்க வழக்கங்கள் போன்றவையெல்லாம் (ஓர் இடத்தில் etre என்கிற சொல் கூட மொழியாக்கம் செய்யப்படாமல் அப்படி வருகிறது ) செய்து போது எதிர்கொள்ளும் சிக்கல்களை எப்படி எதிர்கொள்கிறீர்கள்.
Shawl என்கிற சொல்லுக்கு இரண்டு இடங்களில் துப்பட்டா என மொழிபெயர்த்திருக்கிறேன். அயர்லாந்தில் அணியப்படும் ஷால் என்பதைக் கூகுள் செய்து பார்த்தபோது குளிருக்குப் போர்த்துவது மட்டுமின்றி, மார்பை மறைக்கவும் பயன்படுகிற ஒரு ஷாலினை(புகைப்படம் இணைத்துள்ளேன்) அவர்கள் அணிவதாக வாசித்ததால் துப்பட்டா எனும் சொல்லைப் பயன்படுத்தினேன். ஆனால் அதுதான் சரி என வாதிட முடியுமா தெரியவில்லை. துப்பட்டா எனும் வாத்தையே தமிழ் இல்லையே என்றும் சால்வை என்னும் வார்த்தை இன்னும் சரியாக இருந்திருக்குமோ என்றும் இப்போது குழப்பங்கள் தோன்றுகின்றன. இதே போல்தான் collar, tie, coat, shoe போன்ற வார்த்தைகளும்கூட. நீங்கள் கேள்வியில் குறிப்பிட்டுள்ளதுபோல உணவு சார்ந்த வார்த்தைகளும் அப்படித்தான். ஆங்கிலத்தில் வாசிக்கும்போது எளிதாகத்தோன்றும் இவ்வார்த்தைகள் கொண்ட பத்திகள் மொழிபெயர்க்கும்போது மிகுந்த அயர்ச்சியை ஏற்படுத்திவிடுவதுண்டு. அந்தக் குறிப்பிட்ட ஆடையோ உணவுப்பொருளோ கதையின் போக்கில் மிகமுக்கிய மாற்றத்தை ஏற்படுத்தாத பட்சத்தில், தமிழில் மொழிபெயர்த்தால்தான் புரியும் என்றில்லாத பட்சத்தில் மூல மொழிச்சொல்லையே அப்படியே பயன்படுத்தலாம் என மொழிபெயர்ப்பாளர் லதா ராமகிருஷ்ணன் அவர்கள் ஒரு நூலில் குறிப்பிட்டிருந்தார். அதுதான் சரியாக இருக்கும் எனத் தோன்றுகிறது. ஏனென்றால் இவை அந்தந்தக் கலாசாரத்திற்கெனத் தனித்துவமானவை. தேவைப்பட்டால் அடிக்குறிப்புகள் சேர்க்கலாம்.
போலவே மொழியின் அமைப்பு சார்ந்த, உச்சரிப்பு சார்ந்த விவரணைகளும் மொழிபெயர்க்கச் சிரமம் ஏற்படுத்துபவையே. ஃபிரெஞ்ச் மொழியின் etre என்ற சொல் be verb எனப் பொருள் தருவது. அதாவது ஆங்கிலத்தில் is, are, am போன்றவை. இதுபோன்ற மொழிசார்ந்த சொற்களைத் தமிழ்ப்படுத்தினால் அது வாசரைக் குழப்பவே செய்யும்.
பாதி இரவு கடந்துவிட்டது நூலில் உள்ள பின்வரும் பத்தியைப் பாருங்கள்:
”பின்வரும் செய்யுளைப் பாருங்கள்: ” dalan moh tam so suprakasu, bade bhag ur aavayi jasu
- ஒருவனது மாயைகளெல்லாம் உண்மையான பேரொளியின் முன்பு பொசுங்கி விடக்
கூடியவை. குருவின் பாதங்களில் மின்னுகிற நகங்கள் வாசம் செய்கிற இதயமே புண்ணியம்
செய்தது. –” அவதி மொழியின் வார்த்தைகளான suprakasu மற்றும் jasuவினிடையே
சமஸ்கிருதத்தின் tamஐப் பொருத்தியிருக்கிறார் துளசிதார். அதுமட்டுமின்றி அந்த tamற்கு
அவதியின் so மூலம் வலு சேர்த்து அதை tam so ஆக்கியிருப்பதனைக் கேட்கும் போது
உபநிடதத்தின் tamaso ma jyotirgamaya- தமஸோமா ஜ்யோதிர்கமய (இருளிலிருந்து ஒளியை
நோக்கி நகர்த்துகிற) என்கிற வரி மக்களது மொழியின் செழித்த பசும் நிலத்தின்
ஆழத்திலிருந்து நம்மை நோக்கி எதிரொலிப்பதை உணர முடிகிறது.”
இந்தப் பத்தியின் எல்லா வார்த்தைகளையுமே தமிழ்ப்படுத்தித்தான் தீரவேண்டும் என நினைக்க முடியாதில்லையா.
ஆங்கில -தமிழ் மற்றும் தமிழ் அகராதிகள் மொழிபெயர்ப்புகளில் எவ்வகையிலும் உதவுகிறது? நீங்கள் பயன்படுத்தும் அகராதிகளைப் பற்றிக் கூறிட இயலுமா?
அகராதிகள் இரண்டு விதங்களில் பயன்படுகின்றன. 1. பொருள் அறியாத வார்த்தையின் பொருளைத் தெரிந்து கொள்ள. 2. ஒரு வார்த்தைக்கு இணையான வேறு வார்த்தைகளை அறிந்துகொள்ள(thesarus).என்னிடம் சில அகராதிகள் இருக்கின்றன (English to tamil, Tamil to tamil, Tamil to English). ஆனால் நான் பெரும்பாலும் Google search மற்றும் Google translateதான் பயன்படுத்துகிறேன். அதற்கு முக்கிய காரணம் phrasal verb, idioms and phrases, நாடுகள் மற்றும் கலாச்சாரம் சார்ந்த connotations, அவ்வார்த்தையின் சமகாலப் பயன்பாடு, அதுகுறித்த புகைப்படங்கள், செய்திகள் என பலவற்றையும் நம்மால் கூகுளில் பார்த்துவிட முடிகிறது. எனவே கூகுளே பிற அகராதிகளைவிட வசதியானதாக எனக்கு இருக்கிறது.
என் வாழ்வில் மூன்று முறை நான் முகங்களில் அறைய வேண்டும் என்கிற வார்த்தை ஒன்று நாவலின் பெண் குரல் பேசும்.நீங்கள் உங்கள் வாழ்வில் அப்படி எத்தனை முறை அறைய வேண்டும் என்று விரும்புகிறீர்கள்? இப்படிப்பட்ட மனிதர்களை எடுத்துக்கொள்ளலாம் (நாவலின் அடிப்படையில்) வன்தொடரால் செய்தவர்கள், உங்களின் செயல்பாடுகள் புரிந்து கொள்ளாமல் அவர்களாகவே முன் முடிவுகள் செய்து கொண்டவர்கள்,உங்களைப் பற்றி புறம் பேசியவர்கள்
(தனிபட்ட கேள்வியாக நினைத்தால் தவிர்த்து விடலாம்)
ஹாஹா… பொதுவாகவே நான் பொறுமையான ஆள்தான். எதிரியிலிருப்பவர்களை அவர்களது சூழலோடு சேர்த்துப் புரிந்துகொள்ளவே எப்போதும் முயல்வேன். ஆனால், ஒன்பதாம் வகுப்பு படிக்கும்போது பேருந்தில் செல்லும்போது பின் இருக்கையிலிருந்து காலை நீட்டி முன் இருக்கையில் அமர்ந்திருந்த என்னைத் தொந்தரவு செய்த மனிதனைப் பார்க்க நேர்ந்தால் நிச்சயம் அறையலாம் எனத் தோன்றுகிறது. விடுமுறைக்குப் பல்வேறு பள்ளிகளின் விடுதியிலிருந்து வீட்டிற்குச் செல்கிற மாணவர்கள் பெற்றோர்கள் அவர்களது பைகள் எனக் காலைச் சற்றுக்கூட நகர்த்தமுடியாதபடி நெரிசலில் அமர்ந்திருந்த அந்த நாளில் ஏற்பட்ட நிகழ்வு இன்றுவரை நினைவிலிருப்பதை வைத்தே அது மனதில் ஏற்படுத்திய பாதிப்பின் தீவிரத்தை நீங்கள் உணர்ந்துகொள்ளலாம். பேருந்தில் மட்டுமல்ல, இதே போல வெவ்வேறு வயதில் வெவ்வேறு இடங்களில் நிகழ்ந்திருக்கிறது, இந்த 39 வயதில்கூட நிகழ்கிறது. அத்துமீறல்கள் எல்லோருக்குமே எரிச்சல் ஏற்படுத்துபவைதானே. தள்ளிநில்லு, பின்னாடி போய் நில்லு எனச் சொல்வதன் மூலமாகவோ, அவ்விடத்தைவிட்டு அகல்வதன் மூலமாகவேதான் சமாளிக்க வேண்டியிருக்கிறது இவற்றை.
ஆயன் மொழிப்பெயர்ப்புக்குப் பிறகு இலக்கியத் திட்டங்கள் எப்படி மாறுகின்றன?அடுத்த என்ன மொழிப்பெயர்ப்பு செய்யப் போகிறீர்கள்?
மொழிபெயர்ப்புக்கான அர்ப்பணிப்பில் ஆயனுக்குப் பின் முன் என்றெல்லாம் மாற்றம் ஒன்றுமில்லை. முதலிலிருந்தே முழு ஈடுபாட்டுடன்தான் செய்து வருகிறேன். ஆனால் வாசகர்களின் பார்வையில் ஆயன் குறித்து ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருப்பதைக் காண முடிகிறது. விஷ்ணுபுரம் விழாவிற்கு அழைக்கப்பட்டது, இப்போது கனலியில் பேட்டி வருவது எல்லாமே ஆயனால் நிகழ்ந்ததென்றே கருதுகிறேன். அடுத்து எதிர் வெளியீட்டிற்காக யுவான் ருல்ஃபோவின் The burning plains செய்யவிருக்கிறேன். அது எவ்வளவு முக்கியமான புத்தகம் என்பதும் அதை மொழிபெயர்க்கக் கிடைத்திருக்கும் வாய்ப்பு எவ்வளவு அரிதானதென்பதும் புரிகிறது. இதைக் கொணர்ந்ததும் ஆயனாகத்தான் இருக்கவேண்டும். இவை தவிரப் பாடநூல் கழகத்திற்கான ஓர் அபுனைவும், காலச்சுவடு பதிப்பகத்திற்காக ஒரு வாழ்க்கை வரலாற்று நூலும் கையில் இருக்கின்றன.
எட்வர்ட் சையீத், ப்ரைமோ லெவி, ஜும்பா லஹரி, ஸோஃபியா சமடார் போன்றோரை மொழிபெயர்க்கும் ஆசை இருக்கிறது.
க நா சு, பிரம்ம ராஜன் போலச் சமகால இலக்கிய உலகில் முக்கியமாக உள்ளவர்கள் குறித்த தொகுப்பு நூல் உருவாக்க வேண்டும் என்றும் ஆசை உள்ளது. ஒவ்வொன்றாகக் கைகூட வேண்டும். அதற்கான உடல் மன நலமும், நேரமும் வாய்க்கவேண்டும்.
தேர்ந்த கேள்வி பதில்கள் மனத்திறப்பாக அமைந்தன. ஆயனை விரைவிலேயே வாசிக்க முயற்சிப்பேன். இந்த நேர்காணலை வாசித்துவிட்டு நாவலுக்குள் போவது இன்னும் மனதை உற்சாகப்படுத்தும் என எண்ணுகிறேன். வாழ்த்துகள்