அவள் மெதுவாக கண்களைத் திறந்து பார்க்கிறாள். சூரியக் கதிர்களின் மீது அவள் பார்வை விழுகிறது. சூரியனின் விட்டம் 1,40,000 கிலோமீட்டர் தூரம். அதன் மையத்தில் உள்ள அணு இணைப்பிலிருந்து வரும் ஆற்றல் மேற்பரப்பை அடைய ஒரு மில்லியன் ஆண்டுகளுக்கு மேல் ஆகும். மேற்பரப்பு வெப்பம் மட்டும் 6000°C க்கும் அதிகம். வெப்பத்தோடு ஒளி பூமியை வந்தடைய எட்டு நிமிடங்கள், பத்தொன்பது வினாடிகள் ஆகும்.
அவள் டோக்கியோவில் ஆகஸ்ட் 10 அன்று பிறந்தாள். அந்த தினம் நாகசாகியில் அணுகுண்டு வெடித்து சரியாக இரண்டு வருடமும் ஒரு நாளும், அதைத்தொடர்ந்து ஹிரோஷிமாவிலும் மூன்று நாட்கள் கழித்து அணுகுண்டு வெடித்த தினம்.
அவள் தன் தாயின் கருவறையில் 10 மாதங்கள் 10 நாட்கள் இருந்து பிரசவமான குழந்தை.
அவள் பெயர் “யாகோ”. ஜப்பானிய மொழியில் பசிபிக் பெருங்கடலுக்கு “தைஹேய்” என்ற சொல்லின் அர்த்தத்திலிருந்து, அவள் பெயரின் முதல் பாதி “யா” யெனப் பெயரிடப்பட்டது.
ஆறு வயதில் தொடக்கப் பள்ளியில் சேர்ந்தாள். அவள் அம்மா அவளது தலைமுடியை மூன்றாகப் பிரித்து சடைபின்னி அழகு பார்ப்பாள். பசிபிக் பெருங்கடலில் உள்ள பிகினி அட்டால் தீவுகள் மீது பிரகாச ஒளி பொழிந்து அந்தப்பிரதேசமே மிகப்பிரகாசமாக இருந்தது.
அமெரிக்கா வெடிகுண்டுகளைச் சோதித்து, என்ன நடக்கும் என்பதைப் பார்த்து பின்னர் அவற்றை அணைக்க, முதலில் அணு, பின்னர் ஹைட்ரஜன் குண்டுகளைச் சோதித்தது அந்த தீவில். கடலின் நடுவில் இந்த அணுகுண்டுச் சோதனையால் ஒரு மாபெரும் ஒளிப்பாய்ச்சல், நீண்டதொரு நீர்நெடுவரிசை, காளான் வடிவ மேகமெனப் பார்க்கவே பெரும் மிரட்டலான காட்சி அந்தப் பகுதியில் தோன்றியது. குண்டுவெடிப்பு எஸ்.எஸ்.லக்கி டிராகன் எண் 5 என்ற மீன்பிடிப் படகையும் விட்டுவைக்கவில்லை, முழுவதுமாக நீரால் கழுவி விட்டது. அதன் குழுவினர் நோய்வாய்ப்பட்டனர், அவர்கள் பிடித்த பெரிய வகை “டுனா” வகை மீன்கள் அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டன.சுகிஜி மீன் சந்தைக்குக் கொண்டுசென்று அந்த மீன்கள் எல்லாவற்றையும் குழிதோண்டிப் புதைத்தார்கள்.
ஒரு திரையரங்கின் இருளில் அவள் தன் தாயின் அருகில் அமர்ந்து கருப்பு, வெள்ளை செய்தி காட்சிப்பதிவுகளை பார்த்துக்கொண்டிருந்தாள். அவளுடைய அம்மா இருளில் கழுத்துக் குட்டையைப் பின்னிக் கொண்டிருந்தாள். அவளது விரல்கள் தன் மகளின் தலைமுடியை லாவகமாக சடைபின்னுவது போல, நூலால் வேகமாகப் பின்னிக் கொண்டிருந்தன. அந்த கழுத்துக் குட்டையை அன்றே செய்து முடித்தாள்.
அந்த மார்ச் மாதத்திற்குப் பின்னர், பாராளுமன்றம் ஒப்புதல் அளித்தது. போருக்குப் பிறகு முதல் முறையாக அணுசக்திக்கு நிதியளித்தது. மொத்த நிதி 235 மில்லியன் யென். ஐசோடோப்பு U-235 ஐ உருவாக்கும் உற்பத்தி ஜப்பானில் ஆர்வத்துடன் தொடங்கியது.
பதினோரு வயதில், அவர் நடுநிலைப் பள்ளியில் நுழைவதற்கு ஒரு வருடம் முன்பு, ஜப்பான் தனது முதல் 10,000-யென் நோட்டை வெளியிட்டது. இதில் இளவரசர் ஷாடோகு இடம்பெற்றிருந்தார், பண்டைய காலங்களில் “சொர்க்கம் என்றிருப்பது – எங்கிருந்து – சூரியன் உதயங்கள்” என்று அழைக்கப்படுகிறது. அவள் இளவரசரின் முகத்தையே உற்று நோக்கி தன் மனதில் ஆழமாகப் பதிவு செய்துகொண்டாள். ஒரு நாள் தான் இந்த நோட்டுகள் பலவற்றை தன் கைகளில் வைத்திருக்க முடியுமென நினைத்துக்கொண்டாள்.
பதினாறு வயதில் உயர்நிலைப் பள்ளியில் படித்துக்கொண்டிருந்தாள். ஜப்பான் அதன் முதல் அணுசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்தது. ஜப்பான் நாட்டு மின்சக்தி தயாரிப்பு மையத்தின் இல்லமென்று கருதப்படுகிற “டக்காய்” என்ற சிறிய கிராமத்தில் கடுமையான விமர்சனங்கள் செய்யப்பட்டன. நாடு முழுவதும் இந்த செய்தியைத் தொலைக்காட்சியில் ஒளிபரப்பிக் கொண்டிருந்தார்கள். ஆனால் அவரது குடும்பத்தில் ஒரு தொலைக்காட்சி கூட இல்லை, இந்த செய்திகளையெல்லாம் பார்ப்பதற்கு. அவள் நினைவில் வைத்திருப்பது, அவளுடைய நடுநிலைப்பள்ளி கணித ஆசிரியர் தன் கணவருக்கு புதியதொரு வேலை கிடைத்ததும் டோக்காய்க்குப் புறப்பட்டுச் செல்வது என்று கூறியதுதான்.
பதினெட்டு வயதில், அவர் ஒரு பெண்கள் இளங்கலை கல்லூரிக்குச் சென்று சேர்ந்தார். அந்த நேரம் அமெரிக்க-ஜப்பான் பாதுகாப்பு ஒப்பந்தம் குறித்த மாணவர் போராட்டங்கள் உச்சத்தை எட்டின. ஆனால் இந்தப் போராட்டங்கள் எதுவும் அவளைப் பாதிக்கவில்லை. அவள் எந்த பிரச்சனையும் இல்லாமல் பட்டம் பெற்று வேலையொன்றைத் தேடினாள்.
இருபது வயதில், ஜப்பானின் “நீண்ட கால கடன்” வங்கியில் அவருக்கு வேலை கிடைத்தது. முன்பு மாதிரி அவளுடைய தலைமுடி மூன்றாகப் பிரிக்கப்பட்டு சடை பின்னப்படுவதில்லை. குட்டையாக, அலையலையாகத் தலைமுடி தொங்கிக்கொண்டிருந்தது.
அவளுடைய ஆசை கடைசியில் நிறைவேறியது. ஒவ்வொரு நாளும், அவள் கைகளில் 10,000-யென் பண நோட்டுகள். இந்தப் பணமெல்லாம் வங்கியுடையது, நிச்சயமாக அவளுடையதில்லை. இருந்தபோதிலும், அவள் நோட்டுகள் எண்ணுகையில் தன்னையே மறந்துவிடுவாள். இந்த நாட்களில் நவீனமயமாக்கத்தால், இயந்திரங்கள்தான் நோட்டு எண்ணிக்கையைச் செய்கின்றன. ஆனால் முன்னர் அது வங்கிகளில் பணம் செலுத்துமிடத்தில் அமர்ந்திருந்த பெண்களால் செய்யப்பட்டது.
முப்பது வயதில், பத்து ஆண்டுகள் பணிபுரிந்த அவர். ஒரு எழுத்தாளராக வேண்டும் என்ற கனவைத் தொடர, டாக்டராக இருந்து மருத்துவப் பணியை துறந்த ஒருவரை மணந்தார். அவள், அடுத்தடுத்து நான்கு மகள்களின் தாயானாள். இந்த மகள்களில் நான்காவது நான்தான் என்பதை இங்கு நான் குறிப்பிட வேண்டும். இது என் அம்மாவின் கதை.
அணுசக்தி நிலையங்கள் ஜப்பான் முழுவதும் முளைத்தன. என் அம்மா நாற்பது வயதை எட்டிய நேரத்தில், முப்பத்தைந்து உலைகள் நாடு முழுவதும் உள்ள நகரங்களுக்கு 27,881,000 கிலோவாட் மின்சாரத்தை வழங்கின. அவர்களின் வீதிகள் அணுசக்தியால் இயங்கும் ஒளியால், இரவும் பகலும் ஒளிர்ந்து கொண்டிருந்தன.
ஐம்பத்தொன்று வயதில், ஜப்பானின் “நீண்ட கால கடன்” வங்கியின் வருமானம் சரிவைத் தொடங்கியது; அவளுடைய மகள்கள், என்னையும் சேர்த்து, அனைவரும் எங்களது வேலை, திருமணத்திற்காக வீட்டை விட்டு வெளியேறினோம். யுகிச்சி ஃபுகுசாவா நீண்ட காலமாக இளவரசர் ஷாடோகுவுக்குப் பதிலாக 10,000-யென் நோட்டில் இடம் பெற்றிருந்தார். அவளுடைய சேமிப்பிலிருந்து அவள் வாங்கிய வங்கிப் பங்குகள் எல்லாம் எந்த மதிப்பில்லாமல் வெற்று காகிதங்களாக இருந்தன.
அறுபத்து மூன்று வயதில், அவரது கணவர் இறந்தார், அதற்கடுத்த வருடம் அவரது தாயாரும். ஒவ்வொரு இறுதிச் சடங்கிற்கும், எங்கள் அனைவருக்கும் புதிய ஆடைகளை வாங்க வேண்டியிருந்தது.
பூகம்பம் மற்றும் சுனாமி தஹோகுவைத் தாக்கிய அதே ஆண்டில் அவரது தாயார் இறந்தார். புகுஷிமா டெய்சி அணுமின் நிலையம் ஒளியின் வெடிப்பில் வெடித்துச் சிதறியது. கண்ணுக்குத் தெரியாத கதிரியக்க பொருட்கள் மழைபோல் பொழிந்தது. வெள்ளை மேகங்கள் போல வானத்தில் உயர்ந்து மேலெழும்பும் இந்தக் காட்சிகள் இணைய வீடியோக்களில் ஒளிபரப்பப்பட்டன. பேரழிவு அல்லது கதிர்வீச்சு காரணமாக அவரது தாயின் மரணம் சம்பவிக்கவில்லை, முதுமையே காரணம். கிறிஸ்துமஸ் தினத்தன்று அவர் இரவில் இறந்தார். அவர் முடிக்கப்படாத ஸ்வெட்டரையும், தொப்பியையும் மற்றும் சில சிவப்பு நூல் பந்துகளையும் விட்டுச் சென்றார். டோக்கியோ நகரத்திற்கு மேலே இரவில் வானம் பிரகாசமாகக் காட்சியளிப்பது அரிதானதொரு விஷயம். ஆனால், வானத்திலிருந்து பனி கீழே இறங்கியது போல தெருவிளக்குகளும், நியான் அறிவிப்புப் பலகைகளும் ஒளி வெள்ளத்தில் அன்று மூழ்கியிருந்தது.
அவள் ஒரு புதிய, கருப்பு துக்க உடையை அணிந்திருந்தாள். இறுதிச்சடங்கு செலவுக்குப் பணம் எண்ணுவதற்காக அவளுடைய கூந்தலை பின்னால் இழுத்து, கருப்பு கண்ணாடியை அணிந்திருந்தாள். அவள் கைகளில் நிறைய 10,000 யென் நோட்டுகள் இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு கண்புரை அறுவை சிகிச்சை செய்ததால், அறைகளின் உட்புற ஒளி அவள் கண்களைக் கூசச்செய்தது. இதனால்தான் அவளுக்கு கருப்பு நிற கண்ணாடிகள் தேவைப்பட்டன.
அதன்பிறகு, நாங்கள் அனைவரும் ஒரு விடுதி உணவகத்திற்குச் சென்றோம். பின்னணியில், க்ளென் மில்லர் இசைக்குழு “மூன்லைட் செரினேட்” வாசித்தது. அதன் அசல் பதிவின் பி-பக்கத்தில் உள்ள பாடல் “சன்ரைஸ் செரினேட்” என்று அழைக்கப்பட்டதை நான் பின்னர் அறிந்தேன்.
நியூ மெக்ஸிகோவில் உள்ள டிரினிட்டி தளத்தில் உலகின் முதல் அணுகுண்டு வெடித்ததால், வானொலி அந்த பாடலை வாசித்தது என்பதையும் நான் அறிந்தேன்.
“கேஜெட்” என்று அழைக்கப்படும் அணுகுண்டு 1.5 மீட்டர் விட்டம் கொண்டது. மன்ஹாட்டன் திட்டத்தின் நிதி மொத்தம் இரண்டு பில்லியன் டாலர்கள். அதன் மையத்தில் புளூட்டோனியம் பிளவுபடுவதன் மூலம் வெளியாகும் ஆற்றல் 66,000 ° C ஐ வெப்பத்தை உருவாக்கியது. இது சூரியனின் மேற்பரப்பின் வெப்பத்தைவிட பதினோரு மடங்கு. அதன் ஒளி பட்ட அனைத்தும் எரிந்து சாம்பலாகின.
அறுபத்தெட்டு வயதில், அவரது மகள்களில் ஒருவர் தாயாகி விடுவாள்.
பத்து மாதங்கள், பத்து நாட்கள் கழித்து, என் வயிற்றிலிருந்தும் அழகான ஒரு குழந்தை வெளிப்படும்.
பட்டு இமைகள் மூடிய கண்களை மெதுவாகத் திறந்து, அது சூரியனின் ஒளியைப் பார்க்குமா??
– எரிகா கோபயாஷி
தமிழில் – முத்து காளிமுத்து
[tds_info]
ஆசிரியர் குறிப்பு
எரிகா கோபயாஷி 1978 இல் டோக்கியோவில் பிறந்தார். 2007 – 2008 ஆம் ஆண்டில் அவர் ஆசிய கலாச்சார கவுன்சில் உறுப்பினராக நியூயார்க்கிற்கு அழைக்கப்பட்டார். தற்போது டோக்கியோவில் வசித்து வருகிறார்.
கண்ணுக்குத் தெரியாத விஷயங்கள், நேரம், வரலாறு, குடும்பம் , நினைவகம் மற்றும் இடத்தின் தடயங்கள் ஆகியவற்றிலிருந்து ஈர்க்கப்பட்ட படைப்புகளை கோபயாஷி உருவாக்குகிறார். சூயிஷா வெளியிட்ட டிரினிட்டி, டிரினிட்டி, டிரினிட்டி என்ற அவரது நாவலுக்காக 2020 ஆம் ஆண்டில் 7 வது டெக்கன் ஹெட்டோரோட்டோபியா இலக்கிய பரிசுக்காக அவருக்கு விருது வழங்கப்பட்டது. சூயிஷா வெளியிட்ட மேடம் கியூரி டு சோஷோகு வோ (காலை உணவு வித் மேடம் கியூரி) என்ற நாவலுக்காக 2014 ஆம் ஆண்டில் அவர் 27 வது யுுகியோ மிஷிமா விருது மற்றும் 151 வது அகுதாகவா விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். இதற்கு இணையாக, ஜப்பான் மற்றும் வெளிநாடுகளில் சில படைப்புகளை அவர் எழுதியுள்ளார். இது பார்வையாளர்களுக்கு பல்வேறு காட்சிகளை மீண்டும் அனுபவிக்க உதவுகிறது, அதில் அவரது எழுத்துக்களில் இருந்து புனைகதை மற்றும் ஆவணப்படத்தின் கூறுகள் தனிப்பட்ட கதைக்கும் சமூக யதார்த்தத்திற்கும் இடையில் முன்னும் பின்னுமாக நகர்கின்றன.
தமிழகத்திலுள்ள விருதுநகர் மாவட்டம் புனல்வேலியை சார்ந்த முத்து காளிமுத்து தற்போது அமெரிக்காவில் ராலே நகரில் வசித்துவருகிறார். கணினி மென்பொருள் துறையில் வேலை. வாசிப்பு, எழுத்து மேல் தீராக்காதல் கொண்டவர் என்பதாக தெரிவிக்கும் இவர்… இணைய இதழ்களில் சிறுகதை, மொழிபெயர்ப்பு படைப்புகளை எழுதி வருகிறார்.
[/tds_info]
நல்லக் கதை
சூரியன் தேசத்தில் பிறக்கும் குழந்தை சூரியனின் ஒளியை பார்க்குமா என்ற பயத்திலான கேள்வியுடன் முடித்திருக்கும் இது கதை வடிவிலான கட்டுரையா? இல்லை கட்டுரை வடிவிலான சிறுகதையா? இல்லை இரண்டின் குழந்தையா? அருமை. மொழிபெயர்ப்பும் அருமை.