தமிழ் மொழி வளர்த்த சித்திரக் கதைகள்

நான் மூன்றாவது படித்துக் கொண்டிருந்த பொழுது எனக்கு சித்திரக்கதைகளை என் தந்தை அறிமுகப் படுத்தினார். தமிழை எழுத்து கூட்டி படிக்க மட்டுமே தெரிந்த வயது. சித்திரக்கதைகளை எப்படி படிப்பது என்றும் புரியாத ஒரு வயசு. ஒரு நாள் முழுக்க அமர் சித்ர கதையின், அனுமன் கதையை கையில் வைத்துக் கொண்டு படிக்கவும் முடியாமல் படம் மட்டுமே பார்த்து நேரத்தை வீணடித்தேன். மாலையில் என் தந்தை என்னிடம் வந்து புத்தகம் படித்து விட்டாயா என்று கேட்டார்? எப்படி படிப்பது என்று தெரியவில்லை என்று கூறினேன். எந்த பலூன் எழுத்துக்களை முதலில் படிப்பது, எந்த பலூன் எழுத்துக்களை இரண்டாவதாக படிப்பது என்ற குழப்பத்தை தீர்த்து வைத்தார்.

ஒரு வழியாக அடுத்த நாள் மாலையில் அந்த புத்தகத்தை இருமுறை வாசித்திருந்தேன். அனுமன் மீது ஒரு நெருக்கம் வந்தது. அடுத்த 15 நாட்களை எண்ணி காத்திருந்தேன். அடுத்த புத்தகம் வந்தது. இந்த 15 நாட்களில் அனுமனை பல தடவை படித்திருந்ததால் வந்த புது புத்தகத்தை ஒரு மணி நேரத்தில் படித்து முடித்திருந்தேன். உடனுக்குடன் முடிந்து விடுகிறதே என்று கொஞ்சம் ஏக்கமாக இருந்தது. என் தந்தைக்கு என் ஏக்கம் என்னை கேட்காமலே உணர்ந்து கொண்டார். அடுத்ததாக வீட்டுக்கு வந்த புத்தகம் பூந்தளிர்.

பூந்தளிரை கொண்டாடி தீர்த்தேன். கபீஷும் காளியாவும் எனக்கு நண்பர்கள் ஆகினர். அடுத்த 15 வது நாளில் பூந்தளிரும் அமர்சித்ர கதையும் இரண்டே நாளில் படித்து முடித்திருந்தேன். என் அறிவுப் பசியை கண்ட என் தந்தை அதற்கு பிறகு கோகுலம், ராணி காமிக்ஸ், பைகோ கிளாஸிக்ஸ் போன்ற புத்தகங்களை அறிமுகப் படுத்தினார். திருவண்ணாமலையின் கடைக்கோடியில் வாழ்ந்த எனக்கு நண்பர்கள் பள்ளிகளில் மட்டுமே இருந்தனர். என் வீட்டருகே எனக்கு என்று நண்பர்கள் குழாம் இல்லாமல் இருந்தது சித்திரக் கதைகள் மீதான என் ஈடுபாட்டை பெரிதாகியது. கொஞ்சம் கொஞ்சமாக ஒரு சிறிய நூலகம் போன்று எனக்கு ஒரு இடம் கொடுக்கப் பட்டது.

அந்த காலத்தில் சமையல் அருகே பரண் மீது ஒரு சிறிய அறையை கிடங்கு போன்று செயல்படுவதற்காக செய்து வைத்திருந்தனர். சுமார் 3 அடி உயரம் மட்டுமே இருக்கும். வெளிச்சத்துக்கு என்று ஒரு ஜன்னல், மற்றும் உபயோகப் படாத பொருட்கள் அங்கு சேமித்து வைக்க பயன்படுத்துவார்கள். அந்த அறையை என் தாயிடம் கேட்டு குத்தகைக்கு எடுத்தேன். அட்டிக் என்று ஆங்கிலத்தில் கூறுவார்கள், எங்கள் வீட்டிலோ அட்டிகை என்று கூறினோம்.

எனது பள்ளி தோழன் அருண் ஒரு மாபெரும் ஓவியக் கலைஞன். அவன் என் வீட்டுக்கு காட்டு வழியாக ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து வருவான். நாங்கள் என் புத்தகத்தை விழுந்து விழுந்து படித்து ரசித்து மகிழ்ந்தோம். நாளடைவில் நான் 8 வது வகுப்பு செல்லும் சமயம் என் பள்ளிக்கூடத்துக்கு செல்ல எனக்கு மிதிவண்டியை கொடுத்தார்கள். மிதிவண்டியில் செல்ல ஆரம்பித்த உடன் எனக்கு இறக்கை முளைத்தது. நானே காமிக்ஸ் புத்தகங்களை வாங்க ஆரம்பித்தேன். புத்தகம் வாங்க அம்மாவுக்கு தோட்ட வேலைகளில் உதவி செய்தேன். தோட்ட வேலைகளில் எனக்கு கூலி கொடுக்கப் பட்டது. அந்த காசில் புத்தகம் வாங்குவேன். ஒரு முறை வழக்கமாக செல்லும் பாதையில் போக்குவரத்து இடையூறு ஏற்பட்டதால் புதிய பாதையில் செல்ல நேரிட்டது. அப்பொழுது தான் எனக்கு லயன் காமிக்ஸ் முத்து காமிக்ஸ் போன்றவை என் கண்ணுக்கு தெரிய ஆரம்பித்தது. அதிலும் லக்கி லூக்கை எனக்கு மிகவும் பிடித்தது.

பிறகு நூலகம் அறிமுகம் ஆகியது. அங்கே அங்கில சித்திரக் கதைகள் ஆஸ்டெரிக்ஸ் மற்றும் டின்டின் ஆகியோர் அறிமுகம் ஆகினர். சித்திரக் கதைகள் சீக்கிரமே வழக்கொழிந்து போனது. 2000 க்கு பிறகு வாழ்க்கை ஓட்டத்தில் எங்கோ கண் மண் தெரியாமல் ஒடத் தொடங்கிய எனக்கு வீட்டுக்கு செல்வது எப்பொழுதாவது நிகழும் வைபவமாகியது. நான் சேர்த்து வைத்திருந்த 1000 க்கும் மேலான புத்தகங்களை ஒரு நாள் என் தாய் எடைக்கு போட்டு விட்டதாக தெரிய வந்தது. அன்று சோர்ந்த போன நான் சித்திரக் கதைகள் என் நினைவுகளில் மட்டுமே தங்கி விட்டதாக உணர்ந்தேன்.

திடீரென்று ஒரு நாள் ஒரு நண்பர் ஒரு புத்தகத்தின் நகலை பிரிண்ட் எடுக்க முடியுமா என்று கேட்டார். என்ன புத்தகம் எத்தனை பக்கம் என்று மின் புத்தகத்தை சொடுக்கினேன். அது லாரி கோனிக் எழுதிய பையாலாஜிக்கல் சைக்காலஜி என்ற ஒரு புத்தகம். முழுவதும் சித்திரக் கதை பாங்கில் ஒரு பாட புத்தகமே இருந்தது கண்டு வியந்தேன். அதன் பிறகு எனக்கு மீண்டும் சித்திரக் கதைகள் மீது ஆர்வம் தொற்றிக் கொண்டது. இணைய தளங்களில் சித்திரக் கதைகளை தேடினேன். பிடித்ததை வாங்கி படித்தேன். என் பிள்ளைகளுக்கு அறிமுகப் படுத்தினேன்.

எனது மற்றொரு நண்பர் ஒரு நாள் என்னை சந்திக்க வந்தார். நான் வைத்திருந்த சித்திரக் கதைகளை பார்த்து விட்டு என்னை வேதிகா பழைய புத்தக கடை குழுமத்தில் இணைத்து விட்டார். அன்று தான் எனக்கு மற்றொரு விஷயம் தெரிந்தது. லயன் காமிக்ஸ் மீண்டும் வெளி வந்து கொண்டிருக்கிறது என்று. அதன் பிறகு லயன் காமிக்சின் எனக்கு பிடித்தமான கதைகளை வாங்கி படித்து மகிழ்ந்து வருகிறேன்.

சமீப காலங்களாய் வாட்சாப் குழுவில் இருப்பவர்கள் தங்கள் சேகரிப்பை போடும் பொழுது எனக்கு சோகமாக இருக்கும். ஆனால் சோகத்தில் ஒரு சந்தோசம் என்ன என்றால் புத்தகம் படிப்பதை வெறுத்து ஒதுக்கும் என் பிள்ளைகள் தற்பொழுது இந்த சித்திரக் கதைகள் மூலம் வாசிப்பு பழக்கத்தை தொடங்கி இருக்கிறார்கள். என் மகன் லக்கி லூக்கின் ரசிகனாகி விட்டான்.

காமிக்ஸ் மூலம் மட்டுமே என் தமிழ் வளர்ந்தது. என் தமிழ் மொழியின் ஆர்வத்துக்கு கண்டிப்பாக சித்திரக் கதைகள் கண்டிப்பாக முதல் இடத்தில இருக்கும் என்பதில் எனக்கு என்றுமே மாற்று கருத்து இல்லை. அதே போன்று என் பிள்ளைகளும் தமிழ் மொழி மீது ஆர்வம் கொள்ள சித்திரக் கதைகளே கை கொடுக்கப் போகிறது என்பதில் எந்த விதமான சந்தேகமும் எனக்கு இல்லை. வாழ்க காமிக்ஸ் ! வளர்க தமிழ் !.


-சுரேஸ்

2 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.