பேதமுற்ற போதினிலே-2

Fantasy – மிகையாடல்

ஒவ்வொரு வார்த்தையுமே புறம்சார்ந்து இயங்கக்கூடியது என்கிறார் எமர்சன். ‘ஓடு’ என்றால் அது உடலையும் நிலத்தையும் உள்ளடக்கியுள்ளது. பெயர்ச்சொற்கள் அத்தனையும் புறம் சார்ந்ததுதான். வினைச்சொற்கள் பெயர்ச்சொற்களைச் சார்ந்தவை. எனவே எல்லாம் புறம்சார்ந்தவை. எண்களைப் போல வார்த்தைகள் தீர்க்கமானவையல்ல. எண்கள் சுத்த அறிவைச் சார்ந்தது. வார்த்தைகள் அறிவு, மனம், உணர்ச்சிகள் சார்ந்தது. எனவே, சொற்கள் இயல்பிலேயே முரண்பாடுகளைக் கொண்டிருக்கின்றன. எண்களைத் தவிர பிற படிமங்கள் அத்தனையும் முரண்பாடுடையவையே. உதாரணத்திற்கு, முகநூலில் நாம் பயன்படுத்தும் ஸ்மைலிகளை எடுத்துக் கொள்வோம். புன்னகைக்கான ஸ்மைலி பாதிநேரங்களுக்கு மேல் நாம் சொல்லும் கருத்தை வாசிப்பவர் நேர்மாறாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பதற்காக பயன்படுத்துவதை நாம் காணலாம். அவ்வாறே கோபத்திற்கானதும். மேலும் வார்த்தைகள் பெரும்பாலும் கச்சிதமாக இயங்க முயன்றபடியுள்ளன. தான் ஏற்றுக்கொள்ளப்படவேண்டும் என்ற முனைப்பு இதற்கு காரணமாக இருக்கிறது. மனமும் உணர்வும் பயன்படுத்தும் வார்த்தைகளை முன்னும் பின்னும் அலைக்கழிக்கின்றன. இதனால் வார்த்தைகள் எப்போதும் இயல்புக்கு மீறி மிகையாடலாகவோ, குறைவுபட்டோ அமைந்துவிடுகின்றன. 

காரியங்களின் தன்மையைச் சொல்லும்போது நமக்கிருக்கும் வார்த்தைகள் குறைவு. ‘நல்ல மழை’, ‘பேய் மழை’, ‘அடை மழை’, ‘சராசரி’, ‘2 மி.மீ. மழையளவு’ என்று எப்படி உபயோகித்தாலும் அதன் உண்மைக்கு நேராவதில்லை. நமது மொழியின் இந்த மிகையாடலையும், குறையாடலையும் (?) நாம் உணர்ந்தே இருக்கிறோம். இயல்பாகவே நம்மிடம் மிகைக்கான, சிறப்புக்கான விழைவு இருக்கிறது. இது சாதாரணமாகப் பேசுகையில்கூட வெளிப்படுவதைக் காணலாம். பேசும்நபர் தன்னை முன்னிலைப்படுத்தியும் மையப்படுத்தியும் சொல்லும்போது தனக்கு ஒரு சிறப்புத்தன்மையைக் கூட்டிக் கொள்கிறார். படைப்புகள் எல்லாம் ஒருவகையில் இந்தத் தன்மையை இயல்பிலேயே கொண்டிருக்கின்றன. தன்னை வெளிப்படுத்திக்கொள்ளும்போது பிறவற்றிலிருந்து தனித்து அமையும் ஏதோவொருவிதத் தன்மை அதில் இருப்பதை நாம் உணரலாம். 

மூன்று நபர்கள் உரையாடிக் கொண்டிருப்பதாகக் கொள்வோம். பேசும் ஒவ்வொரு நபரும் தன்னை மையப்படுத்தி, தனது புரிதலிலிருந்து, வெளிப்படுத்தவிரும்பும் முறை, தொனி சார்ந்து பேசுகிறார். கேட்பவர்கள் உலகமோ வெவ்வேறு. பேசப்பட்டவைகளை அவர்கள் எவ்வாறு உள்வாங்குகிறார்கள்? ஒரு உரையாடல் மற்றும் செய்தித் தொடர்பு எவ்வாறு சாத்தியமாகிறது?

வார்த்தைகள் ஒன்றையொன்று சார்ந்தும் பாதித்தும், நசித்தும் செறிவூட்டியும் வெளிவருகின்றன. ஒரு சொற்றொடரின் அர்த்த சாத்தியங்களையும், மையத்தையும் தனக்குள் இருக்கும் மொழியைக் கொண்டு, அதற்கான அர்த்தங்களை அவர் புரிந்துகொண்ட அளவில் உள்வாங்கிக் கொள்கிறார். (coding – de-coding). சொன்னதும் பெற்றதும் ஒன்றல்ல. ஆனால் ஒன்றேதான். இது எப்படியெனில் தண்டவாலத்தின் இணைகோடுகளைப்போல இரண்டும் ஒன்றாகாமல் ஒரே அலைவரிசையில் பயணிக்கிறது.

வெளிப்படுத்தும் எந்த விசயமும் பேச்சு, எழுத்து சித்திரம் என எல்லாமே மையப்படுத்தப்பட்ட சிறப்புத்தன்மையைக் கொண்டிருக்கின்றன. அவை கவனிக்கப்பட வேண்டும் என்றே பகிரப்படுகின்றன. செய்தித்தாளின் செய்திவரிகள் வெறும் அறிக்கையாக இருந்தாலும் அந்த குறிப்பிட்ட செய்தியை நாம் முக்கியமாகக் கவனிக்க வேண்டியே பிரசுரிக்கப்படுகின்றன.

முன்னரே குறிப்பிட்டபடி மிகையாடலுக்கான விழைவு எல்லோரிடமும் உள்ளதை அறிவோம். ஒரு விளம்பரத்தில் அழகான வாலிபன் அணிந்திருக்கும் ஆடையைப் பார்த்து அதே ஆடைய அணிந்து நம்மை அளவுபார்த்துக் கொள்கிறோம். அப்போது நம் கண்கள் பார்ப்பதில்லை. நம்முடைய உயரம், உடல்வாகு பற்றி தேர்ந்தெடுத்த மறதியை, குருட்டுத்தனத்தை உருவாக்கிக்கொண்டு கற்பனையான உருவத்தை பிரதி செய்கிறோம். விளம்பரங்களின் மொழி முழுக்கவே மிகையாடல்தான். ஒரு வாசனை திரவியத்தை அடித்துக்கொண்டால் பல பெண்கள் மயங்கி வருவதும், ஒரு குளிர்பானத்தை அருந்திவிட்டு மலை மீதிருந்து குதிப்பதும் என இந்த மிகைப்படுத்தலின் உண்மைத்தன்மையானது ஒரு குண்டூசி முனையளவிலிருந்து பூஜ்ஜியம் அளவுக்கு நீள்கிறது. 

தொடரும்


-பாலா கருப்பசாமி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.