உலகம் ஒரு நிறையாத் தான் ஓர் நிறையாப்
புலவர் புலக் கோலால் தூக்க, உலகு அனைத்தும்
தான் வாட, வாடாத தன்மைத்தே–தென்னவன்
நான்மாடக் கூடல் நகர். – பரிபாடல்
நல்லிசைப்புலவர்கள் தமது அறிவாகிய துலாக்கோலாலே, இவ்வுலகத்தேயுள்ள நகரங்கள் (மதுரை தவிர) அனைத்தினது பெருமைகளையும் ஒரு தட்டிலிடும் நிறையாகவும், தனது (மதுரை) பெருமையை ஒரு தட்டிலிடும் நிறையாகவும் கொண்டு, சீர்தூக்குமிடத்து உலகத்துள்ள ஏனைய அனைத்து நகரங்களின் பெருமையும் மெலிந்தேற, தன் பெருமை அங்ஙனம் மெலியாமல் தன் பெருமையாலே துலாத்தட்டு தாழும் தன்மையுடைத்து பாண்டியன் ஆளும் நான்மாடக்கூடல்நகர். (உரை)
மதுரை புத்தகத் திருவிழாவில் பண்பாட்டு ஆய்வாளர் தொ.பரமசிவன் அய்யா பரிபாடலிலுள்ள மேற்கண்ட பாடலை எடுத்துரைத்த பொழுது மதுரை மீதும், தமிழ் மீதான காதல் இன்னும் அதிகமாகியது. மதுரையும் தமிழும் வேறுவேறல்ல, இரண்டும் ஒன்றுதான் என்றெண்ணும் அளவிற்கு எப்போதும் சேர்ந்தே இருக்கிறது. மூவேந்தர்களில் பாண்டியர்களே தமிழுக்கு சங்கம் வைத்திருந்தனர். தமிழிக் கல்வெட்டுகள் அதிகம் கண்டறியப்பட்டது மதுரைப் பகுதியில்தான் என்பதும் குறிப்பிடத்தகுந்த விசயம். மதுரை, தமிழர்களின் பண்பாட்டுத் தலைநகரமாகவும் திகழ்கிறது. கீழடியில் கிடைத்த விசயங்கள் அந்த ஊரை ‘தமிழடி’ என்று அழைக்குமளவிற்கு உள்ளது.
தமிழ்நாட்டில் மக்கள் வாழ்விடப்பகுதி கிடையாதென்கிற வாதத்திற்கு பதிலடியாகவும், தமிழ் வையை என்று இலக்கியங்களில் அழைக்கப்பெற்ற வைகை நதி நாகரிகத்திற்கு சான்றாகவும் கீழடி அகழாய்வு அமைந்துள்ளது. இரண்டாயிரத்தி ஐநூறு ஆண்டுகால வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்ட மதுரை என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில் கீழடி அகழாய்வு அதை இன்னும் ஐநூறு ஆண்டுகளுக்கு முன் நீட்டியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்க விசயம். கீழடியில் கரிமப் பகுப்பாய்வு செய்த பொருட்களின் காலத்தை கி.மு.2600 என்று கணித்துள்ளனர். மேலும், எழுத்தறிவையும், தொழில்நுட்ப அறிவையும் ஒரு நூற்றாண்டில் ஒரு சமூகம் பெற்றுவிட முடியாது. குறைந்தது நானூறு, ஐநூறு ஆண்டுகள் ஆகும்.
வைகையை முழுமையாக கள ஆய்வு செய்யாத நிலையில் மத்திய தொல்லியல் துறை 2013-14இல் அமர்நாத் இராமகிருஷ்ணன் தலைமையில் வைகை கரையோர கிராமங்களில் ஆய்வுப்பணியைத் தொடங்கியது. ஒரு அகழாய்வு நடைபெறுவதை ஆயிரக்கணக்கான மக்கள் வந்து பார்த்து சென்றிருக்கின்றனர் என்றால் அந்தப் பெருமை கீழடியையே சாரும். நாங்கள் பசுமை நடை பயணமாக கீழடி அகழாய்வின் ஒவ்வொரு கட்டத்திலும் தொடர்ந்து சென்று பார்த்து வருகிறோம். கீழடியை அகழாய்விற்கு தேர்வு செய்ததை குறித்து அகழாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கூறிய தகவல்களை கீழே சுருக்கமாகப் பார்க்கலாம்.
“வைகை வருசநாட்டிலிருந்து ஆறு கடலில் கலக்கும் அழகன்குளம் வரையிலான 5 மாவட்டங்களில் 293 இடங்களில் பல்வகையான தொல்லியல் எச்சங்கள் கிடைத்தன. சில இடங்களில் கல்வெட்டுகள், முதுமக்கள் தாழிகள், நடுகற்கள் கிடைத்தன. 293 இடங்களில் பகுப்பாய்வு செய்ததில் நூறுக்கும் மேலான இடங்களில் மக்கள் வாழ்விடப் பகுதிகள் இருந்தது கண்டறியப்பட்டது. வைகையின் மேல் பகுதியிலிருந்து பார்த்தால் போடிநாயக்கனூர் பக்கத்திலுள்ள டொம்பிச்சேரி, சித்தர் நத்தம், அணைக்கரைப்பட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டி, குருவித்துறை அதற்கடுத்து மதுரையை கடந்ததும் உள்ள கீழடி. மதுரை தொடர்ச்சியாக மக்கள் வசிப்பிடமாக உள்ளதால் மதுரையின் மத்தியில் அகழாய்வு செய்வதற்கான இடம் கிடைக்கவில்லை. கீழடி தாண்டி கீழே போனால், மாரநாடு, அல்லிநகரம், ராஜ கம்பீரம், பாண்டி கம்மாய், அரச நகரி ஆகிய ஊர்களைச் சொல்லலாம். இந்த அகழாய்விடம் தேர்வில் 100 இடங்கள் குடியிருப்போடு கூடிய கிராமம் அல்லது நகரமாக இருந்து அழிந்ததற்கான சான்றுகள் கிடைத்தன. இதில் கீழடியில் மட்டும் மேற்பரப்பாய்விலேயே 40 ஏக்கர் வரை ஓடுகளாகத்தான் இரைந்துகிடக்கிறதென மக்கள் கூறிய அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் கீழடியில் அகழாய்வு தொடங்கியது” என அமர்நாத் இராமகிருஷ்ணன் கூறினார்.
கீழடியில் பெரும்பரப்பில் கிடைத்த செங்கற்கட்டுமானம் ஆய்வுலகில் பெரும்பரபரப்பையே ஏற்படுத்தியது. இதுவரை கீழடியில் பத்தாயிரத்திற்கும் மேலான அரிய பொருட்கள் கிடைத்துள்ளன. குறிப்பாக சமயம் சார்ந்த எந்தப் பொருளும் கிடைக்கவில்லை. கீழடி அகழாய்வில் கிடைத்த மண்பாண்ட ஓடுகளில் ஆதன், இயனன், டிசன், சேந்தன் அவதி போன்ற வார்த்தைகள் கிடைத்துள்ளன. இதன் மூலம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே மதுரைப் பகுதி கல்வியறிவு பெற்று விளங்கியதை அறிந்து கொள்ள முடிகிறது. கருப்பு, வெள்ளை வண்ணம் பூசப்பட்ட மண்பாண்டங்களும் இந்த அகழாய்வில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும், ரோமானிய நாட்டினரோடும் இவர்கள் வணிகத் தொடர்பில் இருந்ததைக் காட்டும் வகையில் ரவுலட், ஹரிட்டைன் வகை மண்பாண்டங்கள் கிடைத்துள்ளன. சதுர வடிவிலான கட்டிட அமைப்புகள் கிடைத்துள்ளன. இந்தக் கட்டிடங்களில் செங்கற்கற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை 38 செ.மீ நீளமும், 28 செ.மீ அகலமும், 7 செ.மீ உயரமும் கொண்டவை. கீழடி அகழாய்வில் சூதுபவளம், அகேட், பளிங்கு ,பச்சை, மஞ்சள், நீல கண்ணாடி மணிகள் கிடைத்துள்ளன.
இரண்டாம் கட்ட அகழாய்வின் போது நடந்த பசுமை நடையில் பேராசிரியர் சுந்தர்காளி அவர்கள் சங்க இலக்கியத்திற்கும் கீழடிக்குமான தொடர்பைப் பற்றிய பேசியதிலிருந்து
“சங்க காலத்தையொட்டி புதைப்பதற்கு பயன்படுத்திய இடங்கள் தமிழகம் முழுக்க பரவலாக கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் மக்கள் வாழ்ந்த இடங்கள், அவர்கள் வாழ்ந்த வீடுகள், அவை சார்ந்த பொருட்கள், தானியங்கள் சேமித்து வைக்கும் குதிர்கள், உறைக்கிணறுகள் கீழடியில் அதிகமாக கிடைத்துள்ளன. குறிப்பாக கழிவுநீர் வெளியேறுவதற்கான அமைப்பு அதிகமாக கிடைத்துள்ளது. சங்க இலக்கியத்தைப் படிக்கும்போது வரும் சுருங்கைகள்தான் இவை.
பரிபாடலில் ஆற்றில் தண்ணீர் வரும்போது நீரணி விழா நடக்கிறது. மக்கள் மகிழ்ச்சியோடு ஆற்றில் போய் குளிக்கிறார்கள். இந்த இடம் ஆற்றங்கரைக்கு அருகில் உள்ளது. ஊரே விழாக்கோலம் பூண்டிருக்கிறது பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. இலக்கியத்திலே இருக்கிற விசயங்களை வரலாற்றாசிரியர்கள் சான்றாக கொள்ளும் போது மிக நம்பத்தகுந்த விசயங்களை மட்டும் எடுத்துக் கொண்டு மீதியை புறந்தள்ளி விடுவார்கள். இந்த மாதிரியான அகழாய்விலே நேரடியாக நமக்கு கிடைக்கிற தடயங்கள், தொல்லெச்சங்களை கொண்டு பார்க்கிற போது இலக்கியங்களிலே காணப்படுகிற பல விசயங்கள் நமக்கு இங்கு உறுதிப்படுகின்றன. குறிப்பாக பிற்கால இலக்கியங்களைவிட சங்க இலக்கியப் பாடல்களிலே காட்டப்படும் வாழ்க்கை என்பது பெரிதும் நம்பகத்தன்மையோடு இருக்கிறது என்பதை இந்த அகழாய்வுகள் நிரூபிக்கக் கூடியவையாகவும், மெய்ப்பிக்க கூடியவையாகவும் இருக்கின்றன.”
பசுமை நடை தொல்லியல் திருவிழாவில் கீழடி குறித்த நிழற்படக்கண்காட்சி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் பங்கேற்று பேசிய அகழாய்வாளர் அமர்நாத் இராமகிருஷ்ணன் கீழடி தமிழர்களின் சொத்து என்று பேசியது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் கீழடி அகழாய்வின் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு தமிழகம் முழுவதும் பரவலான வரவேற்பைப் பெற்றுள்ளது.
கீழடியில் ஐந்தாவது கட்ட அகழாய்வைக் காண பசுமை நடையாகச் சென்ற போது கிட்டத்தட்ட ஆயிரம் பேர் வந்திருந்தனர். தொல்லியல் திருவிழா 2.0 என சொல்லுமளவிற்கு அங்கு ஒரு தொல்லியல் கருத்தரங்கமே நிகழ்ந்தது. கீழடியில் இரவு பகல் பாராமல் அங்கேயே தங்கிப் பணி செய்த அகழாய்வுக் குழுவினருக்கும், கீழடியில் பணிசெய்த மக்களுக்கும், அந்த இடத்தை ஆய்வு செய்ய வழங்கியவர்களுக்கும், கீழடியின் வரலாற்றை பறைசாற்றும் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள். கீழடி தமிழர்களின் தாய்மடி.
–சித்திரவீதிக்காரன்
நன்றி – அகழாய்வாளர்கள் அமர்நாத் இராமகிருஷ்ணன், ராஜேஸ், ஆசைத்தம்பி, பசுமை நடை அமைப்பாளர் அ.முத்துக்கிருஷ்ணன், தொல்லியல் அறிஞர் சொ.சாந்தலிங்கம், பேராசிரியர் சுந்தர் காளி, பேராசிரியர் கண்ணன், தமிழ்நாடு அரசு தொல்லியல் துறை
படங்கள் உதவி – அருண், ரகுநாத், ராஜேஸ் குமார்.