நான்காம் இரவின் கனவு

மண் தரையை உடைய அந்த பெரிய அறையின் நடுவே மாலைக்காற்றை அமர்ந்து இன்புறுவதற்காக அமைக்கப்பட்ட மரப்பலகை  ஒன்று இருந்தது. அதைச் சுற்றிலும் வட்ட வடிவ இருக்கைகள். அந்தப் பலகை கருமையின் மினுமினுப்புடன் விளங்கியது.

அறையின் மூலையில் ஒரு சிறு சதுரவடிவ உணவு மேசை முன் அமர்ந்து ஒரு முதிய மனிதர் சாகே பானத்தை அருந்திக் கொண்டிருந்தார். அதனுடன் ஒர் இன்சுவைப் பண்டத்தையும் ருசித்துக் கொண்டிருந்தார்.

சாகேயின் கிளர்ச்சியால் அம்முதிய மனிதர் பொலிவுடன் காணப்பட்டார். மேலும் அவரது முழுத்தோற்றமே ஒளியுடன் சோபித்தது. முகத்தில் முதுமைக்குரிய சுருக்கங்களே இல்லை. ஆனால் அவர் மீசை தூய வெண்மையுடன் ஒளிர்ந்தது. அவர் ஒரு முதியவர் என்று எனக்கு தெளிவாக விளங்கியது. நான் ஒரு சிறுவனாதலால் அவருக்கு எவ்வளவு வயதாயிருக்கும் என எனக்குள் கேட்டுக் கொண்டேன். அப்போது ஒரு முதிய பெண்ணொருத்தி வீட்டின் பின்புறத்திலிருந்து தண்ணீர் மொண்டு ஒரு குவளையில் அவர் முன்வைத்தாள். மேலாடையில் கைகளைத் துடைத்துக்கொண்டே” உங்களுக்கு எத்தனை வயதிருக்கும் மதிப்பிற்குரிய முதியவரே?” என்று வினவினாள். முதியவர் இன்சுவைப் பண்டத்தை வாயில் திணித்த வாறே தமக்கேதும் தெரியாத பாவனையில் “எனக்கு எவ்வளவு வயதாகிறது என்பதை நான் மறந்தே விட்டேன்” என்றார்.

அப்பெண் தன் அரைக்கச்சையில் கைகளை வைத்தவாறே அம்முதியவரை உற்று நோக்கியபடி நின்றுகொண்டிருந்தாள்.

பெரிய தேநீர்க்குடுவையிலிருந்த சாகேபானத்தை ஒரே மடக்கில் குடித்து விட்டு அம்முதியவர் தன் மீசையினூடாக ஒரு பெருமூச்சை இழுத்து விட்டார்..

“உங்கள் வீடு எங்கிருக்கிறது முதியவரே?” என்றுமரியாதையுடன் அப்பெண் வினவினாள்.மீண்டும் ஒரு பெருமூச்சை இழுக்கையில் அதை நிறுத்தியவாறே ” என் தொப்புளின் ஆழத்தில் இருக்கிறது” என்று முதியவர் பதிலளித்தார்.”

“இப்போது எங்கே செல்கிறீர்கள்?” என்று அவள் கேட்ட கேள்விக்கு சாகேயை பருகியவாறே மீண்டும் பெருமூச்சுடன்” அதோ அங்கே போகிறேன்” என்றார் முதியவர்.

“அங்கே எதிரே செல்லும் பாதையிலா?” என்று அப்பெண் கேட்கையில் முதியவர் விட்ட மூச்சுக்காற்று தாள்களினால் ஆன மெல்லிய கதவுகளை ஊதியபடியே வெளியேறி வில்லோ மரங்களைக் கடந்து ஊர்ந்தவாறே நதிக்கரையை நோக்கி நகர்ந்தது.

முதியவர் வீட்டை விட்டு வெளியேறினார். அவர் இடுப்பில் சுரைக்குடுக்கையும் தோளிலிருந்து தொங்கியபடியே அக்குள் வரை நீண்ட சதுர வடிவ பெட்டியும் காணப்பட்டன. இளநீல நிறத்தில் இறுக்கமான கால் சிராயும் கைப்பகுதியற்ற கோட்டையும் அணிந்திருந்தார்.

கணுக்கால் வரை நீண்ட மஞ்சள் நிறக் காலுறைகளை அணிந்திருந்தார். அவை தோலினால் செய்யப்பட்டவை போலத் தோற்றமளித்தன.

அவர் நேராக வில்லோ மரத்தினடியை நோக்கி நடந்தார். அங்கே மூன்று அல்லது நான்கு சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தனர். புன்முறுவலோடு் தன் இடுப்பில் இருந்த நீண்ட நீல நிறத் துண்டை   ஒரு காகிதத்தை போல சுழற்றி வீசினார். அது ஒரு மெல்லிய கயிறு போல கிழே வீழ்ந்தது. அதைச் சுற்றி ஒரு வட்டம் போட்டார். பித்தளையினால் ஆன ஒரு புல்லாங்குழலை சதுர வடிவப் பெட்டியிலிருந்து எடுத்தார்.

“இப்போது இந்தத் துண்டு ஒரு சர்ப்பமாக மாறப்போகிறது. கவனியுங்கள் கவனியுங்கள். கவனியுங்கள்” என்று அவர் மீண்டும் மீண்டும் கூறினார்.

சிறுவர்கள் ஆர்வத்துடன் உற்றுப் பார்த்தனர். நான் கூடத்தான்.

“ கவனியுங்கள். அனைவரும் கவனிக்கிறீர்களா ?” என்றபடியே அவர் புல்லாங்குழலை இசைத்துக்கொண்டே வட்டமடிக்க ஆரம்பித்தார். ஆனால் அத்துண்டு சிறிதும் நகரவில்லை. வேகமாக குழலை இசைக்கத் துவங்கினார் முதியவர். இப்போது நிறைய முறை வட்டமடித்தார்.

தன் வைக்கோல் கால் ஜோடுகளில் மிக மென்மையாக கால் வைத்து கீழே கிடந்த தூண்டை சற்றும் மிதிக்காமல் அதைச்  சுற்றிச் சுற்றி வட்டமடித்தார். பயந்தவாறே அவர் தோன்றினாலும் மிகக் களிப்பு நிறைந்தவறாக எனக்குத் தென்பட்டார்.

திடீரென குழல் இசைப்பதை நிறுத்தினார். தன் தோளில் தொங்கிய சதுரவடிவப் பெட்டியைத் திறந்து கிழே கிடந்த துண்டின் நுனியை எடுத்து அதில் திணித்தார்.

“பெட்டியில் அதை இவ்வாறு வைத்தபின் அது சர்ப்பமாக மாறிவிடும். உங்களுக்கு உடனே காட்டுகிறேன். இன்னும் ஒரு நிமிடத்தில் காட்டுகிறேன்” என்று சொல்லியபடியே அம் முதியவர் நடக்க ஆரம்பித்தார்.

வில்லோ மரங்கள் வழியாக ஒரு குறுகிய பாதையில் நடக்கத்துவங்கினார். சர்ப்பத்தைக் காணும் அவாவினால் உந்தப்பட்டு நானும் அவர் பின்னே நடந்தேன்.

“அது விரையில் சர்ப்பமாகி விடும்” என்று மீண்டும் மீண்டும் கூறியபடியே அவர் நடந்தார்.”” இன்னும் சில நிமிடங்களில் அது உறுதியாக ஒரு சர்ப்பமாக உருமாறும்அதன் பிறகு குழல் இசை கேட்கும்” என்று ஒரு பாடல் போல் முணுமுணுத்தபடியே நடந்து போய் நதியின் கரையை அடைந்தார்.

அங்கே எந்த ஒரு பாலமும் அல்லது படகும் காணப்படவில்லை. ஆதலால் அவர் ஓய்வெடுத்த படியே பெட்டியில் உறையும் சர்ப்பத்தைக் காட்டுவார் என எண்ணினேன்.

ஆனால் அவர் நதியினூடே நீரின் சலசலப்போடு நடக்கத் துவங்கினார். முதலில் தொடை வரை எழும்பிய நீர் பின்னர் இடுப்பு வரை உயர்ந்தது. பின்பு அவர் மார்பின் அளவு மெல்ல உயர்ந்தது. அவர் முற்றிலுமாக மறைந்து விடுவார்  போலத் தோன்றியது.

ஆனாலும் அவர் ஒரு பாடலை இவ்வாறாகப் பாடியபடியே நீரினூடாக நடந்தார்

. “நீர் இன்னும் ஆழமடைகிறது. இரவில் அடர்ந்த இருள் கவிகிறது. என் பாதையோ நீண்டு செல்கிறது.”

அவரது முகம், தலை மற்று தொப்பி ஆகிய அனைத்தும் இப்போது மறைந்துவிட்டிருந்தன.

அவர் எதிர்க்கரையை அடைந்த பின் சர்ப்பத்தைக் காட்டுவார் என்ற ஆவலோடு வெகு நேரம் நான் காத்துக்கொண்டிருந்தேன். நாணல்கள் காற்றில் அசைந்து உரசி ஒலியழுப்பின. ஆனால் அந்த முதியவர் நதியிலிருந்து வெளியே வரவேயில்லை.

மூலம்: – நட்சுமே சொசெகி             

தமிழில்: கணேஷ் ராம்


நட்சுமே சொசெகி: ஓர் அறிமுகம்:

நட்சுமே சோசெகி நவீன ஜப்பானிய நாவலின் துவக்கப்புள்ளி என்று விமர்சகர்களால் குறிப்பிடப்படுகிறார். அகுதகவா விலிருந்து துவங்கி இன்றைய ஹாருகி முராகமி வரை சொசெகியின் புனைவுலகால் வசீகரிக்க பட்டவர்கள். அகுதாகவா சொசெகியை தன்னுடைய ஆசான் என்று ஒரு கதையில் குறிப்பிடுகிறார்.1867 ஆம் ஆண்டில் ஜப்பானின் ஈடோ நகரில் பிறந்த சொசெகி இளவயதில் சீன இலக்கியங்களா லும் ஹைகூ கவிதைகளாலும் கவரப்பட்டு ஒரு வாசகராக தன் வாழ்க்கையை தொடங்கினார். பின் லண்டனில் இரண்டு ஆண்டுகாலம் ஆங்கில இலக்கியம் பயின்று டோக்கியோ இம்பீரியல் கல்லூரியில் பேராசிரியராக விளங்கினார்.
சோசெகியின் “I am a Cat” என்கிற நாவல் 1905ஆம் ஆண்டு பிரசுரமாகி அவரை ஜப்பானின் நவீன நாவலாசிரியராக அடையாளம் காட்டியது. தொடர்ந்து வெளியான Botchan மற்றும் Kusamukara ஆகிய புனைவுகள் அவரை நவீன ஜப்பான் இலக்கியத்தின் நட்சத்திரமாக ஆக்கின.

இலக்கிய விமர்சன நூல்களையும் நிறைய சிறுகதைகளையும் எழுதிய சொசெகி தனி மனிதனின் அடையாள சிக்கல் மற்றும் தொழில் மயமாகும் நவீன ஜப்பானிய சமூகம் ஆகியவற்றை தனது படைப்புகளில் விவாதிக்கிறார். 2016 ஆம் ஆண்டில் டோக்கியோவில் சொசெகியின் நூறாவது ஆண்டு நினைவு நாளின்போது அவரை போன்றவே ஒரு ஆண்ட்ராய்டு ரோபோ உருவாக்கப்பட்டு அவரது கதைகளையும் கவிதைகளையும் வாசித்துக் காட்டி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. ஜப்பானின் புகழ்பெற்ற மாங்கா காமிக்ஸ் மற்றும் அனிமேஷன் படங்களிலும் சோசெகி ஒரு கதாபாத்திரமாக தோன்றி ஒரு பூனையாக உறுமாருகிறார்.
1916ஆம் ஆண்டில் இறந்த சோசெகி நவீன ஜப்பானிய இலக்கியத்தின் பிதாமகராக திகழ்கிறார்.

Previous articleரோஸ் படிக்காமல் போனது…
Next articleதமிழடி
Avatar
கே.கணேஷ் ராம் : அண்ணாமலை பல்கலைகழகத்தில் ஆங்கிலத்துறையில் உதவிப் பேராசிரியராக பணிபுரிகிறார். தமிழ் இலக்கியச் சூழலில் கடந்த சில வருடங்களாக சிறந்த மொழிபெயர்ப்பு படைப்புகளை அளித்துக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் இவரது மொழிபெயர்ப்பில் வெளிவந்த எழுதிய “சுழலும் சக்கரங்கள்” (Sleeping Gears -ரியுனொசுகே அகுதாகவா) சிறுகதைத் தொகுப்பு சிறந்த மொழிபெயர்ப்பு சிறுகதைத் தொகுப்புக்கான விகடன் விருதைப் பெற்றது.

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.