ரோஸ் படிக்காமல் போனது…

செலினா :

“அவள் ஒரு வெகுளி ! கள்ளங்கபடமில்லாதவ ! என்னோட பெஸ்ட் பிரண்ட்.  அவளுக்கு யாரும் விரோதிகளே கிடையாது . யாரையும் விரோதியா அவளால நினைக்கக் கூட முடியாது ! அத்தனை நல்ல மனசு அவளுக்கு. அவ தற்கொலை பண்ணிக்கிட்டாளா,  இல்லன்னா யாராவது கொலைதான் செஞ்சுட்டாங்களான்னு கேட்டா …இரண்டுமே இருக்க முடியாது ! ஏதாவது விபத்தாக இருக்கலாம் !”

 

ரெஜி :

நான் சொல்றது உண்மை சார் ! அவள் என்னோட கேர்ள் ப்ரெண்ட் ! அவளுக்கு வேற பாய் ப்ரெண்டு யாரும் கிடையாது.  நாங்க ரெண்டு பேருமா ஒரு ரெண்டு தடவை சினிமாவுக்கு போயிருக்கோம்.  ஒரு நாலு…இல்ல அஞ்சு தடவை பார்க்குக்கு போயிருக்கோம்.  ஹோட்டலுக்கு எல்லாம் கிடையாது . அவ ரொம்ப டீசன்டான பொண்ணு சார் . எனக்கு அவளை ரொம்ப பிடிச்சிருந்தது !”

 

டாக்டர் ஜெயகிருஷ்ணன் :

“மரணம் எத்தனை மணிக்கு நடந்தது என்று சரியாகச் சொல்ல முடியும் . இறப்பதற்குக் கொஞ்ச நேரம் முன்பு தான் சாப்பிட்டு இருக்கிறாள்.  தேகத்தில் பலவந்தம் செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் ஒன்றும் இல்லை . ஆனால் இடது உள்ளங்கையில் மட்டும் ஒரு சிறிய வெட்டுக்காயம் இருக்கிறது. அது இறப்பதற்கு சற்று நேரம் முன்பு தான் ஆகியிருக்க வேண்டும்.  பாதிக்கப்பட்ட பெண் கர்ப்பம் தரித்து இருக்கவில்லை. ஆனால் பல முறைகள் உடல் உறவு ஏற்பட்டுள்ளது என்பது தெளிவு . மடக்கிப் பிடித்த வலது கைக்குள் சில முடியிழைகள் சிக்கிக் கொண்டிருக்கின்றன.  ஹென்னா ட்ரீட்மென்ட் ஆகியிருக்கிறது.  மற்ற விவரங்கள் பரிசோதனைக்குப் பின்பு தான் சொல்ல முடியும்.  விழுந்ததனால் ஏற்பட்ட காயங்கள் தான் மரணத்தின் காரணம் . மண்டையோடு துண்டுகளாக பிளந்திருக்கிறது. எலும்புகள், உள்ளுறுப்புகள் அனைத்தும் சேதம் அடைந்து உள்ளன.”

 

 

டாக்டர் மனு கிருஷ்ணன், ஸைக்கியாட்ரிஸ்ட் :

“இந்தப் பொண்ணு விநயா ரெண்டு தடவை இங்கே வந்திருக்காங்க ! மூன்றாவது அப்பாயின்மென்ட் புக் பண்ணி இருந்தாங்க . நோயாளிகளுடைய விவரங்கள் எல்லாம் பொதுவா நாங்க வெளிய சொல்ல மாட்டோம் . ஆனா இது ஒரு ஸ்பெசல் கேஸ் ஆதனால நான் கோவாப்ரெட் பண்றேன். பல தடவைகள் மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டு இருந்ததா சொல்லி இருக்காங்க . முதல் செஷன்ல அவங்க அதிகம் ஒண்ணும் பேசல ! யாரையோ கண்டு பயப்படறாங்களோன்னுதான் எனக்கு முதல் தடவை சந்தேகம் வந்தது . ஆனால் இரண்டாவது செஷனில் நான் அதை ரூலவுட் பண்ணிட்டேன் !  ஓ ! ஒரு விஷயம் ஞாபகத்துக்கு வருது. ரெண்டாவது அப்பாயிண்ட்மெண்ட் அவங்களுக்கு மட்டும் தான் இருந்தது ! அன்னைக்கு வேற யாரும் இல்லை.  அவங்க வெளியே இறங்கி போனப்ப வெளியில பைக்ல யாரோ வெயிட் பண்ணிக்கிட்டு இருந்தத இங்கிருந்து ஜன்னல் வழியா பார்க்க முடிஞ்சது. ஆனால் ஹெல்மெட் போட்டு இருந்ததால வெயிட் பண்ணவங்க ஆணா பெண்ணான்னு கண்டுபிடிக்க முடியல !”

 

ஜெயந்த் , அடுத்த வீட்டுக்காரர் :

“நல்ல பொண்ணு சார் விநயா !  அவங்க ஒண்ணு ரெண்டு முறை என் கிட்ட இருந்து புத்தகங்கள் படிக்க, வாங்கி இருக்காங்க ! கவிதைகளில அவங்களுக்கு ரொம்ப ஆர்வம்.  ஆனா என்கிட்ட கவிதை புத்தகங்கள் ரொம்ப குறைவா தான் இருந்தது. என்கிட்ட இருந்து வாங்கின இரண்டு புத்தகங்கள் இன்னும் திரும்பக் கூட கிடைக்கவில்லை!”

 

திலீப் ப்ரோக்கர் :

“இந்த போன் நம்பர் அவள் கொடுத்தது தான் ஸார் ! அவளுக்கு நல்ல டிமாண்ட் இருந்தது.  என்கிட்ட சொல்லியிருந்த பேரு ஷெரில் !  பேருல என்ன இருக்கு ? அவளுக்கு இந்த ஊர்ல வாடிக்கைகாரங்க கிடையாது.  கேரளாவில் கொச்சி, கோதமங்கலம் மாதிரி சில  இடங்களிலிருந்து சிலபேர் அவள கூப்பிடுவாங்க . அவளுக்கு பணம் தேவைப்படும் போது என்னை கூப்பிடுவா.  நான் ஆளை ஏற்பாடு பண்ணி தருவேன் !’

 

மோகனன் அட்வகேட் :

“ஒரு தடவை…… ஒரே ஒரு தடவை மாத்திரம் தான் சார் நான் அவளப் பார்த்து இருக்கேன் . அதுவும் இங்கே இருந்து ரொம்ப தூரத்தில் இருக்கிற ஹோட்டல் இம்பீரியல்லதான் நான் அவளை பார்த்தது . சத்தியமா அதுக்கப்புறம் நான் அவளை பார்க்கவே இல்ல . அன்னிக்கி பார்த்தப்போ கூட அவ எதுவுமே பேசல!  பேச சரியான நேரமாவும் அது இருக்கல..”

 

ஜாஸ்மின்,  தோழி:

“அவளுக்கு அம்மா மாத்திரம் தான் ஸார்! அம்மா டாக்டரா இருக்காங்கன்னு  சொல்லி இருக்கா.  அப்பா எங்கேயோ ரொம்ப தூரத்தில் இருக்காரு .அவரு ரொம்ப பிஸி.  மாசத்துல ஒன்னு ரெண்டு முறை வருவாரு . ஆனால் தினமும் போன்ல கூப்பிடுவாரு.  மகள் மேல அவருக்கு ரொம்ப பிரியம்.  அவளுக்கு ஸ்போர்ட்ஸ் ரொம்ப இன்ட்ரஸ்ட் . டிராமாலயும்  நடிச்சுகிட்டிருந்தா . அவள் மூட் அவுட்  ஆகி பார்த்ததே இல்லை.  எப்பவும் நல்ல சந்தோஷமா சிரிச்சு பேசிக்கிட்டு தான் இருப்பா.  அவ இருந்தா நல்லா பொழுது போகும் !”

ஸாபு ஹரிஹரன்

ஜார்ஜ் தாமஸ், உடன் படிப்பவர் :

“படிப்பில் அவ்வளவு கெட்டின்னு ஒண்ணும் சொல்ல முடியாது . அடிக்கடி கிளாஸ் கட் பண்ணிட்டு போயிடுவா ! என்னவோ ரகசியங்கள் அவ மனசுல இருக்குன்னு எனக்கு அடிக்கடி  தோணும்.  ஆனா கேட்டா சொல்லமாட்டா. “உன் வேலையை பாத்துக்கிட்டு போ” என்பதுதான் பதிலாக இருக்கும் ! அதுக்கு மேல ஒன்னும் கேக்க மனசு வராது.  ஆனா அவள ரொம்ப மிஸ் பண்றோம்..”

 

டாக்டர் விமலா, தாயார் :

“என் பொண்ணு ஒருநாளும் தற்கொலை பண்ணிக்கிட்டு இருக்க மாட்டா ஸார் !  அவளை யாரோ ட்ராப் பண்ணி இருக்காங்க.  அந்த ஹோட்டல் பேரு கூட நான் இப்பதான் முதல் முறையா கேட்கிறேன்.  நான் தினம் அவளை ஹாஸ்டல் நம்பர்ல கூப்பிட்டு பேசுவேன் !  அவளை என்னிக்குமே குறை சொல்லி கோபிக்க வேண்டிய அவசியமே வந்ததில்லை.   என் பொண்ணோட மரணத்துக்குப் பின்னாடி ஏதோ ஒரு பெரிய சூழ்ச்சி இருக்கு.  பெண்களுக்கு தொந்தரவு கொடுக்கும் எத்தனையோ விஷயங்கள் தினமும் நடக்குது !  நான் ரொம்பவும் குழம்பி போய் இருக்கேன் சார் !”

 

மனோஜ்,  இயக்கத் தொண்டர் :

“இதுக்குண்டான  விசாரணையை வேகமாக நடத்தி முடிக்கணும் சார் ! தினமும் இதே வழியில ஸ்கூலுக்கு போயிட்டு இருந்த பொண்ணு !  இப்பவெல்லாம் பெண் குழந்தைங்களுக்கு தெருவிலே தைரியமா நடக்கவே முடியாத படி ஆயிடுச்சு!  அந்தப் பெண்ணைக் கொன்னவன சீக்கிரமா பிடிச்சு தண்டிக்கலைன்னா நாங்க எல்லாரும் சேர்ந்து போராட்டம் தொடங்கறதத் தவிர வேற வழியில்ல சார் ! அந்த அளவுக்கு நிலைமை மோசமாயிடிச்சு !”

 

கிரிஜா, ஹாஸ்டல் வார்டன் :

“விநயா பத்தி இதுவரைக்கும் ஒரு கம்ப்ளைன்ட் கிடையாது சார் . ரொம்ப நல்ல பொண்ணு.  நல்லா படிக்கிற பொண்ணுன்னு தான் என்னோட அபிப்பிராயம் . எப்ப பார்த்தாலும் கையில ஏதாவது புஸ்தகம் இருந்துகிட்டு தான் இருக்கும்.  இங்க ஜாயின் பண்ண பிறகு மூணு நாலு முறை கம்பைன்ட் ஸ்டடிக்குப் போறதா சொல்லிட்டு போயிருக்கா. ஆனா சொன்னபடி எட்டு மணிக்கு முன்னாடி திரும்பி வந்திடுவா.  பாவம் சார் அவ !”

 

ரெஜி (மீள் விசாரிப்பில்) :

“திலீப்ப நான் எப்பவாவது கூப்பிட்டு பேசுவேன். ஆனா அவள் அவனோட கஸ்டமர்னு தெரிஞ்சப்புறம் அவளை காண்டாக்ட் பண்றதயே நான் விட்டுட்டேன் சார் . எனக்கு பெரிய ஷாக்கா இருந்தது அந்த விஷயம் ! கடந்த ஒண்ணு ஒண்ணரை மாசமா எனக்கு அவளுடைய தொடர்பே கிடையாது சார் !”

 

அம்மா, டாக்டர் விமலா (மீள் விசாரிப்பில்):

சார் ! நீங்க ஃபோட்டோல காட்டுற இந்த ஆள எனக்கு நல்லா தெரியும் ! என் வாழ்க்கையே அவனால தான் ஸார் நாசமாச்சு.  என்னையும் என் மகளையும் ஏமாத்தின மனுஷன் சார் இவன் ! காதல் கல்யாணம்தான் எங்களுடையது . ஆனால் பின்னாடி தான் தெரிஞ்சது இந்த ஆளுடைய சுயரூபம்! அவன் ஒரு ஏமாற்றுக்காரன் , பொம்பள பொறுக்கி ! பல பெண்களோடு தொடர்பு உண்டு அவனுக்கு.  கடந்த 19 வருஷமா அவனோட எனக்கு ஒரு தொடர்பும் கிடையாது . ஓ !கடவுளே!  என் பொண்ணு…..ஓ!  ரொம்ப கொடுமை சார் இது !”

 

ஷ்யாம் , ஹோட்டல் பாய் , ஹோட்டல் ஹெரிடேஜ் , ஆலப்புழா :

 

“ஜெய்சங்கர் சார் இங்கே மூணு நாலு முறை வந்துருக்காரு.  நிறைய டிப்ஸ் தருவாரு . எப்போ வந்தாலும் என்னைத்தான் அவர் கேப்பாரு.  நான்தான் அவருக்கு வேண்டிய எல்லா தேவைகளையும் கவனிப்பேன். கேட்டதெல்லாம் நான் கொண்டு தருவேன்.  கஸ்டமருடைய சொந்த விஷயங்களைப் பத்தி நாங்க கேட்க மாட்டோம் சார் . கேட்கக் கூடாதுன்றது ரூல்ஸ் . ஜெய்சங்கர் சார் ஒரு நாள் மட்டும் தான் ரூம் எடுப்பார் . அதுவும் பகல் நேரம் மாத்திரம்தான்.  ராத்திரி எட்டு மணி அளவில ரூம் காலி பண்ணிடுவாரு.  அவரப் பார்க்க நிறையப் பேரு வருவாங்க, போவாங்க.  எனக்கு அவங்க முகம் எல்லாம் ஒண்ணும் நினைவில்லை . ஆனா நீங்க இப்போ காமிச்ச ஃபோட்டோவில் இருக்கிற பொண்ணு அன்னிக்கு ஜெய்சங்கர் சாரோட ரூமுக்குள்ள போறத நான் பார்த்தேன் . ஆனா அந்த பொண்ணு  ரூஃப் டாப்புக்கு போனதையோ அங்கிருந்து குதிச்சதையோ நான் பார்க்கல சார் !  கிளீன் பண்றதுக்கு வந்த ரகு தான் அந்த பொண்ணு மாடிக்கு போறதை பார்த்ததா  சொன்னான்.  வேற ஒரு கஸ்டமர் வந்துட்டதால எனக்கு அங்க போக முடியல.  அந்த இடத்தில் கிளீனிங் நடக்கிறதால  கெஸ்ட் யாரையும் அனுமதிக்கறதில்ல . அதுக்கப்புறம் குறஞ்சது ஒரு பதினஞ்சு அல்லது இருபது நிமிஷம் கழிச்சு நான் பார்க்கிங் ஏரியாவில் நடக்கும் போது தான் சத்தம் கேட்டது . அந்தக் காட்சியை கண்ணால பாத்ததும் அப்படியே தளர்ந்து போய்ட்டேன் சார் ! இன்னும் அந்த உருவமும் காட்சியும் என் மனச விட்டு போகல சார் !”

 

இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான் :

சார் ! அந்தப் பொண்ணு கண்டிப்பா தற்கொலை தான் சார் செஞ்சிக்கிட்டா!  அதே நாள் அதே ஹோட்டலில் அவள் ஜெய்சங்கர் அப்படிங்கிற ஒருத்தர் புக் பண்ணியிருந்த ரூமுக்குள்ள போறத ஹோட்டல் பாய் ஷ்யாம் பார்த்துருக்கான். இந்த ஜெய்சங்கர்ன்ற  ஆளு அடிக்கடி இந்த ஹோட்டலுல வந்து தங்குற ஆளுதான். அதே நாள் அந்த ஆளு லிக்கர் ஆர்டர் பண்ணி இருக்காரு.  அந்த ரூம்ல இருந்து எப்ப அந்தப் பொண்ணு வெளியில போனான்றது தெரியல. ஆனா ஏறக்குறைய ஆறு இருபதுக்கு சத்தம் கேட்டு ஓடிப் போய் பாடிய முதல்ல பார்த்த ஆளு  ஷ்யாம் தான்.  நம்ம டிபார்ட்மெண்ட் ஆர்டிஸ்ட் வரைஞ்ச ஜெய்சங்கருடைய பட உருவத்தை அந்தப் பெண்ணோட அம்மா identify பண்ணி இருக்காங்க.  ஹோட்டல்ல அந்த ஆளு கொடுத்திருக்கிற ஜெய்சங்கர் ன்ற பேரு கூட ஃபேக் தான்!  அந்த ஆளுடைய உண்மையான பேரு செரியான் அப்படிங்கறது தான்! இதுவரை அந்த ஆளுடைய இருப்பிடத்தைப் பத்தின விவரம் கலெக்ட் பண்ண முடியல. மொபைலில் இருந்த நம்பர்ங்களையெல்லாம் ட்ரேஸ் பண்றதுக்கான ஏற்பாடுகள் எல்லாம் ஆகி இருக்கு.  அதிகப்படி விவரங்களுக்கு Crime Records Bureau வை காண்டாக்ட் பண்ணி இருக்கோம் . அவனைப் பத்தின கூடுதலான விவரங்கள் சீக்கிரமாவே தெரியவரும் சார் !”

 

ரமேசன்,  செரியான் வீட்டு வேலைக்காரன் :

 

“நான் இங்கே வந்து ஒரு ஒண்ணரை வருஷம் இருக்கும் சார். இதுவரை செரியான் ஸார் என்கிட்ட கோபமா ஒண்ணுமே பேசினது இல்ல. நல்லா நடத்துவாரு.  இங்கே சமையல் வேலை, வீடு சுத்தம் பண்ற வேலை எல்லாம் நான்தான் செய்கிறேன் . சாருக்கு அசைவம் தான் பிடிக்கும். சில சமயம் ஸ்பெஷலா சில கறி ஏதாவது செய்யச் சொல்வாரு.  வாத்துக்கறி தான் அவரோட ஃபேவரைட்.  அதிகப்படியாக சில சமயம் நான் பணம் கேட்டப்ப  கொடுத்துருக்காரு . சார் இப்ப வீட்டுக்கு வந்து ரெண்டு நாள் ஆகுது . அடிக்கடி இப்படி வெளியே போவாரு தான்.   நான் கூப்பிட்டாலும் போன் ஸ்விட்ச் ஆஃப்  ன்னுதான் வருது  அவரு கூப்பிட்டா நான் நீங்க வந்த விவரம் சொல்றேன் சார் !”

 

இன்ஸ்பெக்டர் அப்துல் ரஹ்மான்:  (ஒரு நாளைக்குப் பிறகு)

 

“ஸார் ! செரியான் பத்தி ஒரு செய்தி கிடைச்சிருக்கு. இன்னிக்கு காலையில கொச்சியில் இருக்கிற ஒரு ஹோட்டல் ரூம்ல அவர் தற்கொலை பண்ணிக்கிட்டாரு.  அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டதால் ஏற்பட்ட மரணம். நாம கொஞ்சம் லேட் பண்ணிட்டோம் ஸார் !”

 

செரியானின் கடிதம் :

ரோஸ் க்கு என் கடிதம்:

 

“மகளே!  உன்னுடைய சரியான பெயரே ரோஸ் என்பது தானா என்று கூட இந்த அப்பாவுக்கு தெரியாது . பாவியாகிய உன் அப்பா இன்னும் உயிரோடு இருப்பதில் எந்த அர்த்தமும் இல்லை . உன் மரணத்தின் காரணகர்த்தா நானே தான் ! எனக்கு உள்ள தண்டனையை நானே விதித்துக் கொள்கிறேன் . எந்த ஒரு தந்தையும் தனது மகளைப் பார்க்க கூடாத விதத்தில் இருந்தது எனது பார்வை உன் மேல் ! எந்த ஒரு மகளும் தன் தந்தையைப் பார்க்க விரும்பாத ஓர் இடத்தில் நீ என்னை பார்க்க நேர்ந்தது . இன்னும் நான் வாழ்ந்தால் ஒவ்வொரு நிமிடமும் இதைக் குறித்து வேதனைப் பட்டுக் கொண்டே தான் வாழ நேரும்.  உன் அம்மா கைக்குழந்தையாக உன்னையும் எடுத்துக்கொண்டு எங்கே போனாள் என்பதே எனக்குத் தெரியாமல் இருந்தது . என்னைப்பற்றி உன்னிடத்தில் அவள் என்ன சொல்லி வைத்திருப்பாள்  என்பதும் எனக்குத் தெரியும்.  அதனாலேயே உன்னைத் தேடவும் எனக்கு மனம் வரவில்லை. என்னுடைய பர்ஸில் உள்ள உன் குழந்தைக் கால போட்டோவில் இருந்த முகம் மட்டும் தான் எனக்கு தெரியும். நீ தான் என்னுடைய குழந்தை ரோஸ் என்று அறிந்தபோது என் உள்ளம் வெடித்துச் சிதறியது.  நீ என்னைக் கொல்ல முயற்சி செய்ததில் ஒரு தவறும் இல்லை மகளே ! அங்கேயே, உன் கையாலேயே என் மரணம் ஏற்பட்டு இருந்தால் கூட நன்றாக இருந்திருக்கும் . நான் எப்படிப்பட்ட ஒரு பாவி ! என்றாவது ஒரு நாள் உன்னைக் காண்பேன் என்று நம்பினேன்.  உன்னுடன் ஒன்றாய் நெடுநாள் வாழ வேண்டும் என்று விரும்பினேன் மகளே ! இதோ,  நான், நீ  இருக்கும் இடத்திற்கு வருகிறேன்.  அங்கேயாவது என்னை நீ மன்னிப்பாயா ?

 

அன்புடன்,

உன் அப்பா.

 


‘ரோஸ் வாயிக்காதெ போயது’ என்ற மலையாளக் கதையின் தமிழ் மொழி பெயர்ப்பு 

 

மூலக்கதை மலையாளத்தில் : ஸாபு ஹரிஹரன்

தமிழ் மொழியாக்கம்  : கிருஷ்ணமூர்த்தி பாலாஜி

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.