தமிழ்ச் சிறுகதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல்.

லக்கியத்தில் ஒவ்வொரு வடிவமும் ஒவ்வொரு விதமான  மனவெழுச்சி உண்டாக்க வல்லது. அதில் எது சிறந்தது என்று வகைப்படுத்துவது இலக்கியத்துக்கும் நல்லதல்ல மொழிக்கும் நல்லதல்ல. அதது அதனதன் பணியை அதன் போக்கில் செய்கின்றது. ஒரு நாவலில் சொல்லவேண்டிய நீண்ட வாழ்வியல் சிலவேளைகளில் ஒரு சிறுகதைக்குள் அடங்கிவிடுகிறது. ஒரு சிறுகதை சொல்ல வேண்டியதை சில நேரங்களில்  நான்கு வரி கவிதை சொல்லிவிடுகிறது. புனைவுகள், மிகச் சரியாக  கடத்தப்படுவதற்கு யாருக்கு எந்த வடிவம் கைகொள்கிறதோ அதனைக் கொண்டு படைப்பின் வழியே தனது பங்களிப்பை செய்து வருகிறார்கள். சிறுகதை வடிவம்  ஒரு குறும்படத்தை பார்ப்பதைப்போல ஒரு வாழ்க்கையை சில பக்கங்களில் சொல்லிவிடுகிறது.

உங்களுக்கு பிடித்த பத்து சிறுகதை எழுத்தாளர்கள் யார்? என்ற பட்டியலை தொடர்ந்து வாசிக்கும் ஒரு வாசகனை கேட்டால் உடனே அதனை சொல்லிவிடுவார். அதில் இஸ்லாமிய எழுத்தாளர்கள் இருக்கிறார்களா என்று தேடினால் பெரும்பாலும் அதில் இஸ்லாமிய எழுத்தாளர்கள்  இருக்க வாய்ப்பு குறைவு.(ஒரு சிலரின் பட்டியலில் இருக்கலாம்).  அப்படியென்றால் இஸ்லாமிய எழுத்தளர்கள் போதிய பங்களிப்பை சிறுகதையில் செய்யவில்லையா? என்றால், நிச்சயம் “ஆம்” என்று சொல்ல முடியாது. ஆனால் அந்த பட்டியலில் இல்லாமல், இடம் பிடிக்காமல் போனதற்குக் காரணம் வாசகன் காரணமாக இருக்க முடியாது. சமூகமே காரணமாக இருக்க முடியும். “சூழ்நிலையே சிந்தனையின் தாய்” என்று காரல்மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

இஸ்லாமிய மக்களின் வாழ்வியலைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு என்ன இருக்கிறது என்ற சமூக மனநிலையே வாசக மனநிலையிலும் பிரதிபலிக்கிறது.  தமிழ் சிறுகதைகளில் இஸ்லாமிய வாழ்வியலை எழுதிய எழுத்தாளர்களைப் பற்றியும், அந்த எழுத்துக்களை குறித்துமான சிறுகுறிப்பை பதிவு செய்வதே இந்த மையம். இஸ்லாமிய மக்களின் வாழ்வியலை சிறுகதையில் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை ஏராளம். கட்டுரையில் குறிப்பிடப்பட வேண்டியவர்களின் பட்டியல் என்பது நீண்டது. ஆனாலும் இஸ்லாமிய வாழ்வியலை பல்வேறு முனைகளில் இருந்து வெவ்வேறு கோணங்களில் அணுகியவர்களை மட்டுமே குறிப்பிட முயற்சிக்கிறேன். நிச்சயமாக இந்த கட்டுரை முழுமை பெறாது என்பது திண்ணம்…

இந்த கட்டுரையில் பல தெரிந்த எழுத்தாளர்களின் கதைகளை சுட்டிக்காட்டுவதாக இருந்த போதும் பலரும் கவனிக்காத  நல்ல கதைகளை குறிப்பிடவே விரும்புகிறேன். ஆனபோதும், இதில் நிறைய எழுத்தளர்களின் பெயர்கள் விடுபடலாம் அதனை இது நீண்ட கட்டுரையின் தொடக்கமாக எடுத்துக்கொள்ளலாம் என்று நினைக்கிறேன்.

இன்குலாப் என்றால் அரசியல் வீச்சுடன், வலிமையான சொற்களை கொண்டு கவிதைகளை செய்யும் மகத்தான  கவிஞராக அறியப்படுவார். அவரின் கவிதைகள் உலகம் போலவே, சிறுகதை உலகம் அலாதியானது. “பாலையில் ஒரு சுனை” என்ற சிறுகதை தொகுப்பு பரவலாக அறியப்பட்ட தொகுப்பு. அதில் உள்ள ”செடிக்கும் கொஞ்சம் பூக்கள்“  என்ற கதை விளிம்பு நிலையில் இருக்கும் கடலோர இஸ்லாமிய குடும்பத்தின் கதை. இந்த கதை முழுக்க குழந்தைகளின் உலகத்தை பேசுகிறது. பூக்களை பதியம் போட்டும் விற்பனை செய்து வரும் சொற்ப வருவாயை வைத்து மகள்களின் திருமணத்துக்கு உழைக்கும் வெள்ளந்தியான அம்மாவின் வாழ்க்கையும், குழந்தைமையை இழந்து எதிர்காலத்தில் நடக்க இருக்கும் திருமணத்துக்காக கல்வியை தியாகம் செய்து உழைக்கும்  சிறுமியின் உலகம். என்று நீளும் கதையில் எல்லா பூக்களையும் பறித்துவிட்டால் குட்டி செடிகள் மொட்டையாக இருக்குமென்று மகள் சில மொட்டுகளை  விட்டுவைக்கும் குழந்தை மனதை சொல்கின்ற கதை…. நமக்குள்ளும் சில பூக்களை துளிர்விடவைக்கின்றது.

இஸ்லாம் சமூகத்தில் கருத்தடை என்பது “ஹராம்”. ஆண் பெண் இருவரும் கருத்தடை செய்யக்கூடாது. அது அல்லாவுக்கும் மார்க்கத்துக்கும் செய்யும் பெரும் தீங்கு. பெண்கள் கருத்தடை செய்வதை “அல்லா தரும் கொடையை” தடுக்கும் சைத்தானின் கொடும் செயல் என்பது நம்பிக்கை. ஆண்கள் உறவுகொண்டே இருப்பார்கள் பெண்கள் குழந்தையை சுமந்து கொண்டே இருக்கவேண்டும் என்ற சிந்தனையை களந்தை பீர் முகம்மது “காலவேர்கள்” என்ற கதையில் கேள்விக்கு உட்படுத்துவார். கடுமையான பொருளாதார நெருக்கடியில் தொடர்ந்து குழந்தை பிறந்துகொண்டே இருந்தால் எப்படி அவர்களுக்கு கல்வியும் நல்ல வாழ்வையும் அமைத்து தரமுடியும் என்ற பொருளாதார சிக்கலை மையப்படுத்தி அந்த கதையை களந்தை அணுகி இருக்கிறார்.  கருத்தடையே “ஹராம்’ என்றால் வயிற்றில் வளரும் குழந்தையை கலைத்தால்? கலைப்பதற்காக கதையின் நாயகனும் நாயகியும் மருத்துவமனைக்கு செல்லும் முடிவு பெரும் அதிர்ச்சியோடு எதிர்கொள்ளும் குடும்பம் பல  நெருக்கடியை  குடும்பத்தார்கள் கொடுக்கிறார்கள். கருக்கலைப்பு என்பது வெகு சாதரணமாக நடந்து கொண்டிருந்த, அதனை குற்றம் என்று கருதாத மனநிலை உச்சம் பெற்றிருந்த 1990களில் இந்த கதையை ஆசிரியர் எழுதி இருக்க கூடும்.  . அப்போதைய காலத்தில் இஸ்லாமிய குடும்பத்தில் இந்த நடவடிக்கைகள்   எதிரொலித்த விதம் புனைவாக்கப்பட்டுள்ளது.

களந்தை பீர்முகமதுவின் “சிலுக்கு ஸ்மிதாவும் சுலைமான் ஹாஜியாரும்” கதையின் தலைப்பே சிலருக்கு அதிர்ச்சியாகவும், பலருக்கு கிளுகிளுப்பாகவும் இருக்கும். இஸ்லாமிய பின்புலத்தில் எழுதிக்கொண்டு இருக்கும் மூத்த எழுத்தாளரின் கதையின் தலைப்பே பலருக்கும் தூக்கிவாரிப் போடும். கதை படித்து முடிக்கும்போது நம்மை அறியாமல் ஒரு குற்றமனம் மேலெழுவதை தடுக்க முடியாது. மிக அற்புதமான கதை. கிளுகிளுப்பு மனதையும், அதிர்ச்சி மனநிலையையும் ஒருசேர கேள்விக்கு உட்படுத்துவார் ஆசிரியர். சுலைமான் ஹாஜியார் தனது நெருங்கிய நண்பர் சினிமா வினியோகிஸ்தர் அய்யரோடு படப்பிடிப்பு நடக்கும் இடத்துக்கு போகவேண்டிவரும் அன்று நடிக்க வருகிறார் நடிகை “சில்க் ஸ்மிதா”. படப்பிடிப்பில் கலந்துகொண்ட ஸ்மிதா ஹாஜியாரை பார்த்தபோது தந்தைமை உணர்வு ஏற்பட்டு அவர் கையை பிடித்து தனக்காக அல்லாவிடம் துவா (பிராத்திக்க)  கேட்க சொல்லியும், அவரை ஆசிர்வதிக்க சொல்லியும் கேட்கிறார். அவளின்  துன்பங்கள் அனைத்தையும் அவரோடு பகிர்ந்துகொள்ள நினைக்கிற ஸ்மிதா இறந்த செய்தியோடு கதை முடிகிறது. ஒரு நடிகையின் மரணம் ஹாஜியாரை, அவர் மனைவியை ஏன் ஒட்டுமொத்த சமூகத்தையும் உலுக்கிவிடுகிற துயரத்தோடு கதை முடிகிறது.   களந்தை பீர்முகம்மதுவின் இந்த சிறுகதை சிலுக்கு ஸ்சுமிதாவை இச்சமூகம்  நேசிக்கிற காலம் வரை வாசகப் பரப்பிலும் உரையாடலுக்கு உட்படக் கூடியது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

தமிழ் சிறுகதையின் தவிர்க்கமுடியாத ஆளுமை தோப்பில் முகம்மது மீரான். இஸ்லாமிய எழுத்தாளர்களில் புனைவு இலக்கியத்துக்கு  சாகித்திய அகடமி விருது பெற்ற ஒரே எழுத்தாளர் தோப்பில். (கவிஞர். இன்குலாப்பிற்கு அளிக்கபெற்ற விருதை அவரது குடும்பத்தினர் வாங்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது) கடலோர மக்களின் கதைகளை நிறைய எழுதியவர். அவரின் பல சிறுகதைகள் அவரின் இளமை காலத்தில் பார்த்த வாழ்க்கையாகவே இருக்கலாம் அல்லது அதில் ஒரு பாத்திரமாக வாழ்ந்து இருக்கலாம். மிக சிறந்த கதை சொல்லி, 75ற்கும் மேற்பட்ட கதைகளை தமிழுக்கு தந்தவர். ஒவ்வொரு கதையிலும் ஒவ்வொரு வாழ்க்கை உண்டு. எளிய மக்களின் வாழ்வை நேரடியாக பார்ப்பதுபோலவே பதிவு செய்வார். அவரின் “சுருட்டுப்பா” கதை இறந்தவர்களை புதைக்கும் வெட்டியானான சுருட்டுப்பாவின் கதை. ஊரில் இறந்த எல்லோருக்கும் ஆயிரக்கணக்கான குழியை வெட்டியவர், அவரே இறந்த போது குழி வெட்ட யாரும் வாரத துயரத்தை கதை பேசுகிறது.   கடைசிவரை யாருமே வராததால் வயதுமூப்பான  அவரின் மனைவி ஆமினா, வீட்டின் முன்பு கடல் நோக்கி போகும் ஆற்றில் இறந்த அவ்வுடலை இறக்கிவிடுவதாக கதை முடிகிறது. இந்த சமூகத்தில் வெட்டியானுக்கு என்ன மரியாதை கிடைக்குமோ அந்நிலை இஸ்லாமிய சமூகத்திலும் இருப்பதை ஆசிரியர் பதிவு செய்கிறார்.

“பொண்ணு எவ்வளவு பீடி சுற்றுவா”, “என்மகள் ஆயிரம் பீடி சுற்றுவா” என்று பேசி திருமணம் முடித்த வேலை வெட்டிக்கு போகாத கணவனுக்கும், ஐந்து சிறுபிள்ளைகளுக்கும் வாழ்வாதரதிற்காக  சேர்த்து பீடி சுற்றி  சுற்றியே சீக்கை போன மைமூனைக் குறித்த கதை “கறவை தீர்ந்த மாடு”. வயது மூப்பின் காரணமாகவும், நோயின் காரணமாகவும் ஆயிரம் பீடி சுருங்கி முன்னூறு ஆக குறைகிறது.  பசி என்று அழும் குழந்தைக்கு சோறுகூட போட முடியாத வாழ்வை நினைத்து நொந்து போன சமயம்  “சரியாக சம்பாதித்து போட வக்கில்லாத மனைவி” என்று கணவன் தலாக் நோட்டீஸ் கொடுக்கிறான். நொந்து போகும் மைமூன்   என் மகளையும் ஆயிரம் பீடி சுற்ற ஆசைப்பட்டு எவனோ ஒருவன் வாழ்வை சிதைப்பான் அந்தே விரலே வேண்டாமென்று குழந்தையின் விரலை அறுக்க முனைவதில் கதை முடியும். வறுமையின் கொடூரத்தையும், அதிகாரத்தின் சந்தர்ப்பவாதச் செயல்பாடுகளையும், ஒரு சேர வலியையும் உணர்த்தும் இப்படியான பல கதைகளை தோப்பில் தந்துள்ளார்.

நவீன சிறுகதைகளில் தவிர்க்கமுடியாத எழுத்தாளர் கீரனூர் ஜாகீர் ராஜா. ஐம்பதுக்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதி உள்ளார். தனது சிறுகதைகளின் வழியே மிக காத்திரமான கேள்விகளை எழுப்பி உள்ளார். அவரின் கதைகளில் பாத்திரங்கள் பேசும் சமூக அரசியலும், அங்கதச் சுவையும் அலாதியானது. குறிப்பாக விளிம்பு நிலை இஸ்லாமியர்களின் வாழ்வியலை எழுத்தின் வழியாக காட்சியாக முன்னிறுத்தும் எழுத்து நடை அவருக்கு மிக லாவகமாக கைவருவது. அவருடைய கதைகள் பெரும்பாலும் அரசியல் மட்டுமே பேசும். அந்த அரசியல் இஸ்லாமிய பெண்களின் வலியை, பிற்போக்கு சிந்தனைகளை,  காத்திரமாக பேசும். இவர் வேறு யாரும் பார்க்காத   விளிம்புநிலை  மக்களின் வாழ்வை வேறு ஒரு வாழ்வை  பேசினார். அவரின் எழுத்தில் சமரசம் இருக்காது. அவருடைய பெரும்பாலான கதைகள் இஸ்லாமிய மதங்களில் இருக்கும் பிற்போக்கு சிந்தனைகளை பாத்திரங்கள் வழியே கேள்விக்கு உட்படுத்தும். அது மிக அவசியமானதும் கூட…. அவருடைய பல கதைகளில் பேசும் அரசியலை ஒருசில கதைகளின் மூலம் மையப்படுத்த முடியும் அல்லது அவரின் எழுத்தின் அரசியலை கவனப்படுத்த முடியும்.

“கசாப்பின் இதிகாசம்” சிறுகதை வாசிக்கும் பலருக்கும் பெரும் அதிர்வலைகளையும் ஒரு சிறுகதையை வாசித்த அலாதியான இன்பத்தையும் தரும். வட்டிக்கு பணம் கொடுத்து பல கோடிகளை சம்பாதித்த ஒரு இஸ்லாமியனின் வாழ்க்கையை பேசுகிறது. இஸ்லாமிய மார்க்கத்தின் படி, வட்டிக்கு பணம் வாங்குவது மார்கத்துக்கு எதிரானது. வட்டி உசைனின் மனைவிக்கு வட்டி வாங்குவதே பிடிக்கவில்லை எப்போதும் புலம்பிக்கொண்டே இருப்பாள் அவளது கனவில் ”தம்பதி சமேதராய் கொடிய நகரத்தில் உழல்வோம் என்று உறுதியாக நம்பினாள். ஒட்டகங்கள் கூட்டமாக சேர்ந்து அவளின் வாயில் மிதிப்பதாக கனவு வந்து அடிக்கடி படுக்கையிலிருந்து அலறி எழுவாள். இது குறித்து கணவனிடம் சொன்னால் அவன் சிரித்துக்கொண்டே “ஆளுக்கு மூணுமுறை ஹஜ்பயணம் போனா எல்லா பாவமும் நம்மூர் ஆத்துல கரஞ்சிடும்” என்பான். இந்த கதாபாத்திரங்களின் வழியே இஸ்லாமிய சமூகத்தில் வட்டி தொழில் என்பது இல்லாமல் இல்லை என்றும், காசிக்கு போய் பாவத்தை கழுவிக்கொள்ளலாமென்ற இந்து மத நம்பிக்கையாளர்களின் அதே நம்பிக்கை தழுவல் இங்கும் இருப்பதை குறிப்பிடுவார்.

அந்த கதையில் மேலும் சில சமூக அரசியலை பேசுவார். உடல் நலம் பாதிக்கப்பட்ட வட்டி உசைனின் மனைவி படுக்கையில் கிடப்பாள் அப்போது வட்டி உசைனிடத்தில் அமானுசிய குரல் ஒன்று பேசும்  “இதுக்குதான் சாய்பே வசதியாக மூன்று, நான்கு நிக்கா செய்துகொள்ள வேண்டும். ஒன்றில்லாமல் போனால் மற்றொன்று. அதைதான் முன்னோர்கள் வழிகட்டினார்கள். இதோ முந்தாநாளு கிளிமாதிரி பதினேழு வயசு பொண்ண எழுபத்தியேழு வயசு ஜைனலபுதீன் கட்டலையா உனக்கென்ன கேடு அறுபத்திரண்டு வயசு நல்லாதானே இருக்க“ என்று பேசும் குரல் வழியாக இஸ்லாம் சமூகத்தில் இரண்டு தாரம் மூன்று தாரம் முறை இப்போதும் பல இடங்களில் இருப்பதை கவனப்படுத்துகிறார், அதன் நோக்கம் இஸ்லாம் சமூகத்தை குற்றவாளி கூண்டில் ஏற்றுவதில்லை மாறாக காலத்துக்கு ஏற்ப சுய பரிசிலனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற அரசியலை பேசுவார்.

மதத்தின் பெயரால் பெண்கள் மீது நடத்தும் பல வன்முறைகளை குறிப்பிடும் அவர் ”பாவம் இவள் பெயர் பர்கத்நிஸா” என்ற கதையில் தலாக் சொல்லப்படும் இஸ்லாமிய பெண்களின் வலியை எல்லோருக்கும் பிரதிநிதியாக நின்று கதையின் நாயகி தனது குழந்தையை அடிப்பதின் மூலமாக சமூகம் நோக்கி காத்திரமான கேள்விகளை முன்வைப்பார். இன்னொரு கோணத்தில் உதவாத தகப்பனால் திருமணம் ஆகாத பெண்ணின் தவிப்பை “கொமறு காரியம்” என்ற கதையில் பெரும் அழகியலோடு கதை பேசுவார். இஸ்லாமிய மக்களின் பொருளாதார வாழ்வு சிதைக்கப்படுவதும். விளிம்பு நிலை இஸ்லாமியர்களின் புறக்கணிப்பும், அவர்களின் பேசப்படாத பல்வேறு வாழ்க்கையை தனது சிறுகதைகளில் பதிவு செய்வதில் கீரனூர் ஜாகிர் ராஜாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.

கடலோரே இஸ்லாமிய மக்களின் கதைகளை தோப்பில் தொடர்ந்து தொடர்ச்சியாக எழுதிவருபவர் “மீரான் மைதீன்”. மீரான் மைதீனின் கதை மொழி வாசகனுக்கு அலாதியானது. அந்த பகுதியின் நாட்டார் வழக்காற்றின் மொழி கதையெங்கும் வியாபித்திருக்கும். தமிழ் இலக்கியத்துக்கு அற்புதமான பல கதைகளை தந்துள்ளார். இஸ்லாமிய வாழ்வியலை தொடர்ச்சியாக எழுதிவருகிறார். வாசகனை மனம் கனக்கும் இடத்துக்கு அழைத்துப்போகும் அவர் வாய்விட்டு சிரிக்கும் இன்னொரு முனைக்கும் அழைத்து செல்லும் எழுத்தின் வன்மை தெரிந்தவர். “குட்டியப்பாவின் புதிய செல்” கதை எல்லோரையும் வாய்விட்டு சிரிக்கவைக்கும். வயதான பெரியவர் குட்டியப்பாவுக்கு தானும் ஒரு செல் போன் வாங்க வேண்டும் என்ற ஆசையில் வாங்கிவிடுவார். அவர் செல் எண் எல்லோருக்கும் மனனம் ஆகிவிடும். விடிய விடிய அவரை இளவட்டங்கள் போன் செய்து ஒருவழியாக்கிவிடுவார்கள். அவர் ரிங் டோனாக “கண்மணியே பேசு” வைத்திருப்பார். எங்கு சென்றாலும் கையில் செல்போன் வைத்திருப்பார். மலம் கழிக்க போகும்போதுகூட… எப்போதும் மலம் கழிக்க காட்டுப்பக்கம் ஒதுங்குவார். அப்போது போன் அடிக்கும் “சலாம் அழைக்கும்’ “வளைக்கும் சலாம், என்ன கக்கா போனீங்களா” என்று எதிர்முனையில் கேள்வி வரும். அவரைப் படாதபாடு படுத்துவார்கள். இடையில் நயன்தாரா பேசுகிறேன் என்று அழைப்பு வேறு வரும்.  இப்படி கதை முழுக்க வயிறு குலுங்க வைக்கும் அவர் “சம்மந்தக்குடி” கதையில் இன்னொரு வாதையின் முனை இருக்கும்.

“சம்மந்தக்குடி” கதையில் மூன்று பெண்களை பெற்றெடுத்த அஸ்மாவையும் அவள் கணவர் மொய்து சாஹிபு இருவரும் பெண்களை நல்ல இடத்தில் கட்டிகொடுக்க வேண்டுமென்று அரேபியாவில் வேலை செய்யும் மாப்பிளைகளுக்கு கட்டிகொடுத்துவிட்டு அதனால் அல்லல்படும் துன்பத்தை கதையாக்கி இருப்பார்.  ஒவ்வொரு மகளின் பிரசவத்தின் போதும் சம்மந்தி வீட்டுக்காரர் சீர்வரிசை என்ற பெயரில் பெண்வீட்டாரிடம் சுரண்டும் முறையை மிக நேர்த்தியான வலியுடன் சொல்லியிருப்பார். இந்த கதையில்  நாஞ்சில் பகுதி இஸ்லாமிய மக்களின் மொழியை அழகாக கையாண்டு இருப்பார். இந்த கதையை போலவே அவரின் கவர்னர் பெத்தா, மஜ்னூன் கதைகளும் குறிப்பிடத்தக்கது.

உருது இஸ்லாமியர்களின் வாழ்கையை முதன்முதலில் கவனப்படுதியவர் அர்ஷியா. அவரின் “ஏழரைப் பங்காளி வகையறா”  நாவல்  உருது பேசும் இஸ்லமியர்கள் பண்பாடு அவர்களின் உளவியல் வாழ்வியல் முறை ஆகியவற்றை புதிய உலகத்துக்குள் அழைத்து செல்வதுபோல அந்த நாவலில் பதிவு செய்திருப்பார். நாவலை வெளிக்கொண்டு வருவதற்கு முன்னதாக உருது இஸ்லாமியர்களின் வாழ்வியலை சிறுகதைகளாக அறிமுகப்படுத்தியவர். அவரின் கதைகளின் வழியாக முற்போக்கு முகாமில் இருப்பதை உணரமுடியும். பலகதைகள் சமரசமற்ற விமர்சனங்களை இஸ்லாமிய சமூகம் நோக்கி வைப்பார். அவர்  கதையின் எழுத்து நடை எங்குமே சலிப்பூட்டும் வண்ணம் எங்குமே இருக்காது. வேகமான ஓட்டத்தில் நெருக்கமான கதைகளை தமிழ் இலக்கியத்துக்கு தந்துள்ளார். அவரின் கதைகள் பெரும்பாலும் பண்பாட்டு அரசியலை பேசும். பெண் உரிமை பேசும், பிற்போக்கு அம்சங்களை பகடி செய்யும், குடும்ப உறவுக்குள் நிகழும் குரோதம் பேசும்.

“எட்டெழுத்து முஸ்தபாவின் ஹஜ் பயணம்” இந்த கதையில் முஸ்தபா ஹஜ் பயணம் மேற்கொள்வதற்கு முன்னதாக எல்லோருக்கும் விருந்து வைப்பார். பெரும் செல்வந்தனாக இருக்கும் அவர், ஊரில் பெரிய மனிதராக உலா வருவார். அவர் அழைத்ததினால் ஊரே விருந்திற்கு சென்றிருக்கும் ஆனால், அவரின் அக்கா மகள் மட்டும் அழைத்தும் வராமல் இருந்ததை அவரின் மனைவி கவனப்படுத்துவாள். அதுவரை அவர் அக்கா மகளைப் பற்றி எந்த கருணையும் இல்லாமல் இருந்த முஸ்தபாவுக்கு அது பெரிய இடியாக இருந்தது. தனது மகளுக்கு நல்ல இடத்தில் கல்யாணம் செய்து கொடுக்க கோரி இருந்த ஒருவீட்டை விற்க சொல்லி அவனின் அக்கா  கொடுத்ததை தனது வியாபாரத்துக்காக களவாடிக்கொண்டு அக்காவையும் அவள் மகளையும் முஸ்தபா கைகழுவி விடுவான். அதை நினைத்தே விசனப்பட்ட அவன் அக்காவும் இறந்துவிடுவாள். பொறுப்பு இல்லாதவனுக்கு வாக்கப்பட்ட அவள் மகளின் வாழ்வும் நொறுங்கி போய்விடும். எல்லாவற்றிற்கும் காரணம் முஸ்தபாவின் சுயநலம்.

ஹஜ் பயணம் செய்வோர் யாருக்கும் தீங்கு / துரோகம் செய்திருக்க கூடாது அதனை சரிசெய்து வரவேண்டும் அதனை சரிசெய்யாமல் வந்தால் ஹஜ் பயணமே விரயம் என்ற சூழலில் முஸ்தபா அவனின் அக்கா மகளை தேடி வருகிறார். அவர் பை முழுக்க கட்டுகட்டாக பணம். மாமா செய்த துரோகம் எதுவும் தெரியாத அவள், நடந்தது தெரிந்து கொண்ட பின்பு கூறும் பாத்திரத்தின் மனநிலையே அர்ஷியாவின் உள்ளிருக்கும் அரசியல் அது “ மாமு நீங்க இந்தளவுக்கு கடன்பட்டவர்னு தெரியாது, இந்த பணத்தை நான் கஷ்டப்படுறேன்னு கொடுத்திருந்தா, இப்பவாச்சும் மாமாவுக்கு நம்ம நெனைப்பு வந்துச்சுன்னு சந்தோசப்பட்டிருப்பேன். ஆனா, நீங்க இங்கே கடனை வச்சிட்டு தொழுகை செஞ்சா அது கை கூடுமானு கேட்டுகிட்டு சுயநலமா வந்திருக்கீங்க.” என்று சொல்லும் அர்ஷியாவின் கதாபாத்திரம் இறுதியாக இப்படி சொல்லி முடிப்பாள். “ஹஜ்ஜூக்கு போய்த்தான் புண்ணியம் தேடிக்கணுமா? அதே புண்ணியம் இங்கனயே கெடைக்காதா? இங்கே கரையேற வழி இல்லாமே எத்தனையோ குமாருக இருக்குதுக. அதுல ஒண்ணைக் கரையேத்தனாக் கூடப் போதுமே. ஹஜ்ஜுல கிடைக்கிற அதே புண்ணியம் இங்கயும் கிடைக்குமே” என்று பேசுவது மிக முக்கியமான அரசியல். அவர் முற்போக்கு முகாமை சேர்ந்தவர் என்பதற்கு இப்படி பல கதைகள் இருக்கிறது. பொதுவாகவே உருது இஸ்லமியர்கள் செல்வ செழிப்போடு இருப்பவர்கள் என்ற பார்வை உண்டு. எல்லா சமூக பிரிவிலும் வறியவர்கள் இருப்பார்கள் என்பது எதார்த்தம். முஸ்தபாவின் அக்கா மகளின் வாழ்க்கை எவ்வளவு பொருளாதார நெருக்கடி சார்ந்தது என்றும், அவளின் பொத்தல் விழுந்த வீட்டின் வறுமையையும், அதற்குள் கணவனால் கைவிடப்பட்ட அவள் தனது இரண்டு குழந்தைகளை வளர்க்க அல்லல்ப்படும் வாழ்வை தனது எழுத்தால் அர்ஷியாவை வாசகன் மனதில் அழமாக பதிப்பார்.

இன்னும் உச்சத்தில் சென்று “கபர்ஸ்தான் கதவு” என்ற தொகுப்பில் வரும் “ஒரு களியாட்டம்” கதையில் “ஏம்மா, பூமியில் நல்லது செஞ்ச ஆம்பளைகளை சுவனத்துல ஹூருளிப் பெண்கள் கூட்டிப்போய் சந்தோசப்படுத்துற மாதிரி, பூமியில் நல்லது செய்யும் பொம்பளைங்களைக் கூட்டிப்போய் சந்தோசப்படுத்த, சுவனத்துல ஹூருளான்னோ இல்லை வேற பெயருளையோ ஆம்பளைங்க யாரும் இருப்பாங்களா” என்று கேட்டாள். எல்லா இன்பங்களையும் ஆண்களுக்கே வைத்திருக்கும் மதங்கள் பெண்களுக்கும் வைக்கவேண்டுமென்ற பெண்  ஆணுக்கு இணையாய் சமம் என்ற  அரசியலை மிக நுட்பமாக வைத்திருப்பார்.  அவருடைய பல கதைகளில்  எழுப்பிய கேள்வி இப்போதுவரை பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திக்கொண்டு இருக்கிறது.

இஸ்லாமிய பெண்களின் வாழ்கையை எல்லோராலும் உண்மைக்கு நெருக்கமாக எழுதிடமுடியும். ஆனால் பெண்களின் உளவியலை மிகச்சரியாக எழுதிட முடியுமா என்றால் அதனை பெண் எழுத்தாளர்களினால் மட்டுமே மிகசரியாக எழுத முடியும். அவர்களின் எழுத்தில் தெளிந்த நீரோடைப்போல பார்க்க முடியும். தமிழ் சிறுகதைகளில் இஸ்லாமிய பெண்களின்  வாழ்வியலை, அவர்களின் உளவியலை புனைவு எழுத்தின் வழியே கொடுத்தவர் சல்மா. சல்மாவின் “இரண்டாம் ஜாமங்களின் கதை” என்ற நாவல் பரவலாக அறியப்பட்டது. அந்த நாவலில் இஸ்லாமிய பெண்மனம் குறித்து மிகநுட்பமாக அணுகி இருப்பார். அவருடைய சிறுகதைகளிலும் அந்த அம்சங்களை காணலாம். அவருடைய எல்லா கதைகளிலும் பெண்வாழ்வு குறித்து சமூக உரையாடல் இருக்கும்.

“இருள்” சிறுகதை அடிக்கடி வெளியூர் வியாபாரத்துக்கு செல்லும் கணவன்  பல நாட்கள் திரும்பி வராதபோது இரவில் தனியாக இருக்கும் அவளின் “பேய்” குறித்த அச்சமும், மனைவியை மிகுந்த கண்டிப்போடு வீட்டுக்குள் அடைத்து வைக்கும் கணவனின் கண்டிப்பும், சந்தேக புத்தியும், இதற்கு நடுவில் இரவில் கண்ணுக்கு தெரியாத “அமுக்கன்” என்ற பேயின் தொல்லையும் இரண்டையும் தனியாக பிரித்து கதையை கட்டமைத்து இருப்பார். எதற்காக பயந்து நடுங்கினாளோ கதையின் இறுதில் அதனிடத்தே விருப்பத்தோடு  கலவி செய்யும் உருவகத்தோடு கதை முடியும்.

“ஒவ்வொரு இரவையும் தன்னுடைய ஸ்பரிசத்தால், புத்தம் புதியதாக மாற்றிக்கொண்டு இருக்கும் உறவொன்றை எதிர்நோக்கிக் காத்திருப்பவள் போலக் காதலின் தீராத வேட்கையுடனும் ஆவேசத்துடனும் அவள் நேசிக்க தொடங்கிய இரவுகள் அவளுடையனவாக மாறிக்கொண்டிருந்தன. உடல் சார்ந்த பயங்களும் தயக்கங்களும் மறைந்த மேலான சுதந்திரத்தை அடைத்திருந்தாள்” இந்த வரிகள் ஒரு ஒடுக்கப்பட்ட  பெண்ணின் விடுதலையை  அறிவிக்கும்.

பாலியல் விரகம் என்பது ஆண்களுக்கானதே என்பதை கதையின் வழியே உடைப்பவர். கதையின் போக்கில் இஸ்லாமிய பெண்களின் “கட்டுப்பாடு” என்ற பெயரில் அவள்மீது நடத்தும் உளவியல் தாக்குதல்களையும் பதிவு செய்திருப்பார். அதேபோல “இழப்பு” என்ற கதையும் இந்த உளவியலை பேசும். அவருடைய கதைகளில் பெண் உணர்வை கதைக்கு ஏற்ற அம்சத்தில் மிகைப்படுத்தாமல் கட்டமைத்து இருப்பார். சல்மாவின் “குழப்பத்தின் சுற்றுப்பாதை“ பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தும் அற்புதமான கதை. தனது அம்மாவுக்கு மகள் எழுதும் கடிதத்தில் “எனக்கு பல வருடங்களாக உன்னைக் கட்டியணைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசை உண்டு. முத்தமிட்டு என் அன்பை சொல்ல வேண்டுமென்ற விருப்பம் உண்டு. அதற்கான பல தருணங்கள் இருந்தும் எனது சங்கோஜத்தினால்  செய்யவில்லை. நம் கலாச்சாரத்தில் கணவனை தவிர யாரையும் கட்டியணைத்து அன்பை வெளிப்படுத்துவதற்காக நாம் பழக்கப்படுத்தவில்லை. என்பதால் அதனை செய்யவில்லை” என்று போகும் அந்த கடிதத்தின் வழியாக இஸ்லாமிய பெண் வாழ்வையும் மனநிலையையும் கனக்கும் சிறுகதையை எழுதி இருப்பார்.

இப்போதைய இஸ்லாமிய வாழ்கையில் இருண்ட காலம் என்பது தவிர்க்கமுடியாதது. இஸ்லாமியர் என்ற காரணத்துக்காக புறக்கணிக்கப்படுவது, கொலை செய்யப்படுவதும், ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படுவதும் இப்போதைய தொடர் நிகழ்வாகிவிட்டது. அந்த துயரங்களை புனைவு இலக்கியமாக்குவதும் படைப்பாளனின் முக்கிய பணி. அதனை படைப்பு இலக்கியத்துக்குள் கொண்டு வந்ததில் பிரோதொவ்ஸ் ராஜ்குமார் முக்கியமானவர். அவரின் “ஓநாய்கள் ஊளையிடும் பாலைவனம் போல” என்ற சிறுகதை முக்கியமான தொகுப்பாகும். அதில் அடையாளம் என்ற சிறுகதையில் பல ஆண்டுகளாக ஒரு மரத்தடியில்  பொட்டி கடை நடத்திவரும் இஸ்லாமிய பெரியவரின் கடையை விநாயகர் சிலை வைக்கவேண்டுமென்று இரவோடு இரவாக இந்துத்துவ அமைப்பை சேர்ந்தவர்கள் கடையை எரித்துவிடுவார்கள். பெரும் வேதனை தரும் சிறுகதை. அதே தொகுப்பில்  இஸ்லாமிய எழுத்தாளர்  தொடர்ச்சியாக காவல் அதிகாரிகளை கேள்வி கேட்டுக்கொண்டே இருப்பார். அவர் “இஸ்லாமியர்” என்று தெரிந்தவுடன் சந்தேக வழக்கில் அழைத்து செல்லும் கதை முக்கியமானது. இஸ்லாமிய மக்களின் இன்னொரு வாழ்வை அவரது அந்த தொகுப்பில் பதிவு செய்திருப்பார் பிரோதொவ்ஸ் ராஜ்குமார்.

“தாழிடப்பட்ட கதவுகள்” சிறுகதை மூலம் தமிழ் இலக்கியத்தில் நுழைந்தவர் அ.கரீம். 1997-98ல் கோவையில் காவலர் படுகொலையும் அதனையொட்டி இருபதுக்கும் மேற்ப்பட்ட இஸ்லாமியர்கள் காவல்துறை அதிகாரிகளும், இந்துத்துவ ரவுடிகளாலும் மிக கொடூரமாக கொலை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நடந்த குண்டு வெடிப்பில் அப்பாவி மக்கள் கொலை செய்யப்பட்டதையும் கதைகளாக ஆக்கிருப்பார் அ.கரீம். அந்த தொகுப்பில் கலவரம் மட்டுமில்லாமல் கலவரத்துக்கு முன்னும் பின்னுமான இஸ்லாமியர்களின் வாழ்க்கையும், பண்பாட்டு கூறுகளில் ஏற்பட்ட மாற்றங்களும் (பர்தாக்கள் அணிவது ) போன்றவற்றை கதைகள் பேசும். அந்த தொகுப்பின் முதல் கதையின் முதல் பத்தியே ஒட்டுமொத்த கதைகளையும் சொல்லிவிடும். (மொஹல்லாவின் மய்யத்துகள்)

“வேப்ப மரத்தின் கொழுந்து இலையை பற்றிக்கொண்டு தனக்கு வளர்ந்த புது சிறகுகளை விரித்து பறக்க தயரானது பச்சை நிற தயிர் வடை பூச்சி. முதல் முறையாய் பறக்க துடிக்கும் உற்சாக மிகுதியில் தனது சிறகுகளை படபடவென அடித்து கிளம்பி பறந்து தொப்பென்று தார்ச்சாலையின் மீது விழுந்தது.  வாகன நடமாட்டமில்லா சாலையில் தனது நீண்ட தலையை வலது இடது புறமாய் திருப்பிப் திருப்பி பார்த்து முன்னாலிருக்கும் வேகத்தடை மீது ஏற ஒவ்வொரு அடியாய் முன்னெடுத்து கால்களை வீசி நடந்து வேகத்தடையின் மீது   ஏறினின்று  மீண்டும் பறக்க இறக்கைகளைப் படபடவென அடித்துக் கிளம்ப எத்தனித்தபோது “பச்“ சென்று  போலீஸ் ஜீப்பின் டயர் அதன்  தலைமீது ஏறி மிதித்துச் சென்றது.”..

மிகவும் பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்கள் மீதுதான் அரசு பயங்கரவாதம் ஆதிக்கம் செலுத்தியதை “மெளத்துகளின் காலமது” என்ற கதையில் காண முடியும்.

“வீடுகள் வரிசையாய் ஒன்றோடு ஒன்று ஒட்டி நீண்டுக்கிடந்தன. மேற்கு நோக்கிப் பத்துவீடுகள் எதிரே பத்து வீடுகளும் வடக்கு திரும்பினால் ஐந்து வீடுகளும் தெற்குப் பார்த்துப் பத்துவீடுகளும் எதிரே பத்து வீடுகளும், என திசை தெரியாமல் கசாமுசாவென்று ஐம்பத்திரெண்டு வீடுகள் இறைந்துக் கிடந்தன. எதிரெதிர்  வீடுகளுக்கு நான்கு-ஐந்தடி இடைவெளியே. வீட்டின்முன் எங்கு செல்வதென்றுத் தெரியாமல் விழிபிதுங்கி ஓடிக்கொண்டிருந்தது சாக்கடை வழித்தடம்.

ஜமாத்வீடுகள் ஒரேமாதிரியாய் பத்துக்குப் பத்து ஒரு அறை, மூணுக்கு நாலடி சமையக்கட்டு, சமையக்கட்டுக்குள்ளேயே மறப்பு இல்லாமல் இரண்டுக்கு மூணடியில் பாத்திக்கட்டி பாத்ரூம், வெண்டிலேசனுக்கு ஜன்னல் ஓர் கேடென அடைந்து கிடந்தது. எந்த ரகசியமும் வீட்டுக்குள் பேசமுடியாது. சத்தம் குறைத்துப்  பேசினாலும் பக்கத்து வீட்டுக்கு நல்லா கேட்குமளவு பலமான சுவர். அதனால் அவர்களுக்குள் எந்த ரகசியமும் இல்லாமல் இருந்தது. குடியிருப்பு  பள்ளத்திலிருப்பதால் மழைக்காலத்தில் காலனியேத் தீவாகமாறி குழந்தைக்குட்டிகளை தூக்கிக்கிட்டுத் தர்காவுக்குக் குடிமாத்துறப் பொழப்பு நாப்பது ஐம்பது வருஷமாய் நடக்கிறது.  மழைத்தண்ணி வடியும்வரைக்கும் தர்காவுக்குள்ளயே இருந்துதா பொழப்புக்குப் செல்லவேண்டும். பொழப்புனா பனியன், ஜட்டி விக்கிறது, பூ, ஊதுபத்தி விக்கிறது.  துணிக்கடையில சேல்ஸ்மேன், உமன் இதுதான் தர்கா குடும்பத்தாரின் தினசரி வாழ்க்கை.

மழைக்காலம் வந்தாலே எல்லோரின் வயிற்றுலேயும் புளியக் கரைக்க ஆரம்பித்துவிடும். காலனிக்கே சேர்த்து மொத்தமாய் ஆண்களுக்கு நான்கு  கக்கூசும், பெண்களுக்கு மூணு கக்கூசும் இருப்பதினால் மழைக்காலத்துல் டிரைனேஜூ நிறைந்து திபுதிபுவென சேர்த்துவைத்த  விட்டைகளெல்லாம் கிளம்பிவிடும். உருண்டுதெரண்டு டிச்சு தண்ணியோடு இரண்டறக் கலந்து ஐம்பத்துரெண்டு வீட்டுக்கும் படையெடுத்து, ஒவ்வொரு வீட்டுக்கதவுக்கும் முன்னால்  தவளும் குழந்தைகளைத் தடுக்க வைக்கும் தடுப்புப் பலகை போல ரெண்டடி உயரம் வரையிருக்கும் செங்கல் தடுப்புவரை நிறைந்து,   ஏறிநின்று பார்த்து, வீட்டுக்குள்ள வரட்டான்னு உருண்ட மஞ்சவிட்ட கேட்கும். அதனாலேயே மழைக்காலம் வந்தால் குழந்தைகுட்டிகளோடு தர்காவிற்க்குள் அடைக்கலம் ஆகிவிடுவார்கள். வடியும்வரை   ஐம்பத்துரெண்டு வீடும் கக்கூசு கலந்த சாக்கடைத் தீவுக்குள்  படகுபோல் மிதக்கும்.

மழைத்தண்ணியெடுக்க பெரிய பள்ளிவாசலுக்கும் ஜமாத்து தலைவருக்கும் தகவல் சொல்லிச் சொல்லி அலுத்து போய் மோட்டார் கண்டுபிடித்த காலத்தில் ஜமாத் வாங்கிய பழைய மோட்டரைப்  போட்டு டொக்….. டொக்…..டொக்கு… என்று கொஞ்ச நேரம் மோட்டார்  மக்கர்செய்து டர்ர்ர்.. என ஓடத்துவங்கி சாக்கடை  தண்ணிரெல்லாம் இழுத்து முடிவதற்குள் மூச்சுவாங்கிவிடும்.  மழை பெய்து  தண்ணியெடுத்த மூன்று  நாளைக்கு அந்தக் காலனியே சும்மா கமகம வாசனையாயிருக்கும். வயத்துக்குடலை வெளியே தள்ளுமளவுயிருக்கும்  நாத்தம் தீர என்ன மருந்து தெளித்தாலும் ஒருவாரம் அசையாமல் நாத்தம் அங்கேயே இருக்கும். அப்படியான காலனிக்குள்  தெற்குபார்த்த மூலையில் இருக்கிறது ஜமிலா வீடு.  “.

தமிழ்நாட்டில் வாழும் இஸ்லாமியர்களின் இப்படியொரு வாழ்வை சிறுகதையில் கொண்டுவந்தது மூலம் இஸ்லாமியர்களின் விளிம்புநிலை வாழ்வை தமிழ் இலக்கியம் இன்னும் ஆழமாக புரிந்திருக்கும் என்று நம்புகிறேன். “மொத கேள்வி” கதை ஜாமத்தில் பெண்களுக்கும் வாக்குரிமை வேண்டும் என்ற கேள்வியை தமிழ் சிறுகதையில் முதல் முதலாக எழுப்பியதாக இருக்கக்கூடும். இப்படியாக…..,

இஸ்லாமிய மக்களின் வாழ்வை வெறும் இஸ்லாமியர்கள் மட்டுமே எழுதவில்லை இஸ்லாமியர் அல்லாதவர்களும் எழுதி உள்ளனர். அதனை  கஃபீர்களின் கதைகள் என்று    கீரனூர் ஜாகிர்ராஜா தொகுத்து உள்ளார்.  இஸ்லாம் மக்களின் வாழ்வியலை எழுதியவர் பட்டியலில் ஆபிதீன், ரோசாகுமார், ஷாஜஹான், மும்தாஜ் யாசின் என பலரும் பங்களிப்பை செய்துள்ளனர். தற்போது நசீமா, அன்வர்ஷாஜி போன்ற இளம் எழுத்தாளர்கள் எழுதிக்கொண்டு இருக்கிறார்கள். இன்னும் பல இஸ்லாமிய எழுத்தாளர்களின் கதைகளை எழுத வேண்டி உள்ளது… துவக்கத்தில் குறிப்பிட்டதைப்போல நீண்ட பட்டியலின் சிறுகுறிப்பே இந்த கட்டுரை…


அ.கரீம்  

5 COMMENTS

  1. நல்ல கட்டுரை ,

    இஸ்லாமியர்களின் ஒரு சிறு எழுத்தாளர்களை மட்டும் அறிந்த எனக்கு நிறைய எழுத்தாளர்களை அருமையை படுத்தியமைக்கு கட்டுரையை எழுதிய அ. கரீம் தோழர் அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றியும் பாராட்டும்….!!

  2. இன்னும் மிகப் பெரிய இசுலாமியப் படைப்பாளிகள் திருச்சிரசூல் தொடங்கி பிற இசுலாமியபடைப்பாளிகள் உள்ளனர் மேலும் இசுலாமிய அல்லாத இசுலாமிய படைப்புகள் கிரனூர் தொகுத்துள்ளார்

  3. நானும் 50 க்கு மேற்பட்ட சிறுகதைகளை எழுதியுள்ளேன்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.