இராவணத் தீவு – பயணத் தொடர் 1

 

ஆதாம் மலை

ஒரு சிறு பூவை

 நீ அசைத்தால்

 ஒரு நட்சத்திரம் 

 அணைந்து போகலாம்

  என்றான் பிரான்சிஸ் தொம்ஸன். ஒரு நாளில் ஆயிரக் கணக்கில் சிவனொளிபாதமலையை நோக்கி வருகின்ற பட்டாம்பூச்சிகளின் சிறு அசைவு, அந்த இரவு முழுவதும் பரவி இருந்த நட்சத்திரங்களை வீழ்த்திவிடுமோ என்றிருந்தது.

மலையை நோக்கி நடப்பது ஆதித்தாயின் குடிலை நோக்கிய பயணம் போல மனதிற்கு அருகில் மிக நெருக்கமாக இருக்கிறது எப்போதும். நீண்ட பயணங்களை இரவிலும், அதிகாலையிலும் கடந்து முடிப்பதையே நான் விரும்புகிறேன். இந்தப் பயணம் கூட அப்படித்தான். இரவு முழுவதும் நீண்டுக்கொண்டே போய்க்கொண்டிருந்த இரவுப்பயணம் அது.

பட்டாம்பூச்சிகள் போல வாழத்தொடங்கிவிட்டால் அல்லது வாழ்வை பார்க்கத்தொடங்கிவிட்டால் இந்த வாழ்வு எப்படியெல்லாம் நேசிக்கத்தக்கதாக மாறிவிடும் என்று நினைத்துப்பார்க்கிறேன். வாழ்வின் மீதான பார்வை பெரும் சுமையாக மாறிவிடுகிற நொடிகளில் எல்லாம், பறவைகளையும், பட்டாம்பூச்சிகளையும் பார்ப்பேன். இரவீந்ரநாத் தாகூர்  சொல்வதைப்போல 

The butterfly  counts not 

Months but moments and

Has time enough

நாங்கள் ஏன் எங்களுடைய மகிழ்ச்சிகளை எண்ணத்தொடங்குவது இல்லை…?  நான் எண்ணத்தொடங்கிவிட்டேன். இனி நீங்களும் கூட எண்ணவேண்டும் என்று விரும்புகின்றேன். என் வாழ்வில் இயற்கைக்கு அருகில் மிக மிக மகிழ்ச்சியாக இருந்த ஆதாம் மலையைப்பற்றி சொல்லப்போகின்றேன்

நீண்டுகொண்டே போகின்ற மலைத்தொடர் ஒன்றினை நான் முதன் முதல் பார்க்கின்றேன்  மனதும், உடலும் பின்னோக்கித்தள்ள நண்பர்களின் கைகளைக் கோர்த்தப்படி அந்த மலையேற்றம் இருந்தது. நிர்மலமான இரவு வானில் பலகோடி நட்சத்திரங்கள் மின்னுகின்ற விசாலமான அந்த நட்சத்திர அடவியின் கீழ்  வரிசையாக அந்த நட்சத்திரங்கள் சிதறி விழுந்து  பாதையமைத்ததை போன்று நீண்டு செல்லும்  உச்சிமலையினை நோக்கி பல்லாயிரக் கணக்கான மக்களுடன் நாங்களும் பின்தொடர்ந்துகொண்டிருந்தோம். கூட்டம் கூட்டமாக ஒருவரை ஒருவர் உற்சாகப்படுத்தியப்படி போய்க்கொண்டிருந்தார்கள். ஆனால் பிரச்சனை என்னவென்றால் அம்மலை முன்னோக்கி நகர நகர ஒரு படி வளர்ந்துகொண்டு போவது போல எனக்கு தோன்றியது

இலங்கையில் சப்பிரகமுவா, மத்திய மாகாணங்களுக்கு இடையில் கடல் மட்டத்தில் இருந்து 7,359 அடி உயரமான கூம்பு வடிவிலான மலையே சிவனொளிபாதமலை என்று அழைக்கப்படுகிற ஆதாம் மலையாகும். இயற்கையை கடந்து அங்கு மதம் முன்னிலைப்படுத்த காரணமாக இருப்பது அந்த சர்ச்சைக்குரிய 1.8 அளவான பாறை அமைப்பே. அது இலங்கையில் உள்ள நான்கு மதத்தவர்களாலும் அவரவர்க்கு உரிமையுடையது என கொண்டாட காரணமாகியது

இதையெல்லாம் பார்க்கும் போது இயற்கை என்கின்ற பெரிய பிரமாண்டத்தின் முன் கூட சிறுமைகளை செய்வதை மனிதன் நிறுத்துவதேயில்லை என தோன்றியது.

இயற்கையின் பிரமாண்டத்தை அப்படியே உள்வாங்க முடியாத குறைபாடு ஒன்று அவனிடம் இருக்கின்றது. ஒப்புமையற்ற அந்த இயற்கையின் முன் சிறுமையான ஏதோவொன்றை மனமுவந்து செய்கின்றான் என்பது தான் எனக்கு விசித்திரமாக இருந்தது. இயற்கையை இயற்கையாக கொண்டாடி தீர்க்க முடியாத ஏதோவொரு மனக்குறை அவனுக்குள் இருந்துக்கொண்டேயிருக்கிறது. அதனால் தான் உலக மனிதருக்கு எல்லாம் பொதுவான இயற்கைக்கு முன் ஏதோ சில கட்டிடங்களை கட்டி நிரூபிக்க முயற்சிக்கின்றான். எந்தவொரு இயற்கையின் இரம்மியத்திற்குள்ளும் இலங்கை முழுவதும் வலுக்கட்டாயமாக வந்தமர்ந்துகொள்கின்ற விகாரைகள், புத்தரின் பிரதிமைகள், அரசமரம், பாத அச்சுகள் ஏதோ செயற்கையின் அபத்த குறியீடாக எனக்கு தோன்றுகின்றதுமலை ஏற ஏற சிறிது சிறிதாக அதன் கீழேயுள்ள இந்திரக்கடவுளின் காடு எனப்படுகிற சமன் அடவிய இருள் சூழத்தொடங்கியது. மலையை நோக்கி உயரே செல்ல செல்ல குளிர் உடல் முழுவதும் பரவ ஆரம்பித்துவிட்டது.

உடலை நடுங்கச்செய்கின்ற குளிர் அது. நீங்கள் முற்று முழுவதும் சமயவாதியென்றால் இங்கு உங்களுக்கு செய்ய நிறைய ஐதீகங்கள் இருக்கின்றனகோயில்விகாரைஊசி மலை , அருவிகாணிக்கை என சில மதம் சார்ந்த நம்பிக்கைகள் இருக்கின்றன. இல்லை நீங்கள் வாழ்வின் நொடியை கொண்டாடுகிற, இயற்கையை கொண்டாடுகிற மனிதர் எனில் இந்த ஆதாம் மலை உங்களை வசியப்படுத்திவிடும். ஆதாம் மலையில் இருந்து ஊற்றெடுக்கின்ற மகாவலி கங்கை, களுகங்கை , களனி கங்கை, பச்சை பசேலென சிறியதும், பெரியதுமாக இருக்கின்ற மலைக்குன்றுகள், இயற்கையான காடுகள் என அது இயற்கையின் சாம்பிராஜ்யம் போல இருந்தது.

உயரமான மலையுச்சியை நோக்கி போகின்ற ஒவ்வொரு தடவையும் வாழ்வை முன்பை விட நேசிக்க தொடங்குகிறேன். மலையுச்சிகளின் காட்சிகள் வசீகரிக்கக்கூடியவை . அங்கு இயற்கையின் வர்ணகோலங்களை பார்க்க முடியும். பச்சை நிறத்தில் மட்டும் எத்தனை விதமான பச்சை நிறங்கள் …? வெண்மையான முகில்களில் மட்டும் எத்தனை அழகான உருவ கோலங்கள்பனிமூட்டம் நிரம்பிய மலைத்தொடர்கள்சூரியன் உதித்துவிட்ட பிறகு பரவுகின்ற பொன்னிறம், இந்த நிறங்களில் ஒன்றை  அதே சாயலில் மனிதனால் உருவாக்க முடியுமா என்றிருந்தது. அத்தோடு  அந்த மலைதேசம் முழுவதும் பறந்து திரிகின்ற காட்டுப்பறவைகள், நீண்ட நாளைக்கு பிறகு கூட்டம் கூட்டமாக பார்த்த மின்மினிப்பூச்சிகள், பட்டாம்பூச்சிகள், ஏதோ சொல்லமுடியாத அமைதிக்கு இட்டுச்சென்றன. நடப்பதைப்போல பறப்பதுவும் இந்த உடலை சோர்வடையச்செய்யாதா…? என்றிருந்தது

மண்ணில் வெறும் சொற்ப நாட்கள் மட்டும் வாழ்கிற பட்டாம்பூச்சியின் வசீகரமான வாழ்வை பார்க்கிறேன். தான் வாழ்கிற குறுகிய காலத்தில் வழிநெடுக அழகிய மலர்களை தேடிப்போகின்றது. தேனை தேடித்தேடி ஆசை தீர பருகுகிறது. காற்றின் அசைவில் வானுக்கும் பூமிக்கும் அழகிய படபடப்புடன் பறந்துகொண்டே இருக்கின்றன. வாழ்வின் இரகசியத்தையும் வாழ்வதற்கான இரகசியத்தையும் எவ்வளவு எளிமையாக காட்டுகின்ற வாழ்க்கை அவற்றுக்கு.

இதற்காக மட்டும்தான் இந்த மலையினை கொண்டாடி தீர்க்கின்றேன் என தோன்றக்கூடும். அது அப்படியில்லை. எனக்கு இந்த மலையில்  கிடைத்த அனுபவத்தை என் பயணங்கள் எதிலும் நான் உணர்ந்ததில்லை. இயற்கையோடு இயற்கையாக மிக மிக அருகில் நான் என்னை உணர்ந்த தருணம் அது.

இந்த உயரமான மழையுச்சி ஆதித்தாயின் தனித்த முலையின் நுனிக்காம்பு போல எனக்கு தோன்றியது. இனியெழுதப்போகிற பயணக்குறிப்புகளில் மேலும் கூட இதனைப்பற்றி நான் எழுதக்கூடும். மறைகிற சூரியனை கங்கையிலும், ஹவுராவிலும் கண்கொட்டாது பார்த்துக்கொண்டே இருந்திருக்கின்றேன். எல்லோராவில் கைலாசநாதர் கோவில் கோபுரத்தின் மேலே அந்த பாறையுச்சியில் அமர்ந்தபடி பார்த்துக்கொண்டு இருந்திருக்கின்றேன்ஒரிசாவில் சூரியக்கோவிலில் இருந்தபடி வங்க கடலோரம் சூரியன் மறைவதை பார்த்திருக்கின்றேன்மறைகிற அந்த கதிர்கள் உடல் முழுவதும் பரவுகிற பொழுதுகளில் வசப்படுத்தக்கூடிய ஏதோவொன்று எனக்குள் நிகழ்ந்தது. இத்தனை அழகிய அஸ்த்தமனங்களை நான் பார்த்திருந்தேன். ஆனால் ஆதாம் மலையில் பார்த்த அந்த பிரமாண்ட சூரிய உதயத்தின் பின்னர் எந்தவொரு சூரியஉதயத்தையும் பார்க்க முயற்சித்ததில்லை. அப்படியொரு பரிபூரண தரிசனம் அது. அதைப்பற்றி சற்றுகூட விபரிக்க நினைக்கின்றேன். வாழ்வின் உன்னத தருணங்களை எல்லாம் மொழிபெயர்க்க முடியாத குறை எனக்குள் இருக்கிறது.

முதன் முதலில் பிரம்மாண்ட சூரியனின் முன் நின்றபோது மனிதர்கள் பிரமாண்டமான வானக்கூரையின் கீழ் கொஞ்சம் கூட பொருத்தமில்லாது கட்டிக்கொள்கின்ற வீட்டுக்கூரைகள் எவ்வளவு பெரிய அபத்தத்தின் குறியீடு என என் மனம் சிந்தித்து கொண்டிருந்தது. யாருக்காகவும் எந்தவித மாறுதலுமற்று இந்த பூமியின் வசீகரத்தை கூட்டுகிற இந்த நட்சத்திரங்கள், சூரியன், நிலவு, வானவில் என்பவற்றை உண்மையில் நாம் இரசிக்கின்றோமா என்று இருந்தது

உலகில் முதன் முறை இயற்கைக்கு மிக அருகில் இருந்தேன். என்னுலகில் இருந்தவர்கள் எல்லோரும் பொன்னிறமான அழகினை கொண்டிருந்தார்கள். திடீரென அந்த மாயம் நிகழ்ந்தது. நிர்மலமான அந்த பரந்த ஆகாயத்தில் திடீரென ஒரு பொன்னிற புள்ளி, பின்னர் சிறிது சிறிதாக அது மாபெரும் பெரிய பொன்னிறமான துவாரமாக மாறி, அந்த பொன்னிறமான உலகுக்கு அழைத்து செல்வது போன்று எனக்கு தோன்றியது. ஏற்கனவே குறிப்பிட்டுருக்கின்றேன், இதுவரை என் வாழ்வில் உன்னதமான சூரிய அஸ்த்தமனங்களை பார்த்துக்கொண்டே இருக்கிறேன். ஆனால் சூரிய உதயம் என்றால் இன்று வரை இந்த ஆதாம் மலையில் இருந்து பார்த்த சூரிய உதயம்தான்.

எவ்வளவு வருந்தி உங்கள் பாதங்களை அந்த ஆதித்தாயின் நிலத்தில் பதித்து சென்றீர்களோ அந்தத் துயர் கணப்பொழுதில் காணாமல் போயிருக்கும். அங்கிருந்து பார்க்கும் போது எனக்கு புரிந்ததுமனிதர்கள் ஏன் ஆதியில் இந்த சூரியனை கடவுளாக கொண்டாடித் தீர்த்தார்கள் என்று. அந்த ஒளிக்கதிர்கள் தீண்டுகின்ற இடம் எல்லாம் தேஜஸ்மயமாக மாறிவிட்டது. சூரியன் ஒளி பட்டு வருகிற அழகுக்கு பெயர் தேஜஸ் என்று சொல்வது தான் சரியாக இருக்கும் என்று நினைக்கின்றேன்.

அந்த மாபெரும் சூரியனை நோக்கி அந்த கதிர்கள் என்னை உள்நோக்கி அழைத்து சென்ற போது, எப்போதோ என் மனதில் ஆழமாக வேரூன்றிப்போயிருந்த உபநிஷத மந்திரம் ஒன்று என் ஆழ்மனதில் இருந்து என்னையறியாமலே நினைவுக்கு வந்தது. இயற்கைக்கு மிக மிக அருகில் இருக்கிறேன். அதன் உன்னதங்களை உணரும் தருணம் தோறும் மனம் உருகி கரைந்தொழுக சிறு பிரார்த்தனையை தவிர பதிலீடாக என்ன கொடுத்துவிட முடியும் என்று தோன்றியது.

அந்த ப்ருஹதாரண்ய உபநிஷத மந்திரம் இப்படி ஆரம்பிக்கும்.

அஸதோ மா ஸத்கமய
தமஸோ மா ஜ்யோதிர் கமய
ம்ருத்யோர் மா அமிர்தம் கமய
ஓம் சாந்தி : சாந்தி ; சாந்தி

-ஓ பகவானே எங்களை அசத்தியத்தில் இருந்து சத்தியத்திற்கும்
இருளில் இருந்து ஒளிக்கும்
இறப்பில் இருந்து அழிவற்ற நிலைக்கும் அழைத்து செல்வாயாக…….  

 

ஆம் அந்த சூரியனிடம் நான் மனமுருகி கேட்டது இதை தான்…..

தொடரும்..


-நர்மி

[vc_gmaps link=”#E-8_JTNDaWZyYW1lJTIwc3JjJTNEJTIyaHR0cHMlM0ElMkYlMkZ3d3cuZ29vZ2xlLmNvbSUyRm1hcHMlMkZlbWJlZCUzRnBiJTNEJTIxMW0xOCUyMTFtMTIlMjExbTMlMjExZDMxNjkzLjM3OTMyNjM0NzI3JTIxMmQ4MC40ODE4Nzg1NjgzMzg1OSUyMTNkNi44MDk2NDI1MzUwMDM1ODclMjEybTMlMjExZjAlMjEyZjAlMjEzZjAlMjEzbTIlMjExaTEwMjQlMjEyaTc2OCUyMTRmMTMuMSUyMTNtMyUyMTFtMiUyMTFzMHgzYWUzOTc3NTg5MjM0YjU5JTI1M0EweDg3MjNhZDQ3MWQ1YjM3ZGMlMjEyc1NyaSUyNTIwUGFkYSUyNTIwJTI1MkYlMjUyMEFkYW0lMjYlMjMzOSUzQnMlMjUyMFBlYWslMjE1ZTAlMjEzbTIlMjExc2VuJTIxMnNpbiUyMTR2MTU4MjU1NjkzMTUxMSUyMTVtMiUyMTFzZW4lMjEyc2luJTIyJTIwd2lkdGglM0QlMjI2MDAlMjIlMjBoZWlnaHQlM0QlMjI0NTAlMjIlMjBmcmFtZWJvcmRlciUzRCUyMjAlMjIlMjBzdHlsZSUzRCUyMmJvcmRlciUzQTAlM0IlMjIlMjBhbGxvd2Z1bGxzY3JlZW4lM0QlMjIlMjIlM0UlM0MlMkZpZnJhbWUlM0U=” title=”ஆதாம் மலை இருப்பிடம்”]
[/vc_row]

Previous articleநூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2
Next articleதமிழ்ச் சிறுகதைகளில் இஸ்லாமிய மக்களின் வாழ்வியல்.
Subscribe
Notify of
guest
8 Comments
Most Voted
Newest Oldest
Inline Feedbacks
View all comments
கீதா மதிவாணன்

பயண அனுபவமல்ல, பரவச அனுபவம். எழுத்தால் எம்மையும் அழைத்துச்சென்று ஆதம் மலையுச்சியில் உலகின் ஆதிக்கடவுளை தரிசனம் செய்யவைத்துவிட்டீர்கள். பாராட்டுகள்.

Raja Narmi
Raja Narmi
3 years ago

நன்றி கீதா , உண்மையில் பார்க்கவேண்டிய இடம்,வாய்ப்பு அமையும்போது வாருங்கள்💚

சுகன்யா ஞானசூரி

ஆஹா அற்புதமான தரிசனத்தை எமக்கு அளித்துள்ளீர்கள். அழகிய எழுத்து நடையில் வழுக்கிச் செல்லும் பரவசமான பயணம். வாழ்த்துக்கள் 💐 அடுத்த பகுதிக்காக காத்திருக்கிறேன்.

Raja Narmi
Raja Narmi
3 years ago

நன்றி சுகன்யா தொடர்ந்து பயணிப்போம்🎵

மாராணி
மாராணி
3 years ago

இதம்

Jegan Prabhu
3 years ago

ஆதாம் மலை நன்றாக இருக்கிறது ஒரு நிமிடம் நான் பட்டாம்பூச்சியை நினைத்து பார்த்தேன் இவ்வளவு விஷயமா நிச்சயமாக உங்களுடைய கற்பனை மற்றும் எழுத்து நன்றாக இருக்கிறது வாழ்த்துக்கள் 💐💐💐
வாய்ப்பு கிடைக்கும்போது வந்து தரிசிக்கிறேன்

சிதவி.பாலசுப்ரமணி
சிதவி.பாலசுப்ரமணி
3 years ago

இயற்கை அழகியலை வர்ணித்தலோடு அமைந்த உரைநடை உன்னதம்.கவிதையின் வாசத்தை தனக்குள்ளே பூசிவைத்த
உங்கள் கட்டுரையின் கட்டுமானம் சிறப்பு.பட்டாம்பூச்சியின் மீதான ரசனை பார்வைகளும் மலை உச்சி மீதான உவமை வார்த்தைகளும் பறவைகளையும் பூச்சிகளையும் உற்றுநோக்கும் உன்னத பார்வை
மலைமுழுக்க மளைக்க வைக்கும் காட்சிகளின் பட்டியல் தந்து
பயணத்தின் முழுமையென்பது வெறும் பார்ப்பதில் மட்டுமில்லை
ரசித்து பார்ப்பதில்தான் என்றுணர்த்தி இயற்கை வழிபட்ட உங்கள் ரசனையை வணங்குகிறேன்.நர்மி அவர்களுக்கு நன்றி….!

Raja narmi
Raja narmi
3 years ago

💚