நூறு சுவர்கள் ஆயிரம் ஓவியங்கள் -2

2.கொடுமுடியுச்சி.

ஆணின் தனிமையும் பெண்ணின் தனிமையும் வெவ்வேறானவை. பெண்ணின் தனிமை உடைமை போல, பொக்கிசம் போல சொந்தம் கொண்டாடப்படுகின்ற, காவலுக்குட்பட்ட தனிமை. ஆனால் ஆணின் தனிமை என்பது நிர்கதி. இன்னும் சொல்லப் போனால் பெண் ஒருபோதும் தனிமையானவள் அல்ல. தாய்மையின் கணங்களை நிலைத்துக் கடந்துவிட்ட பின் அவள் முழுமையாகத் தனிமையற்றவளாகிவிடுகிறாள். உயிருக்குள் உயிர் வளர்க்கும் மரபியல் அவளுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஈன்று புறந்தள்ளிய பின்னும் அவளால் தனித்திருத்தல் என்பதே தீண்டப்படாது. அவளைச் சுற்றி எப்போதும் காவலாயுதங்களும், அணிகலன் வடிவிலான பொருளாதாரச் சுமையும், உறவுப்பின்னல்களும், நிலமும் என ஏதோவொன்று பிணைந்தே உள்ளது. 

ஆணின் தனிமையோ தவிர்க்கவே இயலாத பூதம். அது மட்டுமே அவனுக்குத் துணை நிற்கிறது.மரபியலில் ஆண்களுக்கு தனிமை அருளப்பட்டிருக்கிறது. அவன் இரத்தத்தைச் சோதனை செய்து பார்த்தால் கிடைக்கும் டெஸ்டோஸ்டீரான் அதற்குச் சான்று கூறும்.  அவன் செய்கின்ற குரூரங்களும், வெறுப்பும், பழியுணர்வும் அவன் கட்டமைத்திருக்கும் போர் போன்ற பேரமைப்புகளும் பலதாரமணம் போன்ற பராக்கிரமங்களும் அவன் தான் தனியனல்ல என்று கூவித் தோற்கும் ஏற்பாடுகளே. அவன் தொப்பூள் கொடி துண்டிக்கப்பட்ட கணத்திலிருந்தே தனது தனிமையை உணர்ந்துவிடுகிறான். மிச்சமெல்லாம் அதை ஆடைகளாலும் என்புதோல் உடம்பாலும் மறைக்க முனைவதே. 

இருந்தபோதும் ஆண்களுள் சிலருக்கு அவ்வுண்மை சுருக்கென்று உள்ளிருந்து அரிக்கும் சட்டை போல படுத்துகிறது. அதைக் கண்டு தெளிந்த தருணத்திற்குப் பின் அவனால் நிஜத்திலேயே ஸ்தூலமாகவே எவரோடும் கூடிக் குலவ முடிவதில்லை. அவன் தோற்றத்திலுமே அகம் புறம் ஒன்றிய தனியனாகி விடுகிறான். அதில் அவனது தூரம் அவனைச் சலிப்பிற்குள்ளோ, மனப்பிளவிற்குள்ளோ, சமூகவிரோத தூண்டல்களுக்குள்ளோ அழைக்கிறது. அதிலிருந்த தப்ப உழைப்பிலோ, காமத்திலோ வைராக்கியத்துடன் ஊறித் திளைக்கிறான்.

இன்றைய நவீன உலகம் இயல்பாகவே தன் தொலைத் தொடர்பு புரட்சியின் உச்சத்தில் எல்லோரையும் இணைக்கும் அதே வேளையில் அருகிலிருப்பவரிடமிருந்தே தனியர்களாக்கி விட்டிருக்கிறது. அதன் பாடு அமேரிக்க சினிமாவில் ஆங்காங்கே சிறப்புற பதிவாகி இருக்கிறது. இக்கட்டுரையில் அதிலிருந்து ஐந்து திரைப்படங்களை முன்வைக்கிறேன். இதில் தனிமையின் காரணமாக மனம் சிதைந்து உளப்பிளவடைந்த கதாபாத்திரங்களைக் கவனத்துடனேயே தவிர்த்திருக்கிறேன். காரணம், இயல் மனமுடைய ஆல்ஃபா ஆண்கள் எத்தனைத் தனித்தவர்கள் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டுமென்பதே. 

1.You Were Never Really Here (2017) / Lynne Ramsay / Joaquin Pheonix

மென்பிஞ்சு உடல்களின் மீதும் தத்தம் வேட்கையைப் பன்மடங்காகப் பிரயோகிப்பவர்கள் மீது, யேசுநாதரும் கூட வன்முறையையே தேர்ந்தெடுத்திருப்பாரோ என்ற எண்ணம் உருவாவதைச் சந்தேக தயக்கம் கொள்ளத் தேவையில்லை. ஆனால், அவ்வன்முறையின் அளபெடை, குருதி அள்ளிப் பூசி ஒடுங்கித் தணிந்த பின் தன்னைத் தானே சிலுவையில் அறைந்து கொள்ளத் தூண்டுகிறது என்பதன் வெறுமை அபத்த விளைவு! மேலதிகமாய், ஒவ்வொரு கண இருத்தலையும் பெரும் பாரமாக்கி விடுகிறது அது. அதைக் கடக்க மீண்டும் வன்முறையின் சுழலிலேயே தவித்து உழல வேண்டியதாகிறது.

வன்முறைக்கெதிராக அகிம்சை பழகுபவன், மென்மேலும் வீரம் கொள்வதும், வன்முறைக்கு முன் வன்முறையை பதிலாக வைப்பவன் உள்ளூர தன்னை வெகுவாய் வலுவிழந்தவனாய் உணர்வதும் ஒரு முரண். அது வெளிப்படுத்தப்பட்டிருப்பதில் ஒரு மேதமை தெளிவாக இருக்கிறது. நாயகன் ஜோ அத்தகைய விஷச் சுழற்சியில் பல ஆழங்களுக்குச் சென்று தனித்தவன். அவனது கதை தன்னை தீர்த்துக் கொண்ட ஒருவன் மீதி வாழ்வை வாழ நோக்கத்தைத் தேடியலைவது. ஒரு பறவையின் இறுதிச் சிறகடிப்பும் நித்தியமாய் கத்தியில் நிற்கும் வித்தைக் காரனின் சோர்வும் ஒருசேர புனையப்பட்டவன் அவன். 

திரைக்கதை நிச்சயம் பாய்ச்சல்தான். மரணத் தருவாயில் கோர்த்துக் கொள்ளும் கைகளும், நீரடியில் உருவாகும் சித்திரங்களும், மின்னலென வெட்டும் கொடுங்கனவுகளும் தெளிவாக நிதானமாக திரைக்குள் வந்திருக்கிறது. இசையின் வழியே, மனதின் அந்தரங்க வலிகளை அதீதப்படுத்தும் ஆற்றலை ஜானி கிரீன்வுட்டிடமிருந்து இங்கும், பெரும் பலத்துடன்.

கிரிஸ்டியன் பேலிற்கும், டேனியல் டே லெவிஸிற்கும் இடையில் ஒரு ஒற்றையடிப்பாதையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஒருவராக ஜொக்வின் ஃபீனிக்ஸை அவ்வப்போது நான் கற்பனை செய்வதுண்டு. இந்த சிந்தனை அகவயமானதாகவும் இருந்திருக்கலாம். ஆனால், இங்கு அவர் செய்யும் நடிப்பு அப்படியொன்றை மீண்டும் என்னுள் ஊர்ஜிதம் செய்கிறது.

திரில்லருக்கான சூத்திரப்படுத்தப்பட்ட கதையம்சங்களின் பலத்துடன் அதிக திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கையிலும், இது இரண்டு முக்கிய காரணங்களால் தனித்து நிற்கிறது. 

  • ஒன்று, வன்மக் காட்சிகள் அனைத்தையும் குறைத்துவிட்டு, வன்மத்திற்குப் பிறகான இரத்த பெருக்கையும், விளைவுகளையும் விழிமுன் உருவாக்கும் கட்டமைப்பின் சித்திரத்தை முன்னிறுத்துவதன் மூலம்; 
  • இரண்டு, நாம் இதற்கு முன்னர் பார்த்திருந்த, நாயகனின் வலிகளைப் பிரதிபலிக்கும் கதைகளிலிருந்து வெகு நுட்பமாக உருவாக்கப்பட்ட இடையீட்டு ஃப்ளாஷ்பேக் காட்சித் துணுக்குகள் வழியாக.

தொண்டையின் அடியில் செங்குத்தாக துப்பாக்கியை வைத்து இயக்கி, தன் மண்டை பிளந்து குருதி வழியக் கிடக்கும் கொலைபாதகனை, ஒரு ஏஞ்சல் அன்றி வேறு யாரால் தொட்டு உயிர்த்தெழ வைக்க முடியும் !

2.Drive (2011) – Nicolas Winding Refn / Ryan gosling 

சுற்றத்தில் இருப்பவர்களின் கொண்டாட்டங்கள், இன் தருணங்கள் மட்டுமின்றி அவர்களது அவதூறுகளும் சச்சரவுகளும் ஆற்றாமைகளும் கூட தொட்டுவிட முடியாத தனிமைக்குள் புதைந்திருக்கிறான் காரோட்டி நாயகன். இருளைத் துலக்கும் விழியும் இருளைக் கிழிக்கும் வாகனமும் அவனிடம் இருக்கின்றன. அவன் தேர்ந்தெடுக்கும் இரவுப் பணிகளில் ஒரு பூரணம் இருக்கிறது. அதில் ஒரு அளவுகோலின் துல்லியம் இருக்கிறது. 

அவனுக்கு ஒன்றுக்கு இரண்டாய் தாயும் மகனும் என ஒரு அன்பின் தொற்று ஏற்படுகிறது. மின்னல் போல சன்னலை உடைத்து உள்ளே வந்து விழுந்த கல் போல அது அவனது அமைதியை முத்தமிடுகிறது. அண்டை குடியிருப்பில் இருக்கும் அவனது நட்பின் மீது ஒரு பெரும் கயவர் பார்வை விழுகிறது. தன்னுள்ளேயே தனிமையின் ஆயிரம் அம்புகளை தினமும் அடித்துப் பழகியவனுக்கு இந்த மரண அச்சம் எடுபடுமா என்ன. உயிர்த்துணிந்து தாயையும் சேயையும் காக்கிறான்.

இன்னும் சொல்லப் போனால் நாயகனுக்குப் பெயரே இல்லை. அவனுக்கு பெயர் எதற்கு? இருளுக்குப் பெயர் எதற்கு? அது அறிகையில் ஏற்படுவதை விட உணர்கையில்தான் அதிகம் நெருங்குகிறது. 

தனித்திருக்கும் ஆணின் கதைகளைச் சொல்வதில் ஒர் செவ்வியல் படைப்பாக Jean Pierre Melville இயக்கிய Le Samuroi (1967) -ஐச் சொல்லலாம். அதில் நாயகனாக வரும் அலெய்ன் டிலான் ஒரு கண்ணியமான அடியாள் என்று நிலைபெற்ற பாத்திரத்தில் பொருந்தி இருப்பார். அதைப் பின்பற்றி நூற்றுக் கணக்கில் திரைப்படங்கள் வந்திருந்தாலும் ட்ரைவ் சமீபத்தில் அதை ஒட்டி வந்த ஒரு முக்கியமான ஆக்கமாக குறிப்பிடத்தகுந்தது. 

தொழில் நுட்பங்கள் அறுதிப் பாய்ச்சலில் நகர்ந்திருக்கிறது. இரவின் வெவ்வெறு நிறங்களையும் நிழல்களுக்குள்ளே விரியும் கோணங்களையும் காமிரா ஒருபுறம் படைத்துக் காட்டிக் கொண்டே இருக்க, ஒலிக்கோர்வையில் இருளின் செவிகள் சடுதியில் திறந்து கொள்ளும் பேராற்றல் வெளிப்பட்டிருக்கிறது. 

ஒரு நல்ல திரைப்படத்தில் எங்கோ ஒரு இதயம் இருக்கும். நாயகனுக்குப் பெயரே இல்லாததைப் போலவே இத்திரைப்படத்தில் அத்தகைய கையடக்க இதயம் இல்லை. ஆனால் ஒவ்வொரு சட்டகத்திலும் நாடியாகத் துடிக்கும் ஒரு இசையலை இருக்கிறது. அது விடாமல் துடிக்கும் வன்மங்களின் பீதியை அதே ஆற்றலுடன் கூடிய ஒரு மீட்பனின் மூச்சொலியைக் கொண்டு சமன் செய்கிறது.

3.Nightcrawler (2014) – Dan Gilroy / Jake Gyllenhaal

தனிமையின் நிழலுக்குள் இருக்கும் முற்றிலும் வேறுவிதமான பரிமாணத்தைச் சொல்லும் திரைக்கதை. திரைக்கதை என்பது சல்லிவேர்கள் போல கிளை பரப்பி விரியும் தன்மை உடைத்தது. இதில் அது நிகழ்ந்திருக்கிறது.  

தவறுவது எப்படி மனித இயல்போ தவறுகளின் மூலம் கல்வி கொள்வதும் அவனுடைய மிகப்பெரிய பலங்களுள் ஒன்று. தனது ஏழ்மை அதிலிருந்து இணையாக உருவான தனிமை இரண்டையும் லூ என்கிற லூயிஸ் ப்ளூம் மெல்ல தன் ஆதிக்கத்திற்குள் கொண்டு வருகிறான். திருடுவதில் இருக்கும் ஒரு மர்ம வாஞ்சையும் உழைப்பில் இருக்கும் உன்னதமும் தேவைப்படும் உள்குரல் அவனுக்கு. அற உணர்வும் பச்சாதாபங்களும் அவனது குறிப்பேட்டில் இல்லை. 

இரவில் நகரங்களில் நிகழ்த்தப்படும் கோரமான வன்முறைக் காட்சிகளைப் படம்பிடிக்கத் தொடங்குகிறான். அதற்கான விலை அவனுக்கு ஊதியமாகிறது. அந்த தொழிலில் சில எல்லைகளைக் கடந்து நேரடியாகவே குற்றங்கள் நிகழும் இடத்திற்கு விரைந்து அதன் பசுந்தரையில் சிந்தப்பட்ட புதுக்குருதியை படமெடுக்கிறான். நவீன நுகர்வுப் பெருக்கத்தின் இன்னொரு முகத்தைச் சொல்லும் வாய்ப்பை நாயகனும் இயக்குனரும் தனக்கேற்றவாறு பயன்படுத்திக் கொள்கிறார்கள். 

ஜேம்ஸ் ஹாவர்டின் மின்னணு இசையும் ராபர்ட் எல்ஸ்விட்டின் கேமிராவும் எதார்த்தமான செய்தித் துணுக்கு காணொளிகளின் தன்மையையும் மிரட்சிதரும் இருளின் பதிவுகளையும் மாற்றி மாற்றி கைவசப் படுத்திக் கொண்டுள்ளன.

4.There Will Be Blood (2008) – Paul Thomas Anderson / Daniel Day Lewis

தனிமையை முதற்காட்சியிலேயே வெகு பிரமிப்புடன் காட்சிப் படுத்திய திரைப்படங்கள் என்று கேட்டால் எனக்கு உடனேயே மூன்று திரைப்படங்கள் நினைவிற்கு வரும். அவற்றுள் இது ஒன்று – வசனமில்லாத, வேறெந்த கதாபாத்திரமும் இல்லாத, வெறும் குழியும், அதை மேலோட்டமாக வந்து தொடும் ஒளியுமாக இருக்கும் இந்த திரைப்படம். மற்றைய இரண்டு – 2001 A Space Odessy (1968), The Turin Horse (2011).

கவிதையின் ஆழ்பொருள் தேடி தியானிக்கும் தனியன் போல நிலத்தடி எண்ணையின் மீது ஒரு மந்திரப்பொருளின் ஈர்ப்பை அடைவதாகட்டும், கடவுள்களையும் அதன் வரங்களையும் சாபங்களையும் நம்பி, மூடநம்பிக்கைகளின் பிடியில் இருந்தவாறே தன் அடிகளை முன்னெடுக்கும் ஈலை சண்டேவை கொடிய விலங்கென மனதால் வெறிப்பதாகட்டும், சத்யம் இல்லாத எவரையும் வெறுக்கும் நிலைப்பாடாகட்டும், தன் முகத்தையே முகமூடியாக்க டானியல் டே லிவிஸால் இயல்வது ஒரு பெரும் திகைப்பையே தருகிறது. படத்தில் வருகின்ற நிலக்காட்சிகளைப் போலவும், எண்ணையின் ஒழுகலைப் போலவும் டானியல் ப்ளெயின்வியூவின் வாழ்வும் ஒரு ஆறாவது பூதமாய் எஞ்சுகிறது. 

Upton Sinclair எழுதிய Oil எனும் நாவலின் மீது கட்டமைக்கப்பட்ட தளர்தழுவல் இத்திரைப்படம். இரண்டு குடும்பங்களின் இடையேயான மோதலை அடிப்படையாகக் கொண்டு ஒரு திரைக்கதை எழுதிக் கொண்டு, முழுதுறாமல் சலிப்பு கொண்டிருக்கும் போது, Eric Schlosser (இத்திரைப்படத்தின் Co-executive Producer) ஏற்கனவே உரிமம் பெற்று வைத்திருந்த Oil நாவலினை வாசித்துக் கொண்டிருந்த ஆண்டர்சன் அது தந்த தெளிவாலும் உந்துதலாலும் அலைவுற்று மெல்ல வேறொரு திரைக்கதையை வந்தடைகிறார். அது அவர் எழுதிக் கொண்டிருந்த திரைக்கதைக்கு வடிவத்தையும், There Will Be Blood என்ற உன்னத படைப்பின் அடிப்படையையும் உண்டாக்கித் தந்து விட்டிருக்கிறது.

திரைப்படத்தில் பெயர் திரையில் ஒளிருகையிலேயே ஆகமத்தின் எழுத்துரு வடிவில் வருவதும், மலையினைக் குடைந்து தன்னிலிருந்து தானே தச்சனாக அவதரிப்பதும், நூற்றாண்டு வெறுப்பின் தனிமையில் முழுக்கத் தன்னை தோய்த்துக் கொள்வதும், செவியிழந்த தன் வளர்ப்பு மகனுக்கு செவியை மீண்டும் தர அதிசயங்கள் செய்ய இயலாமல் தவிப்பதும், இறுதியில் கடவுளாகவே மாறி தன் கடமை முடிப்பதும் என டானியல் அமெரிக்கப் பின்னணியின், நவீன அமேரிக்கத்தனத்தின் யேசுவாக உருவாக்கப்பட்டது இத்திரைப்படத்தில் விரித்தெடுக்கப்பட வேண்டிய இழைகளில் ஒன்று.

5.Shame (2011) – Steve McQueen / Michael Fassbender

தனிமையின் விரல்கள் குரல்வளையினை நெறிக்கும் போதும், நம் கதறல்களை யாரும் அறியப்போவதில்லை என்றறிந்தவுடன் எழும் அழுகையின் சத்தம் நம்மை இரண்டாய் கிழிக்கவல்லது. அப்போது வலி என்பதெல்லாம் இரண்டாம் பட்சமாகி, வேறோரு வகைக் கழிவுகள் நிறைந்த பள்ளத்தாக்கினை நோக்கி விழப்போகும் பீதி முன்னறியப்படுகிறது.

தனிமையில், நாம் மட்டுமே அறிந்தவாறு, நமக்குள் கொண்ட தீப்பழக்கங்கள் நம்மை மெல்ல அழித்தெடுக்கின்றன. அவை, ஒரு சுகமெனவே நமக்குப் படுவதும், அவற்றின் மேல் விழும் பிறரின் நிழல் சட்டென நச்சுநாகத்தின் நாவென நம்மைத் தீண்டி நம்மை எச்சரிப்பதும், எரிச்சலூட்டுவதும் நரகத்தின் வழிப்பாதை. காமத்தின் தீயில் விழ விரும்பி வரும் மின்மினியின் மயக்கம் பகுத்தறிவிற்கும் அப்பாற் சென்ற பெரும்பக்தனின் தாசம். 

நம்மேல் நாமே கொண்ட அச்சத்தை, நம் நெருங்கியவர்களின் மேல் காட்டும் கோபமாக அன்றி வேறெப்படி சிறப்பாக வெளிக்காட்டுவது என்பது முடியாத விடை கொண்ட கேள்வி. ஒவ்வொரு முறையும், நம் பழக்கங்களின் சுவைக்கு, அல்லது சுவை போன்ற தோற்றம் கொண்ட நோய்மைக்கு ஆட்படுகையில், அதன் வெகு உண்மையை ஒரு புள்ளியில் நாம் உணர்கையில் அவற்றிலிருந்து விடுபட முயலும் நம் முயற்சிகள் அத்தனையும் வீணாவது நீண்ட நாட்கள் வடுவாய் நின்றிருக்கும் தகுதி பெற்றவை.

காட்சி இலக்கியத்தின் பெரும் சாத்தியங்களை தன் அகப்படுத்திக் கொண்டிருக்கும் வளமான இயக்குனர் தன் படைப்புத்திறன் மீது கொண்டிருக்கும், நம்பிக்கையும் அலாதியான கதை சொல்லும் பிரியமும், எழில் மிகு மனதின் கோரத்தின் பக்கத்தை முன்வைக்கிறது. ஃபாஸ்பெண்டரின் நெற்றிச் சுருக்கங்களும் சுகத்தைக் கடந்தும் எரியும் காமதாசமும் மர்மத்தையும் பீதியுணர்வையும் ஒருங்கே கிளர்த்துவன. தனிமைக்கு வெளிச்சம் தர கேரி முல்லிகன் ஒரு அழகிய தேர்வு போல, இதே கட்டுரையில் இரண்டு படங்களில் திசையிழந்த பித்துநிலை ஆண்களுக்கு அவள் கலங்கரை விளக்கத்தின் நிலையில் காட்சி தருகிறாள். 

தொடரும்..


கமலக்கண்ணன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.