குறிப்பு: இக்கதையில் இரட்டை மேற்கோள்களில் வரும் உரையாடல்கள் கதாபாத்திரங்களின் நேரடி பேச்சுகளாகும். (திரு.கே. மற்றும் கதை சொல்லி) ஒற்றை மேற்கோள்களில் வருவன கதாபாத்திரங்கள் கூறும் மனிதர்களின் நேரடி பேச்சுகளாகும். (லீ சொன்னதாக கே சொல்வது)
என் தந்தையின் உயர்நிலைப் பள்ளி வகுப்புத் தோழர் ஒருவர் கொஞ்சம் மனநிலை சரியில்லாதவர். நான் அவரை நேரில் சந்தித்தது இல்லை, கதைகள் மட்டுமே கேட்டிருக்கிறேன். இப்போதைக்கு அவரை திரு.கே என்று அழைக்கிறேன். எனது தந்தை மாரடைப்பால் இறப்பதற்கு பல நாட்களுக்கு முன்பு திரு.கே.-யின் ரகசியம் ஒன்றை எனக்குச் சொன்னார். (அது வெறும் தற்செயல் நிகழ்வுதானா என வியக்கிறேன்). திரு.கே. ஏதோவொன்றை மக்களிடமிருந்து மறைத்தார் எனச் சொல்லவில்லை; அவருக்கு நெருக்கமானவர்கள் எல்லோருக்கும் இந்த “ரகசியம்” தெரியும். என்னிடமிருந்து தான் என் தந்தை அந்த ரகசியத்தை அப்போது வரை பாதுகாத்து வந்திருந்தார்.
இது தான் அந்தக் கதையின் சுருக்கம்.
சீனாவுக்கு எதிரான போரில் ஜப்பான் பின்னடைவைச் சந்தித்ததும் தாயகம் திரும்பிய கே. மனநல மையத்தில் அடிக்கடி அனுமதிக்கப்பட்டு விடுவிக்கப்பட்டதாக நான் கேள்விப்பட்டேன். ஒரு நாள் தெருவில் அவனைப் பார்த்த நான் அவனிடம் சென்றேன். எனது வீட்டிற்கு ஒருநாள் அவன் வர வேண்டும் எனக் கூறினேன். அறிஞர் ஹியாக்கேன்* தனது வீட்டின் வாசலில் இரு கவிதைகளை எழுதி வைத்திருந்ததாக ஒரு புகழ்மிக்க கதை உண்டு. ஒடா நன்போவின் கவிதை ஒன்று, “விருந்தினர்களை வரவேற்பது எனக்கு மிகவும் தொந்தரவாக உள்ளது/ஆனால் விருந்தினராக நீ இல்லாதபோது“. மற்றொன்று முதல் கவிதைக்கு மாறானது. “விருந்தினர்களை வரவேற்பது மிக மகிழ்ச்சி தருகிறது/ ஆனால் விருந்தினராக நீ இல்லாதபோது”. அதற்கு அடுத்து எழுதப்பட்ட கவிதைகளைக் கூறும் அளவு எனக்கு மனோதிடம் இல்லை என்றாலும் கே.. போன்ற ஒருவர் வீட்டிற்கு வருவதை நினைத்துப் பார்ப்பது அவ்வளவு உவகை அளிப்பதாக இல்லை. கே. வீட்டிற்கு வருவது எவ்வளவு விரும்பத்தகாததாக இருக்கும் என்பதை அவனுக்குத் தெரிவிக்க முயன்றும் கூட அதற்கு மாறாக, அந்த அசாதாரண மனிதன் விரைவிலேயே வீட்டிற்கு வந்தான். இது நடந்தது நீ பிறப்பதற்கு முன்பு என நினைக்கிறேன்.
கே. பார்ப்பதற்கு பித்துப்பிடித்தவன் போல கொஞ்சம்கூடத் தெரியவில்லை என்பதை முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன். உதாரணமாக, அவனது பார்வையில் நிலையற்றத்தன்மை எதுவும் இல்லை. அவன் மெலிந்தும் ஒரு நாடோடி போன்று உடையணிந்தும் காணப்பட்டான் என்பது உண்மை என்றாலும் போருக்குப் பிந்தைய ஜப்பானில் அது வழக்கத்துக்கு மாறான ஒன்றல்ல. அவன் எப்போதும் தனது கையில் பெரிய விலை உயர்ந்த தோல் பையுடன் நகரத்தில் நடமாடுவதை எவரும் கவனிக்காமல் இருக்க முடியாது. அவன் என் வீட்டுக்கு வந்த போது அந்தப் பையைக் கையில் வைத்திருந்தான்.
நாங்கள் சிறிது நேரத்திற்கு எதைப் பற்றியும் குறிப்பாக பேசிக் கொள்ளவில்லை என்றாலும் அவன் திடீரென பேச்சை மாற்றினான்.
“சீன மொழியில் உள்ள கடல்களும் மலைகளும் பற்றிய காவியம்** மற்றும் ஆவிகளை நாடிச் செல்லல்*** நூல்களில் குறிப்பிடப்படும் விசித்திரமான வடிவம் கொண்ட மக்களைப் பற்றி உனக்குத் தெரியுமா?”
“எனக்குத் தெரிந்தது எல்லாம் ரோமம் அடர்ந்த மூன்று தலைகள் கொண்ட, பெருஞ்சுவர் கட்டும் பணியில் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்பட்ட இனம், மூன்றாயிரம் அரக்கர்களை விழுங்கும் ராட்சசன்….”
“உனக்கு அவர்களை நன்றாகத் தெரியும் போலிருக்கிறது. எனக்கு வியப்பாக இருக்கிறது!. அந்த விசித்திரமான பழங்குடியினர் மத்தியில் பறக்கும் தலை கொண்ட அபாரிஜின்களான பூர்வீகக் குடியினர் இருந்தனர்.
“அவர்களை பற்றி கேள்விப்பட்டதே இல்லை”.
“அவர்களது தலைகள் நள்ளிரவில் உடலை விட்டுப் பிரிந்து பறந்து செல்லும்.”
“என்ன ஒரு விசித்திரமான துன்பம்.”
“அது ஏதோ தனிப்பட்ட நபரின் துன்பம் இல்லை. அந்த இனத்தில் இருந்த ஒவ்வொரு முதியவர் அல்லது இளைஞர், ஆண் அல்லது பெண் என எல்லோரும் அப்படிதான். அப்புறம் நீ இன்னும் திருமணம் ஆகாமல் தனியாகவா இருக்கிறாய்?”
“கடந்த வருடம் நான் திருமணம் செய்து கொண்டேன். நேற்று என் மனைவி குடும்ப விஷயம் காரணமாக அவளது பெற்றோரைப் பார்க்கச் சென்றிருக்கிறாள்”.
“நானும் ஒரு பெண்ணோடு வாழ்ந்தேன்.”
“ஏன் இந்த இறந்த காலச் சொல்?”
“இந்தப் ‘பெண்’ உண்மையில் ஒரு பதினேழு வயது இளம்பெண். என் வீட்டுக்கு அழைத்து வந்த அல்லது என்னைப் பின் தொடர்ந்த சீனத்துப் பெண் போன்ற அவளை உனக்குத் தெரியும்.”
“எனக்கு நினைவுள்ளது. அவள் மேலிருந்த தூசியை கழுவியதும் அசாதாரணமான அழகியானாள்.”
“நல்லது. அவள் வளர்ந்துவிட்டாள்”.
“அது இயற்கை தானே. தான் தத்தெடுத்து வளர்த்த முராஸகி என்ற பெண்ணுடன் உறவு கொண்ட கென்ஜி இளவரசர் போலாகிவிட்டாய் என உணர்கிறேன்.”
கே. சுய நினைவு இழந்து இருக்கிறான் என்பதை மறந்து இந்த நகைச்சுவையை நான் உதிர்த்தேன். ஆனால் கே. புண்பட்டதாகத் தெரியவில்லை; சிரித்துக் கொண்டிருந்தான். அவனது சொல்லொணாத் துக்கம் நிறைந்த கண்கள் குளிர்காலச் சூரியனைப் போலிருந்தன.
“எங்களால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. நான் சட்டப்படி தத்தெடுத்த பெண் லீ. இருந்தாலும் நான் அவளது படுக்கை அறைக்குள் பதுங்கிச் சென்றேன். அவள் சிறுமியாக இருந்த போதிருந்தே சில காரணங்களுக்காகத் தனியாக உறங்க விரும்பியதால், நாங்கள் எப்பொழுதும் தனித்தனியாகவே தூங்கினோம். உறங்குகையில் அவளது இனிய முகபாவங்கள் எவ்வாறிருக்கும் என்பதையறிய எழுந்த ஆவலைத் தடுக்க முடியவில்லை. அவள் முகத்தை மட்டுமே பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்பதை எனக்குள் சொல்லிக் கொண்டே அவளது அறைக்குள் எட்டிப் பார்த்தேன்- அவளுக்கு முகமே இல்லை.”
” முகம் இல்லையா?”
“அவளுக்குத் தலை இல்லை. அவள் கொலை செய்யப்பட்டுவிட்டாளோ என நினைத்து வெலவெலத்துப் போய்விட்டேன். பிறகு அங்கு ரத்தம் எதுவும் இல்லை என்பதை உணர்ந்தேன். அதுவுமில்லாமல் தலை இல்லாமல் கூட அவளது உடல் உயிரோடு இருப்பதாகத் தெரிந்தது. அவளது வடிவான மார்பகங்கள் மேலும் கீழும் ஏறி இறங்கியபோதும் தலை இல்லாமல் அவளால் எப்படி மூச்சுவிட முடிகிறது என்று எனக்குத் தெரியவில்லை. அவளது மார்பகங்களுக்கு இடையே வியர்வையில் அவள் மிளிர்ந்தாள். ஆனால் அவளுக்குத் தலை இல்லை.”
“அப்படி என்றால் பறக்கும் தலை கொண்ட பூர்வீகக் குடிகளில் அவளும் ஒருத்தி”.
“நீ ஆச்சரியம் அடைவதாகவே தெரியவில்லை.”
“உண்மைதான்”.
“அவனது இந்தக் கதை கிளைமாக்ஸை நோக்கி வருவது போல் இருந்ததால் அந்த நிலையில்லா மனம் கொண்ட மனிதனை கிளர்ச்சியூட்டக் கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.”
“நான் பிரமிப்படைந்தேன். குழப்பமடைந்தேன். எல்லாம் ஒன்றேயாக ஒழுக்கப் பண்பாடுகளைத் தாண்டி உணர்வுகள் தூண்டப்படுவதை உணர்ந்தேன். என் தலை சூடேறியதை உணர்ந்தேன். தலை இல்லாமல், சுயநினைவு இல்லாமல், புரிந்து கொள்ளும் திறன் இல்லாமல் உயிரோடு இருந்தாள் லீ. நான் அவள் கைகளைத் தொடுகையில் அவை வெம்மையாகவும் மென்மையாகவும் இருந்தன. அதைப் பற்றிக் கொண்டபோது வியர்வை அரும்பியது. போர்வைக்குக் கீழே லீயின் கால்கள் லேசாக அகன்று இருந்தன. மற்ற ஜப்பானிய பெண்களைப் போல் இல்லாமல் லீயின் கால்கள் நீளமாகவும் நேராகவும் எழில் மிக்க வேலைப்பாடுகள் கொண்ட தந்தம் போலவும் இருந்தன.
“அந்த இரவில் எதுவும் நடக்கவில்லை. எப்பொழுதும் போல காலையில் சிரித்துக் கொண்டிருந்தாள் லீ. முந்தைய இரவில் நிகழ்ந்த அசாதாரண சம்பவம் பற்றிச் சொல்வதற்கு எதுவும் இல்லை. அடுத்த நாள் இரவும் அதே நிகழ்வு- எந்த முன்னேற்றமும் இல்லை. உண்மையில், அவள் தலை அவளது உடலை விட்டுப் பிரிந்து பறந்து செல்கிறது என்பதே லீக்குத் தெரியவில்லை. அவளுக்கு அது தெரிந்திருந்தால் தலை பறந்து செல்ல முடியாதபடி கட்டி வைத்திருக்க முடியும்.”
“அவளது தலை அகன்று சென்ற பின்னர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டிருந்தாலும் கூட அவளால் அதை சொல்ல முடியவில்லையா?”
“அவள் தலையால் சொல்ல முடியவில்லை. ஆனால் அவளது உடலுக்கு உறுதியாகத் தெரியும். ஒரு நாள் இரவு தலை இல்லாத லீயின் உடலுடன் நான் படுத்தேன். அதற்குப் பின் ஒவ்வொரு இரவும் அவளுடன் உறவு வைத்தேன். அவளது தலையில்லா உடல், உறங்கும் உடல் போலிருந்தது. நான் அதைத் தொட்டபோது தெளிவற்று எதிர்வினையாற்றியது. சில நேரங்களில் அது இன்பத்தை உணர்வது போலிருந்தது. எங்களது உடலின் இயக்கங்கள் சிறப்பாக ஒருங்கிணைந்தன. ஒரு நாளிரவு லீயின் உடல் வித்தியாசமாக நடுங்கியவாறு அவளது கைகால்கள் வேர்களைப் போல என்னை பயங்கர இறுக்கமாகச் சுற்றிக் கொண்டன. பீதியில் நான் அலறினேன்; தலை திரும்ப வந்து லீ உச்சம் அடைந்துவிட்டாளா அல்லது ஏதாவது காமப் பேய் என்னை அழுத்திக் கொல்ல முயற்சிக்கிறதா என வியந்தேன். ஆனால் விழிப்புநிலைக்கு வந்த நான் அவளது தலை இல்லாமல் இருப்பதை உணர்ந்தேன். எப்போதும் போல அவளது கழுத்து ஈரமான உதடுகளைப் போல இருப்பதை உணர்ந்தேன். அந்த ஈரமான பகுதியை நாவால் தொட்டால் அந்தத் தலையில்லாத உடல் கிளர்ச்சியில் மேலெழுவதைக் கண்டறிந்தேன். இது பற்றி எல்லாம் லீயின் தலை எதுவும் அறிந்ததாகத் தெரியவில்லை. அவளது உடலின் இரவு அனுபவங்களைப் பற்றி அவளது தலைக்கு அந்த உடலால் எதுவும் சொல்ல இயலவில்லை.
“ஒவ்வோர் இரவும் அவளது தலை எங்கே பறந்து சென்றது?” இடைமறித்துப் பேசினேன். இப்படியே அவன் பேசிக் கொண்டிருப்பதை என்னால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
“அவள் தலையைப் பற்றிப் பேச…” கே. விசித்திரமாகச் சிரித்தான்.
அது போன்ற பைத்தியக்காரச் சிரிப்பைக் கேட்பது உவப்பாக இல்லை.
“ஒவ்வொரு இரவிலும் கனவுகளினூடே ரகசியக் காதலனை சந்திக்க அவளது தலை சென்றிருக்கலாம் இல்லையா?” என்று கூறி அவனது சிந்தனையை முடித்து வைக்க முயற்சி செய்தேன்.
“நீ இதை நம்பமாட்டாய். ஒரு நாள், தீவிரமான முகபாவத்துடன், ஒரு விஷயத்தை ஒத்துக்கொண்டாள். ‘அப்பா, நான் ஒருவரைக் காதலிக்கிறேன். ஒவ்வொரு நாளும் அவரை சந்திப்பதாக ரகசியமாகக் கனவு காண்கிறேன்’ என்றாள். ஆனால் அவள் காதலிப்பது நிச்சயமாக என்னை அல்ல.”
“அப்புறம் உனக்கு பொறாமை உணர்வு பொங்கியதா?”
“அது அவ்வளவு எளிதானதாக இல்லை. ஒரு வளர்ந்த பெண்ணின் தகப்பனைப் போல நான் உணர்ந்தேன். அல்லது தனது வளர்ப்பு மகள்களில் ஒருவரான டமக்கஸுராவை தளபதி ஹிகீகுரோ தூக்கிச் சென்ற போது கென்ஜி இளவரசருக்கு ஏற்பட்டதை போல உணர்ந்தேன்.
“ஓ…அப்படியா? நல்லது. நீ வளர்ந்துவிட்டாய். இப்போது ஒருவரைக் காதலிக்கிறாய். போ, இங்கிருந்து போய்விடு.. அவனைத் திருமணம் செய்து கொள். ஆனால் உனது உடலை இங்கேயே விட்டுச் செல். உனது தலை மட்டுமே செல்வதற்கு அனுமதிக்கப்படும் என்று சொல்வதைப் போல் உணர்ந்தேன்.”
“பயங்கரமா இருக்கு”
“ஆனால் நான் அதை அவளிடம் கூறவில்லை. அதே வேளையில் லீ அழத் தொடங்கினாள். ‘நான் அவரைத் திருமணம் செய்ய முடியாது. அவர் ஏற்கனவே மணமானவர்’ என்றாள்.”
மேற்கொண்டு அவனது கதையை கேட்க முடியாது என்பதை உணர்ந்தேன். கதையை விரைவாக முடிக்கும்படி மீண்டும் ஒரு முறை அவனை வற்புறுத்தினேன்.
“நீ சொல்வது சரி. அது போன்ற சூழ்நிலையில் ஒருவர் எப்படி பொறாமை அடைவாரோ அது போலவே நானும் பொறாமைப்பட்டேன். ஒரு இரவு நேரம், பொறாமையில் பயங்கரமான முட்டாள்தனம் ஒன்றைச் செய்தேன். லீயின் தலை தனது காதலனை சந்தித்துவிட்டு விடியற்காலை வீட்டிற்கு வந்தது. முதன் முறையாக அது பறப்பதைப் பார்த்தேன்: அது ஒரு பெரிய தேனீயைப் போல அதன் காதுகளை இறக்கையாகப் பயன்படுத்திப் பறந்தது. பறக்கும் தலை கொண்ட அபாரிஜின்களின் தலைகள் எப்படிப் பறக்கும் என்பதை அதன் மூலம் அறிந்து கொண்டேன். அவளது தலை உற்சாகமாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது எனக்கு கோபமூட்டியது. உடனே ஒரு படுக்கை விரிப்பை எடுத்து அவளது தலை உடலுடன் மீண்டும் ஒட்ட முடியாதவாறு அவளது உடலை மூடினேன். அவளது தலை துயரத்தில் படபடத்தாலும் அது என்னிடம் மன்னிப்புக் கோரவில்லை. அது வேதனையில் இருந்தது. ‘உன்னைப் பார்…உனக்கு இது தேவைதான்!’ என்று நினைத்தேன். விரைவில் லீயின் தலை மூச்சு விடுவதை நிறுத்தியது.”
“உன்னால் எப்படி இவ்வளவு கொடூரமாக இருக்க முடிந்தது!”
“எனக்குத் தெரியும். நான் செய்த செயலுக்கு மனம் வருந்திய போது நேரம் கடந்து போயிருந்தது. கணப்பொழுதில் லீயின் தலை வறண்டு, தோல் சுருங்கி, சிறுத்து மிகச் சிறிய அளவானது. இதோ இங்கே இருக்கிறது.”
அவ்வாறு சொன்னவனை, நான் தடுப்பதற்குள், அவனது கந்தலாடைக்குச் சற்றும் பொருத்தம் இல்லாத அந்தப் பையைத் திறந்து தலையை வெளியே எடுத்தான். நான் அலறினேன். அது மண்ணில் செய்த தலை போலிருந்தது. ஒருவர் ஒரு முறை அதைப் பார்த்தால் பார்வையைத் திருப்புவது கடினம். குறிப்பாக எனக்கு அது கடினமாக இருந்தது. என் கண்களுக்கு முன் இருந்தது, உயிரோடு இருக்கையில் ஒவ்வோர் இரவும் என்னைக் காணப் பறந்து வந்த மறக்கவியலாத முகம்.
திரு.கே-விடம் இதை என் தந்தை கூறவில்லை. அழகான லீயின் அந்தத் தலை ஒவ்வோர் இரவும் என் தந்தையிடம் பறந்து வந்தது. முதல் முறையாக ஒரு பறவை ஜன்னல் கண்ணாடியில் தேய்ப்பதை போலவும் பூனைக் குட்டியின் மியாவ் என்ற இனிமையான ஒலியைப் போலவும் என் தந்தைக்கு கேட்டது. என் தந்தை சில விஷயங்களை என்னிடம் சொல்லவில்லை என்றாலும் அதை உள்ளே அனுமதித்த பின் மேசை மீது விரிந்து பரவிய குளிர்ந்த கூந்தலை தடவியபடி அவர்களுக்குள் எப்படி பேசியிருப்பார்கள் என்பதை என்னால் கற்பனை செய்ய முடிகிறது. இதை என் தந்தை எனக்கு கூறியபோது அவரது முகத்தை என்னால் நேர்கொண்டு பார்க்க முடியவில்லை. “இது உன் அம்மாவிற்குத் தெரியாது. ஒரு நாள் இதைப் பற்றி உனக்குச் சொல்ல வேண்டும் என நினைத்தேன். ஏனென்றால்…” என் தந்தை தயங்கினார்.
“முதலில் கே. விஷயத்தை முடித்து விடுகிறேன். லீயின் தலையை கே. ‘கொன்ற’ பிறகு அவளது உடல் பல நாட்களாக உயிருடன் இருந்தது. அது வதங்கி இறக்கும் முன், தலையில்லாத அந்த உடலில் இருந்து ஒரு பெண் குழந்தை பிறந்தது. தத்தெடுத்த மகளை பலாத்காரம் செய்து தலையை வெட்டியதற்காக அவன் கைது செய்யப்பட்டான். ஆனால் அவனுக்கு மனச் சிதைவு ஏற்பட்டது கண்டறியப்பட்டதால் அவன் மீது வழக்குத் தொடரப்படவில்லை. அந்தப் பெண்ணை நான் தத்தெடுத்து அவளை என் சொந்த மகள் போல வளர்த்தேன். அவ்வளவுதான் நான் உனக்குச் சொல்ல முடியும். அந்தப் பரம்பரை நோய் உனக்கும் உள்ளதா என்பதை சோதித்தறியும் துணிச்சல் எனக்கு இல்லை.”
என் தந்தையின் திடீர் மரணத்திற்குப் பின் எனக்கு நானே இக்கதையை பலமுறை சொல்லிக் கொண்டேன். இப்போதைக்கு எனக்கு காதலனோ கனவில் அப்படி ஒருவரைக் காண்பதோ இல்லை. என் தலை பறக்கத் தொடங்கிவிட்டதாக நினைக்கவில்லை. அது பறக்காது. நான் காதலில் விழும் வரை.
[ads_hr hr_style=”hr-fade”]
* ஹியாக்கேன் உச்சிடாவின் நிச்சிபோட்சு ஹெலிமோனில் உள்ள கவிதை
** ஜின் வம்சத்தில் குறிப்பிடப்படும் க்ஸியா வம்ச பேரரசர் யுவின் கற்பனை சாம்ராஜ்யம் குறித்த நூல்.
*** ஜின் வம்சத்தின் அரசாட்சியில் தொகுக்கப்பட்ட சீன பேய்க் கதைகளின் முதல் தொகை நூல்.
– குரஹாஷி யுமிகோ
ஆங்கிலத்தில்: அட்சுகோ சகாகி
தமிழில்: க. ரகுநாதன்
[tds_info]
ஆசிரியர் குறிப்பு
குரஹாஷி யுமிகோ (1935-2005). – தான் சார்ந்த சமூகத்தின் பாலுறவுச் சிக்கல்கள், வன்முறை, சமூகப் படிநிலைகள் ஆகியவற்றை தனது படைப்புகள் வழி கேள்விக்குள்ளாக்கியவர். அவருடைய எதிர் நாவல்கள் ஆக்கப்பூர்வமான பகடி மற்றும் பின்நவீனத்துவக் கூறுகள் கொண்டவை. நோபல் பரிசு பெற்ற ஒய் கென்சபுரோவுக்கு இணையாக விமர்சகர்களால் போற்றப்படுபவர். அவரது படைப்புகள் காஃப்கா மற்றும் கோபே அபே போல அருவமான கருப்பொருள் கொண்டவை. ஜப்பானிய பெண் எழுத்தாளர்கள் எழுதத் துணியாத கதைகளை எழுதிய கலகக்குரல் இவருடையது. பல நாவல்கள், சிறுகதைகள் படைத்துள்ளார்.
The Woman with the Flying Head and Other Stories என்ற தொகுப்பில் உள்ள The Woman with the Flying Head (1985) என்ற சிறுகதை இது.
மொழிபெயர்ப்பாளர் :
க.ரகுநாதன். திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இலக்கிய ஆர்வலர். மொழிபெயர்ப்புகள், கவிதைகள் எழுதிவரும் இவர் அரசுப் பணியாளராக கோவையில் பணியாற்றுகிறார்.
[/tds_info]