நேற்றையதினம்


னக்குத் தெரிந்தவரை பீட்டில்ஸின்   ‘YESTERDAY ‘ பாடலை ஜப்பானிய வரிகளில் ( அதுவும் குறைந்தபட்சம் கான்ஸே பேச்சு வழக்கில் ) பாடிய ஒரே ஆள் கித்தாருதான். வழக்கமாக குளிக்கும்போது அவன் தனக்கேயுரிய பாணியில் பாடுவான்.

              நேற்றையதினம்

            என்பது நாளைக்கு இரண்டு நாள் முன்னர்,

            இரண்டு நாட்களுக்குப் பின்னர் உள்ள நாள்.

எனக்கு ஞாபகத்தில் உள்ளவரை   இப்படித்தான் துவங்கும். ஆனால் நான் அதிகம் கேட்டதில்லை எனவே அது எவ்வாறு தொடரும் என்று உறுதியாகச் சொல்லமுடியவில்லை. ஏறக்குறைய துவக்கத்திலிருந்து முடிவு வரை கித்தாருவின் வரிகள் அர்த்தமற்று முட்டாள்தனமாக மூலத்திற்குச் சற்றும் தொடர்பில்லாது இருக்கும். பரிச்சயமான அந்த  அழகிய துயரார்ந்த மெல்லிசையும் துள்ளலான கான்ஸே பேச்சு வழக்கும் ஒன்றாக இணைந்திருப்பதை அவலச்சுவைக்கு நேரெதிராகச் சொல்லலாம். விநோதமான இணை , ஆக்கப்பூர்வமான அனைத்தையும் உறுதியாக மறுத்தல். குறைந்தபட்சம் எனக்கு அப்படித்தான் தோன்றியது. அப்படித் தோன்றும் போது நான் தலையை உதறிக்கொள்வேன். சிரித்துக் கொள்வேன் ஆனால் அதேநேரம் அதில் ஒரு வகையான இறக்குமதி  ஒளிந்திருக்கிறது என்று உணர்ந்திருக்கிறேன்.

டோக்கியோவின் ஒதாக்குவில் உள்ள டென்னென் சோஃபு வில் பிறந்து , வளர்ந்தவனாயிருந்தாலும் நான் அறிந்தவரை கித்தாருவுக்கு ஏறக்குறைய த்வணி சுத்தமான கான்ஸே உச்சரிப்பு இருந்தது. நானோ கான்ஸேவில்  பிறந்து வளர்ந்திருந்தாலும், பரிபூரணமான சுத்த ஜப்பானிய ( டோக்கியோ பாணி ) மொழியைப் பேசினேன். நாங்கள் இருவரும் நிச்சயமாக வினோதமான இணை.

நான் கித்தாருவை வஸேதா பல்கலைக்கழகத்தினருகே இருந்த காஃபி கடையில் பகுதிநேர வேலை செய்து கொண்டிருந்தபோதுதான் முதன்முதலாகச் சந்தித்தேன். நான் சமையலறையில் , கித்தாரு பரிசாகரனாக.. கடையின் ஓய்வு நேரத்தில் நாங்கள் இருவரும் நிறையப் பேசுவோம். நாங்கள் இருவரும் இருபதுகளில் இருந்தோம். எங்கள் இருவரின் பிறந்தநாளும் ஒரு வார இடைவெளியில் இருந்தன.

“ கித்தாரு என்பது ஒரு அரிதான கடைசி பெயர்.” என்றேன் ஒரு நாள்.

“ஆம். சரியாகத்தான் சொல்கிறாய்.” கித்தாரு தன்னுடைய தீவிர கான்ஸே உச்சரிப்பில் கூறினான்.

“Lotte பேஸ்பால் அணியின் பந்து எறிபவருக்கு இதே பெயர்தான்.”

“ எங்கள் இருவருக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை பெயரைத் தவிர, யார் கண்டார்கள் ?  எங்காவது ஒரு பிணைப்பு இருக்கிறதோ என்னவோ?”

நான் அப்போது வஸேதாவில் இலக்கியத் துறையில் இரண்டாமாண்டு மாணவனாக இருந்தேன். கித்தாரு நுழைவுத் தேர்வில் தோற்றுப்போய், பயிற்சி வகுப்பில் சேர்ந்து மீண்டும் கல்லூரியில் சேர திணறிக் கொண்டிருந்தான். உண்மையில் அவன் இருமுறை தேர்வில் தோல்வியடைந்திருந்தான். ஆனால் அவனது தோரணையிலிருந்து யாரும் அதை ஊகிக்கவே முடியாது. படிப்பில் அதிகம் கவனம் செலுத்துபவனைப் போல தோன்றவில்லை. ஓய்வாக இருக்கும் போது அவன் நிறைய புத்தகங்கள் படித்தான் ஆனால் அவை தேர்வுக்கு சம்பந்தம் இல்லாத புத்தகங்கள் – ஜிமி ஹென்ட்ரிக்ஸின் வாழ்க்கை வரலாறு, Where Did The Universe Come From? போன்றவை. பயிற்சி வகுப்புக்கு அவன் தினந்தோறும் டோக்கியோவில் இருக்கும் ஒட்டாவார்டிலிருந்து பயணித்து வருவதாக ஒரு நாள் கூறினான்.

“ ஒட்டாவார்ட்?” என்றேன் ஆச்சரியத்துடன். “ ஆனால் நீ கான்ஸேயிலிருந்து வருகிறாய் என்று நினைத்தேன்.”

“இல்லவே இல்லை. டெனென்சோஃபுவில்தான் பிறந்து வளர்ந்தேன்.”

இது நிஜமாகவே என்னை அதிர்ச்சியடைய வைத்தது.

“பின் எப்படி நீ கான்ஸே வட்டாரவழக்கில் பேசுகிறாய் ?” என்று கேட்டேன்.

“அதை நான் வரவழைத்துக் கொண்டேன். அதைக் கற்றுக்கொள்வதற்காக என்னைத் தயார் செய்து கொண்டேன்.”

“வரவழைத்துக் கொண்டாயா?”

“ஆம். கடுமையாகப் படித்து வினைச்சொல், பெயர்ச்சொல், உச்சரிப்பு – என முழு ஒன்பது கூறுகளையும், ஆங்கிலம் , பிரஞ்சு படிப்பதுபோலவே. கான்ஸேவுக்கு போய் பயிற்சியும் எடுத்துக் கொண்டேன். “

நான் மிகவும் கிளர்ச்சியடைந்தேன். ஆக அந்நிய மொழிகளைப்போலவே கான்ஸே உச்சரிப்பையும் படிக்கும் மக்கள் இருக்கிறார்களா? இது எனக்குப் புதிதாக இருந்தது. டோக்கியோ எத்தனை பெரியது, அதில் எனக்குத் தெரியாத விஷயங்கள் எத்தனை உள்ளன என்று உணர்த்தியது. இது எனக்கு Sansbiro நாவலை நினைவூட்டியது, ஒரு உதாரண நாட்டுப்புற சிறுவன் ஒருவன் பெரிய நகரத்தைச் சுற்றித் திரியும் கதை..

“ குழந்தையாக இருக்கும் போதே நான் ஹான்ஷீன் டைகர்ஸின்  தீவிர விசிறி.” கித்தாரு விளக்கமாகக் கூறினான்.” டோக்கியோவில் அவர்கள் எங்கு விளையாடினாலும் தவறாமல் போய்விடுவேன்.ஆனால் மைதானத்தில் ஹன்ஷீன் அணியின் இருக்கைகளில் அவர்களது ஜெர்ஸியை அணிந்துகொண்டு  டோக்கியோ வட்டாரவழக்கில் பேசினால் என்னோடு அவர்கள் யாரும் சேரமாட்டார்கள், அந்தக் குழுவின் அங்கத்தினனாக இருக்கமுடியாதல்லவா ? புரிகிறதா ? எனவே நான் கான்ஸே வட்டார வழக்கைக் கற்க ஆரம்பித்தேன். அதற்காக நாயாக உழைத்தேன்.

“அதுவா உன் இலட்சியம்?” என்னால் அதை நம்பவே முடியவில்லை.

“ஆம். டைகர்கள் எனக்கு அவ்வளவு முக்கியம்.” என்றான் கித்தாரு. நான் பேசுவதெல்லாம் இப்போது கான்ஸே பேச்சு வழக்கைத்தான் பள்ளியில், வீட்டில், தூக்கத்தில் கூட. . என்னுடைய உச்சரிப்பு கிட்டத்தட்ட முழுமையானதுதான் இல்லையா?

“நிச்சயமாக. நீ கான்ஸேயிலிருந்து வருகிறாய் என்றுதான் நான் நினைத்தேன். ஆனால் உனது பேசுமுறை ஹன்ஷிகன் வகை இல்லை – கோபே வட்டாரம். அது நடுமையத்தில் பேசுவது போல் ஒலிக்கிறது – ஒசாகாவின் உள் நகரங்களில் உள்ளது போல்,”

“நீ அங்குதான் வளர்ந்தாய் , இல்லையா ? உயர்நிலைப் பள்ளியில் கோடைவிடுமுறைகளில் ஒசாக்காவில் தெனோஜிக்குவில் நான் அங்கே ஒரு வீட்டில் தங்கியிருந்தேன். சிறந்த இடம்.  உயிரியல் பூங்கா உட்பட எல்லா இடத்திற்கும் நடந்தே செல்லலாம்.”

“ஒரு வீட்டில் தங்கியா ?” எனக்கு அது கிளர்ச்சியூட்டுவதாக இருந்தது.

“கான்ஸே பேச்சுவழக்கை கற்றுக்கொள்வதற்கு நான் படித்ததைப் போல் நுழைவுத்தேர்வுக்குப் படித்திருந்தால் இப்போது தோல்வியடைந்ததைப் போல் நான் தோல்வியடைந்திருக்கவே மாட்டேன்.”

அவன் சொல்வதில் விஷயமிருக்கிறது, அவனது தன்னைத்தானே விமர்சித்துக் கொள்ளும் பாணியில் கூட ஒரு கான்ஸேத்தனம் இருந்தது.

“ நீ எங்கிருந்து வருகிறாய் ?” என்றான்.

“ கான்ஸே. கோபேக்கு அருகில்” என்றேன்.

“கோபேக்கு அருகிலா ? எங்கே ?”

“அஷியா” என்றேன்.

“வாவ். அழகான இடம். துவக்கத்திலேயே ஏன் சொல்லவில்லை?”

நான் விளக்கினேன். “மக்கள் என்னை எங்கிருந்து வருகிறாய் என்று கேட்கும்போது நான் அஷியா என்பேன். அவர்கள் எப்போதும் என் குடும்பம் மிக வசதி படைத்தது என்றே நினைக்கின்றனர். ஆனால் அஷியாவில் எல்லாவிதமான மக்களும் இருக்கின்றனர். என் குடும்பமும் அதில் ஒன்று. குறிப்பாக வசதியற்ற வகையில் சேர்ந்தது. என் தந்தை மருந்து கம்பெனியில் வேலைபார்த்தார், அம்மா நூலக கண்காணிப்பாளர். எங்கள் வீடு சிறியது. பழுப்பு வண்ண கரோலா கார் ஒன்று உள்ளது. அதனால் யாராவது நான் எங்கிருந்து வருகிறேன் என்று கேட்டால் நான் எப்போதுமே ‘கோபேக்கு அருகில்’ என்று சொல்லிவிடுவேன்.  எனவே அவர்கள் என்னைப் பற்றிய முன்தீர்மானமான கருத்துக்களை ஏற்படுத்திக்கொள்ள மாட்டார்கள்.”

“நண்பா, நீயும் நானும் ஒரே மாதிரியாகத் தோன்றுகிறது.” என்றான் கித்தாரு. மேலும், “என் முகவரி டென்னென் சோஃபு – உயர்மட்ட குடியிருப்பு – ஆனால் என் வீடு நகரத்தின் குப்பையான இடத்தில் இருக்கும். வீடும் குப்பையாகத்தான் இருக்கும். அதையெல்லாம் நாம் பெரிதுபடுத்தக் கூடாது- நீ பார்த்தால் என்ன இதுவா டேனென் சோஃபு ? . சகிக்கவில்லை.”  என்று சொல்வாய். ஆனால் அதைப்பற்றி கவலைப் படுவதில் ஒரு பொருளுமில்லை. அது வெறும் ஒரு முகவரி மட்டுமே. அதை நான் வேறுவிதமாக எதிர்கொள்வேன். கேட்பவர்களை நேராக முகத்தில் அடிப்பதுபோல் “ நான் டென் – னென் – சோஃபு விலிருந்து வருகிறேன்.” என்பேன். உங்களுக்கு அது மிகவும் பிடிக்குமா? என்பது போல.

அவன் சொன்னது எனக்குப் பிடித்திருந்தது. அதன் பிறகு நாங்கள் நண்பர்களானோம்.

டோக்கியோவுக்கு வந்தவுடன் நான் ஏன் கான்ஸே பேச்சு வழக்கைச் சுத்தமாக விட்டேன் என்பதற்கு இரண்டு காரணங்கள் இருந்தன. மேல்நிலைப் பள்ளியிலிருந்து தேர்ச்சியடையும் வரை உண்மையாகவே நான் ஒரு முறை கூட தரமான டோக்கியோ வழக்கில் பேசியதில்லை. ஆனால் டோக்கியோவில் முழுமையான ஜப்பானிய மொழியை சரளமாகப் பேச எனக்கு சரியாக ஒரு மாதமே போதுமானதாக இருந்தது. இத்தனை விரைவாக என்னால் தகவமைத்துக் கொள்ள முடிந்தது எனக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. நான் ஒரு பச்சோந்தி என்பதை நானே உணர்ந்திருக்கவில்லை அல்லது எனது மொழித்தேர்ச்சி மற்றவர்களைக் காட்டிலும் மேம்பட்டதாக இருந்திருக்க வேண்டும். எப்படியிருப்பினும் நான் உண்மையில் ஒரு கான்ஸேகாரன் என்பதை யாரும் நம்பமாட்டார்கள்.

கான்ஸே பேச்சு வழக்கை நான் மாற்றிக் கொண்டதற்கு மற்றொரு காரணம் , நான் முற்றிலும் வேறொரு ஆளுமையாக மாற விரும்பியதுதான்.

கான்ஸேயிலிருந்து டோக்கியோவுக்கு கல்லூரி படிப்பிற்காக வந்த பிறகு புல்லட் ரயில் பயணம் முழுவதும் என்னுடைய பதினெட்டு வருட வாழ்க்கையையும் மீள்பார்வை செய்வதில் கழித்தேன். எனக்கு நிகழ்ந்தவையெல்லாவற்றையும் மிகுந்த மன உளைச்சலாக உணர்ந்தேன். நான் அதிகப்படுத்திக் கூறவில்லை. அவற்றிலிருந்து எதையும் நினைவுகூர விரும்பவில்லை. அவை பரிதாபத்துக்குரியவை. என் வாழ்க்கையைப் பற்றி நினைக்க நினைக்க எனக்கு என் மீதே வெறுப்பு வந்தது. அதனால் எனக்கு நல்ல நினைவுகளே இல்லை என்றில்லை,  மிகச்சொற்பமாக இனிமையான அனுபவங்களும் இருக்கத்தான் செய்தன. ஆனால் அவற்றைச் சேர்த்துக் கொண்டாலும்கூட  அவமானமும் வேதனையுமான சம்பவங்களே மிகுதியாக இருக்கும். நான் எப்படி வாழ்ந்து கொண்டிருந்தேன் எப்படி வாழ்க்கையை அணுகினேன் என்பதையெல்லாம் மிகவும் பாமரத்தனமாகவும், வருந்தத்தக்க வகையில் பொருளற்றதாகவும் இருந்தன. கற்பனை செய்யமுடியாத அளவுக்கு நடுத்தரவர்க்க குப்பை.. அவற்றை ஒன்றாகத் திரட்டி ஏதாவது ஒரு மேசை இழுப்பறையில் போட்டு மூடிவிட விரும்பினேன் அல்லது நெருப்பில் போட்டுக் கொளுத்தி , அவை எரிவதைக் காணவிரும்பினேன். (அப்போது என்ன மாதிரியான புகை வெளிவரும் என்று தெரியவில்லை) எது எப்படியிருந்தாலும் நான் எல்லாவற்றையும் விட்டொழித்து டோக்கியோவில் ஒரு புது வாழ்க்கையை , மாசு மருவற்று புது மனிதனாகத் தொடங்க விரும்பினேன். புதிய வாழ்க்கை புதிய சாத்தியங்களை முயன்று பார்க்க விரும்பினேன். கான்ஸே பேச்சு வழக்கை (அடையாளத்தையும் கூட) நடைமுறையில் துறந்ததும் கூட அதை நிறைவேற்றிக்கொள்ளும் வழிமுறையே. ஏனெனில் இறுதி தேர்ந்தாய்வில் நாம் பேசும் மொழிதான் நாம் எவ்வகை மனிதர்கள் என்பதைக் கட்டமைக்கிறது. குறைந்தபட்சம் பதினெட்டு வயதில் எனக்கு அப்படித்தான் தோன்றியது.

“மன உளைச்சலா ? எது மிகவும் மன உளைச்சலைக் கொடுத்தது?”

“ நீயே எதையாவது கேள்”

“உன் இன மக்களுடன் நீ மகிழ்ச்சியாக இல்லையா ?”

“மகிழ்ச்சியாகத்தான் இருப்பேன். ஆனாலும் அது சங்கடமாகத்தான் இருக்கும். அவர்களோடு இருப்பதே மனஉளைவைக் கொடுக்கும்.”

“நீ விசித்திரமானவன். இல்லையா?” என்றான் கித்தாரு.  “உனது இனமக்களுடன் இருப்பதில் உனக்கு என்ன சங்கடம்.? நான் எங்கள் இனத்தவர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவழித்திருக்கிறேன்.”

என்னால் உண்மையாகவே விளக்க முடியவில்லை. பழுப்புநிற கரோலா கார் இருப்பதால் என்ன குறைந்து விட்டது?. எனக்குப் புரியவில்லை. எங்கள் பகுதியில் சாலை குறுகலாக இருந்தது அதனால் என் பெற்றோர் வெறும் தோற்ற அழகிற்காகப் பணத்தை வீணடிப்பதை விரும்பவில்லை. அவ்வளவுதான்.

“என் பெற்றோர் நான் நன்றாகப் படிக்கவில்லை என்று நச்சரித்தனர். அது எனக்குப் பிடிக்காது. ஆனால் என்ன செய்யமுடியும்? அது அவர்கள் கடமை. நாம் அதைப் பொறுத்துக்கொள்ளத்தான் வேண்டும்” என்றான் கித்தாரு.

“நீ ரொம்ப ஜாலியான பேர்வழியில்லையா?”

“உனக்கு தோழிகள் உண்டா? “

“இப்போதைக்கு இல்லை”

“முன்னால் இருந்ததா?”

“ கொஞ்சநாள் முன்வரை “

“பிரிந்து விட்டீர்களா?”

“ஆம்” என்றேன்.

“ஏன் பிரிந்தீர்கள்?”

“அது பெரியகதை. இப்போது அதை ஞாபகப்படுத்த வேண்டாம்”

“அஷியாவைச் சேர்ந்த பெண்ணா?” என்றான் கித்தாரு.

“இல்லை அவள் அஷியாவைச் சேர்ந்தவளல்ல. ஷூக்குகாவா. அது அருகில்தான் இருக்கிறது.”

“அவள் உன்னை எல்லாவற்றுக்கும் அனுமதித்தாளா ?”

நான் தலையை உதறிக் கொண்டேன். “இல்லை. எல்லாவற்றுக்கும் அல்ல.”

“அதனால்தான் பிரிந்துவிட்டாயா?”

நான் யோசித்தேன். “அதுவும் ஒரு காரணம்தான்”

“ஆனால் வாய்வழியாவது அனுமதித்தாளா ?”

“ஓரளவிற்கு”

“எது வரை?”

“அதைப்பற்றிப் பேச விரும்பவில்லை” என்றேன்.

“இவைதான் நீ குறிப்பிட்ட ‘மனஉளைச்சல்’ விஷயங்களா?”

“ம்.” என்றேன். நான் நினைவுபடுத்த விரும்பாத வேறொரு விஷயம் கூட இருந்தது.

“நண்பா, சிக்கலான வாழ்க்கைதான் உன்னுடையது” என்றான் கித்தாரு.

முதல்முறையாக கித்தாரு  ‘YESTERDAY’ பாடலை கேனத்தனமான வரிகளுடன் பாடியதை நான் கேட்டபோது அவன் டென் னென்சோஃபு வில் உள்ள அவனது வீட்டின்( அவனது விவரணை போல அத்தனை அசுத்தமான சுற்றுப்புறமாகவோ , அசுத்தமான வீடாகவோ இல்லாமல், சாதாரண சுற்றுப்புறத்தில் சாதாரண வீடாகவும் , பழையதாகயிருந்தாலும் , அஷியாவிலிருக்கும் எங்கள் வீட்டைவிட பெரியதாகவே எந்தவிதத்திலும் குறைசொல்லும்படியாக இல்லாமல் இருந்தது. கார் நிறுத்துமிடத்தில் நின்றிருந்த அடர்நீல கோல்ஃப் கார் கூட சமீபத்திய மாடல் என்பது தற்செயலாகத் தெரிந்தது.) கித்தாரு எப்பொழுது வீட்டிற்கு வந்தாலும் எல்லாவற்றையும் உடனடியாக விசிறியெறிந்துவிட்டு குளிக்கச் சென்று விடுவான். குளியல் தொட்டிக்குள் இறங்கிவிட்டால் அங்கேயே இருப்பான். நான் ஒரு குட்டி ஸ்டூலை இழுத்துப் போட்டுக்கொண்டு பக்கத்திலிருக்கும் உடைமாற்றும் அறையில் உட்கார்ந்து கொண்டு  இடையில் ஒரு அங்குலம் திறந்திருக்கும் கதவு வழியாகப் பேசிக்கொண்டிருப்பேன். அவனுடைய அம்மாவின் நச்சரிப்பிலிருந்து தப்பிக்க ஒரேவழி. அவளுடைய விசித்திர மகனைப் பற்றியும், படிப்பில் எந்தளவு அவன் கவனம் செலுத்தவேண்டும் என்பது போன்ற புகார்கள்தான் அவற்றில் அதிகம் இருக்கும். அந்த சமயத்தில்தான் அவன் முட்டாள்தனமான வரிகளை எனக்காக (அது எனக்காகத்தானா என்று உறுதியாகச் சொல்லமுடியாது) பாடிக்காட்டுவான்.

“அந்த வரிகளில் அர்த்தமேயில்லை. அந்த YESTERDAY பாடலை நீ நக்கல் செய்வது போலத் தோன்றுகிறது.” என்பேன் அவனிடம்.

“ரொம்ப அறிவுக்கொழுந்து மாதிரி பேசாதே. நான் நக்கல் செய்யவில்லை., அப்படியே செய்தாலும் ஜான் முட்டாள்தனத்தையும் , வார்த்தை விளையாட்டையும் இரசிக்கக்கூடியவர் என்பது தெரியாதா?”

“ஆனால் YESTERDAY பாடலை எழுதி, இசை கோர்த்தது பால் அல்லவா?”

“ உனக்கு நிச்சயமாகத் தெரியுமா ? “

“நிச்சயமாக.” என்று பிரகடனம் செய்தேன். பால்தான் அதை எழுதி கிட்டார் இசையுடன் ஒலிப்பதிவும் செய்தவர். அத்தோடு தந்திவாத்திய இசை இணைப்பாகப் பின்னாளில் சேர்க்கப்பட்டது. ஆனால் மற்ற பீட்டில்ஸில் அது இல்லை. பீட்டில்ஸ் பாடலை அது மிகவும் மலினப்படுத்துவதாகக் கருதினர். “

“உண்மையாகவா? எனக்கு அப்படிப்பட்ட விசேஷமான தகவல்கள் எல்லாம் தெரியாது”

“அதொன்றும் விசேஷமான தகவல் அல்ல. எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான்” என்றேன்.

“அதனாலென்ன. அவை வெறும் விவரங்கள்தான்.” கித்தாருவின் குரல் நீராவி பொதியலிலிருந்து அமைதியாகக் கூறியது- “ நான் என் வீட்டின் குளியலறையில் பாடுகிறேன். பாடல் பதிவு ஒன்றும் செய்யவில்லை. நான் எந்த காப்புரிமையையும் மீறவில்லை. அல்லது யாரையும் துன்புறுத்தவும் இல்லை. என் மீது புகார் கூற உனக்கு எந்த உரிமையுமில்லை.”

பிறகு அவன் குழுகுரல் வரிகளைப் பாட ஆரம்பித்துவிட்டான். பொதுவாகக் குளியலறையில் இருக்கும்போது ஒலிப்பது போல அவனது குரல் தெளிவாகவும் சப்தமாகவும் ஒலித்தது. குறிப்பாக உச்சஸ்தாயியில் சரியாகவே பாடினான். “அவள் இருந்தாள் இங்கே / நேற்று வரை……………..” அல்லது அதுபோன்ற சிலவரிகள்.

அவன் மெதுவாகத் தண்ணீரை ஒரு பக்கவாத்தியம் போல் சிதறடித்தான். நான் அவனை குறுக்கீடு செய்திருக்கலாம், அவனோடு பாடி அவனை உற்சாகப்படுத்தியிருக்கலாம். ஆனால் என்னால் அப்படி எதையும் செய்யமுடிந்ததில்லை. அங்கே உட்கார்ந்து கொண்டு, அவன் குளியல் தொட்டியில் மூழ்கியபடி இருக்கையில், பொழுதுபோக கண்ணாடி கதவு வழியாக பேசியபடி இருப்பது அத்தனை கேளிக்கையாக இருக்கவில்லை.

“எப்படி நீ இவ்வளவு நேரம் குளியல் தொட்டியில் இருக்கிறாய்? நான் அப்படி அசையாமல் உட்கார முயன்று சோர்வடைந்திருக்கிறேன். உன் உடம்பு ஊறிப் போகவில்லையா?” என்று கேட்டேன்.

”என்னால் குளியலில் இவ்வளவு நேரம் செலவழிக்க முடிந்ததில்லை. அசையாமல் உட்கார்ந்து ஊறிக்கொண்டிருக்க சலிப்பாக இருக்கும். ஒரு புத்தகத்தைப் படிக்கவோ, இசையை இரசிக்கவோ முடியாது, வெட்டியாகக் கிடப்பதைப் போல இருக்கும்”

“நான் குளியல் தொட்டியில் நீண்டநேரம் மூழ்கிக் கிடக்கையில் சகலவிதமான நல்ல யோசனைகளும் சரளமாக வரும்” என்றான் கித்தாரு.

“அதாவது   ‘YESTERDAY’ பாடல் வரிகளைப் போலவா ?”

“ஆம். அதுவும் அவற்றில் ஒன்று”

“குளியல் தொட்டியில் நீண்ட நேரத்தைச் செலவழிப்பதற்குப் பதில் நீ நுழைவுத் தேர்வுக்குப் படிக்கலாமல்லவா?” என்று கேட்டேன்.

“ஜீஸஸ், இப்படி காலை வாருகிறாயே? என் அம்மாவும் இதே விஷயத்தைத்தான் சொல்வாள். இப்படியெல்லாம் சொல்லுமளவுக்கு உனக்கு வயதாகவில்லை அல்லவா? அல்லது நீ தத்துவவாதியா?”

“ஆனால் நீ இரண்டு வருடங்களாகத் திணறிக்கொண்டிருக்கிறாய். உனக்கே அலுப்பாக இல்லையா?”

“நிச்சயமாக. எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் கல்லூரியில் சேர்ந்து கலாட்டா செய்ய விரும்புகிறேன். அப்புறம் என் சிநேகிதியோடு சேர்ந்து உண்மையான டேட்டிங் போகவேண்டும்”

“அப்புறம் ஏன் கஷ்டப்பட்டுப் படிக்காமல் இருக்கிறாய். ?”

“ஆம். சரிதான்.”  என்றான். மெல்லச்சொன்னான். “அப்படிப் படிக்கமுடிந்தால் ஏற்கனவே செய்திருப்பேனே”

“கல்லூரி ஒரு அறுவை. உள்ளே நுழைந்தவுடன் நான் மிகவும் ஏமாந்துவிட்டேன். ஆனால் நுழையாவிட்டால் இன்னும் அறுவை” என்றேன்.

“உண்மைதான். எனக்கு வேறுவழியில்லை”

“பின் நீ ஏன் படிக்க மாட்டேனென்கிறாய்?”

“ஆர்வமின்மைதான்” என்றான்.

“ஆர்வமா? உன் சிநேகிதியோடு வெளியே போக வேண்டும் என்றெல்லாம் ஆர்வமில்லையா?”

“அப்படித்தான் நினைக்கிறேன். பார், அதைப் பற்றிச் சொன்னால் ரொம்ப நேரமாகும். விஷயம் என்னவென்றால் நான் எனக்குள்ளேயே இரண்டாகப் பிரிந்து இருக்கிறேன். புரியுதா ?”

ஆரம்பப்பள்ளி காலத்திலிருந்தே கித்தாருவுடன் ஒன்றாகப் படித்த  தோழி ஒருத்தி கித்தாருவுக்கு இருந்தாள். குழந்தைப்பருவ தோழி என்று சொல்லலாம். பள்ளியில் அவர்கள் ஒன்றாக ஒரே வகுப்பில் இருந்திருக்கின்றனர். ஆனால் மேல்நிலை படிப்பை முடித்தவுடன் கித்தாரு போல் இல்லாமல் அவள் ஸோஃபியா பல்கலைக்கழகத்தில்  சேர்ந்துவிட்டாள். இப்போது அவள்  பிரெஞ்சு இலக்கியப் பாடத்தை முதன்மையாக எடுத்து படித்துக் கொண்டிருக்கிறாள் மேலும் டென்னிஸ் கிளப்பிலும் சேர்ந்திருக்கிறாள். அவளது புகைப்படத்தைக் காண்பித்திருக்கிறான், அசத்தலாக இருந்தாள். மிக அழகான உடல்வாகு , மிக உயிர்ப்பான முகம். ஆனால் அவர்கள் இருவரும் இப்பொழுதெல்லாம் அதிகம் சந்தித்துக் கொள்வதில்லை. அவர்கள் இருவரும் சந்தித்துக் கொள்ள வேண்டாம் என்று பேசி முடிவெடுத்திருந்தனர் . அப்போதுதான் கித்தாரு படிப்பில் முழுக்கவனம் செலுத்த முடியும். நுழைவுத்தேர்விலும் தேர்ச்சியடைய முடியும். அதை பரிந்துரைத்ததே கித்தாருதான். அவளும் சம்மதித்திருக்கிறாள்.  அதுதான் உன் விருப்பமென்றால் சரி என்றிருக்கிறாள். அவர்கள் தொலைபேசியில் அடிக்கடி பேசினர் ஆனால் வாரத்தில் ஒருமுறைதான் சந்தித்தனர் அவை கூட வழக்கமான ஊர்சுற்றல் இல்லாமல் ஒரு நேர்காணலைப் போல இருக்கும். ஒரு தேநீர் அருந்திவிட்டு இருவரும் என்ன செய்து கொண்டிருந்தார்கள் என்று பகிர்ந்து கொள்வார்கள். கைகளைப் பிடித்துக் கொண்டு ஒரு அவசர முத்தத்தைப் பரிமாறிக் கொள்வார்கள். இப்படித்தான் போய்க் கொண்டிருந்தது. பழங்கால ஆசாமிகள்.

கித்தாருவை அழகன் என்று சொல்ல முடியாது ஆனால் இனிமையான தோற்றம் கொண்டவன். அவன் உயரமானவன் இல்லை ஆனால் கச்சிதமாக இருந்தான். அவனது சிகையும் உடையும் எளிமையாகவும் நவநாகரீகமாகவும் இருந்தன.  அவன் வாயைத் திறக்காதவரை அவனை மிகவும் புத்திசாலியாகவும் நன்றாக வளர்க்கப்பட்ட நகரத்து இளைஞன் என்றும் நினைக்கத் தோன்றும். அவனும் அவன் சிநேகிதியும் நல்ல இணையராகத் தோன்றினர். அவனது ஒரே குறைபாடு அவனது முகம், அது மிகவும் மென்மையானவன், நாசூக்கானவன், ஆளுமை குறைவானவன் அல்லது செறிவற்றவன் என்ற அபிப்பிராயத்தைத் தரும். ஆனால் அவன் வாயைத் திறந்தவுடன் இந்த ஒட்டுமொத்த நேர்மைறை விளைவுகள் எல்லாம் லேப்ரடார் ரிட்ரீவர் நாய் மணல் வீட்டைக் கிளறும்போது சிதறும் துகளைப்போல கலைந்துவிடும். கான்ஸே வட்டாரவழக்கில் சரளமாக, காதைத் துளைக்கும் கீச்சுக் குரலில் அவன் உச்சஸ்தாயியில் பேசுவதைக் கேட்பவர்கள் ஸ்தம்பித்து விடுவார்கள். அவனது தோற்றத்தின் பொருந்தாதத்தன்மை திணற வைக்கும். முதலில் எனக்கும் கூட அதுதான் சமாளிக்க சற்று கடினமானதாக இருந்தது.

“ஹே, தனிமுரா சிநேகிதியில்லாமல் இருப்பது மிகவும் தனிமையாக இல்லையா?” கித்தாரு அடுத்தநாள் கேட்டான்.

“இல்லை என்று சொல்ல மாட்டேன்” என்றேன்.

“அப்போ என் சிநேகிதியோடு வெளியே செல்வதைப் பற்றி என்ன நினைக்கிறாய்?”

அவன் என்ன சொல்கிறான் என்று எனக்கு புரியவில்லை.  “என்ன சொல்கிறாய்? அவளோடு வெளியே செல்வதா?”

“அவள் மிகச் சிறந்த பெண். அழகி, நேர்மையானவள், எல்லோரையும் போல் புத்திசாலி. நீ அவளோடு வெளியே செல். நீ வருத்தப்பட வேண்டியிருக்காது. அதற்கு நான் உத்திரவாதம்”

“எனக்குத் தெரியும்” என்றேன். “ஆனால் நான் ஏன் உன் சிநேகிதியோடு வெளியே போகவேண்டும். அது சரியாக இருக்காதே”

“ஏன் என்றால் நீ நல்லவன். இல்லாவிட்டால் நான் பரிந்துரைக்கமாட்டேன்” என்றான் கித்தாரு.

ஒன்றும் புரியவில்லை. (அவன் நம்புகிறார்போல) நான் நல்லவனாக இருப்பதற்கும் அவனுடைய சிநேகிதியோடு வெளியே செல்வதற்கும் என்ன தொடர்பு என்று புரியவில்லை.

“எரிக்காவும் நானும் இதுவரை எங்கள் மொத்தவாழ்க்கையையும் ஏறக்குறைய ஒன்றாகக் கழித்திருக்கிறோம். துவக்கத்திலிருந்தே பள்ளியில் ஒன்றாக இருந்திருக்கிறோம். நாங்கள் இயல்பாகவே இணையர்களாக இருந்திருக்கிறோம் சுற்றியிருந்தவர்களும், எங்கள் நண்பர்கள், எங்கள் பெற்றோர், எங்கள் ஆசிரியர்கள்,. அதை அங்கீகரித்திருந்தனர்.

கித்தாரு அதை நிரூபிப்பவன் போல கைகளை இறுக்கிக் கொண்டான்.

“நாங்கள் இருவரும் ஒன்றாகக் கல்லூரிக்குச் சென்றிருந்தால் மனமார்ந்த, மென்மையான வாழ்க்கையாக இருந்திருக்கும். ஆனால் நான் நுழைவுத் தேர்வில் இடறிப்போய் இப்போது இங்கிருக்கிறேன். ஏன் எதற்கு என்றெல்லாம் தெரியவில்லை எல்லாமே மோசமாகிக்கொண்டே போகிறது. அதற்காக நான் யாரையும் குறைகூறவில்லை. எல்லாம் என் தவறு.” நான் மௌனமாக அவனை கவனித்துக்கொண்டிருந்தேன்.

“எனவே நான் ஒருவிதத்தில் இரண்டு கூறாகிவிட்டேன்.” என்றான் கித்தாரு. அவன் தன் கைகளை விடுவித்துக் கொண்டான்.

”அவனையே இரண்டாகப் பிளந்து கொண்டானோ?  எப்படி ?”  என்று கேட்டேன்

அவன் தனது உள்ளங்கைகளைச் சிறிது நேரம் வெறித்தான். பிறகு சொன்னான். “நான் என்ன சொல்கிறேன் என்றால் என்னுடைய ஒரு பகுதி துயரத்தில் இருக்கிறது புரிகிறதா ? அதாவது நான் எரிச்சலூட்டும் பயிற்சி வகுப்புக்குச் சென்று தலைவலிபிடித்த நுழைவுத் தேர்வுக்குப் படித்துக் கொண்டிருக்கிறேன் எரிக்காவோ கல்லூரியில்  பந்து விளையாடிக் கொண்டிருக்கிறாள். டென்னிஸ் விளையாடிக்கொண்டே , எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறாள். அவளுக்கு புது நண்பர்கள் கிடைத்திருக்கலாம், எனக்குத் தெரிந்தவரை அவர்களோடு அநேகமாக டேட்டிங் போய்க் கொண்டிருக்கலாம் எனக்குத் தெரியும். அதையெல்லாம் நினைக்கையில் நான் பின்தங்கிவிட்டது போல் உணர்கிறேன். என் மனம் பனிமூட்டத்தில் உள்ளது நான் என்ன சொல்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா?”

“அப்படித்தான் எண்ணுகிறேன்.” என்றேன்.

“ஆனால் என்னுடைய இன்னொரு பகுதி எப்படி இருக்கிறது தெரியுமா?,,,,,,,,,,,,,,,,,,, நிம்மதியாக ? இதுபோலவே தொடர்ந்து இருந்தால் எந்த கஷ்டமும் இல்லாமல் நாங்கள் ஒரு அற்புதமான ஜோடியாக வாழ்க்கையில் பயணிக்கலாம். என்ன ஆகிவிடும் அதனால்?  அதுதான் எங்களுக்கு இருக்கும் வாய்ப்பு .அப்படித்தான் நான் நினைக்கிறேன். உனக்குப் புரிகிறதா?”

“ஆம் ஆனால் இல்லை” என்றேன்.

“அதாவது நாங்கள் கல்லூரியில் படித்துமுடித்து கல்யாணம் செய்து கொண்டு, அற்புதமான ஜோடிகளாக எல்லோரும் மகிழும்படி இரண்டு பிள்ளைகள் பெற்றுக்கொண்டு அவர்களை டெனென்சோஃபுவில் உள்ள நல்ல துவக்கப் பள்ளியில் சேர்த்து, ஞாயிறு கிழமைகளில் தமா ஆற்றங்கரைக்குச் சென்று  ஓ ப்ளா டா ஓ ப்ளா……… டி …அந்த மாதிரி வாழ்க்கை அலுப்பூட்டும் என்று நான் சொல்லவில்லை. ஆனால் வாழ்க்கை அத்தனை எளிதாக, அத்தனை சந்தோஷமானதாக இருக்குமா என ஆச்சரியமாக இருக்கிறது. அதைவிட நாங்கள் இருவரும் பிரிந்து அவரவர் வழியில் கொஞ்சம் நேரம் போகலாமே…..பிறகு உண்மையிலேயே இருவரும் பிரிந்து இருக்கவே முடியாது என்று நினைத்தால் மீண்டும் சேரலாம்”

“ஆக, விஷயங்கள் எளிதாகவும், சுமுகமாகவும் இருப்பதே ஒரு பிரச்சனை என்கிறாய் அப்படித்தானே?”

“ஆம். அதைப் பொறுத்துத்தான் பிரச்சனையே”

விஷயங்கள் எளிதாகவும் சுமுகமாகவும் இருப்பதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லை. ஆனால் அதைப்பற்றி யோசிப்பது மிகவும் குழப்பமாக இருந்ததால் அதைக் கைவிட்டேன். “ஆனால் உன் சிநேகிதியோடு நான் ஏன் வெளியே செல்லவேண்டும்?”  என்று கேட்டேன்

“அவள் வேறு ஆண்களோடு செல்வதைக் காட்டிலும் உன்னோடு செல்வது நல்லது என்று நினைத்தேன். ஏனெனில் உன்னை நான் அறிவேன். மேலும் நீ என்ன நடந்தது என்ற தகவலை எனக்கு அவ்வப்போது சொல்லமுடியும்.”

எரிக்காவை சந்திக்க விரும்பியதால் அதற்கு நான் ஒப்புக் கொண்டாலும் இந்த யோசனை சரிபட்டுவரும் என்று எனக்குத் தோன்றவில்லை. மேலும் அவளைப்போன்ற அழகான பெண் எதற்கு கித்தாருபோன்ற வினோதமானவனுடன் பழக விரும்புகிறாள் என்று அறிய விரும்பினேன். புதிய நண்பர்களிடையே இருப்பது எனக்கு எப்போதுமே சங்கோஜமாக இருந்தாலும் ஆர்வத்துக்குக் குறைச்சலில்லை.

“அவளோடு எந்தளவுக்குப் பழகியிருக்கிறாய்?”

“நீ உடலுறவைச் சொல்கிறாயா?”

“ம். எல்லாவற்றையும் முயன்றுவிட்டாயா?”

கித்தாரு தலையை ஆட்டினான். “என்னால் அது முடியவில்லை. அவளைக் குழந்தையிலிருந்தே தெரியும், புதிதாகத் தெரிந்து கொள்வதைப் போல் ஆடைகளைக் கழற்றி, அவளைத் தழுவி, கொஞ்சி, இதெல்லாம் ஒருவிதமான சங்கடம், இல்லையா? அதுவே வேறு ஒரு பெண்ணாக இருந்தால் எனக்கு இந்தப் பிரச்சனை இருந்திருக்காது. ஆனால் அவளுடைய உள்ளாடையைத் தொடுவதை நினைப்பதே – ஏனென்று தெரியவில்லை – தவறாகத் தோன்றுகிறது. புரிகிறதா?”

எனக்குப் புரியவில்லை.

“சொல்லப்போனால் நான் அவளது கையைப் பிடித்துக்கொண்டு முத்தம் கொடுத்திருக்கிறேன். ஆடைகளினூடே அவளது மார்பைத் தொட்டிருக்கிறேன். ஆனால் அதெல்லாம் எங்களை நாங்களே ஏமாற்றிக் கொள்வதைப் போல, விளையாடுவதைப் போல இருக்கும், புரிகிறதா? ஏதோ சிறிது நாங்கள் முயற்சித்தால்கூட அதற்கு மேல் முன்னேறுவதற்கான எந்த அறிகுறியும் இருக்காது.”

“அறிகுறிகளுக்காகக் காத்திருப்பதைவிட எதையாவது செய்து நீதான் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்திருக்கவேண்டும். இல்லையா? பாலுணர்வு வேட்கை என்று அதைத்தானே சொல்கிறார்கள்?”

“இல்லை, எங்கள் விஷயத்தில் அப்படி நடக்கவில்லை. அதை என்னால் விளக்கிச் சொல்லமுடியவில்லை.” என்றான் கித்தாரு. “உனக்கு எழுச்சி வரும்போது நீ நிஜமான ஒரு பெண்ணை கற்பனை செய்து கொள்கிறாய் இல்லையா?”

“அப்படித்தான் செய்வேன்.” என்றேன்.

“ஆனால் என்னால் எரிக்காவை கற்பனை செய்யமுடியாது. அப்படிச் செய்வது ஏதோ தவறு போல் தோன்றும், புரிகிறதா? எனவே நான் வேறு யாராவது ஒரு பெண்ணை நினைத்துக் கொள்வேன். நிஜத்தில் அந்தளவுக்குப் பிடிக்காத வேறு யாரையாவது. இதற்கு என்ன சொல்கிறாய்?”

நான் இதைப் பற்றி யோசித்தேன் ஆனால் எந்தத் தீர்மானத்திற்கும் வர இயலவில்லை. அடுத்தவர்களின் சுயமைதுன பழக்கம் எனக்கு அப்பாற்பட்டது. என்னைப் பற்றியே என்னால் புரிந்து கொள்ளமுடியாத ஆழமான விஷயங்கள் உள்ளன.

“எப்படியாவது நாம் முதலில் ஒன்றாகச் சந்திப்போம். நாம் மூவரும்.” என்றான் கித்தாரு. “பிறகு இதைப் பற்றி யோசிப்போம்.”

 

நாங்கள் மூவரும், நான், கித்தாரு, அவனுடைய சிநேகிதி, அவளுடைய முழுப்பெயர் எரிக்கா குரித்தாணி. டெனென்ச்சொஃபுவின் ரயில்நிலையத்தின் அருகில் உள்ள ஒரு காபி ஷாப்பில் ஞாயிறு மதியம் சந்தித்தோம். அவள் ஏறக்குறைய கித்தாரு அளவிற்கு உயரமாக இருந்தாள். அழகான பழுப்பு நிறத்தில் இருந்தாள். சிறிய கைவைத்த இஸ்த்திரி போட்ட வெள்ளை மேல்சட்டையும், அடர்நீல குட்டைப்பாவாடையும் அணிந்திருந்தாள். மதிக்கத்தகுந்த உயர்குடி கல்லூரி பெண்ணின் பரிபூரண உதாரணமாக இருந்தாள். புகைப்படத்தில் இருந்ததைப்போலவே கவர்ச்சிகரமாக இருந்தாள். ஆனால் அவளை நேரில் பார்க்கும்போது அவளது அழகைவிடவும் எவ்வித பிரயாசையுமின்றி அவளிடமிருந்து ஒளிவீசிய உயிராற்றல்தான் என்னை மிகவும் கவர்ந்தது. அவள் கித்தாருவுக்கு நேரெதிராக இருந்தாள். அவளோடு ஒப்பிடுகையில் அவன் கொஞ்சம் ஒளி குன்றியவனாகத் தோன்றினான்.

கித்தாரு எங்களை அறிமுகப் படுத்தினான். எரிக்கா என்னை நோக்கி, “அக்கி – குன்னுக்கு ஒரு நண்பன் இருப்பது பற்றி மகிழ்ச்சி.” என்றாள் எரிக்கா குர்த்தாணி என்னிடம். கித்தாருவின் முதல்பெயர் அகியோஷி.  இந்த உலகத்திலேயே அவள் ஒருத்திதான் அவனை அக்கி – குன் என்று அழைப்பவள்.

“ரொம்ப மிகைப்படுத்தாதே. எனக்கு ஒரு டன் நண்பர்கள் இருக்கிறார்கள்.” என்றான் கித்தாரு.

“இல்லை. உனக்கு கிடையாது.” என்றாள் எரிக்கா. உன்னை மாதிரி ஆட்களுக்கு நண்பர்கள் இருக்கவே முடியாது. நீ டோக்கியோவில் பிறந்தவன், இருந்தும் கான்ஸே பேச்சுவழக்கில் பேசுகிறாய். ஒவ்வொரு முறை நீ வாயைத் திறக்கும்போதும் ஹான்ஷின் டைகர்களேயோ ஷோகி படங்களை நினைத்தோ எரிச்சல் வரும். உன்னை மாதிரி ஒரு விசித்திரமான ஆளுக்கு எப்படி சாதாரணமானவர்களுடன் கலந்து பழகமுடியும்?”

“சரி அப்படி நீ சொன்னால் , இவன் கூட ஒரு விசித்திர மனிதன்தான்.” என்று கித்தாரு என்னைக் காண்பித்துச் சொன்னான். “இவன் அஷியாவிலிருந்து வருகிறான். ஆனால் டோக்கியோ வழக்கில்தான் பேசுவான்.”

“அது ரொம்ப சாதாரணம்” என்றாள் எரிக்கா. “டோக்கியோவில் இருப்பவன் கான்ஸே வழக்கில் பேசுவதைக் காட்டிலும் இது சாதாரணம்தான்.”

“நிறுத்து. இப்போது அது பண்பாட்டு வேறுபாடு.” என்றான் கித்தாரு. “பண்பாடுகள் எல்லாம் சமமானது. தெரியுமா. டோக்கியோ பேச்சுவழக்கு கான்ஸேயை விட எந்தவிதத்திலும் சிறந்தது இல்லை”

“ஒருவேளை சமமாக இருக்கலாம், ஆனால்  மேஜி உரிமை மீட்புக்குப் பிறகு டோக்கியோ மக்கள் பேசுவதுதான் நிலையான ஜப்பானிய மொழியாக உள்ளது. ப்ரான்னி மற்றும் சூயி யை யாராவது கான்ஸே வழக்கில் மொழிபெயர்த்திருக்கிறார்களா என்று கேட்கிறேன்.” என்று அழுத்திச் சொன்னாள் எரிக்கா.

“அப்படி செய்தால் நான் அதை நிச்சயமாக வாங்குவேன்” என்றான் கித்தாரு.

நான் கூட வாங்குவேன் என்றுதான் தோன்றியது ஆனால் அமைதி காத்தேன். என் வேலையைக் கவனிப்பதுதான் எனக்கு நல்லது.

“எப்படியிருந்தாலும் அது பொதுவான அறிவுதான்.” என்றாள். “நீ குறுகிய புத்தியுடையவன் அகி – குன் மேலும் பாரபட்சமானவன்.”

“குறுகிய புத்தி, பாரபட்சம் என்று எதைச் சொல்கிறாய் நீ ? என்னைப் பொறுத்தவரை பண்பாட்டு வேறுபாடுதான் மிகப் பயங்கரமான பாரபட்சம்”

அந்த விவாதத்தில் மேலும் ஆழமாகச் செல்லாமல் புத்திசாலித்தனமாகப் பேச்சை மாற்றினாள் எரிக்கா குரித்தாணி.

“எங்கள் டென்னிஸ் குழுவில் அஷியாவிலிருந்து வந்த பெண் இருக்கிறாள்.” என்றாள் என்னை நோக்கி.  “எய்கோ சகுராய். உனக்கு அவளைத் தெரிந்திருக்க வாய்ப்பிருக்கா?”

“தெரியும்.” என்றேன். எய்கோ சகுராய் ஒல்லியான உயரமான, பெண். அவளுடைய பெற்றோர் பெரிய கோல்ஃப் பயிற்சி பள்ளியை நடத்திக் கொண்டிருந்தனர். விரைப்பான, தட்டையான மார்பும் கேலியாகத் தோன்றும் மூக்கும் கொண்டவள், அப்படியொன்றும் பெரிய அழகியுமல்ல. டென்னிஸ்ஸில் மட்டும்தான் அவள் சிறப்பாக இருந்தாள். அவளை மறுபடி பார்க்கவே மாட்டேன் என்று எண்ணியிருந்தால், அது விரைவில் நடந்துவிடும் போலிருக்கிறது.

“இவன் மிகவும் நல்லவன், இதுவரை ஒரு தோழிகூட இல்லையாம்.” கித்தாரு எரிக்காவிடம் சொன்னான். அவன் என்னைப்பற்றிதான் கூறினான். “பார்ப்பதற்கு நன்றாகத்தான் இருக்கின்றான். நல்ல பழக்கவழக்கங்கள் கொண்டவன். எல்லா விஷயங்களும் தெரிந்து வைத்திருக்கிறான். கடினமான புத்தகங்களை வாசிக்கிறான். பார்த்தாலே தெரியும் மிகவும் ஒழுக்கமானவன், எந்த பயங்கர வியாதியும் கிடையாது. மிகத் தகுதியான இளைஞன் என்று சொல்வேன்.”

“அப்படியா” என்றாள் எரிக்கா. “எங்கள் கிளப்பில் அருமையான சில புதிய உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்களிடம் இவனை அறிமுகம் செய்து வைப்பதில் மகிழ்ச்சியடைவேன்.”

“வேண்டாம். நான் அதைச் சொல்லவில்லை. நீ இவனோடு வெளியே செல்வாயா? நான் இன்னும் கல்லூரி சேரவில்லை. எனவே, முன்பு போல் உன்னோடு வெளியே வரமுடியாது. எனக்குப் பதிலாக இவனோடு நீ வெளியே போகலாம். அதனால் நான் கவலைப்படாமல் இருக்கலாம்.”

“நீ கவலைப்படாமல் இருக்கலாமா? என்ன சொல்கிறாய்?” என்றாள் எரிக்கா.

“நான் என்ன சொல்கிறேன் என்றால், நான் பார்க்கவே பார்க்காத வேறு பையன்களோடு நீ  போவதை விட நான் நன்றாக அறிந்த இவனோடு நீ வெளியே சென்றால் எனக்குப் பிரச்சனையில்லை.

எரிக்கா தான் காண்பதை நம்பமுடியாதவாறு கித்தாருவை வெறித்தாள். இறுதியாக அவள் பேசினாள், “தனிமூரா – குன்னுடன் நான் வெளியே சென்றால் உனக்குப் பரவாயில்லை என்கிறாய். ஏனெனில் அவன் உண்மையிலேயே நல்ல பையன். நீ நிஜமாகவே அக்கறையுடன்தான் இந்த யோசனையைச் சொல்கிறாயா?”

“ஹே! இது ஒன்றும் மோசமான யோசனையில்லை. அல்லவா? அல்லது ஏற்கனவே நீ வேறு ஆளுடன் வெளியே போக ஆரம்பித்து விட்டாயா?”

“இல்லை. யாருடனும் போகவில்லை.” எரிக்கா அமைதியான குரலில் சொன்னாள்.

“பின் ஏன் நீ இவனோடு போக மறுக்கிறாய்? அது ஒரு விதமான பண்பாட்டுப் பரிமாற்றமாக இருக்கலாம்.”

“பண்பாட்டுப் பரிமாற்றம்” எரிக்கா திரும்பக் கூறினாள்.  என்னைப் பார்த்தாள்.

நான் சொல்லவேண்டியது எதுவும் இருப்பதுபோல தெரியவில்லை எனவே அமைதியாக இருந்தேன். காபி கரண்டியைக் கையில் எடுத்து அதன் அமைப்பை ஆராய்ந்து கொண்டிருந்தேன்.  எகிப்திய கோபுரத்தின் கலைப்பொருளை ஆராயும் அருங்காட்சியக காப்பாளர் போல.

“பண்பாட்டுப் பரிமாற்றம்?”  அப்படி என்றால் என்ன அர்த்தம்?” என்று எரிக்கா கித்தாருவைப் பார்த்துக் கேட்டாள்.

“அதாவது ஒரு விஷயத்தை வேறு கண்ணோட்டத்தில் பார்க்கும்போது அது நமக்கு மோசமாக இருக்காது.”

“ஒ இதுதான் பண்பாட்டுப் பரிமாற்றம் பற்றிய உனது கருத்தா?”

“ஆம், நான் சொல்லவருவது …….”

“சரி, அக்கி குன் நீ விரும்பினால் செய்கிறேன். பண்பாட்டுப் பரிமாற்றமல்லவா. செய்கிறேன்.” என்று எரிக்கா குர்த்தாணி உறுதியான குரலில் சொன்னாள். அருகில் ஏதாவது பென்சில் இருந்தால்கூட அதை எடுத்து இரண்டாக உடைத்துப் போட்டிருப்பேன். நான்.

அவள் தேநீரை ஒரு மிடறு விழுங்கிவிட்டு கோப்பையை மீண்டும் தட்டில் வைத்துவிட்டு புன்னகை புரிந்தாள்.

“அக்கி குன் சொல்லிவிட்டதால் நாம் டேட் போகலாம். வேடிக்கையாகத்தான் இருக்கிறது.”

“உனக்கு எப்போது ஓய்வு கிடைக்கும்?”

என்னால் பேசமுடியவில்லை. கடினமான நேரங்களில் சரியான சொற்களை உபயோகிக்க முடியாமல் போவது என்னுடைய பல பிரச்சனைகளுள் ஒன்று. இடத்தையும் மொழியையும் மாற்றுவதாலேயே அடிப்படை பிரச்சனைகள் தீர்ந்து விடுவதில்லை.

எரிக்கா அவளது கைப்பையிலிருந்து சிவப்பு நிற லெதர் நோட்டைத் திறந்து அவளது அட்டவணையை சோதித்தாள் “இந்த சனிக்கிழமை சரிப்படுமா ?.” என்று கேட்டாள்.

“எனக்கு எந்தத் திட்டமும் இல்லை” என்றேன்.

“சனிக்கிழமை சரி. எங்கே போகலாம்?”

“அவனுக்குத் திரைப்படங்கள் பிடிக்கும்” என்றான் கித்தாரு. “ என்றாவது ஒரு நாள் திரைக்கதை எழுதுவதுதான் அவனுடைய கனவு  , ஒரு திரைக்கதை பயிலரங்கில் சேர்ந்திருக்கிறான்.”

“அப்படி என்றால் திரைப்படத்திற்கே போகலாம்.  என்ன படம் என்று உன் முடிவுக்கே விடுகிறேன் தனிமூரா குன். எனக்கு பேய் படங்கள் பிடிக்காது. அதைத்தவிர எதுவாகயிருந்தாலும் நல்லது.”

“ இவள்  உண்மையிலேயே ஒரு பயந்தாங்கொள்ளி” என்றான் கித்தாரு என்னிடம். “குழந்தைகளாக இருந்தபோது நாங்கள் கோராசென்னில் இருக்கும் பேய் வீட்டிற்குச் சென்றிருக்கிறோம். அவள் என்னுடைய கைகளைப் பிடித்துக்கொண்டு,,,,,,”என்ற போது

அவனை இடைமறித்து எரிக்கா “படம் முடிந்தவுடன் நல்ல சாப்பாடு சாப்பிடலாம் ஒன்றாக” என்றாள் . அவளது குறிப்பேட்டிலிருந்து ஒரு தாளைக் கிழித்து அதில் அவளது எண்ணை எழுதி என்னிடம் கொடுத்தாள்.

“இடத்தையும் நேரத்தையும் முடிவு செய்துவிட்டு என்னைக் கூப்பிடுகிறாயா?”

என்னிடம் தொலைபேசி கிடையாது- (அது செல்போன்கள் என்னவென்றே தெரியாத காலம்) எனவே கித்தாருவும் நானும் வேலைசெய்யும் காபி ஷாப்பின் எண்ணை அவளிடம் தந்தேன். எனது கைக்கடிகாரத்தைப் பார்வையிட்டேன்.

“மன்னிக்கவும் நான் கிளம்பவேண்டும்.” என்று என்னால் முடிந்தவரை இயல்பாகக் கூற முயன்றேன். “நாளைக்குள் ஒரு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டியிருக்கிறது.”

“அதை ஒத்திப் போடமுடியாதா?” என்றான் கித்தாரு.

“இப்போதுதானே வந்தோம். இன்னும் கொஞ்சநேரம் சில விஷயங்கள் பேசலாமே. இங்கே வலது கோடியில் ஒரு பெரிய நூடுல்ஸ் கடை உள்ளது.”

எரிக்கா எந்த அபிப்பிராயமும் சொல்லவில்லை. நான் எனது காபிக்கான தொகையை மேசைமேல் வைத்துவிட்டு எழுந்தேன். “முக்கியமான அறிக்கை  அதை என்னால் தவிர்க்கமுடியாது” என்றேன். உண்மையில் அதொன்றும் அவ்வளவு முக்கியமில்லைதான்.

“நான் நாளை அல்லது நாளை மறுநாள் உன்னை அழைக்கிறேன்.” என்றேன் எரிக்காவிடம்.

மிக அழகான புன்னகை ஒன்று இதழ்களில் அரும்ப. “நான் எதிர்பார்த்துக் கொண்டிருப்பேன்.” என்றாள்.  அந்தப் புன்னகை நம்பமுடியாத அளவிற்கு இனிமையாக இருந்தது.

காபி ஷாப்பை விட்டு வெளியேறி இரயில் நிலையத்தை நோக்கி நடந்தப் போது என்ன காரியம் செய்து கொண்டிருக்கிறேன் என்று வியப்பாக இருந்தது. எல்லாவற்றையும் முடிவு செய்துவிட்ட பிறகு இப்படியெல்லாம் ஆகிவிட்டதே என்று வருந்துவது என்னுடைய தீர்க்கமுடியாத பிரச்சனைகளில் ஒன்று.

அந்தச் சனிக்கிழமை எரிக்காவும் நானும் ஷிபுயாவில் சந்தித்து “நியூயார்க்கில் படமாக்கப்பட்டிருந்த வுடி ஆலன் படத்திற்குச் சென்றோம். அவளுக்கு வுடிஆலன் பிடிக்கும் என்று எப்படியோ ஊகித்திருந்தேன்.

கித்தாரு நிச்சயமாக வுடிஆலன் படத்திற்கு கூட்டிப்போயிருக்க மாட்டான், அதிர்ஷ்டவசமாக அது ஒரு நல்ல படம். தியேட்டரை விட்டு வெளியே வரும்போது நாங்கள் நல்ல மனநிலையில் இருந்தோம்.

நாங்கள் சிறிது நேரம் அரையிருளான தெருக்களில் சுற்றித் திரிந்தோம். பிறகு சகுராகாகோவில் ஒரு சிறிய இத்தாலியன் கடைக்குச் சென்று பிஸ்ஸாவும் சியாந்தியும் சாப்பிட்டோம். அது எளிய, நியாய விலை உணவகம். சன்னமான விளக்குகள். மேசை மீது மெழுகுவர்த்திகள், (அந்நாட்களில் அநேக இத்தாலிய உணவகங்களிலும் மேசை மீது மெழுகுவர்த்திகளும், கட்டம்போட்ட மென்சனல் மேசைவிரிப்பும் இருந்தன.) நாங்கள் எல்லா விஷயங்களையும் பேசினோம்.  இரண்டு கல்லூரி இரண்டாமாண்டு மாணவர்கள் முதல் டேட்டில் என்ன மாதிரி பேசுவார்கள் என்று நினைப்பீர்களோ அந்த மாதிரியான உரையாடல். அப்போது நாங்கள் பார்த்துவிட்டு வந்த படம், எங்கள் கல்லூரி வாழ்க்கை, பழக்கவழக்கங்கள். நான் எதிர்பார்த்ததைவிட எங்கள் பேச்சு இரசிக்கத்தக்கதாக இருந்தது.அவள் இரண்டு முறை சத்தமாக சிரிக்கக் கூட செய்தாள். நானே தம்பட்டம் அடித்துக் கொள்ள விரும்பவில்லை ஆனால் பெண்களை சிரிக்க வைப்பதில் எனக்குத் தனித்திறமை இருப்பதாகத்தான் தோன்றியது.

“அகி குன் சொன்னான், நீ உனது பள்ளித் தோழியிடமிருந்து சமீபத்தில்தான் பிரிந்து விட்டாயாமே?” என்று கேட்டாள் எரிக்கா

“ம். நாங்கள் மூன்று வருடம் ஒன்றாகச் சுற்றினோம். ஆனால் துரதிர்ஷ்டவசமாக ஒத்து வரவில்லை.”

“செக்ஸ் விஷயத்தில்தான் உங்களுக்குள் ஒத்துவரவில்லை என்று அகி குன்  சொன்னான். அவள்… நீ………… எப்படி சொல்வது? அதாவது நீ விரும்பிய படி நடந்துகொள்ளவில்லை என்று?”

“அதுவும் ஒரு காரணம். ஆனால், அது மட்டுமே இல்லை. நான் உண்மையிலேயே காதலித்திருந்தால் பொறுமையாக இருந்திருக்க வேண்டும். ஆனால் நான் உண்மையிலேயே அவளைக் காதலிக்கவில்லை.”

எரிக்கா குரித்தாணி தலையை ஆட்டினாள்.

“எல்லா விஷயமும் நடந்திருந்தாலுங்கூட நாங்கள் பிரிந்துதான் இருப்போம்.” என்றேன்.  “அது டோக்கியோவிற்கு நான் இடம்பெயர்ந்த பிறகு வெளிப்படையாகவே அதிகமாகத் துவங்கியது. எங்களுக்குள் இடைவெளி ஏற்பட்டது. எதுவும் வேலைக்காகவில்லை. எல்லாமே தவிர்க்கமுடியாதவை. என்று நினைக்கிறேன்.”

“அது  உனக்குக் கஷ்டமாக இருந்ததா?” என்று கேட்டாள்.

“என்ன கஷ்டம்?”

“நட்பாக இருந்துவிட்டு திடீரென்று அவரவர் வழியில் போனது.”

“சில நேரங்களில்.” என்று உண்மையான பதிலைச் சொன்னேன்.

“ஆனால் இது போன்ற கடினமான, தனிமை நிரம்பிய அனுபவங்கள் எல்லாமே நம்முடைய இளவயதில் அவசியமானதுதான். இவையெல்லாம் நாம் வளர்வதற்கான வழிமுறைகளின் ஒரு பகுதி இல்லையா?”

“அப்படியா நினைக்கிறாய்?”

“கடுமையான குளிர்காலத்தைத் தாங்கும் மரங்கள் வலிமையடையும் போது உள்ளே இருக்கும் வளர்ச்சி வளையம் கெட்டியாகிறது.”

எனக்குள்ளே இருக்கும் வளர்ச்சி வளையத்தைக் கற்பனை செய்ய முயன்றேன். ஆனால் மரத்தின் வளையம் போல் இருக்கும் பௌம்குஹன் கேக் துண்டைத்தான் என்னால் கற்பனை செய்ய முடிந்தது.

“இதுபோன்ற அனுபவங்கள் வாழ்க்கையில் தேவையானதுதான் என்பதை ஒப்புக் கொள்கிறேன்.” என்றேன்.  “என்றாவது ஒருநாள் இவையெல்லாம் முடிவுக்கு வரும் என்று தெரிந்திருப்பதும் அதைவிட சிறந்தது.”

அவள் புன்னகைத்தாள். “கவலைப்படாதே. நீ விரைவில் நல்ல தோழியை சந்திப்பாய்.”

“அப்படித்தான் நம்புகிறேன்.” என்றேன்.

எரிக்கா குரித்தாணி சிறிது நேரம் ஏதோ குழப்பத்தில் இருந்தாள். அந்த நேரத்தில் நான் பிஸாவை சாப்பிட்டு முடித்தேன்.

“தனிமூரா குன், சில விஷயங்கள் குறித்து உன்னிடம் ஆலோசனைகள் கேட்கவேண்டும், கேட்கலாமா?”

“நிச்சயம்.” என்றேன்.  ஹா …. என்னிடம் என்ன இருக்கிறது? சற்று முன்பு என்னைச் சந்தித்தவர்கள் கூட என்னிடம் முக்கியமான விஷயங்களைப் பற்றி அறிவுரை கேட்கிறார்கள். நான் அடிக்கடி சமாளிக்க வேண்டிய பிரச்சனைகளுள் இதுவும் ஒன்று. மேலும் எரிக்கா குரித்தாணி கேட்கப்போகும் அறிவுரை மகிழ்ச்சியான விஷயமாயிருக்காது என்று வெகுநிச்சயமாகத் தெரியும்.

“எனக்கு குழப்பமாயிருக்கிறது.” என்று துவங்கினாள். தேடலில் இருக்கும் பூனையின் கண்களைப்போல் அவளது கண்கள் முன்னும் பின்னும் நகர்ந்தன.

“நிச்சயம். உனக்கு இதைப்பற்றி ஏற்கனவே தெரிந்திருக்கும், அகி – குன் இரண்டு வருடங்களாக நுழைவுத்தேர்வுக்குத் தயார் செய்து கொண்டிருந்தாலும் குறைவாகத்தான் படிக்கிறான். தேர்வுக்கான பயிற்சி வகுப்பையும் பலசமயம் அவன் புறக்கணிக்கிறான். எனவே அடுத்த வருடமும் அவன் நிச்சயம் தோல்வியடைந்துவிடுவான் என்று எனக்குத் தெரியும். தரம் குறைந்த பள்ளிகளில் இடம் தேடினால் அவனுக்கு ஏதாவது ஒன்றில் கிடைக்கலாம். ஆனால் அவன் மனதில் வஸீதாவைக் குறிவைத்திருக்கிறான். வஸீதா இல்லாவிட்டால் எதுவுமில்லை என்று முடிவு செய்திருக்கிறான். இப்படி யோசிப்பதே அர்த்தமில்லாதது என்று தோன்றுகிறது. ஆனால் அவன் நான் சொல்வதையோ, அவன் பெற்றோர் சொல்வதையோ கேட்க மாட்டான். அது ஒரு விதமான வெறி போல் ஆகிவிட்டது. ஆனால் உண்மையிலேயே அதை அடையவேண்டுமென்றால் கடுமையாக உழைத்துப் படிக்கவேண்டும். அப்போதுதான் வஸீதா நுழைவுத் தேர்வில் தேர்ச்சி அடையமுடியும். இல்லாவிட்டால் முடியாது.”

“அவன் ஏன் கஷ்டப்பட்டுப் படிப்பதில்லை?”

“அவன் அதிர்ஷ்டம் இருந்தால் தேர்ச்சி பெற்றுவிடலாம் என்று திடமாக நம்புகிறான். படிப்பதெல்லாம் ஒரு நேரவிரயம், அவனுடைய வாழ்க்கையின் விரயம் என்று நினைக்கிறான். இப்படி யோசிப்பதையே என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை.” என்றாள் எரிக்கா.

அது ஒருவிதமான புரிதல் என்று நினைத்தேன். ஆனால் என்னுடைய கருத்து எதையும் அவளிடம் பகிர்ந்து கொள்ளவில்லை.

எரிக்கா குரித்தாணி பெருமூச்சு விட்டு தொடர்ந்தாள். “தொடக்கப் பள்ளியில் அவன் நிஜமாகவே நன்றாகப் படித்தான். எப்போதும் வகுப்பில் முதல் இடத்தில் இருப்பான். ஆனால் இடைநிலை வகுப்புக்கு வந்தவுடன் அவனது தரவரிசை சரியத் துவங்கியது. அவன் ஒருவிதத்தில் குழந்தை மேதை. தினமும் விழுந்து விழுந்து படிப்பது அவனது ஆளுமைக்கு ஒத்துவராத விஷயம். அதற்குப் பதில் அவன் வெளியே போய், பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்தான். நான் அதற்கு நேரேதிர். நான் எப்போதும் முதல் மாணவியல்ல. ஆனால் முட்டிமோதி வேலையைச் செய்து முடித்துவிட்டேன்.

நான் அதிகக் கஷ்டப்பட்டுப் படிக்காமலேயே முதல் முயற்சியிலேயே கல்லூரிக்குள் நுழைந்துவிட்டேன். ஒருவேளை எனக்கு அதிர்ஷ்டம் கைகொடுத்திருக்கலாம்.”

அவள் மேலும் தொடர்ந்து, “அகி – குன்னை எனக்கு மிகவும் பிடிக்கும். அவனிடம் பல அற்புதமான குணங்கள் இருக்கின்றன. ஆனால் சிலசமயம் அவனுடைய எண்ணங்களோடு என்னால் ஒத்துப்போக முடிவதில்லை. இந்த கான்ஸே பேச்சு வழக்கையே எடுத்து கொள்ளேன். எதற்காக டோக்கியோவில் பிறந்து வளர்ந்த ஒருவன் கஷ்டப்பட்டு கான்ஸே பேச்சை கற்றுக்கொண்டு அதைப் பேசவேண்டும்? எனக்குப் புரிபடவேயில்லை. நிஜமாகவே புரியவில்லை. முதலில் அதை நகைச்சுவையாகத்தான் நினைத்தேன். ஆனால் அவன் அப்படி இல்லை. மிகத் தீவிரமாகத்தான் இருந்தான்.

“அவன் வித்தியாசமானவனாக, இதுவரை அவன் இருந்ததிலிருந்து முற்றாக வேறொரு ஆளாக இருக்க விரும்புகிறான் என்று நினைக்கிறேன்.” என்றேன்.

“அதனால்தான் கான்ஸே பேச்சு வழக்கை மட்டும் பேசுகிறானா?”

“அடிப்படையிலேயே சமாளிக்க வேண்டிய விஷயம்தான் இது ஒப்புக் கொள்கிறேன்.”

எரிக்கா பிஸாவிலிருந்து ஒரு பெரிய அஞ்சல் தலையளவு துண்டை எடுத்துக் கடித்தாள். பேசுவதற்கு முன்பு யோசனையில் ஆழ்ந்தபடி அதை மென்றாள்.

“தனிமூரா குன் கேட்பதற்கு யாருமில்லாததால் இதை உன்னிடம் கேட்கிறேன். நீ தவறாக நினைக்க மாட்டாயே”

“நிச்சயம் இல்லை.” என்றேன். வேறு என்ன சொல்லமுடியும்?

“ஒரு பையனும், பெண்ணும் நன்றாக ஒருவருக்கொருவர் தெரிந்தவர்கள் நீண்டநேரம் வெளியே  சுற்றும்போது அந்தப் பையனுக்கு அந்தப் பெண் மீது உடல்ரீதியான ஈர்ப்பு ஏற்படுவது பொதுவான  ஒரு விதி இல்லையா?” என்றாள்.

“பொதுவாகச் சொல்வதென்றால் ஆம் என்று சொல்வேன்.”

“அவன் முத்தத்திற்கும் மேல் முன்னேற விரும்புவான் இல்லையா?”

“பொதுவாக அப்படித்தான்”

“நீயும் அப்படித்தானே நினைப்பாய்”

“ஆம்” என்றேன்.

“ஆனால், அகி – குன் அப்படி இல்லை. நாங்கள் தனியாக இருந்தால்கூட அவன் அதற்கு மேல் முன்னேற மாட்டான்.”

சரியான சொற்களைத் தேர்ந்தெடுக்க எனக்கு சிறிது நேரம் பிடித்தது. “அது தனிப்பட்ட விஷயம்”என்றேன் கடைசியில்.  “தனக்குப் பிடித்ததைச் செய்வது ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு வழிகள் இருக்கலாம். அது அந்த நபரைப் பொறுத்தது- கித்தாருவுக்கு உன்னை மிகவும் பிடிக்கும். அது தெரிந்ததே. ஆனால் உங்களது உறவு மிகவும் நெருக்கமும் சுமூகமுமாய் இருப்பதால் மற்றவர்களைப் போல் அவனால் விஷயத்தை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முடியாமல் இருக்கலாம்.”

“உண்மையாகவே நீ அப்படி நினைக்கிறாயா?”

நான் தலையாட்டினேன். “உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால் எனக்கு எதுவும் புரியவில்லை. இதுபோன்ற விஷயத்தை நான் எதிர் கொண்டதில்லை. இப்படி சாத்தியங்கள் இருக்கலாம் என்று சும்மா சொன்னேன்.”

“அவனுக்கு என் மீது சுத்தமாகப் பாலுணர்வு ஆசையே இல்லை என்று சிலநேரம் தோன்றுகிறது.”

“அவனுக்கு இருக்கிறது. ஆனால், அதை ஒப்புக்கொள்வதில் சிறிது தயக்கம் இருக்கலாம்.”

“ஆனால் நமக்கு இருபது வயதாகிவிட்டது. ஏற்கனவே வளர்ந்தவர்கள். தயங்க வேண்டிய அவசியமில்லாத அளவிற்கு வளர்ந்துவிட்டோம்”

“வயதுக்கேற்ற வளர்ச்சி விகிதம் என்பது நபருக்கு நபர் வேறுபடலாம்” என்றேன்.

எரிக்கா அதைப்பற்றி யோசனை செய்தாள். அவளைப் பார்க்கையில் பிரச்சனைகளை எப்போதும் சமாளிப்பவள் போலத் தோன்றியது.

நான் தொடர்ந்தேன், “கித்தாரு ஆத்மார்த்தமாக எதையோத் தேடுகிறான் என்று நினைக்கிறேன். அவனுக்கேயுரிய பாணியில், அவனுக்கேயுரிய வேகத்தில், மிக நேர்மையாகவும், நேர்முகமாகவும். விஷயம் என்னவென்றால், அது என்னவென்று அவன் இதுவரை கண்டறிந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை. அதனால்தான் அவனால் முன்னேறிச் செல்ல முடியவில்லை. இது எல்லா விஷயங்களுக்கும் பொருந்தும். நீ எதைத் தேடுகிறாய் என்பதைப் புரிந்து கொள்ளாதவரை அதை அடைவது எளிதல்ல.”

எரிக்கா தலையை உயர்த்தி நேராக என் கண்களுக்குள் வெறித்தாள். மெழுகுவர்த்தியின் சுடர் அவளது கரிய கண்களில் பிரதிபலித்தது. சிறிய துல்லியமான ஒளி. அது பேரெழிலாக இருந்தது. நான் பார்வையைத் திருப்பிக்கொள்ள வேண்டியிருந்தது.

“உண்மையில் என்னைவிட உனக்குத்தான் அவனை நன்றாகத் தெரியும்.” நான் அழுத்திச் சொன்னேன்.

அவள் பெருமூச்செறிந்தாள்.

“உண்மையில் நான் அகி – குன் தவிர வேறொரு பையனோடும் பழகிக்கொண்டு இருக்கிறேன். டென்னிஸ் கிளப்பில் எனக்கு ஒரு வருடம் முந்தையவன்.”

இப்போது நான் மௌனமாக இருக்க வேண்டிய முறை.

“நான் உண்மையிலேயே அகி – குன்னை விரும்புகிறேன். வேறு யாரையும் அதுபோல எப்போதும் நேசிக்க முடியும் என்று தோன்றவில்லை. அவனை விட்டு விலகி இருக்கும் போதெல்லாம் நெஞ்சில் ஒரு பயங்கர வலியை உணர்கிறேன். எப்போதும் ஒரே இடத்தில்.  அவனுக்காக மட்டும்தான் என் இதயத்தில் ஓர் இடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது- ஆனால் அதே சமயம் மற்ற விஷயத்தையும் முயன்று பார்க்கும் விருப்பமும், அனைத்துவிதமான மனிதர்களுடனும் பழக வேண்டும் என்ற உத்வேகமும் இருக்கிறது- இதை ஆர்வம் என்றோ, அறிந்துகொள்ள வேண்டும் என்ற தாகம் என்றோ எப்படி வேண்டுமானாலும் பெயரிட்டுக்கொள். நிறைய சாத்தியங்கள் உள்ளன. இது இயற்கையான உணர்ச்சி. ஆனால் இதை அடக்கிவைக்க முடியாது. நான் எப்படி முயற்சிக்கிறேன் என்பது பொருட்டல்ல.”

வேலியைத் தாண்டி வளரும் செடி என்று எண்ணிக்கொண்டேன்.

“குழப்பமாக இருக்கிறது என்று நான் சொன்னது இந்த விஷயத்தைத்தான்.” என்றாள் எரிக்கா குரித்தாணி.

“இதுதான் விஷயமென்றால், நீ கித்தாருவிடம் இதைச் சொல்லிவிடவேண்டியதுதானே. நீ வேறொருவருடன் பழகும் விஷயத்தை மறைத்தால் பின்பு அவனே அதைக் கண்டுபிடித்து விட்டால் அவன் கஷ்டப்படுவான். நீ அதை விரும்புவாயா?” என்று கூறினேன்.

“ஆனால் அவனால் அதை, நான் வேறொருவருடன் பழகுகிறேன் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள முடியுமா?”

“உனது உணர்வை அவன் புரிந்து கொள்வான் என்றுதான் நினைக்கிறேன்.”

“அப்படியா?”

“ஆம்” என்றேன்.

அவளுடைய தடுமாற்றத்தை கித்தாரு புரிந்து கொள்வான் என்றுதான் தோன்றியது ஏனெனில், அவனும் அதேபோலத்தான் உணர்ந்தான். அவர்கள் இருவரும் ஒரே அலைவரிசையில் இருந்தனர். இருந்தாலும் உண்மையில் அவள் செய்வதை (அல்லது செய்யப்போவதை) அவன் அமைதியாக ஏற்றுக்கொள்வான் என்று முழுநம்பிக்கை இல்லை. அவன் அத்தனை உறுதியானவனாக எனக்குத் தோன்றவில்லை. ஆனால் அவள் இரகசியமாக நடந்து கொண்டு அவனிடம் பொய் சொன்னால் இன்னும் சிக்கலாகிவிடும் என்று தோன்றியது.

எரிக்கா குரித்தாணி குளிர்சாதனத்தின் மென்காற்றில் துடிக்கும் மெழுகுவர்த்தியின் சுடரை மௌனமாக வெறித்தபடி இருந்தாள். “எனக்கு அடிக்கடி ஒரே கனவு வருகிறது. நானும் அகி – குன்னும் கப்பலில் இருக்கிறோம். பெரிய கப்பல், நீண்ட பயணம். நாங்கள் இருவரும் ஒரு சிறிய கப்பலறையில் இருக்கிறோம். அது ஒரு பின்னிரவு. கப்பற் சாளரத்தின் வழியாக நாங்கள் முழு நிலாவைக் காண்கிறோம். ஆனால் அந்த நிலா தூய்மையான, ஸ்படிகம் போன்ற பனியால் ஆனது. அதன் அடிப்பகுதி கடலில் மூழ்கியிருக்கிறது- அகி – குன் என்னிடம்,  ‘அது நிலாவைப்போல இருக்கிறது, ஆனால் உண்மையில் அது எட்டு அங்குல தடிமனான பனிக்கட்டியால் ஆனது- எனவே காலையில் சூரியன் வரும்போது அது முழுதும் உருகிவிடலாம். எனவே வாய்ப்பு உள்ளபோதே அதை நன்றாகப் பார்த்துக் கொள்.’ என்கிறான். இந்தக் கனவு பலமுறை வந்திருக்கிறது. அழகான கனவு. எப்போதும் அதே நிலா. எப்போதும் எட்டு அங்குல தடிமன். அடிப்பகுதி கடலில் மூழ்கி இருக்கும். நான் அகி – குன் மீது சாய்ந்து நிற்கிறேன். அந்த நிலா அழகாக மிளிர்கிறது. நாங்கள் இருவர் மட்டுமே இருக்கிறோம். வெளியே மென்மையான அலைகள் தவழ்கின்றன. ஆனால் ஒவ்வொரு முறை விழித்தெழும் போதும் தாங்கமுடியாத துக்கத்தை நான் உணர்வேன். பனியால் ஆன அந்த நிலவை எங்கேயும் கண்டதில்லை.” என்றாள்.

எரிக்கா குரித்தாணி சிறிது நேரம் மௌனமாக இருந்தாள். பிறகு மீண்டும் தொடர்ந்தாள், “நானும் அகி – குன்னும் அந்தப் பயணத்தை என்றென்றைக்கும் தொடர்ந்தால் எத்தனை அற்புதமாக இருக்கும் என்று தோன்றும்.  ஒவ்வொரு இரவும் நாங்கள் கதகதப்பாக இணைந்து கப்பற் சாளரம் வழியே அந்தப் பனி நிலாவை வெறித்துக் கொண்டிருக்கலாம். அடுத்தநாள் காலை நிலா உருகி பிறகு மீண்டும் இரவில் உதயமாகும். ஆனால் அதுவல்ல விஷயம். ஒருவேளை ஓர் இரவில் நிலா அங்கு இல்லாமல் போகலாம், அப்படி நினைக்கவே எனக்குத் திகிலாக இருக்கிறது. அடுத்த நாள் எப்படிப்பட்ட கனவு வரும் என்று வியந்தேன்.. என் உடல் சுருங்குவதை நானே கேட்பதைப் போல் பயமாக இருந்தது.”

 

அடுத்தநாள் கித்தாருவை காபி அருந்தகத்தில் நான் சந்தித்தபோது   ‘எப்படி டேட் இருந்தது’ என்றான்.

“நீ அவளுக்கு முத்தம் கொடுத்தாயா?”

“இல்லவே இல்லை” என்றேன்.

“கவலைப் படாதே, அப்படிச் செய்திருந்தால் நான் ஒன்றும் கோபப்பட மாட்டேன்.”

“அப்படியெல்லாம் நான் எதையும் செய்யவில்லை”

“அவளது கையைக் கூட பிடிக்கவில்லையா?”

“இல்லை. பிடிக்கவில்லை”

“பிறகு என்னதான் செய்தாய்?”

“நாங்கள் படம் பார்க்கப் போனோம். கொஞ்சம் சுற்றினோம். இரவு உணவு சாப்பிட்டோம். பிறகு பேசிக் கொண்டிருந்தோம்.”  என்றேன்.

“அவ்வளவுதானா?”

“முதல் டேட்டிங்கில் பொதுவாக அவசரப்பட மாட்டோமில்லையா?”

“அப்படியா? நான் ஒழுங்கான டேட்டிங் சென்றதேயில்லை. எனவே எனக்குத் தெரியாது”

“ஆனால் அவளோடு இருப்பதை மிகவும் இரசித்தேன். அவள் மட்டும் என்னுடைய சிநேகிதியாக இருந்திருந்தால் அவளை என் கண்பார்வையை விட்டு அகல விடமாட்டேன்.”

கித்தாரு அதை ஒப்புக் கொண்டான். அதைப் பற்றி ஏதோ சொல்ல நினைத்து அதைவிட நல்லதாகக் கேட்க யோசித்தான். “பிறகு என்ன சாப்பிட்டீர்கள்?” எனக் கேட்டான்.

நான் பீஸாவைப் பற்றியும் சியாந்தி பற்றியும் சொன்னேன்.

“பீஸாவும், சியாந்தியுமா?” அவன் ஆச்சரியமான தொனியில் கேட்டான். “அவளுக்கு பீஸா பிடிக்கும் என்றே எனக்குத் தெரியாது. நாங்கள் நூடுல்ஸ் கடைக்கும், மலிவான உணவகங்களுக்கும்தான் செல்வோம். ஒயினா? அவள் குடிப்பாள் என்று எனக்குத் தெரியவே தெரியாதே.”

கித்தாரு மதுவைத் தொட்டதேயில்லை.

“அவளைப் பற்றி நீ அறியாத பல விஷயங்கள் இருக்கலாமோ என்னவோ?” என்றேன்.

டேட் பற்றிய அவனது எல்லா கேள்விகளுக்கும் பதிலளித்தேன். வுடி ஆலன் படம் பற்றி (அவனது வற்புறுத்தலால் முழுக் கதையையும் சொன்னேன்) உணவைப் பற்றி (எவ்வளவு கட்டணம் வந்தது? பகிர்ந்து கொண்டோமா இல்லையா?) அவள் என்ன ஆடை அணிந்திருந்தாள்? (வெள்ளை நிற பருத்தி ஆடை, கூந்தலைச் சேர்த்துக் கட்டியிருந்தாள்) என்னவிதமான உள்ளாடை அணிந்திருந்தாள் (அது எனக்கு எப்படித் தெரியும்!!!) நாங்கள் என்ன பேசினோம் ?  (அவள் வேறு ஒரு பையனுடன் பழகுவதைப் பற்றி எதுவும் சொல்லவில்லை. போலவே பனி நிலா கனவு பற்றியும்.

“நீங்கள் இருவரும் அடுத்த டேட் பற்றி எப்போது தீர்மானித்தீர்கள்?”

“இல்லை. செய்யவில்லை” என்றேன்.

“ஏன் இல்லை? உனக்கு அவளைப் பிடித்திருக்கிறது அல்லவா?”

“அவள் அற்புதமானவள். ஆனால் இது போல் எங்களால் தொடரமுடியாது. அவள் உன்னுடைய தோழி. சரியா? அவளை முத்தமிட்டால் பரவாயில்லை என்று சொல்கிறாய். ஆனால் என்னால் அப்படி செய்யமுடியாது.”

கித்தாரு ஆழமாக யோசித்தான். “உனக்கு ஒரு விஷயம் தெரியுமா? நான் உயர்நிலைப் பள்ளியை முடிக்கும் வரை மனநல மருத்துவரிடம் சிகிச்சை பெற்று வந்தேன். என் பெற்றோர், ஆசிரியர்கள் எல்லோரும் அறிவுறுத்தினார்கள். ஏனென்றால் நான் அவ்வப்போது சில காரியங்களைச் செய்து கொண்டிருந்தேன். அவை சராசரியான விஷயங்களல்ல தெரியுமா? ஆனால் என்னைப் பொருத்தவரை மருத்துவரைப் பார்ப்பது பிரயோஜனமற்றது. மருத்துவர்கள் எந்த கன்றாவியையும் செய்வதில்லை. தனக்கு எல்லாம் தெரியும் என்பது போல நம்மைப் பார்ப்பார்கள். பிறகு நம்மையே பேசவைத்து கேட்டுக் கொண்டிருப்பார்கள். அதை நானே செய்வேனப்பா என்று முடித்தேன்.”

“நீ இன்னமும் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறாயா?”

“ஆம். மாதத்திற்கு இருமுறை. என்னைக் கேட்டால் வீண் செலவு என்பேன். எரிக்கா உன்னிடம் இதைப்பற்றிச் சொல்லவில்லையா?”

நான் இல்லை என்று தலையாட்டினேன்.

“உன்னிடம் உண்மையைச் சொல்கிறேன். என்னுடைய எண்ணங்களில் என்ன பிரச்சனை என்று தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் சாதாரணமான விஷயங்களை சாதாரணமாகத்தான் செய்கிறேன். ஆனால் மற்றவர்கள் நான் விசித்திரமாகச் செய்வதாகச் சொல்கிறார்கள்.”

“ஆம் சில விஷயங்கள் நீ செய்வது சாதாரணம் இல்லை.” என்றேன்.

“எது போல?”

“உன்னுடைய கான்ஸே பேச்சு போல. டோக்கியோவிலிருந்து வந்த ஒருத்தனுக்கு படித்து கற்றுக் கொள்வது, அதுவும் இத்தனை கச்சிதமாக. “

“நீ சொல்வது சரிதான். அது கொஞ்சம் அசாதாரணம்தான்.” என்று கித்தாரு ஒப்புக் கொண்டான்

“அது மற்றவர்களுக்கு கொஞ்சம் பயத்தை ஏற்படுத்தும்.”

“ம் இருக்கலாம்”

“சாதாரண மக்கள் இத்தனை மெனக்கெட மாட்டார்கள்.”

“ஆம். நீ சொல்வது சரிதான்.”

“ஆனால் என்னைப் பொருத்தவரை நீ செய்வது அசாதாரணமாக இருந்தாலும் அது யாரையும் துன்புறுத்தவில்லை என்றுதான் சொல்வேன்.”

“இதுவரை இல்லை”

“அப்புறம் என்ன தவறு அதில்?” அந்தச் சமயத்தில் நான் கொஞ்சம் நிதானம் இழந்துவிட்டேன். (எதற்காக, யார் மீது என்று தெரியவில்லை) என் குரல் தொனி சற்று கரகரப்பாக பிசிறடித்ததை என்னால் உணர முடிந்தது. “இதில் தவறிருப்பதாக யார் சொன்னது? நீ யாரைப்பற்றியும் இப்போது கவலைப்படவில்லையென்றால் பிறகென்ன? இதற்குப் பிறகு நடக்கப்போவதை யார் அறிவார்? நீ கான்ஸே பேச்சு வழக்கைப் பேச விரும்பினால் பேசு. நுழைவுத்தேர்வுக்குப் படிக்க விருப்பமில்லை. படிக்காதே. எரிக்கா குரித்தாணியின் உள்ளாடைக்குள் கையை நுழைக்க விரும்பவில்லையா? யார் உன்னைச் செய்யச் சொல்கிறார்கள்? இது உன் வாழ்க்கை. உனக்கு என்ன பிடிக்கிறதோ அதை நீ செய். மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்பதை மற.”

கித்தாரு வாயைப் பிளந்து வியப்பில் என்னை வெறித்துப் பார்த்தான். “தனிமூரா உனக்கு ஒன்று தெரியுமா? நீ நல்லவன். சில நேரங்களில் கொஞ்சம் மிகையாகவே சாதாரணமானவன் என்றாலும் கூட.”

“என்ன செய்யப்போகிறாய் நீ ?  நம் ஆளுமையை சும்மா நாம் மாற்றிக் கொள்ளமுடியாது” என்றேன்.

“சரியாகச் சொன்னாய். நமது ஆளுமையை நாம் மாற்றிக் கொள்ள முடியாது. அதைத்தான் நான் சொல்ல விரும்புகிறேன்.”

“ஆனால் எரிக்கா அருமையான பெண்.  உன் மீது உண்மையாகவே அக்கறை கொண்டவள். நீ என்ன செய்தாலும் அவளை மட்டும் விட்டு விடாதே…. அவளைப் போன்ற அற்புதமான பெண்ணை மீண்டும் நீ காணமுடியாது.” என்றேன்.

“எனக்குத் தெரியும். நீ சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஆனால் வெறும் தெரிந்து வைத்திருப்பதால் மட்டும் எனக்கு பயனில்லை” என்றான் கித்தாரு.

“ஹே. அதைச் சொல்லிக்காட்ட மட்டும் மற்றவருக்கு வாய்ப்பு தரலாமா?”

இரண்டு வாரங்கள் கழித்து, கித்தாரு காபி ஷாப் வேலையை விட்டு நின்றுவிட்டான். வேலையை விட்டான் என்பதைவிட சட்டென்று மறைந்துவிட்டான். தொடர்பு கொள்ளவும் இல்லை, விடுப்பு எடுத்துக்கொள்வதாகக் கூட எதுவும் தெரிவிக்க இல்லை. மேலும் இது நடந்தது பரபரப்பான வேளை. எனவே கடை முதலாளி எரிச்சலுற்றார். கித்தாரு  ‘மிகவும் பொறுப்பற்று’ நடந்து கொண்டான் என்று அவர் எண்ணினார். அவனுக்கு ஒருவாரச் சம்பள பாக்கி இருந்தது ஆனால் அதைப்பெற்றுக் கொள்ளக்கூட அவன் வரவேயில்லை. கடை முதலாளி அவனது முகவரி எனக்குத் தெரியுமா என்று கேட்டார்.  நான் தெரியாது என்று சொல்லிவிட்டேன்.  அவனது தொலைபேசி எண்ணோ, வீட்டு முகவரியோ எனக்குத் தெரியாது. எனக்குத் தெரிந்ததெல்லாம் பொதுவாக டெனென்சோஃபுவில் அவனது வீடு எங்கே இருக்குமிடமும் எரிக்கா குரித்தாணியின் தொலைபேசி எண்ணும்தான்.

கித்தாரு வேலையை விடுவதைப் பற்றி என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை, அதன் பிறகு என்னைத் தொடர்பும் கொள்ளவில்லை. அவன் அப்படியே மறைந்து போனான். அது என்னைக் காயப்படுத்தியது என்று சொல்லலாம். நாங்கள் நல்ல நண்பர்கள் என்றுதான் நினைத்திருந்தேன். அப்படியெனில் இதுபோல் முற்றிலும் முறித்துக் கொண்டு சென்றது கஷ்டமாயிருந்தது. டோக்கியோவில் எனக்கு வேறு நண்பர்களும் கிடையாது.

ஒருவிஷயம்தான் எனக்கு உறுத்தலாகவே இருந்தது. மறைந்து போவதற்கு இரண்டுநாள் முன்னர் கித்தாரு அவனது வழக்கத்திற்கு மாறாக அமைதியாக இருந்தான் என்பதே. நான் அவனிடம் பேசியபோது அவன் அதிகம் எதுவும் சொல்லிக் கொள்ளவில்லை. அதன் பிறகு அவன் மறைந்து போனான். எரிக்கா குரித்தாணிக்கு போன் செய்து அவனது இருப்பிடத்தைக் கண்டுபிடித்திருக்கலாம். ஆனால் ஏனோ தலையிட விரும்பவில்லை. அவர்கள் இருவருக்கிடையே நடந்தது எதுவாயினும் அது அவர்களுடைய சொந்த விஷயம் என்று கருதினேன். நான் அதுவரை செய்ததற்கும் மேலாக இன்னமும் தலையை நுழைப்பது எனக்கு நல்லதல்ல. ஏனோ எனக்கான குறுகிய சின்ன உலகத்துக்கு மீண்டும் திரும்ப வேண்டியிருந்தது-

இவையெல்லாம் நடந்தபிறகு எனக்கு ஏனோ சில காரணங்களினால் என் பழைய சிநேகிதியைப் பற்றி நினைக்கத் துவங்கினேன். கித்தாருவையும் எரிக்காவையும் பார்த்தபோது எனக்கு என்னவோ போல் இருந்தது.  என் நடத்தைக்கு மன்னிப்பு கோரி நீண்ட கடிதம் ஒன்றை எழுதினேன். நான் அவளிடம் இன்னும் இதமானவனாக நடந்து கொண்டிருக்கலாம். ஆனால் அவளிடமிருந்து பதில் ஏதும் வரவேயில்லை.

நான் எரிக்கா குரித்தாணியை உடனடியாக அடையாளம் கண்டு கொண்டேன். இரண்டேமுறைதான் அவளைப் பார்த்திருக்கிறேன். இப்போது பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன. ஆனால் அவள்தான் அதில் சந்தேகமேயில்லை. அவள் இப்போதும் அழகாக அதே உயிர்ப்புடன், துடிப்பான பாவத்துடன் இருந்தாள். கருப்பு லேஸ் உடையும், கருப்பு குதியுயர்ந்த காலணிகளும், மெல்லிய கழுத்தைச்சுற்றி இரட்டைவட முத்துமாலையும் அணிந்திருந்தாள். அவளும் என்னை ஞாபகம் வைத்திருந்தாள். நாங்கள் அகாஸிவில் உள்ள ஒரு உணவகத்தில் ஒயின் விருந்திற்கு வந்திருந்தோம். அது கருப்பு டை விழா. நான் அந்த விழாவிற்கு கருப்பு உடையும், கருப்பு டையும் அணிந்து சென்றிருந்தேன். அந்த விழாவை நடத்தும் நிறுவனத்தின் பிரதிநிதி அவள். அந்த வேலையைத் தெளிவாகச் செய்து சிறப்பாக செயலாற்றிக் கொண்டிருந்தாள். நான் அங்கே ஏன் சென்றிருந்தேன் என்ற காரணங்களைச் சொல்லத் தொடங்கினால் ரொம்ப நேரம் பிடிக்கும்.

“தனிமூரா குன் நாம் டேட்டிங் சென்றுவந்த அந்த இரவுக்குப் பின் ஏன் நீ என்னைத் தொடர்பு கொள்ளவே இல்லை.? நாம் இன்னும் நிறையப் பேசவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்.” என்றாள்.

“நீ என் தகுதிக்கு மீறி அழகாய் இருந்ததனால்” என்றேன்.

அவள் புன்னகைத்தாள். “கேட்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அது முகப்புகழ்ச்சியாக இருந்தாலும் கூட”

“என் வாழ்வில் யாரையும் நான் முகப்புகழ்ச்சி செய்ததேயில்லை.” என்றேன்.

அவள் ஆழமாகப் புன்னகைத்தாள். ஆனால் நான் சொன்னது பொய்யோ முகப்புகழ்ச்சியோ இல்லை. நான் முழு ஈடுபாட்டுடன் ஆர்வம் காட்டமுடியாத அளவுக்கு அவள் பேரழகாக இருந்தாள், அப்போதும் இப்போதும். அவளது புன்னகை நிஜமேயல்ல எனுமளவுக்கு அற்புதமாக இருந்தது.

“நீ வேலை செய்துகொண்டிருந்த காபிஷாப்பை தொடர்புகொண்டு கேட்டேன். ஆனால் நீ அங்கே வேலை செய்யவில்லை என்று சொல்லிவிட்டார்கள்.” என்றாள்.

“கித்தாரு போனபிறகு அந்த வேலை முற்றிலும் சலிப்பாகிப் போனது- எனவே இரண்டு வாரங்கள் கழித்து நானும் வேலையை விட்டுவிட்டேன்.

எரிக்காவும் நானும் கடந்த பதினாறு வருடங்களாக நாங்கள் வாழ்ந்து வந்த எங்களது வாழ்க்கையைச் சுருக்கமாக மீள்பார்வை செய்து கொண்டோம். கல்லூரிக்குப் பிறகு என்னை ஒரு பதிப்பகத்தார் குத்தகைக்கு எடுத்திருந்தார். ஆனால் மூன்று வருடங்களில் அதிலிருந்து வெளியேறி அதன்பிறகு எழுத்தாளனாகவே இருந்து கொண்டிருக்கிறேன். இருபத்தேழு வயதில் நான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் இதுவரை குழந்தைகளில்லை. எரிக்கா திருமணமே செய்துகொள்ளவில்லை. “என்னைக் கடுமையாக வேலை வாங்குகிறார்கள். அதனால் திருமணம் செய்துகொள்ளக் கூட நேரமில்லை.” என்றாள் வேடிக்கையாக. இத்தனை வருடங்களில் அவளுக்கு கணக்கற்ற காதல் விவகாரங்கள் இருந்திருக்கலாம் என்று ஊகித்தேன். அவளைப் பற்றிய ஏதோ ஒன்று, அவளிடம் இருந்து பிரகாசிக்கும் ஒளிவட்டம் அதை எனக்கு உறுதிசெய்தது. கித்தாருவைப் பற்றி முதலில் பேச்சை எடுத்தது அவள்தான்.

“அகி – குன் இப்போது டென்வரில் சுஷி சமையல் கலைஞனாக வேலை செய்து கொண்டிருக்கிறான்.” என்றாள்.

“டென்வர்”

“ டென்வர் , கொலராடோ. அவன் இரண்டு மாதங்களுக்கு முன்னர் எனக்கு அனுப்பியிருந்த கடிதத்தின் படி.”

“ஏன் டென்வர்?”

“எனக்குத் தெரியாது. அதற்கு முன் வந்த கடிதம் சீட்டலில் இருந்து வந்தது. அங்கேயும் சுஷி சமையல் கலைஞனாகத்தான் இருந்தான். அது ஒரு வருடத்திற்கு முன். அவன் திடீர் திடீர் என்று கடிதங்கள் அனுப்புவான். எப்போதும் இரண்டு வரிகள் கிறுக்கப்பட்ட கடிதங்கள். சில நேரங்களில் அவனது விலாசத்தைக் கூட குறிப்பிட்டிருக்க மாட்டான்.

“சுஷி சமையல் கலைஞனா? அப்படியென்றால் அவன் கல்லூரிக்கே போகவில்லையா? என்று நான் முனுமுனுத்தேன்.

அவள் தலையாட்டினாள். “கோடை விடுமுறையின் முடிவில் என்றுதான் நினைக்கிறேன், நுழைவுத்தேர்வுக்குப் படிப்பதை நிறுத்திக் கொள்ளப்போவதாக  அவன் திடீரென்று அறிவித்தான். தொடர்ந்து அதையே முயன்று கொண்டிருப்பதால் நேரம் விரயமாவதாக சொன்னான். அதன் பிறகு அவன் ஒசாகாவில் ஒரு சமையல் வகுப்பில் சேர்ந்தான். உண்மையில் அவன் கான்ஸே சமையலைக் கற்றுக்கொண்டு கோஷின் விளையாட்டு அரங்கத்தில் நடக்கும் விளையாட்டுக்குச் செல்ல விரும்புவதாகக் கூறினான். அது ஹன்ஷின் டைகர் அரங்கம். நான் அவனிடம், “இது மாதிரியான ஒரு முக்கிய விஷயத்தை முடிவு செய்யும்போது என்னைக் கேட்காமல் எப்படிச் செய்கிறாய் ? என் கதி என்ன?” என்று கேட்டேன்.

“அதற்கு அவன் என்ன சொன்னான்?” என்றேன்.

அவள் எதுவும் சொல்லவில்லை. உதட்டைக் கடித்துக் கொண்டாள். ஏதோ சொல்ல வருவதைப் போலிருந்தாள். ஆனால் பேசினால் அழுது விடுவாள் என்று தோன்றியது- தனது நுட்பமான கண் ஒப்பனையைக் கலைக்க விரும்பாதவளாய் கண்ணீரை அடக்கப் பிரயத்தனப் பட்டாள். நான் சட்டென பேச்சை மாற்றினேன்.

“ஷிபுயாவில் இத்தாலியன் உணவகத்திற்கு நாம் சென்றிருந்தபோது மலிவான சியாந்தியை அருந்தியது நினைவிலிருக்கிறது. இப்போது நம்மை கவனி. முதல்தரமான நாபா ஒயினைச் சுவைக்கிறோம். விதியின் வினோத திருப்பம்.”

“நினைவிருக்கிறது.” என்றாள் தன்னைக் கட்டுப்படுத்தியவாறு. “நாம் வுடி ஆலன் படம் பார்த்தோம். என்ன படம் அது?” என்றாள்.

நான் சொன்னேன்.

“அற்புதமான படம் அது”

”நானும் ஒப்புக்கொண்டேன். நிச்சயமாக வுடி ஆலனின் ஆகச்சிறந்த படைப்புகளில் ஒன்று”

“டென்னிஸ் கிளப்பில் உன்னோடு சுற்றிக் கொண்டிருந்த இளைஞனோடு எல்லாம் சுமுகமாகப் போனதா?” என்று கேட்டேன்.

அவள் தலையாட்டினாள். “இல்லை, நான் நினைத்திருந்தபடி அவனோடு இணக்கமாக இருக்கமுடியவில்லை. ஆறுமாதம் சுற்றியபின் நாங்கள் பிரிந்து விட்டோம்.”

“நான் ஒரு கேள்வி கேட்கலாமா ? மிகவும் தனிப்பட்ட விஷயம்.” என்றேன்.

“நிச்சயம். என்னால் பதில் சொல்லமுடியும் என்றுதான் தோன்றுகிறது.”

“உன்னைக் கஷ்டப்படுத்தும் நோக்கத்தில் கேட்கவில்லை.”

“முடிந்தவரை சொல்கிறேன்.”

“அவனோடு நீ உறவு வைத்துக் கொண்டாய் இல்லையா”

எரிக்கா ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்தாள். அவளது கண்ணம் சிவந்தது.

“இப்போது ஏன் அதைக் கிளறுகிறாய்?”

“நல்ல கேள்வி. நீண்ட நாட்களாக என் மனதிலிருந்தது. ஆனால் கேட்க சங்கோஜமாக இருந்தது , மன்னித்துவிடு.”

எரிக்கா தலையை மெல்ல ஆட்டிக்கொண்டாள். “இல்லை. எனக்கு ஒன்றும் கஷ்டமில்லை. ஆனால் இதை எதிர்பார்க்கவில்லை. அதெல்லாம் நீண்ட வருடங்களுக்கு முன்பு.”

நான் அறையைச் சுற்றிலும் பார்த்தேன்.  சம்பிரதாய உடைகளில் மக்கள் அங்கங்கே காணப்பட்டனர் விலையுயர்ந்த ஒயின் புட்டிகளிலிருந்து கார்க்குகள் தெறித்தன. ஒரு பியானோகாரி “ Like Someone In Love” யை வாசித்துக்கொண்டிருந்தாள்.

“ஆம் என்பதுதான் என் பதில், நான் பலமுறை அவனோடு உறவு வைத்துக் கொண்டேன்” என்றாள்.

“ஆர்வம், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்.” என்றேன்.

அவள் சாடையாகச் சிரித்தாள், “நீ சொல்வது சரி. ஆர்வம், இன்னும் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவல்.” என்றாள்.

“அப்படித்தான் நாம் நமது வளர்ச்சி வளையங்களைப் பெருக்கிக் கொள்கிறோம்.”

“அதை அப்படியும் சொல்லலாம்.” என்றாள்.

“முதல் டேட்டிங்கிற்கு நாம் ஷிபியாவுக்கு சென்று வந்த உடன்தான் நீ அவனுடன் முதல்முறையாகப் படுக்கையைப் பகிர்ந்து கொண்டிருப்பாய் என்று நினைக்கிறேன். “

அவள் தனது மனதின் நினைவடுக்குகளைப் புரட்டினாள். “அப்படித்தான் நினைக்கிறேன். அதற்கு ஒரு வாரத்திற்குப் பிறகு. அந்த நிமிடங்களை நான் நன்றாக நினைவு வைத்திருக்கிறேன்.  ‘அந்த மாதிரி’ அனுபவம் அதுதான் முதல் முறை.”

“கித்தாரு வெகு விரைவிலேயே அதைமோப்பம் பிடித்திருப்பானே” என்றேன் அவளது கண்களுக்குள் வெறித்தபடி.

அவள் கீழே குனிந்து அவளது கழுத்திலிருந்த முத்தாரத்திலிருந்து ஒவ்வொரு முத்தாகப் பார்த்துக் கொண்டிருந்தாள். எதையோ நினைத்துப் பெருமூச்சு விட்டாள். “ஆம் நீ சொல்வது சரி. அகி குன்னுக்கு மிக உறுதியான உள்ளுணர்வு உண்டு”

“ஆனால் உனக்கு அப்படி இல்லை போலிருக்கிறது.”

அவள் தலையாட்டினாள். “துரதிர்ஷ்டவசமாக நான் அந்த அளவிற்கு புத்திசாலியில்லை. நான் புரிந்து கொள்ள நிறைய நாட்கள் வேண்டியிருந்தது. எப்போதும் நான் சுற்றுவழியில்தான் செல்கிறேன்.”

அதைத்தான் நாம் எல்லோருமே செய்கிறோம். முடிவற்ற சுற்றுவழியைத் தேர்ந்தெடுக்கிறோம். என்று அவளிடம் சொல்லவிரும்பினேன். ஆனால் மௌனமாக இருந்தேன். பழமொழிகளை உளறுவது என் பிரச்சனைகளில் ஒன்று-

கித்தாருவுக்கு திருமணமாகிவிட்டதா?”

“எனக்குத் தெரிந்து இல்லை. அல்லது என்னிடம் தனக்குத் திருமணம் ஆனதைச் சொல்லாமல் விட்டிருக்கலாம்.  ஒருவேளை நாங்கள் இருவரும் எப்போதுமே திருமணம் செய்து கொள்ளும் இரகமே இல்லை போல.” என்றாள் எரிக்கா.

“அல்லது இரண்டுபேரும் சுற்றிவளைத்து செய்துகொள்வீர்களோ என்னவோ?”

“இருக்கலாம்”

“நீங்கள் இருவரும் சந்தித்து மீண்டும் ஒன்றிணைவது நடைமுறை சாத்தியத்திற்கு அப்பாற் பட்டதா?”

அவள் முறுவலித்தாள். கீழே குனிந்தாள். தலையை உதறிக்கொண்டாள். அந்த செய்கைக்கு என்ன பொருள் என்று சொல்ல முடியவில்லை ஒரு வேளை சாத்தியமில்லை என்பதாக இருக்கலாம்.  அல்லது அதைப் பற்றி யோசிப்பதே பொருளற்றது என்பதாக இருக்கலாம்.

“நீ இப்போதும் அந்த பனி நிலா பற்றி கனவு காண்கிறாயா?” என்று கேட்டேன்.

அவள் தலையை உயர்த்தி என்னை உற்றுப் பார்த்தாள். மிக அமைதியாக, மெதுவாக ஒரு புன்முறுவல் அவளது முகத்தில் படர்ந்தது.  முற்றிலும் இயல்பான கபடமற்ற புன்னகை.

“என் கனவை ஞாபகம் வைத்திருக்கிறாயா?” என்று கேட்டாள்.

“சில காரணங்களுக்காக ஞாபகம் இருக்கிறது.”

“இருந்தாலும் அது இன்னொருவரின் கனவு இல்லையா?”

“கனவுகள் தேவையிருந்தால் கடனாகக் கொடுக்கவோ வாங்கவோ கூடிய விஷயம்” என்றேன். உண்மையில் சிலநேரங்களில் இதுபோல பழமொழிகளை மிகைப்படுத்தி விடுகிறேன்.

“அருமையான கருத்து” என்றாள். அவனது புன்னகை அவள் முகத்தை மேலும் அழகாக்கியது.

யாரோ அவள் பெயரைச் சொல்லி என் பின்னாலிருந்து அழைத்தார்கள். அவள் தனது வேலையைக் கவனிப்பதற்காகத் திரும்பவேண்டிய நேரம் வந்துவிட்டது.

விடைபெற்றுக் கொள்ளும் முன் கூறினாள் “அந்தக் கனவு அதற்க்குப் பிறகு வருவதேயில்லை. ஆனால் எல்லாக் குறிப்புகளும் இன்னும் நினைவிருக்கிறது.”

அவள் சட்டெனத் திரும்பி நடந்தாள். பெண்கள் அறைக்குச் சென்று மஸ்காராவை சரிசெய்யக் கூடும் என்று நான் கற்பனை செய்து கொண்டேன்.

நான் காரில் திரும்புகையில் ரேடியோவில் பீட்டில்ஸின் “Yesterday” பாடல் ஒலித்தது. கித்தாரு குளியலறையில், முனுமுனுத்த பைத்தியக்காரத்தனமான வரிகளை நினைக்காமல் இருக்க முடியவில்லை. வினோதமான அந்த வரிகளை சில காலம் வரை நினைவில் வைத்திருந்தேன், ஆனால் எனது ஞாபகம் மெல்லத் தேய்ந்து இறுதியில் அவற்றை முழுவதும் மறந்துபோனேன். இப்போது நினைவிலிருப்பதெல்லாம் சிதறல்கள்தான். அது கித்தாரு பாடிய வரிகள் என்று என்னால் உறுதியாகச் சொல்லமுடியாது. காலம் செல்லச்செல்ல நினைவு தவிர்க்கமுடியாதபடி தானே மறுகட்டமைப்பு செய்து கொள்கிறது-

நான் இருபது வயதாக இருக்கும்போது டைரி எழுதவேண்டும் என்று முயன்றிருக்கிறேன். ஆனால் என்னால் முடிந்ததில்லை. அந்நாட்களில் என்னைச் சுற்றி நடந்த பல விஷயங்களை அரிதாகவே என்னில் நினைவு வைத்துக்கொள்ள முடிந்தது. அப்பொழுதே அவற்றை ஒரு குறிப்பேட்டில் தனியாக எழுதிவைத்தால்தான் உண்டு. அவற்றில் பல ஹா! இதை எழுதவேண்டும் என்று நினைக்கும் படி இருந்ததில்லை. பலமான எதிர்காற்றில் கண்களை விரியத் திறந்துகொண்டு மூச்சு திணறியபடி கடந்து சென்றதுதான் நான் செய்ய முடிந்தவை.

ஆனால் ஆச்சரியப்படும் வகையில் , எனக்கு கித்தாருவை நன்றாக நினைவிருக்கிறது. நாங்கள் சில மாதங்களுக்குத்தான் நண்பர்களாக இருந்தோம். இருந்தாலும் ஒவ்வொரு முறை Yesterday பாடலைக் கேட்கும் போதெல்லாம் அவனுடன் சம்பந்தப்பட்ட காட்சிகளும், உரையாடல்களும் என் மனதில் துல்லியமாக நினைவுக்கு வருகிறது. அவனுடைய டெனென்சோஃபு வீட்டு குளியலறையில் தொட்டியில் ஊறிக்கொண்டே நாங்கள், ஹன்ஷின் டைகர்கள் மட்டையடிக்கும் வரிசை, பாலுணர்வின் கூறுகளில் உள்ள சில  சிக்கல்கள், நுழைவுத் தேர்வுக்குப் படித்து மூளை எப்படி மரத்து சலிப்படைகிறது, டெனென்சோஃபு தொடக்கப் பள்ளியின் வரலாறு, கான்ஸே பேச்சுவழக்கின் உணர்ச்சிவளம் பற்றியெல்லாம் பேசுவோம். எரிக்காவுடன் சென்ற அந்த விசித்திரமான டேட் எனக்கு நினைவிருக்கிறது. இத்தாலிய உணவகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றப்பட்ட  மேசையில் எரிக்கா எதை வெளிப்படையாகக் கூறினாளோ அது கூட நினைவிருக்கிறது. இதெல்லாம் நேற்றுதான் நடந்தது போல் தோன்றுகிறது.   ஞாபகங்களை மீட்டெடுக்கும் சக்தி இசைக்கு இருக்கிறது. சிலநேரங்களில் மிக உக்கிரமாக வலிக்குமளவிற்கு.

ஆனால் என் இருபது வயதை நானே திரும்பிப்பார்க்கையில் எனக்கு நினைவிலிருப்பதெல்லாம் பெரும்பாலும் நான் தனியாகவும், தனிமையாகவும் இருந்ததுதான். என் உடலையும் ஆன்மாவையும் கதகதப்பாக்கும் காதலி யாரும் இருந்ததில்லை, மனம்விட்டுப் பேச நண்பர்களும் இருந்ததில்லை. தினசரி என்ன செய்யவேண்டும் என்ற திட்டம் எதுவும் இருந்ததில்லை. எதிர்காலத்தைப் பற்றிய பார்வையும் இருந்ததில்லை. பெரும்பான்மையான நேரங்களில் நான் எனக்குள்ளேயே ஆழ்ந்து, ஒடுங்கி இருந்தேன். சிலநேரங்களில் ஒருவாரம் வரை கூட யாரிடமும் பேசாமல் கடந்திருக்கிறேன். அப்படிப்பட்ட வாழ்க்கை ஒரு வருடம்வரை தொடர்ந்தது- நீண்ட நெடும் வருடம். குளிர்ந்த உறைந்த அந்த மகிழ்ச்சியற்ற காலகட்டம் என்னுள் விலைமதிப்பு மிக்க வளர்ச்சி வளையங்களை ஏற்படுத்தியிருக்குமா என்பதை என்னால் உறுதிபடச் சொல்லமுடியவில்லை.

அந்நாட்களில் ஒவ்வொரு நாளும் கப்பலறை சாளரம் வழியே பனியாலான நிலாவை வெறித்துக் கொண்டிருப்பதைப் போல உணர்ந்திருக்கிறேன். படிகம் போன்ற எட்டு அங்குல தடிமனில் உறைந்த நிலா. ஆனால் என்னருகில் எவருமில்லை. நான் நிலாவை,  அதன் சில்லென்ற எழிலை பகிர்ந்து கொள்ள யாருமற்று தனியாகப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

Yesterday

என்பது நாளைக்கு இரண்டு நாள் முன்னர்,

            இரண்டு நாட்களுக்குப் பின்னர் உள்ள நாள்.

டென்வரில் (அல்லது ஏதோ ஒரு தொலைதூரத்து ஊரில்) கித்தாரு மகிழ்ச்சியாக இருப்பான் என நான் நம்புகிறேன். அவன் மகிழ்ச்சியாகத்தான் இருக்கிறானா என்று கேட்பது கொஞ்சம் அதிக பட்சம்தான். குறைந்தபட்சம் ஆரோக்கியமாகவும், அவனது அனைத்து தேவைகளும் பூர்த்தியடைந்திருக்கும் என்று நம்புகிறேன். என்ன மாதிரியான கனவுகளை நாளைய தினம் கொண்டுவருமென்பதை யாரும் அறிந்திருப்பதில்லை என்பதால்.


ஹாருகி முரகாமி

தமிழில்:  நர்மதா குப்புசாமி

[tds_info]

ஆசிரியர் குறிப்பு

ஹாருகி முரகாமி ( பிறப்பு:  ஜனவரி 12, 1949 ) ஜப்பானிய எழுத்தாளர்.  சிறுகதை, நாவல்.கட்டுரை,மொழிபெயர்ப்பு என இலக்கியத்தின் பலவடிவங்களிலும் பன்முகம் கொண்டவராக திகழ்கிறார்.  ஜப்பானியப் பண்பாட்டின் வெளிப்பாடாக மட்டுமின்றி அவர் படைப்புகளின் பார்வை உலகளாவியதாக இருக்கிறது. தனிமனித சுயத்தின் இயல்பு என்ன? வெற்றி, மகிழ்ச்சி ஆகியவைகளுக்கு உலகளாவிய விளக்கம் என்ன? என்று இது போன்ற வினாக்களை எழுப்பிச் சிந்திக்க வைப்பதாக அவர் படைப்புகள் அமைகின்றன. Norwegian Wood , Kafka on the Shore,  South of the Border West of the Sun ஆகியவை இவருடைய படைப்புகளில் சிலவாகும். Franz Kafka Prize ,Hans Christian Andersen Literature AwardJerusalem Prize  உள்ளிட்ட பல  சர்வதேச விருதுகளை பெற்றிருக்கிறார்.  இவரது புத்தகங்கள் மற்றும் கதைகள் ஜப்பானிலும் சர்வதேச அளவிலும் சிறந்த விற்பனையாகும் நூல்களாக உள்ளன, இவரது படைப்புகள் 50 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மில்லியன் கணக்கான பிரதிகள் அவரது சொந்த நாட்டிற்கு வெளியே விற்கப்படுகின்றன.   மேலும் அறிய விக்கிபீடியா காண்க.


மொழிபெயர்ப்பாளர்:

நர்மதா குப்புசாமி கவிஞர், சிறுகதை எழுத்தாளர் மற்றும் மொழிபெயர்ப்பாளர். கவிதைகளும் கதைகளும் நூல் விமர்சனங்களும் பல்வேறு இலக்கிய இதழ்களில் வெளிவந்துள்ளன. நவீன உலக சிறுகதைகளின் மொழிபெயர்ப்பு ‘சின்ட்ரல்லா நடனம் ‘ பாதரசம் பதிப்பக வெளியீடாக 2019 இல் வெளிவந்துள்ளது. ஆரணியில் வசிக்கிறார்.

[/tds_info]

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.