தேறாத மேஜிக்காரன்

மிகுந்த ஆயாசத்தோடு
மீண்டுமொரு முறை
மந்திரக்கோலை சுழற்றிப்பார்க்கிறேன்
எதிலும் என்ன தவறென்று
விளங்கவேயில்லை…..

வித்தைக் கட்டுக்குள்
அடங்காத சீட்டுகள்
எரிச்சலூட்டும் சப்தத்துடன்
எள்ளி நகைக்கின்றன
இடம்மாறச் சொன்ன பந்துகளோ சிறிதாயின….

உடல் வெட்டித் துண்டாக்க
ஓங்கிய வாள்தான்
மிருதுவான மலராகி
கொடூரமாய் தீண்டியது
எப்போதும் பிடிக்கு சிக்கும் தோட்டா
விரலையின்று துளைத்தே விட்டது

எல்லாமும் பரவாயில்லை
என் ப்ரிய முயலே
நீ கூட அசட்டையாய்
தொப்பிக்குள் வரமறுத்து பெட்டிக்குள்
உறங்கினாய் அல்லவா!?
எல்லோரும் வெளியேறிச் சென்றபின்னே
இப்போது
காலிஇருக்கையில் குதித்தாடுகிறாய்
அரையிருட்டு அரங்கத்தின் இருள்
இன்னுமாய் அடர்வதைப் பார்…
குட்டிமுயலே….
நீயும் யாரும் அறியாமல்
நிகழ்கிறதொரு சிறுமாயம்,
என் கண்களினின்று படபடத்தேகுகின்றன,
உப்புக்கவிச்சி வீசும்
கொத்து பட்டாம்பூச்சிகள்…..


-சரத் குமார்

4 COMMENTS

  1. //என் கண்களினின்று படபடத்தேகுகின்றன
    உப்புக்கவிச்சி வீசும்
    கொத்து பட்டாம்பூச்சிகள்//

    ஆஹா!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.