தஞ்சை மாவட்டத்தில் உறவினர் வீடுகளுக்குச் சென்று திரும்புகையில், வேலைக்கு ஆள் கிடைக்கவில்லை என்று அலுத்துக்கொள்வது , “வெயில் கொளுத்துது” என்று சொல்வதுபோல் ஒரு அன்றாடம். ஒவ்வொரு வீட்டிலும், குட்டி என்றழைக்கபடும் சிறுமிகள் தமது வயதுக்கு மீறிய வேலைகளை செய்துகொண்டு, வயதுக்கு மீறிய பக்குவத்துடன் வளைய வருவதைக் கண்டிருக்கிறேன். பெரும்பாலும் அந்த வீடுகளில் வேலைபார்க்கும் தவசு பிள்ளையின் மகளாகவோ, காரியகாரின் பேத்தியாகவோ அந்த குட்டிகள் இருப்பார்கள். இந்த பின்னணியோடுதான், தி.ஜா வின் சிலிர்ப்பு சிறுகதையைச் சிறு வயதில் படித்தேன். கல்கத்தாவுக்கு வேலைக்குச் செல்லும் பத்து வயது குட்டியின் கதை அது. மனிதர்களை மட்டும் நம்பியா அவள் பயணிக்கிறாள்? தெய்வங்களை நம்பியல்லவா அவளை அனுப்பிவைக்கிறார்கள் என்று எழுதியிருப்பார் தி.ஜா. ஆம், தனக்குக் கிடைத்த ஆரஞ்சு பழத்தை அந்த குட்டியிடம் கொடுத்துச் செல்லும் சிறுவனைப் போல் நடைபாதை தெய்வங்கள் இல்லாது ஒழிந்துவிடவில்லைதானே?.
சிறுகதைகளில் தி.ஜானகிராமன் பல தளங்களைத் தொட்டுள்ளார். வஞ்சம், பொறாமை, அகங்காரம், கருணை என ஒவ்வொன்றையும் தமது கதைகளில் ஆராய்ந்திருக்கிறார். அவரது பாயசம், கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் போன்ற பல சிறுகதைகள் காலத்தை வென்றவை, என்று அவர் எழுதி அறுபதாண்டுகளைத் தாண்டியபின்னரும் நீடிக்கும் வாசகபரப்பைக் கொண்டு, இன்று தைரியமாகச் சொல்லலாம். நேரடியான மொழி, பெரும்பாலும் உரையாடல் வழியாக சிறுகதையைக் கொண்டு செல்வது, சட்டென்று வாழ்வின் முரணைச் சொல்லி முடிவது அல்லது மனித மனதின் ஆழத்தைக் கண்டுணர்ந்த திகைப்பைத் தொட்டு முடிவது என அவரது சிறுகதைகள் விரிந்திருக்கின்றன. தஞ்சை மண்ணுக்கே உரித்தான மொழியை, அதன் தனிச்சொற்களை தி.ஜா நுட்பமாக அவதானித்து தனது எழுத்தில் கொண்டு வந்தவர். உதாரணமாக, தஞ்சையில் ஒரு விஷயத்தை, நன்றாக இருக்கிறது என்று சொல்வதற்கு ”தேவலை” என்ற சொல்லைப் பயன்படுத்துவார்கள். திருமணமான புதிதில், என்னுடைய வீட்டுக்கு வந்த தந்தைக்கு, மனைவி விதவிதமாக சமைத்துப் பரிமாறினாள். சாப்பிட்டுவிட்டு ”தேவலாம்” என்று சொன்னார் என் தந்தை. மனைவிக்கு முகம் சிறுத்துவிட்டது. அவரிடம் இந்த தேவலாம் என்றால் பிரமாதம் என்று அர்த்தம் என்று புரியவைப்பதற்குள் நுரை தள்ளிவிட்டது. பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை பேரழகியான பெண்ணை தேவலை என்று சம்மதம் சொல்வதை ஒரு சிறுகதையில் கொண்டு வந்திருப்பார் தி.ஜா.
தி.ஜா தமிழின் மிக முக்கியமான சிறுகதையாசிரியர். ஆனால் தி.ஜா வை சிறுகதைகளில் மட்டும் அடைப்பது அவருக்கு நியாயம் செய்வதல்ல என்று அவரது இரு முக்கியமான நாவல்களைக் கொண்டு சொல்லலாம். அம்மா வந்தாள், மோகமுள் என்ற இந்த இரு நாவல்களிலும் அவர் ஆண், பெண் உறவை, அதன் அடி ஆழங்களை, நுட்பங்களை, அழகாகத் தொட்டிருப்பதாலேயே, தி.ஜா, உறவுச் சிக்கல்களை, காமத்தை, அதன் மர்மங்களை எழுதியவராக விமர்சகர்களின் மனதில் நிற்கிறார். அவரை சிறுகதை சிமிழுக்குள் அடைப்பவர்கள் கூட, தி.ஜா வை செளந்தர்ய உபாசகராகக் காண்பதன் ரகசியமும் இதுதான். ஆணும் பெண்ணுமாய் வாழ விதிக்கப்பட்ட இந்த பிரபஞ்சத்தில், எத்தனையெழுதியும் தீராததாய் அந்த உறவின் சிடுக்குகளும், மர்மங்களும் வந்தபடியே தானே இருக்கிறது?
அம்மா வந்தாள் நாவலில், அலங்காரத்தம்மாளுக்கும், தண்டபாணிக்கும் உண்டான உறவு பல மர்மங்களைக் கொண்டது. தண்டபாணி உள்ளூர அலங்காரத்தின் நடத்தையை வெறுக்கிறார். ”பேர் வச்சு இருக்கானுக பாரு அலங்காரம்ன்னு, பழிகார முண்டை” என்று மறுகுகிறார். ஆனால், அவளது ஆகிருதியை விட்டு ஒருபோதும் விலக முடியாதவராக, தினந்தோறும் வீட்டுக்கு வந்துச்செல்லும் சிவசுவைப் பார்த்தபடி அமைதியாகயிருக்கிறார். தேவர்களும், துறவிகளும், பொய்கையும், நட்சத்திரங்களுமாய், கனவுகள் காண்பவளை, மரியாதையுடன் வியக்கிறார். அலங்காரம் அவரை விட்டு மன அளவில் விலகியவளாய் தோன்றுகிறாள். இருபது வருடங்களாய் அவரை நெருங்க விடாது வாழ்கிறாள். ஆசையாக நெருங்கும் தண்டபாணியை ”என்னத்தை வேதம் படிச்சு, போதும்ன்னா போதும்ன்னு புரியலையே” என்று கூனிக்குறுகச் செய்கிறாள். ஆனால், மகன் அப்புவிடம், ”அவருக்கெதற்கு காசி? கருணாமூர்த்திடா அவர். அந்த சூரியனின் பெருங்கருணையால் அல்லவா நான் வாழ்ந்தேன்” என்கிறாள். சேர்ந்தும் வாழவும் முடியாமல், பிரிந்துவிடவும் முடியாத கணவன் மனைவி உறவை ஓரிரு வரிகளில் வரைந்துவிடுகிறார் தி.ஜா.
அலங்காரத்தின் ஆளுமையை, தி,ஜா தீற்றிய விதம், அம்மா வந்தாள் நாவலை என்றென்றைக்குமானதாய் நிலைக்க செய்துவிட்டது. அலங்காரம், சிவசுவை எப்போதோ செய்த தவறுக்காய் காலைச் சுற்றிய பாம்பென்கிறாள். ஆனால் தினந்தோறும் வந்துபோகும் சிவசுவைக் கண்டதும் நாணுகிறாள். அதே சிவசு, அப்புவிற்கு காணிக்கை அளிக்க நினைக்கையில், கூடாதுன்னா கூடாது என்று விரட்டுகிறாள். தன்னை வேண்டுமானால், சிவசு தனது ஆளுமையால், பவிசால் கவிழ்த்தியிருக்கலாம். ஆனால் என் மகன் அப்பு வேதவித்து. அவனை ஒருபோதும் உன்னால் கைதாழச் செய்ய இயலாது என்று சொல்லாமல் சொல்கிறாள். அப்புவுக்கு நேராக அவமானப்பட்டு திரும்பிச் செல்லும் சிவசுவிடம், ”ஒன்னும் கோச்சுக்கவேண்டாம்” என்று சொல்கிறபோது, ”அதெப்படி முடியும்” என்று திரும்பிக் கேட்கிறான் சிவசு. ஆம் பரிபூரணம் நிறைந்த, லட்சத்தில் ஒருவளாக நிற்கும் தேவதை போன்ற அலங்காரத்தை, கட்டிய கணவனே வெறுக்க இயலாதபோது, சிவசுவும் பணிந்தல்லவா அவள் பாதம் தொட இயலும்?
சிவசுவிடம் மனம் சென்றபிறகு, அலங்காரம் கணவனை ஒதுக்கிவைக்கிறாள். இருபதாண்டுகள் ஒன்றாக ஒரே வீட்டில், தனித்தனி தீவுகளாக வாழ்கிறார்கள். அலங்காரம் போன்ற பெண்ணால் போலியாக கணவனிடம் சீராட முடியாது. அவளது கந்தர்வன் சிவசுதான். ஆனால், தான் மாசுபட்டுப்போனதாய் அவள் உள்ளுக்குள், குற்ற உணர்வில் குமைகிறாள். தனது மகனை கனபாடிகளாக்கி அவனது தூய வேதம் முன் தன்னைப் புடம்போட்டுகொள்ளத் துணிகிறாள். ஆனால், அப்பு அவனுக்கான வாழ்க்கையை இந்துவிடம் கண்டுகொண்டான் என்று உணருகிற கணத்தில், அவனிடமிருந்து தனக்கான மீட்சியில்லை என்று காசிக்கு செல்கிறாள் அலங்காரம். ஏறக்குறைய ரயிலுக்கு முன் பாயும் அன்னா கரீனாவை போல அவளது வாழ்வு முடிவடைகிறது. இன்பத்திற்கான மனித மனதின் தவிப்பையும், தேடல் முற்றுப்பெற்றபின், தொடரும் குற்ற உணர்வின் முரணையும் எழுதியதாலேயே தி.ஜானகிராமனின் அம்மா வந்தாள் நாவல் தமிழ் நாவல்களில் முக்கியமான இடத்தை அடைகிறது.
ஆணுக்குத்தான் பெண்ணுடல் கடக்கமுடியாத அகழியாக, அடையவேண்டிய கோட்டையாக பிரமிப்பைத் தருகிறது. பெண், அந்த உறவை, உடலை எளிதாகக் கடக்கக் கூடியவளாக இருக்கிறாள். வாழ்வின் ஒரு பகுதி என்றளவில் தாண்டிச் செல்லக்கூடியவளாக பெண் இருக்கிறாள். மோகமுள்ளில் பாபு தன்னையே யமுனாவிற்காக அர்ப்பணிக்கத் தயாராகிறான். யமுனா ஒரு தாயைப் போல், பாபுவின் தவிப்பைப் பார்த்து நிற்கிறாள். ”இதுக்குதானா பாபு?” என்ற கேள்வியில் அவளது வியப்பும் மட்டுமல்ல, காலங்காலமாய் ஆணின் பரிதவிப்பைப் பார்த்து வியந்து நிற்கும் பெண்களின் உணர்வும் அந்த கேள்வியில் அடங்கிவிடுகிறது. வெறும் உடலின்பத்திற்காக ஒரு பெண்ணுடன் கூட ஆணால் முடியும். பெண்ணுக்கு அங்ஙனம் அல்ல. உடலைத் தாண்டி , நம்பிக்கையும், அன்புமிருந்தால் மட்டுமே பெண்ணால் அந்த உறவில் ஈடுபடவே முடியும். அது ஒரே ஒரு இரவு கூடுகையாக இருப்பினும், அத்தகைய அன்பையும், நம்பிக்கையையும் கோரி நிற்கிறாள் பெண்.
செளர்ந்தர்ய தேவதைகளைக் கண்டதும் தி.ஜாவின் மனம் அரற்றத் தொடங்கிவிடுகிறது. அந்த அழகைக் கொண்டாடித் தீர்வதாய் இல்லை. இவ்வளவு முழு நிறைவும் கொண்ட பெண், கேவலம் ஒரு ஆணால் ஆளப்படுவதற்கு மட்டும்தானா?, மனிதனாய் பிறந்தவன் தன்னது என்று அனுபவிக்கக் கூடிய பொருளா? என்று செண்பக பூவின் கிழவராய், தண்டபாணியாய், வெவ்வேறு ரூபங்களில் அவர் கேட்கத்தொடங்கிவிடுகிறார்.
செண்பக பூ சிறுகதையில், உலகம் அறியாத சின்னஞ்சிறு பெண், புருஷன் இறந்துவிட்ட தகவல் தெரியாமல் குளித்துக்கொண்டிருக்கும் காட்சியைப் படிக்கும்போது ஏற்படும் திடுக்கிடல், இறுதியில் புருஷனின் தமையன் கொண்டு வந்த வண்டியில் நாணத்துடன் அந்தப் பெண் ஏறுகையில் வேறுவிதமாய் மாறுகிறது. பெண் பார்க்கவரும் நோஞ்சான் மாப்பிள்ளை வீட்டாரின் உணர்வுகளை, இந்த கதையில், கச்சிதமாய் சொல்லிவிடமுடிகிறது தி,ஜாவால்.
பத்து வருடம் சிங்கப்பூரில், மூட்டை தூக்கி, மண் சுமந்து, பூதம் கணக்காய் காசு சேர்க்கிறான் கோவிந்த வன்னி. எதற்கு? பத்து வருடம் முன்பு தனது முதலாளியுடன் தஞ்சாவூர் சொர்ணாம்பாள் வீட்டுக்குச் சென்றிருக்கிறான். அந்த தாசியின் அழகில் சொக்கிப்போகிறான். அவளது ஒரு நாள் விலை தனது பல வருட உழைப்பு என்று தெரிகிறது. கட்டிய மனைவியையும் குழந்தைகளையும் விட்டு சிங்கப்பூருக்குக் கப்பல் ஏறுகிறான். பத்து வருடம் கழித்து அந்த ஒரு இரவை கழிப்பதற்காக அவளைத் தேடிச் செல்கிறான். அவளுடன் அந்த இரவை கழித்துவிட்டால், பிறகு வாழ்வதற்கு வழியில்லை. மொத்த பணமும் அவளிடம் போய்விடும். பிறகென்ன செய்வீர்கள் என்று கேட்பவரிடம் அதற்குப் பிறகு வாழவும் வேண்டுமா? என்கிறான் கோவிந்த வன்னி. அத்தனை நாள் காத்திருப்பும் முடிந்து, அவளைத் தேடிச் சென்று பார்த்தால் அவள் தனது இளமை முழுவதையும் இழந்து, கிழவியாய் நிற்கிறாள். பரிதவித்து நிற்கிறான் கோவிந்த வன்னி. இந்த பத்து வருட உழைப்புக்கு என்ன பலன்? காத்திருப்புக்கும் அந்த தவத்துக்கும் என்னதான் பொருள் என்று யோசித்து அமர்ந்திருக்கிறான் கோவிந்த வன்னி. இனி அவன் கையிலிருக்கும் அந்தப் பணம் எந்த வகையிலும் அவனை திருப்திப்படுத்தப் போவதில்லை. அந்தப் பணத்தின் மதிப்பு பொருளிழந்துவிட்டது. என்றைக்குமே அவனது ஆசை நிறைவேறப்போவதில்லை என்று உணரும் கனத்தில் அவன் அடையும் திகைப்பு, சிறுகதையின் திறப்பாக வாசகனுக்கும் தொற்றிக்கொள்கிறது. என்றென்றைக்கும் அடைய முடியாத அந்த இரவு அவனை அலைக்கழிக்கலாம். அல்லது அந்த திகைப்பை அவனடைந்த கணமே அவனது மீட்பாகவும் அமையலாம்.
அழகை ஆராதிப்பவனாய், பூஜிப்பவனாய், அவளுடனான சில கணங்களுக்காகத் தனது வாழ்வையே பணயம் வைக்கத் தயாராகுபவனாய் வரும் கோவிந்த வன்னியில், கொஞ்சம் தி.ஜாவும் இருக்கிறார். இப்படியெல்லாமா, லட்சியங்களைக் கைக்கொள்வார்கள் என்றால், வேறு என்னதான் பொருள்கொண்டதாய் இந்த வாழ்க்கை இருக்கிறது? என்று அவர் திருப்பி கேட்கக்கூடும்.
தி.ஜானகிராமன், மன்னார்குடி அருகேயுள்ள தேவங்குடியில் பிறந்தவர். அறுபதாண்டுகளுக்கு முன்னர் ஜப்பானுக்குச் சென்ற அனுபவங்களை உதயசூரியன் என்ற பெயரில் பயண கட்டுரை தொகுப்பு எழுதியவர். இந்த இருகாரணங்களினாலும் மேலதிகமாக என்னுடைய மனதுக்கு நெருக்கமான முன்னோடி. அவருடைய நூற்றாண்டு விழாவை முன்னிட்டு கனலியின் இந்த தொகுப்பிற்கு வாழ்த்துகள்.
-ரா. செந்தில் குமார்
ஓவியம்: நெகிழன்