“நமஸ்காரம், டாக்டர் கோஸ்வாமி!”
“நமஸ்காரம். டாக்டர் என்று சொல்லத் தேவையில்லை. வெறுமே கோஸ்வாமி என்று சொன்னாப்போதும்”.
“ஏன் அயல் நாட்டுப் பல்கலைக்கழகம் ஒன்று உங்கள் தகுதியை ஆராய்ந்து கொடுத்திருக்கிறபட்டமாச்சே அது!”
“என்ன பிரயோசனம்? என் திட்டம் இப்படிச் சந்திசிரிக்க ஆரம்பித்து விட்ட பிறகு பட்டமும் பிருதும் எதற்கு?”
“என்ன சந்தி சிரித்துவிட்டது இப்போது? உங்கள் அரிய திட்டம் ஏன் வெற்றி பெறவில்லை. ஆறு கோடி ரூபாய் செலவழித்தும் ஏன் வெற்றி பெறவில்லை என்று அறிய நம்மை ஆள்கிறவர்கள் கவலைப்படுகிறார்கள். ஒரு பெரிய விஞ்ஞானிக்குக் கொடுத்த உதவி சரியாக அவர் மனசுப்படி செலவாயிற்றா என்று அவர்கள் அறிய நினைக்கிறார்கள. உங்களுக்கு உதவி செய்கிற எண்ணம் தானே அது…?”
“ரொம்ப நன்றி. என் மனசுப்படி அந்த உதவித் தொகை செலவாயிற்றா என்று நீங்கள் இப்போது குறிப்பிட்டீர்களே. ரொம்பச் சரியாகச் சொன்னீர்கள். நடு நிலையுடன் நீங்கள் விசாரித்தால் உங்களுக்கு உண்மை புலனாகிவிடும்.”
“உண்மையைக் கண்டு பிடித்து உங்களுக்கு உதவத்தான் வந்திருக்கிறேன்”
“ரொம்ப நன்றி. நீங்கள் எது வேண்டுமானாலும் கேளுங்கள். விடையளிக்கிறேன்.”
“நன்றி. உங்கள் முழுப்பெயர் என்ன?”
“கணேச சந்திர விஞ்ஞான சாகரன்.”
“கோஸ்வாமி..”
“அது பட்டப்பெயர்.”
“குடும்பப் பட்டமா”
“இல்லை. அதைவிடப் புனிதமானது. ஹிமாலயத்தில் ஈர்வர்சட்டி என்ற இடத்தில் உள்ள புராதான மடத்தின் பீடாதிபதி பிரம்மக் ஞானானந்தர் அருளிய பட்டம் அது.”
“எதற்காக அருளினார் என்று நான் கேட்கலாமா?”
“நீங்கள் கேட்காமலே நான் சொல்லுவேன். பசுக்களிடத்தில் எனக்குள்ள கருணையையும் ஊக்கத்தையும் கண்டு தான் கோஸ்வாமி என்ற பட்டமளித்தார் அவர். பத்து ஆண்டுகளுக்கு முன்னால் கோமாதா என்ற பத்திரிகையில் நான் என்னுடைய சூத்திரத்தை வெளியிட்டு, பசும் சாணத்திலிருந்து ரயில் பெட்டிகளும், ரயில் என்ஜின்களும் செய்ய முடியும் என்று எழுதியிருந்தேன். அதைப் படித்த பிரம்மக்ஞானானந்தர் விரைவில் புறப்பட்டு வரும்படி எனக்குத் தந்தி அனுப்பினார். உடனே நான் விமானத்தில் சென்று பின்பு கோவேறு கழுதைமீது ஒன்பது நாள் பிரயாணம் செய்து அந்த மடத்தை அடைந்தேன். அவரிடம் என் திட்டத்தை விளக்கினேன். பரவசமாகிவிட்டார். எத்தனை தீர்க்க தரிசனத்துடன் நான் நம் முன்னோர்கள் பசுவைத் தெய்வமாகக் கொண்டாடினார்கள் என்று மெய்சிலிர்த்தார். இனி நம் பசுக்களுக்கு நல்ல காலம் பிறந்ததுவிடும். பசுஞ் சாணத்திலிருந்து ரயில் செய்ய முடியும் என்றால் இனி மேல் நம் மக்களும் அதிகாரிகளும் அதைப் புறக்கணிக்க மாட்டார்கள். இந்தப் பெரிய ஞானோதயப் புரட்சிக்கு நீ காரணமாக இருப்பதால் “கோஸ்வாமி” என்று உனக்குப் பட்டமளிக்கிறேன்” என்று என்னை ஆசீர்வதித்தார். விஞ்ஞானியாக இருந்தாலும் அவருடைய கருணை என்னை உணர்ச்சி வசப்படுத்திவிட்டது. அதிலிருந்து விஞ்ஞான சாகர கோஸ்வாமி என்று என் பெயரையே சுருக்கி மாற்றி கெஜட்டிலும் பதிவு செய்துவிட்டேன்.”
“விஞ்ஞானப் பண்பு, இந்திய ஆன்மிகப் பண்பாடு – இரண்டும் இசைந்த அரிய புரூடர் நீங்கள்”.
“வேறு எப்படி நாம் இருக்க முடியும்? ‘அணோரணீயான் மஹதோர் மஹீயான்’ என்று விளக்கப்பட்ட பரம விஞ்ஞானத்தின் வாரிசுகளில்லையா நாம்?”
“ரொம்ப சரி. உங்கள் சூத்திரத்தைச் சற்றுப் பார்க்கலாமா?
ஸீடீஎன்/√(5 ஆர் X க)= ரபெ
என்பது தானே உங்கள் சூத்திரம்?”
“ஆமாம்”
ஸீடீ என்றால் என்ன?”
“கௌ டங். அதாவது பசும் சாணம். அதில் ஒரு குறிப்பிட்ட அளவை 5 ஆர் x க என்பதன் வர்க்க எண்ணால் வகுத்தால் ரயில் பெட்டி செய்யும் முறை புலனாகிவிடும்.”
“ஸீடீ என்றால் கௌடங், அதாவது பசும் சாணம். 5 ஆர், க என்பவை என்ன?”
“அதை நான் சொல்ல முடியாமைக்கு வருந்துகிறேன்.”
“ஏன்?”
“அது விஞ்ஞான ரகசியம். அதைக் கூறிவிட்டால் மற்ற நாட்டார்கள் ரயில் பெட்டிகளையும் என்ஜின்களையும் மிக எளிதாகச் செய்து குவிப்பார்கள். நாம் இத்தனை காலமாகப் பட்ட கஷ்டம் போதும். மீண்டும் அன்னியர்களின் பொருளாதார அடிமையாக வேண்டாம்”.
“ஆர், க – இரண்டும் தாதுக்களா?”
“இல்லை. அவை பச்சிலைகள். இதோ பாருங்கள். சூத்திரத்தை என்னிடம் கேட்காதீர்கள். அது விஞ்ஞானிகளுக்குத்தான் புரியும். சிக்கலான கால்குலஸ் கணக்கு அது. நான் நாலு வருஷங்கள் மண்டையை உடைத்துக் கொண்டு கண்டுபிடித்த சூத்திரம். இந்த மாதிரி ஒரு விசாரனையில் விளக்க முடியாது. விளக்கவும் நான் விரும்பவில்லை என்பதற்குக் காரணம் சொல்லிவிட்டேன். உங்களுக்கு வேண்டுமானால் ஆர் ஒரு பச்சிலை, க என்பது நாம் தினமும் பயன்படுத்தும் ஒரு பொருள் என்று மட்டும் சொல்லத் தயார்”.
“கடுகா?”
“இல்லை”.
“கத்தரிக்காயா?”
“இல்லை”.
“கரிசலாங்கண்ணியா?”
“இல்லை”.
“கண்டந்திப்பிலியா?”
“அதை நாம் தினமும் உபயோகிப்பதில்லையே”.
“கருவேப்பிலையா?… கருஞ்சீரகமா?… கற்கண்டா?… கடலைப் பருப்பா?… கல்லுரலா?…. கருணைக்கிழங்கா?…”
“நீங்கள் உயர்நீதி மன்றங்களில் மிகப் பெரும் பதவி வகித்தவர்கள். தேசத்தின் பொருளாதார உயர்வைக் காக்கும் நோக்கத்துடன் இந்தச் சூத்திரத்தின் ரகசியத்தை என் மனத்தில் பூட்டி வைத்திருக்கிறேன். அதை நான் அஜாக்கிரதையாக வெளியிடக் கூடாது. இதில் நீங்கள் எனக்கு உதவுவதற்குப் பதிலாக வெளியிடும்படி நெருக்க முயலுகிறீர்கள்.”
“மன்னிக்க வேண்டும். கணிதத்தில் உள்ள அபார ஆவலால் சொந்த முறையில் கேட்டுவிட்டேன். நீங்கள் சொல்ல வேண்டாம். நான் கேட்டதை மறந்துவிடுங்கள். சரி, பசும் சாணத்திலிருந்து ரயில் செய்யலாம் என்று எப்படித் தோன்றிற்று உங்களுக்கு?”.
“ஒரு தடவை தென்னிந்தியாவுக்குப் போயிருந்தேன். என் தாத்தாவும் பாட்டியும் ராமேசுவரம் போனார்கள். நானும் உடன் போனேன். அப்போது எனக்கு வயது பதினான்கு. வேத பாடசாலையில் படித்துக் கொண்டிருந்தேன்.”
“வேத பாடசாலையிலா?”
“ஆமாம்”
“நீங்கள் வேதம் படித்திருக்கிறீர்களா?”
“பதினாறு வயதுவரை வேதம் தான் படித்தேன். நான் வேதம் சொல்வதை ராமேசுவரம் கோயிலில் கேட்ட அமெரிக்கர் ஒருவர் என் விலாசத்தைக் குறித்துக் கொண்டார். பின்பு மறு வருடமே எனக்கு உபகாரச் சம்பளம் கொடுத்து என்னை அமெரிக்காவுக்குத் தருவித்துப் படிக்க வைத்தார். அங்குதான் விஞ்ஞானத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன்”
“ஓகோ! சார், ராமேஸ்வரம் போனதாகச் சொன்னீர்கள் தாத்தாவோடு”-
“ஆமாம். தென்னிந்தியக் கிராமங்களில் சுவர் மீது ஒட்டிக்கொண்டிருந்த சாண வரட்டிகளைப் பாhத்தேன். ஆச்சரியமாக இருந்தது. கையால் விள்ள முடியவில்லை. அது அடுப்பெரிக்கப் பயன்படுகிறது என்று தெரிந்ததும் தான் ஏன் சாணத்திலிருந்து ரயில் செய்யக் கூடாது என்று தோன்றிற்று. ஆனால் அப்போ விஞ்ஞான அறிவோ கிடையாது. அமெரிக்காவில் படித்து திரும்பிய பிறகுதான் அதைப் பற்றி யோசிக்கலானேன். நான்கு ஆண்டுகள் முயன்று இந்தச் சூத்திரத்தைக் கண்டு பிடித்தேன்”.
“சம்பிரதாய முறையில் அதாவது இரும்பு, எஃகு, அலுமினியம் மரம் – இவற்றைக் கொண்டு செய்யும் ரயில் பெட்டி – என்ஜின்களுக்கும் நீங்கள் உருவாக்கவிருக்கும் ரயிலுக்கும் என்ன வித்தியாசம்?”
“உருவாக்கவிருக்கும் என்று ஏன் சொல்கிறீர்கள்? நான் ஒரு சிறிய மாதிரி ரயிலை உருவாக்கிக் காட்டிய பிறகுதானே அமைச்சர் ஆறு கோடி ரூபாய் அனுமதித்தார்.”
“நான் பெரிய ரயிலைச் சொன்னேன் மன்னிக்க வேண்டும்.”
“நான் உருவாக்க நினைத்த ரயிலைச் செய்ய மரம், இரும்பு, எதுவுமே தேவையில்லை. சாணத்தினாலேயே அதன் உடல், சக்கரம் எல்லாம் அமைந்திருக்கும். அதை ஓட்ட நீர், நிலக்கரி, டீசல் எண்ணெய் ஒன்றுமே தேவைப்படாது. பசும் சாணத்திலிருந்து மீத்தேன் என்ற எரிவாயு உண்டாகிறது. அதைக் கொண்டே அந்த என்ஜின் ஓடும். அந்த வாயுவே ரயிலில் உள்ள மின் விளக்குகளை எரிய வைக்கும். மேலும் பசும் சாணத்தில் சில அரிய மருத்துவச் சக்திகள் உண்டு. எனவே இந்த ரயில் பிரயாணம் செய்பவர்களுக்கு நோய் வராது. சாதாரண ரயில்களில் அனாதி காலமாக வாசம் செய்யும் மூட்டைப் பூச்சிகளும் மற்றக் கிருமிகளும் இந்தக் கோமய ரயிலில் உயிரோடு இருக்க முடியாது. இந்த ரயில் என்ஜினின் அடக்க விலை நாற்பதாயிரம் ரூபாய்க்கு மேல் ஆகாது. குளிர் காலத்தில் வெதவெதவென்றும், கடும் கோடையில் குளுகுளுவென்றும் இருக்கும் இந்தப் பெட்டிகள், அப்படி வெப்ப நி;லையைச் சீராக்குவதும் இந்தப் பசும் சாண வாயுவால் தான். சுருங்கச் சொன்னால் தன் உடலின் சக்தியைக் கொண்டே இது ஓடுகிறது. வெளிப்பொருட்களே தேவையில்லை. என் சூத்திரத்தின்படி செய்தால் பசும் சாணம் இரும்பை விட, எஃகைவிடப் பன்மடங்கு உறுதியாகி விடும். எனவே தேயாமல் நீடித்து உழைக்கவும் செய்யும். இத்தனை பண்புகளையும் நான் செய்து காட்டிய மாதிரி ரயிலில் நிரூபித்துக் காட்டியிருக்கிறேன். அதைப் பாhத்துத் திருப்தி அடைந்த பிறகுதான் அமைச்சர் ஆறு கோடி ரூபாய் அனுமதித்தார்.”
“கேட்க கேட்க ஆச்சரியமாக இருக்கிறது. பசும் சாணத்திலிருந்து ரயில். இரும்பு, எஃகு, நிலக்கரி கிடையாது. தன் உடல் சக்தியைக் கொண்டே ஓடுகிறது. வெப்ப தட்பம் தருகிறது. விளக்கு, விசிறிகளை இயக்குகிறது. விலை முப்பத்தாயிரம்தான். உறுதியோ இரும்பைவிட! கேட்கக் கேட்க”-
“பார்த்தால் இன்னும் பிரமிப்பீர்கள். மாதிரி ரயிலை வந்து பாருங்கள்”.
“இவ்வளவு அழகான திட்டம் ஏன் இன்னும் நடைமுறையில் சாத்தியமாகவில்லை? ஒரு பெட்டி, ஓர் என்ஜின் உருவாகு முன் எப்படி ஆறு கோடியும் செலவழிந்தது?”
“சாமி வரம் கொடுத்தாலும் பூசாரி கொடுக்க வேண்டாமா? இந்த ஆறு கோடியை என்னிடம் கொடுப்பதற்குப் பதிலாக யாரே ஒரு நிர்வாகி அதிகாரியை ஏதோ ஓர் இலாக்காவிலிருந்து மாற்றிக் கொண்டு வந்தார்கள். நிர்வாக அதிகாரிக்கும் பசும் சாண ரயிலுக்கும் என்ன சம்பந்தம்? வரதட்சணைக்குச் சம்பந்தம் இருக்கலாம்.”
“வரதட்சணையா?”
“ஆமாம். நான் விசாரிக்காமல் சொல்லவில்லை. இந்தத் திட்டதின் நிர்வாக அதிகாரி, தன் கலியாணத்துக்கு மூன்று லட்ச ரூபாய் பெண்ணின் தகப்பனாரிடமிருந்து வரதட்சணைகாகக் கறந்தவர். பிரச்சனைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை. ஞாபகம் வந்தது சொன்னேன். மனைவியாக வருகிறவளின் தந்தையிடமிருந்து இப்படிக் கறந்தவருக்கு எவ்வளவு அநுதாப உணர்வு இருக்கும்?”
“மேலே சொல்லுங்கள்”
“அவருக்கு இந்தத்திட்டத்தில் நம்பிக்கை இல்லை போலிருக்கிறது. அடிக்கடி என்னைப் பற்றிக் கிண்டலாகப் பேசிக் கொண்டிருந்தாராம். ஆனால் இருபது லட்சம் ரூபாய் செலவில் ஆபீஸ் கட்டிடம் கட்டுவதை அவர் நிறுத்தவில்லை. அறுநூறு குமாஸ்தாக்கள், அதிகாரிகள் கொண்ட பட்டாளம் ஒன்றை எழுப்புவதை நிறுத்தவில்லை. இத்தனை பேருக்கும் வீடு கட்டிக்கொடுத்து, சாலைகள் போட்டு, பள்ளிக்கூடமும், ஆஸ்பத்திரியும், பொழுதுபோக்கு நிலையங்களும் கட்டுவதை நிறுத்தவில்லை. தொழிற்சாலை கட்டிக் கால்வாசி எழுவதற்குள் பணம் தீர்ந்துவிட்டது. மூலப் பொருள் வாங்கப் பணம் இல்லை. அதற்குள் பார்லி மெண்டில் கேள்வியும் கேட்டுவிட்டார்கள். கேள்வி கேட்பதை நான் தவறு என்று சொல்லவில்லை. ஒருவிதத்தில் நல்லதுதான். ஆனால் பணம் சரியாகச் செலவாகவில்லை என்று எப்படி மக்களுக்குத் தெரியப் போகிறது? திட்டமே மோசம் என்று என்மீதே, என் விஞ்ஞான உணர்வின் மீதே சந்தேகத்தைக் கிளப்பிவிட்டதே என்று துயரம் தான் எனக்கு. பத்திரிகைக்காரர்களே ஒரு தினுசு. நாலு வாக்கியம் அழகாக, உரப்பாக எழுதக் தெரிந்தவுடன், எல்லாம் தெரிந்த மாதிரிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். சத்தம் போட்டால் தானே அஞ்ஞானம் தெரியாமலிருக்கும்!”
“உண்மை தெரிந்தால் எல்லாம் சரியாகி விடும். கவலைப்படாதீர்கள். மூலப் பொருள் வாங்கித் தரக்கூட ஏற்பாடு செய்யவில்லை என்பதைக் கேட்டு எனக்குக் கோபமும் வருத்தமுமாக வருகிறது. நீங்கள் என்ன மூலப் பொருள் கேட்டீர்கள்?”
“என் ரயிலுக்கு மூலப்பொருள் பசும் சாணம், சாணத்திற்கு மூலம் பசுக்கள். நான் முதலில் இரண்டு கோடி ரூபாய்க்குப் பசுக்கள் வாங்க வேண்டும் என்று கேட்டேன். உண்மையில் முதல் முதல் இதற்குத்தான் பணம் செலவழித்திருக்க வேண்டும். பசுக்களை வாங்கி, அத்தனைக்கும் கொட்டில்கள் கட்டி, அவற்றுக்கான புல் விளையப் பக்கத்து நிலங்களை வாங்கியிருக்க வேண்டும். வீடுகளும் ஆபீசும் கட்டுவதற்குப் பதில் கொட்டில் கட்டியிருக்க வேண்டும். குமாஸ்தாக்களுக்குப் பதிலாக பசுக்களை வாங்கியிருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தால், ரயில்களை உற்பத்தி செய்து அந்த லாபத்திலேயே இந்த வீடுகளைக் கட்டியிருக்கலாம். அதற்கான விளக்குகள், தண்ணீர் சப்ளை, இயந்திரம் இவற்றை யெல்லாம் இயக்கும் சக்தி முழுவதையும் இந்தப் பசும் சாணவாயுவிலிருந்தே தந்திருப்பேன்”.
“சரி, இனிப் பேசிப் பயனில்லை. எடுத்த காரியத்தை விடக் கூடாது. ஏற்கனவே குமாஸ்தாக்கள் ஒருமுறை வேலை நிறுத்தம் செய்து சம்பள விகித்தைக் கூட உயர்த்திக் கொண்டுவிட்டார்கள். என்ன செய்தால் காரியம் விரைவில் நிறைவேறும், சொல்லுங்கள்?”
“திடீரென்று கேட்டால் நான் என்ன சொல்லுவேன்? இருந்தாலும் முக்கியமானவற்றைச் சொல்லுகிறேன். இன்னும் ஒரு நாலு கோடி ரூபாய் கொடுங்கள். அதை என்னிடம் கொடுங்கள். இரண்டு கோடிக்கு இல்லாவிட்டாலும் ஒரு கோடிக்காவது பசுமாடு வாங்குகிறேன். நிர்வாகத்தை என்னிடம் ஒப்படையுங்கள். மூன்றாவதாகத் தொழிற்சாலையைச் சுற்றிப் பதினாயிரம் ஏக்கர் நிலம் வாங்கி மேய்ச்சல் நிலமாக மாற்றுங்கள். ரயில் மட்டும் இல்லை. உலகமே அதிசயிக்கும் பால் பண்ணையும் பால் பொருள் பண்ணையும் நான் இதன் துணைத்திட்டங்களாகச் செய்து காண்பிக்கிறேன். நிறையச் சாணம் தரும் பசுக்களம் நமக்குத் தேவை. எனவே அமெரிக்கா, மத்தியப் பரதேசம் அர்ஜண்டீனா, ஆஸ்திரரேலியா, டென்மார்க் – இந்த நாடுகளிலிருந்து பதினாயிரம் பசுக்கள் நமக்குத் தேவை. அவை இங்கே வந்தால் பத்து ஆண்டுகளில் அவை மூன்று நாலு லட்சமாகி விடும். அப்படிப் பசுக்களை இறக்குமதி செய்ய முடியாவிட்டால், ஐந்து கோடி டன் பசும் சாணமாவது இறக்குமதி செய்து கொடுங்கள். உங்களுக்குக் கோடிப்புண்ணியமுண்டு. இறக்குமதி செய்யச் சொல்லிவிட்டு ஒரு ராத்தல் சாணத்துக்கு ஒண்ணே முக்கால் ரூபாய் இரண்டு ரூபாய் என்று சுங்க வரி விதித்துவிடாதீர்கள். எந்த வரியும் இன்றிச் சாணம் இந்த நாட்டுக்கு வந்தால்தான் திட்டம் நிறைவேறும்.”
“அவ்வளவு தானே”
“அறுநூறு குமாஸ்தாக்களும், அதிகாரிகளும் தேவையில்லை. நூறுபேர் போதும்”
“ஐந்நூறு குடும்பங்களை வயிற்றில் அடிக்காதீர்கள். நீங்கள் விஞ்ஞானி, கொஞ்சம் கருணையும் காட்டுகள். கோமாதவிடம் உள்ள கருணையை இந்த மனிதப் பஞ்சைகளிடமும் காட்டுங்கள்.”
“நீங்களே சொல்லும்போது நான் என்ன சொல்ல”
“நான் உங்கள் யோசனைகளை மேலே அனுப்புகிறேன். ஈச்வரயத்தனத்தில் எல்லாம் சரியாகி நடக்கட்டும்”
“தொழிற்சாலை வெற்றிகரமாக எழுந்து, முதல் பசுஞ்சாண ரயில் தயாரானதும் அதை பிரம்மக்ஞானானந்தர் கையால் வெள்ளோட்டம் விடச் செய்ய வேண்டும்.”
“நீங்கள் ஏன் மத்தைப் புகவிடுகிறீர்கள் இதில்? நாலு பேர் அந்தமாதிரி எதையாவது கிளப்பி விடுவான்கள். செய்ததை எல்லாம் செய்துவிட்டு, இந்த மாதிரி ஒரு அபிப்பிராயத்துக்கு இடம் கொடுப்பானேன்?”
“நீங்கள் சொல்வது புரியவில்லை எனக்கு. இருந்தாலும் காரியம் எப்படியாவது நிறைவேறினால் சரி என்று எண்ணத்துடன் நான் விட்டு கொடுக்கிறேன்.”
“வணக்கம் டாக்டர் கோஸ்வாமி!”
“வணக்கம்.. ஒரே ஒரு விஷயம். விடை பெறுவதற்கு முன்னால் சொல்லி விடுகிறேன். ஒரு கடுமையான தேச பக்தி உணர்வால் தான் இங்கேயே வேலை செய்கிறேன். அயல் நாடுகளில் உள்ள பல விஞ்ஞானிகளும் தொழிலதிபர்களும் இந்தத் திட்டத்தில் ஊக்கமாயிருக்கிறார்கள். இந்தத் திட்டம் நிறைவேற இந்தத் தேசத்தில் எனக்கு ஊக்கமும், உதவியும் கிடைக்காவிட்டால் அந்த நாடுகள் என்னை அங்கு வரவழைத்து வேண்டிய வசதிகளை செய்து தரக் காத்திருக்கின்றன. ஆனால் கோடிக் கணக்கில் கொடுத்தாலும் சரி. இரட்டை நோபல் பரிசு வருவதாக இருந்தாலும் சரி. நான் அப்படியெல்லாம் செய்ய மாட்டேன். இந்தத் தேசத்தில் இது நிறைவேறவிட்டால், இவர்கள் அறியாமல் செய்கிறார்கள். இந்தத் தேசத்துப் பெரியவர்களுக்கு நல்ல புத்திகொடு என்று பிரார்த்னை செய்து, இங்கேயே செத்தாலும் சாவேனே தவிர, அந்நியனுக்கு இந்த ரகசியத்தை விற்க மாட்டேன். அது விஞ்ஞான உணர்வுக்குப் புறம்பான மனப்பான்மை. உண்மைக்கு இந்தத் தேசம் அந்தத் தேசம் என்று எல்லைகள் கிடையாது. ஆனாலும் தாய்ப் பாசம் என்னை விடவில்லை. என்னைப் பெற்று வளர்த்த புண்ணிய நாடாயிற்றே. வேதங்களும் ரிஷிகளும் தோன்றிய புனித பூமியாயிற்றே!”
“உங்கள் தேசபக்தி என்னைப் பரவசமாக்குகிறது. விஞ்ஞானிக்கு இருதயம் இராது என்பார்கள். நீங்கள் இருதயத்தாலே செய்த விஞ்ஞானி என்று தோன்றுகிறது”
“உங்கள் கண்ணைத் துடைத்துக் கொள்ளுங்கள். யாராவது பார்த்தால் நடுநிலைபிசகி, என் வலையில் விழுந்து விட்டதாக உங்களைக் குற்றம் சாட்டுவார்கள். உலகம் பொல்லாதது. அதனால்தான் “யதாஸ்-த்ரீணாம ததா வாசா ஸாதுத்வே துர்ஜனோ ஜனஹ” என்று பவவூதி கதறிவிட்டுப் போனான்… நான் வருகிறேன்.”
“வணக்கம், டாக்டர் கோஸ்வாமி!”
– தி.ஜானகிராமன்
குறிப்பு: தி.ஜானகிராமன் சிறந்த ஹாஸ்யக் கதைளை எழுதி இருக்கிறார். கதைகள் அழுத்தமும் கருத்தாழும் கொண்டு நம்மை சிரிக்கவும் சிந்திக்கவும் செய்யும். 1965 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் “கல்கி” இதழின் 25- ஆவது ஆண்டு மலரில் வெளியான ஹாஸ்ய சிறுகதை கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி : கல்கி – வார இதழ்,
சிறுகதையை கண்டறிந்து அளித்து உதவிய கவிஞர் ராணி திலக் அவர்களுக்கு நன்றி.!