தி ஜானகிராமனின் குறுநாவல்களை முன்வைத்து
நவீன இலக்கியத்தின் முக்கியமானதொரு பண்பாக அதன் அரசியல் பிரக்ஞையை குறிப்பிட வேண்டும். அரசியல் என்பதை வாக்கரசியல், கட்சி அரசியல் என்பவற்றில் இருந்து பிரித்துக் கொள்கிறேன். நவீன இலக்கியம் தனிமனிதனை நோக்கி அவன் அகத்துடன் உரையாடும் எத்தனத்துடன் எழுதப்படுவது. ஆகவே தனிமனிதனை பாதிக்கும் அதிகாரம், அரசு போன்றவற்றைப் பற்றின ஒரு புரிதல் என்பதையே அரசியல் என்று இங்கு குறிப்பிடுகிறேன். தமிழின் முன்னோடிப் படைப்பாளியான புதுமைப்பித்தனில் இருந்தே இந்த அரசியல் பிரக்ஞை சார்ந்த கூறுகள் தென்படத் தொடங்குகின்றன. புதுமைப்பித்தன் அதுவரையிலான கதையுலகில் இருந்த லட்சிய நிலைகளை தூக்கி எறிந்து விடுகிறார். துன்பக்கேணி போன்ற அவருடைய கதைகளில் வெளிப்படும் சாமனியர்கள் வாழ்வின் அவலம், ஒரு வகையில் அதிகாரத்தின் மீதான விமர்சனம் தான். சாமான்யர்கள் அடையும் அத்தனை கசப்புகளும் மனவிலக்கங்களும் நம்பிக்கையின்மைகளும் புதுமைப்பித்தனின் கதையுலகில் பதிவாகின்றன. அது அவருடைய சமூக விமர்சனப் பார்வையின் விளைவாக நிகழ்கிறது. சுதந்திரப் போராட்டம் என்ற கற்பனாவாதச் சாயல் மிகுந்த ஒரு பெருநிகழ்வு நிகழ்ந்து கொண்டிருந்ததாகச் சொல்லப்படும் காலத்தில், புதுமைப்பித்தன் கதைகளில் அவற்றின் தடத்தைக் கூட பெரும்பாலும் காண முடியாதது, அவரது சாமான்யர்களின் துயர்கள் மீதான அக்கறைக்குச் சான்று.
இந்த அக்கறையை அதன் பிறகு வந்த தமிழ் படைப்பாளிகள் பலரிடம் காண முடியும். அவர் காலத்தவரான ந.பிச்சமூர்த்தி அடுத்த தலைமுறையில் அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, ஜெயகாந்தன், அதற்கு அடுத்த தலைமுறையில் ஜெயமோகன், அதற்கும் அடுத்ததாக கே.என். செந்தில் என இன்றுவரை இந்த அக்கறை தமிழ்ப் படைப்பாளிகளின் புனைவுலகில் தொடரவே செய்கிறது. எளியோர் துயர் கண்டு இரங்குதலும் அவற்றால் படைப்பாளி துன்புறுதலும் நிகழும் பல கணங்களை நவீன இலக்கியத்தில் சுட்டிக்காட்ட முடியும். ஒரு வகையில் அது இயல்பானதும்கூட. இலக்கியம் எப்போதும் நியாய உணர்வுகளை கூர்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறது. குரூரங்களை காட்சிப்படுத்துவதன் வழியாகவும், மோசமான வாழ்க்கைச் சூழல்களை சித்தரிப்பதன் வழியாகவும் வாசக மனதில் புறஉலகு சார்ந்த அக்கறைகளை இலக்கியம் ஏற்படுத்தவே செய்கிறது. செயற்கையான மனிதாபிமான பாவனைகளுடனும் சில ஆக்கங்கள் எழுதப்பட்டாலும் அவை புறந்தள்ளப்பட்டு விடுகின்றன. ஆனாலும் இந்த அக்கறைக்குப் பின்னிருப்பது ஒரு உள்ளடங்கிய சமூக விமர்சன நோக்கு. அந்த நோக்கை கலைஞனின் அரசியல் பார்வை தீர்மானிக்கிறது.
தமிழ் இலக்கியத்தில் மற்றொரு சரடு உண்டு. மௌனி, கு.பா.ரா. லா.ச.ரா என்று தொடங்கி வண்ணதாசன் வரை நீளும் சரடு. முன்னவர்கள் படைப்பில் உள்ள எளியோர் மீதான கரிசனமோ, அக்கறையோ இந்த வரிசை படைப்பாளிகளின் எழுத்துக்களில் பெரும்பாலும் வெளிப்படுவதில்லை. இந்த வரிசை நேரடியாக அகத்துடன் உரையாடலை நிகழ்த்தும் அகத்தில் ஏற்படும் நுண்சலனங்களை மொழியைக் கொண்டு துல்லியமாக பதிவு செய்வதிலும் வெற்றிபெற்ற படைப்பாளிகளால் ஆனது. இன்னும் விரிவாக ஆராய்ந்தால் இந்த நோக்கில் நவீன தமிழ் இலக்கியத்தை அகம் புறம் என்றுகூட பிரிக்க முடியும் என நினைக்கிறேன்.
தி.ஜானகிராமனை இந்த வரிசையில் எங்கு பொறுத்துவது? பெரும்பாலும் தி.ஜா. பின்னவர்களின் வரிசையிலேயே வருகிறார். ஏனெனில் தி.ஜா-விலும் கூர்மையான அரசியல் பிரக்ஞை படைப்புகளில் தொழிற்படுவதில்லை. ஆனால் இரண்டாவதாக சொல்லப்பட்ட எழுத்தாளர்களிடமிருந்து தி.ஜானகிராமனை வேறுபடுத்திக் காட்டும் ஒரு அம்சம், அவர் புனைவுகளில் வெளிப்படும் அறம் சார்ந்த ஒரு பார்வை. கடன் தீர்ந்தது, பரதேசி வந்தான் போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்ல முடியும். அதேநேரம் தி.ஜா.-வின் ஆக்கங்களில் வெளிப்படும் பாத்திரங்கள் காமத்தாலும் உக்கிரமாக அலைகழிக்கப்படுகின்றன. தவம், பசி ஆறிற்று போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம்.
தி.ஜா.-வின் புனைவுகள், அவருடைய மிகச் சரளமாக வழிந்தோடும் உரைநடை, சட்டென அவர் தொட்டுவிடும் கவித்துவ கணங்களைத் தாண்டி முக்கியத்துவம் பெறுவது, அவர் படைப்புகளில் வெளிப்படும் அறமும் காமமும் மனிதர்களை அலைக்கழிக்கும் சித்திரங்களின் உச்சங்கள் வெளிப்படுவதாலேயே என்று சொல்லலாம்.
தமிழில் புதுமைப்பித்தனின் தாக்கம் மிகக்குறைவாக வெளிப்பட்ட படைப்பாளி தி.ஜா.-வாகவே இருக்க இயலும். மௌனியில் இருண்மை, ந.பிச்சமூர்த்தியில் நீதியுணர்வு, ஜெயகாந்தனில் தனிமனிதக் கரிசனம், சுந்தர ராமசாமியில் எள்ளல் என்று ஏதோவொரு வகையில் புதுமைப்பித்தன் வெளிப்பட்டபடியே இருப்பதை அவதானிக்க முடிகிறது. இவர்களை ஒப்பிட தி.ஜா.-வில் புதுமைப்பித்தனின் பாதிப்பு மிகக்குறைவு. புதுமைபித்தனின் பாதிப்பை ஒரு எதிர்மறை அம்சம் என்று சொல்லமாட்டேன். ஆனால் தி.ஜா.-வில் அவருடைய பாதிப்பு குறைவாக செயல்பட்டதற்கான காரணத்தை சற்று பேச வேண்டியிருக்கிறது.
தமிழ் படைப்பாளிகளின் தனிமனிதக் கரிசனம் என்பது பெரும்பாலும் ஆண்மைமிக்கதாகவே இருக்கிறது. ஆண்மை என்ற பதத்தை ஒரு புரிதல் வசதிக்காகவே பயன்படுத்துகிறேன். எளியோர் துயர்களின் நிலைகளையும் அவற்றுக்கான தீர்வுகளையும் நோக்கியே பெரும்பாலான படைப்பாளிகளின் சிந்தனை நகர்கிறது. ஆனால் அந்த கணத்தில் அந்த துயரை போக்கிவிட ஏதும் செய்ய இயலுமா என்று தவிப்பதும் அது இயலாதபோது முழு மனதுடன் துன்பமடைவதும் பெண்மை என்று கொள்ளலாம். இந்த ‘பெண்மை’ மிகுந்த வீச்சுடன் வெளிப்படும் முன்னோடி தி.ஜானகிராமன். அவருடைய பாத்திரங்களின் காமம் மற்றும் நீதி சார்ந்த தவிப்புகளை புரிந்து கொள்ள அவருடைய வாழ்க்கை நோக்கில் இருக்கும் நேரடித்தன்மையையும் எளிமையையும் புரிந்து கொள்வது அவசியமாகிறது.
தி.ஜானகிராமனுடைய எந்தவொரு பாத்திரத்தையும் நம்மால் ‘தனிமனிதனாக’ அடையாளம் காண முடியாது. பாபுவை (மோகமுள்) யோசிக்கும் போது ராஜமும் ரங்கண்ணாவும் நினைவுக்கு வருகின்றனர். இந்துவை (அம்மாவந்தாள்) அலங்காரத்தாமாளை விடுத்து நம்மால் யோசித்துப் பார்க்க முடியாது. தி.ஜா.-வின் புனைவுலகில் தனிமனிதர்களே இல்லை. அவருடைய பாத்திரங்கள் மண்ணோடு இறுகப் பிணைக்கப்பட்டவர்கள். அவர்களுடைய விருப்பங்களும் பதற்றங்களும் மண்ணுடன் இணைத்தே யோசிக்கப்பட வேண்டியவையாக இருக்கின்றன. தி.ஜா.-வின் படைப்புகளில் வெளிப்படும் நீதியுணர்வு பலகாலம் மனிதர்களுடன் இணைந்து புழங்கியதால் மனிதர்கள் மீது தீர்ப்பெழுதாமல் அவர்களை கவனிப்பதால் உருவாகி வருவது.
தி ஜானகிராமனின் நாவல்களின் மையம் காமமாகவே இருக்கிறது. காமத்தின் உக்கிரத்தையும் தணிதலையும் பொருளின்மையையுமே வெவ்வேறு வகையில் அவர் நாவல்கள் பேசுகின்றன. தன்னை முழுமையாக உணர்ச்சிகரமாக தி.ஜா. நாவல்களில் திறந்து வைத்துவிடுகிறார். ஒரு வகையில் அதுவே நாவல்களின் பலகீனமாகவும் மாறி விடுகிறது. மாறாக சிறுகதைகளில் வெளிப்படும் தி.ஜா. மேலும் கூர்மையானவர். வடிவம் குறித்த போதமும் அக்கறையும் கொண்டவர். ரசிகரும் ரசிகையும் போன்ற உரையாடல்கள் வழியாகவே எழுதப்பட்ட ஆரம்பகால சிறுகதைகளிலேயே தி.ஜா.-வின் சிறுகதையின் வடிவம் சார்ந்த போதத்தை காண முடியும். ஒரு வாசகனாக தி.ஜா-வை வாசிக்க சிறுகதைகளில் தொடங்கி நாவலுக்குள் நுழைவதையே நான் பரிந்துரைப்பேன்.
காலச்சுவடு வெளியீடாக வந்திருக்கும் தி.ஜா.-வின் ஏழு குறுநாவல்களைக் கொண்ட இந்த தொகுப்பு தி.ஜா.-வின் சிறுகதைகளில் வெளிப்படும் வடிவக் கச்சிதத்தையும் நாவல்களில் வெளிப்படும் அற்புதமான சூழல் விவரணைகளையும் ஒருங்கே கொண்டுள்ளன. மேலதிகமாக தமிழில் உரையாடல்களை நளினமாக அமைப்பதில் தி.ஜா. ஏன் முன்னோடியாகத் திகழ்கிறார் என்பதற்கான சான்றுகளும் உள்ளன.
தி.ஜா.-வின் மொத்த புனைவுலகையும் அறம் மற்றும் காமம் சார்ந்த தத்தளிப்புகள் என்று இரண்டாக பகுத்துவிடலாம். ஆனால் இந்த பகுப்புமே கூட தனித்தனி படைப்புகளில் செயல்படுவது என்று சொல்வதற்கில்லை. ஒரு வகையில் அறம் சார்ந்த தத்தளிப்பும் காமம் சார்ந்த தவிப்புகளும் ஒன்றையொன்று சமன் செய்வதாகவே தி.ஜா.-வின் படைப்புகளில் வெளிப்படுகின்றன. இந்த இணைகோட்டில் பெரும்பாலான நேரங்களில் தி.ஜா. மிக வெற்றிகரமாக பயணிக்கிறார் என்பதே இன்றிலிருந்து பார்க்கும் போது அவரை முதன்மைப்படுத்தும் அம்சம் என்று தோன்றுகிறது.
ஏனெனில் அறம் காமம் என்கிற இரு அம்சங்களும் எதிரெதிர் திசையில் பயணிக்கிறவை. காமம் ஒருவனை தன்னைப் பற்றியும் தன்னுடைய திளைப்புகளும் பற்றியும் கைகூடாதபோது அது அளிக்கும் வெறுமை பற்றியுமே சிந்திக்க வைக்கிறது. மாறாக அறம் பிறனைப் பற்றி சிந்திக்கச் சொல்கிறது. தன் இருப்பு இன்னொருவனை பாதிக்கும் விதத்தை கூர்ந்து நோக்கவும், தன்னுடைய உள்ளார்ந்த தீமைகளை தொடர்ச்சியாக உரசிக் கொண்டு அவதிப்படவும், அறவுணர்வு ஒருவனை தூண்டிக்கொண்டே இருக்கிறது. தி.ஜா.-வின் கதைகளில் பெண்ணின் மீதான ஆணின் காமம் ‘தெய்வாம்சம்’ கொள்வதும், அறம் சார்ந்த சிக்கல்களின் தீர்வாக கற்பனாவதம் கலந்த நெகிழ்ச்சிகள் முன்வைக்கப்படுவதும், அவர் காமத்தை யதார்த்தத்திலும் அறத்தினை கற்பனையிலும் எதிர்கொள்வதால்தான்.
இந்த உலகத்தில் அழகாக இருக்க என்றே சிலர் பிறந்திருக்கிறார்கள். இவர்கள் பேசுவது அழகு. செய்வது அழகு. நடப்பது அழகு. கையைத் தூக்குவது அழகு. ஒவ்வொரு அசைவும் அழகுதான். எதையும் மனதில் வாங்கிக்கொள்ளும்போது, அதிலே ஒரு தனித் தன்மை; தனக்கென்று ஒரு தனிப்போக்கு. ஆனால் எல்லோரும் ஒப்புக்கொள்ளக் கூடிய போக்கு, என்ன வந்தாலும் நிதானம் இழக்காத ஒரு பெருமிதம் – உணர்ச்சி பொங்கி அலை மோதாத ஒரு அமைதி. வெகுகாலப் பயிற்சியில், வெகுகாலத் தவத்தில் வரவேண்டிய சொத்துக்கள் இவை. அந்தப் பயிற்சிக்கு வசதி கொடுத்திருப்பது எது? பணமா? அல்லது எப்போதும் எல்லோரும் வந்து தன்னை வணங்கி மரியாதை செய்ய, தான் யாரையும் அண்டி நிற்க வேண்டிய தேவையில்லாமல் வாழ்க்கை நடத்த உதவியிருக்கிற நிலையா? – இல்லை, இப்படியும் சொல்ல முடியவில்லை. அந்தப் பதவியும் பணமும் பலபேரைப் பறைத் தம்பட்டமாக அடித்திருக்கின்றன. படைப்புச் சக்திக்கு ஏதோ, எப்போதோ தோன்றின நல்ல புத்தியின் விளைவாகத்தான் இருக்க வேண்டும் இது.
கமலம் குறுநாவலில் கதைசொல்லியான ராஜசுந்தரம் பார்வையில் கமலம் இப்படி விவரிக்கப்படுகிறாள். ஏறக்குறைய தி.ஜா.-வின் புனைவுகளில் பெண் மையப்பாத்திரங்கள் அனைவருமே அழகினால் உள்ளார்ந்த ஆழமும் வசீகரமும் கொண்டுவிட்ட இத்தகைய பாத்திரங்கள்தான். முதல் வரியில் கமலத்தின் அழகில் சரணடையும் தி.ஜா. பத்தி முடியும் போது ஒருவேளை பணம் கமலத்தை இவ்வளவு அழகாக மாற்றி இருக்குமோ என்று சந்தேகப்படத் தொடங்கி விடுகிறார். (மோக முள் யமுனாவின் வசீகரத்துக்கும் தி.ஜா. ‘குருதியை’ ஒரு காரணமாக முன் வைத்திருப்பார்) இந்தக் குறுநாவல் முழுவதும் ராஜசுந்தரம் கமலத்தைப் புரிந்து கொள்வதற்காக தத்தளிக்கிறார். தன் வீட்டில் வேலை செய்யும் சாமிநாதனின் சொந்த ஊரில் தங்கிப் போவதற்காக கமலம் வருகிறாள். அவளைவிட இருபது வயது குறைந்தவனான சாமிநாதனுக்கும் அவளுக்குமான உறவு கதைசொல்லி விடுமுறைக்காக வந்திருக்கும் அந்த சிறிய கிராமத்தால் அலரைக் கிளப்புகிறது. கமலம் ராஜசுந்தரத்துக்கு எழுதும் கடிதம் வழியாக தனக்கும் சாமிநாதனுக்குமான உறவு ‘தாய்-மகன்’ போன்ற ஒன்று என்பதை தெளிவுபடுத்துகிறாள். மேலோட்டமாக பார்க்கும்போது கிராமங்களில் அண்டை வீட்டை எட்டிப் பார்த்து கதைபுனைய முயலும் தன்மைக்கு எதிரான முற்போக்கான ஒரு கதைபோலத் (சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் சிறுகதை நினைவுக்கு வருகிறது) தெரிந்தாலும் சாமிநாதனுக்கும் கமலத்துக்குமான உறவு உண்மையில் கமலம் சொல்வது போன்ற ஒன்றுதானா என்ற குழப்பத்தை ஏற்படுத்துவதே இந்தக் குறுநாவலின் வெற்றி என்று சொல்லலாம்.
கமலத்துக்கும் தனக்குமான உறவை சாமிநாதன் விவரிக்கும் இடம் கமலம் சொல்லும் முற்போக்கான அர்த்தத்தைத் தாண்டி மேலதிக அர்த்தங்களையும் இக்குறுநாவலுக்கு வழங்குகிறது. வீடு, அடி என்ற மற்ற இரண்டு குறுநாவல்களும் பிறன்மனை உறவு என்கிற விஷயத்தையே இருவேறு விதங்களில் பேசுகின்றன. கமலத்தைப் போலவே அம்பு(வீடு), பட்டு(அடி) போன்ற பெண்களும் வசீகரமானவர்களே. வீடு குறுநாவலின் கதைசொல்லல் பாணி சுவாரஸ்யமானது. கதைசொல்லி தன்னுடைய வீட்டை வாங்க வருகிறவர்களை திருப்பி அனுப்புவதற்காக பேசத் தொடங்குகிறார். அந்தப் பேச்சின் வழியாக அவர் குடும்பத்தின் பழமை பெருமை எல்லாம் வெளிப்பட்டு அதன்பிறகு அம்புவுக்கும் அவருக்குமான ஒட்டுதலற்ற குடும்ப வாழ்க்கை சொல்லப்படுகிறது.
அவரிடம் விசுவாசமாக வேலை செய்யும் கம்பவுண்டரான மகாதேவனுக்கும் அம்புவுக்கும் உறவு ஏற்படுகிறது. கதைசொல்லி அந்த மணம் கடந்த உறவை கண்ணுற நேரும் சமயத்தை அதற்கு முன்னும் பின்னுமாக எழுதப்பட்ட டால்ஸ்டாயின் கிரேய்ஸர் சொன்னாட்டா, ஜெயமோகனின் வேறு ஒருவன், கே.என்.செந்திலின் மாறாட்டம் என்ற மூன்று கதைகளுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். வீடு குறுநாவலைத் தவிர்த்து மற்ற மூன்று ஆக்கங்களிலும் இந்த பிறன்மனை உறவு மனைவியின் கொலையில் முடிகிறது. தி.ஜா. இந்தச் சூழலை விளக்கும் விதம் ஒரு வகையில் யதார்த்தத்துடன் நெருங்கி வருகிறது.
சொந்த ஊருக்குச் சென்று விட்டு கதைசொல்லி நள்ளிரவில் வீடு திரும்புகிறார். அம்பு தரையில் பாயில் படுத்திருக்க மகாதேவன் கட்டிலில் படுத்திருக்கிறான். குழந்தைகள் வேறொரு அறையில் உறங்குகின்றன. கதவு தட்டப்பட்டதும் மகாதேவன் எழுந்து சென்று வீட்டின் இன்னொரு மூலையில் பாயில் படுத்துக்கொள்ள அம்பு எழுந்து வந்து கதவைத் திறக்கிறாள். மகாதேவனை கதைசொல்லி எதுவுமே கேட்பதில்லை. அம்பு அவருக்கு பதில் சொல்கிறாள். மகாதேவனை வேலையை விட்டு நிறுத்திய பிறகும் அம்புவுக்கும் மகாதேவனுக்குமான உறவு தொடர்கிறது. அம்பு மகாதேவனுக்கு ஒரு குழந்தையையும் ஈனுகிறாள். இந்த விஸ்தரிப்பே தி.ஜா.-வின் தனித்துவம். ஒரு மீறல் நிகழ்ந்ததும் அந்த மீறலையே கதையுச்சமாக எடுத்துக்கொண்டு செல்லும் பிற கதைசொல்லிகளிடமிருந்து தி.ஜா. வேறுபடும் புள்ளி இது.
வீடு மீறலின் புள்ளியை விவரித்துச் செல்வதில் நேர்த்தி கைகூடிய கதை என்றால் அடி சற்று பலகீனமான கதை. செல்லப்பாவுக்கும் பட்டுவுக்குமான மணம் கடந்த உறவுதான் இக்கதையின் பேசுபொருளாகிறது. அந்த உறவின் சிக்கல்கள் கதைக்குள் நன்றாகவே வெளிப்பட்டிருந்தாலும் அச்சிக்கலுக்கு லௌகீகமான ஒரு எளிய தீர்வினை முன்வைப்பது இக்கதையை பலவீனமானதாக்குகிறது.
தோடு ஒரு வகையில் பால்யத்தின் கனவுகளும் மயக்கங்களும் கலைந்து ஒரு சிறுமி யதார்த்தத்தை சந்திக்கும் புள்ளியை சித்தரிக்கும் கதை. தீர்மானம் என்ற தி.ஜா.-வின் மற்றொரு கதைக்கு இணையாக வைத்து இதையும் வாசிக்க இயலும். பால்யமணம், கணவனாக வரவிருப்பவனை விக்கிரகப்படுத்திக் கொள்ளும் பெண்ணின் தன்மை என்ற புள்ளியில் இருந்து நகர்ந்து அவனை அவனுடைய குறைகளுடன் ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மயக்கங்களினால் உருவாகும் மகிழ்ச்சிகளை இழந்த பெண்ணாக பட்டுக்குட்டி மாறுவது இக்குறுநாவலில் தேர்ந்த சித்தரிப்புகள் வழியே சொல்லப்படுகிறது.
தி.ஜா.-வின் புனைவுகளில் சிறுவர்களும் சிறுமிகளும் உலவியபடியே இருக்கின்றனர். தோடு குறுநாவலும் பட்டுக்குட்டி குழந்தைமைக்கும் கன்னிமைக்கும் இடையே தத்தளிப்பதை சித்தரிக்கும் ஆக்கமே. ஆனால் குழந்தைமை அதன் அத்தனை பரிணாமங்களுடன் வெளிப்படுவது நாலாவது சார்! குறுநாவலில் தான். ஒருவகையில் திஜாவுடைய மொத்த புனைவுலகத்திலும் சிறுவர்களின் துடுக்குத்தனத்துக்கும் மீறலுக்கும் சான்றாக நிற்கும் கதை இது. நான்காம் வகுப்பு படிக்கும் முத்தப்பனுக்கு தென்னையோலைகளில் பொம்மை செய்து தருகிறவராக நாலாவது சார் செல்லப்பா அறிமுகமாகிறார். அதே ஊரில் வசிக்கும் சுந்தரேசன் மனைவியின் பேச்சைக் கேட்டுக் கொண்டு தன் அம்மாவை வீட்டைவிட்டு துரத்தி விடுகிறான். அவன் அம்மா நாலாவது சார் வீட்டில் வசிக்கிறார். இந்தச் செயல் முத்தப்பனின் மனதில் உருவாக்கும் சலனங்களை படம்பிடித்தபடியே கதை நகர்கிறது. அவனளவுக்கே குழந்தை மனம் கொண்ட செல்லப்பா மெல்ல மெல்ல முதிர்ச்சி அடைவதை மிக நுணுக்கமாக இக்கதை சித்தரித்துச் செல்கிறது.
காமம், குழந்தைமை என்கிற விஷயங்களைத் தாண்டி பேசக்கூடியவையாக இத்தொகுப்பில் இரண்டு குறுநாவல்கள் உள்ளன. சிவஞானம் மற்றும் அவலும் உமியும். இவற்றை ‘புறத்துடன்’ அடையாளப்படுத்தலாம். ஆனால் இவ்விரு ஆக்கங்களுமே கூட பிற படைப்பாளிகளுடைய ஆக்கங்களைப் போல நேரடியான மனிதாபிமான உந்துதல்களால் தூண்டப்பட்டவையாக இல்லை. சிவஞானம் குறுநாவலில் பிராமணத் தம்பதியினருக்குப் பிறந்த சிவஞானம் பெற்றோர் இறந்துவிடவே ஒரு வன்னியர் வீட்டில் வளர்கிறான். வளர்ப்புத் தந்தை இறக்கும் போதுதான் அவனுக்கு பிறப்பால் தானொரு பிராமணன் என்பது தெரியவருகிறது. இவ்விரு அடையாளங்களுக்கு இடையே சிவஞானம் அடையும் தவிப்பு சொல்லப்படுகிறது. அவன் தன்னுடைய பிராமண அடையாளத்துக்குள்ளேயே நுழைய முயல்கிறான். நகருக்கு ஓடுகிறான். ஆனால் அவனுடைய பிறந்த சாதி அவனை உள்ளே அனுமதிக்க மறுக்கிறது. மீண்டும் தன்னுடைய வன்னியர் அடையாளத்தையே ஏற்றுக்கொண்டு ஊர் திரும்புகிறான்.
இத்தொகுப்பின் சிறந்த குறுநாவல் அவலும் உமியும் தான். காயாப்பிள்ளை தன்னுடைய பேரனைக் கொஞ்சுவதுடன் தொடங்குகிறது. தன் வீட்டில் குடியிருக்கும் செல்லையாவின் குழந்தை தன் பேரனைவிட ஆரோக்கியமாக இருப்பது அவர் மனதில் வன்மத்தை விதைக்கிறது. அதை அவர் உணரவும் செய்கிறார். எவ்வளவு முயன்றும் குழந்தையின் மீதான வன்மத்தை போக்கிக்கொள்ள அவரால் இயலவில்லை. தான் சேர்த்து வைத்திருந்த பணத்தில் செல்லையாவின் மகனுக்கு தங்க நகை வாங்கிக் கொடுத்துவிட்டு சன்னியாசியாகப் புறப்படுகிறார். மேம்போக்காக பார்க்கும்போது காயாப்பிள்ளையின் முடிவு கற்பனாவாதத்தன்மை கொண்டதாகத் தெரியும். குறுநாவலின் கடைசி வரி அப்படி இல்லையென்று சொல்கிறது. அவலும் உமியும் குறுநாவல் இப்படி முடிகிறது.
“அந்தாலெ பாருங்க, அந்த வலியன் குருவி ஒருச்சாண் நீளம்கூட இல்லை. ஒரு முழ நீளம் இருக்கு அந்தக் காக்கா. அதைக் குட்டிக்கிட்டே போவுது பாருங்க” என்றார். சாயபு பார்த்தார். ஆமாம், ஒரு முழ நீளக் காக்காயைத் துரத்தித் துரத்திக் குட்டிக்கொண்டு பறந்து போயிற்று ஒரு சாண் நீளவலியன் குருவி.
இங்கு வலியன் குருவி என்று தி.ஜா. சொல்வது அகத்தின் தவிர்க்க முடியாத தீமைகளையே. தி.ஜா.-வின் மற்ற புனைவுகளும் தீமையின் முன்பு இவ்வாறாக திகைத்து நின்றுவிடுவதைக் காணலாம். தீமை ஒன்று கண்ணில் பட்டவுடன் பெரும்பாலான படைப்பாளிகளில் பதறிவிடுகின்றனர் அல்லது தீமைக்குள் திளைப்பதன் வழியே அதிலிருந்து வெளியேற முற்படுகின்றனர். ஆனால் தி.ஜா.-வின் படைப்புகள் பெரும்பாலும் அந்தப் புள்ளியில் உறைந்து நின்றுவிடுகின்றன. தீமையில் இருந்து வெளியேறி குற்றம் நோக்கியோ தீர்வு நோக்கியோ செல்வதில்லை. சிவஞானம் குறுநாவலில் வரும் சாஸ்திரி போல குணவார்ப்பிலேயே மாற்றத்திற்கு உட்பட வாய்ப்பில்லாத தீமையை இயல்பாகக் கொண்டவர்கள் வருகிறார்கள். அவர்களைக் கண்டு பிறரால் அங்கலாய்க்க முடிகிறதே ஒழிய அவர்களை எதிர்கொள்ள இயல்வதில்லை.
“அவன் என்னிக்குமே அப்படித்தானே! ஆயிரம் ஆயிரமாக வரது. ஒரு பைசாக் கொடுக்கமாட்டான். கேட்டால், வாங்கத்தான் இந்த ஜன்மம்னு சிரிச்சுண்டு வேடிக்கை பண்றாப்போல சொல்லுவான்… ஏண்டா பாவி. போயும் போயும் இங்கே வந்து இருக்கணும்னா தோணித்து?”
சாஸ்திரி குறித்து அவர் சகோதரர் சிவஞானத்திடம் இப்படிச் சொல்கிறார்.கமலம் குறுநாவலில் கமலத்தைப் பற்றி சுந்தரத்திடம் அவன் அம்மா சொல்வதும் வீடு குறுநாவலில் கதைசொல்லி அம்புவை மகாதேவனுடன் அவள் உறவு கொண்ட பிறகு எதிர்கொள்வதும் தோடு குறுநாவலில் பட்டு அவள் கணவனுடைய மணம் கடந்த உறவை எதிர்கொள்வதும் இத்தகைய திகைப்பின் தருணங்களாகவே வெளிப்படுகின்றன. அவலும் உமியும் குறுநாவலை இந்தப் பின்னணியில் வைத்து நோக்கும்போது இன்னும் விரிகிறது. தன்னுடைய தீமையில் இருந்து வெளியேற காயாப்பிள்ளை ஒரு வாய்ப்பினை கண்டு கொள்கிறார். வாழ்க்கையையே தீமையாகக் கண்டு அதிலிருந்து வெளியேறுவதன் வழியாக வலியன்குருவியாக தன்னைத் துரத்தும் சிறிய ஆனால் தவிர்க்க முடியாத தீங்கிலிருந்து தப்பிக்கிறார்.
தி.ஜா.-வின் புனைவுகள் எழுதப்பட்ட காலத்தில் சர்ச்சைக்குரியதாக பார்க்கப்பட்டிருக்கின்றன. இன்று பொதுவாக ஒரு பேச்சு உண்டு. பாலியல் தளங்கள் பெருகிவிட்ட இந்த காலத்தில் தி.ஜா.-வின் எழுத்துக்களின் சர்ச்சைக்குரிய அம்சங்கள் பொருளிழந்துவிட்டன என்கிற ரீதியிலாக அவருடைய படைப்பை மதிப்பிட முயலும் சிலர் சொல்கின்றனர். பாலுணர்வை எழுத்தில் அதிகமாக பயன்படுத்திய தஞ்சை பிரகாஷ், ஜி.நாகராஜன் முந்தின தலைமுறை எழுத்தாளர்களையோ, தற்போது எழுதிக் கொண்டிருப்பவர்களையோ வாசிக்கும்போது தி.ஜா.-வின் எழுத்துக்கள் இன்றும் புதுமை குன்றாமலும் இவர்களைவிட, அதிக மீறலும் துடுக்கும் நிறைந்தவையுமாகவே தெரிகின்றன. தி.ஜா.-வை இவர்களிடமிருந்து வேறுபடுத்தும் மிக முக்கியமான அம்சம், அவரிடம் எந்தவிதமான ‘கலகக்காரர்’ என்கிற பாவனையோ ‘சுய பகிஷ்காரம்’ என்பது போன்ற கோஷங்களோ கிடையாது என்பதே. எழுத்தாலும் கற்பனையாலும் சென்று தொடக்கூடிய எல்லைகளை விட வாழ்க்கையும் மனமும் விஸ்தாரமானவை. அவற்றின் சாத்தியங்களும் முடிவற்றவை. தி.ஜா.-வின் எழுத்துக்களின் மீறலாகவும் பிறழ்வாகவும் நமக்குத் தெரிவது நேரடியாக வாழ்க்கையை எதிர்கொள்வதால் ஏற்படும் சலனத்தில் இருந்து உருவாகும் தவிப்புகளே. பாலுணர்வை தன் எழுத்தில் கையாளும் பிற எழுத்தாளர்கள் மீறலுக்கான தவிப்பை ஏதோவொரு பாவனைக்குள் அடைக்கின்றனர் என்பதால் அவ்வெழுத்துக்கள் பழசாகிப் போன உணர்வை ஏற்படுத்துகின்றன. தி.ஜா.வுமே அடி குறுநாவலில் அத்தகையதொரு தேசலான பாவனையை மேற்கொள்ள முனைகிறார். இந்த தொகுப்பில் அடியைத் தவிர்த்த பிற ஆக்கங்களில் தி.ஜா.-வின் வாழ்க்கை சார்ந்த, அழகுணர்வு சார்ந்த, அறம் சார்ந்த அத்தனை நிலையின்மைகளும் மிகத் துல்லியமாக பதிவாகி இருக்கின்றன. இந்த நிலையின்மையே தி.ஜா.-வின் ஆக்கங்களுக்கு நிரந்தரத்தன்மையை கொடுக்கின்றன. ஒரு வகையில் வலியன் குருவியிடமிருந்து தப்ப முயலும் அந்த காகத்தை, தி.ஜா.-வின் புனைவுகளில் வெளிப்படும் மொத்த தத்தளிப்புக்கும் படிமமாக்கலாம்.
– சுரேஷ் பிரதீப்