தி.ஜானகிராமன் சிறுகதைகள் : வெள்ளத்தின் வேகம்


ரியான நேரத்தில் தொடங்கிய பருவ மழை பத்து நாட்களாக இடைவிடாமல் இரவும் பகலும் பொழிந்தபடி இருந்தது. ஓயாத மழையால் துங்கபத்திரையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாக நண்பர்கள் சொன்னார்கள். நான் அப்போது ஷிமோகாவில் வேலை செய்துவந்தேன். வெள்ளக்காட்சிகளை திரைப்படங்களில் மட்டுமே பார்த்திருந்த என் கண்கள் முதன்முதலாக வெள்ளத்தை நேருக்கு நேர் பார்க்க விழைந்தன. நண்பர்களிடம் என் விருப்பத்தைச் சொன்னதும் அவர்கள் என்னை அழைத்துச் சென்றார்கள்.

ஷிமோகாவிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் கூடலி என்னும் இடத்துக்குச் சென்றோம். துங்கா என்றும் பத்திரை என்றும் பெயர் தாங்கி இருவேறு திசைகளிலிருந்து பாய்ந்தோடி வரும் நதிகள் கூடலியில் இணைந்து துங்கபத்திரையாக மாறி அங்கிருந்து தன் பயணத்தைத் தொடர்கிறது. மண் நிறத்தில் நுரைத்துச் சுழித்தோடும் புதுவெள்ளத்தை இமைக்கவும் மறந்து பார்த்தபடி நின்றிருந்தேன். மனம் பறப்பதுபோல இருந்தது. தண்ணீரின் வேகம் கண்ணுக்குத் தெரியாத ஒரு விசை வழியாக நம்மையும் இழுத்துச் சென்றுவிடுமோ என அச்சமாக இருந்தது. ஒருகணம் ஆழத்தை விளங்கிக்கொள்ளமுடியாத அமைதியான தோற்றத்தோடும் மறுகணமே பொங்கியெழுந்து திசையெங்கும் கைசுழல தாண்டவமாடும் கோலத்தோடும் காட்சியளித்தது துங்கபத்திரை.

ஒருபுறம் நதியில் முறிந்து விழுந்த கிளைகள் மிதந்து சென்றன. மேலும் கரையோரமாகவே மிதந்துபோகும் துணிகள். தேங்காய் நெற்றுகள். ஓலைகள். கூடுகள். வாழை மரங்கள். வெள்ளம் போகும் திசையில் வெவ்வேறு கோணங்களில் அனைத்தும் உருண்டுபுரண்டபடி செல்வதைக் கண்டேன். பொங்கிச் செல்லும் தண்ணீரிலிருந்து எழும் இசையைக் காதாரக் கேட்டபோது உடல் சிலிர்த்தது. சூழ்ந்து பெருகிய காற்றிலிருந்து மற்றொரு இசை கசிந்தது. இசையும் காட்சிகளும் எங்கோ இழுத்துச் செல்வதுபோல இருந்தது. ஒருகணம் அக்காட்சிகளில் நான் தி.ஜானகிராமனைக் கண்டேன்.

நம் மனத்துக்கு இசைவான ஓர் இசைத்துணுக்கு நாம் அதுவரை காணாத உலகங்களுக்கும் அனுபவங்களுக்கும் நம்மை இழுத்துச் செல்லும் அழகியல் அனுபவத்தை ஜானகிராமன் மட்டுமே அடிக்கடி தம் படைப்புகள் வழியாக உணர்த்திக்கொண்டே இருந்தவர். ஒருவேளை அந்த அழகியல் அனுபவத்துக்கு ஆட்படாதவர்கள் கூட, அவர் படைப்புகளில் இயல்பாகவே அமைந்துவிடும் வேகத்தையும் விசையையும் உணர்ந்திருப்பார்கள். ஆற்றொழுக்கான கதையோட்டத்துக்கும் வேகத்துக்கும் பெயர்போனவை ஜானகிராமன் சிறுகதைகள்.

செய்தி என்னும் சிறுகதையிலிருந்து தொடங்கலாம். தெற்கத்திச் சங்கீதம் கேட்கவேண்டும் என்ற ஆவலோடு வெளிநாட்டிலிருந்து வந்திருக்கும் வெள்ளைக்கார சங்கீதக்கோஷ்டிக்கு நாதஸ்வரம் வாசித்துக்காட்டும் தருணத்தையும் அக்கணத்தில் உருவாகும் மன எழுச்சியையும் சித்தரிக்கிறார் ஜானகிராமன். நாட்டையை கம்பீரமாக ஆலாபனம் செய்து கீர்த்தனத்தை அவர் தொடங்கியதும் சங்கீதக்கோஷ்டிக்குத் தலைமைப் பொறுப்பேற்று வந்திருக்கும் போல்ஸ்காவின் முகத்தில் புன்முறுவல் தவழ்கிறது. அமுதமென பெருக்கெடுத்த நாதப் பொழிவில் அவன் தன்னையே இழந்துவிடுகிறான். ஒரு கட்டத்தில் இசையின் வெள்ளம் தன்னை அடித்துச் செல்ல அனுமதித்துவிட்டு இசையில் லயித்துவிடுகிறான். அடுத்து பிள்ளை சாமா ராகத்தில் தொடங்கி ஆலாபனம் செய்துவிட்டு சாந்தமுலேகா என்று தொடங்குகிறார். அந்த வரிகளின் ஆழத்தை மொழியைக் கடந்து அவனால் அறிந்துகொள்ள முடிகிறது. ஒவ்வொரு முறையும் அந்தப் பாடல் முடியும்தோறும் மீண்டும் மீண்டும் வேண்டுமென பாட வைத்து, அந்த நாதத்திலேயே ஆழ்ந்து திளைக்கிறான். ஆறுமுறை கேட்டும் அவன் வேட்கை தணியவில்லை.

அக்கணத்தில்தான் அவன் அந்த இசையின் வழியாக தனக்கு ஒரு செய்தி கிடைத்ததாக ஆனந்தக்கூத்தாடுகிறான். இரைச்சலுக்கு நடுவில் அமைதியைக் இறைஞ்சி வேண்டும் குரலை பிள்ளையின் நாதத்தில் உணர்ந்ததாகச் சொல்கிறான். நிலமோ, மொழியோ தெரியாத ஒருவனிடம் நாதம் ஒரு வெள்ளம்போல எல்லாவற்றையும் அடித்துச் சென்று சேர்த்துவிடுகிறது. நாதஸ்வரம் தோன்றிய ஊரில் இருப்பவர்கள் நாதஸ்வரக் கீர்த்தனையில் திரைப்படப்பாட்டை கலந்து பாடி அந்தச் சுவையில் மயங்கிக் கிடக்க நினைக்கும்போது, ஏதோ ஊரில் பிறந்து நாதஸ்வரம் கேட்பதற்காக வந்த வெள்ளைக்காரன் கீர்த்தனையின் பொருளை நாதத்தைவைத்தே புரிந்துகொள்கிறான். விவேகசிந்தாமணியில் தண்டாமரையின் உடன்பிறந்தும் தண்டே நுகரா மண்டூகம் என்றொரு வரி உண்டு. ஜானகிராமன் எங்கும் அதைச் சுட்டிக் காட்டவில்லை. ஆனால் அவர் விவரிக்கும் போக்கில் அந்தச் செய்தி நமக்குக் கிடைத்துவிடுகிறது.

ரசிகனும் ரசிகையும் சிறுகதையில் இசையின் மற்றொரு பரிமாணம் முன்வைக்கப்படுகிறது. செவியை நிறைத்து, மனத்தை நிறைத்து, உயிரையும் நிறைக்கும் ஆற்றல் இசைக்கு இருக்கிறது. அப்படிப்பட்ட இசையில் லயித்திருக்கும்போது உடலும் உயிரும் கூட மறந்துபோகலாம். மேலோட்டமாகப் பார்த்தால் இது இக்கதையில் இடம்பெற்றிருக்கும் ஒரு கருத்தோட்டம் என்றே தோன்றும். ஆனால் இந்த வரிகளில் உள்ள உண்மையை உணர்த்துவதற்கு ஜானகிராமன் உருவாக்கிக் கட்டியெழுப்பும் பின்புலம் மிக நுட்பமானது.

வழக்கமான அவர் கதையின் வேகத்துக்கு  இசைவான சித்தரிப்பு. திருவையாற்று ஆராதனைக்கு சொந்த ஊரிலிருந்து புறப்படும் இசைக்கலைஞரான மார்க்கண்டம்தான் ரசிகன். போன முறை அவருடைய பாட்டிலிருந்த சுவையால் கவரப்பட்டு, அவருக்கு கடிதமெழுதி தம் வீட்டில் தங்கவைத்திருக்கும் தாசிப்பெண்தான் ரசிகை. ஆராதனை முடிந்த பிறகு ஊருக்குச் செல்லாமல் தாசிப்பெண்ணுடன் பேசிப் பொழுதைப் போக்குகிறார் ரசிகர். ஆராதனை நாளன்று மார்க்கண்டம் பாடிய பாடல் அருமையாக இருந்ததாக ரசிகை பேச்சைத் தொடங்குகிறாள். ரசிகரோ இசையைவிட ரசிகையின் அழகின் மீதும் இளமையின் மீதும் கண்ணாக இருக்கிறார். அவள் இசையின் திசையில் உரையாடலை நகர்த்த முயற்சி செய்ய, ரசிகரோ சிருங்கார ரசத்தின் திசையில் உரையாடல் திசைதிருப்ப முயற்சி செய்கிறார். உரையாடலின் உச்சத்தில் ரசிகர் உளறத் தொடங்கிவிடுகிறார். இறைவனின் கருவறையின் முன்னால் அவள் பாடிய சாதாரண பாட்டை மிக அழகான பாட்டென்று பாராட்டுகிறார். அந்தப் பாராட்டை அவள் பொருட்படுத்தவே இல்லை. தன்னால் முடிந்த அளவு பேச்சை திசைதிருப்ப அவள் முயற்சி செய்கிறாள். அவரோ இன்னும் கூடுதலான பாராட்டுச்சொற்களைச் சொல்ல விழைந்தவராக, சந்நதியில் அவளுடைய நின்ற கோலத்தை தியாகையர் கீர்த்தனமே உருவெடுத்து நிற்பதுபோல இருந்ததாகச் சொல்கிறார்..

அந்த அசட்டுத்தனத்தால் சீண்டப்பட்டு நள்ளிரவு நேரம் என்றும் பார்க்காமல் ரசிகரை வீட்டைவிட்டு வெளியேற்றிவிடுகிறார் ரசிகை. மீண்டும் தண்டே நுகரா மண்டூகத்தின் கதைதான். இசையின் பரிமாணம் பற்றி ரசிகைக்கு இருக்கும் தெளிவு கூட, ஆராதனைக்குப் பாடச் செல்லும் கலைஞருக்கு இல்லை என்பது விசித்திரமான உண்மை. புறப்பாடு, பயணம், ஆராதனை, ரசிகையின் வீடு, உரையாடல், வெளியேற்றம் என நேர்க்கோட்டில் வேகவேகமாக நகரும் விதமாக கதையை அமைத்திருக்கிறார் ஜானகிராமன். செய்தி சிறுகதையில் எழுதப்பட்ட கீர்த்தனையின் வழியாக எழுதப்படாத உண்மையை நாதத்தின் வழியாகவே உணர்ந்துகொள்ளும் வகையில் இசையைக் கையாளும் கலைஞனை அறிமுகப்படுத்திய ஜானகிராமனே கீர்த்தனையின் பொருளுக்கும் தனிவாழ்க்கைக்கும் எவ்விதமான இணைப்பும் இல்லாமல் வாழ்கிற இன்னொரு இசைக்கலைஞனை ரசிகனும் ரசிகையும் சிறுகதையில் முன்வைத்திருக்கிறார்.

தவம் சிறுகதையில் கோவிந்த வன்னி, செல்லூர் சொர்ணாம்பாள் என இரு பாத்திரங்களை ஜானகிராமன் நமக்கு அறிமுகப்படுத்துகிறார். பெண் பேரழகி. ஆண் அந்த அழகைச் சுவைக்கும் வேட்கையோடு காத்திருக்கும் இளைஞன். வீட்டு வேலை செய்யும் ஒரு பெண்ணுக்கு மாதத்துக்கு ஆறு ரூபாய் சம்பளம் பெறுகிற காலத்தில் தன் அழகை விருந்தாகப் படைக்க ஒரு இரவுக்கு அறுநூறுக்கும் எழுநூறுக்கும் குறையாமல் பணம் வாங்குகிறாள் சொர்ணாம்பாள்.

பணத்தைச் சம்பாதிக்கும் முனைப்போடு பத்தாண்டுகளாக வெளிநாட்டில் வேலை செய்ததுக்காக பணம் சேர்க்கிற கோவிந்த வன்னி தற்செயலாக விடுதியில் சாப்பிட வந்தவர்கள் சொர்ணாம்பாளைப்பற்றி பேசுவதைக் கேட்பதிலிருந்து கதையைத் தொடங்குகிறார் ஜானகிராமன். அங்கிருந்து வெள்ளம்போல பாய்ந்தோடுகிறது கதை. அவன் ஊருக்குத் திரும்பி வருகிறான். மனைவியையும் பிள்ளைகளையும் சந்தித்துப் பேசிவிட்டு வேகவேகமாக தஞ்சாவூருக்குப் புறப்பட்டு சொர்ணாம்பாளைச் சந்திக்க வருகிறான். இருவரும் சந்தித்து உரையாடுவதுதான் கதையின் உச்சம். உடலழகின் ஈர்ப்பு எப்படியெல்லாம் மாறக்கூடியது என்பதை அவன் உணர்ந்துகொள்கிறான். விருப்பத்துக்கு இருக்கும் வேகமும் அர்ப்பணிப்பும் எத்தகைவது என்பதை அவள் உணர்ந்துகொள்கிறாள். அவன் ஏமாற்றத்தில் நிலைகுலைந்தாலும் அவள் பரவசத்தில் மனம் நிறைகிறாள். அவனுக்கு பத்தாண்டு கால காத்திருப்பும் தவமும் வெறுமையில் முடிந்துபோகின்றன. அவன் எதிர்பார்த்தபடி அவனை அவள் ஆரத் தழுவிக்கொள்கிறாள். முத்தமும் கொடுக்கிறாள். ஆனால் அவை அவனுக்கு அவன் விரும்பி வந்த சுவையை அளிக்கவில்லை. ஆனால் அந்த நாள் அவளுக்கு அவளே எதிர்பாராத விதமான ஆனந்தமான நாளாக அமைந்துவிடுகிறது. அவனை முத்தமிட்ட பிறகு தான் மிகமிக இளமையாகவும் அழகாகவும் இருப்பதாக அவள் உணர்கிறாள்.

கோவிந்த வன்னியின் கோணத்திலிருந்து மட்டுமே பலரும் இச்சிறுகதையை வாசித்திருக்கிறார்கள். அனைவரும் அவன் சொர்ணாம்பாளை அடைய பணமீட்டும் பத்தாண்டு கால காத்திருப்பையே தவம் என்ற சொல் சுட்டுவதாக கூறியிருக்கிறார்கள். அந்த எண்ணத்துக்கு இசைவாக கதையில் ஓரிடத்தில் சொர்ணாம்பாளே ”கண்டதுக்கெல்லாம் தவம் கிடந்தா மனசுதான் ஒடியும்” என்று எடுத்துரைக்கும் உரையாடலே இடம்பெற்றிருக்கிறது.

சொர்ணாம்பாளின் கோணத்திலிருந்தும் இந்தக் கதையை அணுக ஒரு வாய்ப்பிருக்கிறது. கதையின் இறுதிக்கணத்தில் சொர்ணாம்பாள் பெறும்  மனநிறைவும் ஆனந்தமும் பரவசமும் மகத்தானவை. ஒருவகையில் அவள் நாடிச் செல்லாமலேயே பெற்ற வரங்கள். முதுமையில் கூட தன்னை இளமை மிக்கவளாகவும் அழகு மிக்கவளாகவும் அக்கணம் உணரச் செய்வதாக அவளே உரைக்கிறாள். அவள் பெற்ற வரங்களுக்கு தவமில்லை என்று எப்படிச் சொல்லமுடியும்?

முப்பது வயதுக்குப் பிறகு தாசியின் வயது ஒவ்வொரு ஆண்டும் கழியும்போது பத்து பத்தாக கூடிக்கொண்டே செல்லும் என்னும் கசப்பான உண்மையை உணர்ந்தவள் அவள். தன்னைப் பார்த்தவர்கள் அனைவரும் மடங்கி மடங்கி நெருப்பில் விழுகிற பூச்சிகள் மாதிரி விழுந்தார்கள் என்பதையும் அறிந்தவள் அவள். இந்த சுயஞானத்தின் வழியாக ஜானகிராமன் அவளை ஒரு சிறந்த விவேகியாக முன்வைக்கிறார். எந்த இடத்திலும் தன்னை நாடிய ஆண்களை அவள் பழிக்கவில்லை. தான் வாழ்ந்த வாழ்க்கை மீது குற்ற உணர்ச்சியும் அவளுக்கு இல்லை. அது ஒரு வாழ்க்கை, வாழ்ந்து முடித்தாகிவிட்டது என்னும் எண்ணமே அவளிடம் இருக்கிறது. அவள் இளமை மங்கி தோற்றம் சரிந்துவிட்டது. அந்த உண்மை அவளுக்கும் தெரிகிறது. அவள் சிறந்த விவேகி என்பதற்கு இவை எல்லாமே சான்றுகள்.

இந்த விவேகமும் ஞானமும் கொண்டிருப்பதாலேயே வன்னியைத் தழுவும்போது அவள் மனம் பரவசமுறுகிறது. அவன் நாடி வந்தது அவளுடைய இளமையை என்பது அவளுக்குத் தெரியாமல் இல்லை. அவளுடைய தற்போதைய முதுமை அவனுக்கு இனிமை அளிக்கப் போவதில்லை என்பதும் அவளுக்குத் தெரியும். ஆயினும் ஒவ்வொரு இரவிலும் மாறிமாறி தன்னை நாடிவரும் புதுப்புது மனிதர்களைப் பார்த்துப் பழகிய அவள் மனம் தன் ஒருத்தியை நினைத்து ஒருவன் பத்தாண்டு காலம் காத்திருந்தான் என்னும் செய்தி திகைப்பை ஏற்படுத்துகிறது.  அதனால்தான் பேச்சுவாக்கில் ”கண்டதுக்கெல்லாம் தவம் கிடந்தா மனசுதான் ஒடியும்” என்று சொல்லி அமைதிப்படுத்துகிறாள். அதே சமயத்தில் ஆண் பெண் ஈர்ப்பு சார்ந்த வரையறைகள் எதுவுமே அறுதி உண்மைகள் அல்ல என்பதை அவள் உணர்ந்திருக்கக்கூடும். பொங்கி வரும் பரவசத்துக்கு அந்த ஞானமும் ஒரு காரணம். சொர்ணாம்பாளின் விவேகத்தையும் ஞானத்தையும் ஒருவகையில் அவள் இயற்றிய தவம் என்றே சொல்லவேண்டும். அந்தத் தவத்துக்குக் கிட்டிய பரிசுதான் அவள் அடையும் இளமையுணர்வும் பரவசமும்.

விவேகமுள்ள ஆண் பாத்திரமொன்றையும் கோபுரவிளக்கு என்னும் சிறுகதையில் தீட்டிக் காட்டியிருக்கிறார் ஜானகிராமன். ஒருநாள் இரவு கோயிலில் உள்ள கோபுரவிளக்கு எரியவில்லை. ஊரே இருளில் மூழ்கிவிடுகிறது. வழக்கமாக “எங்காத்துக்காரனும் கச்சேரிக்குப் போறான்” போல எரிந்துகொண்டிருக்கும் அன்றைய தினம் பஞ்சாயத்துபோர்டு விளக்கும் எரியவில்லை. கதைசொல்லியும் அவன் மனைவியும் உரையாடிக்கொள்ளும் போக்கில் அத்தெருவில் வசித்துவரும் ஒரு இளம்பெண் மரணமடைந்துவிட்ட செய்தி முன்வைக்கப்படுகிறது. தன் குடும்பத் தேவைக்காக உடலை விற்று பணமீட்டும் தொழிலைச் செய்து வந்தவள் அவள். நல்ல பணமுள்ள வாடிக்கைக்காரன் வந்து சேரும் வகையில் துர்க்கையிடமே வரம் கேட்கும் அப்பாவிப் பெண் அவள். விளக்கு விஷயமாக பேசுவதற்காக மானேஜரைப் பார்த்துப் பேசச் செல்கிறான் கதைசொல்லி. இறந்துபோன ஒரு உயிரை எடுத்துச் சென்று முறையாக தகனம் செய்யக்கூட முன்வராத மனிதர்கள் மீதும் ஒரு பெண் மீது இரக்கம் காட்டாத தெய்வத்தின் மீதும் உள்ள கசப்பாலேயே விளக்கைப் போடவில்லை என்று வெளிப்படையாகவே சொல்கிறார் அவர். அதே சமயத்தில் அதையும் தாண்டி சிந்திப்பவராக அவர் இருக்கிறார். மறுநாள் காலையில் நாயனக்காரரிடம் சொல்லி இரு ஆட்களுக்கு ஏற்பாடு செய்துகொண்டு தானே முன்னின்று தகனம் செய்ய எடுத்துச் செல்ல இருப்பதாகத் தெரிவிக்கிறார்.  உயிருடன் இருக்கும்போது காட்டும் பேத உணர்வை உயிரிழந்த பிறகும் காட்டி இறுதிச்சடங்கு செய்வதிலும் காட்டி விலகியிருக்கும் மனப்போக்கைச் சாடும்போது அவரிடம் விவேகம் வெளிப்படுகிறது. விளக்கின்றி ஊரும்   இருண்டு கிடக்க, ஊராரின் மனமும் இருண்டிருக்க, அவர் மனத்தில் கருணையென்னும் கோபுர விளக்கு மட்டும் சுடர்விட்டு எரிகிறது.

பட்டணத்துக்குப் படிக்க வரும் ருக்கு என்னும் இளம்பெண் தன் அனுபவங்கள் வழியாக மெல்ல மெல்ல விவேகியாக மலரும் வெவ்வேறு கட்டங்களை சிவப்பு ரிக்ஷா சிறுகதையில்  சித்தரிக்கிறார் ஜானகிராமன். நுகர்வுக்குரிய ஒரு பண்டமாக பெண்களைப் பார்க்கும் ஆண்களை அருவருப்பாக நினைப்பவள் ருக்கு. அவர்களை உடனுக்குடனே தண்டித்துவிட வேண்டுமென்றும் நினைப்பவள். ஒருமுறை, ஒருவர் மேல் ஒருவர் இடித்துக்கொண்டிருக்கும் கூட்டத்தை ஒரு சாக்காக வைத்துக்கொண்டு டிராமில் தன் மீது உரசிக்கொண்டும் சாய்ந்துகொண்டும் வந்த இளைஞனொருவன் முழங்கையில் ரத்தம் வரும் அளவுக்கு நகத்தை அழுத்திக் கிள்ளிவிடுகிறாள். அப்போது அந்தச் செயல் அவளுக்குச் சரியென்றே தோன்றுகிறது. அது ஒரு கட்டம்.

அடுத்த கட்டத்தில் டிராமில் மோதிக்கொண்டு செல்வதற்கு மாறாக  பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் வந்து அழைத்துச் சென்று லிப்ஃட் கொடுப்பவர்கள் வண்டிகளில் செல்லத் தொடங்குகிறாள். அதற்குச் சில பொய்களும் தளுக்குகளும் தேவைப்படுகின்றன. யார் மீதும் உரசாமல் ஒட்டாமல் செல்ல முடிகிறதே என நினைத்து அந்தத் திட்டத்தில் தேர்ச்சி கொள்கிறாள் அவள். அது இன்னொரு கட்டம். ஆனால் அதிலுள்ள ஆபத்து அவளுக்கு வெகுசீக்கிரமே புரிந்துவிடுகிறது.

தொடர்ச்சியான பட்டணவாசம் அவளுக்கு நகரத்தையும் நகரத்து மனிதர்களையும் புரியவைக்கிறது. யாரையும் தண்டித்து திருத்திவிட முடியாது என்பதையும் யாரும் திருந்தப் போவதுமில்லை என்பதையும் அவள் வெகுவிரைவில் புரிந்துகொள்கிறாள். என்னதான் உயர்வான காரணமென்றாலும், மனசாட்சிக்கு விரோதமாக அடுத்தவரை ஏமாற்றுவது குற்றமென்னும் உண்மையையும் அவள் புரிந்துகொள்கிறாள். கடைசியாக வேறு வழியில்லாமல் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் விதமாக ஒரு ரிக்‌ஷாவை வாடகைக்கு அமர்த்திக்கொண்டு அதிலேயே தினமும் கல்லூரிக்கு போகவும் வரவும் செய்கிறாள். அது மூன்றாவது கட்டம்.

இறுதியாக அவள் அடையும் விவேகம் மிகமுக்கியமானது. பெண் சமூகம் பற்றிய ஜானகிராமனின் பார்வைக்கு இந்தக் கதை நல்ல எடுத்துக்காட்டு. பெண்கள் கல்வி கற்கவேண்டும். சுயமாக சிந்திக்கவேண்டும். எவ்வளவு மோசமானதாக இருந்தாலும் தாம் செல்லவேண்டிய வழியை தாமே சொந்தமாக யோசித்து முடிவெடுக்க வேண்டும். தாம் எடுத்த முடிவு என்பதாலேயே அது நிரந்தரமாக நீடிக்கவேண்டிய அவசியமில்லை. சூழலுக்கேற்றபடி ஒரு முடிவை விலக்கிக்கொள்ளவும் மாற்றியமைக்கவும் உரிமை கொண்டவளாக ஒரு பெண் வாழவேண்டும். இதை எத்தருணத்திலும் ஜானகிராமன் தன் கதைக்குள் நேரிடையாக முன்வைக்கவில்லை என்பதை உணரவேண்டும். ருக்குவின் வெவ்வேறு வாழ்க்கைத் தருணங்களை விவரித்துச் சொல்லும் போக்கில் நம்மையே உணர்ந்துகொள்ளும் விதமாக கட்டமைத்திருக்கிறார் அவர்.

சத்தியமா, கடன் தீர்ந்தது ஆகிய இரு கதைகளும் தன்னிச்சையாக பொங்கியெழும் மானுட உயர்குணத்தை வெளிப்படுத்துபவை. சத்தியமா கதையில் இடம்பெறுபவர்கள் இரண்டு சிறுவர்கள். ஒரு சிறுவனிடம் புதிய அழகான காலண்டர் இருப்பதைப் பார்க்கிறான் இன்னொரு சிறுவன். அதைப் பறித்துக்கொள்ள நினைக்கும் அச்சிறுவன் அவனை எதைக் கேட்டாலும் தருவேன் என்று சத்தியம் செய்யவைத்து தந்திரமாக காலண்டரை எடுத்துக்கொண்டு சென்றுவிடுகிறான். அதைப் பார்க்கும் அவன் பெற்றோர் அவனுடைய ஏமாளித்தனத்தை நொந்துகொண்டு எப்படியாவது அவனைப்போலவே பேசி வழிக்கு வரவழைத்து காலண்டரை திரும்ப வாங்கிக்கொண்டு வருமாறு அவன் வீட்டுக்கு அனுப்பிவைக்கின்றனர். ஒருமுறை கொடுத்ததை திரும்பவும் எப்படி கேட்டு வாங்குவது என்ற அறஉணர்வு அவனை உள்ளூரத் தடுக்கிறது. ஆயினும் பெற்றோர் கேட்டுக்கொண்டதற்காக விருப்பமில்லாத மனத்துடன் நண்பன் வீட்டுக்குச் செல்கிறான். காலண்டரைத் திரும்ப வாங்குவதற்குத்தான் அவன் வந்திருக்கிறான் என்பதைப் புரிந்துகொண்டு, அவனுக்கு பிடிகொடுக்காமல் பதில் சொல்லி தப்பிக்கிறான். ஒரு வழியாக அவனை ’சரி, முடிஞ்சா சத்தியமா தரேன்’ என்று சொல்லவைத்த பிறகு காலண்டரை கேட்க மனமின்றி மைக்கறையை அழிக்கும் அழிப்பானை கேட்டு வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வருகிறான். ஏமாற்றப்பட்டவன் என்றாலும் அறத்துடன் நின்ற நிறைவில் அவன் மனம் தளும்புகிறது. ஒரு கோணத்தில் சிறுபிள்ளைகள் விளையாட்டு போல தோற்றமளித்தாலும் இயல்பாகவே ஒரு சிறுவனின் மனத்தில் ஏமாற்றிப் பறிக்கும் எண்ணமும் இன்னொரு சிறுவனின் மனத்தில் அறத்தொடு நிற்கும் எண்ணமும் முளைத்திருப்பதை உணர்த்துகிறது. ஒருசிலர் தீமை சார்ந்தும் ஒருசிலர் நன்மை சார்ந்தும் நின்றிருக்கும் இந்த மண்ணுலகம் மாபெரும் விசித்திரமான புதிர். இதற்கு வரையறையும் இல்லை. இலக்கணமும் இல்லை.

இந்தச் சிறுவர்களே வளர்ந்து பெரியவர்களானால் சுந்தர தேசிகராகவும் கந்தசாமியாகவும் காணப்படுவார்கள். யாருக்கோ சொந்தமான நிலத்தை குறைந்த விலைக்கு கிரயம் பண்ணித் தருவதாக ஆசை காட்டி இருபத்தைந்தாயிரம் ரூபாய்க்கும் மேல் அபகரித்துக்கொண்டு ஏமாற்றும் கந்தசாமியின் தந்திரத்தை முழுப்பணத்தையும் தொலைக்கும் வரைக்கும் சுந்தர தேசிகரால் கண்டுபிடிக்க முடியவில்லை. கண்டுபிடிக்கும் நேரத்தில் அவன் பணம் மொத்தத்தையும்  தொலைத்துவிட்டு மரணப்படுக்கையில் கிடக்கிறான். கடைசியில் ஏமாற்றியவன் வீட்டுக்கே செல்லும் தேசிகர் வெறும் இரண்டணாவை கைநீட்டி வாங்கிக்கொண்டு “நீ கொடுக்கவேண்டிய கடன் மொத்தத்தையும் நான் வாங்கிக்கொண்டேன். கவலைப்படாதே” என்று சொல்லிவிட்டு திரும்பி வந்துவிடுகிறார். தேசிகர் மாதிரியான அப்பாவிகளுக்கும் கந்தசாமி மாதிரியான தந்திரக்காரர்களுக்கும் சேர்ந்தே இந்த உலக உருண்டை சுற்றிக்கொண்டு இருக்கிறது என்பது விசித்திரமான புதிர்.

கடன் தொடர்பான இன்னொரு கதை கங்காஸ்நானம். மறைந்துபோன அக்காவின் வேண்டுகோளை நிறைவேற்றுவதற்காக சின்னசாமியும் அவன் மனைவியும் காசிக்கு வந்து கங்கைக்கரையில் நிற்கிறார்கள். முக்கால் தென்னை உயரம் போலிருந்தது கரை என்று ஒரே வரியில் கங்கையின் அமைப்பைச் சொல்லி கடந்து செல்கிறார் ஜானகிராமன். அதன் அகலத்தைப் பார்த்து மலைத்து “ரெண்டு கும்மோணம் காவேரி இருக்குமாங்கறேன் அகலம்?” என்று கேள்வி எழுகிறது. அப்படித்தான் கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் கங்கைக்கரையில் உரையாடல் தொடங்குகிறது. கண்ணாலேயே கங்கையைப் பார்த்து அதன் ஆழத்தையும் அகலத்தையும் கணிக்கத் தெரிந்த அந்தக் கிராமத்து அப்பாவிகள் தமக்கு அருகிலேயே வாழும் மனிதர்களின் மன ஆழத்தையும் அகலத்தையும் கணிக்கத் தெரியாமல் போனதை துரதிருஷ்டம் என்றுதான் சொல்லவேண்டும். ஊராரால் அன்னதாதா என்று பாராட்டப்படுகிற துரையப்பா முதல் நாள் இரவில் வாங்கி வைத்த மூவாயிரத்து சொச்ச ரூபாயை மறுநாள் காலையில் வாங்கவில்லை என்று சாதித்தபோது சின்னசாமி ஒன்றும் செய்ய இயலாதவனாக கையறு நிலையில் நின்ற கோலமும் துரதிருஷ்டவசாமனதுதான். அதே துரதிருஷ்டம்தான் நீதிமன்றத்துக்கு இழுக்கிறது. வட்டியும் முதலுமாக பணத்தைச் செலுத்தவைக்கிறது. அக்காவுக்கு கொடுத்த வாக்குறுதியை நான்கு ஆண்டுகள் கழித்து நிறைவேற்ற வைக்கிறது.

நன்மையும் தீமையும் மட்டுமல்ல, அன்பும் பொறாமையும் கூட விசித்திரமான புதிர்களே. சிலிர்ப்பு அன்பின் புதிரை சித்திரமாக தீட்டிக்காட்டும் சிறுகதையாக மலர்ந்திருக்க, அன்பும் பொறாமையும் கலந்த புதிரை சுட்டிக்காட்டுகிறது பாயசம். அன்பின் அடையாளமாக வாழும் சுப்பராயனின் மகளுக்குத் திருமணம். பெரியப்பாவான எழுபத்தேழு வயது சாமிநாதுதான் முன்னின்று அத்திருமணத்தை நடத்திவைக்கவேண்டும்.  ஆனால் அவரால் திருமணப்பந்தலிலேயே நிற்கமுடியவில்லை. உடலும் மனமும் எரிந்தபடி இருக்கிறது. தன் தம்பி மகன் தன் கண் முன்னாலேயே எட்டாத உயரத்துக்கு வளர்ந்து நிற்கும் கோலம் அவர் நெஞ்சை அறுத்தபடியே இருக்கிறது. அது முதல் காரணம். அவன் பெற்ற பெண்கள் ஒவ்வொன்றும் திருமணமாகி நல்ல முறையில் வாழ்வதையும் காணப் பொறுக்கவில்லை. அவர் பெற்ற பிள்ளைகள் அடுத்தடுத்து மறைந்துபோனார்கள். உயிருடன் இருக்கும் ஒற்றை மகள் தலையை மழித்துக்கொண்டு விதவைக்கோலம் தாங்கி வீட்டோடு வசிக்கிறாள்.  அது இரண்டாவது காரணம். அதையெல்லாம் ஒப்பிட்டு அவர் உள்ளூர வெந்துபோகிறார்.  அவர் மனைவி உயிருடன் இருக்கும் வரையில் கொஞ்சநஞ்சமாக ஒட்டியிருந்த தர்மபுத்தியும் நியாய புத்தியும் அவள் மறைந்துபோனதும் காணாமலேயே போய்விடுகின்றன.  அவர் நெஞ்சை ஆட்டிப் படைக்கும் ஒரே உணர்வு பொறாமை மட்டுமே.

கொழுந்துவிட்டெரியும் அந்த வெப்பத்தினால்தான் அவரால் திருமணப்பந்தலில் நிற்கமுடியாமல் குளிக்கப் போவதாக ஒரு காரணத்தைச் சொல்லிவிட்டு காவேரிக்கு வந்துவிடுகிறார். ஆற்றுக்குள்ளும் அவரால் நிற்கமுடியவில்லை. அரூபமாக அவர் மனைவி அவரை பந்தலை நோக்கி விரட்டியபடி இருக்கிறார். மண்டபத்துக்கு வந்த பிறகும் பந்தலுக்குச் செல்லாமல் அங்குமிங்கும் அலைகிறார். மனைவியின் வடிவில் மகள் தோன்றி பந்தலுக்கு அழைத்துச் செல்கிறாள்.

மத்தளம் முழங்க பெண்ணும் மாப்பிள்ளையும் மாலை மாற்றுகிறார்கள். ஒரு திருமணத்தில் மாலை மாற்றுவதையும் ஊஞ்சலையும் பார்ப்பது என்பது பார்வதி பரமசிவனையும் லட்சுமி நாராயணனையும் பார்ப்பதற்கு இணையான ஒரு செயல். கிட்டத்தட்ட தெய்வ தரிசனம். சின்னப் பிள்ளைகள் முதல் வயதான பெரியவர்கள் வரைக்கும் தவறாமல் பார்க்க நினைக்கிற ஒரு சடங்கு. வழக்கம்போல சாமிநாதுவால் பந்தலுக்குள் நிற்க முடியவில்லை. காவேரிக்கும் செல்லமுடியாமல் அறைக்குள்ளும் முடங்கிவிட முடியாமல் பொறாமையின் அனல் தாங்காமல் சந்தடியே இல்லாத சமையல் கட்டுக்கு வந்து நிற்கிறார்.

சமையல் கூடத்தில் விருந்தினர்களுக்கு வழங்குவதற்காக பெரிய அண்டாவில் பாயசம் கொதித்துக்கொண்டிருக்கிறது. அதைப் பார்க்கப் பார்க்க அவர் மனத்தில் பொறாமை என்னும் நஞ்சு கொதிக்கிறது. அந்த நஞ்சின் உந்துதலால் என்ன செய்கிறோம் என்று தெரியாமலேயே அடுப்பிலிருக்கும் பாயச அண்டாவை இறக்கி சாக்கடையில் கொட்டிவிடுகிறார். வேலைக்காரப் பெண் ஓடிவந்ததைப் பார்த்ததும் பாயச அண்டாவில் எலி மிதந்ததாகப் பொய்யுரைக்கிறார். அவசரமாக அங்கு ஓடி வந்த பெண்ணின் பார்வையில் முள் படிந்திருக்கிறது. அந்தப் பார்வையின் கூர்மையைத் தாங்க முடியாதவராக அங்கும் நிற்க முடியாதவராக சமையல்காரரைத் தேடிக்கொண்டு செல்வதுபோல நகர்ந்துவிடுகிறார். அவரை ஒரு இடத்தில் நின்றிருக்க விடாமல் இறுதிவரையில் துரத்தியபடியே இருக்கிறது பொறாமையென்னும் அனல்.

வெள்ளத்தில் இழுபட்டுச் செல்லும் ஒரு மரக்கிளை எந்தப் பக்கம் திரும்பி மிதந்தாலும் அதன் வேகம் குறைவதில்லை. ஜானகிராமனின் சிறுகதைகளின் மிகப்பெரிய வலிமை அவற்றின் வேகமும் கச்சிதமும். அவர் தன் கதைகளை அடித்தல் திருத்தலின்றி ஒரே அமர்வில் எழுதி முடிப்பதாக அவருடன் பழகியவர்கள் சொல்லியிருக்கிறார்கள். எழுதச் செல்லும் முன்பு மொத்தக் கதையின் ஓட்டத்தையும் அவர் மனத்தில் தேக்கிவைத்திருப்பார் என்றும் சொன்னதுண்டு. ஆற்றொழுக்கான கதையின் போக்குக்கு அதுவும் ஒரு காரணம். கைகோர்த்துக்கொண்டு ஓடும் சிறுமிகளைப் போல அவருடைய கதைகளில் சம்பவங்கள் மிக இயல்பாக ஒன்றையடுத்து ஒன்று உருவாகி இணைந்துகொள்கின்றன. அவர் சிறுகதைகளுக்கு அது ஒரு பேரழகை அளிக்கிறது.

மிதமான வேகத்தில் நல்ல கதைகளை எழுதியவர்களும் இருக்கிறார்கள். வேகத்தையே துறந்து ஒரு துளி காட்சியையே கதையாக மாற்றும் கதையாளர்களும் இருக்கிறார்கள். ஆனால் தொடக்கத்திலிருந்து ஆற்றொழுக்கான வேகத்தையே தம் கதைகளின் இயல்பாகக் கொண்டவர் ஜானகிராமன். கதையை சரியான புள்ளியில் தொடங்கி சரியான புள்ளியில் முடிக்கத் தெரிந்தவர் அவர். அவரே ஒரு சிறுகதையில் ‘சூடு ஒரு ருசி, சிவப்பு ஒரு நிறம்’ என்று குறிப்பிட்டிருக்கிறார். நாம் கூடுதலாக ’வேகம் ஒரு கலை’ என்று இணைத்துக்கொள்ளலாம். அது என்றென்றும் நிலைத்திருக்கும் ஜானகிராமனின் அடையாளம். அவருடைய ஒவ்வொரு சிறுகதையும் ஐம்பது அறுபது வருஷத்து பழமையை உதறிவிட்டு புத்தம்புதிய கதைபோல நம்மை ஈர்ப்பதற்கு அந்த வெள்ளத்தின் வேகமும் ஒரு காரணம்.


– பாவண்ணன்

ஓவியம்:  சுந்தரன்


4 COMMENTS

  1. பாவண்ணனின் இக்கட்டுரை தி.ஜானகிராமனின் கதைகளின் ஆன்மாவை த்தொடுகிறது. அக்கதைகளை மீள் வாசிப்புக்குட்படுத்த் தூண்டுகிறது.தண்டுணராத முண்டுகம் பொருத்தமான சொல்லாடல் . வாழ்த்துகள்.

    • தி.ஜானகிராமன்அவர்களின் சிறுகதைகளின் சாராம்சத்தை நளினமான முறையில் வெளிக்கொணர்ந்த பாவண்ணன் கட்டுரை அருமையாக இருந்தது.
      -தஞ்சிகுமார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.