தி.ஜானகிராமனின் சிறுகதைகள்: மானுடக் கரிசனத்தின் மாளாத சங்கீதம்


சில நூல்களைப் பற்றிய நினைவு வரும்போது, அந்நூலுக்கு வேறொருவர் எழுதிய முன்னுரையும் சேர்ந்தே ஞாபகத்துக்கு வரும். புதுமைப்பித்தன் சிறுகதைத் தொகுப்புக்கு ரா.ஸ்ரீ.தேசிகனின் முன்னுரையைப்போல. தி.ஜானகிராமனின் தேர்ந்தெடுத்த சிறுகதைத் தொகுப்பான சிலிர்ப்புக்கு பிரபஞ்சன் எழுதிய முன்னுரையும் அத்தகைய ஒன்று. ஜானகிராமனின் ஒட்டுமொத்த படைப்புகளுக்கும் சேர்த்தளித்த அற்புதமான அஞ்சலி அது.

 ‘ஜானகிராமனின் உலகம் நீரினால் ஆனது’ என்று பிரபஞ்சன் தொடங்குகிறார்.  ‘அவர் மனதில் எப்போதும் அருவி கொட்டிக்கொண்டே இருக்கிறது. அருவியின் ஊடாகத்தான் மனிதர்களைப் பார்க்கிறார் அவர். தலையில் தங்கித் தயங்கி உடம்பு முழுக்கப் பரவி வழியும் நீர் வாய்க்காலோடு கூடிய மனிதர்களையே அவர் பாத்திரமாக்கியிருக்கிறார்.’ எவ்வளவு சத்தியமான வர்ணனை!

தி.ஜானகிராமனைப் பற்றி தமிழ் இலக்கிய உலகில் எழுகின்ற விமர்சனங்கள், பாராட்டுகள், வாசக அனுபவங்கள் எல்லாமே பெரும்பாலும் அவரது அற்புதமான நாவல்களைச் சுற்றியே அமைந்துவிடுகின்றன. இன்றளவும் அவரது சிறுகதைகள் பெருமளவுக்கு – அதாவது நாவல்களின் அளவுக்கு – வெளிச்சத்துக்கு கொண்டுவரப்படவில்லை என்றே சொல்லமுடியும். ஆனால் அவருடைய அத்யந்த வாசகனுக்கு முன்னணியில் நிற்பது தி.ஜானகிராமன் என்ற சிறுகதையாசிரியரே.

நாவலுக்கு முக்கியமாக அதன் வடிவம் சார்ந்து ஒரு பெரிய கவனம் ஈர்க்கப்பட்டுவிடுகிறது. மோகமுள் போன்றதொரு நாவல் மாபெரும் கேன்வாஸில் தீட்டப்படுகிறது. அம்மா வந்தாள், நளபாகம், மரப்பசு, உயிர்த்தேன் என அவருடைய நாவல்கள் பெருவாழ்வின் சித்திரங்களாக பரந்து விரிந்து செல்கின்றன. பல்வேறு மனிதர்களின் வாழ்க்கைகளும் நாவலில் பின்னிப் பிணைந்து பேரனுபவமாக வாசகனுக்கு வழங்கப்படுகிறது. மகத்தான நாவல் ஒன்றை ஒருவன் வாசித்து முடிக்கும்போது அவனே ஒரு வாழ்க்கைப்பாதையைக் கடந்து முடிக்கிறான்.

 ஆனால் சிறுகதைகள் வாழ்வின் துணுக்குகள். பனித்துளியில் காணக்கிடைக்கும் பேரண்டம். சிறுகதைகளின் வடிவ எல்லையைத் தாண்டி அந்த அனுபவம் வாசகனின் உள்ளத்தில் விரிந்துகொண்டே செல்கிறது.  கண்டாமணி அடித்து ஓய்ந்த பிறகும் வெளியெங்கும் விரவி நிற்கும் ரீங்காரம் போல ஜானகிராமனின் சிறுகதைகளின் கடைசி வரிகளுக்குப் பிறகு எழுதப்படாமலிருக்கும் வாழ்க்கை வாசகனின் மனவெளிக்குள் நிரம்பி விடுகின்றன.

ஜானகிராமன் என்ற சங்கீத இலக்கியவாதிக்கு விஸ்தாரமாக ராக ஆலாபனையோடு நாவல்களில் முழுக்கச்சேரியை நடத்தமுடிவதைப் போலவே, தன்னளவில் முழுமைபெற்ற துக்கடாக்களையும் சிறுகதைகளில் நிகழ்த்திவிட முடிகிறது. பல நேரங்களில் ஒரு பெரும்வாழ்வை சிறிய சாளரத்தின் வழியே காட்டிவிடுகிறார். சில கதைகளில் அரண்மனை வாசலைப்போல கதையின் முடிவைத் திறந்துவிட்டு பிரமாண்டத்துக்குள் பிரவேசிக்க வைக்கிறார்.

‘அழகுக்கு, சர்வ அழகுக்கு, எல்லாம் அழகு என்கிற ஸ்திதிக்கு, அழகே எங்கும் வியாபித்த அண்ட அழகுக்கு அவாவியவர் அவர்’ என்கிறார் பிரபஞ்சன். சண்பகப்பூ கதையில் வருகிற அந்தப் பேரழகு இளம்பெண் தி.ஜா.வின் எழுத்தில் மேலும் அழகாகத் தெரிகிறாள். தாயும் தந்தையும் தோற்றத்தில் சாதாரணர்கள். ‘அவர்களுக்குத்தான் இந்தப் பெண் பிறந்திருக்கிறது. தேங்காய்க்கும் பூவன்பழத்திற்கும் நடுவில் நிற்கிற குத்துவிளக்கைப் போல’ என்று படைப்பின் எட்டாத மாற்றத்தைக் கண்டு மாய்ந்து மாய்ந்துபோகிறார் அந்தப் பெண் வீட்டுவேலை செய்யும் வீட்டுக்காரக் கிழவர்.

  ‘மலர்ந்து இரண்டு நாளான கொன்னைப்பூவைப் போல வெண்மையும் மஞ்சளும் ஒன்றித் தகதகத்ததையும் நீரில் மிதந்த கருவிழியையும் வயசான துணிச்சலுடன் கண்ணாரப் பார்த்துப் பூரித்துக் கொண்டிருந்தார்: அது என்ன பெண்ணா? முகம் நிறைய கண்; கண் நிறைய விழி; விழி நிறைய மர்மங்கள்! உடல் நிறைய இளமை; இளமை நிறையக் கூச்சம்; கூச்சம் நிறைய இளமுறுவல் நெளிவு; நெளிவு நிறைய இது பெண்ணா? மனிதனாகப் பிறந்த ஒருவன் தன்னது என்று அனுபவிக்கப்போகிற பொருளா?’ என்று கிழவரின் வழியாக ஜானகிராமனும் மாய்ந்துபோகிறார்.

தி.ஜா.வின் பல கதைகளிலும் நாவல்களிலும் இதைப்போன்ற மனிதப்பிறவியில் சேர்க்கமுடியாத தேவதைப் பெண்கள் வருவதைப் பார்க்கிறோம். ஆனால் அவர்களுக்கெல்லாம் தவறாமல் மிகச் சாதாரணமான, சில நேரங்களில் அவலட்சணமான, சில நேரங்களில் வயதான, எந்தவிதத்திலும் தகுதியில்லாத கணவர்களே வாய்க்கிறார்கள். இந்தக் கதையிலும் இந்தப் பெண்ணுக்கு ஒல்லியான, ஒடிந்துவிழும் உடல்; கூனல்; சராசரிக்குக் குறைந்த புஷ்டி, நீளவகை. கை, கால், மூஞ்சி, விரல், மூக்கு எல்லாம் நீளம் என்று ஒரு குமாஸ்தா பையன் கணவனாக வாய்க்கிறான். ஒரே வருடத்தில் செத்தும்போகிறான்.

‘கிழம் அழுதது. “இது ஏன் பிறந்தது? இவ்வளவு அழகாக ஏன் பிறந்தது? எதற்காக இத்தனை அழகு? நாசமாகப் போகவா? கல்யாணம் ஏன் செய்துகொண்டது? சந்தியில் நிற்கவா? ‘ புருஷனை முழுங்கிவிட்டது’ என்று தாசிப்பட்டம் கட்டிக்கொள்ளவா?” என்று கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டுக்கொண்டது. “எனக்கு அப்போதே தெரியும். சண்பகப் பூவை மூந்து பார்த்தால் மூக்கில் ரத்தம் கொட்டும். வாசனையா அது? நெடி. அதை யார் தாங்க முடியும்? சாதாரணமாயிருந்தால் சரி. மோகினியைக் கட்டிக்கொண்டால் கபால மோட்சம் தான். தொலைந்தான்” என்று பதிலும் சொல்லிக்கொண்டது’.

அந்தப் பெண்ணும் முதலில் அழுகிறாள்.

ஆனால் ஏழாம் ஆள் தலையை இழையச் சீவி, பிடியில் அடங்காப் பின்னலைப் பின்னந்தலையில் எடுத்துச் செருகி, சிவப்பு வெல்வெட்டு ரிப்பன் வளைந்து தொங்க மூஞ்சியில் சந்தன சோப்பைத் தேய்த்துக் குளித்துக் கொண்டிருக்கிறாள்.

 குளித்துவிட்டு பனாரஸ் பச்சைப் பட்டுப் புடவை கட்டிக்கொண்டு ஒன்றுமே நடக்காதது போல, வாசனைத் தேங்காய் எண்ணெய் தடவி இழைய தலை வாரிக்கொண்டிருக்கிறாள். எல்லோரும் எதிர்பார்க்கிற மாதிரி அழவில்லை, மோட்டுவளையை, சூன்யத்தை வெறித்துப் பார்த்து உட்கார்ந்திருக்கவில்லை.

 இறந்துபோன கணவனின் சகோதரன் ஒரு மாதம் கழித்து வந்து, அவளுக்கு ஒரு பள்ளிக்கூடத்தில் வேலை பார்த்து வைத்திருப்பதாகச் சொல்கிறான்.

அந்தப் பெண்ணும் மறுப்பேதும் சொல்லாமல், மிக மிகச் சாதாரணமாக, துயரத்தின் சாயல் ஏதுமின்றி அவன் கொண்டுவந்த ஒற்றை மாட்டு வண்டியில் ஏறிக்கொள்கிறாள். முன்னால் இருந்த மூட்டையை நகர்த்தி இடம் பண்ணித்தருகிறான் அவன். நாணம் புன்னகை பூக்க, அவள், அவள் அமர்ந்து கொள்ள, அவனும் ஏறி ஓரத்தில் ஒட்டி உட்கார்ந்துகொள்கிறான்.

“போயிட்டு வரேன் தாத்தா,” என்று விடைபெற்றுச் செல்கிறது.

இத்தோடு முடிகிற கதையில் ஜானகிராமன் காட்டுகிற சித்திரம் அலாதியானது. ஜெயகாந்தனிடமிருந்து ஜானகிராமன் வேறுபடுகின்ற இடமும் இதுதான். சொல்லாமல் பூடகமாகப் பொதித்து வைத்திருப்பவை ஏராளம். அவர் எதையும் உரத்த, தெளிவான குரலில் விளக்குவதில்லை. வாசிப்பவனின் மனதில் கதை முடிந்த பிறகும் அந்தப் பாத்திரத்தின் வாழ்க்கை தொடர்ந்து வளர்ந்து கொண்டிருக்கிறது.

ஜானகிராமன் மரணத்தைக் கொண்டாடுபவரல்ல. ‘மனித சிருஷ்டியின் நிரந்தரத் தன்மை’தான் அவருள் நிறைந்திருப்பதாக அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். அவரது கதைகளில் மரணங்கள் நிகழ்ந்தாலும்கூட அவை புதிய கதவுகளைத் திறந்துவைப்பதாகவே அமைகின்றன. அக்பர் சாஸ்திரி-யில் 68 வயதான கோவிந்த சாஸ்திரிகளின் மரணமும் சோக முடிவாக இருப்பதில்லை. வயதை மீறிய உற்சாகியாக, எதிரே இருப்பவர்களுக்கு இலவச வைத்திய ஆலோசனைகள் தருபவராக, மடிசஞ்சி விவகாரங்களை வெறுப்பவராக, முற்போக்கான நடைமுறையாளராக, இதுவரை எந்த வைத்தியரிடமும் சென்றதேயில்லையென்று பெருமைப்படுபவராக இருக்கும் அவர், திருவிடைமருதூர் ஸ்டேஷனில் வண்டி நிற்கும்போது ஸ்விட்சை நிறுத்தியதைப்போல கணநேரத்தில் மரணமடைந்துவிடுகிறார். ஒரு துளி வலி, வேதனை இல்லாமல். அந்த உடனடி மரணம் அக்பர் சாஸ்திரி என்ற கோவிந்த சாஸ்திரிகளின் நேர்மறையான வாழ்க்கை நெறிகளுக்கு மகுடம் சூட்டியதைப் போலிருப்பதே அச்சிறுகதையில் அவர் சொல்லும் சங்கதியாக இருக்கிறது.

அவர் கதைகளில் சித்தரிக்கப்படும் எல்லாமே அழகானவையே; வெளிச்சம் நிரம்பியவையே. அவர் கதைகளிலும் மனிதர்கள் ஏமாற்றுகிறார்கள், துரோகமிழைக்கிறார்கள், பலரிடமும் தந்திரம், வன்மம், மூடத்தனம் இருக்கின்றன. ஆனால் இதுபோன்ற கீழ்மை குணங்கள் மட்டுமே கொண்டவர்களாக அவர்கள் இருப்பதில்லை. அவர், அவர்களை வெறுக்கக்கூடிய பாத்திரங்களாகப் படைப்பதில்லை. அவர்களிடமும் இருக்கின்ற வெளிச்ச மூலைகளை, இடுக்கில் புகுந்து காட்டிவிடுகிறார்.

இதற்கு மிகச்சிறந்த உதாரணம் கள்ளி. கதையின் முதல்வரியிலிருந்தே சென்னையின் புழுக்கம், வியர்வை என கிருஷ்ணன் எரிச்சலிலும் சலிப்பிலும் இருக்கிறான். கடன் கேட்டு வருகிற சுப்பண்ணா அவனை மேலும் கடுப்பேற்றுகிறார். சுப்பண்ணாவுக்கு உண்மையிலேயே பணத்தேவை இருக்கிறது. அவர் ஓர் இசைக்கலைஞர். அபாரமான வயலின் வித்வான். குடியினால் வித்தையையும், வாய்ப்புகளையும், மற்றவர் அனுதாபங்களையும் இழந்து நிற்கும் பரிதாப ஜீவன். கிருஷ்ணனிடம் பணம் இல்லாமல் இல்லை. கொடுக்க மனம்தான் இல்லை. மொட்டைமாடியில் நின்றுகொண்டு, அதோ அந்த பணக்கார காண்டிராக்டரிடம் போகவேண்டியதுதானே, அங்கே போயிருக்கலாமே, இங்கே போயிருக்கலாமே என்று தன் மறுப்புக்கு நியாயம் கற்பித்துக்கொண்டு குரோதத்தை அவனுக்குள் வளர்த்துக் கொண்டிருக்கும்போது, தி.ஜா. என்ற மகா கலைஞன் கதைக்குள் மழையைக் கொண்டுவருகிறார். சாதாரண மழை அல்ல. இடியும் மின்னலுமாக அடைமழை. மொட்டை மாடி அறையின் இருட்டுக்குள் மின்னல் ஒளித்தீற்றுகள் விட்டுவிட்டு வெளிச்சத்தை நிரப்பி அணைந்து கொண்டிருக்கின்றன. மொட்டைமாடியில் அழகுக்காக வைத்திருக்கும் கள்ளிச்செடி மழையில் நனைந்தால் அழுகிவிடுமென்று அவனுடைய மகள் ஓடிவந்து தொட்டியை எடுத்துப் போகிறாள்.

கிருஷ்ணனுக்கு அந்த மழையும், இருட்டறைக்குள் பளிச்சிடும் மின்னல் வெளிச்சமும், ஈரத்தில் நனைந்த கள்ளிச்செடியும் ஏதோவோரு திடீர் மாற்றத்தை உண்டாக்குகின்றன. இந்த ரசவாதத்தை ஜானகிராமன் சொற்களால் விளக்குவதில்லை. பணத்தை எடுத்துக்கொண்டு, குடையைப் பிடித்தபடி மழையில் சுப்பண்ணாவின் வீட்டைத் தேடிச்சென்று, கதவைத் தட்டி, பணத்தை அவரிடம் கொடுப்பதை மட்டுமே ஜானகிராமன் எழுதுகிறார். அந்த அற்புதக் கணத்தை, சொற்களற்ற மாயத்தை வாசகரின் மனதுக்குள் புகுத்திவிடுகிறார். ஆனால் அத்தோடு கதையை முடித்துவிடவும் அவரால் முடிவதில்லை.

சுப்பண்ணா திகைத்து, உடைந்து பெருமூச்செறியும்போது லேசாக ’அந்த’ வாசனை வீசுவதை கிருஷ்ணன் கவனிக்கிறான். பட்டணத்துக்கு வந்து வெகுவாக மாறியிருக்கும் தன் வாயிலிருந்து வரும் வாடைக்கு ஏற்ற வாசனைதான் என்று கிருஷ்ணனுக்கு கடைசி வரியில் தோன்றுகிறபோது ஜானகிராமனின் அற்புதக் கலைப்படைப்பு பூர்த்தியடைகிறது.

கோதாவரிக் குண்டு கதையிலும் கங்காபாய் அந்தப் பாத்திரத்தை தமது வீட்டில் அடகு வைத்து காசு வாங்கிக்கொண்டு சென்றது மல்லிகைப்பூ வாங்கவும், சினிமாவுக்குப் போகவும்தான் என்று தெரிகிறபோது கதைசொல்லிக்கு உண்டாகும் திகைப்பு வெறுப்பாக மாறுவதில்லை. வீட்டுக்குப் போனபோது ‘மனைவியின் தலையில் மல்லிகைச்சரம் வேடு கட்டியிருந்தது. “உங்களுக்குன்னு கொண்டு வந்தேன் மாமி“ என்று கங்காபாய் கொடுத்துவிட்டுப் போனாளாம்’ என்று எழுதியதோடு கதை முடியவில்லை. மேலும் இரண்டேகால் வரிகளை எழுதி முடிக்கிறார்: ‘ரெட்டிப்பாளையம் மல்லிகைப்பூவின் வாசனை உலகத்தில் வேறு எந்த மல்லிகைக்கும் கிடையாதே, அப்பா! என்ன மணம்!‘ ஜானகிராமனின் எல்லா பாத்திரங்களுக்குள்ளும் எவரையும் வெறுத்து ஒதுக்காத , எல்லோரிடமும் மகத்துவத்தை, கண்டுவிடுகிற ஜானகிராமன் என்ற மகோன்னத மானிடன் இருக்கிறார். களங்கமில்லாத மானுடக் கரிசனமே, இவரது கதைகளின் பொது இயல்பு எனலாம்.

அத்தகைய பாத்திரங்கள் ஜானகிராமனின் எல்லா கதைகளிலும் தவறாமல் வந்து கொண்டிருந்தாலும் கொட்டுமேளம் கதையின் டாக்டர் துரைசாமி மறக்கமுடியாதவர். டாக்டருக்கு ஆரம்பம் முதலே நியாயமாகக் கிடைக்கவேண்டிய வாய்ப்புகள் கூடி கிடைப்பதில்லை. அதிர்ஷ்டங்கள் தவறாமல் தவறிப்போகின்றன. உரிமையோடு பணம் கேட்டு வாங்கிச் செல்பவர்கள் துரோகம் செய்கின்றார்கள். ஏமாற்றிய குற்றவுணர்வு இல்லாமலேயே அவரிடம் சகஜமாக பேசிக்கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை முழுக்க சறுக்கல்களும் தோல்விகளுமாகவே இருந்தாலும் அவையெதுவும் அவரை விரக்திக்குத் தள்ளுவதில்லை. இந்த லௌகீகத் தாழ்வுகள் எதனையும் பொருட்படுத்தாத உயரத்தில் தன்னை நிறுத்தி வைத்திருக்கிறார். எல்லாத் தோல்விகளும் திரண்டுவந்து வெற்றியாகவே காட்சியளிக்கின்றன. ஏமாற்றிய விசுவலிங்கம் ஐயரிடம் போய் ‘உங்களுக்கு எவ்வளவு பணம் வேண்டுமானாலும் தருகிறேன், கவலைப்படாதீங்க‘ என்று அவருக்கு சொல்லத்தோன்றுகிறது. ‘எடுத்த காரியம் யாவினும் வெற்றி; விடுத்த வாய்மொழிக்கெங்கணும் வெற்றி‘ என்று பிலகரி ராகத்தில் வீரரசத்துடன் பாடுகிறார்.

இவரையொத்த மற்றொரு பாத்திரம் கடன் தீர்ந்தது கதையில் சுந்தர தேசிகர். ஊர்ப்பெரியவராக, நல்ல ஸ்தானத்தில் இருக்கும் அவரை ராமதாஸ் நயவஞ்சகமாக ஏமாற்றி அவருடைய நிலபுலன்களை விற்கவைத்துவிடுகிறான். கடைசியில் ராமதாஸ் கடுமையாக நோய்வாய்ப்பட்டு படுத்த படுக்கையாக சாவின் விளிம்பில் கிடக்கும்போது சுந்தர தேசிகர் அவரைத்தேடிக் கொண்டு வருகிறார். “ராமதாஸ், உனக்கு உடம்பு சரியா இல்லை, கவலைக்கிடமாயிருக்கு என்று சொன்னாங்க, பார்த்துவிட்டு போகலாம்னு வந்தேன். அதுமட்டும் இல்லை, உன்னிடம் ஒரு முக்கியமான சேதி பேசணும்“ என்கிறார்.

அடுத்து அவர், தன்னை மிக லாவகமாக ஏமாற்றியவனிடம் பேசுவதைப் படிக்கையில், இக்கதையை எத்தனை முறை படித்தாலும் அத்தனை முறையும் நெஞ்சு விம்மி, கண்ணை நிரப்பும் கண்ணீர் உலகம் முழுவதையும் அன்பால் மூழ்கடிக்க வைத்துவிடும்:

“ராமதாஸ், உன்னைப்போல ஒரு கெட்டிக்காரனை நான் பார்த்திருக்கேன்னு நினைக்கலெ. இந்த உலகத்திலே சுகம் அடையறத்துக்காகப் பாடுபடறாங்க. உழைக்கிறாங்க. ஆனா உன்னைப் போல இவ்வளவு சுலபமாக அதை அடைஞ்சவர்கள் ரொம்ப ரொம்பக் கொஞ்சம். ஆனா கடைசியில் மாட்டிக்கவும் மாட்டிக்கிட்டே. எனக்கு ஜயிச்சுதுன்னா உனக்கு தண்டனை கொடுப்பாங்க. ஆனா, எனக்கு ஜயிக்கும்னு நான் நம்பவில்லை. அவ்வளவு சாமர்த்தியமா நீ என்னை ஏமாத்திப்பிட்டே. ஆனா, கேஸ் உனக்கு ஜயச்சுதுன்னா, உன்னைப் போல துர்பாக்கியசாலி ஒருத்தரும் இருக்க முடியாதுன்னுதான் எனக்குத் தோணுது. எந்தத் தப்பு, குத்தம் பண்ணினாலும் அதுக்குப் பிராயச்சத்தம் பண்ணி இந்த உடம்பையும் நெஞ்சையும் வருத்தித்தான் ஆகணும், மனுஷன். இல்லாட்டா பாவம் பின்னாலே வந்து வந்து அறுக்கும். ஆனா இப்ப உன் நிலையைக் கேட்டுதான் ஓடி ஓடி வந்தேன். கேஸ் யாருக்கு ஜயிச்சா என்ன? இப்ப உன் பிராணன் போயிக்கிட்டிருக்கு. நீ நல்ல வழி தேடிக்காமெ போயிடப் போறேன்னு நான் ஓடி வந்தேன். நம்ம சாஸ்திரங்களிலே வாங்கின கடனைத் திருப்பிக் கொடுக்காமே செத்துப்போகக் கூடாதுன்னு சொல்லியிருக்கு. இப்ப உன் கடனைத் நீ தீத்துப்பிடணும், நானும் பாக்கி இல்லேன்னு குறையில்லாமெ மனசாரச் சொல்லிடணும். இப்பொ அதுக்குத்தான் நான் வந்தது. நீ என் பணத்தை வச்சுக்கிட்டுப் பழைய கடனெல்லாம் அடச்சே. சுகமாகவும் இருந்தே. எல்லாம் கேள்விப்பட்டேன். எனக்கு ரொம்பத் திருப்திதான். ஆனா கடனை அடைக்காமெ போகக்கூடாது. அக்கம் பக்கத்திலே விசாரிச்சேன். டாக்டருக்குக்கூட பணம் உன்னாலே கொடுக்க முடியலேன்னு சொன்னாங்க. அதனாலே ஒண்ணே ஒண்ணு கேக்கறேன். உன் கையிலே இருக்கிறது ஏதாவது கொடு, போதும். அஞ்சு அல்லது ஒரு ரூபா கொடுத்தாலும் போதும். நான் சந்தோஷமா வாங்கிக்கிட்டு, உன் கடன் தீந்து போச்சுன்னு என் தேவார ஆணை, லோகமாதா ஆணையாச் சொல்லிப்பிடிறேன். என்ன? அதுக்குததான் நான் வந்தது“ என்று தேசிகர் நிறுத்தி, பதிலுக்குக் காத்துக் கொண்டிருந்தார்.

மனிதர்களில் தெய்வ குணங்களைக் கண்டெடுத்துச் சொல்வதே ஜானகிராமனின் இயல்பாக இருக்கிறது.

 தி.ஜா-வின் சிறுகதைகளிலேயே மிக முக்கியமான கதைகளில் ஒன்றாக  பாயசம் சிறுகதையை பல எழுத்தாளர்களும் குறிப்பிட்டிருக்கின்றனர். அன்பும் ஈரமும் நிறைந்திருக்கும் நேர்மறையான மனிதர்களையே முதன்மைப் பாத்திரமாகக் காட்டி வந்த ஜானகிராமன் இக்கதையில் அத்தகைய பாத்திரத்தை முதலிலிருந்து கடைசிவரை கதை வரிகளுக்கடியில் ஒளித்தே வைத்திருக்கிறார். நமக்கு வெளிப்படையாகக் காட்டுவது பொறாமையும் குரோதமும் அழுக்கும் மனமெங்கும் நிரம்பியிருக்கிற சாமநாதுவை. சுப்பராயன் என்ற அபூர்வ மனிதனின் சித்தப்பா அவர். சுப்பராயனை படிக்கவைத்தவர் என்றோ, வளர்த்தவர் என்றோ சாமநாதுவைச் சொல்லமுடியாது. மனம்போல வாழ்வு என்பதற்கிணங்க அழுக்காறையே முழுகுணமாகக் கொண்டிருக்கும் சாமநாதுவுக்கு வாழ்க்கை முழுக்க துரதிருஷ்டங்களும் சோதனைகளுமே சூழ்ந்திருக்கின்றன.  அவர் பெற்ற பெண்கள் இளவயதில் மரணமடைந்தும், கணவனை இழந்துமிருந்தாலும் அவர் மனதின் வன்மங்கள் வடிவதாக இல்லை.

சுப்பராயன் தானாக கஷ்டப்பட்டு முன்னுக்கு வந்து, தன் சம்பாத்தியத்தில் பாதியை சித்தப்பா சாமநாதுவுக்குத் தருகிறான். ஆனாலும் அவருக்கு திருப்தி இல்லை. அவனை வெறுப்புடன் நினைத்து நினைத்து சபித்துக் கொட்டிக்கொண்டிருக்கிறார். சுப்பராயன் அடைந்திருக்கும் உயரம் அவருக்கு எரிச்சலைத் தருகிறது. அவன் தன் பெண்ணுக்கு விமரிசையாக நடத்தும் திருமணம் எரிச்சலைத் தருகிறது. எவ்வளவுதான் அவர் அவனை அவமதித்தாலும் சுப்பராயன் அவருக்குத் தரும் மரியாதை எரிச்சலைத் தருகிறது. அவர்தான் முன்நின்று அவன் மகள் திருமணத்தை நடத்தி வைக்க வேண்டும் என்கிறான். அவர் வேண்டாவெறுப்பாக வருகிறார். கல்யாண வீட்டுக்குக் கொல்லையில் விருந்து தயாராகிக் கொண்டிருக்கிறது. கோட்டையடுப்புகள் அவர் உள்ளத்தைப் போலவே ‘மொலா மொலா‘வென்று எரிகிறது. கூட்டம் கூட்டமாக நெருப்பு எரிகிறது. தவலை தவலையாகக் கொதிக்கிறது. மேடைமீது வைத்திருக்கும் பாரி ஜோட்டுத் தவலையில் பாயசம் மணக்கிறது, திராட்சையும் முந்திரியும் மிதக்கிறது. இரண்டு பேராகத்தான் தூக்கி வைத்திருக்க முடியும். அறுநூறு பேர் குடிக்கிற பாயசம்.

சாமநாது பலசாலி, அவ்வளவு பெரிய தவலையை அவரால் ஒண்டியாகவே கவிழ்த்துவிட முடியும். கவிழ்த்தும் விடுகிறார்.

எல்லோரும் ஓடிவந்து திகைக்கிறார்கள். “படவாக்களா எங்கே போயிட்டேள் எல்லோரும் – இத்தனை பெரிய எலியைப் பாயசத்திலே நீஞ்ச விட்டுவிட்டு“ என்று கத்துகிறார்.

இவர் ஒருத்தராக இவ்வளவு பெரிய பாத்திரத்தை எப்படி சாய்த்தார் என்று நம்பமுடியாமல் பார்க்கிறார்கள்.

அவருடைய விதவைப்பெண் அவர் சொல்லும் கதையை நம்பாமல் கண்ணில் முள்ளோடு பார்க்கிறாள்.

அந்த நேரத்தில் ஜானகிராமன் நாயன சங்கீதத்தை உள்ளே நுழைக்கிறார்.

ஆனந்த பைரவியில் ஊஞ்சல் பாட்டை வாங்கி நாயனம் ஊதுகிறது.

காலமாகிவிட்ட அவர் மனைவி வாலாம்பாள் பாடுகிறமாதிரி அவருக்குத் தோன்றுகிறது.

இக்கதையின் நாயகன் ஒவ்வொரு வரியிலும் இடம்பிடித்திருக்கும் அழுக்கு மனிதரான சாமநாது அல்ல, இதற்குக்கூட அவரைக் கோபித்துக் கொள்ளாமல் இருக்கப்போகிற சுப்பராயன்தான் என்பதை ஊஞ்சலுக்கு வாசிக்கும் நாயனம் வழியாக உணர்த்தி விடுகிறார்.

ஜானகிராமனின் கதைகளில் எப்போது மனதில் நிலைத்து நின்றிருப்பவை முக்கியமாக இரண்டு கதைகள். வீட்டுக்குப் போனதும் அம்மாவிடம் கொடுத்து உரித்து சாப்பிட வேண்டும் என்று அவருடைய ஆறு வயதுப் பையன் ஆசையாகக் கேட்டு வாங்கியிருக்கும் ஆரஞ்சு பழத்தை ரயிலில் எதிர்இருக்கையில் உட்கார்ந்திருக்கும் கல்கத்தாவில் வீட்டு வேலைக்காக தனியாகச் செல்லும் ஒன்பது வயசுப் பெண்ணுக்குத் தருவதைக் கண்டு, உள்ளம் பொங்கி வழிய உடல் சிலிர்த்துபோகும் அப்பாவைப் போலவே நம்மையும் சிலிர்க்க வைக்கிற சிலிர்ப்பு ம், ஒவ்வொருமுறை வாசிக்கும்போதும் தாங்கமுடியாமல் மனதை விம்ம வைக்கிற சாப்பாடு போட்டு நாற்பது ரூபாய் கதைகளால் மனதை உய்விக்க முடியுமா என்ற கேள்விக்கு சான்றளிக்கும் கதைகள் இவையிரண்டும். ஜானகிராமனைப் புதிதாக வாசிக்க வருபவர்களிடம் நான் பரிந்துரைக்கும் இவ்விரு கதைகளின் சிறப்புகளையும் இங்கே விவரிக்காமல் வாசகர்களை தேடியெடுத்து படித்துக்கொள்ள விடுவிடுவதே சிறப்பு என்று நினைக்கிறேன். எந்தவொரு அறிமுகமும் இவ்விரு கதைகளின் ஜ்வலிப்பை வாசிப்பில் சற்று குறைத்துவிடக் கூடுமென்ற என் தயக்கமும் இவ்விலகலுக்கு ஒரு காரணம்.

ஆனால் கோபுர விளக்கு’ கதையை எந்தவொரு ஜானகிராமனின் அபிமானியாலும் சிலாகித்து உருகாமல் விலகிவிடமுடியாது. வாசிக்கும் போதே நம் மனதுக்குள் சலனப்படமாக ஓடத்தொடங்கிவிடுகிற கதை அது.

சன்னதித் தெரு இருட்டில் மூழ்கியிருக்கிறது. கோபுர விளக்கும் எரியவில்லை. தெற்குத் தெருவில் விலைமகள் ஒருத்தி இறந்துவிட்டாள் என்பதற்காக கோயிலில் பூஜை நிறுத்தப்பட்டிருக்கிறது. அதற்காக கோபுர விளக்கைக் கூடவா நிறுத்தி வைத்திருக்க வேண்டும் என்று கோயில் மேனஜரைப் பார்க்கச் செல்கிறார் கதை சொல்லி.

அவருக்கு இறந்து போன அந்தப் பெண்ணைத் தெரியும். முந்தாநாள் கூட அவளைக் கோயிலில் பார்த்தார். இவரைப் பார்த்ததும் உடனே வேதனையையும் வெட்கத்தையும் ஒரு புன்சிரிப்பில் புதைத்துக்கொண்டு வேகமாகக் கடந்துவிட்டாள்.

‘என்னைக் கண்டுவிட்டு அவள் வெட்கி ஓடியதற்குக் காரணம் இது. இரண்டு மாதத்துக்கு முன் இரண்டாங்காலப் பூஜைக்குப் பிறகு கோவிலுக்குப்போனபோது நடந்தது. பிரகாரத்தை வலம் வருவதற்காகச் சென்றேன். துர்க்கை அம்மனுக்கு முன்னால் நின்று இந்த தர்மு வேண்டிக் கொண்டிருந்தாள். அழும் குரலில். நான் வந்ததை கவனிக்காத அளவுக்கு அவ்வளவு சோகம் அவள் மனதையும் புலன்களையும் மறைத்திருக்கத்தான் வேண்டும்.’

“ஈச்வரி! இரண்டு நாளாக வயிறு காயுறது. இன்னிக்காவது கண்ணைத் திறந்து பார்க்கணும். தாராள மனசுள்ளவனா . . . ஒருத்தனைக் கொண்டுவிட்டுத் தொலைச்சா என்னவாம்?“

‘கேட்டுக்கொண்டே போனேன். இரண்டு விநாடி கழித்துச் சட்டென்று என்னைப் பார்த்தவள், மருண்டு நின்றாள். என்ன செய்ய. வேண்டுமென்று ஒற்றுக் கேட்கவில்லையே!’

வீட்டுக்கு வந்து மனைவியிடம் தான் கண்டதைச் சொல்லிப் புலம்புகிறார்.

“தெய்வம் நல்ல புத்தி கொடுக்கும், ஞானம் கொடுக்கும், விவேகம் கொடுக்கும், இப்ப இதுவும் கொடுக்கும்னு தெரியறது“ என்று என் படபடப்பைக் கிண்டல் செய்தாள் கௌரி

“ஏன், கொடுக்கப்படாதா?“

“கொடுக்கணும்னுதான் சொல்றேன். எந்தக் காரியத்துக்கும் தெய்வபலம் வேணும். திருடனுக்குக்கூட ஒரு தெய்வம் வேண்டாமா! நல்ல ஆளா கொண்டுவந்து விடுன்னா விடத்தானே வேணும் அது!“

ஆனால் இதுவரை கதையில் நுழைந்திராத கோயில் மேனேஜர் பாத்திரம் கதையின் கடைசியில் நுழைந்து கதையை தெய்வாம்ச நிலைக்குக் கொண்டு சென்றுவிடுகிறது.

வேண்டுமென்றேதான் கோபுரவிளக்கை அணைத்து வைத்திருப்பதாகக் சொல்கிறார் மேனேஜர்.

“ . . . எனக்கு என்னவோ இந்த சாவுக்கு துக்கம் கொண்டாடனும் போல் இருக்கு . . .  நீங்ககூட பார்த்திருப்பீங்களே. கோயிலுக்கு வருமே, அந்தப் பொண்ணுதான். சிரிச்சுப் போன குடும்பம்தான், ஒப்புத்துக்குறேன். ஆனால் செத்துப் போனதுக்கு அப்புறம் தூக்கறதுக்கு ஒரு ஆள்கூட இல்லைன்னா, இது என்ன மனுஷன் குடி இருக்கிற தெருவா? காக்காகூட ஒரு காக்கா செத்துப்போச்சுன்னா கூட்டம் கூட்டமா அலறி தீத்துப்பிடும்கள். மத்தியானம் மூணு மணிக்குப் போன உசிரு. ஒரு பய எட்டிப் பாக்கலை. வீட்டிலே இருக்கிறது அத்தனையும் பொம்பளை. எல்லாம் சின்னஞ்சிறுசு. அப்படி என்ன இப்ப குடி முழுகிப் போச்சு? அவங்க கெட்டுப் போயிட்டாங்க – நாதன் இல்லாம கெட்டுப்போன குடும்பம். பசிக்கு பலியான குடும்பம். என்ன அக்கிரமம் சார்? இந்த மாதிரி மிருகங்களைப் பார்த்ததில்லை நான். நானும் நாலு ஊரிலே இருந்திருக்கேன்.”

மானேஜரின் உதடு துடித்தது. கரகரவென்று கண்ணில் நீர் பெருகிற்று. பேச முடியாமல் நின்றார். சற்றுகழித்து கண்ணைத் துடைத்துக்கொண்டு ஒரு பெருமூச்சில் துக்கத்தை இறக்கிக்கொண்டார்.

”இன்னிக்கு கடவுள் வெளிச்சம் கேட்பானா? கேட்கமாட்டான். ஊருக்கு மட்டும் என்ன வெளிச்சம்? எத்தனை வெளிச்சம் போட்டால் என்ன, நம்ம இருட்டு கலையப் போவதில்லை. இப்படித்தான் தவிக்கட்டுமே, ஒரு நாளைக்கு.”

இதற்குமேல் இக்கதையைப் பற்றி மேலதிகமாக சொல்வதற்கு என்ன இருக்கிறது? ரகசியமாகக் கண்களைத் துடைத்துவிட்டுக்கொள்வதைத் தவிர, வேறு என்னதான் செய்யமுடியும், கதையைப் படித்து முடித்தபிறகு?

ஜானகிராமனின் எழுத்துக்களை வாசிக்கும் எவருக்கும் ஒரு சங்கீதக் கச்சேரியில் அமர்ந்திருக்கும் உணர்வு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அவர் சங்கீதத்தை, அதுவும் கர்நாடக சங்கீதத்தை பெரும்பாலான கதைகளில் கலந்திருப்பதால் மட்டுமல்ல; அவரது ஆற்றொழுக்கான நடையிலேயே ஓர் இசைமை இருக்கிறது. அவருடைய சௌந்தர்ய உபாசனையில் நிரம்பித் ததும்பும் இசை வாசகனின் உட்செவிகளில் ரீங்கரித்துக்கொண்டே இருக்கிறது. ‘அவரது படைப்பு மனதை உருவாக்கியதில் இசைக்கு பெரும்பங்கு ‘ இருப்பதை சுகுமாரன் தி.ஜா.வின் சிறுகதைகள் முழுத் தொகுப்பின் முன்னுரையில் சுட்டிக்காட்டுகிறார்.

ஜானகிராமனின் ஆகச்சிறந்த சிறுகதைகளில் ஒன்றான செய்தி, அவருள் நிறைந்திருக்கும் அபூர்வமான இசை ரசனையைப் புலப்படுத்தும். இசை என்பது செவிப்புலனுக்கான கலை வடிவம். ஆனால் அவரால் சங்கீத அனுபவத்தை தன் சொற்களில், வாக்கியங்களில், வர்ணனைகளில் கொண்டுவந்துவிட முடிகிறது.

நாதஸ்வரக் கலைஞர் பிள்ளை ஒரு சுத்தமான வித்வான். பாரம்பரிய சங்கீதத்தில் புதுமை செய்வதாக நினைத்துக்கொண்டு ரசக்குறைவான சினிமா பாடல்களை வாசித்து, ஜனங்களிடம் கைத்தட்டல் பெறுவதை அருவருப்பான விஷயமாகக் கருதுபவர். அவருக்கும் அவருடைய மகனுக்கும் இவ்விஷயத்தில் அபிப்பிராய பேதம் ஏற்படுவதில் கதை தொடங்குகிறது. பொதுவாக சாஸ்திரீய சங்கீதத்துக்கு வரவேற்பு குறைந்திருப்பதைப் பற்றி மகன் கவலைப்பட்டாலும், பிள்ளை அவர்களுக்கு சங்கீதம் என்பது கலப்படமற்ற தெய்வாம்ச வடிமாகவே இருக்கிறது.

அவருடைய நண்பரான வக்கீல் ஐயர் வெளிநாட்டுக்காரர்கள் குழுவை அவரிடம் அழைத்து வருகிறார். அவர்கள் பாரம்பரிய கர்நாடக சங்கீதத்தைக் கேட்க விரும்புவதாகவும், அதற்காகவே அவர்களை அவரிடம் அழைத்து வந்திருப்பதாகவும் சொல்கிறார்.

பிள்ளை நாட்டையை கம்பீரமாக ஓர் ஆலாபனை செய்து கீர்த்தனத்தைத் தொடங்குகிறார்.

அந்த வெளிநாட்டவன், பிலிப் போல்ஸ்காவின் முகத்தில் முதலில் புன்முறுவல் பூக்கிறது. விழிகள் மேலே செருகிக்கொள்கின்றன. அமிருதத் தாரையாகப் பெருக்கெடுத்த நாதப் பொழிவில் தன்னை இழந்துவிட்டான் போலத் தோன்றுகிறது.

பிள்ளை அடுத்ததாக சாமா ராகத்தை ஆரம்பிக்கிறார்.

தன்னை மறந்த நிலையிலிருந்த போல்ஸ்கா எழுந்துவிடுகிறான். கையை நீட்டியபடியே நின்றுகொண்டு மெல்லிய காற்றில் அசையும் சம்பங்கி மரம் மாதிரி ஆடுகிறான்.

கீர்த்தனம் முடிந்ததும் போல்ஸ்கா ஓர் எட்டு எட்டி பிள்ளையின் கையைப் பிடித்துக்கொண்டு நிறுத்தாமல் வாசிக்கும்படி கெஞ்சுகிறான்.

பிள்ளை ‘சாந்தமுலேகா’வை திரும்பவும் வாசிக்கிறார். ஐந்து ஆறு தடவை திரும்பத் திரும்ப கீர்த்தனத்தை வாசித்து முடிக்கிறார். கடைசியில் நாதம் மௌனத்தில் போய் லயித்தது போல, இசை நிற்கிறது.

போல்ஸ்கா அப்படியே தலையை அசைத்துக்கொண்டே இருக்கிறான். மூன்று நிமிடங்கள் கழித்து, கலைகிறான்.

“ … இதில் ஏதோ செய்தி இருக்கிறது. ஏதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது. அந்த போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். … உலகத்திலேயே எந்த சங்கீதமும் இந்த செய்தியை எனக்கு அளிக்கவில்லை. இரண்டு கைகளையும் நீட்டி அதை நான் ஏந்தி வாங்கிக்கொண்டுவிட்டேன். நீங்கள் இப்போது என்னை உடலை விட்டுவிடச் சொன்னால் நான் விட்டுவிடத் தயார்,” என்கிறான். அவனால் தளும்பலை அடக்க முடியாமல் அடுத்ததாகச் சொல்வதுதான் இக்கதையின் மையப்புள்ளி:

 “எனக்கு என்ன தோன்றிற்று என்று கேட்கிறாரா? மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை!  உலகம் முழுவதும் பிணக்காடாகக் கிடக்கிறது. ஒரே இரைச்சல், ஒரே கூச்சல், ஒரே அடிதடி, புயல் வீசி மரங்களை முறிக்கிறது. அலை உயர உயர எழுந்து குடிசைகளை முழுக அடிக்கிறது. இடி விழுந்து சாலையின் மரங்கள் பட்டுப்போகின்றன. கட்டிடம் இடிந்து விழுகிறது. எங்கே பார்த்தாலும் ஒரே இரைச்சல் . . . இந்தப் போர்க்களத்தில், இந்த இரைச்சலில், நான் மட்டும் அமைதி காண்கிறேன். மெதுவாக இந்த இரைச்சல் தேய்ந்து இந்தப் பிரளயக் கூச்சலும் இரைச்சலும் மெதுவாக அடங்கித் தேய்கிறது. ஓர் அமைதி என் உள்ளத்தில் எழுகிறது. இனிமேல் இந்த இரைச்சலும் சத்தமும் யுத்தமும் என்னைத் தொடாது. நான் எழுந்துவிட்டேன். அரவமே கேட்காத உயரத்திற்கு, மேகங்களுக்கும் புயலுக்கும் அப்பாலுள்ள உயர்விற்கு, எழுந்து, அங்கே அமைதியை, அழியாத அமைதியை கண்டு விட்டேன். இந்த அமைதி எனக்குப் போதும். இப்போதே நான் மரணத்தை வரவேற்று, இந்த அமைதியில் கலந்துவிடத் தயாராயிருக்கிறேன்.”

இந்த போல்ஸ்கா வேறு யாருமல்ல.

நாம்தான்.

பிள்ளையின் வாசிப்புதான் ஜானகிராமனின் எழுத்துக்களில் எப்போதும் இசைத்துக் கொண்டிருக்கும் நாதம்.

அந்த போதத்தில் திளைத்துவிடுபவர்களால் அவ்வளவு எளிதில் கரையேறிவிட முடிவதில்லை.


– ஜி.குப்புசாமி

 

3 COMMENTS

  1. தி. ஜானகிராமனின் சிலிர்ப்பு பாயாசம் ஆகிய இரு கதைகளும் மறக்க முடியாத வாசிப்பனுபவத்தைத் தரும் மகோன்னத படைப்புகள். அவரைப் பற்றி எதை யார் எழுதினாலும் அதில் ஸ்ருஷ்டியின் பாய்ச்சலை இரசிக்க முடிகிறது. குப்புசாமி அவர்களின் கட்டுரை சிறப்பாக உள்ளது.

  2. தி.ஜானகிராமன் சிறு கதைகளில் சிலிர்ப்பு, கோபுர விளக்கு நம்மை உணர்த்துபவை. G.குப்புசாமி அவரகளின் கட்டுரை உண்மையை வெளிப்படுத்துகிறது.அபாரம்

  3. நாவல்களை காட்டிலும் சிறுகதைகளில் தி.ஜாவின் மானுடவீச்சு உயர்ந்து நிற்கும். எடுத்துக்காட்டு “கோபுர விளக்கு”, “கடன் தீர்ந்தது”.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.