Saturday, Oct 23, 2021
Homeபடைப்புகள்கட்டுரைகள்தி.ஜாவின் ஆதார சுருதி

தி.ஜாவின் ஆதார சுருதி


ரு அசாதாரண மனநிலையில் மற்றும் பதற்றம் நிறைந்த ஒரு மன சூழ்நிலையில் தான் இக்கட்டுரையை எழுதுகிறேன்

பழைய தஞ்சை மாவட்ட மனிதரும் மணிக்கொடி இதழின் ஆரம்பகால எழுத்துக்காரர்களில் சற்றே மூத்தவருமான தி.ஜானகிராமன்,  கிட்டத்தட்ட தனது கல்லூரிக் காலம் முடிந்து,  நீளமான ஒரு ஐந்து வருட இடைவெளிக்குப் பிறகு எழுதத் தொடங்கியவர். கல்லூரி நண்பரான எம்.வி. வெங்கட்ராம் இவருக்கு எழுத்துலகில் மூத்தவர்.

முழு ஐந்து ஆண்டுகளையும் தன்னால் முடிந்த அளவிற்கு, மனித ஆளுமையின் பல்வேறு வகைகளைத் தனது வாழ்வனுபவத்தின் மூலமாகவும், வாசிப்பு அனுபவத்தின் மூலமாகவும்  கண்டடைய வெகுவாகவே முயற்சித்துள்ளார் என்பதை அவரது  முதல் சிறுகதைத் தொகுப்பு காட்டிக் கொடுக்கிறது.

ஜானகிராமனின் மொத்த படைப்பு உலகத்திற்கு ஒரு முன்னோட்டமாக அமைந்து இருக்கிறது கொட்டுமேளம் என்னும் இச்சிறுகதைத்தொகுப்பு.

இத்தொகுப்பில் உள்ள அனைத்துக் கதைகளையும் எடுத்துப் பேச வேண்டும் என்று பெரும் ஆவல். ஆனால் இத்தொகுப்பில் உள்ள அனைத்துக்  கதைகளையும் பேசுவதற்கு, அல்லது அக்கதைகளின் முழு அனுபவத்தையும் நான் உணர்வதற்கு எனக்குப் போதிய பக்குவமும், வாழ்க்கை அனுபவமும் இன்னும் கிட்டவில்லை என்றே நான் நினைக்கிறேன். அதனால், இத்தொகுப்பில் உள்ள கொட்டுமேளம் எனத் தலைப்பிட்ட சிறுகதையின் வாசிப்பனுபவத்தை மட்டும் எழுதுகிறேன்.

கொட்டுமேளம் தொகுப்பிற்கு முன்னுரை எழுதியவர் மயிலை.கி.சந்திரசேகரன். இம்முறை மிகவும் சுருக்கமாகவே அமைந்துவிட்டது. ஆனால் தி.ஜாவின் மொத்தப் படைப்புகளையும்  தொகுத்துக்  காலச்சுவடில் வெளிவந்த தொகுதியின் முன்னுரையில் தொகுப்பாசிரியர் சுகுமாரன் அவர்கள்,  இக்கதையைப் பற்றி அவர் அனுபவத்தினை, அதாவது எவ்வாறு தி.ஜாவின் கதைகளில் துணைப் பாத்திரங்கள்  சிதையாமல் இயங்குகின்றன என்பதனை எழுதி இருக்கிறார். அதற்கு மேற்கோளாக இக்கதையையும் குறிப்பிட்டிருக்கிறார்.

என்வரை,  கொட்டுமேளம் கதை அல்லது இத்தொகுப்பிற்குள் இருக்கும் அனைத்துக் கதைகளும் தன்னுள் பல்வேறு பரிணாமங்களைக் கொண்டதாக நினைக்கிறேன். ஒவ்வொரு முறையும் அக்கதை வாசிக்கப்படும் போது பல கோணங்களிலான (multi dimensional) அனுபவத்தினைக் கொடுக்கிறது. இத்தொகுப்பில் உள்ள கொட்டுமேளம் கதையை மட்டும் பேச விரும்புகிறேன்.

இக்கதை டாக்டர் துரைசாமியின் கதை.  மன ஓட்டத்தையும் வாழ்க்கையையும், புகழுக்கான ஏக்கத்தையும், அதேசமயம் அப்புகழை அடைந்தபின், அதை வெறுக்கும் மனநிலையையும் கொண்ட, தான் ஒரு தோல்வியுற்றவன் என்னும் தாழ்வு மனப்பான்மை கொண்டவனின் கதை.  இதன் பிறகு தர்ம வைத்தியசாலை என்னும் பெயரில் இலவசமாக மருத்துவம் பார்ப்பதற்கு என ஒரு கூடத்தைத் தொடங்குவதாக இக்கதை முடிகிறது.

இதற்கிடையில் மிலிட்டரியில் வேலைபார்க்கும் தன் அண்ணனைப் பார்த்துத் தாழ்ந்து கொண்டும்,  தன் அண்ணியிடம் மனக்கசப்பு கொண்டும் துரைசாமியின் கல்லூரி காலம் நிறைவடைகிறது. பிறகு மிலிட்டரியில் வேலை பார்க்கும் சினேகிதனின் மனப்போக்கினைக் கண்டு, அதிகார வர்க்கத்தின் செயல்பாடுகளால் மிலிட்டரி மற்றும் அரசு சார்ந்து இயங்கும் நிறுவனங்களில் பணிபுரிவது குறித்து, அவனுள் ஒரு மாற்றுக்கருத்து உண்டாகிறது. இது அவனின் மென்மையான அகத்தை வெளிப்படுத்தும் தருணங்கள்.  மேலும் இதற்கு வலு சேர்ப்பதற்கு, தன் நண்பனிடம் உதவியாளராக பணிபுரியும் ஒரு சிறுவனுக்கு ஏற்படும் தன்மானச் சீண்டல் அவனை வெகுவாக பாதிக்கிறது. அச்சிறுவனே. பின்னர் அவனிடம் பணிபுரியும் கம்பவுண்டர் ஜீவரத்தினம்.

இவ்வாறாக தன் குடும்பத்திலும்,  தன்னைச் சுற்றி பழகும் மனிதர்களிடமும் இருந்தே சூழ்நிலை கண்டு. மனச் சோர்வடையும் ஒரு மேன்மையான கதாபாத்திரமாக டாக்டர் துரைசாமி வருகிறான். பிறகு கல்லூரிக் காலம் முடிந்து வேறு வழி இல்லாமல் 33 டாக்டர்களுடன் கூடிய தன் ஊரில் இருக்கும் ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு 400 ரூபாய் சம்பளத்திற்கு வேலைக்கு செல்கிறான். உடன் கம்பவுண்டர் ஜீவரத்தினம் 50 ரூபாய் சம்பளத்திற்கு அதே மருத்துவமனையில் அவனுக்குக் கம்பவுண்டராகச் சேர்கிறான்

ஒருவர் தன்னிடம் தன் கஷ்டத்திற்குக் காரணமான பணத்தேவையை அவனிடம் முறையிட்டால்,  உடனே உதவும் மனநிலை கொண்டவன். ஆனால் அக்கடனை திரும்பப் பெறுவதற்கான சாத்தியங்கள் அவனிடம் இருப்பதில்லை. அதுவே அவனுடைய  தாழ்வு மனப்பான்மையை மென்மேலும் அதிகரிக்கச் செய்கிறது. கடைசியில் அது, ஒரு இலவச மருத்துவமனையை ஆரம்பிப்பதன் வழியே முடிகிறது.

தன்னிடம் கடன் பெற்றவர்கள் எல்லாம் வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்குச் சென்று கொண்டிருக்கும் பொழுது, தன்னால் மட்டும் ஏதும் செய்ய இயலாமல் இருப்பதாக அவனுக்குத் தோன்றுகிறது.  காரணம் அச்சமயம் மிலிட்டரியில் வேலைபார்க்கும் தன் அண்ணனின் மகளுக்கு ஐ.ஏ.எஸ் மாப்பிள்ளையுடன் திருமணம் என்று சம்பிரதாயமாகத் திருமணப் பத்திரிக்கை,  அவன் வீட்டிற்கு வரும்பொழுது, அது மேலும் அதிகரித்து விடுகிறது.  இதற்கு வலு சேர்ப்பதாக தன்னிடம் முன்னூறு ரூபாய் கடன் வாங்கிய மாரியப்ப பிள்ளை தேர்தலில் ஜெயித்து விடுகிறார். அதனைக் கண்டவுடன் சோர்வடையும் அவனுடைய மனம் கடந்தகாலத்திற்குச் செல்கிறது.

இதுவரை அவன் வாழ்ந்த வாழ்க்கையும் தனக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவங்களை மட்டுமே அவன் எண்ணிப் பார்க்கிறான். அதனால் மேலும் அவனது தாழ்வுமனப்பான்மை இன்னும் கூடுகிறது. அவன் மேலும் மேலும் உபகாரியாக மட்டுமே இருப்பதாக உணர்கிறான். இதற்கு சான்றாக பல்வேறு நிகழ்வுகள் கதைக்குள் நடந்து முடிகிறது தன்னைச் சுற்றி எப்பொழுதும் கொட்டுமேளம் அடித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒரு பக்கம்.  மறுபக்கம் இதனை எல்லாம் மறுதலித்து விட்டு வாழ வேண்டும் என நினைக்கும் மற்றொரு எண்ணம். இவ்விரண்டிற்கும் மத்தியில் சிக்கித் தவிக்கும் ஒரு சராசரி மனிதனின் ஆளுமையைக் கண்டடையும் ஒரு கதையாகத் தான் தி.ஜா எழுதியிருப்பதாகத் தோன்றுகிறது.

கடைசியில் அவன் திருமணத்திற்கு கூட ஒரு மேளம் வைத்துத் திருமணம் நடத்த முடியவில்லையே என்ற எண்ணம் அவனை உறுத்திக்கொண்டே இருக்கிறது.  இக்கதை விவரிப்பில் நான் கதையின் தன்மையை மட்டுமே சொல்லியிருக்கிறேன். கதையை வாசித்தால் மட்டுமே இக்கதையின் அனுபவத்தையையும் போக்கையும் உணர முடியும் என்பதே என்னுடைய கருத்து. தி.ஜானகிராமனின் எழுத்தை கண்டறிவதற்கு அவரின் மொழியே வசப்படும்.

இக்கதை நிகழும் காலம் கிட்டத்தட்ட 1954 – 1955 இதற்கு இடைப்பட்ட காலம். அப்பொழுது தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளின் ஆதிக்கம் அதிகமாகவே நிறைந்திருந்த சுதந்திரத்திற்குப் பிந்தைய கால கட்டமாகும்.  இக்கதைகள் அனைத்திலும் உச்சபட்ச இலக்கிய தரத்துடனும், மனித உணர்வுகளையும் மனித மனங்களையும் கலைத் தன்மையோடு கதையாக்கி வெற்றி பெற்றிருக்கிறார்.  தி.ஜாவின் சிறுகதைகள், நாவல்களைக் காட்டிலும் அதிக வீச்சு உள்ளவையாக தோன்றுகிறது.

பொதுவாக தி.ஜானகிராமன் எழுத்துக்கள் பிராமண பிரதிகள் என்ற மேம்போக்கான  விமர்சனம் உண்டு, ஆனால், இக்கதை தொகுப்பில், அவரது ஆரம்ப கால எழுத்துக்களில் உள்ள கதாபாத்திரங்கள், துணைப் பாத்திரங்கள் யாவும் மனிதத்தை மட்டுமே பேசுகின்றன. காலங்கள் செல்லச் செல்ல, அவரது எழுத்துக்களின் போக்கு ஒரு பெரிய மாறுதலுக்கு உட்பட்டு, வெகுஜனத்தை நோக்கிச் சென்று விடுகிறதாகத் தெரிகிறது. எப்படி இருந்தாலும் தி.ஜாவின் பிற்காலத்திய எழுத்து ஆளுமைக்கு, கொட்டுமேளம் என்ற சிறுகதைத் தொகுதியே ஆதார சுருதி என்று தோன்றுகிறது.


 – விக்ரம் சிவக்குமார்

பகிர்:
No comments

leave a comment