தி.ஜானகிராமன் மொழிபெயர்ப்புகள்


புதுமைப்பித்தன், க.நா.சு, தி.ஜானகிராமன் இவர்களிடம் ஆச்சரியப்பட வேண்டிய விசயம் அவர்கள் மொழிபெயர்ப்புக்குத் தேர்ந்தெடுத்த ஆசிரியர்கள் மற்றும் நூல்கள்.  இணையம், தகவல் தொழில்நுட்பம் வளராத காலத்தில் இது ஒரு அசுர சாதனை. இப்போது போல் முறையான ஆங்கிலம்-தமிழ் அகராதி கூட அப்போது எல்லோருக்கும் கிடைப்பது சிரமம். கிருஷ்ணன் நம்பியின் கடிதங்களிலிருந்து தெரியவருவது அப்போது இலக்கிய உரையாடல்களின் நடுவில் மேலை இலக்கியங்களைப் பற்றியும் ஒருவருக்கொருவர் பரிமாறிக் கொள்வது வழக்கமாக இருந்திருக்கிறது.

தி.ஜானகிராமன் மொழிபெயர்த்த இரண்டு ஆசிரியர்களுமே இலக்கியத்திற்காக நோபல் பரிசு பெற்றவர்கள். “குள்ளன்” பார் லாகர்க்விஸ்ட்டின் இரண்டாவது புகழ்பெற்ற நூல், “அன்னை” கிரேஸியா டெலடாவின் ஆகச்சிறந்த நூல்.

குள்ளன் – பார் லாகர்க்விஸ்ட்:

பார் லாகர்க்விஸ்ட்: இவர் ஆழ்ந்த கிருத்துவ நம்பிக்கை கொண்ட குடும்பத்தில் பிறந்தவர். பைபிள் மட்டுமே புத்தகமாகக் கருதப்பட்ட வீட்டில் வளர்ந்தவர். மனிதநேயத்திற்காக, நாசிஸம், பாசிஸத்திற்கு எதிராகத் தொடர்ந்து குரல் கொடுத்தவர். இவரது மிகப் புகழ்பெற்ற நூலான பர்ணபாஸ் க.நா.சுவால் மொழிபெயர்க்கப்பட்டது. இந்த நாவல் ஹிட்லரின் நாசிஸத்தை எதிர்த்து இரண்டாம் உலகப்போரின் நடுவில் எழுதப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. 1951ஆம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபல் பரிசைப் பெற்றவர்.

இத்தாலிய இளவரசனின் அரசவையில் குள்ளன் அவனது வெறுப்பைக் கக்குகிறான். மனிதர்கள் உன்னதமான விசயங்களாகக் கருதும் காதல், சங்கீதம், விஞ்ஞானம் போன்றவற்றுடன் ஒத்துப் போக முடியாமல் அழிவிலும், இரத்தக்களரியிலும் பெருவிருப்புக் கொள்கிறான். இந்த குள்ளன் என்றால் கொடூரன் என்று அர்த்தம். இளவரசனைத் தவிர தனக்கு யாரும் நிகரில்லை என்று நினைப்பவன். தான் பழங்குடியில் பிறந்த சாதாரண மனிதர்களை விட மேன்மையானவன் என நம்புபவன்.

குள்ளன் ஒரு மேக்கியவேலியன் உயிரி. மனித வெறுப்பும், குதர்க்க சிந்தனையும் நிரம்பியவன். நாவல் முழுக்க குள்ளனின் பார்வையிலே நகர்கிறது. இந்த நாவலே குள்ளனின் டயரியில் இருந்து எடுக்கப்பட்டது. குள்ளனின் விருப்பு வெறுப்புக்கேற்ற காட்சிப்படுத்தப்படுவதை வாசகர்கள் அவர்களது அனுபவத்திற்கேற்ப அலைவரிசையை மாற்றிக் கொள்ள வேண்டும்.

குள்ளன் தீமையின் மொத்த உருவம்.  அவன் சார்ந்திருக்கும் இளவரசன், இளவரசி இருவருமே ஒருவருக்கொருவர் துரோகம் செய்கின்றனர். விருந்து என்று நம்பி வருபவர்களுக்குத் துரோகம் இழைக்கப்படுகிறது. தவிர்த்திருக்கக்கூடிய போரினால் அழிவும், மக்கள் சொல்லொண்ணா துயரமும் அனுபவிக்கிறார்கள். நாவல் முழுவதுமே எதிர்மறையான விசயங்கள் நிரம்பியது.

குள்ளன் கதாபாத்திரமே ஒரு உருவகம். அதிகாரத்திற்கு ஆசைப்படும்,  தற்பெருமை கொண்ட, அடுத்தவருக்குத் தீமை செய்வதில் எந்த மனக்கிலேசமும் அடையாத ஒரு வடிவம். யோசித்தால் மேற்கூறிய குணாதிசயங்கள் எல்லாமே ஹிட்லருக்கும் பொருந்தும். முழுக்க எதிர்மறையான விசயங்களை இலக்கிய நயத்தோடு, உளவியல் ரீதியாக, அரசியல் விமர்சனத்துடன் கூறிய கலைப்படைப்பு இது. இன்றளவும் ஸ்வீடிஸ் இலக்கியங்களில் முக்கியமான ஒரு நூலாகக் கருதப்படுகிறது.

மிடாஸ் தொடுவதெல்லாம் பொன்னாவது போல மொழிபெயர்ப்பிலும் அதே மல்லிகை மணம் வீசும் தி.ஜாவின் மொழிநடை:

” விளையாட்டு என்பது என்ன? அர்த்தமில்லாத பிதற்றல். பாசாங்கு. பொருட்களில், யாரும் உண்மையாக, உள்ளதை உள்ளவாறு பார்க்காமல் ஏதோ பாசாங்கு செய்கிறது தான். எல்லோருக்குமே விளையாட்டு தான். ஏதாவது பாசாங்கு செய்து கொண்டு தான் இருக்கிறார்கள். எனக்குத் தான் பாசாங்கு பிடிக்கவில்லை”

தன்னிலையில் சொல்லும் கதைகள் ஒற்றை பரிமாணத்தில் பயணிப்பதன் Classic example இந்த நாவல். குள்ளனுக்குச் சுற்றி நடக்கும் பல விசயங்கள் புரிவதில்லை. அவன் பார்வையில் சொல்லும் கதை வேறு, வாசக அனுபவத்தில் விரியும் கதை வேறாக ஒரே நேரத்தில் இரண்டு கதை நகர்கிறது. தி.ஜாவின் மொழிபெயர்ப்பு கதையின் ஆன்மாவைப் புரிந்து கொண்டு அந்த இரண்டு கதைகளையும் தமிழில் மீண்டும் அரங்கேற்றுகிறது.


அன்னை – கிரேஸியா டெல்டா :

கிரேஸியா டெல்டா: இத்தாலியைச் சேர்ந்த எழுத்தாளர். காதல், வலி, பாவம், மரணம் முதலிய விசயங்களைச் சுற்றியே இவரது கதைகள் இருக்கும். இவருடைய மற்றொரு நாவல், காதற்கதை க.நா.சு வால் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டது. இலக்கியத்திற்கான நோபல் பரிசை 1926ல் பெற்றவர். முழுக்க முழுக்க கிருத்துவ நம்பிக்கைகள், போதனைகள் அடங்கியதே இவரது எல்லா நூல்களுமே. அதனாலேயே ஆங்கிலத்தில் பரவலாக இவரது படைப்புகள் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு பின்னர் நோபல் பரிசு பெறவும் வாய்ப்பாக இருந்திருக்கலாம். எனினும் அன்னை எனும் இந்தப்படைப்பு இவரது ஆகச்சிறந்த படைப்பு, இத்தாலிய இலக்கியத்தில் முக்கிய நூல்களில் ஒன்று என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

மனிதகுலம் தோன்றியதில் இருந்தே விலக்கப்பட்ட கனியின் மீதான பேராவல் அடங்கியதில்லை. இந்தக்கதை விலக்கப்பட்ட காதலும், மதநம்பிக்கையில் மூழ்கிய அம்மா தன் மகனை மீட்டெடுக்கச் செய்யும் போராட்டமுமே கதை.

டெல்டா மதகுருவின் தாங்கொண்ணாத் துயரை அழகாகப் படம்பிடித்துள்ளார். மதகுருவிற்குக் கடவுளின் முன்னால் தான் பாவம் செய்தவன் எனும் துயரம், அம்மாவின் முன்னால் தன்னுடைய பாவம் அவளுக்குத் தெரிந்த குற்றஉணர்வு, காதலியின் முன்னால் உண்மைக்காதல் இருந்தும் பிரிவது உறுதி என்ற அவதி.

அதே நேரத்தில் அவன் அம்மாவிற்கும் அல்லற்பட்டு ஆற்றாது அழுதகண்ணீர். ஒருபுறம் மதநம்பிக்கையில் ஆழ்ந்த மனம், இன்னொரு புறம் பெற்றவளின் பாசம். எந்தப் பாதையைத் தேர்ந்தெடுப்பது என்பது தெரியாமல் ஓரிடத்தில் கடவுளிடமே இந்தக் கேள்வியைக் கேட்கிறாள்.

காதலி மணமுடிக்க விரும்புகிறாள். பகலில் மதகுருவாகவும் இரவில் காதலனாகவும் இருக்கும் ஒருவனை அவளுக்குப் பிடிப்பதில்லை. கடவுள் காதலைப் படைத்திருந்தால் குறிப்பிட்ட சிலருக்கு மட்டும் அதற்கு எப்படித் தடைவிதிப்பார் என்பது அவள் கேள்வி.

ஒரு வளர்ச்சியடையாத பத்தொன்பதாம் நூற்றாண்டு குக்கிராமம், அதில் வாழும் மனிதர்கள், அவர்களின் நம்பிக்கைகள் மதம்குறித்த எந்த விமர்சனமும் இல்லாது ஒரு மீறலை இலக்கியமாக்கிய கலைநேர்த்தி, அம்மா-மகன் உணர்வுகளின் மோதல் இவை எல்லாம் கலைநயத்துடன் தொடுக்கப்பட்ட மலர்மாலை இந்த நூல்.

கண்ணதாசன் வேறு ஏதோ சூழ்நிலைக்கு எழுதிய வரிகள் இந்த நாவலின் மையக்கருத்தை எப்படி உரசிப் பார்க்கின்றது! ” தெய்வமெல்லாம் காதலையே மறுப்பதில்லையே

அது வேதம் செய்த குருவைக் கூட விடுவதில்லையே.

தி.ஜாவின் மற்றுமொரு அற்புதமான மொழிபெயர்ப்பு நூல் இது.

” விளக்கின் ஒளியில் அவளை உற்றுப் பார்த்தான். ஆளே மாறியிருந்தாள். வாய் பாதி திறந்திருந்தது. உதடுகள் பொலிவிழந்து வாடிய ரோஜா இலைகளைப் போல் நரை ஏறியிருந்தன. முகம் சற்று அதிகமாக நீண்டுவிட்டது போலிருந்தது. கண் குழிவிழுந்து கன்னத்து எலும்புகள் நன்றாகத் தெரிந்தன. ஒரேநாளில் துயரம் அவளை இருபதுவயது அதிகமாக்கிவிட்டது. அழுகையை அடக்கிக் கொள்வதற்காக உதட்டைக் கடித்துக் கொண்டிருந்தாள். அவள் உதடுகளில் மட்டும் இன்னும் குழந்தைத்தனம் மாறவில்லை”.

உதடுகளில் எப்படிக் குழந்தைத்தனம்? சின்ன சுழிப்பிலா இல்லை பற்கள் கடித்ததனால் புதிதாய் பாய்ந்த இரத்தத்தினால் வந்த வனப்பா! எதுவாயினும் அவளைக் கட்டியணைத்துத் தேறுதல் சொல்லத் தோன்றவில்லை? அது தான் தி.ஜா.


– சரவணன் மாணிக்கவாசகம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.