ஜானகிராமன் அமரராகி இன்னும் ஓராண்டு முடியவில்லை, வாசகர்கள் அந்த அதிர்ச்சியிலிருந்து மீள முயற்சிக்கும் வேளையில் அவருடைய கடைசிப் படைப்பான நளபாகம் நூல்வடிவம் பெறுவது ஓரளவு ஆறுதல் அளிக்கிறது. நாற்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக இலக்கிய வாழ்க்கையில் ஈடுபட்டுத் தமிழ் எழுத்துக்குப் பல புதிய பரிமாணங்களைச் சேர்த்ததுடன் மேலும் அரிய சாதனைகளைப் புரியும் தறுவாயில் 62 வயது முடிவதற்குள் தம்முள் நிறைவு கண்டு விட்டார்.
தொழிலாக ஏற்றுக் கொண்ட கல்வித் தொண்டின் இடைவெளி இல்லாத உழைப்பின் நடுவிலும் இலக்கிய வேட்கையை மேற்கொண்டு ஒன்பது நாவல்களும் நூறுக்கும் மேற்பட்ட சிறுகதைகளும், மூன்று நாடகங்களும், மூன்று பயண நூல்களும் மற்றும் பல கட்டுரைகளும், சில நெடுங்கதைகளும் படைத்த ஜானகிராமன் ஒரு முழுமையான எழுத்தாளராகப் பிரகாசித்தது இன்றைய இலக்கியத்தின் பெருமை.
1921 ஜூன் 28-ல் தஞ்சை மாவட்டம், தேவங்குடியில் பிறந்த ஜானகிராமன் இளம் வயதிலேயே தம்முடைய தந்தை தியாகராஜ சாஸ்திரிகளிடமிருந்து சங்கீத ரசனையையும் கலாச்சாரச் செல்வத்தையும் வாரிசாகப் பெற்றுக்கொண்டது தமிழ் இலக்கியத்திற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்து விட்டது. ஒரு தமையன், நான்கு சகோதரிகளுடன் பிறந்து நல்ல குடும்ப வாழ்க்கை அனுபவம் பெற்றார். உயர்நிலைப் பள்ளிப்படிப்பை தஞ்சையிலும் கல்லூரிப் படிப்பை கும்பகோணத்திலும் முடித்துக் கொண்ட பிறகு சென்னையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் கல்விச் சேவைக்கான தகுதியும் பெற்றுப் பதினோரு ஆண்டுகள் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றினார். பள்ளி செல்லும் மாணவன் என்ற முறையிலும் மாணவர்களுக்குப் போதிக்கும் ஆசிரியர் என்ற முறையிலும் வாழ்க்கையின் பல அம்சங்களைப் பற்றிய அனுபவத்தைப் பெறும் சந்தர்ப்பங்கள் இயல்பாக ஜானகிராமனுக்கு ஏற்பட்டன.
நேரடியாகப் பாடம் கற்பிக்கும் நிலையிலிருந்து குரல் மூலம் மட்டும் இன்னும் அதிக எண்ணிக்கையிலான மாணவர்களுக்கு அறிவு புகட்டும் பணியை 32 வயதில் மேற்கொண்டார். சென்னை வானொலி நிலையத்தில் கல்வி ஒலிபரப்பு அமைப்பாளராகப் பதவியேற்றதிலிருந்து பதினைந்து ஆண்டுகள் சென்னை வாழ்க்கையில் அவருடைய இலக்கியத் திறமை வெளிப்படுவதற்கு உதவிற்று. கடமையாக ஏற்றுக் கொண்ட கல்வி ஒலிபரப்புப் பணியை ஓய்வின்றி நிகழ்த்தி வந்தபோது இலக்கியத் தேடலில் முன்னேறி தமிழ் எழுத்துலகம் வியக்கும் வகையில் சிறுகதைகளையும் நாவல்களையும் படைத்தது ஜானகிராமனின் மேதமைக்குச் சான்றாக விளங்கிற்று. பள்ளி மாணவர்களுக்காக அவர் தயாரித்து அளித்த நிகழ்ச்சிகளில் இலக்கியத் தரம் மிளிர்ந்தது இயல்பாகி விட்டது. படைப்பிலக்கியத்திற்கு முற்றிலும் மாறுபட்ட வேலையான நிகழ்ச்சி அமைப்பும், அவைகளைப் பற்றிய விளக்கங்களும் அவருடைய தனிமுத்திரை பெற்று ஒலித்தன.
இந்தப் பொறுப்பான சேவையின் தரத்தின் பலனாக ஜானகிராமன் பதவி உயர்வு பெற்று டெல்லியில் ஆகாசவாணி தலைமை அலுவலகத்தில் பணியாற்றச்சென்றபோது. தமிழ்நாட்டுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும் கிடைத்து வந்த கல்விப் பயிற்சி நாடு முழுவதும் விரவிய பள்ளிகளுக்கும் கிடைக்கும் வாய்ப்பும் ஏற்பட்டது. இதற்காக சென்னையை விட்டு இடம் பெயர்ந்து செல்ல நேர்ந்தபோது இலக்கிய ரசிகர்கள் பிரியா விடை கொடுத்தனுப்புவது தவிர்க்க முடியாததாகி விட்டது. அப்பொழுது, ஜானகிராமன் தம்முடைய இலக்கிய வாழ்வின் உச்சகட்டத்தில் நின்று கொண்டிருந்தார். நாவல், நாடகம், சிறுகதை ஆகிய துறைகளில் புகழும் பாராட்டும் பெற்று இளம் எழுத்தாளர்களுக்கு ஓர் ஆதர்சமாக உருவெடுத்திருந்தார்.
ராமனின் வனவாசம் போன்ற பதினான்கு ஆண்டு டெல்லி வாழ்க்கையில் இலக்கியப் படைப்புகளை விட அவருடைய தொழில் சாதனைகள் அவருக்குப் பெரும் புகழ் தேடிக் கொடுத்தன. பாரதம் முழுவதும் சுற்றிப் பல கருத்தரங்குகளில் பங்கேற்று உலகத்தில் பெரும்பாலும் எல்லா நாடுகளுக்கும் சென்று கல்வி நிபுணர் என்ற முறையிலும், எழுத்தாளன் என்ற முறையிலும் பல நிறுவனங்களையும், பிரபல படைப்பாளிகளையும் சந்தித்து அளவளாவி ஏற்கெனவே விரிந்திருந்த தம்முடைய திருஷ்டியை மேலும் விரிவாக்கிக் கொண்டார்.
பதினான்கு ஆண்டுகால டெல்லி வாழ்க்கையில் இரண்டு நாவல்கள் மட்டுமே எழுத முடிந்தது. அந்த இரண்டு படைப்புக்களும் முன்பு அவர் வெளிப்படுத்திய அனுபவச் சேர்க்கையின் புதிய அம்சங்களை கால மாறுதலுக்கேற்ப விளக்க உதவின. பொறுப்புகள் அதிகரித்துவிட்ட ஒலிபரப்புத் தொழிலின் கடுமையான பணியிலிருந்து ஓய்வு பெறும் தருணத்தில் சாகித்ய அகாடெமி அவருடைய புகழில் பங்கு பெறும் வகையில் பரிசளித்துப் பெருமை தேடிக் கொண்டது.
தமிழ் எழுத்துலகத்தின் தலைசிறந்த படைப்பாளிகளில் ஒருவர் தன்னுடைய அமைப்பில் பணியாற்றிய நல்வாய்ப்பை அங்கீகரிக்கும் வகையில் ஆகாசவாணி ஜானகிராமனுக்கு Emeritus Producer பதவி கொடுத்துப் பாராட்டிற்று. இந்தப்பதவி ஒரு கௌரவ நிலைதான். இதனால் ஆகாச வாணிக்குத்தான் பெருமை என்ற உண்மைக்கு அப்பாற்பட்டு நின்று வழக்கம் போல முழுமூச்சுடன் வேலை செய்ய முனைந்தது ஜானகிராமனின் பண்பு நிறைந்த நடத்தையின் இயல்பான பழக்கமாகவே அமைந்தது.
அவருடைய இலக்கிய வேட்கையின் ஆழத்தை அறிந்து அவருடைய பிற்காலப் படைப்புகளுக்கு இடமளிக்கும் வாய்ப்பைப் பெற்ற கணையாழி இதழின் கௌரவ ஆசிரியர் பதவியையும் ஒரு கடமையாகக் கருதி நிறைவேற்றும் நிலையில் ஓய்வற்ற பணியின் விளைவாக நோய்வாய்ப்பட்டு இறுதியாக நம்மிடம் விடைபெற்றுச் சென்று விட்ட ஜானகிராமனின் இலக்கியச் சாதனைகள் மட்டும் இன்று நமக்கு ஆறுதல் அளிக்கின்றன.
அவர் விட்டுச்சென்ற இலக்கியச் செல்வத்துடன், மனைவி, இரண்டு பையன்கள், ஒரு பெண், நான்கு பேரன், பேத்திகள் அவருடைய நினைவின் சின்னமாக விளங்குகிறார்கள்.
அற்புதமான சாதனைகளைப் புரிந்த ஜானகிராமன் என்ற எழுத்தாளர் ஓர் அருமையான நண்பராக விளங்கி தம்மை அணுகியவர்களுக்கெல்லாம் மகிழ்ச்சி தரும் முறையில் நடந்து கொண்டது அவருடைய வாழ்க்கையின் ஒரு சிறப்பான பரிமாணம். அன்பு ஒன்றையே வைத்து இந்த வையத்தைப் பாலித்திட வேண்டும் என்ற கொள்கையில் தான் ஜானகிராமன் தம்முடைய படைப்புகளை மேற்கொண்டார். எழுத்திலும், வாழ்க்கையிலும் அவர் வழிகாட்டியாக ஏற்றுக் கொண்ட மணிக்கொடி படைப்பாளிகளில் ஒருவரான கு.ப.ராஜகோபாலனைப் போலவே ஜானகிராமனும் பல நெருக்கடிகளில் நிதானமிழக்காமல் சமாளித்திருக்கிறார்.
மனமறிந்து சூடாகப் பேசியதே கிடையாது. எல்லோருடனும் முகமலர்ச்சியுடன் பழகி வாழ்க்கையில் மகிழ்ச்சி காண வேண்டுமென்பதில் அவருக்குத் தளராத நம்பிக்கை. அவரை டெல்லிக்கு அனுப்பி வைத்த பிரிவுபசாரத்தின்போது பலருடைய பாராட்டுகளுக்கிடையில் அவர் மனசு புஷ்பம் போன்றது’ என்று லட்சுமி கிருஷ்ணமூர்த்தி கச்சிதமாகக் குறிப்பிட்டது எல்லோருடைய உள்ளத்திலும் எழுந்த உணர்வை எதிரொலித்தது.
இந்தப் புஷ்பம் போன்ற மனம் கொண்டிருந்தால் தான் அவர் எங்கும் மகிழ்ச்சி என்ற மணத்தைப் பரப்புவதையே பொழுதுபோக்காகக் கொண்டிருந்தார். அவர் கடைசியாக அமைத்த ஒலிபரப்பு நிகழ்ச்சிகளில் ஒன்று பாரதி நூற்றாண்டு அஞ்சலி. ‘அன்பென்று கொட்டு முரசே’ என்ற வாக்கியத்தின் முழுவீச்சையும் பாரதியின் பாடல்களிலிருந்தே அளந்தளித்து ஞானத்தேடல் என்ற அருமையான ஒலிச்சித்திரத்தைப் படைத்தளித்தார்.
நடைமுறை வாழ்விலேயே இசை, மணம், பறவைகளைக் கூட இனம் காணுதல் போன்ற சிறப்பான நொடிகளை அவர் பிடித்து நிறுத்தி அவைகளின் எழிலை அனுபவிப்பதில் நல்ல தேர்ச்சி பெற்றிருந்ததை அவருடைய நாவல்களிலும் கதைகளிலும் உணரமுடிகிறது.
அனுமானுக்குத் தன் பலம் தெரியாது என்ற இதிகாச உண்மைக்கேற்ப, தன்னுடைய புகழையே அறியாது. அதைப் பொருட்படுத்தாது வாழ்ந்த ஜானகிராமனின் அடக்கம், பொதுவாகப் பிரபல எழுத்தாளர்கள் புறக்கணித்து விடும் அம்சம்.
நண்பர்களுடன் பழகுவதில் ஏற்படும் மகிழ்ச்சியைத் தொடர்ந்து நுகர்வதில் அவருக்கு ஆவல் அதிகம். நட்பு நிலைத்திருக்கவேண்டும் என்பதே அவர் வாழ்க்கையில் தேடிய செல்வம். ‘நண்பர்களை இழப்பது தாங்க முடியாத கொடுமை’ என்று ஒருமுறை குறிப்பிட்டார். பிரபல எழுத்தாளராக நடந்து கொள்ளத் தெரியாத ஜானகிராமனிடம் காணப்பட்ட பெருங்குறை அவர் தம்முடைய படைப்புகளைப் பற்றிப் பேசாதது தான். தம்முடைய எழுத்தைப் பற்றிப் பேசும் வாய்ப்புகள் அல்லது நிர்பந்தங்கள் ஏற்படும் போதெல்லாம் சுருக்கமாக இலக்கியப் பொதுமையைப் பற்றிப் பேசிவிட்டுத் தம்முடைய சாதனையைக் குறிப்பிடாமல் விட்டு விடுவது அவருக்குக் கைவந்த கலை.
மணிக்கொடி பரம்பரையில் கு.ப.ரா.வைச் சுற்றி இயங்கிய இளம் எழுத்தாளர்கள் நால்வர் எம்.வி. வெங்கட்ராம், கரிச்சான் குஞ்சு, ஸ்வாமிநாத ஆத்ரேயன், ஜானகிராமன். கு.ப.ரா.வின் இலக்கிய நயத்தை ஆதர்சமாகக் கொண்டிருந்த இந்த நெருங்கிய நண்பர்களில் ஜானகிராமனும் ஓர் இலக்கியப் பரம்பரையைத் துவக்கி வைக்குமளவுக்கு சாதனை புரிந்து அமரத்துவம் பெற்றுவிட்டார்.
எழுத்தில் சாதனைகள் மேற்கொள்வதை விட தேடல் அவசியம்; ஓர் இலட்சியத்தைத் தேடிக்கொண்டே இருக்கும் பொழுது ஏற்படும் அனுபவச் செறிவு வளர்ச்சிக்கு உதவும்; என்ற உண்மைக்கு வியாக்கியானமாகவே ஜானகிராமனின் படைப்புகள் அமைந்திருக்கின்றன. “ஒரு மனிதனின் தேடல் அவன் அடைவதற்கு அப்பாற்பட்டும் இருக்கவேண்டும். இல்லாவிட்டால் சுவர்க்கம் என்பது எதற்கு?” என்று ராபர்ட் பிரவுனிங்க பிரகடனம் செய்த சூத்திரத்தின் விரிவுரை போல ஜானகிராமன் படைத்த கதை மாந்தர்களின் வாழ்க்கை நோக்கு அமைவதை அவருடைய கதைகளில் பொதுவாகக் காணலாம்.
வாழ்க்கையின் நிரந்தர அம்சங்கள் கதை மாந்தர்களின் அபிலாஷைகளினால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன; வாழ்க்கையில் அவர்களுக்குள்ள பிடிப்பு பண்பாட்டுக்கு முரணாக மாறும் பொழுது அவர்களுடைய செயல்களும் போக்கும் தர்க்க ரீதியில் செலாவணியாகக் கூடியவைகள் தானா என்று ஆராய்ந்து பார்த்தால் நடப்பியலுக்குப் பொருத்தமான முறையில் தான் அவர்கள் இயங்குகிறார்கள் என்பதை ஜானகிராமனின் கலைப்பிரக்ஞை நிரூபித்து விடுகிறது.
இலக்கியப் படைப்பில் மனித வாழ்க்கையில் ஆணும் பெண்ணும் நடந்து கொள்ளும் விதத்தில் அவர்களுடைய உள்ளத்தில் பொதிந்து கிடக்கும் தெளிவுகளை நுட்பமாகக் கவனித்து வெளிப்படுத்துவதே ஜானகிராமனின் நோக்கமாகப் புலப்படுகிறது. கர்நாடக இசையின் எல்லையற்ற செறிவு, கூட்டுக் குடும்ப வாழ்வின் நிறைவு தரும் அம்சங்கள், மனித நடவடிக்கைகளை நிர்ணயிக்கும் சக்தியாகப் பெண் உருவெடுப்பது, சமுதாயக் கட்டாயங்களிலிருந்து விடுதலையடைந்த பெண் தன்னிச்சையாக வாழ முயற்சிப்பது போன்ற கூறுகளை அவர் திறமைமிக்க கலைநோக்குடன் நிகழ்ச்சிக் கோவைகளாக அமைத்துத் தருவதை மோகமுள், செம்பருத்தி, உயிர்த்தேன், மரப்பசு ஆகிய நாவல்களில் இனங்காண்கிறோம். ஆனால் இந்த நிலைகள் அந்தந்த நாவலின் பிரதான நிலைகள் என்பது மட்டுமே உண்மை. மனிதரில், ஆணாயினும் பெண்ணாயினும், உடற்பசியும், ஆன்மிக வேட்கையும் முரண்படும் போது அழகுணர்வும், மனிதாபிமானமும் அத்தகைய வேட்கைகளை சமனப்படுத்தும் வித்தையையும் ஜானகிராமன் இந்தக் கதைகளில் காட்டியிருக்கிறார்.
கூட்டுக் குடும்ப வாழ்க்கையின் மறுபரிசீலனை போல அமைந்திருக்கும் மலர் மஞ்சம் கதையும், தனி மனிதனின் சுயேச்சை அன்பினால் பாதிக்கப்படும் போது ஏற்படும் உறவின் ஆழத்தை விளக்கும் அன்பே ஆரமுதே என்ற நாவலும் ஜானகிராமனின் லட்சிய யாத்திரையினால் ஏற்பட்ட களைப்புக்குப் பரிகாரமாக ஏற்பாடு செய்யப்பட்டது போல் தோன்றுகின்றன. இவைகளிலும் தனி மனிதனின் பிரச்னை தான் நாவலின் மையக்கருத்தாக உருவெடுக்கிறது.
சமுதாயத்திற்கும், தனிமனிதனுக்கும் உள்ள உறவையும் ஏற்படும் முரண்பாடுகளையும் ஜானகிராமன் அதிகமாகக் கையாண்டதில்லை. தனிமனிதனைச் சுற்றி நெருங்கியுள்ள உலகமே அவனுடைய, அல்லது அவளுடைய லட்சியங்களும் ஆசைகளும் நிறைவேற்றுவதற்கான பகைப்புலமாக அமைந்து விடுகிறது.
சமுதாய உணர்வோ, விமரிசனமோ ஓரளவுக்குத் தெளிவாகும் நிலைகள் உயிர்த்தேன் கதையின் நிகழ்ச்சிகளும் மரப்பசு அம்மணியின் பெண் விடுதலை மனப்பான்மையும் தான். தனிமனிதன் சமுதாயத்தில் ஒரு உறுப்புதான் என்றாலும் சில நிலைகளில் சமுதாயத்திற்கு அப்பாற்பட்டு, சமுதாயத்தைப் பற்றிக் கவலைப்படாமல், திட்டமிட்டு சமுதாயத்தை எதிர்க்காமல், தன்னுடைய உணர்ச்சிகளின் உந்துதலின் விளைவாகவே இயங்குவதைப் பரிசீலிப்பதில் தான் ஜானகிராமனின் திறமை தலை தூக்கி நிற்கிறது.
சிறந்த சிறு கதைகள் எழுதி இலக்கிய உலகில் நுழைந்த ஜானகிராமன், நாவல் எழுதும் சோதனை முயற்சிகளில், கமலம், சிவஞானம், அமிர்தம் போன்ற நெடுங்கதைகள் மூலம் தம்மைத் தாமே சிறிது காலம் பரீட்சித்துக் கொண்டார்.
பிறகு, தாம் பரம்பரைச் சொத்தாகப் பெற்ற சங்கீதம், பக்தி, அன்பு, பிறருக்கு உதவுதல், நட்பைப் பேணுதல் போன்ற பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டு ஓர் உயர்ந்த படைப்பை உருவாக்கி வெற்றி கண்டது தமிழ் நாவல் இலக்கியத்தில் ஒரு திருப்பமாக அமைந்து விட்டது. தமிழ் நாவலின் சிகரம் என்று போற்றப்படும் மோகமுள் படைக்கும் போது, நடப்பியல் கதைப் போக்கிலும் கதைப் பாத்திரங்களில் முக்கியமானவர்கள் ஒரு லட்சியத்தை நோக்கிச் செல்வதில் காணப்படும் இடையூறுகளை, அவர்களுடைய நடத்தையின் விளைவாகவே காட்ட முயன்றது, சமகால வாழ்க்கை பற்றி அவருக்கு இருந்த பிரக்ஞைக்கு அத்தாட்சியாயிற்று.
தன்னை விடப் பத்து வயது மூத்தவள்; தன்னை எடுத்து வளர்த்தவள்; தன்னை ஒரு தம்பியாகப் பாவித்தவள்; இணையற்ற அழகுடையவள்; இத்தகைய யமுனாவை மணக்க ஒருவனுக்கும் தகுதி கிடையாது என்பதை பாபு அனுபவப்பூர்வமாக உணர்கிறான். ஆனால் அவன் ஆராதித்துப் போற்றும் இந்த அற்புதப் பிறவியைத் தானே அடைய வேண்டும் என்ற வெறி அவன் உள்ளத்தில் உருவாகும்போது, தன்னுடைய தந்தைக்குக் கொடுத்த வாக்கை மீறி வாழ்க்கையை மாசுபடுத்திக் கொள்ள முயல்வதை பாபு உணராமலில்லை. ஆயினும், அவனுடைய லட்சியம், யமுனாவின் அழகு. அதை ரசிக்கத் தெரியாத, ரசிக்க அருகதையில்லாதவனுக்குப் பலியாகி விடக்கூடாது என்பதே. தன்னுடைய விபரீத வேட்கையை நிறைவேற்றிக் கொள்வதால் தன்னுடைய லட்சியத்தைத் தியாகம் செய்து கொள்வதாகவே நினைக்கிறான். லட்சியத்திற்கும் நடப்புக்கும் ஏற்படும் மோதலில் லட்சியம் எட்டாமலிருப்பதே சுவர்க்கம் என்ற முடிவுக்கு அவன் வரவேண்டியிருக்கிறது.
பரிவாலும் அன்பாலும் உந்தப்பட்டு, தான் விரும்பும் முடிவுக்கு யமுனா விரக்தியால் மட்டுமே உடன்படுவதைப் பற்றி அவன் கவலைப்படவில்லை.
திருப்திதானே என்றும், இதுக்குத்தானே என்றும் யமுனா கேட்கும் போது தன்னுடைய ஆசை நிறைவேறிய தன் வெறுமையை உணர்கிறான். முதலில் யமுனா தன்னை ஏற்றுக் கொள்ள மறுத்தபோது சங்கீதத்தைப் புகலிடமாகக் கொள்கிறான். யமுனாவை அடைய முடியாது என்பதை நன்றாய் உணர்ந்து தன் வாழ்க்கையை ஒருவாறு அமைத்துக்கொள்ள முயலும் போது வறுமையின் கொடுமை, அவள் அவனைத்தேடி வரச் செய்வதும், அவன் செய்த உதவிக்காக நன்றி செலுத்தும் வகையில் யமுனா இசைவதும் நடப்பியலுக்கு முரண்படாத விளைவுகள் தான். இறுதியில், தான் இத்தனை ஆண்டுகளாகக் காத்துக்கிடந்த யமுனாவை விட்டுப் பிரியும் போதும் சங்கீதம்தான் அவனுக்குப் புகலிடம் தருகிறது. சங்கீதத்தின் சிறப்பை மரப்பசு என்ற நாவலிலும் ஜானகிராமன் ஓரளவுக்கு விளக்கியிருக்கிறார் என்றாலும், மோகமுள் கதைப் போக்கில் தான் அதன் பெருமை முழுவதையும் உணரும் நிலைகள் உள்ளன. வெறும் அச்சிட்ட எழுத்துக்களைக் கொண்டு இசையை வாசகர் உள்ளத்தில் எதிரொலிக்கச் செய்யும் ரசவாதத்தை ஜானகிராமன் இந்தக் கதையில் சாதித்திருக்கிறார். சங்கீதத்தில் அவருக்கிருந்த ஆழ்ந்த ஈடுபாடும் பக்திபூர்வமான அணுகலும், ரங்கண்ணாவின் மேதை விளக்கத்திலும் மராட்டியப் பாடகரின் குரலிலும் ராமு, பாபு இருவரின் சாதகத்திலும் வெளிப்படுகிறது.
“…. நானும் அவனும் சேர்ந்து சங்கீதக் கச்சேரிகளுக்குப் போவதுண்டு. ரூமிலும் அடிக்கடி சங்கீத வித்வான்கள் கூடிப் பாடி மகிழ்வதும் உண்டு. ஜானகிராமன் ராகம் பாடும் முறை கமகம், பிரதானமான ஸஞ்சாரங்கள், ஆகியவற்றை அந்த வித்வான்கள் போற்றுவார்கள். இதை நான் ஏன் சொல்கிறேன் என்றால், அவனுடைய ஸங்கீதோபாஸனை இளமையிலிருந்தே அவனுடன் இறுகி வளர்ந்த ஒன்று” என்று கரிச்சான்குஞ்சு கூறியிருப்பதை இங்கே மனதில் கொள்ள வேண்டியிருக்கிறது.
இலக்கியக் கலைஞன் ஏன் தன்னுடைய சொந்த அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்ச்சிகளையும் கதை மாந்தர்களையும் படைக்கிறான் என்பதற்கு ஜானகிராமனின் படைப்புக்கள் எல்லாமே சான்று கூறும். தான் கண்ட, சந்தித்த, பழகிய மனிதர்களையே அவர் கதைகளில் கொணர்ந்து தம்முடைய கற்பனை வளத்தினால் அவர்களுக்கு புதிய பரிமாணம் சேர்த்து விடுவதை அவருடன் நெருங்கிப் பழகியவர்கள் அறிவார்கள்.
அவருடைய கதை மாந்தர்களில், பலர், குறிப்பாக மருந்து கொடுத்து அனந்தசாமி (அன்பே ஆரமுதே), ஆமருவி (உயிர்த்தேன்) அம்மணி (மரப்பசு) போன்ற கதை மாந்தரை நடப்பியல் வாழ்வில் இனங்கண்டு விடலாம். இவ்வகையில் தம்மைச் சுற்றி இயங்கிய மனிதர்களையே கதைகளில் சித்திரிக்கும் சாதனையில், அந்த கதை மாந்தர்களுக்கு லட்சியத்தைக் கடைப்பிடிக்கும் ஆற்றல் எந்த அளவுக்கு இருக்கும் என்பதையும் ஜானகிராமனால் நிர்ணயித்து விட முடிகிறது.
நாவல்களில் நடப்பியல் பாணியில் கதைமாந்தரைப் படைக்கும் போது அவர்களுடைய பலவீனங்களைப் பொறுத்து அவர்களுடைய லட்சிய வேட்கையை ஜானகிராமன் எடுத்துக்காட்டுகிறார். மோகமுள், செம்பருத்தி, உயிர்த்தேன் கதைகளில் லட்சியங்களால் உந்தப்பட்டுத் தங்களை அறியாமலேயே ஓர் உத்தம நிலைக்கு யாத்திரை மேற்கொள்ளும் கதைமாந்தரைச் சந்திக்கிறோம். தாங்கள் வகுத்துக் கொண்ட பாதையை விட்டு விலகும் நிர்பந்தம் அவர்களுக்கு ஏற்படும் போது பலவீனத்தினால் வெறும் மனிதர்கள் தான் என்பதையும் மனஉறுதியினால் லட்சிய மனிதர்கள் என்பதையும் காட்டிக் கொள்கிறார்கள்.
செம்பருத்தி சட்டநாதனும், உயிர்த்தேன் கதையின் செங்கம்மாவும் தங்களுடைய மன உறுதியையும், தங்களுக்கே சரியாகப் புரியாத லட்சியங்களையும் காப்பாற்றிக் கொள்வதில் தங்களுடைய நடத்தையை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். அவர்களுடைய இயல்பான போக்கும் எதையும் மிகைப்படுத்திப் பார்க்காத மனப்பான்மையும் அவர்களுக்குத் துணை செய்கிறது. தன்னுடைய செல்வாக்கினால் ஏற்படக்கூடிய அசம்பாவித நிகழ்ச்சிகளுக்குத் தன் கணவன் தன்னைக் குற்றம் காணமாட்டான் என்ற உணர்வு ஒவ்வொரு சமயம் செங்கம்மாவுக்குச் சிறிது அச்சத்தைக் கொடுத்தாலும் தன்னுடைய நிலை பற்றி அவளுக்குள்ள பிரக்ஞையே அவளுக்குப் பாதுகாப்பாகி விடுகிறது.
இந்த சந்தர்ப்பத்தில் ஜானகிராமன் படைத்த பெண்களைப் பற்றி சற்று விரிவாகக் கவனிப்பது அவருடைய எழுத்துக் கலையின் சிறப்பை சரிவர உணருவதற்கு உதவி செய்யும்.
மனிதர்களுக்குப் பல பசிகள் உண்டு. உடற்பசியும் ஆன்மீகப் பசியும் உரிய நேரத்தில் பொருத்தமாகவே அமையும். ஆன்மீக வேட்கை இருந்து விட்டால் உயற்பசி மறைந்து விடும் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் வீண் வேலையில் ஜானகிராமனுக்கு நம்பிக்கை இல்லை. தன்னுடைய உடற்பசிக்குப் போதிய உணவு கிடைக்காததன் விளைவாக, அலங்காரம் சிவசுக்கு இணங்கிய பிறகுதான் ஆன்மீக வேட்கையில் ஈடுபடுகிறாள். அப்புவுக்கு வேதம் கற்றுக் கொடுப்பதன் மூலம் தன்னுடைய அழுக்கை அகற்றி விடலாம் என்று அவள் நினைக்கவில்லை. அப்புவின் வேதஞானத்தில் சரணடையலாம் என்றுதான் நினைக்கிறாள். வேதப் பயிற்சியினால் உடலின் தேவையை மறைத்து விட முடியாது என்பதை இந்து அப்புவுக்கு நிரூபித்துக் காட்டுகிறாள். வேதம் படிக்கும் சிறுவனின் தாய் தவறுவதுதான் அபசாரம், மற்ற வகைப் பெண்கள் தவறுவது வெறும் ஒழுக்கக்கேடு தான் என்ற பாகுபாட்டுடன் அலங்காரத்தை ஆராய்வதில் பயனில்லை. ஆன்மீக விஷயங்களில் தேர்ந்த கணவன் மற்றவர்களுக்குப் பாடம் சொல்லும் போது கூட, தன்னுடைய தகாத உறவை நீடித்துக் கொண்டிருக்கும் அலங்காரம் தன்னைப் பற்றிய உண்மை அப்புவுக்குத் தெரியக் கூடாது என்பதில் மிகவும் எச்சரிக்கையாய்த்தான் இருக்கிறாள். அப்புவுக்குத் தெரிந்த பிறகு சாதாரணப் பெண் என்ற முறையில், முறை தவறிய மற்ற பெண்களைப் பற்றிக் குறைகாணுவதில் அவள் தயங்கவில்லை. இந்தப் போக்குதான் அப்புவுக்கும் இந்துவுக்கும் ஏற்படப் போகும் உறவை அறியும் போது, அவனை அம்மாவின் பிள்ளைதான் என்று வர்ணிக்கத் தூண்டுகிறது. உடற்பசி மிகையாக அமைந்து விட்ட பெண்ணின் நடத்தைக்கு, ஆன்மீக வேட்கை புனிதம் அளித்து விடாது என்ற அடிப்படை உண்மையை மனதில் கொண்டால், பெண்களைப்பற்றிய ஜானகிராமனின் கருத்து பற்றி குழப்பம் ஏற்படாது.
மரப்பசு அம்மணியும் இம்மாதிரி உடற்பசியால் இயக்கப்படுபவள். எல்லோரையும் தொட்டுப் பேசவேண்டுமென்று விருப்பம் அவளுக்கு. அவளுடைய இளம் வயது அனுபவங்கள் எவ்வளவு கடுமையாயிருந்தாலும் சமாதானம் கூறமுடியாது. உயிர்த்தேன் கதையில் தோன்றும் அனுசூயாவின் விசுவரூபம் போல் நடந்து கொள்ளும் அம்மணியின் நடத்தைக்கு காரணமாயிருப்பது அவளுடைய கட்டுப்பாடற்ற விடுதலையடைந்த நிலைதான். மற்றபடி அலங்காரத்தைப் போல் அவளும் உடற்பசியால் தான் இயக்கப்படுகிறாள். மிகையான சுதந்திரத்தினால் ஒரு பெண் தன்னை எந்த அளவுக்குத் தானே அழித்துக் கொள்ள முடியும் என்பதை அங்கதமாக அம்மணி மூலம் ஜானகிராமன் விளக்குகிறார் என்று கொள்வதிலும் பொருள் உண்டு. இந்தக் கதையில் ஆன்மீக வேட்கைக்குப் பதிலாக பரம்பரை வாழ்வு பற்றிய வேட்கை மூலம் தன்னை மீட்டுக்கொள்ள முயல்கிறாள். மனம் போனபடி வாழ்ந்த பிறகு தெவிட்டிய நிலையில் சம்பிரதாயமான இல்லறத்தில் அமைதி காணும் நிர்ப்பந்தம் அவளுக்கு ஏற்படுகிறது.
நாவல் படைக்கும் பணியில் முதலில் லட்சியபூர்வமான நிகழ்ச்சிகளையும் லட்சிய மாந்தர்களையும் பொருளாகக் கொண்ட ஜானகிராமன் ‘அம்மா வந்தாள்’ எழுதிய போது மனிதனின் பலவீனத்தை நடப்பியல் அடிப்படையில் அங்கீகரித்து, அந்த பலவீனத்தின் விளைவுகளை கதைப்போக்கின் படிகளாகக் கையாண்டார். முந்தின நாவல்களில் காணப்பட்ட கதைமாந்தர்களின் தியாக உணர்வு, கொள்கைப் பிடிப்பு, குடும்ப வாழ்க்கை, சமுதாயக் கூட்டுறவு போன்ற பண்புகளுக்குப் பதிலாக, தனிமனிதனின் அறிவு வேட்கைக்கும் புலன் இயக்கத்திற்கும் இடையே நிகழும் போராட்டம், இறுதியில் கதைமாந்தர் விட்டுக் கொடுத்து, நிகழ்ச்சிகளின் நிர்ப்பந்தத்தை ஏற்றுக்கொள்ளும் நிலைகள் தலைதூக்கி நின்றன.
இந்தத் திருப்பம் மரப்பசு கதையில் ஓரளவுக்குத் தொடர்ந்த போதுதான் ஜானகிராமனின் படைப்புகளில் பெண்களைப் பற்றிய கருத்துகளில் குழப்பம் ஏற்பட வாய்ப்பு உண்டாயிற்று. சமுதாயத்தின் அர்த்தமற்ற சடங்குகளை உதறித்தள்ளும் துணிவு கொண்ட அம்மணிக்கு அத்தகைய மன உறுதி ஏற்பட்டதற்கு, அவளுடைய இளம் வயது அனுபவங்களே அடிப்படைக் காரணமாயின. அந்தக் காரணங்களே தன்னுடைய கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குப் பொறுப்பாயின என்று குற்றம் சாட்டும் வகையில் அவள் நடந்து கொள்கிறாள். இந்த நாவல், அடிப்படையில் ஜானகிராமன் மேற்கொண்ட ஒரு புதிய சோதனை முயற்சி என்றே கொள்ளலாம். இதற்கு முன் எழுதப்பட்ட நாவல்களில் அவர் பொருளாகக் கொண்ட விஷயங்களிலிருந்து மாறுபட்ட கதையை மரப்பசு சொல்கிறது. கோபாலியின் இசைத்திறமை, அம்மணி மரபான வாழ்வுக்குத் திரும்புவது போன்ற நிகழ்ச்சிகள் மட்டுமே முந்திய படைப்புகளுடன் ஓரளவு ஒற்றுமையைத் தோற்றுவிக்கின்றன. மற்றும் ஜானகிராமன் இந்தக் கதை கணையாழியில் தொடராக வெளிவந்த போது மேற்கத்திய நாடுகளில் பெண்ணுரிமை, பெண் விடுதலை, போன்ற இயக்கங்கள் வலுவடைந்து வந்தன. 1975-ஐ சர்வதேசப் பெண்கள் ஆண்டாகக் கொண்டாடும்படி ஐக்கிய நாடுகள் நிறுவனம் பரிந்துரை செய்திருந்ததையும் நினைவில் கொண்டால் சமகாலப் பிரச்சினைகளைச் சமுதாயரீதியில் அணுகும் முயற்சியையும் ஜானகிராமன் மேற்கொண்டது தெளிவாகும்.
கதைக்குப் பொருள் தேர்ந்தெடுக்கும் போது ஜானகிராமன் வழக்கமாக சமுதாயத்தை விமரிசித்து, சமுதாயத்துக்குச் செய்தி வழங்கும் முயற்சியை மேற்கொள்வதில்லை. காலஉணர்வு கூட அவருடைய நாவல்களில் இரண்டாம் பட்சமாகவே இடம் பெறும். அவ்வளவு பெரிய நாவலான மோகமுள் கதைப்போக்கு, இரண்டாம் உலகப் போரின் கால கட்டத்தில் நிகழ்வதாக ஓரிரண்டு இடங்களில் தான் லேசாகக் குறிப்பிடுகிறார். அந்தப் போரின் விளைவுகள் சென்னையில் கூட மக்களை எவ்வாறு பாதித்தது என்பதை விவரமாக எடுத்துக் கூற முற்படவில்லை.
மனித உறவில் மிகவும் உயர்ந்த பண்பான நட்பு ஜானகிராமன் நாவல்களில் புதிய ஒளிபெற்று வெறும் வாழ்க்கைக்கே நம்பிக்கை கொடுக்கிறது. மோகமுள் பாபு – ராஜம் நட்பும், உயிர்த்தேன் கதைமாந்தரிடையே நிலவும் கூட்டுறவு உணர்வும் அந்தந்தக் கதைகளின் பிற நிகழ்ச்சிகளுக்கிடையில் கூட முக்கியத்துவம் பெறுகின்றன. பத்திரிகைத் தேவை என்ற கொடுமையின் விளைவாக பொருத்த மற்ற தலைப்புகள் கொண்ட ‘மலர்மஞ்சம்’, ‘அன்பே ஆரமுதே’ என்ற இரண்டு கதைகளிலும் நட்புதான் கதாநாயகமாக எல்லோரையும் ஒன்று கூட்டி நடத்திச் செல்கிறது. வக்கீல் நாகேஸ்வரனும், நாயக்கரும் பாலியின் கலை வாழ்க்கையில் எடுத்துக்கொள்ளும்
அக்கறை சுயநலமற்ற நட்பின் விளக்கமாகவே அமைகிறது. மருந்து கொடுக்கும் துறவிக்காகக் காத்துக் கொண்டிருக்கும் அம்மாளும், முப்பதாண்டுகளுக்கு முன் அவரால் கைவிடப்பட்ட ருக்மணியும் நட்பையே பாலமாகக் கொண்டுதான் அவருக்கும் தங்களுக்குமிடையேயுள்ள தொலைவைக் கடக்க முயலுகிறார்கள். ருக்மணிக்கு வாடிப் போன வாழ்க்கையில் நட்பே துணை தேடித்தருகிறது. இவர்களும் நடிகர் அருண்குமாரும் தன்னிடம் காட்டும் நட்புக்கு ஏற்றவாறு அனந்தசாமியும் அவர்களுடைய மனக்குறைகளைத் தீர்க்கும் ஆறுதல் மருந்தும் கொடுத்து உதவுகிறார். இந்தக் கதை மாந்தர்கள் ஒவ்வொருவரும் நடந்து கொள்ளும் விதமும், வெளிப்படுத்தும் பரிவும், நட்பின் மதிப்பற்ற பலனை அவர்கள் எல்லோரும் பகிர்ந்து கொள்ளும் வகையில் அமைகின்றன.
விடுவிக்கப்பட்ட பெண்ணின் நடத்தையை இந்து கலாசாரப் பின்னணியில், மரப்பசு கதையில் பரிசீலித்த ஜானகிராமன், அம்மணியை ஒரு லட்சியப் பாத்திரமாகப் படைக்க முற்பட்டு, கதைப்போக்கில் லோகாதய ரீதியில் இன்றைய உலகத்திற்கு அழைத்து வந்து விடுகிறார். பண்பாட்டுக்கு மாறான போக்கு தீவிரமடையும் போது இந்த மீட்பை ஜானகிராமன் இயல்பாகவே மேற்கொள்கிறார். லட்சிய நோக்கையும் பண்பாட்டுப் பழக்கத்தையும் ஒருங்கிணைத்து ஆன்மீக வேட்கை பக்குவமடைகிறது. இந்த நிலையில் தனிமனிதன் தன் முன்னால் இருக்கும் படுகுழியில் விழுவதினின்றும் தன்னையே பாதுகாத்துக் கொள்ளும் சாதனையை, மீண்டும் நளபாகம் நாவலில் செய்து காட்டுகிறார் ஜானகிராமன்.
உன்னத நோக்கங்களின் துணையுடன், தெய்வபக்தியின் பலத்துடன், உத்தம வாழ்வு வாழ்ந்து வெற்றி பெற வேண்டுமென்றும் விரும்பும் காமேச்வரன் ஒரு சமையல்காரன் தான். நளபாகக்கலையில் தேர்ச்சி பெற்ற காமேச்வரனுக்கு ஒரு மகானின் உபதேசம் கிடைத்ததின் பலனாக அவன் தன்னுடைய கர்மாவிலேயே திருப்தி கண்டு பூரணத்வம் அடைகிறான். ரயிலில் தலயாத்திரை மேற்கொண்ட சில பயணிகளின் வயிற்றுப் பசியைத் தீர்த்து வைக்கும் காமேஸ்வரனுக்குத் தேவையற்ற உடற்பசி ஏற்படுவதற்கான சூழ்நிலை உருவாகும் போது அவனுடைய ஆத்மஞானம் துணைசெய்கிறது.
இத்தகைய சூழ்நிலையை சந்ததியற்ற அம்மாளே தோற்றுவிக்க முற்படுகிறாள் என்பது, பொதுவாக சமுதாயம் என்ற உருவற்ற அமைப்பு அங்கீகரிக்க மறுக்கும் விஷயம்தான். குற்ற உணர்வு சிறிதும் இன்றி, அலங்காரத்திற்கு இருந்த மன உறுதியுடன், ரங்கமணி இந்தக் காரியத்தில் முன்னின்று பொறுப்பேற்றுக் கொள்வதே நளபாகம் நாவலின் மையக் கருத்து, ஜோஸ்யத்தில் நம்பிக்கையும், சந்ததி வளர்ச்சியில் ஆர்வமும் ரங்கமணியை, மற்றவர்கள் விபரீதம் என்று கருதக்கூடிய செயலுக்கு திட்டமிடத் தூண்டுகின்றன. தன்னுடைய குருவான ஸ்ரீவத்ஸன் கூட உடற்பசியால் பாதிக்கப்பட்டவர் என்ற அதிரச் செய்யும் உண்மையும், இந்த விநோத சூழ்நிலைக்கு உதவுவதுபோல் முதலில் தோன்றுகிறது. இந்தக் கட்டத்தை மிகவும் நளினமான கலையுணர்வுடன் கையாளும் ஜானகிராமன், மனித இயல்பின் ஆழ்ந்த அடிப்படை ரகசியங்களை உளவியல் ஆய்வுப் பாங்கில் வெளிப்படுத்துவது, மிகவும் சாதாரணமாகத் தோன்றும் இந்த நாவலுக்கு ஒரு இலக்கியத்தரம் கொடுத்து விடுகிறது. எழுத்தாளன் சிறந்த கலைஞனாக உருவெடுக்கும் நிலை இந்தக் கதையில் தெளிவாகிறது. மற்ற நாவல்களுள் காணப்படாத ஓரளவு சமுதாயச் சூழலும், இந்தக் கதைக்கு வளம் கொடுக்கிறது.
இந்த நிலையிலும், ‘அம்மா வந்தாள்’, ‘மரப்பசு’, ‘நளபாகம்’ ஆகிய மூன்று கதைகளின் போக்கையும், இக்கதைகளில் கதை மாந்தர்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளையும் கருதும் போது, எந்தக் கோணத்திலிருந்து பார்த்தாலும் ‘மோகமுள்’ எல்லாவற்றையும் மிஞ்சி ராஜகோபுரம் போல் ஓங்கி உயர்ந்து நிற்பதைத்தான் உணர முடிகிறது.
தம்முடைய நாவல்களில் ஜானகிராமன் பாலுணர்வு பற்றி ஏதோ தகாத முறையில் எழுதிவிட்டதாக தூய்மைவாதிகள் ஒரு சமயம் எழுப்பிய குரலின் விளைவாக, அவருடைய படைப்புகளின் இலக்கியத்தரம் இருட்டடிக்கப்பட்டதும் உண்டு. குறிப்பாக ‘அம்மா வந்தாள்’ நாவல்தான் இந்தக் குற்றச்சாட்டுக்குப் பலியாயிற்று. கணவனால் ஈடுகொடுக்க முடியாத வேட்கை கொண்ட அலங்காரம் – சிவசு உறவுகூட ஊகமாகத்தான் சொல்லப்படுகிறது. அப்புவுக்குப் பிறகு, குழந்தைகளின் முகச்சாயல் மட்டுமே ஒரு நொடிப் பொழுதில் சான்றாகத் தெரிகிறது. அந்த உறவின் அந்தரங்கம் எங்குமே அப்பட்டமாகச் சொல்லப் படவில்லை. அலங்காரம் அக்னி சாட்சியாக மணந்த கணவனுடன் கொள்ளும் உறவு மட்டுமே, மிகுந்த அழகுணர்வுடன் ஒரே சந்தர்ப்பத்தில் குறிப்பிடப் படுகிறது. பாபு ஒரு சமயத்தில் தங்கம்மாளின் உடற்பசிக்குப் பலியாவது கூட அநாவசியமாக விவரிக்கப்படவில்லை. யமுனா பாபுவுக்குத் தன்னை அர்ப்பணித்துக் கொள்ளும் நேரம் கூட, மௌன இடைவெளி மூலமே உணர்த்தப் படுகிறது. சட்டநாதன் மீது குஞ்சம்மாள் கொண்டிருந்த காதல் (செம்பருத்தி), அருண்குமார் ஏழைப் பெண்களைக் கற்பழிப்பது போன்ற நிலைகளும் அதிகமாக விவரிக்கப்படவில்லை. நளபாகம் காமேச்வரனை ரங்கமணி இட்டுச்செல்லும் வழி எவ்வளவு ஆபத்தானது என்று வாசகர் உணர்ந்து தவிக்கும்போதுகூட, புண்படுத்தும் சொற்களை ஜானகிராமன் பிரயோகிக்கவில்லை. திருமணத்தில் நம்பிக்கையில்லாத, மரப்பசு அம்மணியின் திருவிளையாடல்கள்கூட பூடகமாகத் தான் குறிப்பிடப்படுகின்றன. படுக்கையறையின் கதவையும், ஜன்னலையும் திறந்து வைத்துவிட்டு, வெளிச்சத்தையும் போட்டு வர்ணிக்கும் இன்றைய யதார்த்த எழுத்துப் பாணியை ஜானகிராமன் கையாளவில்லை. அப்பட்டமாக எதையும் விளக்கும் வீண்வேலை அவருடைய கலையுணர்வுக்குத் தேவையில்லை. வாசகனின் கலையுணர்வுக்கும் கற்பனைக்கும் மதிப்புக் கொடுப்பதில் ஜானகிராமனுக்கு எப்பொழுதும் அக்கறையுண்டு.
ஜானகிராமன் தம்முடைய நாவல்களில் வரும் கதைமாந்தர்களின் நடவடிக்கைகளைப் பற்றி கூறிக் கதையை நடத்திச் செல்லும் போது, அந்தக் கதைமாந்தர்களே ஆசிரியர் உதவியின்றித் தங்களை இயக்கிக் கொள்வதை அறியலாம். எந்நிலையிலும் ஆசிரியர் என்ற முறையில் ஜானகிராமன் தலையிட்டுக் கதைமாந்தரைப் பாகுபாடு செய்வதில்லை. சுற்றுச் சூழலையும் இயற்கைப் பின்னணியையும் ஒரு வசீகரமான நடையழகுடன் வர்ணிப்பது மட்டுமே ஆசிரியர் குரலாக அமைகிறது. மற்றபடி, கதைமாந்தர்களே தங்களுடைய உடையாடல்கள் மூலமும், செயல்கள் மூலமும் கதைப் போக்கை எடுத்துச் சொல்கிறார்கள்.
வாசகர்களின் அநுதாபமோ, வெறுப்போ சில கதைமாந்தர்களுக்குக் கிடைப்பதில் ஜானகிராமன் பொறுப்பு ஏற்பதில்லை. இவ்வகையில் விலகி நின்று கதைமாந்தர்களை அவர்களுடைய இயல்புகள் மூலமே இயங்கச் செய்வதில் இணையற்ற வெற்றி கண்டதனால்தான், சில கதைமாந்தர்கள் பற்றிய ஜானகிராமன் கருத்து விஷயத்தில் குழப்பம் ஏற்படுகிறது. மனித நடத்தையில் நாம் காணும் சில அருமையான நிலைகளை வாசகரின் உள்ளத்தில் உறையச் செய்து சிந்தனையைக் கிளறும் சாமர்த்தியமே ஜானகிராமன் என்ற படைப்பாளியின் வெற்றி ரகசியம்.
நாவல் இலக்கியத்தில் உத்திகள் அதிகம் பேசப்படுவது இன்றைய இலக்கியப் போக்குகளின் விளைவு. திட்டமிட்டு எந்த ஓர் உத்தியையும் செயற்கையாக ஜானகிராமன் மேற்கொண்டதில்லை. நனவோடை போலத் தோன்றும் கதை சொல்லும் முறை கூட கதைமாந்தரின் இயல்பும், மற்ற கதைமாந்தர்களுடன் அவர்களுக்கு ஏற்படும் உறவும் நிர்ணயிக்கும் போக்கு தான். பொதுவாக கதை வளர்ச்சியைக் கதைமாந்தரிடமே விட்டுவிட்டு, அதனால் விளையும் நிலைகளுக்கு அவர்களையே பொறுப்பாக்கும் முறையே கையாள்வதால், ஆசிரியர் என்ற வகையில் ஜானகிராமன் திட்டமிட்டு உத்தி என்ற ஓர் உபாயத்தைக் கையாளும் அவசியம் இல்லாமல் போய் விடுகிறது.
இவருக்கு மட்டும் கைவந்த சிறப்பான உத்தி, கதைமாந்தரின் உரையாடலிலே இவர் தோற்றுவிக்கும் மௌன இடைவெளிகள் தாம். மிகவும் இக்கட்டான சந்தர்ப்பங்களில் குறிப்பிட்ட கதைமாந்தர் என்ன சொல்லி விடுவாரோ என்று வாசகர் ஒரு திகிலுடன் எதிர்நோக்கும் நேரங்களில் அந்த ஆணோ, பெண்ணோ ஒன்றும் பதில் சொல்லாமல் இருப்பது மூலமே, எவ்வளவோ சொல்லும் ஜாலவித்தை ஜானகிராமனின் தனிப்பட்ட உத்தியாகப் பரிணமித்து விடுகிறது.
கதைப்போக்கில் தலையிடாமல் கதைமாந்தர் மூலமே, கதை சொல்லிக் கொண்டு போகும் ஜானகிராமனின் எழுத்தில் காணப்படும் வசீகரமும் நளினமும் அவர் அங்கங்கே சுட்டிக் காட்டும் முறையில், வர்ணிக்கும் காட்சிகள் பளிச்சிடுவதை வாசகர் தன்னையறியாமலே உணர்வது அவருடைய நாவல்களையும், கதைகளையும் படிக்கும்போது அடையும் அபூர்வ அனுபவம், புலன்களால் உணரப்படும் தூலக் காட்சிகளும் சரி, அறிவின் எல்லைக்கு அப்பால் ஒளியுடன் மிளிரும் ஆத்மீக விஷயங்களும் சரி, ஜானகிராமனின் இலக்கிய மேதமையின் மெருகைப் பெற்று மனதில் பதிந்து நிரந்தரமாகப் பிரதிபலித்துக் கொண்டு, எதிரொலித்துக் கொண்டும் இருக்கின்றன.
கதைமாந்தரின் தூல ஆளுமையை அவர் சொற்களில் வடிக்கும் போது அவர்களுடைய உருவங்கள் ஓவியமாகவும், சிற்பமாகவும் உயிர்பெற்று மனக்கண் முன் பிரதிஷ்டை செய்யப்பட்டு விடுகின்றன. மானிட அழகைப்பற்றி வர்ணிக்கும் போது, கவிதைப்பாணியை அவர் கையாள்வதில்லை. மிகவும் எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த வண்ணமும், நொடிப் பொழுதில் தோன்றி மறைந்துவிடும் சலனமும் கலந்து முழுமையான வடிவத்தைப் படைத்து விடுகின்றன. கை, கால், முகம் போன்ற உணர்ச்சி வெளிப்பாட்டுக்கு அவசியமான உறுப்புக்களைப் பற்றிச் சொல்லும் போது கூட, ஓரிரண்டு வார்த்தைகளில் முடித்து விடுகிறார், அநாயசமாகச் சில சொற்றொடர்களை அவர் பிரயோகிக்கும் போது, அவைகள் படிப்படியாக தோற்றத்தை வளர்ப்பது, ஓர் உள்ளத்தைக் கவரும் உத்தி. கதைமாந்தர்களின் உடலமைப்பை ஒரே முறையில் சொற்கோவை மூலம் விவரிப்பதற்கு மாறாக, ஒவ்வொரு சந்தர்பத்திலும் தோற்றத்தில் காணும் மாறுதல்களைச் சிறிது சிறிதாகக் காட்டியே ஆளுமையைப் பூர்த்தி செய்வதும் ஜானகிராமனின் கலையுணர்வின் சிறப்பு.
பொதுவாக மற்ற நாவலாசிரியர்களைப் போலவே, ஜானகிராமனும் சிறுகதைக் களத்தில் பயிற்சி பெற்றுத் தான் நாவல் எழுத வந்தார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன் தமிழ் இலக்கிய மறுமலர்ச்சி தோன்றிய போது, சிறு கதையே பிரதான படைப்புக் கூறாக வளர்ந்து இலக்கிய உபாசகர்களுக்கு
கை கொடுத்து உதவியது, இன்றைய தமிழ் எழுத்துலகத்தின் வரலாற்றுச் சிறப்புக்குச் சான்றாக அமைந்தது. மணிக்கொடி பரம்பரையில் ஊக்கமடைந்து அந்த வழி வந்த எழுத்தாளர் என்ற முறையில் சிறுகதைப் படைப்பில் வெகு விரைவில் ஜானகிராமன் புகழ் பெற்று விட்டார்.
அவருடைய சிறுகதைகளில் மனிதப் பண்புகள், நடைமுறை இடையூறுகளை மீறி நிரந்தரம் பெறுவதே முக்கிய அம்சமாக இருக்கிறது. அவர் எழுதிய மிகச்சிறந்த கதைகளில் வாழ்க்கையின் வக்கிரங்களுக்கு அப்பாற்பட்டு மனித இயல்புக்கு வளம் கொடுக்கும் சம்பவங்கள், கலாசார உறுதியுடன் விளக்கம் பெறுகின்றன. நடத்தையில் காணும் சில முரண்பாடுகளை எடுத்துக் கூறும்போது, அவர் லேசான கிண்டலும், மனிதாபிமானம் நிறைந்த நோக்கையுமே பிரயோகிப்பதால் வாசகனுக்குக் கதையம்சத்தில் பொதிந்திருக்கும் அந்தரங்க உண்மைகள் எளிதில் புரிந்து விடுகின்றன.
மேடையில் நடிப்பதற்கென்று எழுதிய நாடகங்களிலும் அவர் இத்தகைய பண்புவளர்ச்சிக் கூறுகளையே எடுத்துக்காட்டினார். கதைகளிலும், நாவல்களிலும் கதைமாந்தரையே பேச வைத்து கதையை நடத்திச் செல்வதில் வெற்றி பெற்ற ஜானகிராமனுக்கு, நாடகப்பாணியில் எழுதுவதில் ஏற்கெனவே பயிற்சி முதிர்ந்திருந்தது. ஆகவே, அவருடைய நாடகங்களைப் படிக்கும்போது கூட பாத்திரங்களையும், அவர்களுடைய நடத்தையையும் மேடை இயக்கக் குறிப்புகளின்றியே நாம் உருவம் செய்து கொள்ள முடிகிறது.
ஜப்பான், கிழக்கு ஐரோப்பா நாடுகள் போன்ற உலகப் பகுதிகளில் பிரயாணம் மேற்கொண்டதன் விளைவாக அவர் எழுதிய பயண நூல்கள், அந்தந்த நாட்டு மக்களின் கலாசாரம், வரலாறு, இன்றைய நிலை போன்ற விஷயங்களைப் பற்றி பயனுள்ள தகவல்களை இலக்கிய நயத்துடன் எடுத்துக் கூறுகின்றன. நாமும் அவருடன் சேர்ந்து பல இடங்களுக்குச் சென்று பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து அளவளாவும் பிரமை ஏற்படுகிறது. ஒரு நாட்டினரின் சிறப்புகளைப் பற்றி பயணி என்ற முறையில் பேசும்போது, அவர்களைப் பற்றி மட்டுமே எடுத்துக் கூறும் நாணயம் ஜானகிராமனின் இலக்கியக் கலைக்குப் பெருமை சேர்க்கிறது.
ஜானகிராமனின் இலக்கிய சாதனையைப் பற்றிப் பேசும் போது, அவர் தஞ்சை மாவட்டத்தின் சூழலை அந்த மண் வாசனையுடன் சித்திரிப்பது தான் சிறப்பாகப் புலப்படும். அந்த பிராந்தியத்தின் செழிப்பு, அந்த செழிப்பின் விளைவாகத் தோன்றிய கலை வளர்ச்சி, அதே நேரத்தில் செழிப்பின் மிகுதியால் மனித மனப்பான்மையில் ஏற்பட்ட உல்லாச வேட்கை போன்ற எதிர்மறை அம்சங்கள் வட்டார வழக்குச் சொற்களால் வர்ணிக்கப்படும் போது உடனடியாக இனங்கண்டு கொள்ளும் நிலை ஏற்படுகிறது. தேவை பூர்த்தியான, வசதியின் மிகுதியின் பலனாக ஓய்வு அதிகமாகக் கிடைக்கும் நிலையில், மனித மனம் மேற்கொள்ளும் வக்கிரங்கள் சில சூழ்நிலைகளில், அந்தப் பகுதியின் சிறப்பாகவும் தலையெடுத்து விடும் முரண்பாடு ஜானகிராமனின் எழுத்தில் தனித்தன்மை அடைந்து, பிராந்தியப் பண்பின் நெளிவு சுளிவுகள் மக்களை இனங்காட்டுகின்றன. இந்தச் சாதனையில் கதை மாந்தரின் சொற்கள் அவர்களுடைய இயல்பைத் தெளிவாக வெளிப்படுத்தும் அளவுக்கு ஜானகிராமன் கையில் வளைந்து கொடுக்கின்றன. எந்தப் பகுதிக்கும் பொதுவான இயற்கைக் காட்சிகளை சுட்டிக் காட்டும்போது கூட, பிராந்திய பகைப் புலத்தைத் தனியாகக் குறிப்பிட இவர் கையாளும் உத்தியின் சிறப்பும் சொற்செட்டுதான். பூகோள, நிர்வாகப் பிரிவுகளின் தகவல் குறிப்புகள் கொடுத்து வாசகரைச் சலிப்படையச் செய்யாமல் தஞ்சை வளத்தையும், மக்கள் இயல்பையும் புலப்படுத்தி விடுகிறார்.
ஜானகிராமனின் இலக்கியக் கலையின் மற்றொரு சிறப்பான அம்சம், முரண்பாட்டு நிலைகளில் கதை மாந்தரின் எதிர்மறைத் தன்மைகள் மூலம், அவர் மற்ற பாத்திரங்களின் உருப்படியான பண்புகளை விளக்குவது. இந்த வகையில் தான் அவர் படைத்த சில மாந்தர்கள் அவரைப்போல் அமரத்வம் அடைந்து வாசகர் உள்ளங்களில் நடமாடுகிறார்கள்.
இவ்வளவும் சாத்தியமானதற்குக் காரணம், ஜானகிராமனின் இலக்கிய நயம் நிறைந்த நடைதான் என்பது அவருடைய படைப்புகளைப் படிக்கும் நேரத்தில் பளிச்சென விளங்கும். அவருடைய நடையில் போதை தரும் அழகுணர்வும், படிமப் பிரக்ஞையும் சேர்ந்து ஒரு வசீகரத்தை உண்டாக்கி விடுகின்றன. பிராந்திய சொற்பிரயோகங்களைக் கையாளும் பொழுது கூட, காவேரி வளத்தினால் மெருகடைந்த உள்ளங்களின் வெளிப்பாட்டை விளக்குவதில் அவர் பண்பட்ட நிலைகளைப் பற்றிய விஷயங்களையே அடிக்கடி பொருளாகக் கொள்கிறார். தீவிர உணர்ச்சிகளை வர்ணிக்கும்போது கூட, மிகவும் தேவையான சில சொற்களை மட்டுமே கையாண்டு உணர்வுகளுக்கு அழுத்தம் கொடுப்பதும் ஓர் அரிய சாதனை.
சங்கீதத்தின் சர்வ வியாபகத்தன்மையை ரங்கண்ணாவின் மேதைமை மூலம் ஜானகிராமன் எளிதாகச் சொல்லி விடுகிறார். ரங்கண்ணா மனதையே, உடலையே சங்கீத மயமாக ஆக்கிக் கொண்டிருந்தார். தம்புராவை மீட்டிக் கொண்டே இருக்கும்போது. கிழவி உள்ளே அண்டாவில் நீர் எடுக்க சொம்பில் மொள்ளும் போது ஞண் என்று ஒலித்தால், “என்னடா ஸ்வரம் அது!” என்று கேட்பார். உடனே பதில் சொல்ல வேண்டும். காக்காய் கத்தல், மாவு மிஷன், கரைதல், தாம்பாள் சப்தம், கும்பேச்வரன் கோவில் மணி, வாசலில் போகும் குதிரை வண்டியின் ஹார்ன், சைக்கிள் மணி, எல்லாவற்றிற்கும் இந்தக் கேள்விதான் எழும். சொல்லிச் சொல்லி இப்போது நமக்கும் அதே வழக்கமாகி விட்டது. உள்ளே எப்போதும் நிலவிக் கொண்டிருக்கும் ஆதார சுருதிக்கு உலகத்து ஒலியெல்லாம் ஸ்தாயிகளாகவும், ஸ்வரங்களாகவும் கேட்கின்றன.
“ரங்கண்ணாவுக்கு சங்கீதம்தான் உயிர். பாடாவிட்டால் நாதத்தைப் பற்றி நினைக்காவிட்டால் அவருக்கு உயிர் தங்காது. சங்கல்பம் செய்து கொண்டு அதைப் பற்றி நினைக்க வேண்டுமென்றில்லை. தைலதாரை என்று சொல்வதுபோல் அவருடைய சங்கீத உபாசனை கணமும் அறாத உபாசனை வருடம் முழுவதும் வற்றா அருவிபோல், கணமும் ஓயாக்கடலின் அலைபோல், கருத்தும், உணர்வும் கணமும் அறாமல் நாதம் அவருள் நடனமிடுகின்றது. ஓயாத வெள்ளம் அது, இசையே உயிர் அவருக்கு.”
வேதத்தின் தோற்றத்தை எப்படி விளக்குவது? அநாதியான இந்த முதல் அறிவைப் பற்றி யார் முதலில் நினைத்தார்கள்? வாழ்க்கையைத் தீவிரமாகப் பாதிக்கும் இந்த ஞானப் பெட்டகத்தின் தோற்றத்தை அப்பு தன் தாயாருக்குச் சொல்கிறான்.
வேதத்தை யாரும் பண்ணலே, ரிஷிகள் கண்டது. அது ஆகாசத்திலே அந்த தத்துவங்கள் எல்லாம் சூஷ்மமா, கண்ணுக்குத் தெரியாம, புத்திக்குத் தெரியாம இருக்கும். ரிஷிகள் தியானம் பண்ற போது. ஒண்ணுரண்டு அவர் கண்ணிலே படும். அப்படியே நாக்கிலே சப்தமா மாறி வரும் நீ இப்ப இருக்கே பாரு, இந்த மாதிரி இப்படியே ரொம்ப தூரம் உள்ளுக்குள்ளே இறங்கிப் போயிருப்பா, அப்ப வந்து ரண்டு, மூணு, பூ பூத்தாப் பல தெரியும். அதைப் பறிச்சுண்டு வந்துடுவா. யாரும் பண்ணலேம்மா, அது அங்கேயே இருக்கு. காமேஸ்வரனின் தேவி உபாசனை அவனுடைய குரு வத்ஸன் அவனுக்கு அருளியது. அது பற்றிக் காமேஸ்வரன் நினைவு கூறும் போது!
“உபதேசம் பண்ணும்போது வத்ஸன் ஏதோ சொன்னார்: இந்தப் பிரபஞ்சத்திலே சௌந்தர்யத்தின் பரா காஷ்டை பரம் உச்சம் லலிதைதான். அவன் சமையல் தான் மலையிலே, சமுத்திரத்திலே, மேகத்திலே, மழையிலே, மூணாம் பிறையிலே, அஷ்டமசந்திரனிலே, அருணோதயத்திலே, உச்சி வெய்யிலிலே, சூறைக் காத்திலே, நீரோட்டத்திலே, அங்க அவயங்களிலே, புலி, சிங்கத்தோட அழகிலே, நாயொட அழகிலே எங்க பார்த்தாலும் வீசறது. ஒரு சாயல் தான். அப்படின்னா லலிதை எப்படியிருப்ப பார்த்துக்கோ. அதைப்பார்த்து, அதைப்பார்த்து கரைஞ்சு போகணும்.”
மத்ததெல்லாம் பார்த்தா உடம்பு கரையும், ஊண் கரையும் உள்ளே மூளியாகும். மூக்கு கண்களெல்லாம் பள்ளமாப்போய், கைகாலெல்லாம் குறையறது பாரு; அக்கு மாதிரி “வத்ஸன் இதைச் சொன்னது ஒரு தடவை தான் முதல் உபதேசத்தின் போது, பிறகு அவர் செய்த தற்பேத்திகள் ஒரு கூடை, ஆனால் முதல் தடவை சொன்ன இதை மட்டும் அவர் மீண்டும் சொல்லவில்லை. அவனுக்கு எல்லா தடவைகளிலும் அது தொக்கி நிற்கிறாற்போல ஒரு பிரமை.”
எழுத்தை ஒரு கேள்வியாகக் கருதி அந்த வேள்வித் தீயில் புடம் போட்டு எடுக்கப்பட்ட உண்மைகளை அடிப்படையாக வைத்து இலக்கியத்தின் பல விஷயங்களிலும், இந்தியப் பண்பாட்டை எடுத்துக்கூறிய ஜானகிராமனின் சாதனை மிகப்பெரும் அளவிலானது. அவருடைய அடிச்சுவட்டில் இலக்கியப் பயிற்சி பெற முயலும் இளம் எழுத்தாளர்கள் பலர் அவரை ஆதர்சமாகக் கொள்வதில் பெருமையடைகிறார்கள்.
ஆயினும் தாம் முழுமையடைந்து விட்டதாக ஜானகிராமன் ஒரு பொழுதிலும் நினைத்ததில்லை. ஆன்மீக வேட்கையில் தத்துவ விளக்கம் தேடும் பக்தனைப்போல அவர் கடைசிவரை இலக்கியத்தின் நிறைவைத் தேடிக் கொண்டுதான் இருந்தார். மனிதன், நண்பன், எழுத்தாளன் என்ற முறையில் ஒரு லட்சியத்தைத் தேடிக் கொண்டிருக்கும் யாத்ரிகன் போலவே தம்முடைய இலக்கியப் பணியைச் செய்து கொண்டிருந்தார். தேடல் தொடர வேண்டுமென்பது தான் அவருடைய அடிப்படை நோக்கம். தேடலிலே நிறைவு கண்ட சாதனைதான் அவருடைய இலக்கியப் பயணத்தின் அடையுமிடம்.
– சிட்டி
[mkdf_highlight background_color=”black” color=”yellow”]குறிப்பு[/mkdf_highlight] நளபாகம் நாவல் வெளிவந்தப் போது சிட்டி எழுதிய கட்டுரை இது. எழுத்தாளரின் உரிய அனுமதிப் பெற்று கனலி-யின் தி.ஜானகிராமன் நூற்றாண்டுச் சிறப்பிதழுக்காக தட்டச்சு செய்யப்பட்டு பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
நன்றி: ஓவியம் – ஆதிமூலம்
அற்புதமான கட்டுரை. நன்றி கனலி.