Monday, Aug 8, 2022

தோட்டங்களின் தொடர்ச்சி

சில நாட்களுக்கு முன்னர்தான் நாவலை மறுபடியும் படிக்க ஆரம்பித்திருந்தான். முக்கியமான சில வியாபாரச் சந்திப்புகளினால் கொஞ்ச நாளாக அதைப் படிப்பதை நிறுத்தியிருந்தான், தனது பண்ணைக்கு மீண்டும் ரயிலில் போகும் நேரத்தில் இப்போது அதை மீண்டும் திறந்தான்; அதன் கதையோட்டம் மற்றும் பாத்திரப் படைப்பு ஏற்படுத்திய சுவாரசியத்தில் மெல்ல மூழ்கிப் போக தன்னைத் தானே  அனுமதித்துக் கொண்டான். பிற்பகலில், தன் சார்பில் காரியங்களைச் செய்யும் உரிமைகளைக் கொடுக்கும் கடிதத்தை எழுதி, கூட்டுச் சொத்துரிமை குறித்த ஒரு விஷயத்தைப் பற்றிப் பண்ணை மானேஜரோடு பேசிவிட்டு ஓக் மரங்கள் நிறைந்திருக்கும் தோட்டத்தைப் பார்த்தபடியிருக்கும் தனது படிப்பறையின் அமைதியான சூழலில் மீண்டும் நாவலுக்குள் நுழைந்தான்.

கதவுக்கு முதுகைக் காட்டிக்கொண்டு இருக்கும் கைப்பிடிகள் உடைய உயரமான பின்புறமுள்ள நாற்காலியில் உடலைத் தளரவிட்ட அதே நேரத்தில் –  யோசித்திருந்தால் சின்ன குறுக்கீடுகூட அவனை எரிச்சலடைய செய்திருக்கும் – தனது இடது கையை இருக்கையின் பச்சை வெல்வெட் உறையை வருட விட்டபடி நாவலின் கடைசி அத்தியாயங்களை வாசிக்க ஆரம்பித்தான். கதாபாத்திரங்களும், அவற்றுக்குக் கற்பனையில் கொடுத்திருந்த தோற்றங்களும் சிரமமே இல்லாமல் அவன் நினைவுக்கு வந்தன; நாவலின் வசீகரம் சிறிதும் தாமதமில்லாமல் அவனை இழுத்துக் கொண்டது. தன்னைச் சுற்றி இருக்கும் பொருள்களிலிருந்து ஒவ்வொன்றாகத் தன்னை விடுவித்துக் கொள்ளும் விசித்திரமான குறுகுறுப்பை அனுபவித்த அதே நேரத்தில் தன் தலை உயரமான பின்புறத்தை உடைய நாற்காலியின் பச்சை வெல்வெட்டில் சுகமாக சாய்ந்திருப்பதை உணர்ந்தபடி, சிகரெட்டுகள் கைக்கெட்டிய தூரத்தில் இருப்பதையும், பிரம்மாண்டமான சன்னல்களுக்கு அப்பால் தோட்டத்திலிருக்கும் ஓக் மரங்களின் அடியில் பிற்பகல் காற்று அலைந்து கொண்டிருப்பதை அறிந்தவனாய்.  வார்த்தைக்குப் பின் வார்த்தையாக, கதாநாயகனும் கதாநாயகியும் மாட்டிக் கொண்டிருக்கும் அருவருக்கத்தக்கச் சிக்கலால் நக்கியெடுக்கப்பட்டவனாய், நாவலிலிருந்த சித்திரங்கள் ஆழ்ந்து கீழிறங்கி நிறமும் அசைவும் புனைந்து கொள்ளும் அளவுக்குக் கதையில் தன்னைக் கரைய அனுமதித்தபடியே, மலைமீதிருந்த சிறு வீட்டில் நடக்கும் அந்தக் கடைசி சந்திப்புக்குச் சாட்சியாக இருந்தான். பெண் முதலில் வந்தாள், அவள் முகத்தில் பயம் இருந்தது; அடுத்தது அவள் காதலன், நடந்துவரும்போது மரக்கிளையைத் தள்ளி நடந்தபோது அது சுழற்றியடித்ததில் அவன் முகத்தில் வெட்டுக்காயம் ஏற்பட்டிருந்தது. பாராட்டப்பட வேண்டிய விதத்தில், வெட்டுக் காயத்திலிருந்து ஊறிய ரத்தத்தை அவள் முத்தங்களால் ஒற்றியெடுத்தாள், ஆனால் அவன் அவளுடைய அரவணைப்புகளை விரும்பாதவனாய் அவளைத் தன்னிடமிருந்து தள்ளி விட்டான், காய்ந்த இலைகளாலும் காட்டினூடாக தம்மை மறைத்தபடி ஓடும் பாதைகளாலும் பாதுகாக்கப்பட்டிருந்த இந்த தனி உலகில் மீண்டும் ரகசியமான காமத்தின் சடங்குகளை நிறைவேற்ற அவன் வரவில்லை. அவன் வைத்திருந்த கத்தி அவனுடைய மார்பில் உரசித் தன்னையே சூடாக்கிக் கொண்டது, அதற்கடியில் மிக அருகாமையில் சுதந்திர உணர்வு அடித்துக் கொண்டது. காமத்தில் தோய்ந்து, மூச்சுமுட்டும் வகையிலிருக்கும் உரையாடல் பாம்புகளாலான சிற்றருவிபோல் நாவலின் பக்கங்களில் கீழிறங்கி வந்தது எல்லாம் முதலிலிருந்தே முடிவானதுபோன்ற பிரமையை ஏற்படுத்தியது. காதலன் செய்யப்போகும் காரியத்திலிருந்து அவனைத் தடுத்து நிறுத்துவதைப்போல் அவன் உடம்பில் நெளிந்த அரவணைப்புகள்கூட ஒழிக்கப்பட வேண்டிய அந்த வேறொரு உடம்பின் வடிவத்தை அருவருப்பூட்டும் வகையில், அவன் உடம்பின் மீதே வரைந்து காட்டுவதாக இருந்தன. எதையும் அவன் மறந்திருக்கவில்லை. சட்டத்திற்குத் தேவையான விளக்கங்கள், எதிர்பாராத விபத்துகள், நிகழக்கூடிய பிழைகள். அந்தக் கணத்திலிருந்து தொடங்கி ஒவ்வொரு நொடிக்கும் மிகத் துல்லியமான வேலை தரப்பட்டிருந்தது. மீண்டும் மீண்டும் மனதில் ஓடிக்கொண்டிருந்த விவரங்களின் மீள் ஆய்வு கன்னத்தை வருட கை நீண்ட போது கூட நிற்கவில்லை. இருளத் தொடங்கியது.

ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளாமல், செய்ய வேண்டிய காரியத்தில் முழு கவனத்தையும் வைத்தவர்களாய், சிறுவீட்டின் வாசலில் அவர்கள் பிரிந்தார்கள். அவள் வடக்கு நோக்கிப் போகும் பாதையில் போக வேண்டும். எதிர்த்திசையில் போகும் பாதையில் நின்று, தலைமுடியின் பின்னல் கழன்று காற்றில் அலைபாய ஓடுபவளைத் திரும்பிப் பார்த்தான். அந்தி நேரத்தின் மஞ்சள் வெளிச்சத்தில் விட்டிற்கு முன்னால் மரங்கள் இரண்டு பக்கமும், வரிசையாக நிற்கும் விசாலமான பாதைக் கண்களில் தென்படும் வரையிலும் மரங்களுக்கும் புதர்களுக்கும் பின்னால் குனிந்தும் வளைந்தும் ஓடினான். நாய்கள் குரைக்காது என்று எதிர்ப்பார்த்தான், அவை குரைக்கவில்லை. பண்ணை நிர்வாகி அந்த நேரத்தில் அங்கு இருக்க மாட்டான் என்று எதிர்ப்பார்த்தான்,  அதுபோலவே அவனும் அங்கு இல்லை. வீட்டிற்கு முன்னாலிருந்த மூன்று படிகளில் ஏறி வீட்டிற்குள் நுழைந்தான். காதுகளில் பெரும் இரைச்சலாக ஒலித்துக் கொண்டிருந்த இதயத்தின் துடிப்பைத் தாண்டி அந்தப் பெண்ணின் குரல் அவனுக்குக் கேட்டது. முதலில் நீல அறை, பின்பு கூடம், பிறகு கம்பளத்தால் மூடிய படிக்கட்டு. உச்சியில், இரண்டு அறைகள். முதலாவது அறையில் யாருமில்லை, இரண்டாவது அறையில் யாருமில்லை. பெரிய வரவேற்பறையின் கதவு, பிறகு கையில் கத்தியோடு, ராட்சச சன்னல்களிலிருந்து உள்ளே பொழியும் வெளிச்சம், பச்சை வெல்வெட்டால் மூடப்பட்டிருக்கும் உயரமான பின்புறத்தையுடைய நாற்காலி, நாற்காலியில் அமர்ந்து நாவல் படித்துக் கொண்டிருக்கும் மனிதனின் தலை.


ஸ்பானிய மூலம் : ஹூலியோ கோர்த்தஸார்

தமிழில்: சித்துராஜ் பொன்ராஜ்


ஆசிரியர் குறிப்பு :

ஹூலியோ கோர்த்தாஸார் (1914-1984) :அர்ஜெண்டினாவைச் சேர்ந்தவர். மெக்ஸிலோவின் கார்லோஸ் ஃபுவெண்டெஸ், பெருவின் மாரியோ வர்காஸ் லியோசா, கொலொம்பியாவின் காப்ரியக் கார்சியா மார்க்கெஸ் ஆகியோரோடு 1970களில் உலகப் புகழ்பெற்ற முதல்தர லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களில் ஒருவராகக் கருதப்படுகிறார். நாவல், சிறுகதை, கவிதை, கட்டுரை என்று பல தளங்களில் இயங்கியவர். இவருடைய ‘ஹாப்ஸ்காட்ச்'(Hopscotch )நாவலும், ‘ப்ளோ அப்’ (Blow-Up) சிறுகதைத் தொகுப்பும் விமர்சகர்களால் 20ம் நூற்றாண்டு ஸ்பானிய மொழி இலக்கியத்தின் மிகச் சிறந்த படைப்புகளாகக் கொண்டாடப்படுகின்றன.

 

சித்துராஜ் பொன்ராஜ்:

சிங்கப்பூரில் வசிக்கிறார். இதுவரை தமிழில் இரண்டு நாவல்கள், மூன்று சிறுகதை தொகுப்புக்கள், மூன்று கவிதை தொகுப்புக்கள் எழுதியுள்ளார். ஆங்கில, ஸ்பானிஷ் மொழி இதழ்களிலும் இவருடைய படைப்புக்கள் தொடர்ந்து வெளிவருகின்றன. இவருடைய ‘மரயானை’ நாவல், ‘கடல் நிச்சயம் திரும்ப வரும்’ சிறுகதைத் தொகுப்பு மற்றும் ‘இத்தாலியனாவது சுலபம்’ கவிதைத் தொகுப்பு அண்மையில் வெளிவந்திருக்கின்றன.


Art Courtesy : Szabó J. Gergely

பகிர்:
Latest comments
  • பிரமாதமான கதை. ஒன்றிலிருந்து ஒன்றை வேறுபடுத்தியறிய இயலாதவண்ணம் கதையும் வாழ்க்கையும் ஒன்றோடொன்று பின்னிக் கிடக்கின்றன. முடிவு எதிர்பாராத ஒன்று. ஸ்பானிய மூலத்திலிருந்து நேரடியாக மொழியாக்கம் செய்யப்பட்டிருப்பது சிறப்பு. சித்துராஜ் பொன்ராஜ் அவர்களுக்குப் பாராட்டுகள்.

  • சற்றும் எதார்பாரா முடிவு அதிர்ச்சியைத் தந்தது. மொழிபெயர்ப்பாளருக்குப் பாராட்டுகள்!

  • அருமையான கதையும், மொழிபெயர்ப்பும்! வாழ்த்துக்களும், நன்றியும்!!

leave a comment

error: Content is protected !!