நினைவுகளைச் சுமப்பதைப் போல் பெருந்துயரம் எதுவுமில்லை. திருப்பத்தூரிலிருந்து சென்னைக்குச் செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்தாள் மங்களம். ஓட்டுநர் ரசனைக்காரர் போல. பேருந்து, நெடுஞ்சாலையில் பயணிக்க ஆரம்பித்த அடுத்த நொடி,’என்னைத் தொட்டு அள்ளிக்கொண்ட மன்னன் பேரும் என்னடி’ என்று ஸ்வர்ணலதாவை பாடவிட்டார். இரவுநேரம் என்பதால் பேருந்தில் அமைதி நிலவியது. அமைதியான பேருந்து பயணம், நெடுஞ்சாலை கூடவே இளையராஜாவின் பாடல்களும் வருகிறது என்றால் ஒரு சாமானியனுக்கு என்ன வேண்டும். இளையராஜாவைக் கேட்டுக்கொண்டே பலர் உறங்கிவிட்டனர். மங்களத்துக்கு உறக்கம் வரவில்லை. பத்தாம் வகுப்பு படிக்கும் மகனையும் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மகளையும் வயதான அம்மாவை நம்பி ஒப்படைத்துச் செல்வதை நினைத்து மீண்டும் மீண்டும் கலங்கினாள்.
‘காலங் கெடக்குற கெடைக்கு புள்ளைகள வயசான அம்மாவ நம்பி விட்டுட்டு போறது செரியா?’ என தனக்குத்தானே பல முறை மனதுக்குள் கேட்டுக்கொண்டாள். எத்தனைமுறை கேட்டாலும் பதில் ஒன்றுதான். புள்ளைங்க ரெண்டும் நல்லா படிச்சு வேலைக்கி போயி தன் கைய ஊனி கரணம் போடணும்னா நாம மெட்ராஸுக்கு போனாத்தான் முடியும். பொம்பளபுள்ள எப்படியாச்சும் காலேசு போய் படிச்சிருச்சுன்னா எதாச்சும் ஒரு வேல வாங்கி பொழச்சுக்கும். நம்மள மாதிரி கஷ்டப்பட வேண்டாம்’ என்று தனக்குத்தானே பதில் சொல்லிக்கொண்டு சமாதானம் செய்துகொண்டாள். அவளையும் மீறி கண்ணில் வழிந்த நீரைத் துடைத்து சுயநினைவுக்கு வந்த போது, ‘என்ன மறந்த பொழுதும் நான் உன்ன மறக்கவில்லையே’ என சித்ரா சோகத்தையும் கண்ணீரையும் பெருக்கிக்கொண்டிருந்தார். அந்தப் பாடலைக் கேட்கக்கேட்க மங்களத்துக்கு சிவராசுவின் நினைவு வந்து நெஞ்சை அடைத்தது. சிவராசுவும் மங்களமும் கணவன் மனைவியாவதற்கு முன்பு ஊர் டூரிங் தியேட்டரில் குஷ்புவும் பிரபுவும் நடித்த ‘பாண்டித்துரை’ திரைப்படத்தை குடும்பத்துடன் சென்று பார்த்தது நினைவுக்கு வந்தது. அப்போது மங்களத்துக்கு பனிரெண்டு வயதுதான் இருக்கும். அந்த வயதில் சிவராசுவின் மனைவியாவோம் என்று நினைத்துக்கூடப் பார்த்தது இல்லை அவள். ஆனால், காலம் போட்டு வைத்திருக்கும் திட்டங்களை யார் அறிவார். பதினெட்டு வயதில் சிவராசுவை கரம் பிடித்தாள். சிவராசுவுக்கு பெயிண்டர் வேலை. திருப்பத்தூரில் பெயிண்டர் வேலை கிடைப்பதில்லை என்பதால் பெங்களூரூவுக்குச் சென்றான்.
கிராமத்தில் இருக்கும் தன் அம்மா, அப்பாவுடன் மனைவியை விட்டுச் சென்றான். மாதத்துக்கு ஒருமுறை இரண்டு, மூன்று நாள் லீவில் வருவான். வரும்போது மனைவிக்குப் புடவை, மிக்ஸர், லட்டு என வாங்கி வருவான். அந்த இரண்டு மூன்று நாட்களும் கறி சோறுதான். இரவு முழுதும் முழித்துக்கொண்டு கதை பேசுவார்கள். உறவுக்கு முந்தியும் பேசுவார்கள்; பிந்தியும் பேசுவார்கள். அவன் திரும்ப வரும்வரை மங்களத்துக்கு அந்த பேச்சுதான் துணை. கல்யாணம் ஆன ஆறாவது மாதம் கர்ப்பம் ஆனாள். முதலில் பெண் குழந்தை பிறந்தது. சிரிப்பும் சந்தோஷமுமாகக் கழிந்த நாட்கள் அவை. அந்த நாட்கள் இனி தன் வாழ்நாளில் ஒரு நாள் கூட, ஏன் ஒரு மணி நேரம் கூட வராது என்று நினைத்த போது ஏங்கி அழுத மனதை, ‘கூண்டுக்குள்ள என்ன வச்சி கூடி நின்ன ஊர விட்டு’ என துயரம் கப்பிய குரலில் ஜானகியம்மாவும் பாலுவும் சேர்ந்து பாடி கேவிக்கேவி அழ வைத்தார்கள். சில நினைவுகளை அழிக்கும் மருந்தைத்தான் உலகில் பலரும் தேடி அலைகிறார்கள்.
மங்களம் சத்தம் வராமல் அழுதுவிட்டு முந்தானையை எடுத்து மூக்கைச் சிந்திக்கொண்டாள். பையிலிருந்த பாட்டில் தண்ணீரை எடுத்துக் குடித்துக்கொண்டதும் சன்னல் பக்கம் திரும்பிப் பார்த்தாள். கும்மிருட்டு என்பதால் எந்த ஊர் என்பது தெரியவில்லை. ‘நாளை காலை சென்னையில் டிவி ஆபீஸில் வேலைக்குச் சேர்ந்துவிடுவோம்’ என்று நினைத்ததும் மனதில் கொஞ்சம் தெம்பு வந்தது.
ஊரைவிட்டுக் கிளம்பும்போது எப்போதும் கூடவே இருக்கும் இளமதி சொன்னது நினைவுக்கு வந்தது.’’ஏய் மங்களம் டிவி ஆபீஸுல வேலைன்னா அங்க வர்ற நடிகர், நடிகைங்க எல்லாரையும் பாக்கலாம்ல டீ. ஜாலிதான். ஏய் மங்களம் விஜய் சேதுபதி வந்தா அவருகூட போட்டோ புடிச்சு எனக்கு செல்லுல அனுப்புடீ’ என ஆசையுடன் கேட்டதை நினைத்து மங்களம் மனதுக்குள் சிரித்துக்கொண்டாள். ‘டிவி ஆபீஸுக்கு என்ன நடிக்கிற வேலைக்கா போறோம்… கூட்டிக் கழுவுற வேலைக்கு. அதுவும் கக்கூஸூ கழுவுற வேலைக்கு. கக்கூஸ் கழுவுற பொம்பளகூடவெல்லாம் சினிமா நடிகருங்க கூட நிப்பாங்களா. ஆனா என்ன பண்றது, நாம கக்கூஸு கழுவுற வேலைக்கு போறோம்னு இளமதிக்கு தெரியாது. தெரிஞ்சா விட்டிருக்க மாட்டா. அம்மாவும்தான். இங்க கெடைக்கிற வேலைய வச்சு பொழச்சுக்குலாம்னு சொல்லி தடுத்து நிறுத்தியிருப்பாங்க. ஆனா, கக்கூஸு கழுவுற வேலைக்கு யாரு மாசம் ஏழாயிரம் சம்பளம் தருவா? இங்கனயே கெடந்தா ஏழாயிரம் மாசம் மாசம் கெடைக்குமா? புள்ளைங்க ரெண்டையும் படிக்க வச்சு கரையேத்த முடியுமா?’ என வழக்கம் போல் தனக்குத்தானே பேசிக்கொண்டாள் மனதுக்குள்.
கண்ணாயிரம் மாமா மங்களத்திடம் சென்னையில் உள்ள டிவி ஆபீஸுக்கு வேலைக்குக் கூப்பிட்டதிலிருந்து மங்களம் தனக்குத்தானே பேசிக்கொண்டுதான் இருக்கிறாள். ‘அதுவும் கக்கூஸு கழுவுற பொம்பள எதுக்கு பேண்ட், சட்டை போட்டு ஷூவெல்லாம் போட்டுக்கணும்? அந்தக் கருமத்த போட்டுகிட்டு எப்படி கூட்டிக் கழுவ முடியும்? நைட்டி போடுறதையே பெரிய பாவமா நெனக்கிற ஊருல பொறந்து வாழ்ந்துட்டு பேண்டு, சட்டை போட்டுகிட்டு கெடக்குறத ஊரு சனம் பார்த்தா என்ன ஆகும்’ என்று நினைத்தவளுக்கு அந்த இதமான குளிரிலும் வியர்த்தது. அதுவும்
அதே டிவி ஆபீஸில் சிவராசுவின் ஊர்க்காரப் பெண் வேலை செய்கிறாள் என்பதை நினைத்ததும் இன்னும் வியர்த்துக்கொட்டியது. ’அவ நம்ம தெருக்காரியாவோ, சொந்தக்காரியாவோ இருந்தா பரவாயில்ல. ஆனா அவ ‘அந்த’ தெருக்காரி. அவ மட்டும் என்ன அங்க ஆபீஸராவா இருக்கப் போறா…நம்மள மாதிரி அவளும் கூட்டிக் கழுவத்தான் வந்திருப்பா. அவ நம்மள அடையாளம் கண்டுபுடிக்காம இருக்கணும். முருகா இந்த சோதனையில இருந்து மட்டும் என்ன எப்படியாவது காப்பாத்திரு. ஒனக்கு நா எந்தல முடிய காணிக்கையாத் தாரேன்’’ என்று வேண்டிக்கொண்டவள் புடவை முந்தானையை எடுத்து வியர்த்திருந்த முகத்தையும் கழுத்தையும் துடைத்தாள்.
மனதைத் திசை திருப்பும் முயற்சியில் மீண்டும் சன்னல் பக்கம் வேடிக்கை பார்த்தாள். அந்த இருட்டில் தென்னை மரங்களும் ஒன்றிரண்டு பனை மரங்களும் வேகமாகப் பேருந்துக்கு எதிர்த்திசையில் ஓடிக்கொண்டிருந்தன. காற்று இதமாக வீசினாலும் அவளால் ரசிக்க முடியவில்லை. ‘வா வா அன்பே அன்பே காதல் நெஞ்சே நெஞ்சே’ என யேசுதாஸும் சித்ராவும் காதலைக் கூட்டுவதைக் கேட்டு சிலாகிக்கும் மனதை ‘அந்த’ தெருக்காரி கண்முன்னே வந்து தடுத்து நிறுத்தினாள்.
அவள் பெயர் அம்பிகா என்று கண்ணாயிரம் மாமா சொல்லியிருந்தார். அந்தப்பெயரைக் கேட்டது போல் இருந்தது மங்களத்துக்கு. சிவராசு அப்பா ஒத்திக்கு விவசாயம் பார்த்த நிலத்தில் களை எடுக்க, நாற்று நட ஆட்கள் ‘அந்த’ தெருவில் இருந்துதான் வருவார்கள். அப்படி இந்த அம்பிகாவும் வந்திருக்கலாம். தன்னையும் பார்த்திருக்கலாம். பார்த்தவுடனேயே அடையாளம் கண்டுபிடித்துவிட்டால் என்ன செய்வது? ‘ஊரெல்லாம் போய் சிவராசு பொண்டாட்டி டிவி ஆபீஸுல பேண்டு, சட்டை போட்டுகிட்டு கக்கூஸு கழுவுறான்னு சொல்லிட்டா என்ன செய்வது?’ என்று யோசித்தவள், ‘பேசாமல் இங்கயே இறங்கி பஸ் புடிச்சு திரும்ப ஊருக்கே போயிடலாமா? என்று நினைத்தாள்.
‘’போயிடலாம்தான். ஆனா, மாசாமாசம் யாரு 7000 ரூவா சொளையா கொடுப்பா?’’ என்று சிந்தித்தவள் மீண்டும் மனதை தேற்றினாள். ‘’நாம என்ன திருடித் திங்கவா போறோம். ஒழைச்சுத் திங்கத்தானே போறோம். கக்கூஸுன்னா நம்ம கவர்மெண்டு பஸ் ஸ்டாண்டு கக்கூஸு மாதிரி வாந்தி எடுக்குற மாதிரி அசிங்கமா இருக்காது. சுத்தமா இருக்கும். சும்மா பினாயில ஊத்தித் தொடச்சா போதும். மாடிப்படிங்க, சேர், டேபிள் எல்லாம் தொடைக்கிற வேலதான்னு கண்ணாயிரம் மாமா சொன்னாரு. அதுவும் 10 மணிநேரம் தான் வேலையாம். குளுகுளுன்னு ஏசி போட்டு ஆபிஸே ஊட்டி மாதிரி இருக்கும்னு அந்த மாமா சொன்னாரு. பத்து மணி நேரத்துக்கு மேல வேல பார்த்தா ஒரு மணிநேரத்துக்கு 40 ரூவாவாம். இங்க ஊருல ஏரி வேலையில நாள் முச்சூடும் வேல பார்த்தா நூறு ரூவாயக் கொடுத்து ஏமாத்துறான். அதுவும் பேங்குல போடுறேனு சொல்லி அவன் இஷ்டத்துக்கு ஒரு மாசம் கழிச்சுக் கூட போடுறான், பரதேசி. அதுக்கு இது தேவலாம்தான். தலையெழுத்து என்னவோ அதுதான் நடக்கும். அங்க போய் அவ பார்த்து மானம் போகணும்னு இருந்தா யாரு தடுக்க முடியும்? இந்த பாவி மனுஷன் பெயிண்ட் அடிக்கும்போது ஏழு மாடிக் கட்டடத்துல இருந்து விழுந்து சாகாம இருந்திருந்தா நமக்கு ஏன் இந்த கதி வந்திருக்கப் போகுது. ராசாத்தியாட்டம் வச்சிருந்தான். விதி கொடுத்து வைக்கலியே. முப்பத்தி மூணு வயசிலயே தாலியறுத்து மூளி முண்டையா சுத்தணும்னு அந்த கடவுள் எழுதிட்டான். இதுக்கு யார என்ன கொற சொல்லி என்ன ஆகப் போகுது? என்று தனக்குத்தானே மனதைத் தேற்றிக்கொண்டாள். ‘நேற்று போல் இன்று இல்லை, இன்று போல் நாளை இல்லை’ என்று பாலு சார் மங்களத்துக்கு ஆறுதல் சொன்னார். அந்த வரிகள் அவளுக்கு ஏதோ ஒரு நம்பிக்கையைக் கொடுத்தது போல் இருந்தது.
பேருந்து கோயம்பேடு பேருந்து நிலையத்தை அடையும் போது விடியற்காலை மணி நான்கு. ஒவ்வொருவராக மூட்டை முடிச்சுகளுடன் பேருந்திலிருந்து இறங்கினர். கண்ணாயிரம் மாமா சொன்னதை நினைவுக்கூர்ந்தாள். பஸ் எறங்குன எடத்துல இருந்து வெளிய வந்தா நம்ம தெருவ விட பெரிய எடம் இருக்கும். வழவழன்னு கல்லுபோட்டு தரையெல்லாம் சூப்பரா இருக்கும். சனமான சனமெல்லாம் அங்க படுத்துத் தூங்கும். அங்க நெறைய சேர் எல்லாம் போட்டு இருப்பாங்க. பொழுது விடியற வரைக்கும் அங்க இரு. விடிஞ்சதும் பஸ் ஸ்டாண்டுலயே கக்கூஸு இருக்கும். அங்க போய் மூஞ்சியக் கழுவிட்டு தலைய வாரிட்டு 70ந்னு நம்பர் போட்டு இருக்குற எந்த பஸ்லயும் ஏறி ’ஈக்காட்டுத்தாங்கல்’னு சொல்லி எறங்கு. எறங்குன எடத்துல நின்னவாக்குல திரும்பிப் பார்த்தாலே டிவி ஆபீஸு தெரியும். நீ அங்க 7 மணிக்கெல்லாம் வந்திரு. நான் அங்க இருக்கவங்ககிட்ட சொல்லி ஒன்ன மொறப்படி வேலைக்கு சேர்த்துவிடுறேன்’’ என்று சொன்னதை வரி மாறாமல் அப்படியே செய்தாள்.
ஈக்காட்டுத்தாங்கலில் இறங்கி கண்ணாயிரம் மாமா சொன்னது போல திரும்பிப்பார்த்தாள். டிவி ஆபீஸ் தெரிந்தது. நான்கு மாடிக் கண்ணாடி கட்டிடம். யாரிடமும் வழி கேட்காமல் அந்த கண்ணாடிக் கட்டிடம் முன்பு வந்து நின்றாள். அந்த அதிகாலையிலும் டிவி ஆபீஸ் முன்பு கார்கள் அரக்கப்பரக்க ஓடிக்கொண்டிருந்தன. மங்களத்தைத் தாண்டிச் சென்ற காரில் இருந்து மேக்கப் இல்லாமல், செய்தி வாசிக்கும் பெண் சென்றாள். மங்களத்துக்கு அந்த செய்தி வாசிப்பாளரை ரொம்பப் பிடிக்கும். தன் மகளைக் கூட இப்படி செய்தி வாசிப்பாளராக ஆக்க வேண்டும் எனப் பலமுறை நினைத்திருக்கிறாள்.
மணி ஏழரையாகி இருந்தது. கண்ணாயிரம் மாமா இன்னும் அங்கு வந்து சேரவில்லை. நேரம் ஆக ஆக மங்களத்துக்கு பயம் கூடியது. செல்போனில் கண்ணாயிரம் மாமாவை அழைத்தாள். செல்போன் தொடர்பு எல்லைக்கு அப்பால் இருந்தது. மங்களத்துக்கு பயத்தில் கை, காலெல்லாம் நடுங்கியது. ‘’மாமா வராட்டா என்ன செய்யிறது? இங்க யாரையும் தெரியாதே’’ என்று நினைக்கும்போது கண்களில் நீர் முட்டிக்கொண்டு நின்றது. அப்போது ப்ளூ கலர் பேண்ட், சர்ட், ஓவர் கோட் போட்டு அழகாகக் கொண்டை போட்டு, அதில் வலை மாட்டி ஸ்கூட்டி பெப்பில் வந்து இறங்கியவளைப் பார்ப்பதற்கு ‘பூவே பூச்சுடவா’ நதியாவைப் போல இருந்தாள். உள்ளே போய் செக்யூரிட்டி ஆபீஸில் இருக்கும் நோட்டில் கையெழுத்துப் போட்டவள் நடந்து செல்வதைப் பார்த்த மங்களத்துக்கு அவளைப் பார்க்கப் பார்க்க ஆசையாக இருந்தது. ‘இந்த படிப்பும் வேலையும் தான் பொம்பளப்புள்ளைகளுக்கு எம்புட்டு தைரியத்தையும் அழகையும் கொடுக்குது…நாமளும் கஷ்டப்பட்டு பொண்ண எப்படியாச்சும் நல்லா படிக்க வச்சிரணும்’’ என்று நினைத்தவள் மீண்டும் செல்போனை எடுத்து கண்ணாயிரத்தை அழைத்தாள். அப்பவும் கண்ணாயிரம் தொடர்பு எல்லைக்கு வெளியேதான் இருந்தார்.
‘ஏதோ தைரியத்துல திருப்பத்தூர்ல இருந்து இம்புட்டு தொலவு வந்தாச்சு. இனி திரும்பிப் போகவா முடியும்…இங்கயே இன்னிக்கு நின்னுகெடக்கணும்னு விதி இருக்கும் போல’ என்று நினைத்தவள் கையிலிருந்த பாட்டிலைத் திறந்து தண்ணீர் குடிக்கும்போது, “எம்மா உங்க பேரு மங்களமா? ஹவுஸ்கீப்பிங் சூப்பரவைஸர் கூப்புட்டாங்க’’ என்று அழைத்த செக்யூரிட்டிகார்டு, மங்களத்தை டிவி ஆபீஸுக்கு பின்புறம் இருந்த ஹவுஸ் கீப்பிங் ரூமுக்கு அழைத்துச் சென்றார்.
மங்களம் உள்ளே நுழைந்ததும் அறைந்த ஏசிக்காற்று அவளுக்குக் கொஞ்சம் தைரியம் ஊட்டுவதாக இருந்தது. உள்ளே இருந்த பெண்,’’வாங்க…உட்காருங்க’’ என்று சேரைக் காட்டினாள். ‘’பஸ்ல இருந்து எறங்கி நேரா இங்கதான் வர்றீங்களா, சாப்பிட்டீங்களா?’’ என்றாள். மங்களம் பதில் ஏதும் சொல்லாத காரணத்தைப் புரிந்துகொண்டு யாரையோ செல்போனில் அழைத்து ‘’ஒரு டீ, நாலு பிஸ்கட் எடுத்துட்டு வா’’ என்றாள். பிஸ்கட்டும் டீயும் எடுத்து வந்தவளின் உடம்பில் இருக்கும் எலும்பை வரிசையாக எண்ணிவிடலாம் போல அத்தனை ஒல்லியாக இருந்தாள்.
டீ குடித்துக்கொண்டிருந்த மங்களத்திடம் சூப்பரவைஸர், ‘ரெண்டு போட்டோ எடுத்திட்டு வந்திருக்கீங்களா? ஆதார் கார்டு ஜெராக்ஸ் இருக்கா? பேங்க் அக்கவுண்ட் பாஸ் புக் எடுத்திட்டு வந்திருக்கீங்களா?’ எனக் கேட்டாள். எல்லாவற்றுக்கும் மங்களம் தலையாட்டினாள். ‘’எல்லா டாகுமெண்ட்ஸையும் கொடுத்துருங்க. அப்புறம் நீங்க எங்கயாச்சும் உங்க சொந்தக்காரங்க வீட்டுல போய் தங்குறீங்களா…இல்ல வீடு பாக்கனுமா?’’ எனக் கேட்டாள்.
‘இந்த பொண்ணு நம்மளவிட வயசுல சின்னவளாத்தான் இருப்பா. ஆனா எம்புட்டு அக்கறையா பேசுறா….யாரு பெத்த புள்ளையோ, நல்லா இரும்மா’ என நினைத்துக்கொண்டே
‘எனக்கு இங்க யாரையும் தெரியாது. இந்த சம்பளத்துல நான் தனியா எங்க வீடு பார்த்து இருக்குறது?’ என சோகமாகச் சொன்னாள்.
இப்படியான பதில்களைக் கேட்டுப் பழக்கப்பட்டதால், உடனடித் தீர்வாகச் சொன்னாள். ‘’நம்ம ஆபீஸ்ல வேல பாக்குற நாலு லேடீஸ் பக்கத்துல வீடு பார்த்து சேர்ந்து இருக்காங்க. எல்லாரும் உங்கள மாதிரி வெளியூர்ல இருந்து வந்தவுங்கதான். நீங்க அங்க தங்கிக்கலாம். மாசம் 900 ரூபா கொடுத்துடுங்க அதுக்கு. இங்க ஆபீஸ் கேண்டீன்ல ஷிப்ட்டுக்கு வரும்போது சாப்புட்டுக்கலாம். நைட் ஒருவேள மட்டும் வீட்ல சாப்டுக்கலாம். அது இல்லாம நீங்க ஓவர் டைம் வேல பார்த்தா அதுக்கு தனி காசு கெடைக்கும். கக்கூஸூ கழுவுற வேலையின்னு தாழ்வா நினைக்காதீங்க. உங்க தங்கச்சி மாதிரி சொல்றேன்…ஒழைச்சு சாப்புடுறதுல பெருமப்படணும். யாரையும் ஏமாத்திப் பொழைக்கலையே. அப்புறம் நீங்க விடோன்னு யார்கிட்டயும் சொல்லிக்க வேண்டாம். நெத்தியில பொட்டு வச்சிக்கோங்க. அது தப்பில்ல. இங்க வேல செய்யிற பாதிப்பேர் உங்கள மாதிரித்தான். தைரியமா இருங்க. நாளையில இருந்து டூட்டிக்கு ஜாயின் பண்ணிடுங்க. இப்ப உங்கள கூட்டிட்டுப் போயி வீட்டுல விடுறதுக்கு கற்பகம்னு ஒருத்தங்க வருவாங்க. நாளைக்கு அவங்ககூட சேர்ந்து வேலைக்கி வந்துடணும்’’ என்று அந்த சூப்பரவைஸர் நிறுத்தி நிதானமாக ஒரு தாயின் கரிசனத்துடன் பேசுவதைக் கண்ட மங்களம் .’’கடவுள் அங்கங்க நமக்குன்னு யாரோ ரெண்டு நல்லவங்கள வச்சிருக்கான்’’ என்று நினைத்துக்கொண்டவளுக்கு அப்போதுதான் புரிந்தது, வெளியே காத்திருந்த போது ஸ்கூட்ட்டியில் வந்தவள் இவள் தானென்று.
‘’மேடம்’’ என்று அழைத்த மங்களம் தயங்கித் தயங்கி,’’ தப்பா நெனச்சுக்கலைன்னா உங்க பேரு என்னனு தெரிஞ்சுக்கலாமா?’’ என்று கேட்டாள்.
சிநேகமாக சிரித்தபடியே, ‘’அம்பிகா… ஹவுஸ்கீப்பிங் சூப்பரவைஸர். உங்களுக்கு என்ன வேணுன்னாலும் என்கிட்ட கேளுங்க. நான் உங்களுக்குத் தங்கச்சி மாதிரி’’ என்றவள் மங்களத்தை ஒருமுறை கட்டியணைத்து நகர்ந்தாள்.
மங்களம் கண்களில் நீர்வழிய அசையாது நின்றுகொண்டிருந்தாள். அந்தக் கண்ணீரில் எல்லாமும் கரைந்தோடிக்கொண்டிருந்தது.
-நாச்சியாள் சுகந்தி
யதார்த்தமான கதை. அந்தக் கண்ணீரில் ‘எல்லாமும்’ கரைந்தது அறிந்து நிம்மதி! ‘அந்தத் தெருக்காரி’ இவளுக்கு சூபர்வைசராக இருப்பதில் அதை விட நிம்மதி. பாராட்டுகள் மேம்!
நம்பிக்கை கதை… அருமை அக்கா
அருமையான எழுத்து நடை! மனதைக் குளிர வைக்கும் கதை! பாடல்களை உபயோகித்த விதம் இனிமையாக இருந்தது!
பிரமாதமான கதைக்கரு. மாடு இளைத்தாலும் கொம்பு இளைக்காது என்பது போல இறுதி மூச்சு வரை ஊர்ப்பெருமை, தெருப்பெருமை, குலப்பெருமை, கோத்திரப்பெருமை தூக்கிச் சுமக்கும் மனிதர்களுக்கு செவிட்டிலறைந்தாற்போன்ற முடிவு. பாடல்களின் வழி பாமர வாழ்க்கை நகர்வதையும் படிப்பும் பணியும் பெண்களுக்கு எத்தகைய பலத்தைக் கொடுக்கிறது என்பதையும் மிக அழகாக கதையினூடே உணர்த்தியிருப்பது சிறப்பு. சரளமான எழுத்துநடை. பாராட்டுகள் சுகந்தி.
மிக அருமையான கதை. வாழ்த்துகள்
கதை எழுத்து சுவாரசியமாக, வேகமாக இழுத்துச் செல்கிறது.வாழ்த்துகள். சினிமாப் பாடலும், நடிகை உருவத்தோடு ஒப்பிடுதலும் கதையின் கனத்தைக் குறைக்கிறது. இன்னும் நெருக்கமாக கக்கூஸ் கழுவும் மனதையும்,கணவன் இறக்கும் தருணத்தையும் மையப் படுத்தி கதையை எழுதலாம்.
அதிகமான வரிகள் மனதை உரய செய்தது…. ஒரு தாயின் கரிசனத்டன் பேசும் சூப்பர் விசர் மாதிரி எல்லாரும் நடந்தால்……. நன்றி மேடம்…. வாழ்த்துக்கள்…..
“டிவி ஆபிசு” அருமையான, எளிமையான நடை..
வாழ்த்துகள் சகோதரி நாச்சியாள் சுகந்தி..
வெகு யதார்த்தமாக இருக்கிறது. சரளமான, எளிய நடை. நிகழ்வுகளும், மங்களத்தின் கவலையும், அம்பிகாவின் தரிசனமும், அன்பும், கண்ணாயிரம் போன்றோரின் உதவும் மனப் பான்மையும் , பஸ் பிரமாணமும் பாடல்களும் மனதை நெகிழ்த்திவிட்டன. அந்நியோன்யமான உணர்வுகளை மனதில் உண்டாக்கும் அழகான கதை.
கதை அருமை சுகந்தி…முக்கியமாக அந்தந்த சந்தர்ப்பத்துக்கேற்ற பாடல் வரிகள் என்றும் என் நினைவில்….வாழ்த்துக்கள் எனதருமைத் தோழி…
காலம் இன்னும் வேகமாய் மாறட்டும். வெற்று பெருமிதங்கள் யதார்த்த வாழ்க்கைக்கு உதவாது.
தேர்ந்தெடுக்கப்பட்ட பாடல்கள் நினைவிற்கு ஏற்றார் போல் அத்தனையும் இளையராசாவினதாக ,
கக்கூஸ் கழுவும் வேலை என்பதை ஏன் என்ற எண்ணம் இல்லாமல் இருக்க வேண்டியதை கக்கூஸ் கதையின் நாயகியும் பணி மேற்பார்வையாளரும் நியாபகப் படுத்திக் கொள்வது ஏதற்கு . பணிகளில் கக்கூஷ் கழுவுதல் என்பது பொதுமைப்பட்டுவிட்டது என்று கூறிடவா . கணவரின் இறப்பு குழந்தைகள் வயது படிப்பு இவை பற்றி ஆகச் சிறிய கூறுதல் கொண்ட கதையின் வார்த்தைகளில் பாடல்கள் பணி குறித்து நிறையக் குறிப்பிடுவது பாடல்களின் பக்கமும் ஏன் அந்தப் பணிக்கு என்ன என்ற எண்ணத்தின் பக்கமும் சாய்க்கிறது வாசகனாய் என்னை . தனித்த தாயாக குழந்தகைள் தமை அதிலும் குறிப்பாகத் தன் பெண் குழந்தையை அலுவலகத்தின் வாசலில் கண்ட மேற்பார்வையாளர் போல் காணவிரும்புகையிலும் ( இங்கே வாசலில் கண்ட மகளை இப்படி இவர் போல் ஆக்கிட எண்ணிய பெண் கூட ஹவுஸ்கீப்பிங் மேற்பார்வையாளர் இங்கும் பார்க்கும் பணி குறித்த மேன்மை தாழ்ச்சி பற்றிப் பேசப்படுகிறது ) கொள்ளும் குடும்ப நிலை குழந்தைகள் முன்னேற்றத்திற்காக பாடுபடப் பட்டணம் கிளம்பிய நைட்டி அணியாத பாமரகிராமத்தின் தாய் தன் உணர்வுகள் தமைத் தள்ளி நின்று கதையாசிரியர் வாழ்வின் படிகளில் மேல் நின்று கண்டு விவரிப்பது போல் அமைந்துள்ளது . சில வரிகளில் சொல்லிய ஒரு பெண்ணது வாழ்வின் நிலையை பயணம் பாடல் இளையராசா பணிகளில் ஏற்றத் தாழ்வு இல்லாமை கணவன் வீட்டினருகு உள்ள உடன் பணியாற்றக் கூடிய பெண் ஊர் என்று நிறைந்திருக்கிறது சில வரிகானாலும் கதையின் நாயகி தம் நிலை குறித்து எவ்வித மனவுணர்வும் எழவில்லை
நாம் வாழறதே பிள்ளைங்களுக்காததானே!
சரளமான நடை!Finishing touch superb!
வாழ்த்துக்கள் சுகந்தி…
அழகான கதை.❤️
மொழி நடை இயல்பாக இருந்தது.
இன்னும் நிறைய எழுதுங்கள்…!!