உயரே ஒரு நிலம்

நான் சிறுமியாக இருந்த போது ஒரு முறையும், பின் வளர்ந்த பருவத்திலுமென இருமுறை எனது வாழ்க்கையில் பேராசிரியர் பைன் அவர்களின் உதவியை  நாடிச் சென்றிருக்கிறேன்.எனது பதினோராவது வயதில், விவரிக்க இயலாததொரு மன அழுத்தத்தால் பீடிக்கப் பட்டேன். 1967 ஆம் ஆண்டின் வசந்த காலத்தில்  காரணங்களேதுமின்றி அது சட்டென நிகழ்ந்தது. மரத்திலிருந்து நீங்கிப் பட்சிகள் பறந்து செல்வதைப் போல, எனது மகிழ்ச்சிகளனைத்தும் என்னிடமிருந்து நீங்கிச் சென்று விட்டது.

அதுவரை, நல்ல ஆரோக்கியமான, வெகு சாதாரணமான பெண்ணாகத்தான் இருந்தேன். எனது பெற்றோர்கள் எந்த விதத்திலும் எனக்கு இன்னல் விளைவிக்கவில்லை. சாஸ்கேச்சுவான்* சமவெளியின் வாழ்க்கையில் எளிய, அமைதியான பால்யப் பருவத்தையே அவர்கள் எனக்கு அளித்திருந்தார்கள். சற்று வளர்ந்த தோற்றமுடைய, சுயநலமற்ற இரு நெருங்கிய சினேகிதிகள் இருந்தார்கள். பதின் பருவ வயதை அடையும் தருவாயிலிருந்த அவர்கள் இருவரும், சில வேளைகளில் துவண்டு போகுமளவுக்குச் சிரித்துச் சிரித்து மாய்வார்கள். செஸ்ட் என்ற பெயர் கொண்ட எனது செல்ல நாய்  பின்னிரவுகளில், மனித முகங்கள் கொண்ட வௌவால்கள், துடித்துக் கொண்டிருக்கும் பறவைகள், குற்றுயிராக மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் எலிகள் போன்றவற்றையெல்லாம் கவ்விக் கொண்டு வந்து என்னிடம் காட்டும்.

என் பெற்றோர்களுக்கு என்னுடைய துயர நிலையைக் காணச் சகிக்கவில்லை. என்னைப் பார்ப்பதற்கே பயந்து போனவர்களைப் போல இருந்தார்கள். உணவு மேசையில் நிலவும் ஆழ்ந்த அமைதியைத் தாள முடியாமல் சில சமயம் நானே அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முற்பட்டதுண்டு. நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று சொல்லும் போதே, என் குரல் உடைந்து, பாவனைகள் சிதைந்து முகம் வாடிப் போய் விடும். அதன் பின் கண்களைப் பொத்திக் கொண்டு அழுவேன்.

ஒரு நாள் இரவு என் பெற்றோர்கள் என் அறைக்கு வந்தார்கள். படுக்கையில் அமர்ந்தவாறு “கண்ணே” என அப்பா பேசத் துவங்கினார். “இப்போதெல்லாம் உன் அம்மாவும் நானும் உன்னைப் பற்றியேதான் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். நாங்கள் என்ன நினைக்கிறோம் என்றால், நீ யாரிடமாவது பேச வேண்டும், அதாவது, உளவியல் சிகிச்சை நிபுணரைச் சந்தித்து உன்னை வருத்திக் கொண்டிருக்கும் விஷயத்தை அவரிடம் மனம் விட்டுப் பேசுவது பற்றி நீ யோசிக்கலாமே?” என் அப்பா ஒரு புவியியல் வல்லுனர். மிக நேர்மையான, உற்சாகமான ,பரந்த மனப்பான்மையுடையவர். ஓர் உளவியல் நிபுணர் என் பிரச்சினைக்குத் தீர்வு சொல்ல முடியும் என்று எனக்குத் தோன்றவில்லை, ஆனால் என் அப்பா மிகவும் நம்பிக்கையுடன் தெரிந்தார். அவருடைய நீண்ட கரங்களால், படுக்கை விரிப்பின் சுருக்கங்களை நீவிக் கொண்டிருந்தார்.

மூன்று திங்களுக்குப் பின் , மனித நேயத்துறை கட்டிடத்தின் நான்காம் தளத்தில் உள்ள ஒரு அலுவலகத்தின் முன் காத்திருந்தோம். மருத்துவ ரீதியான மன நல ஆலோசகரை அணுகாமல் என் அப்பா பணி புரியும் பல்கலைக் கழகத்தின் குழந்தைகளுக்கான உளவியல் பேராசியருடன் தான் எனது சந்திப்பு ஏற்பாடாகியிருந்தது.

கதவைத் தட்டிய போது, உள்ளேயிருந்து ”வாருங்கள்..உள்ளே..வருங்கள் ” என்று ராகத்தோடு ஒரு குரல் எங்களை வரவேற்றது .நாங்கள் வருவது நிச்சயம் அவருக்குத் தெரிந்திருக்கும், ஆனால் எங்களை மிக அறிந்தவர் போலவும், என்னையும் அப்பாவையும் ஏதோ சிறு பிள்ளைகள் போலவும் அவர் பாவித்தது ஏனோ சற்று வினோதமாக இருந்தது. டெனிம் மேல்சட்டை அணிந்து, பொன்னிறக் கேசம் தலையின் பின்புறமாகப் படிந்திருக்க ரோமமுள்ள சிறு பிராணி போன்ற தோற்றத்துடன் அமர்ந்திருந்தார். ஆச்சர்யம் நிரம்பிய பார்வையுடன் பார்த்தார், பின் அந்த பாவனை நிரந்தரமாக அவர் முகத்தில் தங்கி விட்டது. இருக்கையிலிருந்து எழாமல் கையை மட்டும் அசைத்தார். அறையின் மூலையிலிருந்த கூண்டிலிருந்து மூன்று பறவைகள் கீச்சிட்டன. மேசையின் அருகில் சென்று கையை மேசையின் மீது வைத்து, “பீட்டர் பெர்ஜின்” என்று தன் பெயரைச் சொன்னார் அப்பா.

“பேராசிரியர் ரோலண்ட் போலண்ட் பைன்” என்று சொன்னவர் என்னைப் பார்த்து, ஹாய் குட்டிப் பெண்ணே என்றார்.

அதன் பிறகு, என்னை அவரிடம் தனியாக விட்டுச் சென்றார் அப்பா.  அவ்வப்போது இப்படிக் குழந்தைத்தனமாக ஏதாவது சொன்னால் தான் , சிறுவர்களும், சக சிறுவரிடம் பேசுவது போலப் பதிலளிப்பார்கள் என்பதே  பேராசிரியரின் எண்ணமாக இருக்கலாம் என்று  என்னைப் போலவே அப்பாவும் நினைத்திருக்கக் கூடும். சற்று நேரம் நானும், பேராசிரியரும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தோம். என்ன சொல்வதென்று எனக்கும் தெரியவில்லை, அவரும் வாயைத் திறக்கவில்லை. அவரை நேர் கொள்வது மிக எளிதாக இருந்தது. எந்த வித சங்கடமுமின்றி ஒரு விலங்கை முறைத்துப் பார்ப்பது போல அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.

“ ம்ம், நல்லது, ஒருவழியாக ஆரம்பித்தார்.”

நான் தலையசைத்தேன்

”எப்படி இருக்கிறாய் மார்கிட்?’

”நன்றாக இருக்கிறேன்”

”நலமாக இருப்பதாக உணர்கிறாயா?”

“ஆமாம், அப்படித்தான் உணர்கிறேன்”

“இன்று பள்ளிக்குப் போனாயா?”

“ஆமாம்”

“உனக்கு உன் ஆசிரியரைப் பிடிக்குமா?”

“அவ்வளவாக இல்லை”

“அவரை நீ வெறுக்கிறாயா?”

“அவர் இல்லை, அவள்”

“அவளை நீ வெறுக்கிறாயா?”

“இல்லை”

“நீ ஏன் இங்கு வந்திருக்கிறாய் மார்கிட்?’

“எனக்குத் தெரியவில்லை”

“உன் வீட்டில் எல்லாம் சரியாகத் தானே உள்ளது?”

“ஆமாம்”

“உன் அப்பாவை உனக்குப் பிடிக்குமா?”

“ஆமாம்”

”உன் அம்மாவைப் பிடிக்குமா?” அவரின் இடது விழியோரத்தில் துவங்கிக் கழுத்து வரை ஒரு நீண்ட நரம்பு நெளிவு ஏற்பட்டது.

“ஆமாம்”

”அவர் பருமனானவரா?”

”மன்னிக்கவும், என்ன சொல்கிறீர்கள்?”

“என்னை மன்னித்துக் கொள் மார்கிட். உன் அம்மா உன் மீது அன்பு வைத்திருக்கிறாரா என்று கேட்டேன்”

“ஆமாம்”

“அவர் உன் அப்பா மீது அன்பு வைத்திருக்கிறாரா?”

“ நான் சற்று இடைவெளி எடுத்துக் கொண்டேன். ’ஆமாம்”

“உன் அப்பா உன் அம்மாவை விரும்புகிறாரா?

”அப்படித்தான் நினைக்கிறேன்”

“மார்கிட், என்ன விஷயம்?

“ஒன்றுமில்லை, என் பெற்றோர்களைப் பற்றி ஏன் இவ்வளவு பேசுகிறோம் எனப் புரியவில்லை”

“அவர்கள் ஏன் ஒருவரையொருவர் விரும்பவில்லை?”

“அவர்கள் விரும்புகிறார்கள், அப்படித்தானே சொன்னேன்?”

“நீ ஏன் இதைப் பற்றிப் பேச மாட்டேனென்கிறாய்?”

“ஏனென்றால் அதைப் பற்றிப் பேச எதுவுமேயில்லை”

“அதைப் பற்றி நீ பேசலாம், அவர்கள் இருவரும் ஒருவருக்கொருவர் மனதைப் புண்படுத்திக் கொள்கிறார்களா? நிறையப் பெண்களின் பெற்றோர் அப்படித்தான் செய்கிறார்கள். ”

“இல்லை, அவர்கள் அப்படி இல்லை”

“அவர்களில் ஒருவருக்கு முறையற்ற தொடர்பு இருக்கலாமல்லவா?”

நான் மௌனமாக இருந்தேன்.

“இருக்கலாமல்லவா?” மீண்டும் கேட்டார்.

“இருக்கலாம். நான் சொன்னேன்.

“எது மார்கிட்? குழந்தை போலத் தோற்றமளிக்கும் அந்த முகம் யாருடையது மார்கிட்?

அவரையே வெறித்துப் பார்த்தேன்.

மீண்டுமொரு சுருக்கம் ஓடியது அவர் முகத்தில். மன்னித்துக் கொள் மார்கிட், உன் பெற்றோரில் யாருக்கு முறையற்ற தொடர்பு இருக்கிறது எனக் கேட்டேன்.”

“என் அப்பாவிற்குத் தான், ஆனால் அது எவ்வளவு உண்மையென்று எனக்குத் தெரியவில்லை. சில மாதங்களுக்கு முன் அந்த உறவைப் பற்றித் தான் சிந்திப்பதாக என் அம்மாவிடம் அவர் சொல்லிக் கொண்டிருந்தைக் கேட்டேன்.”

”அப்படி இருக்கலாமென்று நீ நினைக்கிறாயா?”

”தெரியவில்லை, சில வாரங்களுக்கு முன் தொலை பேசியை எடுத்த போது, அப்பாவுடன் ஒரு பெண் பேசிக் கொண்டிருப்பது காதில் விழுந்தது. அவள் தன் மார்புகளை நீக்க வேண்டுமென்றும் அதனால் வாழ்வில் ஏதாவது வித்தியாசம் வந்து விடுமா என்றும் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“உனக்கு எத்தனை கடினம் அது. குட்டிப் பெண்ணுக்குத்தான் எவ்வளவு துயரம் .” மீண்டுமொரு நரம்பு முடிச்சு ஒரு  பிளவு போல அவர் முகத்தில் தோன்றியது.

“மார்கிட், எனது பால்யத்தில் நடந்த ஒரு சம்பத்தை உன்னிடம் பகிர்ந்து கொள்ளலாமா?”

அந்தக் கேள்வியால் நான் கவலையுற்ற போதும், சரி என்றேன்.

“நான் சிறுவனாக இருந்த போது என் அன்னையை மிகவும் நேசித்தேன். அவர் மிகவும் பருமனானவர். அப்புறம் ஒரு நாள், ஓஓஓ!  அவர் இறந்து போனார். கைத்துப்பாக்கியின் குழல் போல ஆட்காட்டி விரலை தலையின் மீது வைத்துக் கொண்டு எதுவும் பேசாமல் சில வினாடிகள் என்னையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார். சொல்லப் போனால், அது என் அம்மா இல்லை எனலாம், அவர் வயதொத்த ஒரு பெண்மணி, சாலையில் என்னை நோக்கி நடந்து கொண்டிருந்தார். அங்கு ஓடி வந்த ஒருவன் அவளைச் சுட்டு விட்டான். நான் நிலைகுலைந்து அப்படியே அந்தப் பெண்மணியின் மீது விழுந்து விட்டேன். என்னையும் அவன் சுட்டு விடக் கூடும் என்பதைப் பற்றியெல்லாம் நான் கவலைப் படவில்லை. என் அன்னையின் மரணம் வாழ்நாள் முழுவதும் என்னை அச்சப் படுத்தி இருக்கலாம். ஆனால் இல்லை, அந்தக் கணத்திலிருந்து இந்தக் கணத்திற்கு, அந்த நிலையிலிருந்து இந்த இடத்திற்கு நான் எப்படி மீண்டு வந்தேன் என்று தெரியுமா?

இல்லையென்று தலையசைத்தேன். “எப்படி?”

அந்த சூழலிலிருந்து மேலெழுந்து வந்தேன். உண்மையாகவே எழும்பினேன். என் உடலிலிருந்து மனது வெளியேறுவது போல உணர்ந்தேன். குனிந்து , ரத்தம் வழிய விழுந்து கிடக்கும் அந்தப் பெண்ணைச் சலனமற்று நோக்கிக் கொண்டிருந்தேன். மிக அமைதியான குரலில் எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். ரோலண்ட் என்னும் நியூ ஓர்லியன்ஸ் நகரத்துச் சிறுவன், அந்தக் குட்டிப் பையன் , என்றேனும் ஒரு நாள் அவன் அன்னை இறக்கத்தான் போகிறாள் என்று தெளிவாகப் புரிந்து கொண்டான்.

அவர் என்னைத் தீர்க்கமாகப் பார்த்தவாறிருக்க, கூண்டிலிருந்த அவரது பறவைகள் மிகவும் உற்சாகத்துடன் சிறகடித்தன..அப்போது  ஏதோ சொல்ல வேண்டும் என எனக்குத் தோன்றியது. “அற்புதம்”

அது போலச் செய்ய உனக்குப் பரிந்துரைக்கிறேன் மார்கிட். ஒவ்வொரு சூழ்நிலையிலிருந்தும் ஒரு தொலைவு உண்டு. வளர்வதும் பக்குவப்படுவதும் புதிய கண்ணோட்டத்தை அடைவதுதான். சில வேளைகளில் சற்றே உயரத் தாவினால் போதுமானது, நிலத்திலிருந்து ஓரடி மேலே..சில வேளைகளில் வெகு தொலைவுக்கு உயர வேண்டியிருக்கும். இங்கிருந்து சூரியனை நோக்கிச் செல்லும் பாதையில், குழந்தை முகங்கள் கால் பதித்துச் செல்லவென்றே மெல்லிய சில படிம நிலங்கள், சில பிடிமாங்கள்ன உண்டு மார்கிட். நான் சொல்வது புரிகிறதா உனக்கு?

“ஆம்”

“உயரே ஒரு மிதவை நிலம், சமவெளிகள், வரைபட நிலங்கள்”

“மன்னிக்கவும்”

என்னை மன்னித்துக் கொள் மார்கிட். எனக்குப் பல மொழிகள் தெரியுமாகையால், அவற்றை அவ்வப்போது தேவையற்ற இடத்தில் பிரயோகப்படுத்தி விடுவேன்.”

அமர்வின் முடிவில், மீண்டும் எப்போது வர வேண்டும் என நான் கேட்ட போது,  மற்றுமொரு முறை சந்திக்கும் தேவையே  ஏற்படாது என்றும், பொதுவாக அவர் சிகிச்சை முதல் முறையிலேயே மாற்றங்கள் ஏற்படுத்தி விடுமென்றும் நம்பிக்கையுடன் பதிலுரைத்தார்.

அவர் சொன்னது எதுவும் எனக்கு அவ்வளவாக விளங்கவில்லை. நமக்குப் புரியாவிட்டாலும் கூட, உடலுக்குப் பலன் தரும் மருத்துவ சிகிச்சைப் போல அவர் சொன்ன கோட்பாடு எனக்கு பயனளிப்பதாகத்தான் தோன்றியது. அன்று மாலை எனது பெற்றோருடன் இரவு உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தேன். வழக்கம் போலத் துவங்கியது இரவு உணவு. என் உணவுத் தட்டை வெறித்துப் பார்க்கையில், எந்த நேரத்திலும் நான் இரண்டாக உடைந்து விடப் போகிறேன் என்னும் அச்சத்தில் என் பெற்றோர் என்னை வெறித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் பாதி உணவு உண்டு கொண்டிருக்கும் போதே மிக இலகுவாக உணர்ந்தேன். பயந்தது போல் எதுவுமே நடக்கவில்லை. ஆனால், அந்த இடத்திலிருந்து சற்றே என்னை விலக்கி உயர நின்று பார்க்க முடிந்தது. என்னுடைய சிறிய குடும்பத்தைப் பார்த்தேன். அப்பாவையும், அவர் முகத்திலிருந்த ஆழ்ந்த கவலையின் ரேகைகளையும் கவனித்தேன். அவருக்கு இந்தத் திருமணத்திற்கு வெளியே ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளது என்பதையும், என் அம்மாவுக்கும், அந்தப் பெண்ணிற்கும் இடையில் சிக்கித் தவிக்கிறார் என்பதையும் உடனடியாகக் கண்டு கொண்டேன். மேலேயிருந்து என் அழகான அம்மாவைப் பார்த்த போது, அந்த மற்றொரு பெண்ணை அவள் எவ்வளவு வெறுப்பார் எனவும், ஆனால், அவள் மிகுந்த நோய் வாய்பட்டிருப்பதால் அவள் பால் இரக்கமும் கொண்டவளாக இருப்பதைக் காண முடிந்தது. முதிர்ந்த பருவத்தினராக இருப்பதுதான் எவ்வளவு சிக்கலானது, எவ்வளவு துயர் மிகுந்தது, அப்போது, சுவாசித்துக் கொண்டும், உணவருந்திக் கொண்டும், பக்குவமடைவதற்காக சிரமப்பட்டுக் கொண்டும் இருந்த என் உடலுக்குள் மீண்டும் நுழைந்து கொள்ளும் ஏக்கம் என்னுள் எழுந்தது.  என் உடலில் நுழைந்து கொண்ட பின், அடுத்த நொடியில் அம்மாவையும் அப்பாவையும் அணைத்துக் கொண்டேன். அது மன அழுத்தமுள்ள எவரும் தைரியமாகச் செய்ய முடியாத மிக தன்னிச்சையான செயல் ஆகும்.


பேராசிரியர் பைன் அவர்களுடனான முதல் சந்திப்புக்கும், இரண்டாம் சந்திப்புக்கும் இடைப்பட்ட 1967 லில் இருந்து 1987ஆம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட இருபதாண்டு காலத்தில், நான் அதே நகரத்தில் தான் வசித்து வந்தேன். மாஸீ பள்ளியிலும், அதன் பின், லீபோல்டஸ் மேல் நிலைப் பள்ளியிலிருந்தும் தேர்ச்சியடைந்த பின், சாஸ்கேச்சுவான் பல்கலை கழகத்தில் உயிரியல் பட்டதாரிப் படிப்பு முடித்து வெளி வந்தேன்.  வளர்ந்து பெரியவளாகிய பின், மண் ஆய்வு ஆலோசகராக பணி புரியும் போது அந்தப் பிரதேசத்தின் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட சிறு நகரங்களுக்கு படுக்கை வசதியுடன் கூடிய லாரியில் பயணம் செய்வேன். வெம்மையான இரவுகளில் தேவைப்படும் போதெல்லாம் அதில் உறங்கிக் கொள்வேன்.

சில வேளைகளில் மன அழுத்தம் ஏற்படுவதுண்டு. ஆனால் அவை ஒரு போதும் என்னை மூழ்கடிக்கவில்லை.  பேராசியர் பைன் உரைத்த கடுமையான பயிற்சிகளையும், உத்திகளையும் மேற்கொள்ளும் அளவு எனது வாழ்வு இருக்கவில்லை எனக் கூறலாம். ஏனென்றால், துக்க நிழ்வுகள் ஏதுமின்றி எனது வாழ்வு சீராக ஓடிக் கொண்டிருந்தது. சில வேளைகளில் மன அழுத்தங்கள் எங்கிருந்தோ சட்டென சூழ்ந்து விடும். மதிய நேரத்தில், களத்தில் நின்று கொண்டிருக்கையில் சட்டென விளங்காததொரு இருண்மை கவிந்து கொள்ளும்.. ஆனால், அந்த ”உயரும் நிலை” எப்போதும் துணையிருக்கும். ஒன்று, இரண்டு அல்லது மூன்று அடிகள் மேலெழும்பி வாழ்க்கை எவ்வளவு அழகானது என்று உணர்ந்து கொள்வேன். மேலிருந்து காண்கையில் எனது பணி சிறப்பானதாகவும், தனித்துவம் மிக்கதாகவும் தெரியும். அங்கே சுட்டெரிக்கும் கதிரொளியில், மஞ்சள் நிலப்பரப்பில் மண்டியிட்டு அமர்ந்து நிலத்தின் பண்புகளை ஆராய்ந்து கொண்டிருப்பேன். அதன் பின் அழகிய சின்னஞ் சிறு அணிகலன்கள் போல இருக்கும் உபகரணங்களின் துணையோடு மண்ணின் அசுத்தங்களில் நைட்ரஜன், பாஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் சுவடு இருக்கிறதா என்று பரிசோதனை செய்து கொண்டிருப்பேன்.

1985 ஆம் ஆண்டின் மத்தியில், ஓர் இரவில், என் வருங்காலக் கணவன் ரெஸ்வான் பலெஸ்கு, என்னும் ரொமானிய நாட்டுப் பொய்யனுக்கு இந்த நுணுக்கங்களைப் பற்றி விளக்கிச் சொல்லும் தவறைச் செய்தேன். அப்போது அவனுடன் இரண்டு மாதப் பழக்கம் மட்டுமே இருந்தது. இருப்பினும் எங்களுக்குத் திருமண நிச்சயதார்த்தம் நடந்து முடிந்திருந்தது. எங்கள் அடுக்ககக் குடியிருப்பின் சிறிய பால்கனியில் நின்று கொண்டிருந்தோம். பைஜாமாவும் அதன் மேல் குளிருக்காக கோட்டும் அணிந்திருந்தான். புகைத்துக் கொண்டே, அமெரிக்காவைப் பற்றி வசை பாடிக் கொண்டிருந்தான்.

“இந்த இடம் மிக விசித்திரமாகவும் சிறுபிள்ளைத் தனமாகவும் உள்ளது. உங்களுக்கு அசலான பிரச்சனைகள் என்று எதுவும் இல்லை, ஆனாலும், அதற்கு எவ்வளவு கவனமும், முக்கியத்துவமும் கொடுக்கிறீர்கள். தீவிரமாக அலசி ஆராய்ந்து பேசப்பட வேண்டிய மாபெரும் கலை அல்லது இலக்கியம் போல  தங்கள் உணர்வுகளைப் பற்றி மக்கள் விவாதம் செய்கிறார்கள். எங்கள் நாட்டில், மனிதர்கள் நேசிக்கிறார்கள் அல்லது வெறுக்கிறார்கள். மனிதப் படைப்பென்பது பூடகமானது என்பதை அறிந்து கொண்டு அதனோடு இயைந்து வாழ்கிறார்கள். அவர்கள் பிரச்சனைகள் அசலானவை. நீ சாப்பிடவில்லையா, அது பிரச்சினை உனக்குக் கால்கள் இல்லையா, அது சிக்கல். நீ மகிழ்ச்சியாக இல்லையென்றால், அதைப் பற்றிப் பேசக் கூடிய அளவுக்கு அது பெரிய பிரச்சனை இல்லை.

“அதுவும் பிரச்சனை என்று நான் நினைக்கிறேன்”

“சரியாகச் சொன்னாய், ஏனென்றால் நீ அமெரிக்காவைச் சேர்ந்தவள். உனக்குப் பெரிய விஷயங்களெல்லாம் சின்னதாகத் தெரிகிறது, சின்ன விஷயங்கள் எல்லாம் பெரியதாகவும் தெரிகிறது” எப்போதும் பால்கனியில் நின்று கொண்டு அமெரிக்காவைப் பற்றிய தன் உறுதியான எண்ணத்தை இப்படித்தான் சத்தமாக அறிவிப்பான் ரெஸ்வான்.

”ஒரு மில்லியன் தொகை பந்தயம் கட்டுவேன். புகையை ஊதிக் கொண்டே சொன்னான் ரெஸ்வான்,” ஒரு வாரத்தில் எத்தனை மணி நேரம் அமெரிக்கர்கள் இந்த  சிகிச்சை மையத்தில் நேரம் செலவு  செய்கிறார்களோ, அதே அளவு நேரம் ரொமானியர்கள் ஒரு ரொட்டித் துண்டுக்காக வரிசையில் காத்து நிற்கிறார்கள். அதுவும் எதற்காகப் போவீர்கள்? எதற்குமில்லை, இருக்கும் பிரச்சனையை பெரிதாக்குவதற்கு..பகல் முழுவதும் இதைப் பற்றியே பேசுவார்கள், அப்பொழுதுதான் இரவில் அது மேலும் அதிகமாகி விடும்.”

“நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன். மனிதர்கள் பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதே அதிலிருந்து மீள்வதற்குத்தான், அதிலிருந்து விடுபடுவதற்குத்தான். நானும் ஒரு முறை ஒரு சிகிச்சைக்குப் போய் இருக்கிறேன், அது எனக்கு உதவியாக இருந்தது.

“நீயா? ஒரு பக்கப் புருவத்தை வளைத்தவாறு, சிகரெட்டை மீண்டும் ஒரு இழுப்பு இழுத்தான்.

“ஆமாம், பதினொரு வயதில்”

“பதினோரு வயது? அந்த வயதில் என்ன பிரச்சனை இருக்க முடியும்?”

‘எனக்கு ஏதோ மன அமைதி இல்லை. என் பெற்றோர்களுக்கு விவாகரத்து ஆகவிருந்தது. அந்த நேரத்தில் என் அப்பா வீட்டை விட்டு வெளியேறும் முடிவில் இருந்தாரென்று சொல்ல முடியும்.”

“அப்பா வீட்டை விட்டு நிரந்தரமாகக் கிளம்பிப் போகையில் வரும் சரியான உணர்வுதானே அது? துக்கம்-வருத்தம்- எல்லாமே? ஒரு மன நல நிபுணர் உன் அப்பாவை வீட்டிற்குத் திரும்ப அழைத்து வரவா முடியும்?”

“முடியாது தான், ஆனால் அந்த உணர்வை எப்படிக் கையாள வேண்டுமென்று அவர் எனக்கு வழிமுறை சொன்னார்”

”அது என்ன வழி? எனக்குத் தெரிந்து கொள்ளணும் போல இருக்கு”

“ம்ம், அதாவது அந்த நிலையிலிருந்து உன்னைப் பிரித்து விலக்கிக் கொள்வது ”

“உன்னுடைய சொந்த வாழ்க்கையிலிருந்து நீ எப்படிப் பிரிந்து போக முடியும்?”

”அந்த நிலைமையிலிருந்து சற்று உயர எழும்பிப் பார்க்கும் போது பாரபட்சமில்லாமல் சில கண்ணோட்டம் கிடைக்கும்”

“ஆனால் இது சரியானதென்று நீ நினைக்கிறாயா? உனக்கு உண்மையாகவே பிரச்சனை என்றால் அதிலிருந்து விலகி உயர மிதப்பாயா? ஒரு அப்பா பிரிந்து போகும் போது குழந்தைக்குத் துக்கம் ஏற்படுகிறது. அது எனக்கு சரியாகப் படுகிறது. இந்த உயரப் பறப்பது, மிதப்பது எல்லாம்தான் சிக்கலாகத் தெரிகிறது. சொல்லப் போனால் இதுதான் அமெரிக்காவின் பிரச்சினை. எனது நாட்டில் என் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் பசியிலோ, குளிரிலோ இருந்தால் அதிலிருந்து அவர்கள் நீங்கி, உயரப் பறக்க வேண்டுமென்று சொல்ல முடியாது. அவர்களைப் பார்த்து, கவலைப் படாதீர்கள், சினிமாவுக்குச் செல்லுங்கள், இதோ பத்து டாலர் பணம், போய் இனிப்பு வாங்கிக் கொள்ளுங்கள், உங்கள் சிக்கல்களிலிருந்து கொஞ்சம் மேலே வாருங்கள் என்று என்னால் சொல்லவே முடியாது.

“நான் அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை. அதாவது நீ விலகி நிற்க வேண்டும். உன் மனம் உன் உடலைச் சுற்றிக் கொண்டிருக்கும், அப்போது அந்த சூழலை அதை விட மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்க்கலாம்.” இதற்கும் மேலே விளக்கம் சொல்லச் சொன்னால் நான் பைத்தியம் என்றுதான் எண்ணத் தோன்றும்.

“ஓ, இதுதானா அது?  உன் பதினோரு வயது மன நல சிகிச்சை நிபுணர் சொல்லிக் கொடுத்தது? உடலிலிலிருந்து மனதைப் பிரித்து புது மனவியாதியை உருவாக்குவது.. இந்த சிகிச்சை உன் பிரச்சினைகளுக்கு முடிவு தரவில்லை, மாறாக எப்படி பைத்தியமாவது என்று சொல்லிக் கொடுத்திருக்கிறது.”

ஆனால், நான் ஏற்கெனவே, அந்த இடத்திலிருந்து நீங்கி, வீட்டின் கூரை உயரத்திற்குச் சென்று, அங்கிருந்த படியே நடப்பதைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அவள், மார்கிட் என்னும் இருபத்தொன்பது வயதுப் பெண் அங்கே நிற்கிறாள். ரொமானிய நாட்டின் கடும் அரசியல் சூழலிருந்து தப்பியோடி ,ஆஸ்திரிய அகதி முகாமில் அடைக்கலமாகி, பின் ஒரு வருடம் கழித்து அங்கிருந்து  ரெஜினா ,சாஸ்கேச்சுவான் சமவெளியை அடைந்து, இன்று  நிலவொளியில் பால்கனியில் நின்று கொண்டு, மொத்த அமெரிக்காவின் மனப்போக்கையும் அவள்தான் உள்ளடக்கியவள் போல எண்ணிச் சீண்டிய படி அவளிடம் பேசிக் கொண்டிருக்கும் ரெஸ்வான் என்னும் ரொமானியனிடம்,   அந்தப் பெண் மிகுந்த காதல் வயப்பட்டிருக்கிறாள்.


ல்கலைக் கழகத்தில் என் அப்பாவின் ஆய்வுக் கூடத்தில்தான் ரெஸ்வானைச் சந்தித்தேன். அப்பாவைப் போலவே ரெஸ்வானும் புவியியல் வல்லுனர். உதவித் தொகையின் பொருட்டு, அவன் ஒரு முதுகலை பட்டதாரி மாணவனாக இருந்த போதும் அப்பா அவனைத் தனக்கு இணையாகவே நடத்தினார், ரொமேனியா அரசுக்காக பல வருடங்கள் புவியியல் வல்லுனராக அவன் பணி புரிந்திருந்ததும் ஒரு காரணம். அவனுடைய அப்பா ஆண்ட்ரி, இறக்கும் வரை ரொமேனிய அதிபர் சாவ்செஸ்கோவின்* நண்பராக இருந்தவர்.1985 ஆம் ஆண்டு அவன் தந்தை இறந்து போனார். அவரது கடைசித் தருணங்களில், மரணப் படுக்கையில், தந்தையின் கையைப் பிடித்துக் கொண்டு அமர்ந்திருந்தான் ரெஸ்வான். ஆனால் மகனும் தந்தையும் இருவருமே ஒருவரோடொருவர் பேச மறுத்து விட்டனர். ஏனென்றால் அப்போது சாவ்செஸ்கோவிற்கு விசுவாசமாக இருப்பதை ரெஸ்வான் நிறுத்தி விட்டான்.

அவனுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த இரு வருடங்களில், இரவில் எப்போதாவது விழித்துக் கொள்ளும் போது, இரவு விளக்கை அவன் பக்கமாக வளைத்து வைத்து, தன் மேசையின் முன் குனிந்திருப்பதைப் பார்ப்பாள். இரவுகளில் அவன் நீளமான கடிதங்கள் எழுதிக் கொண்டிருப்பான். சில ஆங்கிலத்திலும், சில ரொமேனிய மொழியிலும் எழுதப்பட்டிருக்கும். அவன் குடும்பத்தைக் கனடா நாட்டுக்கு வரவழைப்பதற்காக உதவி வேண்டி, பல அரசு அதிகாரிகளுக்கு ஆங்கிலத்தில் எழுதுவதாகவும். அவனுடைய அத்தைகள், மாமாக்கள், அவர்கள் பிள்ளைகள் என்று பல உறவு முறைகளுக்கு ரொமேனிய மொழியில் கடிதம் எழுதுவதாகவும் சொல்வான். மிக வேகமாகவும் படபடப்புடனேயே எழுதுவான். நான் மெல்ல நடந்து பின்னாலிருந்து அவன் தோளைத் தொட்டால் திடுக்கிட்டு என்னைத் திரும்பிப் பார்ப்பதற்கு முன்பே, எழுதிக் கொண்டிருக்கும் காகிதத்தை மறுபக்கமாக உடனடியாக மடக்கிக் கொள்வான். முதலில், நீண்ட நாட்கள் அடக்குமுறை அரசில் வாழ்ந்த கடந்த கால அச்சத்தின் மீதமாகவே அந்த வழக்கத்தைச் சாதாரணமாகத்தான் எடுத்துக் கொண்டேன்.

சில வேளைகளில், தன் குடும்பத்தைக் கைதியாகவே வைத்திருக்கும் தன் நாட்டை மன்னிக்க முடியாது என்று சொல்வான். அவன் நகைச்சுவை என்று சொல்லும் இருண்ட, புதிர்க்கதைகள் யாவும் கண்ணியமற்ற, சிறுபிள்ளைத்தனமான செயல்களால் சாவ்செஸ்கோவின் மரணத்தில் முடியும் கதைகளாவே இருக்கும். அவர் தலை கழிவறையில் கிடப்பதாக, சாலையை சமதளமாக்கும் இயந்திரத்தால் அவர் உடல் தட்டையாக்கப் பட்டிருப்பதாகவும் பெரும்பாலும் இருக்கும். சில வேளைகளில், ட்ரான்ஸில்வேனியாவின் ஈரப் பனித் திவலைகளையும், நகரத்தின் தெருக்களுக்குக் கீழே இருக்கும் இருண்ட நிலத்தடிப் பாதைகளையும், அதன் இரு மருங்கிலும் முன்புறம் பிரச்சாரங்களாலும், உண்மையான புத்தகங்களால் நிறைந்திருக்கும் சிறிய, தூசி படிந்த உள்புற அறைகளைப் பற்றியும், சில வேளைகளில் தன் நாட்டைப் பற்றியும் மிகுந்த ஏக்கத்துடன் பேசுவான்.

இதே நோக்கில் தான் அமெரிக்காவை நேசிப்பதும் வெறுப்பதுவுமாக இருந்தான். பால்கனியில் இப்படிப் பேசிக் கொண்டு இருப்பவன் படுக்கைக்குத் திரும்பியவுடன், சுவரில் சாய்ந்து, அருகருகே அமர்ந்து உள் நாட்டு, வெளிநாட்டு செய்திகளைத் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருப்போம். தினமும் யாராவது ஒருவர் பிரதான மந்திரி ப்ரையன் மோல்ரோவ் பற்றி விமர்சித்துக் கொண்டே இருப்பார்கள். ரெஸ்வான் தினமும் இதைப் பார்ப்பான். ஒவ்வொரு இரவும் யாராவது ஒருவர் மாற்றி மாற்றி வந்து அவரை விமர்சனம் செய்தாலும், அவர்களை யாரும் ஒன்றும் செய்வதில்லை. இது அவனுக்கு மிகப் பிடிக்கும். சில வேளைகளில், டெட்ராய்ட் நகரிலிருந்து பெறப்பட்ட இணைப்பினால், ஐக்கிய அமெரிக்க நாட்டின் செய்திகளையும் பார்ப்போம். அதிபர் ரீகனைத் தூற்றிப் பேசுவதைப் பார்ப்பது ரெஸ்வானின் கண்களுக்குப் பெரிய விருந்தாக இருக்கும்,

“எனக்கு அவரை ரொம்பப் பிடித்துப் போனது” ஒரு இரவு என்னிடம் சொன்னான்.

“ரீகனா? அவரை உனக்குப் பிடிக்காதே?”

“ஆமாம், ஆனால் இப்போது அவரைப் பாரேன், “திரையில் ரீகன் கையசைப்பது தெரிந்தது. அவர் முகம் கனிவாகத் தெரிந்தது. கண்கள் எங்கோ வானத்தை நோக்கிப் பார்த்துக் கொண்டிருந்தது. யாருக்கோ கருணை புரிபவரைப் போன்றும், சற்றே கிறுக்குத்தனமான தாத்தா போலவும் காட்சியளித்தார்.

“நாள் பூராவும் அவரைக் கிண்டலடித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அவர் யாரையும் கொல்வதில்லை”

சில வேளைகளில் தன் வேலையில் விடுப்பு எடுத்துக் கொண்டு என்னுடன் களத்திற்கு வந்து விடுவான். வேனின் பின் பக்கம், திறந்த வெளியில் நின்று கொண்டு தன் மீது காற்று மோதுவதை அனுபவித்துக் கொண்டே பயணம் செய்வான். என் பணியின் அனைத்து நுணுக்கங்களையும் தெரிந்து கொள்ள விரும்புவான். சில விஷயங்களில் என்னை விட அதிகமாக அவனுக்குத் தெரிந்திருக்கும் மோசமான வடிகால் உள்ள நிலங்களைத் தொலைவிலிருந்து பார்த்தே கண்டுபிடித்து விடுவான். அதற்கான சான்றுகளாகத் தென்படும் நாணல் புதர்கள், புதினாச் செடிகள், நீண்ட கம்பி புற்கள், ஆற்றுப் பாலை போன்றவற்றை ஆர்வத்துடன் சுட்டிக் காட்டுவான்.

சாலையோரம், வீட்டோடு அமைந்திருக்கும் சிறிய உணவு விடுதியருகே மதிய உணவுக்காக வண்டியை நிறுத்தினோம். அங்குள்ள அனைத்து உணவு விடுதிகளும் உக்ரைன் பெண்களால் நடத்தப் படுகிறது. ஒவ்வொருவரும் ரெஸ்வான் மீது அன்பைப் பொழிந்தார்கள். அவர்கள் கரங்களில் முத்தமிடுவான். பாதி பிரிட்டன், பாதி ரொமானியன் கலந்த விசித்திர உச்சரிப்பில் அவர்களிடம் பேசுவான். அவர்களும், தாய் நாட்டின் தொலைந்து போன மகன் மீண்டும் வீடு திரும்பியதைப் போல அவனைச் சுற்றி ஒவ்வொருவராக தட்டு நிறைய உணவை இலவசமாக வழங்குவார்கள்.

ஒரு மதிய வேளையில், சிறு நகரமொன்றிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கையில், வாகனம் ஓட்டும் போது கண்ணயர்ந்து விட்டேன். கண்விழித்துப் பார்த்த போது, விபத்துக்குள்ளான வண்டியின் கதவிலிருந்து, வெளியே வர திணறிக் கொண்டிருந்த ரெஸ்வானைப் பார்த்தேன். காரிலிருந்து உயரமாக, மரத்திற்கும் மேலே நான் எழும்பிக் கொண்டிருப்பதை அறிந்தேன். அங்கிருந்து கவனிக்கையில், நான் சேதமடைந்திருந்த வாகனத்திலிருந்து ஊர்ந்து வெளியே வந்து, ரெஸ்வானின் தோளைப் பிடித்து வெளியே இழுத்துக் கொண்டிருந்தேன். நீண்ட கரித்துண்டைப் போலிருந்த தார்சாலையில் என் உடல் மயங்கிக் கொண்டிருப்பதைப் பார்க்காமல் ரெஸ்வானுக்கு மேலே மிதந்து கொண்டிருந்தேன். காற்றிலாடும் மரக் கிளைகள் ரெஸ்வானின் உடல் பக்கமாக வளைந்து அவன் இதயத் துடிப்பைக் கேட்பதைப் பார்த்துக் கொண்டேயிருந்தேன்.

அன்றிரவு, முதல் முறையாக மருத்துவமனை அறைக்குள் நுழைந்த போது, என்னிடம் அவன் பேச மாட்டான் என்று எதிர்பர்த்தேன். ஆனால், அவனோ புன்னகையுடன், “என்னுடைய நாட்டில், நீ சாவ்செஸ்கோவுக்காக பணி புரியலாம். பல வருடங்களாகக் இதைத் தான் எனக்குச் செய்ய முயற்சி செய்கிறார். நான் மீண்டும் மீண்டும் அவனிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டே இருந்தேன். என்னைக் கட்டிலிக்குப் பக்கமாக வரச் சொன்னவன், என்னைச் சுற்றிக் கைகளைப் போட்டுக் கொண்டான்.  ”சரி, சரி, பரவாயில்லை, சரியாகி விடும், அழாதே. இது அமெரிக்கா. இப்படித்தான் நடக்க வேண்டும். நான் உன் மீது வழக்குத் தொடுப்பேன். உன்னுடைய இன்ஷூரன்ஸ் கம்பெனி பணம் கொடுத்து விடும். நாம் இருவரும் எங்காவது சுற்றுலா பயணம் போகலாம், கலிஃபோர்னியா போகலாம். எனக்கு ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது” என்றான்.

கண்களைத் துடைத்துக் கொண்டு அவனைப் பார்த்தேன். அவன் தலை கோணியிருந்தது. நெற்றியைச் சுற்றி மெல்லிய வெள்ளை பேண்டேஜ் துணி சுற்றியிருக்க, சுருண்ட கறுத்த முடியில் ரத்தம் இன்னும் ஒட்டியிருந்தது. காலை உயரத் தூக்கிக் கம்பு வைத்து அசையாமல் நிறுத்தியிருந்தார்கள். அந்த நிலையிலும், இது ஒரு அதிர்ஷ்ட வசமாக அமைந்த வாய்ப்புக்காக நான் ஏன் அழுகிறேன் என்று நம்ப முடியாதவன் போலப் பார்த்துக் கொண்டிருந்தான்.

அடுத்த சில மாதங்களுக்குக் கைத்தடி வைத்து நடந்தான். அதை மிகவும் நேசித்தான். அந்தத் தடியால் பொருட்களைச் சுட்டிக் காட்டுவான். தழும்புகள் மங்கிக் கொண்டிருந்தாலும், அவன் முகத்தின் இடது பக்கத்தில் நிரந்தரமான கோடு தங்கி விட்டது. ”தழும்பு முகம்”( Scarface) என்ற திரைப் படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தோம். கைத்தடியைத் துறந்த போதும், காலைச் சற்று சாய்த்து நடந்தான். அவனுடைய நடையின் பாணிக்கு உடம்பின் லேசான அசைவை அது கொடுத்தாலும், ஆச்சர்யமாக அது அவனுக்குப் பொருந்திப் போனது. ஒருமுறை கூட என்னை அவன் குற்றம் சாட்டவே இல்லை. அப்படி ஒரு நினைப்பு அவன் மனதில் இருப்பதாகவே நான் நினைக்கவில்லை.


நானும் ரெஸ்வானும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளாக சேர்ந்திருக்கிறோம். நிச்சயம் என்பது திருமணத்திற்கு மாற்றாகத்தான் அவன் நினைத்தான், அது திருமணத்தை நோக்கிய முதல் கட்டம் என்று அவனுக்குத் தோன்றவில்லை. அதை நானும் பொருட்படுத்தவில்லை. அவனுடன் இருக்க வேண்டும் என்பதுதான் எனது விருப்பம். ரெஸ்வானுடனான வாழ்க்கைக்கு ஒரு தனிக் கவர்ச்சி இருந்தது. ஒரு உணர்விலிருந்து மற்றொரு உணர்விற்கு, துக்கத்திலிருந்து நன்றியுணர்விற்கு, பின் ஆவேசத்திற்கு என்று விரைவில் மாறிக் கொள்வான். ஆனால் ஒரு போதும் மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டான்.

ஒரு வேளை, அவனுடன் மிகவும் மகிழ்ச்சியாக நாட்களைக் கடத்தியதில், வெளிப்படையாகத் தெரிந்த சில சங்கேதங்களைக் கூட நான் அறியவில்லை போலும். ஆனால், ஒரு மனிதன் மற்றொரு பெண்ணிடம் உறவு வைத்திருப்பதென்பது, அந்நிய நிலத்திலிருக்கும் அகதியொருவன் தாய் நாட்டின் மீது கொண்டிருக்கும் அன்பிற்கு ஒப்பாக, அவன் இரண்டுக்குமிடையில் சிக்கித் தவிப்பது போலவே இருந்தது. அவன் வீட்டிற்கு நீண்ட கடிதங்கள் எழுதுவான்; எதிர்காலத்தைப் பற்றிப் பேசவே தயங்குவான். தனிமையான இரவுகளில் உறக்கத்தில் ஏதோ முணு முணுப்பது போலத் தோன்றும். ஆனால் நிச்சயமாக அது என்னுடனான உரையாடல் இல்லை.

ஏறத்தாழ ஒரு வருடம் கழித்தே குறிப்பிட்ட சில விஷயங்களை நான் கவனிக்கத் துவங்கினேன், அல்லது எதையோ கவனித்திருக்கிறேன் என்று எனக்கு நானே ஒப்புக் கொண்டேன்.  ஒரு நாள் அதிகாலை நான்கு மணிக்கு ரெஸ்வானுக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. அவன் ரொமானிய மொழியில் பேசிக் கொண்டதில் ஒரு வார்த்தை கூட எனக்குப் புரியவில்லை, ஆனால் அரைத்தூக்கத்திலும் அடிக்கடி அவன் “ரிலா” என்று அழைத்ததும், சில சமயம் விடாமல் அதைச் சொல்லிக் கொண்டிருந்ததும் கேட்டது. ஒரு மணி நேரமோ அல்லது ஒண்ணரை மணி நேரமோ, பேசி முடித்ததும், முன்னறைக்குச் சென்று அசையாமல் அமர்ந்திருந்தான். வெளிச்சம் அவன் உடலின் குறுக்காக மெல்ல ஊடுருவியது. “ரெஸ்வான், ரிலா என்றால் என்ன அர்த்தம்?” அவனைக் கேட்டேன். அப்படியென்றால், பிரகாசமான ஒளி, இந்த அறையில் இப்போது பரவியிருப்பதைப்  போல என்று பதில் சொன்னான்.

இரு நாட்களுக்குப் பிறகு வீட்டின் முன்னிருந்த தபால்பெட்டியிலிருந்த கடிதங்களை எடுத்துக் கொண்டு அவற்றை நோட்டமிட்டுக் கொண்டே வீட்டை நோக்கி நடந்து வந்த போது, அதிலிருந்த ஒரு கனமான கடிதம் ரிலியா பலெஸ்கு என்ற பெயரில் இருந்தது. ரிலா என்பவள்தான் ரிலியா, ஒரு நபர், உறவினர். நான் வீட்டினுள் நுழைந்த போது, கட்டம் போட்ட பைஜாமாவில் இருந்த ரெஸ்வான், காஃபியை அருந்திக் கொண்டே புகைத்தபடி, தலையைச் சொறிந்தவாறு நின்று கொண்டிருந்தான். அவன் கையில் கடிதத்தைக் கொடுத்த போது அவனது முக பாவனைகளைப் படிக்க முயற்சி செய்தேன். ஆனால் எதுவும் பிடிபடவில்லை. அதனால், நானே கேட்டேன். “ யார் அது ரிலியா ?”

“அவள் எனது சகோதரி, இளைய சகோதரி கேவ்ரிலியா”

பொய் சொல்கையில், இதயம் ஒரு முறையாவது அதிகம் துடிக்காதா என்ன? அப்படித்தான் நம்பிக் கொண்டிருந்தேன். அனால் ரெஸ்வானோ தயக்கமேதுமின்றிப் பதிலளித்தான். ஒருவேளை, இந்தக் கேள்வியை எதிர்பார்த்திருக்கலாம்.

“உனக்கு சகோதரி இருப்பதே எனக்குத் தெரியாது”

“அவளைப் பற்றிப் பேச நான் விருப்பப்படுவதில்லை. எப்போதோ நாங்கள் இருவரும் உறவைத் துண்டித்துக் கொண்டோம். அவள் இன்றும் சாவ்செஸ்கோவை நம்புகிறாள். அவருடைய, அவர் மகனுடைய படங்களையும் பிரபல ராக் பாடகர்களின் படங்களைப் போல சுவரெங்கும் ஒட்டி வைத்திருக்கிறாள். அவளை மாற்ற எவ்வளவோ முயற்சி செய்தேன், ஆனால் அவள் பிடிவாதக்காரி. அவள் குழந்தைகளுடன் கருங்கடல் சென்று விடுமுறையைக் கழிப்பாளே தவிர, இங்கு என்னுடன் வந்து இருப்பதை விரும்ப மாட்டாள்.

“இதுவரை ஏன் அவளைப் பற்றி நீ என்னிடம் சொல்லவே இல்லை?”

ஏனென்றால் , நாம் , எல்லாவற்றையும் விட எதை அதிகமாகக் கோருகிறோமோ அதைப் பற்றி உரக்கப் பேசுவது நல்லதல்ல. உனக்கே தெரியும்.”

“இல்லை, எனக்குத் தெரியாது”

“அது உண்மை, ரொமானியாவில் அதற்கு ஒரு வார்த்தை உண்டு. ’கினியான்’ என்று சொல்வார்கள். எது நடக்க வேண்டுமென்று நினைக்கிறோமோ அதைப் பற்றி அதிகமாகப் பேசக் கூடாது. அப்படிச் சொன்னால் அது நடக்காது. இதற்கு ஆங்கிலத்திலும் ஒரு வார்த்தை இருக்கிறதல்லவா?”

“ராசியில்லாதவர்’

“சரி. அதனால்தான், அப்படிக் கெட்ட ராசி ஆகிவிடுமென்றுதான் என் சகோதரியைப் பற்றி உன்னிடம் சொல்லவில்லை. “

“அப்புறம் ஏன் அவள் பெயர் என்றால் பிரகாசமான ஒளி என்று அர்த்தம் சொன்னாய்?’

“என்னது?”

அன்று நான் கேட்ட போது, ரிலியா என்றால் பிரகாசம் என்று சொன்னாய்”

“இல்லையில்லை, ரிலா என்றால் பிரகாசம், ரிலியா என்பது என் சகோதரி. புன்னகைத்துக் கொண்டே என் முகத்தில் முத்தமிட்டான். “உன்னுடைய உச்சரிப்பில் கவனம் செலுத்த வேண்டும்”

அடுத்த மாதம் நாங்கள் எங்கள் வழமையான வாழ்க்கைக்குள் புகுந்து கொண்டோம். இரவில் கடிதங்களை எழுதி முடித்ததும் ஓசையின்றி வீட்டின் முகப்பிற்குச் சென்று, தபால் பெட்டியில் கடிதங்களைப் போட்ட பின் காலையில் தபால்காரர் பெட்டியைத் திறந்து அவற்றை எடுத்துக் கொள்ள வேண்டிய அடையாளத்திற்காக அதன் மீதிருக்கும், சின்ன சிவப்புக் கொடியை எடுத்து நட்டு வைப்பான். ரெஸ்வான் ஆழ்ந்து உறங்கியதும், நான் படுக்கையிலிருந்து எழுந்து சென்று ரிலியாவுக்காக அவன் எழுதியிருக்கும் கடிதங்களை எடுத்து என் தளர்வாடையின் சட்டைப் பையில் வைத்துக் கொண்டு வந்து விடுவேன். அதே போல அவள் அவனுக்கு எழுதி அனுப்பியிருக்கும் கடிதங்களையும் காலையில் சென்று எடுத்து விடுவேன்.

முதலில் இது ஒரு தந்திரம் போல எனக்குத் தோன்றவில்லை. ரிலியா உண்மையிலேயே அவன் சகோதரியா அல்லது மனைவியா என்று அறிந்து கொள்ள மிகப் பிரயத்தனப்பட்டேன், என்னவோ அவள் கையெழுத்து அதை அறிவித்துவிடுவது போல. எனக்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பாகவே ரிஸ்வான் பணிக்குச் சென்று விட்டதால் கடிதங்களைத் திறந்து பார்த்தேன். படுக்கையில் அமர்ந்து கொண்டே, பக்கங்களை என் முன்னால் பரத்தி வைத்துக் கொண்டு குறிப்புகளைத் தேடிக் கொண்டிருந்தேன். சில பத்திகள் தணிக்கை அதிகாரிகளால் கறுப்பு மையால் மறைக்கப்பட்டிருந்தது. பல பெயர்கள் அதில் இருந்தன, ஆனால் முக்கியமாக இரு பெயர்கள் அடிக்கடி தென்பட்டன. கியோர்கே, ஃப்ளோரியான்.. கியோர்கே, ஃப்ளோரியான்.. மீண்டும் மீண்டும்.. அவை அவனது குழந்தைகளின் பெயர்களாக இருக்கக் கூடும் என மெல்ல புரியத் தொடங்கியது.

அது போன்ற ஒரு காலை நேரத்தில்தான், எனக்காகத் தைத்து வைத்திருந்த உடையைத் தருவதற்காக வீட்டிற்கு வந்தார் அம்மா. “நல்லது, நீ வீட்டில்தான் இருக்கிறாய், உற்சாகமாகச் சொல்லிக் கொண்டே “இதைக் கொடுத்து விட்டுப் போகலாம் என்று வந்தேன்” என்றவர், விரைவாக வீட்டின் எல்லா அறைகளுக்குள்ளும் சர சரவென நுழைந்தார். அவரிடமிருந்து எதையாவது மறைக்கிறேனா என்று என்னைக் கையும் களவுமாகப் பிடிக்கும் பொருட்டு , கிடைக்கும் இந்தச் சிறு சமயத்தில் அறைகளில் தடயங்கள் தேடுவது அவருக்குப் பிடித்தமான செயல். ”என்ன இது?” படுக்கையறையில் புகுந்து, அங்கு படுக்கையின் மீது இறைந்து கிடந்த காகிதங்களைப் பார்த்துக் கேட்டார்.

“ஓ, அதெல்லாம் ரெஸ்வானுக்காக நான் படித்துக் கொண்டிருப்பது, பிழை திருத்துவது.”

ஒரு தாளைக் கையிலெடுத்தவர், “ஓ, இப்போது ரொமானிய மொழியில் பிழை திருத்தம் செய்கிறாயா?’ என்று கேட்டார்.

மிகப் பலவீனமாகப் புன்னகைத்தேன். அதன் பிறகு அவர் துருவிக் கேட்கவில்லை. முதல் முறையாக அவர் அப்படிக் கேட்கக் கூடாதா என்று ஆசைப்பட்டேன். என்னுடைய வாழ்க்கையை இந்தப் படுக்கையில் கிடத்தி வைத்திருக்கிறேன், மெலிதான காகிதத் தாளைப் போல அது உள்ளது. எனக்குப் புரியாத ஒரு மொழியில் எழுதப்பட்டுள்ளது. ரெஸ்வான், கேவ்ரிலியா, க்யோர்கே, ஃப்ளோரியான் என்னும் நான்கு புள்ளிகளால் நிரப்பப் பட்டுள்ளது , ஆனால் அது எனக்குச் சொந்தமானதல்ல என்றெல்லாம் சொல்ல விரும்பினேன். அப்பாவிற்கு வேறொரு பெண்ணிடம் தொடர்புள்ளது என்று அறிந்த பின் அம்மா எப்படி உணர்ந்தார் எனக் கேட்க விரும்பினேன். அவர்கள் இருவரும் பிரிந்த பிறகும் கூட அந்தப் பெண்ணை அவர் திருமணம் செய்து கொள்ளவில்லை. அந்தப் பெண் எங்கே சென்று விட்டார்? அவளது மார்புகளை இழந்து விட்டாரா? குணமடைந்து விட்டாரா? இப்போது எங்காவது மகிழ்ச்சியுடன் இருக்கிறாரா?

அம்மாவிடம் நான் எதுவுமே சொல்லவில்லை. ஆனால் விடை பெறுகையில், படுக்கையறையைச் சுட்டிக் காட்டி, “பல்கலைக் கழகத்தில் இதை மொழிபெயர்த்துத் தருபவர்கள் உனக்குக் கிடைப்பார்கள் என்று கூறி விட்டுச் சென்றார்.”

பாதங்களைப் பார்த்துக் கொண்டே தலையசைத்தேன் நான்.

“ஒருவேளை மொழிபெயர்ப்பே உனக்குத் தேவையில்லாமல் இருக்கலாம், அதெல்லாம் என்ன சொல்கிறதென்று ஒருவேளை உனக்குத் தெரிந்திருக்கலாம்” வளைந்து குனிந்து என் முகத்தைப் பார்த்தவர், “ சரியாகி விடும், அது எதுவாக இருந்தாலும்.. என்று சொல்லிச் சென்றார்.

இரண்டு மாதங்களுக்கு அந்தக் கடிதங்களையெல்லாம் சேகரித்துப் பத்திரப்படுத்தி வைத்திருந்தேன். யாரையும் புண்படுத்தும் நோக்கம் எனக்கில்லை. என்ன செய்வதென்று எனக்குத் தெளிவாகத் தோன்றும் வரை அவற்றின் மீதே என் எண்ணமெல்லாம் இருந்தது. ஒவ்வொரு நாளும் பணியிடத்திலிருந்து வீடு திரும்பும் வேளையில் இன்றிரவு ரெஸ்வானிடம் எனக்கு எல்லாம் தெரியும், நான் உன்னை விட்டுச் செல்கிறேன் என்று சொல்லி விட வேண்டுமென்று நினைப்பேன். ஆனால் இரவு உணவருந்தும் வேளையில் பேசவே வாயெழாது. நான் மீண்டும் எனது பதினொரு வயதுக்குத் திரும்பி விட்டது போலிருக்கும்.

ரெஸ்வானும் நாளாக நாளாக மிகவும் சோர்ந்து போனவனாகக் காணப்பட்டான். கடிதம் எழுதுவதே வீணாகப் போய்க் கொண்டிருக்கிறதென்றும், இனிமேல் எழுதுவதையே விட்டு விடலாம் என்று கூடத் தோன்றுகிறதென்று சொன்னான். ஓர் இரவில், “அந்த வேசிமகன்களைத் தாண்டி ஒன்று கூட வருவதில்லை. ஒரு வேளை, மீண்டும் என்னால் ரிலியாவைப் பார்க்க முடியாமல் கூடப் போய் விடலாம். அதன் பின் நொண்டிக் கொண்டே நடந்து சென்று குழாயிலிருந்து தண்ணீர் பிடித்து தம்ளரை நிரப்பினான். என் பக்கமாகத் திரும்பி,” எங்கள் இருவரையும் ஏன் அவர்கள் பிரித்து வைக்க வேண்டும்?” என்று கேட்டான். தலையை ஒருபுறமாகச் சாய்த்து நிற்கையில் சிறு குழந்தை போலக் காட்சியளித்தான். என்னிடமிருந்து உண்மையிலேயே பதிலை எதிர்பார்ப்பவன்  போல வெறித்துப் பார்த்தான்.

“எனக்குத் தெரியாது, அதைப் பற்றி எனக்கு எதுவும் தெரியாது”

ஆனால் எனக்கு எல்லாமே தெரியும். கடலுக்கு அப்பால், மறுகரையில் சீருடை அணிந்த மனிதர்கள் கடிதத்தைப் பெற்றுக் கொண்டு, அதில் எதுவெல்லாம் தங்களுக்கு அச்சுறுத்தலாகத் தோன்றுகிறதோ அவற்றை அழித்து தணிக்கை செய்கிறார்கள், இங்கே வீட்டில் உடுத்தும் தளர்வாடை அணிந்து கொண்டு அதையேதான் நானும் கடைபிடிக்கிறேன்.

இந்தச் சூழலிலிருந்து மேலே உயர நினைத்தேன். ஆனால் அந்த உபாயம் சற்றும் பலிக்கவில்லை. அங்கிருந்து நான் பார்ப்பது, எனது துயரத்தை அதிகமாக்கியது. அவள் தான், சாஸ்கேச்சுவானைச் சேர்ந்த மார்கிட் பெர்ஜின். மிகவும் தந்திரக் காரியாக, படுக்கையில் சுருண்டு கொண்டு, காதலைத் தடை செய்பவளாகவும், அதைப் பதுக்கி வைத்துக் கொண்டும், அவளது கைகளாலேயே அதைப் பிய்த்து எறிபவளாகவும் மாறிவிட்டாள் என்று யாராவது நினைத்துப் பார்த்திருப்பார்களா?

இது நாள் வரை மிகத் திறந்த மனமுடையவளாக, அடுத்தவர் துயரத்தை அவர்களிடத்தில் என்னைப் பொருத்தி உணர்ந்து கொண்டவளாகத்தான் என்னை நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் இந்த ரிலியாவின் சித்திரம் மட்டும் எனக்குப் பிடிபடவே இல்லை. அவள் முகம், அவள் குழந்தைகளின் முகம் எல்லாமே வெற்றிடமாக இருந்தது. மற்றொருவரின் முகத்தைக் கற்பனை செய்ய முடியாத இந்த இயலாமை, இந்த விருப்பற்ற மனநிலை எனது வெறுப்புணர்ச்சியால் விளைந்ததில்லை என்றே நம்புகிறேன், ஆனால் அதுவாகத்தான் இருக்கக் கூடும் என்று உள்ளூர அவமானமாக உணர்ந்தேன்,

இறுதியில், நவம்பர் மாதத்தின் குளிர்காற்று வீசும் இரவில், உணவருந்துகையில் அந்தக் கேள்வியைக் கேட்டே விட்டேன் ”ரெஸ்வான், ரிலியா உன் மனைவியா?”

“உனக்கெப்படி ரிலியாவைத் தெரியும்? அவள் தொலைபேசியில் அழைத்தாளா? ஏதாவது கடிதம் அனுப்பினாளா?”

“இல்லை இல்லை, ஏதோ ஒரு ஆர்வம்”

“உனக்கென்ன தெரியுமென்று சொல்”

”எனக்கு எதுவுமே தெரியாது, நான் சும்மா கேட்டேன்”

“நீ அவளுடன் தொலைபேசியில் பேசினாயா?”

”இல்லை, பேசவில்லை” பின்னர் மிகத் தீர்க்கமான குரலில் கேட்டேன், “அவள் உன் மனைவியா ரெஸ்வான்?”

அவன் சொன்னான், ”நான் பொய்யனில்லை, உன்னைத் திருமணம் செய்து கொண்டு இதை  நிரூபிப்பேன். பிரிட்டிஷ் கொலம்பியா சென்று அங்கிருக்கும் நெடிய மரங்களின் நடுவே மணம் புரிந்து கொள்வோம். எப்போது வேண்டுமானாலும், நாளையே கூட..

அடுத்த நாள் காலை, கடிதங்களை எல்லாம் ஒரு பையில் போட்டு எடுத்துக் கொண்டு நேராகப் பல்கலைக் கழகத்தின் நிர்வாக அலுவலகத்திற்கு சென்றேன்.  ரொமானிய மொழியை எனக்கு மொழி பெயர்த்துச் சொல்லக் கூடிய பேராசிரியர்களின் பட்டியலைத் தந்து விட்டு அகன்று சென்ற பெண்மணி மீண்டும் திரும்பி வந்தார். நான்கு பெயர்களில் ஒன்றை நான் தேர்வு செய்து கொள்ளலாம். பட்டியலைப் பார்க்கையில் அதில் மூன்றாவது பெயராக பேராசியர் ரோலண்ட் பைன் பெயர் இருந்தது.

அதே அலுவலகத்தில் அவரைக் கண்டேன். மிக மூப்படைந்திருந்தார், பொன்னிறத்திலிருந்து சாம்பலுக்கு மாறியிருந்தது அவரது கேசம். என்னை வரவேற்பதற்காக அவர் எழுந்து நின்ற போது, அவரை விட நான் அரை அடி அதிக உயரமாக இருக்கிறேன் என்பதை அறிந்தேன். முகத்தின் குறுக்காக ஓடும் வளைந்த நரம்பின் குறி இன்றும் அப்படியே பதினைந்து வினாடிகளுக்கொரு முறை நெளிந்து ஓடியது. அவருடன் கையைக் குலுக்குகையில் கடைசியாகச் சந்தித்த தினத்திலிருந்து இன்றுவரை அது அப்படியே இருப்பதையே எண்ணி வியந்தேன். காலத்தை மிக விசுவாசத்துடன் காட்டிக் கொண்டே இருக்கும் கடிகாரத்தைப் போல..

என் பெயர் மார்கிட் பெர்ஜின். நான் குழந்தையாக இருந்த போது ஒருமுறை உங்களைச் சந்திக்க வந்திருக்கிறேன்.

“வணக்கம் மார்கிட், மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. அந்த சந்திப்பு பயனளித்ததா?

“ஆமாம், ரொம்பவே. எப்போதும் உங்களுக்கு நன்றியுடையவளாக இருப்பேன்.

“அப்போது என்ன பிரச்சினை?”

“இளம் பிராயத்து மன உளைச்சல் என்று நினைக்கிறேன். மண வாழ்க்கையிலிருந்து எனது பெற்றோர் பிரிந்து கொண்டிருந்தனர்”

கண்ணைச் சுருக்கிப் பார்த்தவர் முகத்தை ஒரு புறமாக மெல்லத் திருப்பிக் கொண்டே, ஓ, ஆமாம் ஆமாம், அதுவேதான், நீ ஒரு சின்னப் பெண். மிக வருத்தம்தான். நீ என்னவாக இருக்கிறாய் இப்போது?”

‘என் வாழ்க்கையில் என்ன செய்து கொண்டிருக்கிறேன் என்றா கேட்கிறீர்கள்?”

“ஆமாம், உன் வாழ்க்கையில்தான், என்ன செய்கிறாய்?”

“மண் ஆராய்ச்சியாளர்.”

“எப்படிப்பட்ட நல்ல வேலை “ அருகிலிருந்த இருக்கையைக் கைகாட்டி அமரச் சொல்லி சைகை செய்தார். அங்கிருந்த கூண்டிற்குள் இருந்த பறவைகள் சண்டையிட்டுக் கொண்டு தங்கள் இறகுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தன.”Mortalhead,, சண்டை போடாமல் eagarheart உடன் இணக்கமாக இரு , என் பக்கமாகத் திரும்பி, இவைகளுக்கு வினோதமான பெயர்கள்தான் பிடித்திருக்கின்றன என்று சொல்லிச் சிரித்தார்.Mortal head, eagarheart, quickeye இப்படியாக..

நான் புன்னகைத்துக் கொண்டே இருக்கையில் அமர்ந்தேன். கைப்பையிலிருந்து கடிதக் கற்றைகளை எடுத்துக் கொண்டே, ப்ரொஃபஸர் பைன் என ஆரம்பித்தேன்.

என்னை ரோலண்ட் என்றே அழைக்கலாம். இருக்கையின் பின்பக்கமாக சாய்ந்து அமர்ந்தார். முகத்தில் டிக் போல வளைந்த நெளிவு ஓடியது. ரோலண்ட், போலண்ட். கற்பனை செய்து பார், இளம் ரோலண்ட், இளம் மார்கிட், பேராசிரியரும், மண் ஆராய்ச்சியாளரும், மீண்டும் ஒரு கனிவான அலுவலகத்தில் பறவைகள் சூழ அமர்ந்திருக்கிறார்கள். கண்ணை உருட்டி, ஏறத்தாழ ஒரு பெண்ணைப் போலவே சிரித்தார்.

என்ன சொல்வதென்றே தெரியவில்லை. ‘ஆமாம், நன்றாக இருக்கிறது”  ரோலண்ட், என்னுடைய பிரச்சினைக்கு உங்களால் தீர்வு சொல்ல முடியுமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறேன்” எப்படியோ சொல்லி விட்டேன்.

”நான் உன்னுடைய எல்லாப் பிரச்சினைகளையும் தீர்த்து விட்டேன் என்றல்லவா எண்ணிக் கொண்டிருந்தேன். ஏமாற்றமடைந்தவர் போலத் தோன்றினார்.

“நீங்கள் தீர்வு சொல்லியிருந்தீர்கள். அதாவது இருபது வருடங்களாகச் சொல்லிக் கொண்டிருந்தீர்கள்.

“இப்போது என்ன பிரச்சினை?”

“நீங்கள் இந்தக் கடிதங்களை ரொமானிய மொழியிலிருந்து மொழிபெயர்த்துத் தர வேண்டும்’

”ரொமானியாவா? “ என் கையிலிருந்த கடிதக் கற்றைகளை வாங்கி கண்களை ஓட விட்டவர் ,”உன் பெயர் ரெஸ்வானா?” என்று கேட்டார்.

“அவர் என் நண்பர்”

“அப்போ நீ அவர் கடிதங்களைப் படிக்கக் கூடாது” புன்னகைத்தார்.

“ப்ரொஃபஸர் பைன், நீங்கள் இந்த உதவியை எனக்குச் செய்தே ஆக வேண்டும்’

“ரிலியா யார்?”

“எனக்குத் தெரியாது, நீங்கள் எனக்குப் படித்துக் காட்ட வேண்டுமென்ற அவசியம் கூட இல்லை, உங்களுக்குள்ளேயே படித்து விட்டு, அதை எழுதிக் கொள்பவர்கள் கணவன் மனைவியா என்று மட்டும் சொல்லுங்கள் போதும்”

“அதை ஏன் தெரிந்து கொள்ள விரும்புகிறாய்?”

“அது விஷயமில்லை, எனக்குத் தெரிந்து கொள்ள வேண்டும்”

”ஏன்?”

நான் எதுவும் பேசவில்லை

”நீ ஒரு விஷமக்காரப் பெண்ணாக இருக்கிறாயா?, அவர் புன்னகைத்த போது அதே வளைந்த சுழி மின்னல் போல நெளிந்தோடியது. பெருமூச்சு விட்டவாறே, சத்தமாகக் கூவிக் கொண்டிருந்த பறவைகளைப் பார்த்தேன். பச்சை வண்ணப் பறவையொன்று தன் கருப்புச் சிறகுகளைச் சினத்துடன் சிலுப்பிக் கொண்டு, பேராசிரியரின் கைகளில் படபடத்துக் கொண்டிருந்த கடிதங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தது.

உங்களுக்கு வாசிக்க விருப்பமில்லையென்றால் பரவாயில்லை, நான் வேறு யாரிடமாவது கொடுத்துப் பார்க்கிறேன் ”கடிதங்களை வாங்கக் கையை நீட்டினேன்.

அவற்றைத் தன் மார்புக்கருகில் இழுத்துக் கொண்டவர், சரி, சரி பெண்ணே, நீ மிகவும் பிடிவாதக்காரியாக இருக்கிறாய் என்றார்.

குழந்தைகளுக்கு துயில் நேரக் கதைகளைச் சொல்வது போல, மிக மென்மையான குரலில், சிறு ராகத்துடன் வாசித்தார். ”ரிலியா சொல்கிறாள், பிறந்த போது எவ்வளவு குட்டியாக இருந்தான் ஃப்ளோரியான், இப்போது நாற்பத்தைந்து கிலோ இருக்கிறான், அவனுடைய சகோதரனைப் போலவே. கருங்கடல் நினைவிலிருக்கிறதா? நாம் முதன் முதலாக அங்கு சென்ற போது இருந்ததைப் போலவே இப்போதும் அதே நீல வண்ணத்தில்தான் உள்ளது” ரிலியா மேலும் சொல்கிறாள், ”உணவுப் பொருட்கள் நிறையக் கிடைக்கும் இடம் இது, சில வேளைகளில் அழுகிப் போகும் ஆப்பிளை ஜன்னலிலிருந்து வீசியெறிகிறேன் என்று ரெஸ்வான் சொல்வது பொய்யாக இருக்கக் கூடும்”

நான் குறுக்கிட்டேன்,அவர்கள் திருமணமான தம்பதிகள் என்று நினைக்கிறீர்களா?’

“ம்ம், அவர்களிருவரும் பலெஸ்கு”

”அவர்கள் அண்ணன் தங்கையா? ”

முகத்தைச் சுருக்கிக் கொண்டு மீண்டும் கடிதங்களுக்குள் மூழ்கினார். ”ஆனால் இங்கே அவள் அவனைக் கண்ணே, மணியே என்றெல்லாம் சொல்கிறாள்.”

நிமிர்ந்து பார்த்தார்.” வேண்டாம், அழாதே, தயவு செய்து அழாதே என்று தேற்றினார். நாற்காலியிலிருந்து குதித்திறங்கி மேசையைச் சுற்றி வந்து அருகில் தரையில் முழந்தாளிட்டு அமர்ந்து, என் முகத்தை ஏறிட்டுப் பார்த்தார். அவர் முகம் மிக அருகில் இருக்க அதன் குறுக்கில் ஓடும் நரம்பு மெதுவாக நெளிந்து சென்றது. அந்த நெளிவு, வளைந்து சென்று ஒரு நதியைப் போல முகத்தின் கீழாக ஓடியது.

மேசை நுனியில் அமர்ந்தார். ”எல்லாம் சரியாகி விடும். இந்தக் குட்டிப் பெண்ணுக்குத் தெரிய வேண்டும். உனக்கு ரெஸ்வான் , அந்தப் போலி முகம் வேண்டுமென்றால் நீ வைத்துக் கொள்ளலாம். அதுதான் உனக்கு வேண்டுமா”

“இல்லை, அப்படி இல்லையென்று நினைக்கிறேன், அதாவது, எனக்கு வேண்டும், ஆனால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது, அவனுக்குக் குழந்தைகள், குடும்பம் எல்லாம் இருக்கிறது.”

“அப்படியென்றால் நீ ஒரு முடிவெடுத்து விட்டாய் என்று தெரிகிறது.’

“அப்படியும் சொல்ல முடியாது”

“மார்கிட், உனக்கு ஒரு புறக் கண்ணோட்டம் தேவையாக இருக்கிறது”

“கண்ணோட்டம்?”

கண்களை மேலே சுழற்றி, உயரே மிதக்கும் அந்த நிலம், தெரியுமா? எனக் கேட்டார்.

“மேலெழும்பி அங்கிருந்து நோக்குவது, அப்படித்தான் அவர் சொல்வார், எனக்கு நினைவிருந்தது,

“அதையும் முயற்சி செய்து பார்த்து விட்டேன், அதனால் எந்தப் பயனும் இல்லை”

மிதக்கும் நிலை எப்போதும் பயனளிக்கும், இப்போது கண்களை மூடிக் கொள், சரியா பெண்ணே?”

நான் எழுந்து கொண்டே, உங்கள் உதவிக்கு மிக்க நன்றி ப்ரொஃபஸர், நான் இப்போது கிளம்பியாக வேண்டும்.”

ஆனால் அதை உணர்ந்தேன், அந்த உயருதல்.. அந்தப் பறவைகளின் கூவல்.. என்னிலிருந்து வெகு தூரம் விலகும் வரை என் மனம் உயரே எழும்பிக் கொண்டிருந்தது. நகரத்தைச் சூழ்ந்துள்ள மஞ்சள் வயல்வெளிகள் என் பார்வையிலிருந்து மங்கிச் சென்றன. மிக விரைவாக சரசரவென்று உயர்ந்து கொண்டே இருந்தவள், ஏறத்தாழ ஒரு நிமிடத்திற்குப் பின்னர் நின்றேன்.

ஆக, இதுதான் அந்த மிதக்கும் உலகமாக இருக்கும் என எனக்குத் தோன்றியது. கீழே பார்த்தேன், எனது இடப்பக்கத்தில் வட அமெரிக்கா, அகண்ட, மேடு பள்ளங்கள் நிறைந்த, சமுத்திரங்களை விளிம்புகளாகக் கொண்ட அதன் முகம் அழகாக இருந்தது, நிலம், பாறைகள் நிறைந்து, பிளவு பட்டு, நதிகளால் சமனப்பட்டிருந்தது. நான் வசிக்கும் பகுதியை அந்தக் கண்டத்திலிருந்து பகுத்தெடுத்துக் கண்டு பிடித்தேன். அது ஒரு பொன்னிற செவ்வகத் துண்டு.. நெடுந் தொலைவிலிருந்து, எனது நித்திய வாழ்க்கை எப்படி இருக்குமென்று காண முடிந்தது. எனது வாகனம் பரந்த சதுப்பு நிலங்களில் ஊர்ந்து கொண்டிருந்தது, அதன் சக்கரங்களிலிருந்து புழுதி கிளம்பியது. ஆசைகள் பொங்கி எழுவதைப் போல.. ஆயிரக் கணக்கான ஜல்லிக் கற்கள் பூமியிலிருந்து மேலே எழும்பின. வாகனம் நின்றவுடன் அதிலிருந்து இறங்கிக் காலியான, பிரகாசமான புல் வெளியில் கால் பதிக்கையில் என் தனிமை அதீதமாகத் தெரிந்தது. வேரின் தண்டிலிருந்து விரிந்தெழும் விருட்சத்தைப் போல ரெஸ்வானுக்காக என் மனதில் எழும் ஏக்கத்தை, பெரும் இச்சையை என்னால் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அவனை என்னிடமே தக்க வைத்துக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டுமென்பது என் புலன்களுக்குப் புரிந்தது. ஒவ்வொரு காலையிலும் கடிதங்களை எடுத்துக் கொண்டு வந்து விட்டால் போதும், எவ்வளவு எளிதான காரியம் அது.. அப்படிச் செய்தால், ரெஸ்வானுக்கும் அவன் மனைவிக்குமிடையே இருக்கும் உறவு நாளடைவில் மெல்ல மெல்ல, மிக இயல்பாக மரித்து விடும். அதே வேளை எனக்கும் அவனுக்குமிடையே துல்லியமாக அதே விகிதத்தில் உறவு வளர்ந்து கொண்டே இருக்கும்.

அந்த நேரத்தோடு சட்டென்று உயரத்திலிருந்து இறங்கி வந்திருந்தேனென்றால் எல்லாமே சாதாரணமாக இருந்திருக்கக் கூடிய சாத்தியங்கள் மிகுந்திருந்தன ஒருவேளை, நானும் ரெஸ்வானும் என்றென்றும் இணைந்திருக்கக் கூடும். ஆனால் அந்த நிலத்தின் விருப்பம் வேறொன்றாக இருந்தது. திரும்பி எனது வலப் பக்கத்தை நான் பார்க்கும் வரை அது என்னைப் போக விட அனுமதிக்காது. எனது எளிமை, எனது அழகிய உலகம். எனது ஆசைகளின் தூய்மை இவற்றையெல்லாம் காண விருப்பப்படுகையில், நான் வேறொரு நிலத்தின் முழுக் காட்சியையும், எப்படி எனது வேட்கை ஒவ்வொரு கோணத்திலிருந்தும் உதயமாகி, அனைத்தையும் ஊடறுத்து அந்த நிலத்தைத் தரிசாக்கியதென்று காண வேண்டுமல்லவா?

எனது வலப்புறமாகத் திரும்பிப் பார்க்கும் வரை நீண்ட நேரம் அதே மிதவை நிலையிலேயே இருந்தேன், அதன் பின், அதோ அங்கே, கிழக்கு ஐரோப்பா, மத்திய தரைக் கடலுக்கு மேல் மிதந்து கொண்டிருந்தது. ரொமேனியா நாட்டின் வரைவை எனது விரல்களால் தடவிப் பார்த்தேன். கண்ணைச் சுருக்கிக் கொண்டு, பனிப்படலம் மற்றும் மலைத்தொடர்களுக்குக் கீழே. அடர்ந்த மரங்கள் ஊடாக அவளைக் காணும் வரை பார்த்துக் கொண்டிருந்தேன். நீண்ட வரிசையில் அவள் நின்று கொண்டிருக்க, நாற்பத்தைந்து கிலோ எடையுள்ள குழந்தைகள் அவள் அங்கியைப் பற்றித் தொங்கிக் கொண்டிருந்தார்கள். அவர்களை நோக்கிக் குனிந்து  கல்லைப் போலக் கெட்டியாயிருந்த ரொட்டித் துண்டுகளைப் பிய்த்து அவர்களுக்குத் தந்தாள். அவளைச் சுற்றி சில அடிகள் மேலே சுழன்று அவளையே கவனித்தேன். அவள் மட்டும் முகத்தைத் திருப்பி உயரே பார்க்காமலிருந்திருந்தால், அப்போதும் கூட எந்த வித மாற்றங்களுமின்றி எனது வாழ்க்கைக்கு, எனது பிரதேசத்திற்கு நான் திரும்பவும் வந்திருக்கக் கூடும். ஏதோ மழையை எதிர்பார்ப்பவள் போல, அவள் அண்ணாந்து நேருக்கு நேராக என் முகத்தை நோக்கினாள்.

கண்ணிமைக்கும் நொடியில் இவையனைத்தும் மிக விரைவாக நடந்து முடிந்து விட்டன. கண் விழித்த போது, பேராசிரியர் பைன் தனது மேசையில் அமர்ந்தபடி என்னையே பார்த்துக் கொண்டிருந்தார். நீ உண்மையிலேயே கிறுக்குப் பிடித்த பெண்தான் என்று சொன்னவரின் முகத்தில் நெளிந்த நரம்புப் புடைப்பு அவர் முகத்தையே விழுங்கி விடுவது போல இருந்தது. வாசல் வரை என்னுடன் நடந்து வந்தவர் கடிதங்களை என்னிடம் தந்தார், பின்னர், அன்றைய இரவில் அவற்றை நான் ரெஸ்வானிடம் ஒப்படைக்கப் போகிறேன். பால்கனியில், மங்கிய நிலா வெளிச்சத்தில் நாங்களிருவரும் நின்று கொண்டிருக்கப் போகிறோம், அவை, நீரோட்டத்தைப் போல என் கைகளிலிருந்து அவன் கைகளை எவ்வளவு எளிதாக அடைந்து விட்டன என்று நான் வியந்து கொள்ளப் போகிறேன்.

பறவைகள் கீச்சிட்டன. “பறவைகள்! சில சமயங்களில் அவற்றை வணங்கத் தோன்றும் என பேராசிரியர் பைன் சொல்லிக் கொண்டிருந்தார். எனது கையைக் குலுக்கினார். வாழ்த்துகள் பெண்ணே” அதன் பின் அவர் காலை உந்தி, என்னை முத்தமிட்டு வழியனுப்பி வைத்தார்.


குறிப்புகள்

சாஸ்கேச்சுவான் சமவெளி

சாஸ்கேச்சுவான், கனடா நாட்டைச் சேர்ந்த சமவெளிப் பிரதேசம். கனடா மக்களுடன் பல நாட்டைச் சேர்ந்த மக்களும் இங்கு வசிக்கின்றனர்.

சாவ்செஸ்கோ

சாவ்செஸ்கோ – 1965 முதல் 1989 வரை ரொமானிய நாட்டு அதிபராக இருந்தவர். ஆட்சியில் நிகழ்ந்த பொருளாதார சீர்கேடு, பஞ்சம், இனப் பட்டினிக் கொலைகள், அடக்கு முறை  ஆகியவற்றால் 1989 ஆம் ஆண்டு ரொமானியா நாட்டில் புரட்சி வெடித்தது. சாவ்செஸ்கோ, அவர் மனைவி இருவரும் துப்பாக்கிப் படையால் சுட்டுக் கொல்லப்பட்டனர். அமைதியற்ற, கடும் அரசியல் சூழலில் புலம் பெயர்ந்த ரொமானியர்கள் பற்றியும் மற்றும் நாட்டைத் துறக்காமல் அங்கு வாழ்ந்தவர்களின் அவல நிலை பற்றியும் இக்கதையில் கதை மாந்தர்களின் மூலம் சித்தரிக்கப் படுகிறது.


ஆசிரியர் குறிப்பு:

  • ரெபெக்கா லீ

( பிறந்த ஆண்டு 1967)

அமெரிக்க நாட்டைச் சேர்ந்த எழுத்தாளர். இவர், வில்மிங்டன் நகரின் வடக்கு கரோலினா பல்கலைக் கழகத்தில் படைப்பெழுத்துத் துறையில் பேராசிரியராகப் பணிபுரிகிறார். இவரது Bobcat and other stories , The city is a Rising Tide ஆகிய இரு புத்தகங்களும் பெரு வரவேற்பைப் பெற்றவை. தனது எழுத்துக்காகப் Believer Book award,(2013)  Danuta Gleed Literary award (2012)மற்றும் பல விருதுகள் பெற்றவர். ஹார்வர்ட் மற்றும் பல பல்கலைக் கழகங்களில் எழுத்துத் துறையில் ஆராய்ச்சி உறுப்பினர் அங்கீகாரத்தைப் பெற்றவர்.

நீண்ட சிறுகதைகள் இவரது பிரத்தியேக தளமாகும். ஒரு நாவலுக்குரிய உள்ளடக்கத்தை, விறு விறுப்பு குறையாமல் சிறுகதையில் தருவது இவரது தனித்த அடையாளம். ஆலிஸ் முன்ரோ, செகாவ் இருவரது எழுத்தின் துல்லியத்தையும் இவரது எழுத்தில் காணலாம் என்று குறிப்பிடப் படுகிறது.

Slat Land  story taken from the collection Bob cat stories.


  • லதா அருணாச்சலம்  

கவிதை, கட்டுரை , மொழிபெயர்ப்பில் ஈடுபட்டு வரும் லதா அருணாச்சலம், ஆங்கில முதுகலை, மற்றும் ஆசிரியப் பட்டப் படிப்பை முடித்தவர் .பதினான்கு ஆண்டுகள் நைஜீரியா நாட்டின் லாகோஸ் நகரில் வாழ்ந்தவர் . கடந்த சில வருடங்களாக சென்னையிலும் நைஜீரியாவிலும் மாறி மாறி வாசம் செய்கிறார் .பயணங்களில் மிகுந்த ஆர்வம் மிக்கவர் . இவரது கவிதைத் தொகுப்பு உடலாடும் நதி, மொழிபெயர்ப்பு நாவல் தீக்கொன்றை மலரும் பருவம் இரண்டும் வெளியாகியுள்ளன. மற்றும் பல சிற்றிதழ்களிலும், இணைய இதழ்களிலும் மொழிபெயர்ப்புச் சிறுகதைகள் எழுதி வருகிறார் .

5 COMMENTS

  1. மொழிபெயர்க்கப்பட்ட சிறுகதை போல் தெரியவில்லை…சொந்த மொழியில் சொந்த நடையில் லதா எழுதிய கதை போல் உள்ளது.அருமை! ரெபக்கா லீ யை அறிமுகப்படுத்தியதற்கு…எல்லா ஊரிலும் இப்படித்தான் போல! மனிதர்களில் ஆணென்ன …பெண்ணென்ன? ஒரே உணர்வுகளில் தத்தளிக்கிறார்கள்…எழுத்து நடை அருமை லதா!

  2. ஏறக்குறைய இந்த இரண்டு அனுபவங்களும் எனக்கிருப்பதால், கதையோடு இயல்பாய் என்னைப் பொருத்தி, பயணிக்க முடிந்தது. பிரச்சனையின் வடிவங்கள் இடத்துக்கும் சூழலுக்கும் மாறுபட்டதாய் இருக்கின்றதே ஒழிய, பெரும்பாலும் பெண்களுக்கான உணர்வுசார் பிரச்சனையை இக்கதைப் பேசி இருக்கின்றது. அதேவேளை, குழந்தைகள் தங்களது மனநிலையை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள முடியாதவர்கள் என்ற உண்மையும் அழகாக வெளிபடுத்தி இருக்கின்றது. ஒரு குழந்தையாகவும், இரண்டு குழந்தைகளுக்குத் தாயாகவும் நான் இந்த அனுபவங்களைப் பெற்றிருப்பதால், இந்தக் கதை, என் வாழ்க்கை அனுபவங்களைக் கண் முன்னே நிறுத்திக் கொண்டே இருந்தது.

  3. மனித மனத்தின் விசித்திரத்தை எவ்வளவு அழகாக இக்கதை படம்பிடித்துக் காட்டுகிறது. உயரே மிதக்கும் நிலம் – பிரச்சனைகளால் அலைக்கழியும் மனத்தை ஆசுவாசப்படுத்த என்னவொரு அருமையான தீர்வு. தேர்ந்த மொழிபெயர்ப்பு. பாராட்டுகள் லதா.

  4. அ௫மையான சிறுகதை! சிறப்பாக மொழி பெயர்த்திருக்கிறீர்கள்! வாழ்த்துக்கள்!

  5. உயரே இருக்கும் நிலம் என்ற கற்பனை பிரச்சனைகளை எளிதாக்க உதவும் என்பது போற்றத்தக்கது ! பிரச்சினைகளிலிருந்து நம்மை நாமே விலக்கிக்கொண்டு ஒரு தனித்துவத்துடன் அதை அணுகும் பொழுது அந்த அணுகுமுறையின் பயனாக சில தீர்வுகள் கிடைக்கப்பெறும் என்ற உளவியல் உண்மையைத் தெளிவாக்கும் கதை. மொழிபெயர்ப்பு அருமை !

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.