உயிர் காப்பான் தோழன்

ஒரு காட்டில் ஒரு சிங்கக்குட்டி இருந்தது.  அதன் பெயர் அரிமா. 

காட்டில் உள்ள மற்ற விலங்குக் குட்டிகளுடன், சேர்ந்து விளையாட, அதற்கு மிகவும் ஆசை.

ஒரு நாள்  “என்னோட விளையாட வர்றியா?”என்று, மான்குட்டியிடம்அரிமா  ஆசையாகக் கேட்டது.

உன்னோடவா? எங்கம்மா திட்டுவாங்க, நான் வரல,” என்று மான்குட்டி சொல்லிவிட்டு, ‘தப்பித்தோம், பிழைத்தோம்!என, ஒரே ஓட்டமாக ஓடிவிட்டது..

அடுத்த நாள் வரிக்குதிரை குட்டியிடம், “என்னோட விளையாட வர்றியா?” என்று அரிமா கேட்டது.  

ஐயோ! நான் மாட்டேன்,” என்று அதுவும், பயந்து ஓடி விட்டது.

தன்னுடன் விளையாட யாருமே இல்லை என நினைத்து, அரிமாவுக்கு, மிகவும் வருத்தமாக இருந்தது.  

ஒரு நாள் தண்ணீர் குடிப்பதற்காக, ஆற்றில் இறங்கிய அரிமா, பாறையிலிருந்த பாசியில், கால் வழுக்கிப் பள்ளத்தில் விழுந்துவிட்டது.  

வெள்ளம் அதிகமாகப் போய்க் கொண்டிருந்ததால், அதனால் எதிர்நீச்சல் போட்டு, ஏறி வெளியில் வர முடியவில்லை.உதவி உதவிஎன்று அரிமா கத்தியது.

அருகிலிருந்த புல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த, எந்த விலங்குமே, அதற்கு உதவ முன்வரவில்லை..

பக்கத்திலிருந்த மரத்தில், பழம் பறித்துத் தின்று கொண்டிருந்த, ஒரு  குரங்குக்குட்டி அதைப் பார்த்தது..  அதன் பெயர் கடுவன்.

அம்மா! அம்மா! அங்கப் பாருங்க!.  சிங்கக்குட்டி தண்ணிக்குள்ள விழுந்துடுச்சு! வெளியில வர முடியாமத் தவிக்குது! அத ஒடனே காப்பாத்தணும்!” என்று கடுவன், தன் அம்மாவிடம் சொன்னது..

அது நம்ம எதிரி!  அதைக் காப்பாத்துறது ஆபத்து, வீணா வம்பை விலைக்கு வாங்காதே! வெளியில வந்தா, அது ஒன்னையே கொன்னு தின்னுடும்.  பேசாம, பழம் திங்கற வேலையைப் பாரு,” என்று அம்மா  அதட்டியது.

போங்கம்மா!. ஒருத்தரு ஆபத்துல இருக்கிறப்போ, ஒடனே உதவி செய்யணும்னுநீங்க தானே, அன்னிக்குச் சொன்னீங்க? இப்ப நீங்களே மாத்திச் சொல்றீங்களே?   அவன் எதிரியா இருந்தாலும்பரவாயில்ல; நான் காப்பாத்தியே தீருவேன்!என்று கடுவன் சொல்லிவிட்டு, அடுத்த விநாடி மரத்திலிருந்து கீழே குதித்தது.  

ஒன் நல்லதுக்குத் தான், அம்மா சொல்றேன்; கேட்டாக் கேளு; கேக்காட்டிப் போ; பட்டால் தான், உனக்குப் புத்தி வரும்!என்று  அம்மா குரங்கு கடுவனிடம் கோபமாகச் சொன்னது.    

கீழே இறங்கிய  கடுவன்பெரிய மரக்கிளையை ஆற்றோரமாகக் கீழே இழுத்து வளைத்து, அதில் அரிமாவை ஏறச் சொன்னது. 

அரிமா அந்தக் கிளையைக் கெட்டியாகப் பிடித்து ஏறி, பத்திரமாக வெளியில் வந்துவிட்டது.

தன்னைக் காப்பாற்றிய கடுவனுக்கு, அரிமா நன்றி சொன்னது.  அன்றிலிருந்து, இரண்டும், நெருங்கிய நண்பர்களாகிச் சேர்ந்து விளையாடின.   

என்னைக் காப்பாத்துன உன்னை, என் அம்மாவுக்கு அறிமுகப்படுத்தணும்;   அதனால என்னோடு வீட்டுக்கு வா!,” என்று அரிமா கடுவனை, ஒருநாள் கூப்பிட்டது.

சிங்கராஜா இருக்கிற இடத்துக்குப் போறதுஉயிருக்கு ரொம்ப ஆபத்து!என்று அம்மா குரங்கு, தன் குட்டியைப் போக விடாமல் தடுத்தது.

இல்லம்மா! பத்திரமா, ஒங்கப் புள்ளையைத் திரும்பக் கொண்டு வந்து, உங்கக்கிட்டேயே ஒப்படைக்கிறேன்; என்னை நம்புங்க,” என்று சொல்லிவிட்டு, கடுவனை அழைத்துக்கொண்டு, அரிமா தன் குகைக்குச் சென்றது...

அன்று காலையிலிருந்து, வேட்டைக்கு, எந்த விலங்கும் சிக்காமல், அரிமாவின் அம்மா சிங்கம், மிகுந்த பசியோடு இருந்தது..  தூரத்தில் மகன், குரங்குக் குட்டியுடன் வருவதைப் பார்த்து, அதற்கு மகிழ்ச்சியாக இருந்தது.

அலைந்து திரிந்து  சிரமப்படாமல், இன்று எளிதாக உணவு கிடைத்துவிட்டது!; அதிலும் இளங்குட்டி! தின்பதற்கு அதிக சுவையாக இருக்கும்!,” என்று எண்ணியபடி, நாக்கைச் சப்புக் கொட்டிக் கொண்டுமகன் அருகில் வருவதற்காகக் காத்திருந்தது.

அம்மா! நான் ஆத்துல விழுந்தப்பஒருத்தன்  காப்பாத்துனான்னு சொன்னேன்ல; அவன் இவன் தான்,” என்று கடுவனைத்  தன் அம்மாவுக்கு அரிமா அறிமுகப்படுத்தியது.

அப்படியாசரியான நேரத்துல, இவனை அழைச்சிட்டு வந்தே! இன்னிக்குக் காலையிலேர்ந்து, திங்கறதுக்கு, ஒன்னுமே கெடைக்கலேன்னு, ஒங்கப்பா ரொம்பக் கோவமா இருக்காரு! அவருக்கு நல்ல விருந்து  இன்னிக்கு!”   என்று அம்மா சிங்கம் சொல்லிவிட்டு, கடுவனைத்  தாக்கத் தயாரானது. .

என் நல்லதுக்காகத் தானே, அம்மா சொன்னாங்க? அதைக் கேட்காதது, எவ்வளவு பெரிய தப்புவலிய வந்து, ஆபத்தில் மாட்டிக் கொண்டேனே, தப்பிக்க வழியே இல்லையே,”  என்று கடுவனுக்கு, அதிர்ச்சியாக இருந்தது.   

தன் அம்மா சொன்னதைக் கேட்டு, அரிமாவுக்கும் தூக்கி வாரிப்போட்டது.   

அம்மா! இவன் என்னோட உயிர் நண்பன்.  ஒங்கக்கிட்ட அறிமுகப்படுத்துறேன்னு சொல்லித் தான், இங்கக் கூட்டிக்கிட்டு வந்தேன்.  என்னை நம்பி, வந்தவனைக் கொல்றது, ரொம்பப் பாவம்!என்று அரிமா சொன்னது..

பாவமாவது, புண்ணியமாவது! அதெல்லாம் பார்த்தா, நாம உயிர் வாழவே முடியாதுகொன்னாப் பாவம், தின்னாப் போச்சு!என்று அது சிரித்தது.  

அம்மா! ஒங்களுக்குப் பசியா இருந்தா, என்னைக் கொன்னு தின்னுங்க; தயவு செஞ்சு, அவனை விட்டுடுங்க!என்று அரிமா, அம்மாவின் கால்களைப் பிடித்துக் கொண்டுஅழுது கெஞ்சியது. 

அதுநாள் வரை, மகன் அந்தளவுக்கு அழுது, அம்மா சிங்கம் பார்த்ததேயில்லை.  தேம்பித் தேம்பி அழுத, அரிமாவின் செய்கை, அதன் கல் மனதைக் கரையச் செய்தது..

நண்பனுக்காகஒன் உயிரையே கொடுக்க முன் வந்த, ஒன்னை நெனைச்சு எனக்கு ரொம்பப் பெருமையாயிருக்கு அரி!இன்னிக்கு மட்டும் இல்ல, என்னிக்குமே, உன் நண்பனை, நான் கொல்ல மாட்டேன்.  அவனைப் பத்திரமாக் கொண்டுபோயி, அவங்கம்மாகிட்ட விட்டுட்டு வந்துடு,” என்று  அம்மா சிங்கம் சொன்னது.

அம்மாவுக்கு நன்றி சொல்லிவிட்டுப் பயந்து போயிருந்த கடுவனை, அரிமா மீண்டும் அதன் அம்மாவிடம், கொண்டுவந்து விட்டது. .  

தன் உயிரைத் தருவதாகச் சொல்லித் அம்மா சிங்கத்திடமிருந்து தன்னைக் காப்பாற்றிய அரிமாவுக்குக் கடுவன், மகிழ்ச்சியுடன் நன்றி சொன்னது.

அரிமாவின் அப்பா சிங்கம் செத்த பிறகுஅந்தக் காட்டுக்கு அரிமா ராஜாவானது.  நண்பன் கடுவனைத் தன் மந்திரியாக ஆக்கிக் கொண்டது.     

அந்தக் காட்டில் அரிமாவும், கடுவனும் கடைசி வரை, இணைபிரியாத நண்பர்களாக இருந்தன. 

அரிமாவின் நல்லாட்சியில், காட்டிலிருந்த எல்லா விலங்குகளும் மகிழ்ச்சியாக வாழ்ந்தன.


-ஞா.கலையரசி

1 COMMENT

  1. கதை மிகவும் சுவாரசியமாக உள்ளது. எங்கே அம்மா சிங்கம் குரங்குக்குட்டியைத் தின்றுவிடுமோ என்று பயந்துகொண்டே வாசித்தேன். முடிவு மிக அருமை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site is protected by reCAPTCHA and the Google Privacy Policy and Terms of Service apply.