1
ஜப்பானியப் பெண் நாவலாசிரியரான யொகொ ஒகவா, ஹிரோஷிமா-நாகசாகியின் 75ஆம் ஆண்டு நினைவையொட்டி, நியூயார்க் டைம்ஸ் நாளிதழில் அப்பேரழிவைப் பற்றிப் பேசும் ஜப்பானிய இலக்கியங்கள் குறித்த கட்டுரையில், “ஹிரோஷிமா-நாகசாகியின் நினைவுகள் ஜப்பானிலேயே மறைந்துகொண்டிருக்கின்றன. ஜப்பானியப் பொது ஒளிபரப்புதுறை நிறுவனம், என்.ஹெச்.கே, 2015இல் இதுகுறித்து நடத்தியக் கருத்துக் கணிப்பில், ஹிரோஷிமா நகரவாசிகளில் வெறும் 69 சதவீதத்தினரும், நாகசாகியினரில் வெறும் 50 சதவீதத்தினருமே அணுகுண்டு வீசப்பட்ட தேதி, மாதம், ஆண்டு ஆகியவற்றைச் சரியாகச் சொல்கின்றனர். தேசிய அளவில் இதன் சராசரி வெறும் 30 சதவீதமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலத்தில் எல்லாம் பேரழிவுச் சாட்சியங்களின் அனுபவங்களை நேரடியாக நாம் பெற முடியாமல் போகும்,” என்று வருந்தியிருக்கிறார்.
இப்பேரழிவை நேரில் கண்டிராதவர்கள், அதைக் கண்ணுற்ற, அதன் சாட்சியாக விளங்கிக் கொண்டிருப்பவர்களின் நினைவுகளைப் பாதுகாக்க என்ன செய்ய வேண்டும்? சாட்சியங்கள் குரல் தொடர்ந்து கேட்கப்பட வேண்டும் என்பதை எப்படி உறுதி செய்வது? முடிவற்ற போர்கள், இன அழிப்பு, ஹிரோஷிமா-நாகசாகி, செர்னோபில், ஃபுகுஷிமா என மனிதகுலம் நினைவின் பிரச்சினையைத் தொடர்ந்து எதிர்கொண்டுவருகிறது, இந்த நினைவுகளைப் பத்திரமாக அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வது எப்படி? என்பன போன்ற கேள்விகளை முன்வைக்கும் ஒகவா, அதற்கான பதிலையும் வழங்குகிறார்: இலக்கியம். காரணம், கோட்பாடு உள்ளிட்ட முரண்களை மீறி, இலக்கியத்தின் ஆற்றல், அதன் மொழி வழி, பெயரற்றவர்களின், மற்றமைகளின் துயரத்துக்கு ஈவு ( Empathy ) கொடுக்க முடியும்!
[ads_hr hr_style=”hr-fade”]
2
ஃபிரெஞ்சுப் பேரரசன் நெப்போலியன் வாட்டர்லூவில் வீழ்த்தப்படுவதற்குச் சில வாரங்களுக்கு முன்பு, 1815 ஏப்ரல் 10 அன்று இந்தொனேஷியாவின் சும்பவா தீவில் அமைந்துள்ள தம்போரா எரிமலை வெடித்தது. 13,000 அடி உயரமுள்ள இந்தத் எரிமலையின் பெருவெடிப்புச் சத்தம் சுமார் 1,600 மைல்களுக்கு அப்பாலும் கேட்டிருக்கிறது; 800 மைல்கள் வரை சாம்பல் பரவியது; தொடர்ந்து இரண்டு நாட்கள் இருண்ட கருமை நிலவியது!
புவியின் கடந்த பத்தாயிரம் ஆண்டுகால வரலாற்றில் இதுபோன்ற பெருவெடிப்பு எதுவும் நிகழ்ந்திராத நிலையில், தம்போரா நிகழ்வின் பின் விளைவுகள் கிட்டத்தட்ட உலகம் முழுவதும் உணரப்பட்டன. குறிப்பாக வடக்கு அரைக்கோள வானிலையில் அதிதீவிர மாற்றங்கள் ஏற்பட்டன; ‘கோடையில்லாத ஆண்டு’ என 1816 வரலாற்றில் பதிவானது. புவியின் சராசரி வெப்பநிலை 0.7இல் இருந்து 0.4 டிகிரி செல்சியஸ் ஆகக் குறைந்தது. இதனால் அந்தக் காலகட்டத்தில் முதன்மை வாழ்வாதாரமாக இருந்த வேளாண்மை கடுமையான பாதிப்புகளைச் சந்தித்தது: பயிர் தோல்வி, வேளாண் உற்பத்தியில் வீழ்ச்சி, உணவுப் பொருட்களின் விலையேற்றம், பஞ்சம், பண்பாட்டுச் சீர்குலைவுகள், காலரா உள்ளிட்ட நோய்த் தொற்றுப்பரவல் என அவை நீண்டன.
இந்தப் பின்னணியில் இங்கிலாந்தைச் சேர்ந்த எழுத்தாளர்களான மேரி காட்வின், கவிஞர் ஷெல்லி (மேரியின் வருங்கால கணவர்), கவிஞர் பைரன், மருத்துவரும் எழுத்தாளருமான ஜான் பொலிடோரி ஆகியோர் நிச்சயமற்ற அந்த நாட்களைக் கழிக்க சுவிட்சர்லாந்தின் ஜெனிவா நகரின் ஏரிக் கரை வீடொன்றில் முகாமிட்டிருந்தனர். தம்போரா பெருவெடிப்பின் தாக்கம் குறித்த அறிவியல்பூர்வமான எந்தவொரு தகவலும் அப்போது கண்டறியப்பட்டிராத நிலையில், அதன் விளைவுகள் கொண்டுவந்த புறவுலகு மாற்றங்களின் நிச்சயத்தன்மை அவர்களை வீட்டுக்குள்ளேயே முடக்க, தங்களில் யார் அதிபயங்கரமான பேய்க்கதை ஒன்றை எழுதுகிறார்கள் என்பதாக எழுத்துப் போட்டி ஒன்றில் அவர்கள் தங்களை ஈடுபடுத்திக் கொண்டார்கள். அதன் விளைவாக, மேரி காட்வினிடம் இருந்து ஃப்ராங்கென்ஸ்டைன் (Frankenstein; or the Modern Prometheus), கவிஞர் பைரனிடமிருந்து இருண்மை (Darkness), ஜான் பொலிடோரியிடம் இருந்து வாம்பயர் (The Vampyire) என இப்போதும் கொண்டாடப்படும் படைப்புகள் வெளிப்பட்டன.
அறிவியல், இயற்கை ஆகியவற்றின் போக்கை, அதன் இயல்பான மாற்றங்களை மனித சிந்தனை கலை – இலக்கியங்கள் மூலம் எதிர்கொண்ட விதம், அவற்றைப் பதிவு செய்த முறை குறித்து மேற்கொண்ட படைப்புகளையும் உள்ளடக்கிய ஆழமான விவாதங்கள் இப்போது தீவிரமடைந்திருக்கின்றன. நாகரிக மனிதனுக்கு இயற்கை என்பது என்ன, நாகரிகப் படிநிலையில் வரலாற்றின் ஒவ்வொரு காலகட்டத்திலும் இயற்கை குறித்த அணுகுமுறை மனித சிந்தனையில் எப்படி உருப்பெற்று வந்திருக்கிறது என்பன போன்றவை இதுபோன்ற புறவய நிகழ்வுகளின் தாக்கத்திலிருந்து உருவான படைப்புகளில் வெளிப்படுகின்றன. காலப்போக்கில் அறிவியல் – தொழில்நுட்பத்தின் நம்பமுடியாத வளர்ச்சி மனித வாழ்க்கைமுறையில் கொண்டுவந்திருக்கும் மாற்ற – தாக்கத்தால், தனிமனித சுதந்திரம் உள்ளிட்ட நவீனத்துவக் கருத்தாக்கங்கள் வலுப்பெறத் தொடங்கி, கலை – இலக்கியத்தில் மனித மையவாத எழுத்துக்கள் மையம் பெறத் தொடங்கின.
மனிதச் சிந்தனை இலக்கியத்தில் உள்வயமாக இயங்கத் தொடங்கியபோது, மனிதச் செயல்பாடுகள் புற உலகை அதிதீவிரமாகப் பாதிக்கத் தொடங்கின. இயற்கை மீதான மனிதனின் ஆதிக்கம் நிறைபெற்றுத் தீவிரமடையத் தொடங்கியதன் விளைவுகளும், அறிவியல்-தொழில்நுட்ப மேம்பாட்டின் கட்டுமீறிய வளர்ச்சி மனிதனை நிறுத்திய இடமும் ஃப்ராங்கன்ஸ்டைனை எதார்த்தத்துக்குக் கொண்டுவந்தன.
[ads_hr hr_style=”hr-fade”]
3
புவியியல் அமைப்பில் சுமார் 6,852 தீவுகளால் ஆன ஒரு நாடு ஜப்பான். நான்கு தட்டுப் புவிப்பொறைக் கட்டமைப்புகளின் (டெக்டானிக் ப்ளேட்ஸ்) இணைவில் உருவான இப்பெருந்தீவுகளின் கூட்டம், ஆண்டொன்றுக்கு ரிக்டர் அளவில் 5.0 அல்லது அதற்கு மேலான அளவில் 1,500க்கும் அதிகமான நில அதிர்வுகளைச் சந்திக்கிறது. இதன் விளைவாக, டோக்கியோ அழிக்கப்பட்டு, 1608 முதல் 1945 வரை சராசரியாக ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை மீண்டும் கட்டப்பட்டுள்ளது.
பூகம்பம், சுனாமி, எரிமலைச் சீற்றம் உள்ளிட்ட பல்வேறு இயற்கைச் சீற்றங்களை நூற்றாண்டுகளாக எதிர்கொண்டுவரும் ஜப்பானியர்களின் மனம், அதற்கேற்ப தகவமைத்துக் கொண்டுள்ளதாக அறிவியல் ஆராய்ச்சிகள் கூறுகின்றன. அதன் புவியியல் அமைப்பு, ஜப்பானியர்களின் கூட்டு நனவிலியில் ‘பேரழிவை’ ஆழப்பதியச் செய்துவிட்டது; அவர்களது புலனுணர்வின் வடிவமைப்பிலும் தாக்கம் செலுத்தி அவர்களது சமூகப் பண்பாட்டுக் கூறுகளின் உருவாக்கத்திலும் தாக்கம் செலுத்தியுள்ளது. இந்தப் பின்னணியிலிருந்து ஜப்பானின் ‘பூகம்ப இலக்கியம்’ (ஷின்சாய் புங்காகு), ‘அணுகுண்டு இலக்கியம்’ (கென்பாகு புங்காகு) உள்ளிட்ட இயற்கை – பேரழிவு இலக்கியங்களைப் புரிந்துகொள்ளலாம்.
இயற்கைப் பேரழிவுகளின் தொடர் நிகழ்விடமாகிய ஜப்பான், மனிதகுலம் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்ட முன்னுதாரணமற்றப் பேரழிவொன்றின் முதல் பலியாகவும் சாட்சியமாகவும் வரலாற்றுக்குத் தன் பெயரை ஒப்புக்கொடுத்தது. 1945 ஆகஸ்ட் 6 அன்று ஹிரோஷிமாவில் அணுகுண்டு ஒன்றை முதன்முறையாக வெடிக்கச் செய்த போது, மனிதகுலம் அதன் வரலாற்றில் இயற்கைப் பேரழிவுகளுக்கும் அப்பாற்பட்ட ஒன்றைத் தனக்குத் தானே ஏற்படுத்திக் கொண்டது.
அணுகுண்டு வெடித்துச் சிதறியபோது உறைந்த காலத்தில், அழிந்து மீண்டும் பிறந்த மனிதகுலம், புகை சூழ்ந்திருக்க திக்கற்று நின்றது. முடிவற்ற காலத்துக்கு நீளும் அதன் நிச்சயமின்மையில் இருந்து வெளியேறும் வழியை அது தேடியது. அந்த இடத்துக்கு வந்து சேர்ந்தமைக்கான காரணத்தை ஆராயவும், அங்கிருந்து எதிர்காலத்தின் வாயிலை அடைவதற்குக் கலை-இலக்கியத்தை நாடலாயிற்று.
புனைவு, கவிதை, நாடகம், அல்புனைவு, இசை, ஓவியம் ஆகியவற்றின் மூலம் ஹிரோஷிமா-நாகசாகியின் விளைவுகளையும் நினைவுகளையும் ஜப்பானிய இலக்கியம் பதிவு செய்யவும் எதிர்கொள்ளவும் முயன்றது. மியோகோ மாட்ஸ்தானி, மஸுஜி இபுஸே, கென்ஸாபுரோ ஒஎ, தமிகி ஹரா ஆகியோரின் படைப்புகளை ஜப்பானிய ‘அணுகுண்டு இலக்கியத்தில்’ முதன்மையானவையாக ஒகாவா மதிப்பிடுகிறார். மேற்கத்திய இலக்கியத்தில் இயான் மெக்இவான், ஜே.ஜி.பல்லார்(டு), மார்டின் அமிஸ், ரேமண்ட் பிரிக்ஸ், எட்வர்ட் அபே, ரே பிராட்பரி, அப்டன் சின்க்ளேர், நெவில் ஷூட் என ‘அணுசக்தி இலக்கியத்துக்குப்’ பங்களித்தவர்களின் பட்டியல் நீள்கிறது. மேலும் அமெரிக்க-பிரிட்டிஷ் இலக்கியத்தில் மட்டும் 3,000க்கும் மேற்பட்ட படைப்புகள் இந்த வகைமையில் எழுதப்பட்டிருப்பதாக அதிகாரப்பூர்வ புள்ளிவிவரம் ஒன்று கூறுகிறது.
ஜோஷ் வண்டேலூ எழுதிய ‘அபாயம்’ என்னும் ப்ளெமிஷ் மொழி நாவலில், அணுக்கதிர்வீச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் துபோனும் பென்ட்டிங்கும் மருத்துவமனையிலிருந்து தப்பிவிடுகிறார்கள். அங்கிருந்து வெளியேறுவது அல்லது தப்பிவிடுவதே மோட்சம் என்று அவர்கள் நம்புகிறார்கள். ஹிரோஷிமா போன்ற ஒன்றைத் தனக்குத் தானே நிகழ்த்திக் கொண்ட நவீன மனிதனின் பிரதிநிதிகளாக இவர்களை அணுகினால், தப்பிச் செல்வது மனிதனின் மனசாட்சியே.
[ads_hr hr_style=”hr-fade”]
4
இன்றைக்குக் கிட்டத்தட்ட கைமீறிச் சென்று கொண்டிருக்கிற, சூழலியலை மையப்படுத்திய, ஆனால் எல்லா துறைகளுடனும் பின்னிப் பிணைந்துள்ள மனிதச் செயல்பாடுகளால் தூண்டப்பட்ட காலநிலை மாற்றம் என்னும் பெருநிகழ்வின் கதையாடல்களைத் தீவிரமான முன்னெடுக்க, ஃப்ராங்கென்ஸ்டைன், ஜப்பானிய ‘கென்பாகு புங்காகு’ இலக்கியங்கள் ஆகியவற்றின் பின்னணியும் இயங்குமுறையும் பெரிதும் உதவும்.
ஜப்பானின் நவீன வரலாற்றில் மிகப் பயங்கரமான பூகம்பங்களில் ஒன்றான ஹான்ஷின் பூகம்பம், 1995 ஆண்டு கோபேயில் ஏற்பட்டது. தன்னுடைய சொந்த ஊரான கோபேயில் நிகழ்ந்த இப்பேரழிவு குறித்து ‘பூகம்பத்துக்குப் பிறகு’ என்ற சிறுகதைத் தொகுப்பை ஹாருகி முரகாமி வெளியிட்டார். அச்சமயம் அமெரிக்காவில் வசித்துவந்த முரகாமி, நியூ யார்க்கர் இதழுக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் இப்பூகம்பம் குறித்து இப்படிக் கூறுகிறார்: “இந்தப் பேரழிவால் பாதிக்கப்பட்டுத் துயரில் உள்ள மக்களுக்கு, ஒரு நாவலாசிரியனாக என்னால் என்ன செய்ய இயலும் என்று என்னை நானே கேட்டுக் கொண்டேன். பூகம்பத்தின் போது என்ன நிகழ்ந்திருக்கும் என்று என்னால் கற்பனை செய்ய முடியும் என்று நினைத்தேன்; கற்பனைதான் என்னுடைய சொத்து. ஆக, என்னால் முடிந்தது நல்ல புனைவு ஒன்றை எழுதுவதே. ஏனென்றால், நல்ல கதை ஒன்றை எழுதும்போது (வாசகரும் எழுத்தாளரும்) ஒருவரை ஒருவர் மேலதிகமாகப் புரிந்துகொள்ள முடியும். நீங்கள் ஒரு வாசகர், நான் ஓர் எழுத்தாளர். உங்களை எனக்குத் தெரியாது, ஆனால் புனைவு என்னும் கீழுலகில் நமக்கிடையே உள்ள இரகசியப் பாதையில் நம் ஆழ்மனத்தின் செய்திகளைப் பகிர்ந்துகொள்வோம். எனவே, நான் பங்களிக்க வேண்டிய வழி அதுவே என்று நினைத்தேன்.”
“காலநிலை மாற்றம் குறித்துப் பேச வேண்டியது கலை, இலக்கியப் புலங்களின் தார்மீகக் கடமை,” எனும் இந்திய நாவலாசிரியர் அமிதவ் கோஷின் பிரகடனம், பேரழிவு காலங்களில் எழுத்தாளனின் பணி குறித்த முரகாமியின் கருத்துடன் ஒப்புநோக்கத்தக்கது.
காலநிலை மாற்றத்தின் கதைகள், வரலாறு, அரசியல் ஆகிய மூன்று தளங்களில் விரிவான கட்டுரைகள் அடங்கிய, ‘தி கிரெட் டிரேஞ்ச்மெண்ட்’ (The Great Derangement) என்ற நூலின் மூலம் ‘சிந்திக்கச் சவாலான’ காலநிலை மாற்றத்தின் கதையாடல்களை இலக்கியத்துக்குள் கொண்டுவர வேண்டியதன் அவசியம் குறித்து சர்வதேச அளவில் ஒரு விவாதத்தை அமிதவ் தொடங்கி வைத்தார். ‘காலநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் கற்பனை செய்வதில் எழுத்தாளர்கள் முக்கிய பங்காற்ற முடியும்’ என்று இயற்கையியலாளர் ராபர்ட் மெக்ஃபேர்லன் எழுதியதன் தொடர்ச்சியாக, ‘காலநிலை நெருக்கடி என்பது பண்பாட்டின் நெருக்கடி; எனவே அது கற்பனையின் நெருக்கடியும்கூட,’ என்கிறார் அமிதவ்.
21ஆம் நூற்றாண்டின் முதன்மைப் பிரச்சினையாகக் காலநிலை மாற்றம் உருவெடுத்துள்ளது. இந்த நிலைக்கு நவீன வாழ்க்கை முறையை உருவாக்கிய துறைகள் அனைத்தும் பங்களித்திருக்கின்றன; அதன் விளைவாகத் தவிர்க்க முடியாத பின்விளைவுகளை அவை எதிர்கொண்டுள்ளன. புவியில் மனிதகுலத்தின் இருப்பை அச்சுறுத்தும், மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட காலநிலை மாற்றத்தை, மனித வாழ்வு தொடங்கி சகல பரிமாணங்களிலும் அது ஏற்படுத்தும் தாக்கத்தை ஓர் அங்கமாகக் கொள்ளாமல் புனைவில் ஈடுபடுவது இனி சாத்தியம் இல்லை என்றே தோன்றுகிறது. காலநிலை வரலாறு, இயற்கை குறித்த இன்றைய ‘நவீன’ மனதின் கண்ணோட்டம், புதிய சிந்திக்கும் முறைகள் என ‘வீழும் உலகை’க் குறித்த 21ஆம் நூற்றாண்டின் இலக்கியத்தைப் புனைவதில் புதிய சவால்கள் காத்திருக்கின்றன.
– சு. அருண் பிரசாத்
குறிப்புகள் / நூல்கள்:
- How We Retain the Memory of Japan’s Atomic Bombings: Books, New York Times
- The Volcano That Shrouded the Earth and Gave Birth to a Monster, Nautilus
- Is Japanese Culture Traumatized By Centuries of Natural Disaster? , Nautilus
- The Underground Worlds of Haruki Murakami, The New Yorker
- The burning question, by Robert MacFarlane, The Guardian
- Frankenstein; or the Modern Prometheus, novel by Mary Shelley
- Darkness, poem by Lord Byron
- The Vampyre, novel by John William Polidori
- அபாயம் – ஜோஷ் வண்டேலூ; தமிழில்: என்.சிவராமன், க்ரியா: சென்னை. 2011
- After the Quake, by Haruki Murakami, Vinatage. 2003
- The Great Derangement: Climate Change and the Unthinkable, by Amitav Ghosh, Penguin Books. 2016
[tds_info]
சு. அருண் பிரசாத் — இதழாளர், மொழிபெயர்ப்பாளர். இந்து தமிழ் திசை, விகடன் குழும இதழ்கள் ஆகியவற்றில் பணியாற்றியவர். கலை, இலக்கியம், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட தலைப்புகளில் கட்டுரை, நேர்காணல், மொழிபெயர்ப்பு ஆகியவற்றை எழுதிவருகிறார். தமிழில் காலநிலை மாற்றம் குறித்த விரிவான நூல் ஒன்றுக்கான தொடக்கப் பணிகளில் தற்சமயம் ஈடுபட்டுள்ளார்.
தொடர்புக்கு: [email protected]
[/tds_info]
[…] ஆனால், சோவியத் உடைவின் 30 ஆண்டுகள், காலநிலை இலக்கியம் (Climate fiction) உள்ளிட்டவை சார்ந்து கடந்த […]